குற்றமற்றவன் எனத் தெரிந்தும் தவறான வழிநடத்தலால்  முதலமைச்சர் பதவி விலகக் கோரினார்

குற்றமற்றவன் எனத் தெரிந்தும் தவறான வழிநடத்தலால்  முதலமைச்சர் பதவி விலகக் கோரினார்-வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் 

வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களை சிலர் தங்களது குறுகிய அரசியல்
நோக்கங்களுக்காக தவறாக வழிநடாத்தியுள்ளனர். அவர்களின் தவறான வழிநடாத்தல் காரணமாகவே நான்
குற்றமற்றவன் என்று தெரிந்திருந்தும் என்னை மாகாண சுகாதார அமைச்சர் பதவியிலிருந்து விலகுமாறு
சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் அழுத்தம் கொடுத்தார் என வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும் மாகாண
சபை உறுப்பினருமாகிய மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்தார்.

புதிய சுதந்திரன் இணையத்திற்கு அவர் வழங்கிய பிரத்தியேக நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அளித்த நேர்காணல் வருமாறு

கேள்வி :- இந்த வருடத்துடன் காலாவாதியாகவுள்ள வடக்கு மாகாணசபை கடந்த ஐந்து வருடங்களில்
திருப்திப்படக்கூடியதாக மக்களுக்கு சேவைகளை வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டுபற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:- மக்களுக்கு எந்தவிதமான சேவைகளையும் வழங்கவில்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது.
ஆனாலும் போரினால் பாதிக்கப்பட்ட மாகாணம் என்ற வகையில் மக்களின் தேவைகள் அனைத்தையும் மாகாண சபை
நிறைவேற்றவில்லை என்பது உண்மை. அதற்கு பல காரணங்கள் உள்ளன. வரையறுக்கபட்ட அதிகாரம்,
நிதிப்பற்றாக்குறை, மக்களின் தேவைகளுக்கும் மாகாண சபையின் இயலுமைக்கும் இடையிலான இடைவெளி
என்பவற்றை குறிப்பிட்டு சொல்லமுடியும்.அதாவது போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் என்றவகையில் அவர்களின்
தேவைகள் நீண்டவை. ஆனாலும் மாகாண சபையால் கடந்த 5 வருடங்களில் அத்தனை தேவைகளையும்;
செய்துவிடமுடியவில்லை என்பது உண்மை. ஆனாலும் எனது பதவிக்காலத்தில் மாகாணத்தின் சுகாதாரத் துறை பாரிய
முன்னேற்றம் அடைந்துள்ளதை கண்கூடாக பார்க்கலாம்.

கேள்வி:- எவ்வாறான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன?Image result for Dr.Sathiyalingam former Health Minister

பதில்:- நாட்டின் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் எமது மாகாணத்தின் தேவை வித்தியாசமானது. 30
வருடங்கள் நடைபெற்ற தொடர்ச்சியான போரில் எமது மக்கள் பலவற்றையும் இழந்துள்ளனர். குறிப்பாக 2009 இறுதி
யுத்தம் எமது மக்களை மிகவும் பாதித்துள்ளது. இவர்களின் தேவைகளை ஆராய்ந்து அதற்கான தீர்வுகளை
பெற்றுக்கொடுக்கவேண்டிய பாரிய பொறுப்பு மாகாண சபையை சாரும். அந்த நம்பிக்கையில்தான் 70 வீதத்திற்கு
அதிகமானவர்கள் த.தே.கூட்டமைப்புக்கு கடந்த மாகாண சபைத் தேர்தலில் வாக்களித்தார்கள்.நான் பொறுப்பு வகித்த சுகாதார அமைச்சைப்பெறுத்தவரை நாட்டின் ஏனைய மாகாணங்களுக்கு முன்னுதாரணமான பல பிரத்தியேக செயற்திட்டங்களை மாகாணத்தில் நடைமுறைப்படுத்தியுள்ளோம் . குறிப்பாக வடக்கு மாகாண சுகாதார துறை அபிவிருத்திக்காக நீண்டகால திட்டமொன்றினை தயாரித்துள்ளோம். துறைசார் நிபுணர்களின் பங்களிப்புடன் தயாரிக்கப்பட்ட மாகாண சுகாதார அபிவிருத்திதிட்டம் மத்திய சுகாதார அமைச்சின் அனுமதி பெற்றுள்ளது. இலங்கையில் மாகாணத்திற்கான சுகாதார அபிவிருத்தி திட்டமொன்றினை தயாரித்த ஒரேயொரு மாகாணம் வடக்கு மாகாணம் என்பது பெருமைக்குரியது.

இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தவதற்கு பெரும் தொகையான நிதி தேவைப்பட்டது. இதனை மத்திய அமைச்சிடமிருந்து முழுமையாக எதிர்பார்க்கமுடியாது. ஆகவே சர்வதேச உதவிகளை பெறும் நோக்கோடு வடமாகாண சுகாதார அபிவிருத்திக்கான சர்வதேச மாநாடொன்று கனடா நாட்டில் நடாத்தப்பட்டது. அதனைவிட முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான விசேட வைத்திய சிகிச்சை நிலையங்கள் அமைத்தமை, விசேட தேவைக்குட்பட்டவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றமை, வீடுவீடாக சென்று படுக்கையிலிருக்கும் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் நடமாடும் வைத்திய சேவைகள் ஆரம்பிக்கப்பட்டமை, அவசர அழைப்புகான நோயாளர் காவு வண்டிச் சேவை ஆரம்பிக்கப்பட்டமை என்பன அவற்றில் சிலவாகும். குறிப்பாக இலங்கையில் முதன்முதலாக அரசாங்க சுகாதார திணைக்களத்தால் இலவச சேவையொன்று ஆரம்பிக்கப்பட்டமையும் வடக்கு மாகாணத்தில்தான்.

கேள்வி:- மத்திய அரசினால் வழங்கப்படும் நிதி மாகாண அபிவிருத்திக்கு போதுமானதாகவுள்ளதா?

பதில்:- வழமையாக ஏனைய மாகாணங்களுக்கு ஒதுக்கப்படுவதைபோன்று எமது மாகாணத்திற்கு மத்திய அரசால் நிதி
ஒதுக்கப்படுகின்றது. ஆனாலும் ஒதுக்கப்படும்; நிதி எமது மாகாணத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய போதாது.
அத்துடன் ஒருமாகாணத்தில் 05 மாவட்டங்கள் இருப்பது எமது மாகாணத்தில்தான். ஆனாலும்; துறைசார்ந்த மத்திய
அமைச்சருடன் பிரத்தியேகமாக பேசி கூடுதலான நிதிகளை பெற்றுக்கொண்டோம்.

குறிப்பாக நான் சுகாதார அமைச்சராக இருந்தபோது மத்திய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன அவர்களுடன்
பேசி நெதர்லாந்து அரசாங்கத்திடமிருந்து ரூபா 60 மில்லியன் யூரோ நிதி பெறுவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தேன்.
இதன்மூலம் வடக்கின் 05 மாவட்டங்களிலும் விசேட வைத்திய பிரிவுகள் அமைப்பதற்கான 03 ஆண்டு திட்டம்; தற்போதுஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளத்தில் அமையவுள்ள விசேடதேவையுடையோருக்கான புனர்வாழ்வு வைத்தியசாலை முக்கியமானது.

போரினால் காயமடைந்த அங்கவீனர்களான 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட எமது உறவுகள் சிகிச்சை பெறுவதற்கு இந்த வைத்திய பிரிவு பிரயோசனமானதாக இருக்கும். அதே போன்று புலம்பெயர் அமைப்புகள், அரசசார்பற்ற நிறுவனங்களின் அனுசரணையோடு பல்வேறு வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வடக்கு மாகாணத்தில் போரினால் பாதிக்கப்பட்டு முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட நிலையில் படுக்கையில் இருக்கின்ற நோயாளிகளை அவர்களின் வீடுகளுக்கு
சென்று சிகிச்சை அளிக்கும் நடமாடும் மருத்துவ சேவை ஆரம்பித்துள்ளோம்.

கேள்வி:- மாகாண சபைக்கு அதிகாரம் போதாமலுள்ளமையினாலேயே மக்களுக்கு எதனையும் செய்யமுடியாதுள்ளதாக
முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளாரே. இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:- மாகாண சபைக்கு அதிகாரம் போதாமலுள்ளமை இப்பொழுதான் தெரிந்த விடயமல்ல. 1987ல் இலங்கை- இந்திய
ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட காலத்திலேயே மாகாணசபை முறைமை தமிழ் மக்களுக்கான தீர்வாக அமையாது என்றே
விடுதலைப்புலிகள் அதனை நிராகரித்திருந்தனர். 2013ல் தேர்தலில் போட்டியிடும்போதே அனைவருக்கும் தெரிந்த
விடயம்தான்.

கேள்வி:-அதிகாரமில்லாத மாகாண சபைத் தேர்தலில் ஏன் த.தே.கூட்டமைப்பு போட்டியிட்டது.

பதில்:- த.தே.கூட்டமைப்பு மாகாண சபை முறைமை தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு என்று ஒருபோதும்
ஏற்றுக்கொண்டதில்லை. ஆனாலும் 2009 இறுதி யுத்தத்திற்கு பின்னர் போரினால் கடுமையாக பாதிக்கப்பட்ட
மக்களுக்கு தேவையான நிவாரணம், புனர்வாழ்வு, அபிவிருத்தி விடயங்களை கையாளும் ஒரு சட்டரீதியான கட்டமைப்பு
வடக்கு மாகாணத்திற்கு தேவைப்பட்டது.

கேள்வி:- போட்டியிட்டதன் நோக்கத்தை மாகாண சபை அடைந்துள்ளதா?

பதில்:- மாகாண சபைக்கு அதிகார வரையறைகள் இருந்திருந்தாலும் அவற்றினையும் தாண்டி மக்களுக்கான அன்றாட
தேவைகளை நிறைவேற்ற இன்னும் பலவேலைத்திட்டங்களை மாகாண சபை செய்திருக்கலாமென்பது எனது
தனிப்பட்ட கருத்து. கொடியபோரின் பாதிப்புக்கு உள்ளான ஒரு சமூகத்திற்கு தேவையான உடனடித்தேவைகளை
நிறைவேற்றுவதற்கு மாகாண சபை துரிதமாக செயற்பட்டிருக்கவேண்டும். அபிவிருத்திக்கு சமாந்திரமாக நிரந்தர
அரசியல் தீர்வு பற்றிய விடயங்களையும் முன்கொண்டு சென்றிருக்கலாம். நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் வரை
மாகாணத்தில் எந்தவிதமான அபிவிருத்திகளும் நடைபெறக்கூடாதென்று நினைப்பது பொருத்தமற்றதாகும். அது
வாக்களித்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்யும் துரோகமாகும். போரின் பாதிப்பை நேரடியாக உணராதவர்களே
இவ்வாறான கருத்துகளை தெரிவித்து வருகின்றார்கள்.

கேள்வி:- சுகாதார துறையில் பாரிய அபிவிருத்திகளை நீங்கள் செய்ததாக கூறுகின்றீர்கள். அப்படியாயின் ஏன் தங்கள்
மீது அதிகார துஸ்பிரயோக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

பதில்:- என்மீது மட்டும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படவில்லை. உண்மையில் குறிப்பிட்ட ஒரு அமைச்சருக்கு எதிராகவே
அதிகார துஸ்பிரயோக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது. அதுவும் பொதுமக்களாலோ, எதிர்க்கட்சிகளாலோ
அல்ல. ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒரு மாகாண சபை உறுப்பினரே குறிப்பிட்ட அமைச்சருக்கு எதிரான குற்றச்சாட்டை
முதலமைச்சரிடம் கையளித்திருந்தார்.

கேள்வி:- அப்படியாயின் முதலமைச்சர் ஏன் நான்கு அமைச்சர்கள் மீதும் விசாரணை நடாத்துவதற்கு குழுவை நியமித்தார்?

