கல்வி

கல்வி

மனிதன் தனது வாழ்க்கை முழுவதும் செய்ய வேண்டிய ஒன்று உண்டு என்றால் அது கல்வி கற்பது ஒன்றுதான். இளமை முதல் இறக்கும் வரை இடைவிடாது கற்றாலும் ஒருவனால் கல்வியில் முழுமை அடைய முடியாது. எனவேதான் ‘கற்றது கைம்மண் அளவு; கல்லாதது உலகளவு’ என்னும் தொடர் மக்களிடையே நிலவுகிறது.

கல்வியை ஒருவன் கற்கத் தொடங்கும் போது சிறிது துன்பமாகத்தான் இருக்கும். ஆனால் கற்கத் தொடங்கிவிட்டால் அதுவே இன்பமாக மாறும் என்று குமரகுருபரர் பாடியுள்ளார்.

தொடங்குங்கால் துன்பமாய் இன்பம் பயக்கும்
மடம் கொன்று அறிவு அகற்றும் கல்வி …
 (2)

(பயக்கும் = கொடுக்கும், மடம் = அறியாமை, கொன்று = அழித்து,அகற்றும் = விரிவுபடுத்தும்)

இந்தப் பாடல் கூறும் கருத்துப்படி, தொடங்கும்போது துன்பமாக இருக்கின்ற கல்வியானது எப்படி இன்பமாக மாறும் என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டாமா? அந்த எண்ணத்திற்கும் குமரகுருபரர் விளக்கம் தந்துள்ளார்.

நம்மிடம் இருக்கும் அறியாமையைப் போக்கி அறிவை விரிவாக்குகிறது கல்வி. நம்மிடம் இருந்த அறியாமை விலகி அறிவு விரிவானதால் கல்வியில் இன்பம் தோன்றுகிறது.

கல்வி, அறியாமையைப் போக்குவது என்பதை நான்மணிக் கடிகையும் தெரிவித்துள்ளது.

கற்பக் கழிமடம் அஃகும் (47)

என்பது நான்மணிக்கடிகையின் அடி. அஃகும் என்றால் நீங்கும் என்று பொருள். கழிமடம் என்பது அறியாமை மிகுதியைக் குறிக்கும். கல்வி கற்பதால் நம்மிடம் உள்ள அறியாமை நம்மைவிட்டு நீங்குகிறது என்பதை இந்த அடியும் விளக்குகிறது.

5.3.1 கல்விப் பயன்

நமது அறியாமையை நீக்கி அறிவைப் பெருக்கி நமக்கு உதவியாக இருக்கின்ற கல்வியானது நால்வகைப் பயனையும் நமக்குத் தருகிறது. நால்வகைப் பயன்கள் யாவை என்பதை நாம் தெரிந்துகொள்வோமா? அறம், பொருள், இன்பம், வீடு என்பவையே நால்வகைப் பயன்கள் ஆகும். இதை,

அறம்பொருள் இன்பமும் வீடும் பயக்கும்
புறங்கடை நல்இசையும் நாட்டும் உறும்கவல்ஒன்று
உற்றுழியும் கைகொடுக்கும் கல்வியின் ஊங்குஇல்லை
சிற்றுயிர்க்கு உற்ற துணை
 (1)

(புறங்கடை = வெளி வட்டாரம், இசை = புகழ், நாட்டும் = நிறுத்தும்,உறும் = அடையும், கவல் = கவலை, உற்றுழி = ஏற்பட்ட வேளை,ஊங்கு = சிறந்தது)

என்னும் நீதிநெறி விளக்கப் பாடல் உணர்த்துகிறது.

அறம், பொருள், இன்பம் என்னும் மூன்றின் வாயிலாகத்தான் மனிதன், வீடுபேறு என்னும் முக்தி நிலையை அடையமுடியும். எனவே நால்வகைப் பயனையும் கல்வியால் பெறமுடியும் என்பதை உணர்த்த விரும்பிய குமரகுருபரர் ‘அறம், பொருள், இன்பமும்’ என்று தனியாகச் சொல்லி அதன் பிறகு ‘வீடும்’ என்று பிரித்துக் கூறியுள்ளார்.

