யாழ் நகரில் புளட் அமைப்பின் அலுவலகமாக இயங்கிய வீட்டில் இருந்து துப்பாக்கிகள் கண்டெடுப்பு

யாழ் நகரில் புளட் அமைப்பின் அலுவலகமாக இயங்கிய வீட்டில் இருந்து துப்பாக்கிகள் மீட்பு!

ந.லோகதயாளன் 

யாழ் . நகரில் புளட் அமைப்பின் அலுவலகமாக இயங்கிய வீட்டில் இருந்து துப்பாக்கிகள், வாளுகள் என்பன நேற்று பொலிசாரால் கைப்பற்றப்பட்டதோடு அது தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு அண்மையில் நீண்டகாலமாக புளட் அமைப்பினரின் பாவனையில் இருந்து வீட்டு உரிமையாளரினால் நீதிமன்றம் ஊடாக உரிமைகோரப்பட்ட வீடு ஒன்றினை பொலிசாரால் பொறுப்பேற்று வழங்கும் முகமாக பொலிசார் சகிதம் வீட்டின் உரிமையாளர் சென்ற வேளையில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த ஓர் அலுமாரியில் ஏ.கே ரக  துப்பாக்கிகள்  இருக்க காணப்பட்டன.

இவ்வாறு துப்பாக்கிகள் இருப்பதனை அவதானித்த பொலிசார் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின்  கவனத்திற்கு தெரியப்படுத்தியதும் பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குறித்த வீட்டினை முற்றுகையிட்டனர். இவ்வாறு முற்றுகையிட்ட பொலிசார் அங்கிருந்து – 2 ரகத்துப்பாக்கி ஒன்று நல்ல நிலையில் மீட்கப்பட்டதோடு ஓர் கைத் துப்பாக்கி மற்றும் ஒரு  தொலைத் தொடர்பு சாதனம் ஆகியவற்றுடன் இரு வாள்களையும் துப்பாக்கிக்கான ரவைக் கூடுகள் 6 , ரவைத் தாங்கி 1, சன்னங்கள் 399  ஆகிய இராணுவ சாதனங்களையும் மீட்டெடுத்தனர்.

இதனை அடுத்து புளட் அமைப்பின் நீண்டகால உறுப்பினரான பவுன் என அழைக்கப்படுபவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு ஆயுத மீட்பு மற்றும் புளட் உறுப்பினர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் புளட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது ,

குறித்த உறுப்பினர் நீண்ட கால புளட் அமைப்பின் உறுப்பினர் எனத் தெரிவித்தபோதும் சுமார் 4 ஆண்டுகாலமாக ஒதுங்கியே இருந்தார்,  அத்தோடு இறுதிப் போரின் பின்னர் அமைப்பின் சகல உறுப்பினர்களிடமும் இருந்த ஆயுதங்கள் மீளக் கையளிக்கப்பட்டுவிட்டன. இதேபோல் உறுப்பினர்கள் எவரிடமாவது ஆயுதம் இருப்பின் அவற்றினையும் உடன் கையளிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில் குறித்த நபரிடம் இருந்த ஆயுதங்கள் தொடர்பில் அமைப்பு ரீதியாக எதுவும் தெரியாது என்றார்.

புளட் அமைப்பு போர்க் காலத்தில் அரசோடும், அரச படைகளோடும் சேர்ந்து புலிகளுக்கு எதிராகப் போராடிய அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இன்று ததேகூ இல் இடம்பிடித்துள்ள புளட் 2001 இல் அதே ததேகூ இல் சேர மறுத்தது. புளட் அரசோடும், படையோடும் சேர்ந்து இயங்குவதால் சேரமுடியாது எனச் சொல்லியது.

புளட், இபிடிபி அமைப்புக்கள் தனியார் வீடுகளில் அத்து மீறி குடிபுகுந்து  வாடகை கொடுக்காது நீண்டகாலம் குடியிருந்தன. காவல்துறை அதற்கு உடந்தையாக இருந்தது.  இந்த சம்பவத்தில் கூட வீட்டுச் சொந்தக்காரர் நீதிமன்றத்தின் படிகள் ஏறியே வீட்டை மீட்க முடிந்தது.

இந்த வீடு பற்றியும் வீட்டில் இருந்த துப்பாக்கிகள் பற்றியும் தனக்கு ஒன்றும் தெரியாது என தர்மலிங்கம் சித்தார்த்தன் தனக்குத் தெரியாது என்பது நம்பும்படியாக இல்லை.


 

 

Be the first to comment

Leave a Reply