வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச சபைத் தேர்தல்  

                           வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச சபைத் தேர்தல்

 ந.மதியழகன்.

வடக்கு மாகாணத்தில் உள்ள 34  உள்ளூராட்சி சபைத் தேர்தலிலேயே ஓர் மாறுபட்ட தன்மை கொண்ட சபையாக காணப்படும் வவுனியா வடக்கு பிரதேச சபைத் தேர்தல் அனைவராலும் கூர்ந்து கவனிக்கப்படுகின்றது.

இலங்கை முழுவதும் உள்ளூராட்சி சபைத்  தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் வடக்கு கிழக்குத் தேர்தலை  உள்ளூர் மட்டத்தில் மட்டுமல்ல சர்வதேச  மட்டத்திலும்  முக்கியத்துவம் வாய்ந்த  தேர்தலாகவே கருதப்படுகின்றது. இந்தப் பின்னணியில் வடக்கு மாகாணத்தில் 34 உள்ளூர் அதிகார சபைகள் காணப்படும் நிலையில் இவற்றில் 32 சபைகள் தமிழர் பிரதேச சபைகளாகவும் தலா ஒரு சபைகள் சிங்கள மற்றும் முஸ்லீம் வாக்காளர்களை கொண்ட சபைகளாகவும்  கானப்படுகின்றன.

இந்த 32 சபையில் ஓரு  சபையான வவுனியா வடக்கு ( நெடுங்கேணி ) பிரதேச சபையானது இந்த ஆண்டு ஓர் புதிய சிக்கலை எதிர் நோக்கியுள்ளது. அதாவது குறித்த சபையில் புதிய முறையின் கீழ் 14 வட்டாரப் பிரதிநிதிகளும் 9 விகிதாசாரப் பிரிதிநிதிகளுமாக மொத்தம் 23 பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படுவர். இதற்காக 7,900 ம் வாக்காளர்களும் 4, 200 சிங்கள வாக்காளர்களும் வாக்களிக்கவுள்ளனர்.

தற்போது இந்த வாக்காளர் எண்ணிக்கையே இங்கு பெரும் பிரச்சனையாகவுள்ளது. அதாவது சபையின் எல்லைப்பரப்பிற்குள் இல்லாத சிங்கள மக்களை இங்கே இணைத்ததன் மூலம் அந்தச் சபையே இன்று ஓர் பெரும் கேள்விக்குறியாக அமைந்துவிட்டது. அதாவது வவுனியா வடக்கில் புதிதாக உருவாக்கப்பட்ட 4 சிங்கள வட்டாரங்களுடன் இணைத்தே 14 வட்டாரங்கள் இதனால் இந்த 4 சபைகளிலுமே நிச்சயமாக சிங்கள வேட்பாளர்களே வெற்றியீட்டுவார்கள்.  இதேநேரம் நெடுங்கேணியின் பாரம்பரிய தமிழர் பிரதேசமான வெடிவைத்தகல் வட்டாரத்தில் இன்று 157 தமிழ் வாக்காளர்கள் மட்டுமே வாழ்கின்றனர்.

இதே வெடிவைத்தகல் வட்டாரத்தில் 341 சிங்கள வாக்காளர்கள் இருக்கிறார்கள்.  இதன் காரணமாக வெடிவைத்தகல் வட்டாரத்திலும் சிங்கள வேட்பாளரே வெற்றியீட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதேநேரம் ஏனைய 9 வட்டாரங்களும் தமிழ் வேட்பாளர்களே வெற்றியீட்டுவார்கள் என்பது திண்ணம். இருப்பினும் விகிதாசார ஆசனமாக வழங்கவுள்ள 9 ஆசணங்களையும் தீர்மானிப்பது மொத்த வாக்களிப்பு விகிதமே ஆகும். இதன் பிரகாரம் 7,900ம் பேர் உள்ள தமிழ் வாக்காளர்கள் உச்ச பட்சமாக 70 வீதத்தினை தாண்டி வாக்களித்தாலும் 5,000  வாக்கினை அளிப்பார்களா  என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. ஆனால் சிங்கள வாக்காளர்கள் 4,200 பேரும் வெடிவைத்த கல்லில் உள்ள 341 பேருமாக மொத்தம் 4, 541 பேரும் மிகவும் குறுகிய பகுதியில் வாழ்கின்றனர்.

இவ்வாறு குறுகிய பிரதேசத்தில் வாழ்வதால் அவர்களுக்கான வாக்களிப்பு நிலையங்களும் மிக அருகிலேயே அமையும். இதனால் வாக்களிப்பு விகிதம் அதிகரித்தே காணப்படும். என்பதனால் 80 வீத்த்திற்கும் அதிகமாக வாக்குப் பதிவுகள் எதிர்பார்க்கப்படுகின்றது. அந்த வகையில் சுமார் 3, 200 சிங்கள வாக்குகள் எதிர்பார்க்கப்படுகின்றது.இதனால் 8 ஆயிரம் வாக்குகள் 23 ஆசணங்களுக்காக பிரிக்கப்படும் நிலைமை ஏற்படும். அந்த வகையில் 350 வாக்குகளிற்கு ஒரு ஆசணம் இதனால் குறித்த ஓர் தமிழ் கட்சியே 9 ஆசணங்களையும் சுமார் 3 ஆயிரத்து 500 வரையான  வாக்குகளுடன் கைப்பற்றினாலும் எஞ்சிய வாக்கின் அடிப்படையில் இரண்டு விகிதாசார ஆசணங்களை மட்டுமே பெற்றுக்கொள்ளும் நிலைமை ஏற்படும்.Image result for நெடுங்கேணி பிரதேச சபைக்குப்

ஆனால் ஓர் சிங்களக் கட்சி 5 வட்டாரங்களைக் கைப்பற்றியதோடு விகிதாசாரத்திலும் 4 ஆசனங்களை கண்டிப்பாக பெற்றுக்கொள்வதோடு வாக்குச் சிதறாமல் பெற்றுக்கொண்டால் 5 ஆசனங்கனையும் பெற்றுக்கொள்ளும் நிலமைகூட ஏற்படலாம். இதேநேரம் எஞ்சிய இரு விகிதாசார ஆசனங்களே ஆட்சியை தீர்மானிக்கும் ஆசனமாகவும் அமையலாம் அவை தமிழர் தரப்பிற்கே கிடைக்கப்பெற்றாலும் அவை ஓர் தேசிய கட்சிக்குச் சென்றாலோ அல்லது தேசியக் கட்சிக்கு ஆதரவளிப்பவர்களிடம் சென்றாலோ சபையின் ஆட்சியே வெறும் 4வட்டார மக்களினால் இனத்தின் கையை விட்டுச் செல்லும் அவலம் கானப்படுகின்றது.

இதனால் வடக்கு மாகாணத்தில் இடம்பெறும் எந்த தேர்தலிலும் நேரடித் தலையீடு செய்வதில்லை என்ற முடிவில் உள்ள வடக்கு மாகாண முதலமைச்சரின் கவனத்திற்கு இந்த விடயம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஏனைய 33 சபைகளிலும் தலையீடு செய்யாது விடினும் இந்த நெடுங்கேணி மக்களின் நலன்கருதி இங்கே தேர்தலில் வாக்கு கோராது விடினும் ஓர் ஒற்றுமையை ஏற்படுத்துவதன் மூலம் தமிழர் பிரதிநிதித்துவத்தினை தக்கவைக்க முடியும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனை ஆராய்ந்த முதலமைச்சரும் இங்கே ஏற்படக்கூடிய சிக்கலையும் புரிந்துகொண்டார். அதனால் ஓர் பச்சைக்கொடியை காட்டியுள்ளார். அதாவது அந்தப் பகுதி தமிழ்  மக்களில் அதிகமானோர் விரும்பும் தமிழ் அரசியல் கட்சி ஒன்றிற்கு ஏனைய கட்சிகள் இடம்விட்டு போட்டி மனப்பாங்கை தவிர்ப்பதன்மூலம் தமிழர் தரப்பே சபையை கைப்பற்ற முடியும். இந்த  யோசனையின் அடிப்படையில் அப்பகுதியில் போட்டியைத் தவிர்ப்பதற்கு தமிழர் தரப்புக்களுடன் விரைவில்  பேச்சு ஏற்பாடுகள் இடம்பெறுகின்றது. இம் முயற்சி வெற்றி பெறுமானால் நெடுங்கேணி மீட்சி பெறும் என்பது உறுதி. அல்லது முட்டிமோதியும் தமிழர் தரப்பே ஆட்சியை தக்க வைத்தால் வெல்லும் தரப்பு ஓர் பலமான அமைப்பு என்பதனை நிலைநிறுத்தும்.

மாறாக போட்டி மோதலினால் தமிழர் பிரதிநிதித்துவம் சிதைவடைந்து எதிர்விளைவு ஏற்படுமானால் நிச்சயமாக அங்கே போட்டியிட்டு பிரதிநிதிகளை இழக்கச் செய்து வாக்குகளை சிதறடித்த தமிழ்க் கட்சி வாழ் நாள்  பழியை ஏற்கத் தயாராக வேண்டிய சூழல் ஏற்படும். இதனால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வடக்கு மாகாணத்தில் மிகவும் உண்ணிப்பாக அவதானிக்கும் சபையாக நெடுங்கேணியே இடல்பிடித்துள்ளது.

வவுனியா வடக்கு பிரதேச சபையிலே இந்த நிலமையே ஏற்படும் என வடக்கு மாகாண சபையின் உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாவட்டத் தலைவருமான ப.சத்தியலிங்கம் வேட்பு மனுத் தாக்கலின் முன்பே கோடி காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதனால் நெடுங்கேணி பிரதேச சபைக்குப் போட்டியிடும் தமிழ்ச்  கட்சிகளான இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி , தமிழர்  தேசிய விடுதலைக் கூட்டணி, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் என்பன என்ன முடிவினை எட்டவுள்ளனர் என்பதும் தேசியக் கட்சிகளில் போட்டியிடும் தமிழர்கள் என்ன மன நிலையில் உள்ளனர் என்பதுமே  இங்கே தற்போது பெரும் பேசு பொருளாக உள்ளது.


 

 

 

About editor 2992 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply