ஏனைய கட்சிகள் ஒரு சபையையாவது வென்றெடுக்கமாட்டா

ஏனைய கட்சிகள் ஒரு சபையையாவது வென்றெடுக்கமாட்டா

தயாளன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலவீனப்படுத்த பலர் போட்டி போடுகின்றார்கள். கூட்டமைப்பைப் பலவீனப்படுத்தினால் அதன் பலவீனம் தமிழ் மக்களையே சென்றடையும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் புளட் கட்சித் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கான கலந்துரையாடல்கள் நேற்று நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்கின்றது. இன்று இருக்கக்கூடிய அரசியல் ஆக்கத்தில் அல்லது எந்த விடயத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான்  தனியான ஒரு பங்கை வகித்து வருகின்றது. ஆகவே தமிழ்த் தேசியக்கூட்டமைப்பைப் பலவீனப்படுத்தவேண்டும் என்ற அடிப்படையில்தான் அவர்கள் தேர்தலைப் பார்க்கிறார்கள்.Image result for Sitharthan MP

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த தேர்தலைப் பொறுத்தவரையில் நிச்சயமாக தனிப் பெரும் கட்சியாக வரும் என்பதில் எந்த சந்தேகமும்இல்லை.

ஏனைய கட்சிகள் இந்த வாக்குகளைச் சிதறடித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பலத்தை குலைப்பதால் அவர்கள் அடையப் போகும் பலன் ஒன்றுமில்லை. ஏனைய கட்சிகள் ஒரு சபையையாவது வென்றெடுக்கமாட்டா. இதில் நஷ்டமடையப் போகின்றவர்கள் தமிழ் மக்கள் தான்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்குகள் உடைக்கப்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 60 , 70 வீதமான வாக்குகளைப் பெறத் தவறினால் நஷ்டமடைவது தமிழ் மக்கள்தான். இன்று சர்வதேசமாக இருக்கட்டும். இலங்கை அரசாங்கமாக இருக்கட்டும் தென் பகுதி அரசியலாக இருக்கட்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

இத் தேர்தலிலே 60 வீத வாக்குகளுக்குக் குறைவாகப் பெற்றுவிட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இங்கு மக்கள் அங்கீகாரத்தை இழக்கத் தொடங்கிவிட்டது. ஆகவே அவர்களுடன் பேசவேண்டிய தேவையில்லை என்ற ஒரு கருத்தை தென்னிலங்கைக்  கட்சிகள் முன்வைக்கும். அவர்கள் புதிய அரசியலமைப்பை தடுக்கின்ற முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது அவர்களுக்கு இது வாய்ப்பாக இருக்கும். அந்த வாய்ப்பை வழங்கப் போகின்றோமா?

புதிய அரசியல் அமைப்பை நாங்கள் தான் குழப்பினோம் அல்லது குழப்புவதற்குக் காரணமாக இருந்தோம் என்ற நிலை வரக்கூடாது. இதிலே ஒவ்வொரு தமிழரும் கவனமாக இருக்கவேண்டும்.

இடைக்கால அறிக்கை தொடர்பில் முழுமையாக அறிந்திருக்கவேண்டும். அதன் இணைப்புக்களையும் அறிந்திருக்கவேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வழங்கப்பட்ட இணைப்புக்களையும் அவதானிக்க வேண்டும்.

கடந்த கால தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறிய விடயங்களை அதில் கூறியுள்ளோம். அதேபோல் 6 உபகுழுக்களின் அறிக்கைகளிலே தெ ளிவாகக் கூறப்பட்டுள்ளது. இடைக்கால அறிக்கைதான் அரசியலமைப்பாக வரப்போவது அல்ல. இந்த அறிக்கைகள் சேர்க்கப்படும் அவை கருத்தில் எடுக்கப்பட்டு இறுதியான வரைபு வரையப்படும். இதில் இரகசியம் எதுவும் கிடையாது.

இரகசியம் இடம்பெறுகிறது என்று வைத்துக் கொண்டால்  அந்த விடயம் நிச்சயமாக பாராளுமன்ற வந்துதான் சேரும். அப்போது எங்களுக்கு மாத்திரமல்ல முழு மக்களுக்கும் இது தெரியவரும். தமிழ் மக்கள் ஏற்காத ஒன்றையும் நாங்கள் ஏற்கமாட்டோம் இதனை சம்பந்தன் ஐயாவும் மிகத் தெ ளிவாகக் கூறியுள்ளார்கள். இதில் குழப்புவதற்கு எந்த விடயமும் கிடையாது.

இதனை மக்களிடமும் கூறுங்கள். மக்கள் தெ ளிவாக இருந்தால் 60,70 வீதம் சபைகளைக் கைப்பற்றுவோம் நாங்கள் கடுமையாக உழைக்கவேண்டும்.

நாங்கள் சரிவான தீர்வைப் பெறவேண்டும் என்றால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலமாக இருக்கவேண்டும். பலர் சொல்லுவார்கள் தீர்வு வராது என்று. வருகிறதோ இல்லையோ நாங்கள் குழப்பக்கூடாது.

இந்தத் தீர்வு எடுக்கப்படுவதற்கு காரணம் ஐ.நா. மட்டுமன்றி பலம்பொருந்திய பல நாடுகள். எங்களுடைய பிரச்சினைகளைக்கவனிக்கின்ற நாடுகள் இதனை மிக அழுத்தமாகக் கவனித்து அழுத்தங்களைக் கொடுக்கின்றார்கள். நாங்கள் குழப்பி விட்டால் அந்த நாடுகளிடம் திருப்பிச் செல்லமுடியாது. சர்வதேசத்திடம் சொல்லவும் முடியாது.

ஆகவே இதை மிகத் தெ ளிவாக புரிந்து கொண்டு செயற்படவேண்டும்.

மேலும் பல குழப்பங்கள் எங்களுக்குள்ளே இருந்துது. இந்தக் குழப்பங்களுக்கு காரணம் வேட்பாளர்கள்தான். காரணம் எனக்குத்தா  எனக்குத்தா என்பதால் நாங்கள் கட்சித் தலைவர்களுடன் முரண்படவேண்டி வந்தது  என்றார்.


 

 

Be the first to comment

Leave a Reply