தை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு திருவள்ளுவர் ஆண்டுத் தொடக்கம்!

தை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு திருவள்ளுவர் ஆண்டுத் தொடக்கம்!

நக்கீரன்

சித்திரை முதல் நாள்  தமிழ்ப் புத்தாண்டா? அல்லது தை முதல்நாள்  தமிழ்ப் புத்தாண்டா? இந்தச்   சொற்போர் தொடர்ந்து நடைபெறுகிறது. ஓய்ந்தபாடாக இல்லை.

உண்மையில், தமிழ்ப் புத்தாண்டாக எந்த நாளை எடுத்துக்கொள்வது?

உண்மையைச்   சொன்னப் போலால் சித்திரை, தை இரண்டுக்கும் வானியல் அடிப்படை இருக்கிறது.  எனவே  வானியல்  தரவுகளைப் பார்ப்போம்.

 புவி  என்ற கோள் தன்னைத்தானே  தனது அச்சில் சுற்றிக்கொண்டு  அதே நேரம் ஞாயிறு,  என்ற விண் மீனையும் சுற்றி வருகிறது.

ஞாயிறு   காலையில் கிழக்கில் தோன்றி  நடுப்பகலில் உச்சியில் நின்று பின்னர்  மாலையில் மறைந்து மீண்டும் சூரியன் கிழக்கில் உதிக்கும் காலம் ஒரு நாள் என அழைக்கப்படுகிறது. ஒரு நாளில் 24 மணித்தியாலயங்கள்  அல்லது 60 நாழிகைகள் உண்டு. இரண்டரை நாழிகை ஒரு மணித்தியாலம் ஆகும்.

ஒரு மாதம் என்பது என்ன?  இரண்டுவிதமான கணக்கீடுகள் இருக்கின்றன.  ஒரு முழு நிலவு  தோன்றி மீண்டும் ஒரு முழு நிலவு தோன்ற ஆகும் காலம். அதனால் தான் மாதம் என்பதற்கு திங்கள் என்ற தமிழ் சொல் உள்ளது. திங்கள் என்றால் நிலவு என்று பொருள். திங்களை (நிலாவை) அடிப்படையாக வைத்துக் கணக்கிடப்படுவதால் மாதம் திங்கள் என்று அழைக்கப்பட்டது.

அதேபோல் ஆண்டு என்பது என்ன? ஞாயிறு  தென்திசையிலிருந்து வடதிசை நோக்கி நகர்வதாய்த் தோன்றும் நாள் முதல் (உத்ராயணம்) மீண்டும் அதே நிலை (உத்ராயணம்) தொடங்கும் வரையுள்ள கால அளவு ஓர் ஆண்டு. உத்ராயணம் என்றால் வடக்கு நோக்கல் என்று பொருள். தட்சணாயனம் என்றால் தெற்கு நோக்கல் என்று பொருள்.

அதாவது   ஞாயிறு  கிழக்கில் தோன்றி மீண்டும் கிழக்கில் தோன்ற எடுத்துக் கொள்ளும் காலம் ஒருநாள். ஞாயிறு தென் கோடியில் தோன்றி மீண்டும் தென் கோடியில் தோன்றும் வரையிலான காலம் ஓராண்டு.

ஞாயிறு  தை  முதல் நாள்   தெற்கு நோக்கி நகரத் தொடங்கும்.  இதை தென்திசை  செலவு என்பர்.  செலவு என்றால் பயணம் என்று பொருள். ஞாயிறு, பங்குனி சித்திரையில் உச்சியில் இருக்கும்.  பின் ஆடியில் வடகோடியில் இருந்து தென்கோடி நோக்கும்.  பின் தென்கோடிக்கு வந்து மீண்டும் வடக்கு நோக்கி நகரும். இவ்வாறு ஞாயிறு  வடக்கு நோக்கி நகரத் தொடங்கியதில் இருந்து மீண்டும் வடக்கு நோக்கி நகரத் தொடங்கும் வரையிலான கால அளவு ஓர் ஆண்டு ஆகும். புவிதான் ஞாயிறைச் சுற்றிவருகிறது. ஞாயிறு ‘நகர்வதில்லை’ என்பது அறிவியல் உண்மை. ஆனால் நம் பார்வைக்கு  ஞாயிறு நகர்வதாகத் தெரிவதை வைத்து அவ்வாறு கணித்தனர். ஆகக் காலக் கணக்கீடுகள் என்பவை இயற்கை நிகழ்வுகளை வைத்தே கணிக்கப்பட்டன.  இவ்வாறு முதலில் கணக்கிட்டவர்கள் சுமேரியர், பபிலோனியர், பின்னர் கிரேக்கர் ஆவர்.

ஞாயிறு, புவி, மற்றும் நிலா பரவெளியில் உள்ள மற்றப் பொருட்களுடன் ஊடாடுகிறது. ஞாயிறைப் புவி ஒரு முறை சுற்றி வருவதற்கு 365 நாட்கள் 5 மணி 48 மணித்துளிகள்  45.51 நொடி  ஆகின்றது. இதனை  பெப்ப மண்டல ஆண்டு (Tropical  Year) என அழைப்பர்.  இந்த அடிப்படையில் நாம் ஆண்டைக் கணக்கிட்டுக் கொள்ள முடியாது. ஆகவே முழு எண்ணாக  365 என்று வைத்துக் கொண்டுள்ளோம். ஆனால் இந்த கூடுதல் நேரத்தை (5 மணி 48 மணித்துளி, 45.51 நொடி) கணக்கில் கொள்ளாமல் விட்டு விட்டால் அது சேர்ந்து கொண்டே போய் சிக்கலை உண்டாக்கும். அதாவது அக்கினி நட்சத்திரம் மே மாதத்தில் (சித்திரை மாதம்) வருவதற்குப் பதில் யூன், யூலை மாதங்களில் வரத் தொடங்கும்.Search image results for "sidereal"

ஆகவே நமது நாட்காட்டியும்  இயற்கையும் ஒத்துப் போக வேண்டும். இதைக் கருதித்தான் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை (நான்கினால் வகுபடுகின்ற ஆண்டுகளில்)  கூடுதலாக ஒரு நாளைச் சேர்த்துக் கொண்டார்கள். லீப் வருடத்தில்  பெப்ரவரியில் 28 நாட்களுக்குப் பதில் 29 நாட்கள் என்று வைத்துக் கொண்டார்கள்.

வானியல் கணிதமுறைப்படி ஆண்டுகள்  ஞாயிறு அடிப்படையில் மட்டும்  கணிக்கப்படுவதில்லை.  நிலா மற்றும் நட்சத்திரத்தை வைத்தும் கணக்கிடுகிறார்கள்.   புவி அதன் வான் மண்டலத்தில் உள்ள இராசி வட்டத்தைச் சுற்றிவர எடுத்துக் கொள்ளும் காலம் நட்சத்திர ஆண்டு (Sidereal Year) எனப்படுகிறது. புவி மையக் கொள்கைப்படி, ஞாயிறு இராசி வட்டத்தைச்  சுற்றிவர எடுத்துக் கொள்ளும் கால அளவாகும். இதன்படி, ஓர்  ஆண்டு என்பது 365 நாட்கள் – 6 மணி – 9 மணித்துளி  9.76 நொடி என்பதாகும்.

ஞாயிறு  360 பாகை கொண்ட இராசி  வட்டவத்தை ஒலு நீள்வட்டத்தில் சுற்றிவருகிறது. இந்த இராசி வட்டம் 12 ஆகப் பிரிக்கப்பட்டு மேடம் முதல்  மிதுனம் வரை பெயரிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு இராசியைக் கடக்க  ஞாயிறு தோராயமாக ஒரு மாத காலத்தை எடுக்கிறது.   அதாவது,  மேட இராசி (சித்திரை மாதம்) தொடங்கி, மீன இராசி வரை (பங்குனி மாதம்) பன்னிரண்டு மாதங்களில் புவி  ஞாயிறு விண்மீனைச்  ஒரு முறை சுற்றி வருகிறது. எங்களது கட்புலனுக்கு இந்தக் காட்சி ஞாயிறு புவியைச் சுற்றிவருவது போல் படுகிறது. இதுவொரு காட்சிப் பிழையாகும்.