பதில்:- இங்குதான் பிரச்சனை எழுகின்றது. நான் ஆரம்பத்தில் கூறியதுபோல முதலமைச்சரை சிலர் தங்களது அரசியல்
நோக்கங்களை நிறைவேற்ற தவறாக வழிநடாத்தியுள்ளனர். அத்துடன் குற்றம்சாட்டப்பட்ட அமைச்சர் முதலமைச்சருக்கு
மிகவும் நெருக்கமானவர். அவர்மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டபோது அவருக்கு எதிராக எந்தவிதமான
நடவடிக்கைகளும் முதலமைச்சரால் எடுக்கப்படவில்லை. அதனால் பொறுமையிழந்த முறைப்பாட்டாளரான
மா.ச.உறுப்பினர் மாகாண சபை அமர்வில் பகிரங்கமாக முதலமைச்சரிடம் கேள்வி எழுப்பியிருந்தார். அதனை
தொடர்ந்து அடுத்தநாள் நடைபெற்ற பொது நிகழ்வொன்றில் முதலமைச்சர் அவர்கள் குற்றஞ்சாட்டப்பட்ட அமைச்சர்
பனங்காட்டு நரி என்றும் அது சலசலப்புகளுக்கு அஞ்சாது என்று கூறியிருந்தார். இதன்மூலம் முதலமைச்சர் குறிப்பிட்ட
அமைச்சரை காப்பாற்ற முனைந்துள்ளமை வெளிப்படையாகின்றது.Image result for Dr.Sathiyalingam former Health Minister

இந்த நிலையில்தான் குறிப்பிட்ட அமைச்சர் ஒருவருக்கு எதிரான விசாரணையின் தாக்கத்தை ஐதாக்கவே நான்கு
அமைச்சர்களுக்கும் எதிராகவும் விசாரணை மேற்கொள்ள விசாரணைக்குழுவை நியமித்தார்.

கேள்வி:- அப்படியாயின் ஏனையவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் கிடைக்கப்பெறவில்லையா?

பதில்:- நிச்சையமாக அதுதான் உண்மை. பொதுவாக விசாரணைக்குழுவை அமைப்பது குற்றச்சாட்டுக்கள்
பெறப்பட்டபின்னரே. எனினும் முதலமைச்சரால் விசாரணைக்குழு அமைக்கப்பட்ட பின்னர்; அமைச்சர்களுக்கு எதிராக
குற்றச்சாட்டுக்கள் இருந்தால் குறிப்பிட்ட திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்கலாம் என்று பத்திரிகையில் விளம்பரம்
செய்யப்பட்டது. எனினும் எதிர்பார்த்த குற்றச்சாட்டுக்கள் கிடைக்கப்பெறாமையால் குற்றச்சாட்டுக்களை
ஏற்றுக்கொள்ளும் திகதி மேலும் 02 வாரங்கள் முதலமைச்சரால் நீடிப்பு செய்யப்பட்டிருந்தது. இவ்வாறான
வேடிக்கையான விடயங்கள் எமது மாகாணத்தில்தான் அரங்கேறின.

கேள்வி:-காலநீடிப்பின் பின் குற்றச்சாட்டுக்கள் கிடைத்தனவா?

பதில்:- ஆம் ஆனால் எனக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் எதுவும் குற்றச்சாட்டுக்கள் ஏற்றுக்கொள்ளும் இறுதி தினம்
வரையில் கிடைக்கப்பெறவில்லை. இறுதி நேரத்தில் அவசரமாக தயார் செய்யப்பட்ட போலியான குற்றச்சாட்டுக்கள்
சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. இதற்கு பின்னால் குறிப்பிட்ட ஒரு மாகாண சபை உறுப்பினர் இருந்ததாக
விசாரணையின்போது அறியக்கிடைத்தது.

கேள்வி:- விசாரணைக்குழுவில் நீங்கள் சமூகமளித்தீர்களா. உங்கள் மீது எவ்வாறான குற்றச்சாட்டுக்கள்
முன்வைக்கப்பட்டிருந்தன?

பதில்:- என்மீது 05 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. அனைத்தும் உண்மைக்கு புறம்பாக புனையப்பட்ட
குற்றச்சாட்டுக்களாகும். அரசாங்க நிர்வாக, நிதிசார்ந்த நடைமுறைகளைப்பற்றி தெரியாதவர்களால் யதார்த்தத்திற்கு
முரணானவகையில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

எந்தவொரு குற்றச்சாட்டும் பொதுமக்களாலோ அல்லது பொது அமைப்புகளாலோ முன்வைக்கப்படவில்லை. என்மீது
தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக ஆளும் கட்சியைச் சேர்ந்த குறித்தவொரு மாகாண சபை உறுப்பினரே
குற்றச்சாட்டுகளை கையளித்திருந்தனர்.

கேள்வி:- விசாரணையின்போது உங்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டனவா?

பதில்:- இல்லை. விசாரணைக்குழுவில் அங்கம் வகித்தவர்கள் நீதியான முறையில் விசாரணைகளை மேற்கொண்டார்கள்.
விசாரணைக்குழுவில் ஓய்வு பெற்ற இலங்கை நிர்வாக சேவை சார்ந்தவர்களும்,நீதித்துறை சார்ந்தவர்களும் அங்கம்
வகித்திருந்தனர். இந்த விசாரணைக்குழுவை முதலமைச்சர் அவர்களே நியமித்திருந்தார்.விசாரணைக்கு நான் பூரணமான
ஒத்துழைப்பை வழங்கியிருந்தேன். விசாரணையின் முடிவில் விசாரணைக்குழுவின் அறிக்கை முதலமைச்சரிடம்
கையளிக்கப்பட்டது. எனினும் விசாரணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் முதலமைச்சர் 03 மாதங்கள்
வாய்திறக்கவில்லை. மீண்டும் மாகாண சபை அமர்வில் உறுப்பினர்களால் கேள்விதொடுக்கப்பட்டபின்னரே அதன்
பிரதியொன்று குற்றம்சாட்டப்பட்ட எங்களுக்கும் வழங்கப்பட்டதுடன் சபை அமர்விலும் முதலமைச்சரால்
பகிரங்கப்படுத்தப்பட்டது. அதில் என்மீதான குற்றச்சாட்டுக்கள் எவையுமே நிருபிக்கப்படவில்லையென்றும் விசேடமாக
எனது விசாரணை அறிக்கையில் சுகாதார அமைச்சரால் நடைமுறைப்படுத்தப்படும் நல்ல செயற்திட்டங்களுக்கு மாகாண
சபை தொடர்ந்தும் பூரணமான ஒத்துழைப்பை வழங்கவேண்டுமென்றும் சிபார்சு செய்யப்பட்டிருந்தது.

கேள்வி:- அவ்வாறாயின் ஏன் உங்களை பதவி விலகுமாறு முதலமைச்சர் கோரியிருந்தார்?

பதில்:- ஆரம்பத்தில் அவ்வாறு பதவி விலகுமாறு முதலமைச்சர் கோரவில்லை. கடந்த வருடம் ஜூலை மாதம் மாகாண
சபை அமர்வில் அமைச்சர்கள் மீதான விசாரணைக்குழுவின் அறிக்கை விவாதத்திற்கு எடுக்கப்பட்டது. அதன்போது
முதலமைச்சர் தனது உரையில் இரண்டு அமைச்சர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் (அதிகார துஸ்பிரயோக)
நிருபிக்கப்பட்டுள்ளன. அவர்கள் இருவரும் தங்களுடைய பதவிகளை தியாகம் செய்தல் வேண்டும். குற்றமற்றவர்களாக
சொல்லப்பட்ட மற்றய இரு அமைச்சர்களும் கட்டாய விடுமுறையில் செல்லவேண்டும். அவர்களுடைய அமைச்சுப்
பொறுப்புகளை தான் பொறுப்பேற்பதாக குறிப்பிட்டிருந்தார்.

இதுதொடர்பில் மாகாண சபை உறுப்பினர்களால் கேள்வி எழுப்பப்பட்டபோது பதிலளித்த முதலமைச்சர்
நிரபராதிகளான அமைச்சர்கள் மீது விசாரணைக்கு பின்னர் குற்றச்சாட்டுக்கள் சில கிடைத்துள்ளதாகவும் அவர்களை
விசாரணை செய்வதற்கு ஏதுவாக கட்டாய விடுமுறையில் செல்லவேண்டுமென்று குறிப்பிட்டார். இந்த நிலையில்தான்
விசாரணைக்குழுவின் அறிக்கைக்கு முரணாக முதலமைச்சர் செயற்பட்டமையினால் அவர்மீது நம்பிக்கை இழந்த
பெரும்பான்மை உறுப்பினர்கள் முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவருவதற்கு முயற்சி
செய்தனர்.

எனினும் த.தே.கூட்டமைப்பின் தலைவருக்கும் முதலமைச்சருக்கும் இடையிலான பேச்சுவார்த்தையை தொடர்ந்து
அப்பிரேரணை மீளப்பெறப்பட்டது. இந்த நிலையில் த.தே.கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியாக இலங்கை தமிழ் அரசுக்
கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் தீர்மானமொன்றினை எடுத்தனர். முதலமைச்சரால் நியமிக்கப்படும் புதியஅமைச்சரவைவாரியத்தில் பங்கு வகிப்பதில்லை என்பது அதனடிப்டையில் அமைச்சர் வாரியத்திலிருந்து விலகுவதாக நான் முடிவெடுத்தேன்.

கேள்வி:- மீள விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டனவா?

பதில்:- இல்லை. அவ்வாறான எந்த விசாரணையும் நடைபெறவில்லை. மாறாக தற்காலிகமாக 03 மாதங்களுக்கு
நியமிக்கப்பட்ட புதிய அமைச்சர்கள் நிரந்தர அமைச்சர்களானார்கள். ஆறுமாதங்கள் கடந்துள்ள நிலையில் கடந்த மார்ச்
மாதம் நடைபெற்ற மாகாண சபை அமர்வில் எதிர்கட்சி தலைவரால் கேள்வி எழுப்பட்டிருந்தது. அதாவது மாகாண
அமைச்சர்களுக்கெதிரான விசாரணை செய்த குழுவின் சிபார்சுகள் நடைமுறைப்படுத்தப்பட்டதா? மீள்விசாரணை ஏன்
இதுவரை செய்யப்படவில்லை என்று. இதற்கு பதிலளித்த முதலமைச்சர் அமைச்சரவையை மாற்றுவதோடு தனது
பணிமுடிவடைந்ததாகவும் மீளவிசாரணை செய்யவேண்டிய அவசியம் இல்லை என்றும் பொறுப்பற்ற முறையில் பதில்
வழங்கியிருந்தார்.இந்த நிலையில் முதலமைச்சரிடம் நான் கோரிக்கையொன்றினை முன்வைத்திருந்தேன். என்மீது
சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களால் எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த மாகாண சபையின்
பதவிக்காலம் முடிவடைவதற்குள் விசாரணை நடாத்தி உண்மை நிலவரத்தை மக்களுக்கு தெரியப்படுத்துமாறு
கோரியிருந்தேன். புதிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆதாரங்கள் இருந்தால் சபையில் சமர்ப்பித்து உடனடியாக
விசாரணை செய்யும்படி கேட்டிருந்தேன். எனினும் அதற்கான பதிலை அடுத்த அமர்வில் கூறுவதாக முதலமைச்சர்
தெரிவித்தார்.

கேள்வி:- அடுத்த அமர்வில் அதற்கான பதில் கிடைத்ததா?

பதில்:- இல்லை. அடுத்துவரும் 02 அமர்வுகளில் முதலமைச்சர் கலந்துகொள்ளவில்லை. தனிப்பட்ட விஜயமாக அவர்
வெளிநாடு சென்றமையால் அவர் கலந்துகொள்ளவில்லை. எனினும் கடந்த மாதம் நடைபெற்ற சபை அமர்வில்
எதிர்க்கட்சி தலைவரால் மீண்டும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த முதலமைச்சர் முன்னாள் சுகாதார
அமைச்சர் மீது முன்னைய விசாரணைக்கு பின்னர் சிலகுற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. அதாவது அவர்
அமைச்சராக இருந்தபோது அமைச்சிலிருந்து சில முக்கியமான ஆவணங்கள் வெளியே எடுத்துச் செல்லப்பட்டதாக சிலர்
என்னிடம் தெரிவித்தார்கள். பின்னர் அவை அங்கு இருப்பதாக வேறு சிலர் தெரிவித்தார்கள். எனவே முன்னாள் சுகாதார
அமைச்சருக்கு எதிராக மீளவும் விசாரணை செய்யவேண்டிய தேவை எழவில்லை என்று குறிப்பிட்டார்.

கேள்வி:- அப்படியாயின் தற்போது நீங்கள் குற்றவாளியா? சுற்றவாளியா?

பதில்:- எப்போதுமே நான் சுற்றவாளிதான். காலம்கடந்துதான் முதலமைச்சருக்கும் தெரியவந்திருக்கின்றது என
நம்புகின்றேன் மாகாண சபையில் நான் குற்றமற்றவன் என்றும் என்மீதான அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும்
என்னை விடுவிக்கப்படுவதாக ஏகமனதான தீர்மானம் கடந்த அமர்வில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இருந்தபோதும்
என்மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைத்தபோது ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவம் நான் நிரபராதி என
அறிவிக்கப்பட்டபோது அந்த செய்திகளுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பது
வேதனையளிக்கின்றது.

கேள்வி:- இறுதியாக நீங்கள் என்ன கூறவிரும்புகிறீர்கள்?

பதில்:- தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் கடைசியில் தர்மமே வெல்லும். இதுவே உலக நியதி. இதற்கு நான்
விதிவிலக்கானவன் அல்ல. எனினும் எனது அரசியல் பயணம் தொடரும். தொழில்ரீதியாக மருத்துவராக உயர்பதவியில்
இருந்தே நான் அரசியலுக்கு வந்தேன். இந்த நாட்டில் 03 தசாப்தங்களாக நடைபெற்ற கொடிய போரின் வேதனைகளை
நேரடியாக அனுபவித்தவன் என்ற வகையிலும் அதன்பால் மக்கள் அனுபவிக்கும்; துன்பங்களை நன்கறிந்தவன் என்ற
வகையிலும் ஓரளவுக்கேனும் அவர்களை இத்துன்பங்களிலிருந்து விடுவிக்க என்னால் ஆன முயற்சிகளை
செய்யவேண்டுமென்பதற்காகவே  எனது அரசியல் பிரவேசம் அமைந்தது.தற்போது அமைச்சராக இல்லாவிடினும்
மாகாண சபை உறுப்பினராக மக்களுக்கான எனது பணியை தொடர்ந்தும் செய்து வருகின்றேன்.

குற்றமற்றவன் என தெரிந்தும் தவறான வழிநடத்தலால்  முதலமைச்சர் பதவி விலக கோரினார்-வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் 

About editor 2979 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

1 Comment

  1. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோயில் என்ற பழமொழிக்கு ஒரு எடுத்துக்காட்டுக் காட்ட வேண்டுமென்றால் அது சாட்சாத் முதலமைச்சர் விக்னேஸ்வரன்தான். தனது சின்னப் புத்தியை, பழிவாங்கும் மனப்பான்மையை நெற்றியில் பூசும் திருநீறு, குங்குமம், இடுப்பில் கட்டும் வேட்டி, தோளில் போடும் சால்வை போன்றவற்றால் மிகவும் கச்சிதமாக தனது சுயஉருவத்தை முதலமைச்சர் கெட்டித்தனமாக மறைத்து விடுகிறார். பேச்சுப் பல்லக்கு ஆனால் செயல் “ஊருக்குச் சொன்னேனடி பெண்ணே உனக்கல்லடி பெண்ணே” என்ற பழமொழி போன்றது.

    பதின்மூன்று இளம் பெண்களை (சிலர் பூப்பெய்தாவர்கள்) கற்பழித்த மற்றும் கொலைக் குற்றம்சாட்டப்பட்ட பாலியல் ஆசாமி பிரேமானந்தாவுக்கு நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது. தில்லி உச்ச நீதிமன்றம் அதனை உறுதி செய்தது. அப்படிப்பட்ட பரம அயோக்கனின் முதன்மைச் சீடன் விக்னேஸ்வரன் என்பதிலிருந்து அவர் யார் என்பது தெரிய வேண்விடும். அவரது குணாதிசயங்கள் தெரிந்து விடும். போலிச் சாமியார்களிடம் ஏமாந்து போகிற பக்தர்கள் நிறைய உண்டு. ஆனால் பிரேமானந்தா சுமத்தப்பட்ட கற்பழிப்பு, கொலைக் குற்றச்சாடு இரண்டிலும் ஆயுள் தண்டனை பெற்ற பின்னரும் அந்த அயோக்கியனுக்கு, பெண்பித்தனுக்கு, காமுகனுக்கு ஆண்டு தோறும் குருபூசை செய்வதும் அவனது சமாதியில் போய் வழிபடுவதும், அவனுக்கு மாங்குளத்தில் கோயில் கட்டிக் கும்பிடுவதும் மன்னிக்க முடியாத குற்றம். தாய்க் குலத்துக்கு மிகவும மோசமான எடுத்துக்காட்டு. இத்தகைய சாமுத்திரிகா இலட்சணங்களைக் கொண்ட விக்னேஸ்வரன் விசாரணை என்ற போர்வையில் முன்னாள் அமைச்சர் ப. சத்தியலிங்கம் அவர்களைப் பழிவாங்கியது ஒன்றும் புதினமில்லை.

Leave a Reply