குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயர் சூட்டுங்கள்-கருணாநிதி

குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயர் சூட்டுங்கள்-கருணாநிதி

சென்னை: திட்டக் குழு உறுப்பினர் ஜெகதீசன் மகன் திருமணம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. திருமணத்தை நடத்தி வைத்து முதல்வர் கருணாநிதி கூறியதாவது:

இதுபோன்ற சுயமரியாதைத் திருமணங்கள் ஒன்றல்ல, இரண்டல்ல நூற்றுக்கணக்கான திருமணங்கள் இந்த மண்டபத்திலே நடைபெற்றிருக்கின்றன. தந்தை பெரியார் சுயமரியாதை திருமணங்களை நடத்தி வைக்கத் தொடங்கிய அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரையில் பல்லாயிரக்கணக்கான திருமணங்கள் நடைபெற்றிருக்கின்றன.

இந்தத் திருமணங்கள் நல்ல முறையிலே நடைபெற்றன என்பதும், அந்த வகையில் திருமணம் புரிந்துகொண்ட மணமக்கள் நன்றாகத்தான் வாழ்கிறார்கள் என்பதை அனுபவரீதியாக தெரிந்து கொண்ட பின்னரும்கூட, இன்னும் பலர் நம்முடைய சமுதாயத்தில் இந்தத் திருமண முறையைக் கண்டு நடுங்குகிறார்கள். சந்தேகக்கண் கொண்டு பார்க்கிறார்கள்.

திராவிட இயக்கத்தால் கிடைத்த பதவி, கிடைத்த ஆதாயம் இது என்று எண்ணிக் கொண்டிருப்பவர்கள், சொல்லிக் கொண்டிருப்பவர்கள்கூட தங்களுடைய வீட்டிலே திருமணங்கள் என்றால் பிள்ளையார் படம் போட்ட திருமணப் பத்திரிகை, திருப்பதி வெங்கடாசலபதி படம் போட்ட திருமணப் பத்திரிகை இவைகளைக் கொடுத்துவிட்டு, பெண் வீட்டார் கேட்கவில்லை, மறுக்கிறார்கள், நான் என்ன செய்வது மன்னித்துக் கொள்ளுங்கள் என்று என்னிடத்திலேயே மன்னிப்பு கேட்பவர்கள் பலர் உண்டு.

இப்போதேகூட, வருத்தத்தோடு நானும் பேராசிரியரும் பேசிக் கொள்வதுண்டு.

இந்த இயக்கம் தொடங்கிய பிறகு, தமிழ் வாழ, தமிழ் பரவிட, தமிழ் மொழிக்கு ஆக்கம் கொழிக்க, இந்த இயக்கத்தின் சார்பாக எடுத்துக் கொள்ளப்பட்ட முயற்சிகள் சாதாரணமானவைகள் அல்ல.

நம்முடைய வீட்டிலே பிறக்கின்ற குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயர்தான் வைக்க வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டு, அத்தகைய பெயர்களைச் சூட்டுகிறோம்.

தமிழிலே பெயர் வை உன்னுடைய பிள்ளைக்கு, தமிழ் மொழியைத்தவிர வேறு மொழியில் பெயர் வைக்காதே என்று அறுதியிட்டு உறுதியோடு மேடைக்கு மேடை முழங்கியவர் நம்முடைய முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவ நாதம்.

ஆனால், அவருடைய இல்லத்தில் அவருடைய பேத்திக்குப் பெயர் ஜெயஸ்ரீ தான். நான் முத்தமிழ்க் காவலர் விசுவநாதன் அவர்களுடைய தமிழ்ப்பற்றை, தமிழ் ஆர்வத்தை, தமிழர்களுக்காக அவர் சிறை சென்றதை குறைத்து மதிப்பிட மாட்டேன்.

ஆனால் அடுத்த தலைமுறை வரும்போது ஜெயஸ்ரீயாக மாறி விடுகிறதே; இந்த மாற்றம் எங்கே போய் நிற்கும்?.

இப்போதே ஜெயஸ்ரீ என்றால், அதற்கடுத்த தலைமுறை எந்தப் பெயரில் வரும் என்பதையெல்லாம் தயவுசெய்து நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.

இப்படி சுயமரியாதை இயக்கத்தின் தாக்கத்தால், பகுத்தறிவு இயக்கத்தின் தாக்கத்தால், தமிழ் இயக்கத்தின் தாக்கத்தால் உருவான இந்தப் பெயர்கள்- நம்முடைய காலத்திலேயே, நம்முடைய கண்ணுக்கு நேராகவே மாறுகின்றன; மாற்றப்படுகின்றன என்றால், எதிர்காலம் என்ன ஆகுமோ என்கின்ற கவலை எங்களுக்கெல்லாம் இருக்கிறது.

ஆகவே, அந்தக் கவலையைப் போக்கும் வகையில் கதிரவனும், ஜனனியும் எத்தனை குழந்தை பெறப் போகிறார்கள் என்று நம்முடைய வீராசாமி கவலைப்பட்டார்.

அவர்கள் எத்தனை குழந்தைகளைப் பெற்றாலும் சரி, அத்தனை குழந்தைகளுக்கும் தமிழிலே பெயர் வையுங்கள் என்று மாத்திரம் நான் கேட்டுக்கொண்டு; ஒரு பத்து குழந்தை பிறந்து பத்துக்கும் தமிழ்ப் பெயர்கள் என்றால்- பத்து குழந்தைகள் மூலமாக தமிழ் பரவட்டும், என்று நான் அவர்களை வாழ்த்துகிறேன் என்றார் கருணாநிதி.

– தட்ஸ்தமிழ்

https://www.yarl.com/forum3/topic/48491-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%80%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF/


 

Be the first to comment

Leave a Reply