சோதிடக் கணிப்பில் மேலைநாட்டுச் சோதிடர்கள் வெப்ப மண்டல ஆண்டையும் இந்திய சோதிடர்கள் நட்சத்திர ஆண்டையும் தங்கள் கணிப்புக்குக் கைக்கொள்கிறார்கள்.  பஞ்சாங்கங்கள் நட்சத்திர ஆண்டுமுறையையே பின்பற்றிக் கணிக்கப்படுகின்றன. இதனால் இந்த இரண்டு சோதிட முறையால் பல குழப்பங்கள் தோன்றுகின்றன.

வானியல் ஆண்டுகள்

ஆண்டு வகை நாட்கள் நாள் மணி மணித்துளி நொடி
நட்சத்திர ஆண்டு 365.25636042 365 6 9 9.76
வெப்ப மண்டல ஆண்டு 365.24219878 365 5 48 45.51
வித்தியாசம் 0 0 20. 24.25

இதனால் மேற்குலக சாதகக் கணிப்புக்கும் இந்திய சாதகக் கணிப்புக்கும் இடையில் வித்தியாசம் காணப்படுகிறது.  இந்த இரண்டு ஆண்டு வகையில் காணப்படும் வித்தியாசம் அயனாம்சம் என அழைக்கப்படுகிறது. இந்த வித்தியாசம் காரணமாக வான்வெளியில்  சமயிரவுப் புள்ளி (Equinox) மாறிக் கொண்டிருக்கிறது. சமயிரவுப் புள்ளி என்பது ஞாயிறின் நீள்வட்டப் பாதையும் புவியின் வான் நடுக்கோடும் ஒன்றையொன்று வெட்டும் இடமாகும்.  இது தோராயமாக 71 ஆண்டுகளில் ஒரு பாகை வேறுபாட்டை உண்டாக்குகிறது. ஆக  வெப்பமண்டல சோதிடத்தில்  இராசிச் சக்கரம் நகர்ந்து கொண்டிருப்பதால் அதனை   சயன இராசிச் சக்கரம்  (Moving zodiac) என்றும் இந்திய சோதிடத்தில் இராசிச் சக்கரம் நகராமல் இருப்பதால் நிராயன (Fixed Zodiac) என்றும் அழைக்கப்படுகின்றன. சயன நிலநிரைக் கோட்டில் (Longtitude) இருந்து  நிராயன நட்சத்திர நிலநிரைக் கோட்டின் (Longtitude)  தூரத்தைக் கழித்தால் கிடைப்பது கிரகங்களின் நிராயனா நிலநிரைக் கோடாகும். இரண்டுக்கும் இடையில் காணப்படும்  தூரம் அயனாம்சம் என அழைக்கப்படுகிறது. Search image results for "moving zodiac"

ராசி மண்டலத்தின் தொடக்க  இடம் மேட இராசியில் இருந்து, அதாவது அசுவினி முதல் பாதத்தில் இருந்து  தொடங்குகிறது. அசுவினி முதல் பாதத்திலிருந்து ரேவதி நாலாம்  பாதம் முடிய உள்ள நீள்வட்டப் பாதையே ராசிச் சக்கரம் ஆகும்.  இது ‘நிராயனா’ என்று அழைக்கப்படும். மற்றும் ஒரு ராசிச் சக்கரம் உள்ளது. அது ‘சயனா’ என்று அழைக்கப்படும். அது சமபகலிரவு (‘Vernal Equinox’) என்ற புள்ளியில் இருந்து  இராசிச் சக்கரம் தொடங்கும்.  நீள்வட்டமான 360 பாகைகள் கொண்டது இந்த ராசிச் சக்கரம்.

பூமி,  சூரியன் சுற்றும் பாதையும் (Ecliptic),  வான் நடுக்கோடும் (Celestial Equator)  வெட்டும் இடம்தான்   வேனில் சமபகலிரவு (Vernal Equinox)  ஆகும். .Résultat de recherche d'images pour "spring equinox"

புவியின் அச்சு 23 1/2   பாகை சாய்ந்திருப்பதால், புவியின் மேற்பரப்பில் விழும் சூரிய ஒளியின் அளவு வெவ்வேறு இடங்களில் பெரிதும் வேறுபடுகின்றது. இது பல காலம் சார்ந்த தட்பவெப்பநிலை மாற்றங்களை, ஏற்படுத்துகின்றது, வடதுருவம் சூரியனை நோக்கி உள்ள போது வட கோளத்தின் கோடை காலமும் அதுவே சூரியனை விட்டு விலகி உள்ள போது குளிர்காலமாகவும் ஏற்படுகின்றது. கோடை காலத்தின் நாட்கள் நீண்டும் சூரியன் வானில் உயரேயும் காணப்படுகின்றது. குளிர் காலத்தில், தட்பவெப்ப நிலை பொதுவாக குளிர்ச்சியாகவும் மற்றும் நாட்கள் குறுகியும் காணப்படும். வட துருவத்தில் ஆண்டின் ஆறு மாதங்களுக்கு வெளிச்சமே இருப்பதில்லை.  இது துருவ இரவு என்றழைக்கப்படுகின்றது. தென் துருவம் வடதுருவத்திற்கு எதிர்புறம் அமைந்திருப்பதால், தென் துருவத்தில்  காலங்கள் வட  துருவத்துக்கு எதிர்மறையாக அமைந்திருக்கிறது.

வானியல் மரபுப்படி, நான்கு பருவ காலங்களும் புவி தனது  நீள்வட்டப் பாதையில் (elliptic)  ஞாயிறை நோக்கி அல்லது ஞாயிறில் இருந்து விலகும் அதிகபட்ச அச்சு சாய்வுப் புள்ளியான திருப்புமுனை  (Solstice) என்றும், சாயும் திசை  ஞாயிறை நோக்கிச் செங்குத்தாக இருக்குமானால் சமபகலிரவு  (Equinox) என்றும்  நிர்ணயிக்கப்படுகிறது. குளிர் கால திருப்புமுனை (Winter Solstice) டிசெம்பர் 21 அன்று ஏற்படும், கோடை கால திருப்புமுனை (Summer Solstice) யூன் 21 தேதி வாக்கில் ஏற்படும்.  வேனில் கால சமபகலிரவு (Spring Equinox) மார்ச் 20 ஆம் தேதி வாக்கில் ஏற்படும்.  இலையுதிர்கால சமபகலிரவு (autumn equinox)  செப்தெம்பர் 23 ஆம் தேதி வாக்கில் ஏற்படும்.

ஆடி மாதத்திலிருந்து தெற்குத் திசை நோக்கிப் பயணம் செய்யும்  ஞாயிறு, தை மாதத்திலிருந்து வடக்குத் திசை நோக்கித் தன் பயணத்தை மேற்கொள்கிறது. ஞாயிறு உதிப்பது கிழக்கில் மறைவது மேற்கில்தான் என்றாலும் ஞாயிறு ஒரு நாளைக்கு தோராயமாக  ஒரு பாகை  வீதம் தெற்கு அல்லது வடக்கு நோக்கி நகர்கிறது.  அதாவது, ஆறு மாதம் தெற்கு நோக்கிப் பயணம், ஆறு மாதம் வடக்கு நோக்கிப் பயணம். மேலே கூறியவாறு  புவி தனது அச்சில் 23 1/2 பாகை சரிந்திருப்பதே காரணமாகும். கோள்கள் மற்றும் நட்சத்திரங்களுக்கும் பருவ காலங்களுக்கும் தொடர்பே இல்லை.

தை மாதம்  முதல் நாளில் வானில் சூரியன் தனது மகர இராசியில் புகுந்து  வட திசைப் பயணத்தை தொடங்குகிறது.  சித்திரை மாதம் முதல் நாளில் ஞாயிறு இராசிச் சக்கரத்திலுள்ள முதல் இராசியான மேட இராசியில் அசுவனி நட்சத்திரத்தில் புகுகிறது.

இரண்டுக்கும் வானியல் அடிப்படை இருக்கிறது. ஆனால் எது புத்தாண்டு?

1921 ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் மறைமலை அடிகளார் தலைமையில் கூடிய தமிழ் அறிஞர்கள் மூன்று முக்கிய முடிவுகளை அப்போது எடுத்தார்கள்.

1. திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டைப் பின்பற்றுவது.

2. அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வது.

3. திருவள்ளுவர் காலம் கிமு 31 (வழக்கில் உள்ள ஆங்கில ஆண்டுடன் 31  யைக் கூட்டினால் திருவள்ளுவர் ஆண்டு வரும்)

1971 இல் தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் ஆண்டு முறையை ஏற்றது. இம்முறையை 1971 முதல் அரசு நாட்குறிப்பிலும் 1972 முதல் அரசிதழிலும் 1981 முதல் அரசின் அனைத்து அலுவல்களிலும் நடைமுறைப்ப்படுத்தப்பட்டு வருகின்றது. 1969 ஆம் ஆண்டு பொங்கல் திருநாளுக்கு அடுத்த நாளை திருவள்ளுவர் நாள் என்று ஏற்று தமிழ்நாடு அரசு விடுமுறை அளித்து ஆணை பிறப்பித்தது. எனவே தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு ஆகும்.

திருவள்ளுவர் ஆண்டு பிறக்கும் தைத் திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்பதால் தைத் திங்கள் முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என அறிவிக்கும் சட்டத்தை தமிழக அரசு கடந்த 1.2.2008 அன்று சட்டப்பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றியது.

ஆனால் மே 2011  இல் மீண்டும் பதவிக்கு வந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா குறிப்பிட்ட சட்டத்தை இல்லாது செய்து சித்திரை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு எனச் சட்டம் இயற்றினார்.

சித்திரை முதல் நாளைப் புத்தாண்டாக தொடர்ந்து கொண்டாடி வரலாம். ஆனால் அது தமிழ்ப் புத்தாண்டு ஆக இருக்க முடியாது. இந்துப் புத்தாண்டு (Hindu New Year)  என அதனைக் கொண்டாடலாம்.  ஆனால் இப்போதுள்ள 60 ஆண்டு பிரபவ இல் தொடங்கி அட்சயத்தில் முடிகிறது. மீண்டும் அது முதலில் இருந்து தொடங்குவதால் தமிழர்களுக்கு ஒரு தொடர் ஆண்டு இல்லாமல் இருக்கிறது.

எனவே தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாகவும் திருவள்ளுவர் ஆண்டின் தொடக்க  நாளாகவும் கொண்டாடுவதால் தமிழர்களுக்கு ஒரு தொடர் ஆண்டு இல்லாத குறை களையப்படுகிறது. திருவள்ளுவர் கிமு 31 இல் பிறந்ததாக எடுத்துக் கொண்டு ஆங்கில ஆண்டுடன் அதனைக் கூட்டினால் திருவள்ளுவர் ஆண்டு வரும். இப்போது திருவள்ளுவர் ஆண்டு 2049 நடைபெறுகிறது. தை முதல் நாள் பிறக்கும் புத்தாண்டு  சமயம் சாராத பண்பாடு தழுவிய புத்தாண்டாகும். அதனைக்  கிறித்தவ தமிழர்கள் உட்பட அனைத்துத் தமிழர்களும் கொண்டாட வேண்டும்.

 


 

 

Be the first to comment

Leave a Reply