கியூபா ஒரு பூலோக சொர்க்கம்

கியூபா ஒரு பூலோக சொர்க்கம்

திருமகள்

சொர்க்க வாசலில் ஒருவர் நுழையும்போது அவரிடம் இரண்டு கேள்விகள் கேட்கப்படும் என்று சொல்லப்படுகிறது. இந்தக் கேள்விகளுக்கு உங்கள் பதில் “ஆம்” என்றால் அனுமதி உண்டு, இல்லாவிட்டால் அனுமதி மறுக்கப்படும். முதல் கேள்வி என்னவென்று தெரியுமா?

“உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியை உணர்ந்திருக்கிறீர்களா?” இரண்டாம் கேள்வி, “உங்களைச் சுற்றியுள்ள மனிதர்களுக்கு மகிழ்ச்சியை விளைவித்திருக்கிறீர்களா?”

இந்த இரண்டாம் கேள்விக்கு  உங்கள் பதில் “ஆம்” என்றால், நீங்கள் ஏற்கனவே சொர்க்கத்தில்தான் இருக்கிறீர்கள்!

கியூபா ஒரு தீவல்ல. அது  பூலோகத்தில் பிரமன் தன் கைவண்ணம் முழுவதையும் பயன்படுத்திப் படைத்த உள்ள ஒரு சொர்க்க பூமி. உலகில் உள்ள அத்தனை அழகுகளும் வனப்புகளும் அங்கே கொட்டிக் கிடக்கிறது.

பாரதியார்  வறுமையில் வாடியவர். பல நாள் உணவின்றித் தவித்தவர்.  அதனால் போலும் தனக்கு என்னவெல்லாம் வேண்டும் என்ற ஆசையை  கவிதை வடிவில்  தந்திருக்கிறார்.

காணி நிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும்
அங்குத் தூணில் அழகியதாய் நன்மாடங்கள் துய்ய நிறத்தினவாய்
அந்தக் காணி நிலத்திடையே ஓர் மாளிகை கட்டித் தரவேண்டும்
அங்குக் கேணியருகினிலே தென்னைமரம் கீற்று மிளநீரும்.

பத்துப் பன்னிரண்டு தென்னைமரம் பக்கதிலே வேணும்
நல்ல முத்துச் சுடர்போலே நிலாவொளி முன்பு வரவேணும்
அங்குக் கத்துங் குயிலோசை சற்றே வந்து காதிற் படவேணும்
என்றன் சித்தம் மகிழ்ந்திடவே நன்றாயிளந் தென்றல் வரவேணும்.  (பாரதியார் பாடல்கள்)

பாரதியார் தமிழ்நாட்டை விட்டோடி புதுவையில்  தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தவர். அப்போது அங்கேயிருந்த தென்னம் தோப்புகளையும் அதில் இருந்து பாடும் குயில்களின் ஓசைகளையும் இன்ன பிற அழகுகளையும் பார்த்து இரசித்தார்.   அதன் எதிரொலிதான் “காணி நிலம் வேண்டும்” என்ற பாடல். 

பாரதியார் கியூபா  போன்ற அழகான தீவைப் பார்த்ததில்லை. அந்த வாய்ப்பு அவருக்குக் கிட்டவில்லை. கிட்டியிருந்தால் சுந்தரத் தமிழில் நல்ல கவிதைகள் பல கட்டி இருப்பார். கியூபா தீவு அவ்வளவு கொள்ளை அழகு. அதன் இதமான காலநிலை, சுற்றிலும் நீலக்கடல், பால்போல் விரிந்து கிடக்கும் கடற்கரை, சல சல என ஓடும் ஆறுகள் ஆகியவை அந்தத் தீவை பூலோக சொர்க்கமாக மாற்றிக் காட்டுகிறது. Image result for CUBA

பார்க்கும் இடம் எல்லாம் பச்சை நிறம். அங்கே நோக்கிய திசை எல்லாம்  வெவ்வேறு நிறங்களில் பூ மரங்கள். வரிசையாக  செவ்விளனி மற்றும் ஈச்ச மரங்கள்.  வெவ்வேறு நிறங்களில்  செவ்வரத்தையை வேலியாக நட்டு வைத்துள்ளார்கள். மரங்களில் எப்போதும்  பறவைகளின் கீச்சொலிகள்.    எதிர்ப்புறத்தில் அடிவானம் மட்டும் பரந்து விரிந்து கிடக்கும் நீலக் கடல். அதிலிருந்து தவழ்ந்து வரும் இதமான காற்று   “ஆகா  மாருதம் வீசுவதாலே  ஆனந்தம் பொங்குதே மனதிலே… “ என்ற மந்திரிகுமாரிப் பாடலை முணுமுணுக்க வைத்தது. பாடியவர் திருச்சி லோகநாதன்.

கனடா பணக்கார நாடு. மறுப்பார் இல்லை.  ஆனால் கியூபாவின் தென்றல் காற்றை, அதன் அளவான சூரிய ஒளியை, வெண்மணல் பரப்பிய கடற்கரையை, அவ்வப்போது பெய்யும் சிறிய மழை,  பொதுவாக அதிகம் சூடு, அதிகம் குளிர் இல்லாத இதமான காலநிலை இவற்றைப்   பணம் கொடுத்து யாராவது   வாங்க முடியுமா?  இவை இயற்கையின் கொடைகள்.  அந்தக் கோணத்தில் பார்த்தால் ஏழைநாடான கியூபா பணக்கார நாடாகவும் பணக்கார நாடான கனடா ஏழை நாடாகவும் காட்சி அளிக்கின்றன.

கியூபா பயணம் இது முதல் தடவை அல்ல. இதற்கு முன்னரும் மூன்று முறை வெவ்வேறு சுற்றுலாத் தலங்களுக்குப் போயிருக்கிறேன்.  சுற்றுலாப் பயணத்துக்கு உகந்த  மாதங்கள்   பெப்ரவரி – மே மாதங்கள்.  யூனில் வெட்கை தொடங்கிவிடும்.

தலைநகர் ஹவானாவையும் சுற்றிப் பார்த்திருக்கிறேன்.  கியூபா பயணங்களின் பின்னர் அப்போது வெளிவந்து கொண்டிருந்த ‘முழக்கம்’ வார ஏட்டில்  ‘ஒரு பருந்தின் நிழலில்’ என்ற தலைப்பில் ஒரு நீண்ட பயணக் கட்டுரையை 93 வாரங்கள் தொடர்ந்து  எழுதியிருந்தேன்.

இம்முறை நீண்ட இடைவெளிக்குப் பின்னர் போயிருந்தேன்.  கியூபா நாட்டின்  சுற்றுலா தலங்கள் அழகில், அமைப்பில்  ஒன்றையொன்று விஞ்சுகின்றன.  பல நாடுகளில் இருந்தும் சுற்றுலாப்  பயணிகள் வருகிறார்கள். அதில் பெரும்பான்மையர் கனடியர்.  வெது விரைவில் அமெரிக்க சுற்றுலாப் பயணிகள் கியூபாவை படையெடுக்க இருக்கிறார்கள். காரணம் கியூபா – அமெரிக்கா இரு நாடுகளுக்கும் இடையில்  அமைதிப் பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன.

பயணத்துக்கான செலவு   மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது கியூபாவுக்குப் போய்வருவது  நடுத்தர வர்க்கத்துக்குக்  கீழே இருப்பவர்களுக்கும் கட்டுபடியாக இருக்கிறது. மேலும் பாதுகாப்பு இங்கு அதிகம்.

விமானத்தில் இருந்து இறங்கி சுற்றுலா விடுதிக்குப்  பேருந்தில்  கொண்டு சென்று  ஒரு வாரம் தங்க வைத்து  மீண்டும் விமானத்தில் ஏற்றி விடுகிறார்கள். இடையில் வேறு இடங்களைப் போய் பார்த்துவரவும்  வசதிசெய்துள்ளார்கள்.

உணவு, உறைவிடம் எல்லாமே இலவசம்.  வெவ்வேறு நாட்டு உணவுகளை பரிமாறுகிறார்கள். விருப்பமான உணவை  உண்ணலாம். அது மட்டுமல்ல  பல உணவகங்கள் (இத்தாலி, இசுப்பானியா……… ) இருக்கின்றன.  எண்ணிப் பார்த்ததில் 30 உணவங்கள் இருந்தன.  ஒரு சில உணவகங்கள்  24 மணி நேரமும் திறந்து வைக்கப்பட்டுள்ளன. சாப்பாட்டு இராமர்கள் போனால் கொடுக்கிற பணத்தை விட இரண்டு மடங்கு சாப்பிட்டு குடித்துவிட்டு வரலாம்.  சுற்றுலாத் துறைக்கு பொறுப்பானவர்களுக்கு  எப்படிக் கட்டுபடியாகிறது என்பது தெரியாமல் இருக்கிறது!Image result for CUBA

இன்று உலகில் எஞ்சியுள்ள பொதுவுடமை நாடுகளில் கியூபாவும் ஒன்று. ஏனையவை வடகொரியாவும் சீனக் குடியரசும் ஆகும். சீனாவைப் பொறுத்தளவில் அரசியல் மட்டத்தில்தான் அது ஒரு பொதுவுடமை நாடு. பொருளாதார மட்டத்தில் அதுவொரு பச்சை முதலாளித்துவ நாடாகும்.

கியூபாவில் சுற்றுலா ஒரு கைத்தொழில் (industry) ஆகப் பார்க்கப்படுகிறது. ஆண்டொன்றுக்கு 30 இலட்சம் சுற்றுலாப் பயணிகள்  வந்து போகிறார்கள். பலர் ஒருமுறைக்கு மேல் வந்தவர்கள். மற்றவர்களை விட அவர்கள் ஓரளவு தனியாகக் கவனிக்கப்படுகிறார்கள்.    சுற்றிலாத் துறைதான் கியூபாவின் முதுகெலும்பு.  

1959 ஆம் ஆண்டு நடந்த  ஆயுதப் புரட்சியின் பின் ஆட்சிக்கு வந்த பிடல் காஸ்ட்ரோ தனியுடமையை தடை செய்துவிட்டார். வெளிநாட்டு நாணயம் வைத்திருப்பது தடை  செய்யப்பட்டது. தொழிற்சாலைகள் நாட்டுடமை ஆக்கப்பட்டது.  அமெரிக்கர்கள் வருவது தடை செய்யப்பட்டது. இதனால் கியூபா பன்னாட்டு சமூகத்தில் இருந்து தனிமைப் படுத்தப்பட்டது. பொருளாதாரம் நலிவடைந்தது. சோவியத் நாடு 1990 இல் சோவியத் ஒன்றியம் சிதறுண்ட  போது கியூபா பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர் கொண்டது.  கியூபா சர்க்கரையை ஏற்றுமதி செய்து அதற்கு ஈடாக எரிபொருளை குறைந்த விலையில் பெற்றுக்கொண்டது. அந்த பண்டமாற்று வாணிகம் சடுதியாக நின்று  போய்விட்டது.

கியூபா மக்களில்  10 இல் 7 பேர் 1959 புரட்சிக்கு பின்னர் பிறந்தவர்கள். ஒரு துன்பியல் செய்தி. கியூபா தீவின் பூர்வீக குடிகள் இன்று இல்லை. அந்தத் தீவைக் கண்டு பிடித்த கொலம்பஸ் உட்பட  இசுப்பானி ஆட்சியாளர்கள்  ஒருவர் மிஞ்சாமல் அவர்களைக் கொன்றொழித்து விட்டார்கள்!

முழுப் பெயர்                              –         கியூபன் குடியரசு

தலைநகர்                                   –         ஹாவானா

அரச சபை ஆட்சித் தலைவர்    –        ராவுல் காஸ்ட்ரோ (Raúl Castro )

சட்ட சபை                                 –         தேசிய சட்ட  சபை

 கியூபா புரட்சி நாள்                –          சனவரி 01,

பரப்பளவு                                –           110,860 சகிமீ  (42,803 ச.மைல்) இலங்கை 65,610 ச. கிமீ (25,332 ச. மைல்)

மக்கள் தொகை                     –            11.2 மில்லியன் (ஐ.நா.2011)

இனங்கள்                               –            51 விழுக்காடு (Mulatto 51%)  வெள்ளையர் – 37 %, – கருப்பர் – 11 %,  சீனர் – 1 %

மொழி                                    –           இசுப்பானியா

சமயம்                                    –           கிறித்தவம்

மொத்த உள்ளூர் உற்பத்தி  GDP(PPP)   –        121 பில்லியன் (2012)

தனிமனித வருமானம்                               –      10,106  அ.டொலர்

வாழ்நாள்                                                   –     ஆண்கள் 77 ஆண்டுகள்.  பெண்கள் 81 ஆண்டுகள்.

மேற்கிந்தியத் தீவுகளில் பெரிய தீவாக கியூபா உள்ளது. இந்நாடு பல இயற்கை வளங்களைக் கொண்டுள்ளது. தீவின் நிலப்பகுதியில் கால் பாகமே மலைகளாலும் குன்றுகளாலும் சூழப்பட்டுள்ளது. பெரும்பாலான நிலப்பகுதியில் வேளாண்மையும் கால்நடை வளர்ப்பும் முதன்மைத் தொழில்களாக உள்ளன. செழிப்பான நிலமும் சாதகமான வானிலையும் வேளாண்மைக்குப் பெரிதும் துணை நிற்கிறது.
Image result for CUBA
கியூபாவில்  கரும்பு முதன்மை வாணிகப்  பயிராக உள்ளது.  இதிலிருந்து சர்க்கரை தயாரிக்கப்பட்டு முதன்மை ஏற்றுமதிப் பொருளாக விளங்குகின்றது. இரண்டாவதாக புகையிலை உள்ளது. புகையிலையைக் கொண்டு சுருட்டு தயாரிக்கப்படுகின்றது. கியூபா சுருட்டுகளுக்கு  உலகில் நல்ல  தேவையிருக்கிறது.  பிற முக்கியப் பயிர்களாக நெல்,  கோப்பி, பழங்கள் உள்ளன. மாம்பழத்தில் மட்டும் 68 வகையான பழங்கள் ஆண்டு முழுதும் கிடைக்கின்றன.

கியூபாவில்  கோபால்ட், நிக்கல், இரும்பு, செப்பு, மாங்கனீசு போன்ற தனிமங்களும் கிடைக்கின்றன. உப்பு, பாறை எண்ணெய், இயற்கை எரிவாயுவும் இங்கு தயாரிக்கப்படுகின்றன.

உலகின் கீரியும் பாம்பும் போல்  பகை நாடுகளாக இருந்த கியூபாவும்  அமெரிக்காவும்  தமக்கிடையே உறவுகளை மீண்டும் ஏற்படுத்த  பேச்சு வார்த்தை நடத்துகின்றன.  அமெரிக்கா சில பொருளாதாரத் தடைகளை தளர்த்தியுள்ளது. கியூபா மக்களுக்கு நல்ல காலம் பிறக்கப் போகிறது.

கியூபாவில் இசுபானிய வருகைக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வடக்கு, மத்திய மற்றும் தென் அமெரிக்கா நிலப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த பூர்வீக அமெரிக்கர்களான டைனோ மற்றும் கோனஜடபே மற்றும் சிபோனே ஆகிய  பழங்குடியின மக்கள் வசித்துவந்தனர். இவர்களில் டைனோ இனமக்கள் விவசாயத்தையும்  சிபோனே இன மக்கள் விவசாயத்தோடு மீன் பிடித் தொழிலையும்,வேட்டையாடுதலையும் செய்து வந்தனர்.

அக்டோபர் 12, 1492 இல் குனாஹனி என அழைக்கப்படும் தீவில் கிறிஸ்டோபர் கொலம்பஸ் முதன்முதலில் தரையிறங்கினார் 1511 ஆம் ஆண்டில், முதல் இசுபானிய குடியேற்றம் பாராகோ தீவில் டியாகோ-வெலாஸ்க்குவெஸ்-டி-கியுல்லர் அவர்களால் நிறுவப்பட்டது. மற்ற நகரங்களில்  1515 குள் குடியேற்றங்கள் நிறுவப்பட்டன.

1529 ஆம் ஆண்டு கியூபாவை அம்மை நோய் தாக்கியது.  அதனால் பூர்வீக குடிமக்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் பலியாகினர்.

செப்டம்பர் 1, 1548 இல்,  மருத்துவர்  கோன்சலோ பெரேஸ் டி அன்குலோ கியூபா கவர்னராக நியமிக்கப்பட்டார். 1817 இல் மக்கள் தொகை 630, 980 ஆக இருந்தது 291,021 பேர் வெள்ளையர்கள், 115, 691 பேர்  கருப்பர்கள் மற்றும் 224, 268 கருப்பு அடிமைகள்  இருந்தனர்.      1820 ஆம் ஆண்டில் இலத்தீன் அமெரிக்க இசுபானிய பேரரசில் கலகம் ஏற்பட்ட போது சுயாட்சி மாநிலங்கள் அமைக்கப்பட்ட போதும் கியூபா பேரசின் ஒரு பகுதியாக இருந்தது.

கியூபன் புரட்சியை அடுத்து 1959 ஆம் ஆண்டு பிடல் காஸ்ட்ரோ தலைமையிலான   பொதுவுடமை அரசு ஆட்சியைக் கைப்பற்றியது.  கியூபா எழுத்தாளர்கள் தொடர்ச்சியாக பெரிய அளவில் அரச ஆதரவுடன் அச்சிடும் புத்தகங்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களூடாகப் பிரசுரித்து வருகின்றனர். ஹவானா பல்கலைக் கழகம் கியூபாவின் மிகப் பழைய பல்கலைக் கழகம் ஆகும். கியூபாவின் கல்வியறிவு 100% ஆகும். கியூபாவில் வயது பால் வித்தியாசம் இன்றி பாடசாலை மாணவர்கள் எல்லோரும்  சீருடைகளை  அணிகின்றனர்.Image result for CUBA

கியூபாவில் இரண்டுவகை நாணயம் பயன்படுத்தப்படுகிறது.   ஒன்று,  கியூபன் டொலர்  (CUC). அதன் பெறுமதி  1  கனடியன் டொலருக்கு 63 சதம் கியூபன் டொலர்.  வெளிநாட்டவர்கள் இந்த நாணயத்தைப் பயன்படுத்த வேண்டும்.  இரண்டு,  தேசிய கியூபன் பேசோ (CUP). இது உள்நாட்டு மக்கள்   பாவனைக்கு இருக்கிறது.  ஒரு கனடிய டொலரின் பெறுமதி 21.20 கியூபன் பெசோ. ஒரு அமெரிக்க டொலர் 26.50 கியூபன் பெசோ.   கியூபன் டொலரை கியூபன் பேசோவுக்கு மாற்றலாம். அதே போல்  கியூபன் பேசோவை  கியூபன் டொலருக்கு மாற்றலாம். இந்த இரண்டுவகை நாணயங்களையும் ஒழித்துவிட்டு ஒரே நாணயத்தைப் பாவனைக்குக் கொண்டுவர கியூபா அரசு யோசிக்கிறது.

பெப்ரவரி 2008 இல் பிடல் காஸ்ட்ரோ வயது காரணமாக இளைப்பாற அவரது நம்பிக்கைக்கு உரிய அவரது இளவல் ராவுல் காஸ்ட்ரோ  ஆட்சித் தலைவராக வந்தார். அவரது வருகைக்குப் பின்னர்  பல பொருளாதாரக் கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்பட்டு வருகின்றன.  தனி மனிதர்களுக்குத்  தோட்டங்கள் செய்ய நிலம் வழங்கப்படுகிறது.  உணவுக் கடைகள் நடத்தவும், வேறு விற்பனைக் கடைகளை நடத்தவும் அனுமதி வழக்கப்படுகிறது. ஏன் வீடுகள் வாங்கவும் விற்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் வெளிநாட்டவர் கியூபாவில் சொத்து வாங்க முடியாது.

சுற்றுலா ஹோட்டலில்  தலைமைச் சமயல்காரராக வேலை செய்த ஒரு நண்பர் இப்போது வெளியில  சொந்தத்தில்  சிறிய  உணவகம் நடத்துகிறார்.  அதனை இப்போது குடிக்கூலிக்குக் கொடுத்து விட்டு இரண்டு பெரிய தோட்டத்தில் காய், கறி, சோழம், மரவெளி, வத்தாளை, கரும்பு, தக்காளி, வெங்காயம் பயிரிடுகிறார். சிறிய அளவில்  ஆடு, மாடு, கோழிகளும் பெரியளவில்  பன்றிகளும் வளர்க்கிறார்.  அவற்றை ஒரு நாள் முழுதம்  சுற்றிப் பார்த்தோம்.  ஒரு நாள் வத்தாளை கிளறப்பட்டது.  எங்களை டீசலில் ஓடும் ஒரு பழைய சின்னக் காரில்  கூட்டிச் சென்று காட்டினார். கிழைங்கைக் கிளறுவதற்கு இரண்டு சோடி மாடுகளை  கொண்டு நிலத்தை உழுது கிழங்குகளை எடுத்தார்கள். அவரது மாமன், அண்ணன், மகன்  சேர்ந்து  கூட்டாக வேலை செய்ததைப் பார்த்தோம்.  அடுத்த நாள் அந்தக் கிழங்கை பாரவுந்தில் ஏற்றிச் சென்று  சந்தையில் வைத்து விற்றுவிட்டார். அது பற்றி அடுத்த முறை பார்ப்போம். (வளரும்)  

Be the first to comment

Leave a Reply