கல்வி கற்றவர்கள் மேலே கண்ட நால்வகைப் பயனைப் பெறுவதுடன் உலகில் நல்ல புகழையும் அடைவார்கள். மேலும்,கவலை ஏற்படும் போது அந்தக் கவலையிலிருந்து மீள்வதற்கு உரிய வழியையும் கல்வி தரும் என்பதையும் குமரகுருபரர் கூறியுள்ளார். எனவே மனிதனுக்குக் கல்வியைத் தவிர வேறு எதுவுமே சிறந்த துணையாக இருக்க முடியாது என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

5.3.2 கற்றபடி நட

கல்வி கற்றவர்கள், தாம் கற்றவற்றை வாழ்வில் பயன்படுத்த வேண்டும். கல்வியின் வாயிலாகத் தாம் கற்ற அறநெறிகளை வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும். அவ்வாறு பின்பற்றினால்தான் கற்ற கல்வியால் பயன் உண்டு. கற்றதன்படி அறநெறிகளைப் பின்பற்றி வாழாதவன் பிறருக்கு அறநெறிகளைக் கூறினால் அவனது உள்ளமே அவனுக்குப் பெருந்துன்பத்தைக் கொடுத்துவிடும்.

கற்று, பிறர்க்கு உரைத்து, தாம் நில்லார் வாய்ப்படூஉம்
வெற்று உரைக்கு உண்டு ஓர்வலி உடைமை – சொற்ற நீர்
நில்லாதது என்? என்று நாண் உறைப்ப நேர்ந்து ஒருவன்
சொல்லாமே சூழ்ந்து சொலல் 
(20)

(நில்லார் = கற்றபடி வாழாதவர், வாய்ப்படூஉம் = உரைக்கும்,சொற்ற நீர் = சொன்ன நீங்கள், என் = ஏன், நாண் உறைப்ப = வெட்கப்படும்படி, சொல்லாமே = சொல்லாத வண்ணம், சூழ்ந்து = ஆராய்ந்து)

அறநெறிகளைக் கற்று, அந்த அறக் கருத்துகளைப் பிறர்க்கு உரைக்கின்ற ஒருவர் அந்த அறநெறிகளைப் பின்பற்றாவிட்டால் அவர் கூறுகின்ற உரை வெற்றுரை ஆகும். இவ்வாறு அறநெறிகளைப் பின்பற்றாமல் வெற்றுரைகளைக் கூறுகின்ற ஒருவரைப் பார்த்து, ‘அறநெறிகளை விளக்கும் நீங்கள் அந்த அறநெறிகளைப் பின்பற்ற வில்லையே’ என்று சுட்டிக் காட்ட நேரிடும். அவ்வாறு நேராமல் இருக்க வேண்டும் என்றால் கற்றவர்கள் தாங்கள் கற்றவற்றைப் பின்பற்றி வாழவேண்டும் என்று குமரகுருபரர் உணர்த்தியுள்ளார்.

கற்றபடி வாழ்க்கை இருக்க வேண்டும் என்பதைத் திருக்குறளில் திருவள்ளுவரும் வலியுறுத்தியுள்ளார். ‘கற்றபின் நிற்க அதற்குத் தக’ (391) என்னும் அடியில் இதே கருத்து இடம் பெற்றிருப்பதை நீங்கள் காணமுடியும்.

கற்றவற்றை முறையாகப் பயன்படுத்தாமல் விட்டுவிட்டு, மேலும் கல்வி கற்பதும் பயனற்ற செய்கையே!

வருந்தித்தாம் கற்றன ஓம்பாது, மற்றும்
பரிந்துசில கற்பான் தொடங்கல் – கருந்தனம்
கைத்தலத்த உய்த்துச் சொரிந்திட்டு, அரிப்புஅரித்து
ஆங்குஎய்த்துப் பொருள்செய் திடல்
 (8)

(ஓம்பாது = பாதுகாக்காமல், பரிந்து = விரும்பி, கருந்தனம் = பெருஞ்செல்வம், கைத்தலத்த = கையில் உள்ள, உய்த்துச் சொரிந்திட்டு = கீழே சிதறிவிட்டு, எய்த்து = வருந்தி)

என்று குமரகுருபரர் பாடியுள்ளார்.

கல்வியைக் கற்கத் தொடங்கும் போது சிறிது துன்பமாகத்தான் இருக்கும் என்பதை நாம் முன்பே படித்தோம். அவ்வாறு துன்பப்பட்டுக் கற்ற கல்வியை வாழ்க்கைக்குப் பயன்படுத்தாமல் மேலும் வேறு ஒன்றைக் கற்கத் தொடங்குவதை இப்பாடல் ஓர் உவமை வாயிலாகத் தெரிவித்துள்ளது.

ஒருவன் தான் கற்ற கல்வியைப் பயன்படுத்தாமல் மேலும் கற்கத் தொடங்குவது, தனது கையில் உள்ள செல்வத்தை மண்ணில் சிதறிவிட்டு, மண்ணுடன் கலந்துள்ளதை எடுத்து, சல்லடையில் போட்டு அரித்து எடுப்பதைப் போன்றது என்று நீதிநெறி விளக்கியுள்ளது.

5.3.3 கல்வி அழகு

கற்றவர்க்குக் கல்வியே அழகைக் கொடுக்கும். அவர்கள் வேறு அணிகலன்களை அணியவேண்டாம். கற்றவர்கள் மேலும் அணிகலன்களை அணிந்துகொண்டு தம்மை அழகுபடுத்த விரும்புவது நன்கு வடிவமைத்த அணிகலனை மேலும் அழகுபடுத்துவதைப் போன்றது ஆகும்.

கற்றார்க்குக் கல்வி நலனே கலன்அல்லால்
மற்றுஓர் அணிகலம் வேண்டாவாம்; முற்ற
முழுமணிப் பூணுக்குப் பூண் வேண்டா; யாரே
அழகுக்கு அழகு செய்வார்
 (12)

(நலன் = சிறப்பு, கலன் = அணிகலன், முற்ற முழுமணிப் பூண் = நன்கு வடிவமைக்கப் பட்ட மணி, பூண் = அழகுசெய்தல்)

என்னும் பாடலில் அழகை யாரும் அழகுபடுத்த விரும்பமாட்டார்கள். அதுபோல, கல்வி கற்றவர்களுக்கு எந்த அணிகலமும் தேவை இல்லை என்று நீதிநெறி விளக்கம் விளக்கியுள்ளது.

5.3.4 கல்விச் செல்வம் 

கற்றவர்க்குக் கல்வியே ஒரு செல்வமாக உதவும் தன்மை கொண்டது. கல்வி எப்போது எப்படிச் செல்வமாகிறது என்பதைப் பின்வரும் பாடல் தெளிவுபடுத்தியுள்ளது.

கல்வியே கற்புடைப் பெண்டிர் அப்பெண்டிர்க்குச்
செல்வப் புதல்வனே தீம்கவியா – சொல்வளம்
மல்லல் வெறுக்கையா மாண்அவை மண்ணுறுத்தும்
செல்வமும் உண்டு சிலர்க்கு
 (3)

(தீம்கவி = இனிய கவிதை, மல்லல் = வளம், வெறுக்கை = செல்வம், மண்ணுறுத்தும் = மகிழ்விக்கும்)

என்னும் பாடலில் கல்வியைக் கற்புடைய பெண்ணாகக் குமரகுருபரர் உருவகம் செய்துள்ளார். கவிதையைக் கற்புடைய பெண் ஈன்றெடுக்கும் மகனாகவும் கவிதைக்கு உரிய சொல்வளத்தைச் செல்வமாகவும் உருவகம் செய்துள்ளார். இவ்வாறு கல்விச்செல்வத்தைப் பயன்படுத்தி, சொல்வளம் மிக்க கவிதையை உருவாக்கி, அவையை (சபையை) அழகு செய்யும் திறம், சிறந்த கல்விச்செல்வம் என்று குமரகுருபரர் பாடியுள்ளார்.

இப்பாடலில் கல்விச் செல்வம் கொண்ட ஒருவனது வாழ்க்கையானது கற்புடைய மனைவியுடன் இல்லறம் நடத்துவதற்கு ஒப்பானது என்பதைக் குமரகுருபரர் தெளிவுபடுத்தியுள்ளார். கற்புடைய மனைவியுடனும் மக்களுடனும் வாழும் ஒருவனது வாழ்க்கை இன்பமாக இருப்பதுபோல், கல்விச் செல்வம் கொண்டவனின் வாழ்க்கையும் இன்பமாக இருக்கும் என்பது இப்பாடல் உணர்த்தும் உட்பொருள்.

5.3.5 சொல்வன்மை

கல்வி கற்ற ஒருவனால் கற்றவற்றை விளக்கிக் கூற இயலவில்லை என்றால் அந்தக் கல்வியால் பயன் இல்லை.

எத்துணைய ஆயினும் கல்விஇடம் அறிந்து
உய்த்துணர்வு இல்எனின் இல்லாகும்-உய்த்து உணர்ந்தும்
சொல்வன்மை இன்றுஎனின் என்ஆகும்? அஃது உண்டேல்
பொன்மலர் நாற்றம் உடைத்து
 (4)

(எத்துணை = எவ்வளவு, உய்த்து உணர்வு = ஊகித்து அறிதல்)

என்னும் நீதிநெறி விளக்கப் பாடல் இக்கருத்தை விளக்கியுள்ளது.

ஒருவன் எவ்வளவு சிறந்த முறையில் கல்வியைக் கற்றிருந்தாலும் எந்த இடத்தில் எப்படிப் பேச வேண்டுமோ அந்த இடத்தில் அப்படிப் பேசத் தெரியவில்லை என்றால் அவன் கற்ற கல்வியால் எந்தப் பயனும் இல்லை. கல்வி அறிவும் இடம் அறிந்து சிறப்பாகப் பேசும் ஆற்றலும் ஒருவனிடம் இருந்தால் அவனால் எளிதில் வெற்றிபெற முடியும். பொன்னால் செய்யப்பட்ட மலர் அழகாக இருக்கும். அழகுடைய அந்தப் பொன்மலரில் நறுமணமும் இணைந்து இருந்தால் எவ்வளவு உயர்வாகக் கருதப்படுமோ அதைப் போன்றே கல்வி அறிவுடன் சொல்லாற்றலும் பெற்றவன் மதிக்கப்படுவான் என்று குமரகுருபரர் குறிப்பிட்டுள்ளார்.

கற்றவற்றை அவையில், சிறந்த முறையில் எடுத்துக்கூற இயலாதவன் கல்வி அறிவு பெற்றவனாய் இருப்பது பயனற்றது என்பதைப் பின்வரும் பாடல் தெரிவிக்கிறது.

அவைஅஞ்சி மெய்விதிர்ப்பார் கல்வியும் கல்லார்
அவைஅஞ்சா ஆகுலச் சொல்லும்- நவைஅஞ்சி
ஈத்துஉண்ணார் செல்வமும் நல்கூர்ந்தார் இன்நலமும்
பூத்தலின் பூவாமை நன்று
 (5)

(அவை அஞ்சி = அவையில் பேசுவதற்கு அச்சப்பட்டு, மெய்விதிர்ப்பார் = உடல் நடுங்குவார், ஆகுல = ஆரவார, நவை = குற்றம், ஈத்து = கொடுத்து, நல்கூர்ந்தார் = வறுமையாளர், இன்நலம் = அழகு)

என்னும் பாடலில், அவையில் கருத்துகளை எடுத்துக் கூற இயலாமல் இருப்பவனின் கல்வியும், அவையில் அச்சம் இல்லாமல் கூறும் ஆரவாரச் சொல்லும், பிறருக்குக் கொடுக்காதவன் என்னும் பழி ஏற்படும் என்று உணராமல் பிறருக்கு வழங்காமல் வைத்து உண்பவனின் செல்வமும், வறுமை அடைந்தவனின் அழகும் இருப்பதை விடவும் இல்லாமல் போவதே நல்லது என்று குமரகுருபரர் விளக்கியுள்ளார். இதை விளக்குவதற்குப் ‘பூத்தலின் பூவாமை நன்று’ என்னும் தொடரைக் குமரகுருபரர் பயன்படுத்தியுள்ளார்.

5.3.6 கல்விப் புகழ்

கல்வி கற்று இறவாப் படைப்புகளை வழங்கும் படைப்பாளிக்கு மலரவன் என்று போற்றப்படும் நான்முகன் ஒப்பாகமாட்டான் என்பதை,

கலைமகள் வாழ்க்கை முகத்தது எனினும்
மலரவன் வண்தமிழோர்க்கு ஒவ்வான் – மலரவன்செய்
வெற்றுஉடம்பு மாய்வனபோல் மாயா புகழ்கொண்டு
மற்றுஇவர் செய்யும் உடம்பு
 (6)

(முகத்தது = முகத்தில் உள்ள நாவில் உள்ளது, மலரவன் = பிரம்மன், வண்தமிழோர் = தமிழ்ப் புலவர், ஒவ்வான் = ஒப்பாக மாட்டான், மாய்வன = அழிவன, மாயா = அழியா)

என்னும் பாடலில் குமரகுருபரர் தெரிவித்துள்ளார்.

தமிழ்ப் புலவர்களுக்கு நான்முகன் எவ்வாறு ஒப்பாக மாட்டான் என்பதைப் பார்ப்போமா?

நான்முகன் படைக்கின்ற மனித உடல்கள் எதுவுமே நிலையாக இருப்பதில்லை. அவை அழிந்து விடுகின்றன. ஆனால் வளம் பொருந்திய தமிழில் தமிழ்ப் புலவர்கள் படைத்துள்ள கவிதைகள் நான்முகனின் படைப்புகளைப் போல் அழிவதில்லை. அவை காலம் கடந்தும் நிலைத்த புகழுடன் விளங்குகின்றன. எனவே தமிழ்ப்புலவர்களின் படைப்புகளுக்கு நான்முகனின் படைப்புகள் ஒப்புமை ஆகா என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.

About editor 2992 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply