2018ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் வட – கிழக்கு அபிவிருத்தியை மனதில் வைத்து வரையப்பட்டுள்ளது!

2018ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் வட – கிழக்கு அபிவிருத்தியை மனதில் வைத்து வரையப்பட்டுள்ளது!

நடராசா – லோகதயாளன்

2018ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இரண்டாம் வாசிப்பும் நிறைவுற்று விவாதங்களின் பின்னர் சில திருத்தங்களுடன் 2018-11-16 அன்று  நிறைவேற்றப்பட்டுள்ளன. இதில் இம்முறை வடக்குக்கான அபிவிருத்தியாக,

1. முக்கோண பொருளாதார வலயத்திற்காக   நவீன​ பொருளாதார மையமொன்று, யாழ்ப்பாணத்தில் நிறுவ  100 மில்லியன் ரூபா  ஒதுக்கப்பட்டுள்ளது

2. மடு, கோணேஸ்வரம், முன்னேஸ்வரம் மற்றும் நல்லூர் ஆகிய இடங்களில் யாத்திரிகர்கள் தங்குமிடங்களை நிறுவுவதற்கு 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

3.  நெடுந்தீவு மற்றும் கிளிநொச்சியில் இரண்டு உணவு பதனிடும் நிலையங்களிற்கு   40 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

4.  மயிலிட்டித் துறைமுகமானது மீன்பிடித் துறைமுகமாக அபிவிருத்தி செய்து  மீனவர்கள் தமது மீன் உற்பத்திகளை களஞ்சியப்படுத்துவதற்கும் வசதியளிக்கும் வகையில் குளிர் அறைகள் மற்றும் களஞ்சியங்கள் அரசினால் நிறுவப்படும். இதற்கு 150 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது

5.  அச்சுவேலி கைத்தொழில் வலயத்தில்   தொழில் முயற்சிகளை ஆரம்பிக்கும் நிறுவனங்களின் மாதாந்த மின்சாரக் கட்டணத்தில் 50 சதவீதத்தை 2 வருடங்களுக்கு அரசு பொறுப்பேற்பு

6.  கிளிநொச்சி  மாவட்டத்தில் விவசாய விளைபொருள்களை சேமித்து வைக்கக் கூடிய வகையில்  பண்டகசாலைகளின் நிர்மாண வேலைகள் பூர்த்தி செய்வதற்கு 250 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது

7.  காரைநகர்  மீன்பிடித் துறைமுகத்தை மேம்படுத்த முதலீடு செய்யும் அதேவேளை, மீன்பிடித் துறைமுகங்களில் இறங்கு துறைகள் மற்றும் நங்கூரமிடும் தளங்களை விருத்தி  செய்வதற்கு  650 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது

8.  கிளிநொச்சி மாவட்டத்தில், பூநகரிப் பிரதேசத்தில் முழுமையான பின்தள இருப்பு வலையம் அமைக்கப்படவுள்ளது

9. தனியார் துறையினதும் மற்றும் தொல்பொருளியல் திணைக்களத்தினதும் ஆதரவுடன் சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தினால் மட்டக்களப்பு, திருகோணமலை பிரெட்றிக் கோட்டை, மன்னார் கோட்டை ஃ அல்லி இராணிக் கோட்டை மற்றும் கற்பிட்டி கோட்டை உள்ளடங்கலாக 6 கோட்டைகள் அபிவிருத்தி செய்வதற்கு 250 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது

10. யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் வவுனியா வளாகமானது சகல வசதிகளையும் கொண்ட நூலகம் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிலையம் என்பவற்றினை அமைப்பதன் மூலம் மேலும் வலுப்படுத்தப்படும். இதற்காக 200 மில்லியனும்

11.  நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் பெரும்பாலும் காணப்படுகின்ற சிறுநீரக நோய் அதிகரிப்பினை கவனத்திற் கொண்டு பொலனறுவை, அநுராதபுரம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகங்களில் அதி நவீன இயந்திரங்கள் மூன்றுடன் சிறப்பு சிறுநீரகத் தொகுதிகளும் தாபிக்கப்படவுள்ளது.  இதற்கு 450 மில்லியனும்.

12. கிளிநொச்சி நீதிமன்றக் கட்டிடத் தொகுதி இடம் மாற்றம் செய்யப்பட்டு விரிவாக்கம் செய்யப்படுவதனூடாக இந்த நீதிமன்றங்களில் காணப்படும் நெரிசல் மற்றும் வசதிக் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படும். இதற்கு 100 மில்லியன் ரூபாவும்

13. நல்லிணக்கத்தினை முதன்மைப்படுத்திய வாழ்வாதார அபிவிருத்தி, பொருளாதார வலுவூட்டல் மற்றும் சமூக உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு அரசு ஆதரவளிக்கும். இது வடக்கிலுள்ள மாற்றுத் திறனாளி பெண்களுக்கான சிறப்பு நிலையம் நிர்மாணிக்கப்படுவதையும் உள்ளடக்கியதாகும். இதற்காக 2 ஆயிரத்து 750 மில்லியன் ரூபாவும்

14.  மன்னார் நகரசபைக்கு உட்பட்ட பகுதிகள் மறுசீரமைப்பு மற்றும் மீள்குடியேற்றத்துக்கு 250 மில்லியன் ரூபாவும்

15.  மன்னார் தாழ்வுப்பாட்டில் கலாசார மண்டபம் அமைக்க 25 மில்லியன் ரூபாவும்  ஒதுக்கப்பட்டுள்ளது. இத்துடன் மேலும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராசா முன்மொழிந்த 22 திட்டங்களும் இணைக்கப்பட்டுள்ளதான நிலையில் குறித்த வரவு செலவுத் திட்டம் தொடர்பில் பொது அபைப்புக்கள் சிலவற்றின் பிரதிநிதிகளிடம் கருத்து கேட்டபோது,

இதில் கிளிநொச்சி மாவட்ட இரணைமடு விவசாயிகள் சம்மேளனச் செயலாளர்  மு.சிவமோகன் இது தொடர்பில் தெரிவிக்கையில்,

“வடக்கின் நலன்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் தேவைகளை முன்னிலைப்படுத்தி வரையப்பட்டுள்ளது. இதேபோன்று நீண்ட காலக் கோரிக்கைகளான காணாமல் போனோர் விடயம் , முன்னாள் போராளிகளிற்கான வேலை வாய்ப்புச் சலுகை என்பனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக விவசாயிகளிற்கு எமது மாவட்டத்தின் நீண்ட காலக் கோரிக்கையான பாரிய நெற்களஞ்சியம் ஒன்றிற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதாவது நேரடி நன்மைகள் என இல்லாது விடினும் இவ்வாறான நீண்டகால அடிப்படையிலான வரவு செலவுத் திட்டம் வந்தமை நிம்மதி அளிப்பதனால்   இதனை வரவேற்கலாம்” எனத் தெரிவித்தார்.


 

மன்னார் மாவட்ட மீனவர் சமாசத் தலைவர்
சூசை மரியதாஸ்குரிஸ் 2018ம் ஆண்டிற்கான பாதீட்டு முன்மொழிவு தொட்பில் தெரிவிக்கையில் ,

நீண்ட காலத்தின் பின்பு வடக்கையும் கவனத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள ஒரு வரவு செலவுத்திட்டமாக அமைகின்றதெ. அத்துடன் எமது மாவட்டம் தொடர்பிலும் சமூகம் சார்ந்தும் சற்றுக் கவனம் செலுத்தியிருப்பதும் ஆறுதல் அளிக்கின்றது.

இதேநேரம் ஆழ் கடலில் தொழில் புரியும் பண்னாட்டு உபகரணங்களின் கொள்வனவிற்கு 50 வீத மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மாணியம் இதுவரையில் வடக்கு மீனவர்களிற்கு வழங்கியதே கிடையாது. எனவே அந்த மானியம் எமது மாகாண மீனவர்களிற்கும் கிடைக்க ஆவண செய்ய வேண்டும். இவ்வாறு பொது நல நோக்கில் பார்க்கையில் 2018ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தினை வரவேற்க முடியும். என்றார்.

About editor 2996 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply