மெல்ல மெல்ல மீளெழும் வலிகாமம் வடக்குப் பிரதேசம்

மெல்ல மெல்ல மீளெழும் வலிகாமம் வடக்குப் பிரதேசம்

ந.லோகதயாளன்

மைத்திரி ஆட்சியில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் 3 ஆயிரத்து 100 ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட்ட நிலையில் அப் பகுதியின் மீள் குடியேற்றம் உட்கட்டுமான அபிவிருத்தி தொடர்பில் தற்போதுவரை செலுத்தப்பட்ட கவனம் தொடர்பில் கரிசனைகொள்ளப்படுகின்றது.

2015ம் ஆண்டின் பிற்பாடு மீள்குடியேறிய மக்களிற்காக மாவட்டச் செயலகத்தின் புள்ளிவிபரப்படி 2016ம் ஆண்டில் 1100 வீடுகளும் 2017ம் ஆண்டில் 600 வீடுகளுமாக மொத்தம் 1700 வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு வழங்கப்பட்ட 1700 வீடுகளில் 500 வீடுகளிற்கு குடிநீர் வசதிகள்  நீர்க்குழாய் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.  இவ்வாறு  வலி. வடக்குப் பகுதியில் விடுவிக்கப்பட்ட பல கிராமங்கள் தற்போது மீள்குடியேற்றம் காரணமாக  வளர்ச்சியை கண்டு வருகிறது. ஆனால் முழு வளர்ச்சிக்க முட்டுக்கட்டையாக இனம்காணப்படுவது பாடசாலைகளில் ஆசிரியர் இன்மையும் சுகாதாரப் பிரச்சனையும் போக்குவரத்துமே என  சுட்டிக்காட்டப்படுகின்றது.

வலி. வடக்கில்  2015 மார்ச் மாதம் 15ம் திகதிக்குப் பிற்பாடு மட்டும் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட சீ தர வீதிகளில் 41 வீதிகள் அதாவது 21 கிலோ மீற்றர் நீளம்கொண்ட வீதிகள் முழுமையாக சீரமைக்கக்பட்டுள்ளன. அதற்கு பிரதேச சபையினதும் முன்னாள் தவிசாளரினதும் முயற்சி காரணம் எனச் சுட்டிக் காட்டப்படுகின்றது. இதேபோன்று வீதி அபிவிருத்தி அதிகார சபையானது  8. 5 கிலோ மீற்றர் ஏ தர வீதிகளை செப்பனிட்டு தார்ப்படுக்கை வீதிகளாக அமைத்துள்ளனர். இதில் தம்பாளை – வலளாய் வீதியில் 2.3 கிலோமீற்றர், பருத்தித்துறை பொன்னாலை வீதியில் 4.5 கிலோ மீற்றர் வீதியும்  வல்லை அராலி வீதியில் 1.5 கிலோ மீற்றர் வீதியும்  உள்ளிட்டவையே   அமைத்துள்ளனர். இருப்பினும் வீதி அபிவிருத்தி திணைக்களமானது இதுவரை எந்தவொரு வீதியும் புனரமைப்புச் செய்யவில்லை.

இதனால் வலி. வடக்கில் விடுவிக்கப்பட்ட பிரதேசத்தில் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட 75 வீதமான வீதிகள் புனரமைக்கப்பட்டுள்ளபோதிலும் ஏ மற்றும் பீ தர வீதிகளே புனரமைக்கப்பட வேண்டிய தேவை  அதிகமாக கானப்படுகின்றது. குறிப்பாக வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்குச் சொந்தமான வீதிகள் மிகவும் மோசமான நிலமையிலேயே காணப்படுகின்றது.

இதேநேரம் பாடசாலைகள் தொடர்பில் ஊறணி  இளநிலை  வித்தியாலயத்தில் தற்போது  7 மாணவர்கள் கல்வி கற்கின்றனர்  இவர்கள் தரம் 1ல் 3 மாணவர்களும் , தரம் 2ல் இரண்டு மாணவர்களும் தரம் 3ல்  இரண்டு மாணவர்களும் உள்ளனர். ஆசிரியர் இன்மையே மிகப்பெரும் பிரச்சணையாகவுள்ளதாக பெற்றோர் குறிப்பிடுகிறார்கள். அதே சமயம்  போதிய மாணவர்கள் இன்மையால் ஆசிரியர்களை நியமிக்க முடியவில்லையென கல்வித் திணைக்களமும் ஆசிரியர் இன்மையால் மாணவர்களை இணைக்கமுடியவில்லை என பிரதேச மக்களும் கூறுகின்றனர்.Image result for வலி வடக்கு

இதேபோன்று தையிட்டி கணேச வித்தியாலயம் 9 மாணவர்கள் தரம் 1ல் 5 , 2 மற்றும் 3ல் தலா 2 வீதம் மொத்தம் ஒன்பது மாணவர்கள் உள்ள  இப்பாடசாலை 1901ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. தையிட்டி சிவகுருநாதர் வித்தியாலயம் தற்போது 4 மாணவர்களும்  2 ஆசிரியர்களும் உள்ளனர். இதே நிலையிலேயே வலி. வடக்கில் அதிக பாடசாலைகள் உள்ளபோதும் அதிபர்கள் மட்டும் உள்ள 4 பாடசாலைகளிலிற்கும் தற்போது 50 அடி நீளமும் 25 அடி அகலமும் உடைய அடுக்கு மாடிக் கட்டிடங்கள் மாவட்டச் செயலாளரின் முயற்சியினால் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.Image result for வலி வடக்கு

இதன் காரணமாக இங்கே பாடசாலைகளை இயக்கத் தடையாக இருப்பது ஆசிரியர்கள் இன்மை என்பதே ஆகும். அதேபோன்று வைத்திய வசதியினைப் பொறுத்த மட்டில் தற்போதுவரையில் தெல்லிப்பழை வைத்தியசாலையினையே மக்கள் நாடவேண்டிய நிலமையுள்ளதனால் மயிலிட்டியில் காசநோய் வைத்தியசாலை அமைந்துள்ள வளாகத்தில் உள்ள கட்டிடத்தில் தற்காலிகமாகவேனும் ஓர் வைத்தியசாலையை ஏற்படுத்தித் தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதேநேரம் இங்கே குடியமரும் மக்களின் போக்குவரத்து வசதிக்காக காங்கேசன்துறை புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள 8 பரப்பு நிலத்தில்  20 மில்லியன் ரூபா செலவில் ஓரு நவீன பேரூந்து நிலையம் ஒன்றும் அதேபோன்று 80 லட்சம் ரூபாவில் ஓர் சந்தையும் அமைப்பதற்கான திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டு அதனை முன்னெடுக்க  நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராயா முயன்று வருகின்றார்.Image result for வலி வடக்கு

இதேநேரம் ஊறணியில் மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையிலும் கடற்கரைப் பிரதேசத்தில் உள்ள கற்பாறைகள் மற்றும் சகதிகளினால் மீனவர்கள் படகைக் கொண்டு செல்வதில் பெரும் சிரமத்தினை எதிர்கொள்வதாக மீனவர் சமூகம் சுட்டிக்காட்டியது. இதனால் இப் பகுதியில் ஓர் மீன்பிடி இறங்குதுறை அமைக்கத் தெரிவிக்கப்பட்ட இணக்கத்தின் அடிப்படையில் பாரிய கற்கள் இறக்கப்படுகின்றன. இவற்றின் மூலம் அப்பகுதியில் தற்போது இறங்குதுறை அமைக்கும் பணி விரைவில் முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றது.

 

இவ்வாறு மீண்டுவரும் வலி. வடக்குப் பிரதேசத்தில் தற்போது மீள்குடியேற்றத்திற்கு எஞ்சிய பிரதேசங்களில் மிக முக்கிய பிரதேசங்களான மயிலிட்டி , கட்டுவன் போன்ற கிராங்கள் விடுவிக்கப்படும் சந்தர்ப்பத்திலேயே இனிவரும் காலத்தில். மக்கள் அப்பகுதியில் அதிகளவில் சொந்த நிலம் திரும்ப முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேநேரம் மயிலிட்டி கிராமமானது மிகவும் வருமானம் தேடும் கிராமங்களில் ஒன்று.  இக் கிராமத்தின் மொத்த பரப்பளவு 6.5 சதுர கிமீ ஆக  இருப்பினும் மயிலிட்டியில் 80 ஏக்கர் நிலம் மட்டுமே இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளது. இதில் மயிலிட்டித் துறைமுகம் விடுவிக்கப்பட்டது ஒன்றே வரலாற்றுச் சாதனையாகவுள்ளது.

இதேநேரம் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் சில இடங்களில் மக்களின் இயல்பு வாழ்விற்கு பொலிசார் தடையாக இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் சுட்டிக் காட்டத்தவறவில்லை. அதாவது காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரியின் ஓர் கட்டிடம் , அதேபோன்று காங்கேசன்துறை வீதியில் சுமார்  10 கும் மேற்பட்ட மக்களின் காணிகளை பொலிசார் தமது பிடியில் வைத்துள்ளனர். இவற்றை விடுவிப்பதாக 2017ம் ஆண்டு வைகாசி மாதம் ஏற்றுக்கொண்ட நிலையிலும் பொலிசார் இன்றுவரை விடுவிக்கவில்லை.Image result for வலி வடக்கு

இதேநேரம் நடேஸ்வரக் கல்லூரி அருகில் உள்ள  கல்லூரி வீதி இன்றுவரை படையினரின் பிடியில் உள்ளதனால் 500 மீற்றர் தூரத்தில் உள்ள மாணவர்கள் 5 கிலோ மீற்றர் சுற்றுப் பயணத்தின் மூலமே பாடசாலையை அடையவேண்டிய நிலமை இன்றும் உள்ளது. இந்த வீதியின் 500 மீற்றர் தூரத்தில் சுமார் 200 மீற்றர் வீதி மட்டுமே படையினர்வசம் உள்ளது. அந்த 200 மீற்றர் வீதியைத் திறந்து விடும் பட்சத்தில் மாணவர்கள் தினமும் 10 கிமீ  தூரம் அலைய வேண்டிய தேவை இருக்காது.

இதே நேரம் வலி. வடக்கு பிரதேசத்தின் அபிவிருத்திக்கு இன்றுவரை தடையாகவுள்ள விடயமாக பல அரச திணைக்கள கட்டிடங்கள் படையினரின் பிடியில் உள்ளமையும் மிக முக்கிய காரணமாகவுள்ளது. இதில் வலி. வடக்கு பிரதேச சபையின் தலமை அலுவலகம் இன்றுவரை படையினரின் பிடியிலேயே உள்ளது. இதேபோன்று இலங்கை மின்சார சபைக் கட்டிடம் , துறைமுகங்கள்,  அதிகார சபையின் அலுவலகம் , சுங்கத் திணைக்களம் போன்ற அரச திணைக்களங்களின் அமைவிடம் படைகள் வசம்  உள்ளது.

எனவே 1990ம் ஆண்டு முதல் பல இடப்பெயர்வுகள் அழிவுகளின் பின்பு இனிவரும் காலத்திலாவது முழுமையான மீள் குடியேற்றத்திற்கும் அபிவிருத்திக்கும் அரச இயந்திரம் தனது ஒத்துழைப்பை நல்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Be the first to comment

Leave a Reply