இந்த நாடு பிளவுபடுவதை விரும்பாத சகலரும் தேர்தலில் எம்முடன் கைகோருங்கள்!  மகிந்தா அறைகூவல்!

இந்த நாடு பிளவுபடுவதை விரும்பாத சகலரும் தேர்தலில் எம்முடன் கைகோருங்கள்!  மகிந்தா அறைகூவல்!

நக்கீரன்

சென்ற வாரம் யாழ்ப்பாண  மாவட்டத்தில்  மகிந்த இராசபக்சா புதிதாகத் தோற்றுவித்த சிறிலங்கா பொதுசன பெரமுன என்ற கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து  வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.

இதற்கு முன்னர் 2015 இல் நடந்த சனாதிபதி தேர்தலில் தனக்கு ஆதரவு தேடி நொவெம்பர் 2014 இல் வடக்குக்கு  அவர் வந்திருந்தார். பரப்புரைக் கூட்டம் ஒன்றில்   அவர் கொச்சைத் தமிழில்  பேசினார்.   அது விளங்காததால் கூட்டத்தில் இருந்த மக்களிடையே  சிறிய சலசலப்பு.  ஊ….ஊ என்று ஒலி எழுப்பினர்.

உடனே போபம் தலைக்கேறிய இராசபக்சே “ஆம் நான் சிங்களவன். இந்த நாடு சிங்கள நாடு. எனவே தெமிழர்கள் (தமிழர்கள்) ஆகிய நீங்கள் நான் சொல்வதைக் கேட்க வேண்டும்” எனப்  பேசினார். மேலும்  “தெரியாத தேவதையை விடத்   தெரிந்த பிசாசுக்கு” வாக்களியுங்கள் என்று  கேட்டார்.

வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய மகிந்த இராசபக்சா “நாம் கூட்டமைப்புடன் தீர்வுக்காண சமரசரப் பேச்சு நடத்துவதற்கு அழைப்பு விடுத்துக் காத்திருந்தோம்  ஆனால்  கூட்டமைப்பினர்தான் பேச்சுக்கு வரவேயில்லை”  என்று சொன்னார். 

மகிந்த இராசபக்சா  சொல்வது  பச்சைப் பொய் என்பதை வரலாறு  தெரிந்தவர்கள் புரிந்து கொள்வார்கள். அவரது பேச்சு  இன்று கூட மகிந்த இராசபக்சா தனது சிங்கள – பவுத்த மேலாண்மைச் சிந்தனையில் இருந்து விடுபடவில்லை என்பதைக்  காட்டுகின்றது.

சனவரி 10, 2011 தொடக்கம்  சனவரி 18, 2012 வரை மொத்தம் 18  சுற்றுப் பேச்சுக்களை அன்றைய சனாபதி மகிந்த இராசபக்சா அவர்களின் அமைச்சர்களோடு திரு சம்பந்தன் தலைமையில்  ததேகூ  பேச்சுவார்த்தை நடத்தியது.

இந்தப் பேச்சுகளின் முதல் மூன்று சுற்றுகளின்போது ததேகூ இனப் பிரச்சினைத் தீர்வுக்கான யோசனைகளை  முன்வைத்தது.  அதன் பின்னர் ஐந்து மாதங்களாக ஏழு சுற்றுப் பேச்சுகள் இடம்பெற்றன. ஆனால் கூட்டமைப்புக் கொடுத்த தீர்வுத் திட்ட யோசனைகளுக்கு மஹிந்த தரப்பு பதில் ஏதும் கொடுக்கவில்லை.

மீண்டும் ஒக்தோபர் 2011 இல் சனாதிபதி மகிந்த இராசபக்சா  கூட்டமைப்புத்  தலைவர் சம்பந்தன் சந்திப்பு இடம்பெற்றது. கூட்டமைப்பின் தீர்வுத் திட்ட யோசனைகளக்கு அரசு பதில் தரா விட்டாலும் முன்னைய சமாதான முயற்சிகள் தொடர்பான ஐந்து ஆவணங்களின் அடிப்படையில் சமாதானப் பேச்சுக்களைத் தொடர அந்தச் சந்திப்பில் முடிவு செய்யப்பட்டது.

ஒக்தோபர் 16, 2011 ஆம் நாள்  முதல் மீண்டும் அமைதி பேச்சுக்களை மகிந்த அரசுடன் கூட்டமைப்புத் தொடங்கியது. மங்கள முனசிங்க தலைமையிலான குழுவின் முன்னைய அறிக்கை, சனாதிபதி சந்திரிகா காலத்தில் முன்னெடுக்கப்பட்ட அமைதி முயற்சிக்கான ஆவணங்கள், சனாதிபதி மகிந்த இராசபக்சா நியமித்த நிபுணர் குழு அறிக்கை, அந்த நிபுணர் குழுவின்  தொடக்கக்  கூட்டத்தில் அவர்  ஆற்றிய உரையின் தொகுப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பேச்சுக்களைத் தொடரத் தீர்மானிக்கப்பட்டது.

பேச்சுக்கான பன்னிரண்டு தலைப்புகளும் முடிவுசெய்யப்பட்டன. இப்போது நடவடிக்கைக் குழு எழுதப்பட்ட இடைக்கால அறிக்கையில் காணப்படும் பன்னிரண்டு தலைப்புகளுமே அப்போது வகுக்கப்பட்ட தலைப்புக்கள்தான். அவற்றின் அடிப்படையில் தொடர்ந்த பேச்சுக்களில் காணி தொடர்பான மற்றும் அதிகாரப்பகிர்வு விடயத்தில் சில தீர்மானங்கள், முடிவுகள் கூட எட்டப்பட்டன. இந்தப் பேச்சுக்களின் முக்கிய அம்சம் என்னவென்றால், இந்தப் பேச்சுக்களின் ஒவ்வொரு சுற்றின் போதும்  கூட்டத்தின்  அறிக்கை தயார் செய்யப்பட்டு, அடுத்த கூட்டத்தின்  தொடக்கத்தில்  முன்னைய கூட்ட அறிக்கை வாசித்துப் பதிவு செய்யப்பட்டது. அந்தப் பதிவுகள் இந்தக் கூட்டங்களுக்கான சான்றுகளாக இன்றும் உள்ளன.

கடைசியாக 18 ஆவது கூட்டத்தை  2012 சனவரி 16, 17, 18 ஆம் திகதிகளில் நாடாளுமன்றக் கட்டடத்தில் நடத்துவது என அதற்கு முந்திய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அந்த மூன்று நாட்களும் உரிய நேரத்தில் கூட்டத்துக்குச் சென்று தமிழ்க் கூட்டமைப்பினர் காத்திருந்தனர். ஆனால், அரசு தரப்புப் பிரதிநிதிகள் வரவேயில்லை.

இதுதான் கடந்த காலத்தில் மகிந்த அரசுடன் கூட்டமைப்பினர் நடத்திய அமைதிப் பேச்சுக்களின் வரலாறாகும்.  இனச் சிக்கலுக்கு ஒரு நியாயமான, நீதியான தீர்வை எட்ட வேண்டும் என்ற எண்ணம் மகிந்த இராசபக்சாவிடம் கிஞ்சித்தும் இருக்கவில்லை. வெளிநாடுகளின் அழுத்தத்தைத் தணிக்கவே இந்தப் பேச்சு வார்த்தை நாடகத்தை அவர் அப்போது அரங்கேற்றினார்.

2013 இல் மகிந்த இராசபக்சா  13ஏ திருத்தத்தில் காணப்பட்ட காணி, காவல்துறை அதிகாரங்களை நீக்க  பகீரத முயற்சிகளை மேற்கொண்டார்.  அது தொடர்பாக  ஒரு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை அவர் நியமித்தார்.

மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை நீக்க வேண்டும் என மகிந்த இராசபக்சாவின் அரசியல் ஆலோசகரும், பொருளாதார வளர்ச்சித்துறை அமைச்சருமான  பசில் இராசபக்சா நாடாளுமன்றத்தில் பேசியிந்தார் (http://www.eprlfnet.com/?cat=39&paged=3). இந்த அரசியல் திருத்தம் பற்றிப் புது தில்லியோடு பேச அவர்  யூலை 04, 2013 இல்  இந்தியாவுக்கு ஒரு பயணம் மேற்கொண்டார்.

இது தொடர்பாக  பசில் ராஜபக்சே செய்தித்தாள்களுக்கு அளித்த நேர்காணலில், 13 ஏ அரசியல் சட்ட திருத்தம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் ஆகியோருடன் பேசுவேன் என்றார்.

கோத்தபாய இராசபக்சாவைப் பொறுத்தளவில் 13 ஏ சட்ட திருத்தம்  முற்றாக  இரத்து செய்யப்பட வேண்டும் என்று பகிரங்கமாகவே பேசினார். அதற்குக் காரணம் இருந்தது. சர்வதேச சமூகத்தின் நெருக்குதல் காரணமாக தமிழ்மக்கள் பெரும்பான்மையாக வாழும் வட மாகாண சபைக்கு 23 ஆண்டுகளுக்குப் பின்னர்  தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதில் ததேகூ வெற்றிபெறுவது உறுதி என்பதால் வடக்கு மாகாண  ஆட்சி அதிகாரம் தமிழர்கள் கைக்குப் போய்விடும் என்பதால் அதனைத் தடுப்பதற்கு ஒரே வழி 13 ஏ திருத்தத்தை முற்றாக இரத்து செய்வதே என மகிந்தாவின் அரசும் சிங்கள – பவுத்த தீவிரவாத அரசியல் கட்சிகளும்  திரைமறை சதிகளில் ஈடுபட்டன.

இதற்கிடையே  ததேகூ  தலைவர்கள் தில்லி சென்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து, அரசியல் சட்ட திருத்தத்தை இரத்து செய்ய சிங்கள அரசு எடுத்துவரும் நடவடிக்கை குறித்து எடுத்துக் கூறினர். அதனை இந்தியா தலையிட்டு தடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். நாடாளுமன்ற தேர்வுக்குழு நடவடிக்கையில் பங்கேற்க போவதில்லை என்றும் ததேகூ அறிவித்தது.

இந்த நிலையில் 2013 செப்தெம்பர் மாதம் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழுகிற வடக்கு மாகாண சபைக்கு தேர்தல் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது.  இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜிஎல்  பிரீசை மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் 2013 மே மாதம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு  அரசியல் சட்டத்தின் பிரிவு 13ஏ திருத்தம் இரத்து செய்வது குறித்து ஒரு தலைபட்சமாக முடிவு எடுக்கக்கூடாது எனக்  கூறியதாக செய்திகள்  வெளி வந்தன.

இதற்கிடையே  ததேகூ  தலைவர்கள்  தில்லி சென்று  பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து, அரசியல் சட்ட திருத்தத்தை இரத்து செய்ய சிறிலங்கா  அரசு எடுத்துவரும் நடவடிக்கை குறித்து எடுத்துக் கூறினர். அதை இந்தியா தலையிட்டு தடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். நாடாளுமன்ற தேர்வுக்குழு நடவடிக்கையில் பங்கேற்க போவதில்லை என்றும் ததேகூ அறிவித்தது.

இன்று இனச் சிக்கலுக்கு ஒரு சுமுகம்மான தீர்வு காணத்  தடையாக இருக்கும் ஒரே அரசியல்வாதி மகிந்த இராசபக்சாதான். நல்லாட்சி அரசு வெளியிட்ட இடைக்கால அறிக்கையை  தனது கட்சியின்  தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில்  அவர் கடுமையாக விமர்ச்சித்து வருகிறார்.

இடைக்கால அறிக்கை தமிழர்களுக்கு உச்ச அதிகாரம் வழங்கி நாட்டைத் துண்டாட சனாதிபதி சிறிசேனாவும் பிரதமர் இரணில் விக்கிரமசிங்காவும்   சதி செய்கின்றனர் என மகிந்த இராசபக்சா குற்றம்சாட்டுகிறார்.

தமிழர்களுக்கு அதியுச்ச அதிகாரத்தை வழங்கி நாட்டைப் பிளவு படுத்தும் சதித்திட்டத்தை இந்த அரசு முன்னெடுத்து வருகின்றது,  அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் அனைவரையும் தம்முடன் கைகோர்க்குமாறும் அவர் அறைகூவல் விடுத்து வருகிறார்.

இந்த அரசை வீழ்த்தும் போராட்டத்துக்குத் தலைமை தாங்கத்  தான் தயார் எனவும் முழக்கமிடுகிறார்.

சிறிலங்கா பொதுசன பெரமுனாவின்  மக்கள் சந்திப்பு கோமாகம பிரதேசத்தில் அண்மையில்  இடம்பெற்றது. அங்கு உரையாற்றிய மகிந்த இராசபக்சா “நாம் வென்று கொடுத்த சுதந்திரத்தை மூன்று ஆண்டுகளில் அரசு நாசமாக்கியுள்ளது. புதிய அரசமைப்பை உருவாக்கி நாட்டைத் துண்டாடும் சதித்திட்டம் முன்னெடுக்கபட்டு வருகின்றது. வடக்கு கிழக்கு இணைப்பு, மாகாணங்களுக்கு அதியுச்ச அதிகாரங்கள் என்று அனைத்தையும் வழங்கி இந்த நாட்டைப் பிளவுபடுத்தும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்” எனப் பேசினார்.

இந்த நாடு பிளவுபட வேண்டுமா அல்லது இணைந்து செயற்பட வேண்டுமா என்பதை நாட்டு மக்களே தீர்மானிக்கவேண்டும். இந்த நாடு பிளவுபடுவதை விரும்பாத சகலரும் தேர்தலில் எம்முடன் கைகோருங்கள்.

சிறிலங்கா பொதுசன பெரமுன  மக்களின் ஆதரவைப் பெற்று வருகின்ற நிலையில் எமது மக்கள் எதனை விரும்புகின்றனரோ அதையே நாமும் செய்ய வேண்டும். மக்கள் விரும்பாத எதையும் நாம் முன்னெடுக்கத்  தயாராக இல்லை. மக்களுக்காகத் தலைமை தாங்க நாம் தயாராகவே உள்ளோம். இம்முறை தேர்தலில் மக்கள் ஆதரவை பெற்று எமது பலத்தினை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் எண்பித்துக் காட்டுவோம்  என்றார்.

இங்கே மகிந்த இராசபக்சா மக்கள் எனக் குறிப்பிடுவது சிங்கள மக்களைத்தான். தமிழர்களை அல்ல.

இந்த  தீவிர சிங்கள – பவுத்த பேரினவாதக் கட்சியில்   தமிழர்கள்  சிலர் போட்டியிடுவது பெரிய வெட்கக் கேடு.  இனத்தை எதிரிக்குக் காட்டிக் கொடுக்கும் பாவச் செயல். இதைப் பார்த்து  அழுவதா சிரிப்பதா என்பது தெரியவில்லை.

பல ஆண்டுகளாக மகிந்த இராசபக்சாவின் காலைக் கழுவி அவரது  எடுபிடியாக வலம் வந்த டக்லஸ் தேவானந்தா கூட தனது சொந்தக் கட்சியில் போட்டியிடுகிறார்.

தென்னிலங்கைக் கட்சிகளான  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சிகளில் தமிழர்கள் வேட்பாளர்களாகப் போட்டியிட்டால் அதனை நாம் புரிந்து கொள்ளலாம். இந்த மூன்று கட்சிகளும் இனச் சிக்கலுக்கு அதிகாரப் பகிர்வு மூலம் தீர்வு காணவேண்டும் என்ற கோட்பாட்டை ஆதரிக்கின்ற கட்சிகள் ஆகும்.

ஆனால் மகிந்த இராசபக்சா தலைமை தாங்கும்  சிறிலங்கா பொதுசன பெரமுன? இடைக்கால அறிக்கை நாட்டில் எட்டு அல்லது ஒன்பது இணைப்பாட்சி அரசுகளை உருவாக்கப் போகிறது, சிங்கள இனம் அழியப் போகிறது  எனப் பச்சை இனவாதத்தைக் கக்கும் மகிந்த இராசாபக்சா தலைமை தாங்கும்   கட்சியிலா தமிழர்கள் போட்டியிடுவது?

காணாமல் போனவர்களில் நூற்றுக்குத்  தொண்ணூறு விழுக்காடு மகிந்த இராசபக்சாவின் ஆட்சிக் காலத்தில்  காணமல் போனவர்கள். வெள்ளைவான் கடத்தல், கொலை, கொள்ளை, கப்பம்  அவரது ஆட்சியில்தான் அரங்கேறின.

சண்டே லீடர் முதன்மை ஆசிரியர் லசந்தா விக்கிரமதுங்கா, ஊடகவியலாளர் பிரதீப் ஏக்நேலிகொட,  தர்மரத்தினம் சிவராம், விளையாட்டு வீரன் வசிம் தயூதீன் போன்றவர்கள் மகிந்த இராசபக்சா ஆட்சியல்தான் நடந்தேறின.

வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த வி.புலிகளின் அரசியல் பிரிவைச் சேர்ந்த ப.நடேசன், புலித்தேவன், கேணல் இரமேஷ் தலைமையில்   300 க்கும் மேலான வி.புலி உறுப்பினர்களை இராணுவமே சுட்டுக் கொன்றது.

அதேபோல் மே 18 மாலை வட்டுவாகலில் இராணுவத்திடம் சரணடைந்த  வி.புலிகளின் இரண்டாம் கட்டத் தலைவர்களான எழிலன், யோகி, திலகர், பாலகுமார், கவிஞர் இரத்தினதுரை உட்பட நூற்றுக்கும் அதிகமானவர்களை விசாரணைக்கு என்று அழைத்துச் சென்று இராணுவமே சுட்டுக் கொன்றது.

இந்தக் கொலைகளுக்குப் பொறுப்புக் கூற வேண்டியவர் அன்றைய பாதுகாப்பு அமைச்சர் இராசபக்சாவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தா இராசபக்சாவும்தான்.

“போரில்  சரணடைந்த மற்றும் பிடிபட்ட விடுதலைப்புலிகளை கொல்லுமாறு இராணுவ தளபதிகளுக்கு நான்தான்  உத்திரவிட்டேன். இந்த உத்தரவை மீறிய ஒரு சில தளபதிகளால் தான் தற்பொழுது பிரச்சனையே எழுந்துள்ளது” என்று சொன்னவர்  கோத்தபாய இராசபக்சா அவர்களே. (https://www.yarl.com/forum3/topic/104621–)

தலைவர் சம்பந்தரையும் சுமந்திரனையும் மண்அள்ளிப் போட்டுத் திட்டுகிற காணாமல் போனோர்களது பெற்றோர்கள் உறவினர்கள் யாரையும் வீரசிங்கம் மண்டபத்துக்கு ஒரு மைல் தூரத்துக்கு அப்பாலும் காணவில்லையே?  குறிப்பாக திரு சுமந்திரனின் உருவப்படத்தை முற்றவெளியில் போட்டு எரித்த அனந்தி சசிகரன்அக்காவைக் காணோமே? எங்கே போய்த் தொலைந்தார்கள்?

இன்றும் ஆட்சியையும் அதிகாரத்தையும் கைப்பற்ற சிங்கள – பவுத்த பேரினவாதமே குறுக்கு வழி என மகிந்த இராசபக்சா  நம்புகிறார்.


 

 

 

About editor 1351 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist

Be the first to comment

Leave a Reply