மகாவம்சம் பவுத்தர்களது மனக் கிளர்ச்சிக்கும் ஆனந்தத்திற்கும் எழுதப்பட்ட புராணம்! 

மகாவம்சம் பவுத்தர்களது மனக் கிளர்ச்சிக்கும் ஆனந்தத்திற்கும் எழுதப்பட்ட புராணம்! 

பேராசிரியர் முனைவர் பாலசுப்பிரமணியம்  

“முன்னாள் சட்ட விரிவுரையாளரான திரு.தம்பு கந்தையா எழுதியுள்ள மகாவம்சம் ஒரு மீளாய்வு என்ற நூலை வாசித்த பின்னர் மகாவம்சம் பற்றிய பல செய்திகளையும் உண்மைகளையும் நான் அறிந்து கொண்டேன். இலங்கையை ஒரு பவுத்த நாடாகக் காண்பிப்பதற்காக மகாநாம தேரரால் எழுதப்பட்ட நூலே மகாவம்சம். ஏக பவுத்தம் என்ற பொய்யான கருத்துடன் இது எழுதப்பட்டுள்ளது. மகாவம்சத்தின் கதை ஒரு அருவருக்கத் தக்க கதை. சிங்கத்துக்கும் ஒரு வங்க நாட்டு அரசிக்கும் இரண்டு பிள்ளைகள் பிறக்கின்றன.

அண்ணன் தங்கச்சி முறையுள்ள அந்தப் பிள்ளைகள் திருமணம் செய்து 16 இரட்டைப் பிள்ளைகளைப் பெறுகின்றனர். அந்தப் பிள்ளைகளில் மூத்தவன்தான் விஜயன். துட்டனான விஜயனும் அவனது 700 தோழர்களும் மொட்டையடிக்கப்பட்டு அவனது தந்தை சிங்கபாகுவால் நாடுகடத்தப்பட்டார்கள். அவர்கள் இலங்கையில் தம்பதெனியாவில் வந்து இறங்குகிறார்கள்.

பின்னர் விஜயன் இயக்க அரசியான குவேனியை மணந்து இரண்டு பிள்ளைகளுக்குத் தந்தையாகிறான். விரைவில் குவேனியைக் கைவிட்டு பாண்டிய நாட்டு அரசிளங்குமரியை மணம் செய்கிறான். அவனது தோழர்களுக்கும் பாண்டி நாட்டில் இருந்து பெண்கள் கொண்டு வரப்படுகிறார்கள். மகாவம்சத்தை ஒரு புராணம் என்றுதான் கொள்ள வேண்டும். ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் இந்த தொகுப்பு பவுத்தர்களது மனக் கிளர்ச்சிக்கும் ஆனந்தத்திற்கும் ஆக எழுதப்பட்டது என மகாநாம தேரர் குறிப்பிடுகிறார்.

இந்தப் பாடநூலில் சோழ நாட்டுத் தமிழ் மன்னனான எல்லாளன் நீதி நெறிப்படி ஆண்ட மன்னன் எனவும் அவனிடம் நீதி வேண்டிப் போகிறவர்கள் அரண்மனை வாசலில் இருந்த ஆராய்ச்சி மணியை அடித்தால் நீதி கிடைக்கும் என மகாவம்சமே கூறுகின்றது. இந்தக் கதை மனுநீதி கண்ட சோழன் கதை போன்றது. தமிழ்மன்னன் எல்லாளன் அனுராதபுரத்தில் நீதி தவறாத செங்கோலாட்சியை நடாத்தினாலும் அவன் “புன்னெறி” (false beliefs) கொண்டவன் என்ற காரணத்தாலேயே அவன் மீது துட்டகைமுனு படையெடுத்தான் என மகாவம்சம் தெரிவிக்கிறது. இந்தப் புராணக் கதையைப் பள்ளிக் கூடங்களில் பாட நூலாகவும் வைத்திருக்கிறார்கள் ” எனப் பேராசிரியர் முனைவர் மு.ப. பாலசுப்பிரமணியன் தனது சிறப்புரையில் குறிப்பிட்டார்.

முன்னாள் சட்ட விரிவுரையாளர் திரு. தம்பு கனகசபையால் எழுதப்பட்ட “மகாவம்சம் ஒரு மீளாய்வு” என்ற நூல் வெளியீட்டு விழா தமிழ்ப் படைப்பாளிகள் கழகத்தின் ஆதரவில் கடந்த செப்தெம்பர் 19 (வெள்ளிக்கிழமை) மாலை ஸ்காபுறோ பொது மண்டபத்தில் நடைபெற்றது. திரு நக்கீரன் தங்கவேலு தலைமை தாங்கினார். காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் தலைவர்பேராசிரியர் முனைவர் மு.ப. பாலசுப்பிரமணியம் பிரதம விருந்தினராக வருகை தந்திருந்தார்.

செல்வி செலினா தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடினார். அதனைத் தொடர்ந்து அகவணக்கம் அனுட்டிக்கட்பட்டது. திரு மு. தியாலிங்கம், செயலாளர் தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் எல்லோரையையும் வரவேற்றுப் பேசினார். முனைவர் கவுசல்யா சுப்பிரமணியயம் வாழ்த்துரை நல்கினார்.

முனவைர் பேராசிரியர் மு.ப. பாலசுப்பிரமணியம் அவர்கள் தொடர்ந்து பேசுகையில் “மகாவம்சம் என்ற நூலை ஆய்வு செய்து அதன் உண்மை பொய்மைகளை அம்பலப்படுத்தியதற்காக நூலாசிரியருக்கு அவர்களுக்கு எனது பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். தம்பு கனகசபை ஒரு சட்ட அறிஞர், இருந்தும் ஒரு வரலாற்று ஆசிரியர் மேற்கொள்ள வேண்டிய ஆய்வை அவர் செவ்வனே செய்திருக்கிறார். அதையிட்டு நாம் பெருமைப் படவேண்டும். புலம்பெயர்ந்த தமிழர்கள் தமிழ் உணர்வோடு தலை நிமிர்ந்து நிற்கின்றார்கள். மகாவம்சத்தை ஏற்றுக் கொண்டால் அது சிங்களவரை ஏற்றுக் கொண்டதற்கு சமமாகும். அவ்வாறு செய்யக் கூடாதென திரு. தம்பு கனகசபை கூறியுள்ளார்” என்றார்.

திரு நக்கீரன் தங்கவேலு தனது தலைமையுரையில் பின்வரும் அம்சங்களை வலியுறுத்திப் பேசினார்.

(1) ஆங்கிலேயர் வரும் வரை பாலி மொழியில் எழுதப்பட்ட மகாவம்சம் என்ற நூல் இருப்பது யாருக்கும் தெரியாமல் இருந்தது. 1837 இல் யோர்ஜ் ரேணர் (George Turnour) என்ற ஆங்கிலேயரே இலங்கை பொது சேவையில் (Ceylon Civil Service) இருந்த காலத்தில் மகாவம்சத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். பின்னர் 1912 இல் வில்ஹெல்ம் கெய்க்கர் (Wilhelm Geiger) என்பவர் ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்தார். இந்த மொழி பெயர்ப்பை Mabel Haynes Bode ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அதனை வில்ஹெம் கெய்க்கர் திருத்தி அமைத்தார். அதன் பின்னர் 1877 இல் ஆங்கில ஆளுநர் ஒருவர் மகாவம்சத்தை சிங்களத்தில் மொழிபெயர்ப்புப் செய்தார். அதன் பின்னரே மகாவம்சம் என்றொரு நூல் இருப்பது பெரும்பாலான சிங்கள- பவுத்தர்களுக்குத் தெரியவந்தது.

(2) மகாவம்சம் தரும் இலங்கைச் சரித்திரம் என்ற ஆய்வு நூலை 2003 இல் முனைவர் க.குணராசா எழுதி வெளியிட்டுள்ளார். ஆர்.பி.பாரதி மகாவம்சத்தைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

(3) மகததேசத்தில் உள்ள உருவெல என்னும் இடத்திலுள்ள அரச மரத்தின் அடியில் ஒரு வைகாசி (விசாக) மாதத்துப் பௌர்ணமி நாளில் கவுதம புத்தர் (கிமு 560–480) அமர்ந்திருக்கின்றார். அப்போது அவருக்குச் சில நிகழ்ச்சிகள் புலனாகின்றன. பவுத்த மதம் பெரு வளர்ச்சியடையக் கூடிய இடம் இலங்கைத் தீவு என்பதும் ஆனால் அங்கு ஏற்கனவே வசித்து வருகின்ற இயக்கர்களை அங்கிருந்து விரட்டியடிக்க வேண்டும் என்றும் புத்தர் எண்ணுகின்றார்.

(4) புத்தர் 3 தடவை இலங்கை வந்ததாக மகாவம்சம் கூறுகிறது. முதல்முறை இயக்கர்கள் வாழ்ந்த மகியங்கன என்ற இடத்துக்கு வருகிறார். இலங்கைத்தீவு எங்கணும் வாழ்கின்ற இயக்கர்கள் குறிப்பிட்ட ஒரு தினத்தில் மகாவலி கங்கை அருகே உள்ள மகாநாக வனத்தில் வந்து கூடுவது வழக்கம். அந்த வேளையில் புத்தர் அங்கே வான்வழியாகப் பறந்து வந்து அந்தரத்தில் நின்றவாறு பயங்கரமான சூறைக்காற்றை உருவாக்கி இயக்கர்களைப் பயமுறுத்துகின்றார். உடனே இயக்கர்கள் இந்த இலங்கைத்தீவு முழுவதையுமே உமக்குத் தருகின்றோம், எங்களைக் காப்பாற்றுங்கள் என்று கெஞ்சப் புத்தர் அவர்களை மலைநாட்டுக்கு அனுப்பி வைக்கின்றார். அதன் பின் தேவர்கள் வந்து கூடினர். அப்போது அந்த சபையில் அவர் தமது சமயக் கொள்கையைப் போதித்தார். பல கோடி மக்கள் பவுத்த மதத்துக்கு மாறினர்.

இரண்டாம் முறை மணிபல்லவத்தை ஆண்ட மகோதரன் – குலோதரன் (மாமன் – மருமகள்) என்ற இரண்டு நாக மன்னர்கள் தமக்குள்ளே இரத்தினக் கற்கள் பதித்த அரச கட்டிலுக்காகப் போர் புரிவதைத் தடுப்பதற்காக வருகின்றார். முன்பு சூறைக்காற்றை உருவாக்கி இயக்கர்களைப் பயமுறுத்தி அடிபணிய வைத்த புத்தர் இம்முறை பயங்கர இருளைப் பரவச்செய்து நாக மன்னர்களையும் அவர்களது வீரர்களையும் கிலி கொள்ள வைக்கின்றார். பின்னர் அங்கு வாழ்ந்த எட்டுக்கோடி நாகர்களுக்கு ‘புத்தம் – தர்மம் – சங்கம்’ என்ற போதனைகளை அருளுகின்றார்.

மூன்றாம் முறை மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் புத்தர் மீண்டும் இலங்கைக்கு வருகிறார். கல்யாணி (இன்றைய களனி) என்ற நாட்டை ஆண்ட மகோதரன் தாயின் உடன்பிறப்பு மணியக்கியா மன்னனது வேண்டுதலை ஏற்று அங்கு சென்று அந்த இடங்களை ஆசீர்வதித்துத் திரும்புகின்றார்.

(5) புத்தர் இலங்கைக்கு வருகை தந்ததற்கு எந்தச் சான்றும் இல்லை. இது முழுக்க முழுக்க மகாநாம தேரரது கற்பனை. ஆனால் அதில் உண்மையும் பொதிந்துள்ளது. விஜயனுக்கு முன்னர் இலங்கை முழுதும் இயக்கர், நாகர், வேடர் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதே அந்த உண்மையாகும்.

(6) வைகாசி மாதத்துப் பவுர்ணமி நாளில் கவுதம புத்தர் தனது 80 ஆவது அகவையில், குசி நகரத்தில் கிமு 483 பரி நிருவாணம் அடைந்தார். அதே நாள் லாலா நாட்டில் (வட இந்தியா) இருந்து நாடுகடத்தப்பட்ட விஜயனும் அவனது 700 நண்பர்களும் தம்பபாணி (தாமரபரணி) இல் கரை இறங்குகிறார்கள். திட்டமிட்டே இந்த இரண்டு நிகழ்வுக்கும் இடையில் மகாவம்ச ஆசிரியர் முடிச்சுப் போட்டுள்ளார்.

(7) தெய்வீக மாமுனிவரான புத்தர் பரிநிருவாணம் அடையு முன்னர் அரசகட்டிலில் வீற்றிருந்தவாறு தேவர்களது அரசனும் புத்த தர்மத்தின் (புத்தர் போதித்த போதனைகள்) தெய்வீக காவலனுமான இந்திரனை(சக்கா) அழைத்து “லாலா நாட்டு அரசனான சிங்கபாகுவின் மகனான விஜயன் தனது 700 கூடடாளிகளோடு லங்காவில் கரையிறங்கியுள்ளான். லங்காவில் எனது சமயம் நிலை நிறுத்தப்படும். எனவே அவனையும் அவனது பரிவாரத்தையும் லங்காவையும் கவனமாகக் பாதுகாப்பாயாக” எனக் கட்டளை இட்டார். அதனைச் செவிமடுத்த இந்திரன் அந்தப் பொறுப்பை தாமரை மலரின் நிறத்தை ஒத்த கடவுளிடம் (விஷ்ணு) ஒப்படைத்தான் (மகாவம்சம் – அத்தியாயம் V11). இந்தக் கதை இன்றைய சிங்கள – பவுத்த மக்களது நம்பிக்கைகளில் ஒரு தெய்வீக இடத்தைப் பிடித்துள்ளது.

(8) துட்ட கைமுனு நாக வம்சத்தை சேர்ந்தவன். அவனது தந்தை பெயர் காகவண்ண தீசன். அவனது பாட்டன் பெயர் கோத்தபாய. அவனது பூட்டன் பெயர் யத்தகால தீசன் அவனது ஒட்டன் பெயர் மகாநாகன், மகானாகனது தந்தை பெயர் முத்துசிவன்! துட்ட கைமுனு ஒரு சிங்கள மன்னன் என்று மகாவம்சம் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. துட்டகைமுனு வாழ்ந்த காலத்தில், சிங்களவர்கள் என்று அடையாளம் காணக் கூடிய ஒரு இனம் வரலாற்றில் தோன்றியிருக்கவில்லை. மகாவம்ச கதைப்படியே துட்ட கைமுனு தந்தை வழியிலும் தாய் வழியிலும் நாக வம்சத்தைச் சேர்ந்தவன். அவனது தாய் விகாரமாதேவி கல்யாணியை ஆண்ட மணியக்கியா அல்லது களனி தீசன் என்ற அரசனின் மகள் ஆவாள்.

(9) எல்லாளன் மீது போர் தொடுக்கு முன்னர் கதிர்காமத்தில் உள்ள முருகனை வழிபாடு செய்துவிட்டே புறப்படுகிறான். அவனது போர் முழக்கம் “இராச்சியங்களைப் பிடிக்க அல்ல நான் போர் தொடுத்தது. புத்தரின் தர்மத்தை நிலைநாட்டவே நான் போர் செய்தேன். இதுவே உண்மை என்பதை எண்பிக்க எனது படையினரின் மேனி தீயின் நிறத்தை எடுக்கட்டும்’ என சூளுரைத்ததாக மகாவம்சம் (அதிகாரம் 25) தெரிவிக்கிறது. “பவுத்த மதத்தை மீட்பதற்கான புனிதப்போரில் துட்ட கைமுனு என்ற சிங்கள மன்னன், எல்லாளன் என்ற தமிழ் மன்னனை வென்றான்” என்ற கதை பின்னாளில் புனையப்பட்டு சிங்கள பள்ளி மாணவர்களுக்கான சிங்கள மொழிப் பாட நூலில் சேர்க்கப்பட்டது.

(10) அனுராதபுரத்தைப் பிடிக்க படை நடத்தி வந்த துட்ட கைமுனு வழியில் 32 தமிழ்ச் சிற்றரசர்களோடு ஆறு மாத காலம் போரிட்டு அவர்களைத் தோற்கடித்தான் என மகாவம்சம் சொல்கிறது. ஒரே நாளில் 7 இளவரசர்களை வென்றான். ஆனால் தந்திரமும் திறமையும் வாய்ந்த திதம்பாவோடு 4 மாதங்கள் போரிட்டு முடிவில் சூழ்ச்சியால் வென்றான். அவன் தனது தாய் விகாரமாதேவியை திதம்பாவின் கண் முன் நிறுத்திப் பணிய வைத்தான்.

(11) எல்லாளன் – துட்ட கைமுனு போர் தமிழர் – சிங்களவர் போராகப் பார்ப்பது தவறானது. அன்று சிங்கள இனமோ மொழியோ தோன்றாத காலம். அந்தப் போர் இந்துக்களுக்கும் – பவுத்தர்களுக்கும் இடையிலான ஆட்சி அதிகாரப் போர். துட்ட கைமுனு பக்கத்தில் தமிழ் வீரர்கள் தமிழ் சேனாதிபதிகள் (நந்தமித்ரா, வேலுசுமணா) போரிட்டனர். அதே போன்று, எல்லாளனின் படையில் சிங்கள வீரர்கள் மட்டுமல்ல, சிங்கள சேனாதிபதிகளும் இருந்துள்ளனர். போர் முடியும் வரையில், சிங்கள தளபதிகளும், வீரர்களும் எல்லாளனுக்கு விசுவாசமாக இருந்துள்ளனர். ஒருவர் கூட எல்லாளனுக்குத் துரோகமிழைத்து விட்டு, “சிங்கள மன்னனான” துட்ட கைமுனுவிடம் போய்ச் சேரவில்லை. எல்லாளனின் படையில் முன்னணி அரங்கில் நின்று போரிட்ட சிங்கள சேனாதிபதிகளின் பெயர் விபரம் பின்வருமாறு: தீகபாய, தீகஜந்து, காமினி, நந்திதா …. இந்த சிங்கள சேனாதிபதிகளின் பட்டியலில், துட்ட கைமுனுவின் ஒன்று விட்ட சகோதரனான தீகபாய செனாவியின் பெயரும் இருப்பது குறிப்பிடத் தக்கது. இன்னொரு முக்கியமான தகவல். தீகபாய சேனாவி, துட்ட கைமுனு பக்கம் நின்ற (சிங்கள) குறுநில மன்னர்கள் மத்தியில், எல்லாளனுக்கு ஆதரவு திரட்டும் இராஜதந்திர நகர்வுகளை செய்துள்ளான்!

(12) கல்லாடநாகன் (கிமு 50 – 44) (2) சோரநாகன் (கிமு 3 – 9) (3) இளநாகன் (கிபி 96 – 103) (4) மாகலக்க நாகன் (கிபி196 – 203) (5) குஜ்ஜநாகன் (கிபி 246 – 248) (6) குட்டநாகன் (கிபி 248 – 249) (7) ஸ்ரீநாகன் I (கிபி 249 – 269) (8) அபயநாகன் (291 – 300) (9) ஸ்ரீநாகன் II (கிபி 300 – 302) (10) மகாநாகன் (கிபி 556 -568) எனப் பல அரசர்கள் நாக பின் ஒட்டோடு இலங்கையை 6 ஆம் நூற்றாண்டு வரை அநுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுள்ளார்கள். தீசன் என்ற சொல்லும் நாக வம்சத்தவருக்கு உரிய சொல்லே ஆகும். எடுத்துக் காட்டாக ஸ்ரீநாகன் II தந்தை பெயர் வீர தீசன். (The Early History of Ceylon by G.C.Mendis -pages 83-85). இவர்கள் யாரும் தங்களை ஹெல, சிகல அல்லது சிங்கள என அழைக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

(13) இலங்கை ஒரு பவுத்த நாடு அது பவுத்த – ஆரிய சிங்களவர்களுக்கே சொந்தம் என்ற கூக்குரல் சென்ற நூற்றாண்டிலும் ஒலித்தது. அதை ஒலித்தவர் டொன் டேவிட் ஹேவவிதாரனே (Don David Hewawitharane – September 17th, 1864) என்ற இயற்பெயரைக் கொண்ட அநகாரிக தர்மபாலர் ஆவர். கொழும்பு மாளிகாகந்தவில் நடந்த அவரது 150 ஆண்டு பிறந்த நாள் விழாவில் பேசிய சனாதிபதி மகிந்த இராபக்சே “இலங்கையின் பெரும்பான்மை இனத்தவர்கள் தாங்கள் சிங்கள – பவுத்தர்கள் எனப் பெருமையுடன் சொல்ல கூடிய நிலைக்கு அல்லது துட்ட கைமுனு குறித்துப் பெருமையுடன் பேசக் கூடிய நிலைக்கு நாட்டை நாங்கள் மாற்றியுள்ளோம். அநகாரிக தர்மபாலர் மீதும் இனவாதி என்ற முத்திரை குத்தப்பட்டது, ஆனால் அதனையும் நாங்கள் மாற்றியுள்ளோம். பத்து ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் தாங்களைப் பவுத்தர்கள் எனச் சொல்வதற்கே தயங்கினர், நான் அவ்வாறு சொன்னவேளை பலர் என்னைக் கடிந்துகொண்டனர், யாரும் துட்ட கைமுமுனுவை நினைவுகூற விரும்பவில்லை. நாட்டிற்கு முதுகெலும்பை நாங்கள் வழங்கியுள்ளதால் இன்று மன்னர் குறித்தும் வரலாறு பற்றியும் திரைப்படங்கள் எடுக்கப்படுகின்றன. ஏனைய நாடுகளுடன் சமமாக நிற்கக் கூடிய பெருமித உணர்வை நாங்கள் தேசத்திற்கு வழங்கியுள்ளோம்” எனப் பேசியுள்ளார்.

(14) தமிழர்களது எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து கொண்டு போகிறது. சென்ற நூற்றாண்டில் புத்தளம் நீர் கொழும்பு பகுதிகளில் கத்தோலிக்க பரதவ மக்கள் வாழ்ந்தார்கள். சிலாப மறைமாவட்டத்தின் ஆயர் ஆக இருந்த எட்மன்ட் பீரிஸ் ( (1897 -1989 ) பள்ளிகளில் படிப்பிக்கிற கற்கை மொழியைத் தமிழில் இருந்து சிங்களத்துக்கு மாற்றினார். அதன் விளைவாக அவர்கள் தமிழை மறந்து சிங்களவர்கள் ஆனார்கள். ஆயர் எட்மன்ட் பீரிஸ் அவர்களது தந்தையார் தமிழ், சிங்களம் இரண்டு மொழியிலும் புலமை பெற்றிருந்தார்.

(15) சிங்களக் குடியேற்றத்தினால் தமிழர்களது நிலம் பறிபோய்க் கொண்டிருக்கிறது. மலைநாட்டுத் தமிழர்கள் சிங்களவர்களாக மாறிவருகிறார்கள். வடக்கில் சிங்களக் குடியேற்றம் அதிகரித்து வருகிறது. இராணுவத்தில் சேரும் தமிழ் இளைஞர் இளைஞிகள் நாளடைவில் சிங்கள இராணுவத்தினரைத் திருமணம் செய்து சிங்களவர்களாக மாறிவிடுவார்கள்.

நூல் அறிமுகவுரை நிகழ்த்திய மூத்த ஊடகவியலாளர் திரு சிவநேயச்செல்வன் பேசும் போது மகாவம்சத்தை ஒரு வரலாற்று நூலாகக் கொள்ள முடியாது. சில வரலாற்று உண்மைகளை புராணங்களுக்குரிய கற்பனையோடு கலந்து மகாவம்சத்தை மகாநாம தேரர் எழுதியுள்ளார் எனக் குறிப்பிட்டார்.

நூல் நயவுரை ஆற்றிய முன்னாள் நா.உ. மா.க. ஈழவேந்தன் “சட்டத்தரணி தம்பு கனகசபை இத ற்கு முன்னர் ஈழத்தமிழரின் வரலாறும் வாழ்வியலும் என்ற நூலை தமிழ் – ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் எழுதி வெளியிட்டுள்ளார். “உண்மையில் மகாவம்சம் ஒரு குட்டி வம்சம், சிங்கள இனம் ஆரிய இனம் அன்று, அது ஒரு கலப்பு இனம்” என்று முனைவர் அசேந்திரன் தனது அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளார். சிங்கள இனம் பற்றி ஜி.சி. மென்டிஸ் குறிப்பிடும் போது சிங்கள இனம் உருவாகுவதற்கு தமிழர்கள் உதவியுள்ளார்கள். சிங்களவர்களது குருதியில் தமிழ் குருதி ஓடுகிறது. சிங்கள மொழியின் கட்டமைப்பிலும் சொற்களிலும் தமிழின் தாக்கம் தெரிகிறது. அனுராதபுரத்தை ஆண்ட எல்லாளன் மீது படையெடுத்துச் சென்ற துட்ட கைமுனு வழியில் 32 தமிழ் சிற்றரசர்களோடு போரிட்டு அவர்களைத் தோற்கடித்தான் என மகாவம்சம் கூறுகிறது. இது தமிழர்கள் மகாவலி கங்கைக்கு வடக்கே செறிந்து வாழ்ந்ததைக் காட்டுகிறது” என்றார்.

ஆய்வுரை நிகழ்த்திய முனைவர் நா. சுப்பிரமணிய அய்யர் பேசும் போது ” மகாவம்சம் அல்லது மஹாவங்ஸ என்ற நூல் கவுதமபுத்தர் (கிமு 563-483) மற்றும் இலங்கையின் முதல் மன்னனாகப் பவுத்த சிங்களவர்களாற் கருதப்படும் விஜயன் (கிமு 483 – 445) ஆகியோர் முதல் மகாசேன மன்னன் (கிபி 325 – 352) காலம்வரையான வரலாற்றை வரிசைப்படுத்தி எழுதப்பட்டுள்ளது. மஹாவங்ஸ நூலானது உண்மைத் தரவுகள் பலவற்றை உள்ளடக்கிய ஒரு புனைவு நூல். உள்ளடக்கப் பகுதியில் முதன்மைபெற்றுள்ள அம்சம் துட்ட காமினி என்ற மன்னன் பற்றிய செய்தியாகும். 37 இயல்கள் கொண்ட அவ்வாக்கத்தில் 11 இயல்கள் (22 – 32) அவனைப் பற்றியே பேசுகின்றன. அவ்வகையில் அவனே அதன் காவியநாயகன். எனவே அந்நூல் துட்டகாமினி காவியம் என்பதான கணிப்புக்கே உரியது(முனைவர் இந்திரபாலா கருத்து). அதிலே பொதுவாக இலங்கையின் வரலாற்றுக்கும் சிறப்பாக ஈழத்தமிழரின் வரலாற்றுக்குமான பல வரலாற்றுத் தரவுகள் உள்ளன. அந்தவகையில் அவ்வாக்கம் வரலாற்று முக்கியத்துவமுடையது.

திரு தம்பு கனகசபை எழுதிய ஈழத் தமிழரின் வரலாறும் வாழ்வியலும் (2012) என்ற ஆக்கம் முக்கியமானது. இந்நூலை பேராசிரியர் சி. பத்மநாதன் மற்றும் நக்கீரன் மற்றும் பலரின் அணிந்துரை ஆய்வுரை முதலியன அணிசெய்கின்றன. அந்நூலின் தொடர்ச்சியே இந்த மகாவம்சம் ஒரு மீளாய்வு என்ற நூலாகும். திரு தம்பு கனகசபை அவர்களது நோக்கமும் செயற்பாடும் வாழ்த்தி வரவேற்கப்பட வேண்டியன. அதேவேளை இவ்வாறான முயற்சிகள் தனியொருவருடைய செயற்பாட்டால் மட்டும் நிறைவுபெற்று விடுவதில்லை என்பதையும் நாம் கருத்துள் கொள்ளவேண்டியதவசியமாகும். இந்நூலிலே பெயர்ப் பிழைகள் மற்றும் எழுத்துப் பிழைகள் என்பன இடம்பெற்றுள்ளன. இவற்றை மறுபதிப்பிலே நூலாசிரியர் திருத்திவெளியிடவேண்டும். நிறைவாக ஈழத்தமிழரின் வரலாற்றை எழுதுவதற்கான முயற்சிகள் ஒன்றுதிரட்டப்பட வேண்டும். அதற்காக ஈழத்தமிழரின் வரலாற்றுக் கழகம் என ஒரு அமைப்பை அனைத்துலக மட்டத்தில் நிறுவவேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார்.

நூலை வெளியிட்டு வைத்துப் பேசிய பேராசிரியர் முனைவர் யோசேப் சந்திரகாந்தன் பேசும்போது “மகாவம்சம் ஒரு வரலாற்று நூலாக் கொள்ளப்படா விட்டாலும் வரலாற்றின் வெற்றிடங்களை நிரப்புகிற நூலாகக் கொள்ளலாம். ஒரு வழக்கறிஞர் ஆக இருந்தும் இப்படியான ஆய்வு நூலை ஒரு வரலாற்று ஆசிரியருக்கு இருக்க வேண்டிய நடுநிலமையோடு வரலாற்று உணர்வோடு அதன் கற்பனைகளையும் அதன் உண்மைகளையும் பகுத்து ஆராய்ந்து இருக்கிறார். அதனை நாம் பாராட்ட வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.

நூலின் முதல் படியை திரு கரி ஆனந்தசங்கரி சட்டத்தரணி (ஸ்காபரோ ரூச் பார்க் தொகுதி லிபரல் கட்சி வேட்பாளர்) பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து அவையோர் நூல்களைப் பெற்றுக் கொண்டனர்.

ஆசிரியர் சி. துரைராசா நூல்வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய அறிஞர்களுக்கும் பொதுமக்களுக்கும் நன்றி தெரிவித்தார். குறிப்பாக நிகழ்ச்சிக்கு நல்லாதரவு வழங்கிய TVI தொலைக் காட்சி, தமிழ் வண் தொலைக்காட்சி, கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், அனைத்துலக தமிழ் வானொலி, ஈழநாடு, தமிழ் மிறர், ஈகுருவி, தமிழ்சிஎன்என், செய்தி, தமிழ் 24 செய்தி சேவை முதலிய ஊடகங்களுக்கும் கழகம் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சி முடிவில் எல்லோருக்கும் பாபு உணவகம் வழங்கிய சிற்றுண்டி வழங்கப்பட்டன.

நக்கீரன்-

Balasubramanian

Balasubramanian2jpg

Chandran

" "

Crowd

" "

Iyar

Kanagspic

Kavuslaya

" "

Sekina

Sivaneyachchelvan

Thangabook

" "

" "

" "

About editor 2996 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply