பவுத்தமும் தமிழரும் (2)

15. பெருந்தேவனார்

‘பெருந்தேவனார்’ என்னும் பெயருடைய தமிழாசிரியர் சிலர் பண்டைக் காலத்தில் இருந்திருக்கின்றனர். கடைச்சங்க காலத்தில் இருந்த பாரதம் பாடிய பெருந்தேவனார் என்பவரும், பிற்காலத்திலிருந்த பாரத வெண்பாப் பாடிய பெருந்தேவனாரும் இவரின் வேறானவர்கள். இந்தப் பெருந்தேவனார் பௌத்தர்; புத்தமித்திரனாரின் மாணவர் புத்தமித்திரனார் இயற்றிய வீரசோழியம் என்னும் இலக்கண நூலின் உரையாசிரியர். இதனை,

‘ தடமார் தருபொழிற் பொன்பற்றி காவலன் தான்மொழிந்த
படிவீர சோழியக் காரிகை நூற்றெண் பஃதொடொன்றின்
திடமார் பொழிப்புரை யைப்பெருந் தேவன் செகம்பழிச்சக்
கடனாக வேநவின் றான்றமிழ் காதலிற் கற்பவர்க்கே ’

என்னும் வீரசோழிய உரைப்பாயிரச் செய்யுளால் அறியலாம். வீரசோழிய நூலின் சிறப்பை அதிகப்படுத்துவது இவரது உரையே என்று கூறுவது மிகையாகாது. இவர் எழுதிய உரை தமிழாராய்ச்சியாளருக்கும், தமிழ் நாட்டுச் சரித்திர ஆராய்ச்சியாளருக்கும் மிக்க உதவியாக இருக்கின்றது.

இந்த நூலில் சேர்க்கப்பட்டுள்ள புத்தரைப் போற்றும் செய்யுள்களில் பெரும்பான்மையும் இவர் உரையில் மேற்கோள் காட்டப்பட்ட செய்யுள்களே, (தொடர்புரை 1 காண்க)

இவர் தமது உரையில் நியாய சூடாமணி, புதியாநுட்பம், வச்சத் தொள்ளாயிரம், உதயணன் கதை, கலிவிருத்தம், எலி விருத்தம், நரிவிருத்தம் என்னும் நூல்களைக் குறிப்பிட்டிருக்கின்றார். அன்றியும், குண்டலகேசி, பாரதவெண்பா, யாப்பருங்கலம் முதலிய நூல்களினின்றும் செய்யுள்களை மேற்கோள்களாக எடுத்தாண்டிருக்கின்றார்.

இவரது வரலாறு வேறொன்றும் தெரியவில்லை. இவரது காலம் புத்தமித்திரனாரும் வீரராசேந்திர சோழனும் வாழ்ந்திருந்த கி. பி. பதினொன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியாகும்.

16. தீபாங்கர தேரர்

இவர் சோழ நாட்டினைச் சேர்ந்தவர். ஆனதுபற்றிச் ‘சோளிய தீபாங்கரர்’ என்று இவர் வழங்கப்படுகின்றார். புத்தப் பிரிய தேரர் என்றும் வேறொரு பெயர் இவருக்கு உண்டு. இவர் இலங்கைக்குச் சென்று, ஆங்கு ஆனந்த வனரதனர் என்னும் தேரரிடம்சமயக்கல்வி பயின்றார். பின்னர், காஞ்சீபுரத்திலிருந்த பாலாதிச்ச விகாரை என்னும் பௌத்தப் பள்ளியின் தலைவராக இருந்தார். பாளி மொழியை நன்கு பயின்றவர். அந்த மொழியில் பஜ்ஜமது என்னும் நூலை இயற்றியிருக்கின்றார். புத்தரது உருவ அழகினையும், அவர் உபதேசித்த பௌத்தக் கொள்கை, அவர் அமைத்த பௌத்த சங்கம். இவற்றின் செவ்விகளையும் இந்நூலில் வியந்து கூறியிருக்கின்றார். இந்நூல் நூற்று நான்கு செய்யுள்களைக் கொண்டது. இவர் இயற்றிய இன்னொரு நூல் ரூப சித்தி என்பது. ‘பாட ரூப சித்தி’ என்றும் இதற்குப் பெயர் உண்டு. இது பாளி மொழி இலக்கண நூல், இதற்கு ஒரு உரையும் உண்டு. இந்த உரையினையும் இவரே இயற்றினார் என்று கூறுவர். இவர் இயற்றிய ‘பஜ்ஜமது’ என்னும் நூல் கி. பி. 1100-இல் இயற்றப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகின்றபடியால், இவர் பன்னிரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தவராவர்.

17. அநுருத்தர்

‘அநிருத்தர்’ என்றும் இவருக்குப் பெயர் உண்டு. இவர் காஞ்சீபுரத்தில் மூலசோம விகாரை என்னும் பௌத்தப் பள்ளிக்குத் தலைவராக இருந்தவர். இவர் பாண்டிய தேசத்தவர் என்று தெரிகின்றது. ‘அபிதம்மாத்த சங்கிரகம்’, ‘பரமார்த்த வினிச்சயம்’, ‘நாமரூபப் பரிச்சேதம்’ என்னும் நூல்களை இவர் இயற்றியிருக்கின்றார். ‘அபிதம் மாத்த சங்கிரகம்’ இலங்கையிலும், பர்மாதேசத்திலும் உள்ள பௌத்தர்களால் நெடுங்காலமாகப் போற்றிக் கற்கப் பட்டுவருகின்றது.

இவர் கி. பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்நிதிருந்தவர். ஆசிரியர் அநிருத்தர் என்பவர் ஒருவர் பெரும் பிடுகு முத்தரையன் என்னும் சிற்றரசனைப் பாடிய கட்டளைக் கலித்துறையொன்று, திரிச்சிராப்பள்ளியை அடுத்த ‘செந்தலை’ என்னும் ஊரில் உள்ள சிவன் கோயில் சாசனத்தில் சிதைந்து காணப்படுகின்றதைச் ‘சாசனப் புலவர்’ என்னும் நூலில் வித்வான் ராவ்சாகிப் மு. இராகவ அய்யங்கார் அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றார்கள். அவர்கள் காட்டிய செய்யுள் இது,

‘ . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
போலரசு பிறவா பிறநெடு மேரு நெற்றிப்
பொன்போல் பசுங்கதி ராயிரம் [வீசும்] பொற்றேர்ப்பருதிக்
கென்போ தரவிடுமோவினைச்சோதி யிருவிசும்பே. ’

இச்செய்யுளைப் பாடிய அநிருத்தரும் மேற்படி நூல்களை இயற்றிய அநுருத்தரும் ஒருவர்தாமோ என்பது தெரியவில்லை.

18. புத்தமித்திரர், மகாகாசிபர். (சோழ தேரர்கள்.)

இவ்விருவரையும் சோழ தேரர்கள் என்று இலங்கை நூல்கள் கூறுகின்றன. சோழநாட்டவராகிய இவர்கள் இலங்கைக்குச் சென்று ஆங்கு வாழ்ந்துவந்தனர் போலும். இவர்கள் வேண்டுகோளின்படி ‘உத்தோதயம்’, ‘நாமரூபப் பரிச்சேதம்’ என்னும் நூல்கள் இயற்றப்பட்டன. நாமரூபப் பரிச்சேதம் இயற்றிய அநிருத்தர் பன்னிரண்டாம் நூற்றாண்டில் இருந்தவர்; ஆதலால், இவர்களும் அக்காலத்தவராவர். இவர்களைப்பற்றிய வேறு வரலாறுகள் தெரியவில்லை. இந்தப் புத்தமித்திரர், வீரசோழியம் இயற்றிய புத்தமித்திரரின் வேறானவர்.

19. ஆனந்த தேரர். (? – 1245.)

இவர் காஞ்சீபுரத்தில் இருந்தவர். பௌத்த மத நூல்களை நன்கு கற்றுத் தேர்ந்தவர். பர்மா தேசத்தவரான சத்தம்ம ஜோதி பாலர் என்னும் சிறப்புப் பெயரைக்கொண்ட சாபதர் என்பவர் இவரைப் பர்மா தேசத்திலிருந்த அரிமர்த்தனபுரத்துக்கு அழைத்துச் சென்றார் என்று ‘சாசனவம்சம்’ என்னும் நூல் கூறுகின்றது. பர்மா தேசத்தை அரசாண்ட நரபதி ஜயசூரன் என்னும் அரசன் இவருக்கு யானை ஒன்றைப் பரிசாக அளித்தான் என்றும், அந்த யானையை இவர் காஞ்சீபுரத்திலிருந்த தமது உறவினருக்கு அனுப்பினார் என்றும் கல்யாணி நகரத்துக் கல்வெட்டுச் சாசனம் கூறுகின்றது. இவர் தமக்குக் கிடைத்த யானையைத் தமது உறவினருக்கு அளித்தார் என்று கூறுகிறபடியால், யானையைக் காப்பாற்றக்கூடிய பெருஞ்செல்வத்தையுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று தோன்றுகின்றது. இவர் ஐம்பது ஆண்டு பர்மா தேசத்தில் பௌத்தமத குருவாக இருந்து, பின்னர் கி. பி. 1245-இல் காலமானார் என்று கல்வெட்டுச் சாசனம் கூறுகின்றது. இவரது வரலாறு வேறொன்றும் தெரியவில்லை.

20. தம்மகீர்த்தி

இவர் ‘தம்பராட்டா’ என்னும் பாண்டிய மண்டலத்தைச் சேர்ந்தவர். (தாமிரவர்ணி பாயும் பாண்டிய நாட்டினைத் தம்பராட்டா என்று பௌத்த நூல்கள் கூறுகின்றன.) கல்வி அறிவு ஒழுக்கங்களினால் சிறந்தவர். இவரது மேன்மையைக் கேள்வியுற்று, பராக்கிரமபாகு (இரண்டாவன்) என்னும் இலங்கை மன்னன் இவரைத் தன்னிடம் வணக்கமாக வரவழைத்துக்கொண்டான். அன்றியும், சோழநாட்டிலிருந்த பௌத்த பிக்குகளையும் இவன் இலங்கைக்கு வரவழைத்து, ஒரு பெரிய பௌத்த மகாநாடு நடத்தினான். இந்த அரசன் மற்றப் பிக்ஷ¨க்களைவிடத் தம்மகீர்த்தியிடத்தில் தனிப்பட்ட அன்பும் மரியாதையும் கொண்டிருந்தான். தாட்டா வம்சம் என்னும் நூலினை இவர் பாலி மொழியில் இயற்றியதாகச் சிலர் கூறுகின்றனர். இலங்கையின் வரலாற்றினைக் கூறும் மகாவம்சம் என்னும் நூலின் பிற்பகுதியாகிய சூலவம்சம் என்னும் நூல் (மகாசேனன் என்னும் அரசன் காலமுதல் பராக்கிரமபாகு இரண்டாவன் காலம் வரையில்) இவர் இயற்றியதாகக் கருதப்படுகின்றது. இவரை ஆதரித்த பராக்கிரமபாகு இரண்டாவன் இலங்கையை கி. பி. 1236 முதல்- 68 வரையில் அரசாண்டவன். ஆகையால், இவரது காலம் பதின்மூன்றாம் நூற்றாண்டாகும்.

21. கவிராசராசர்

இவர் ஒரு பௌத்தப் புலவர். இவர் தமிழ்க்கவி இயற்றுவதில் தேர்ந்தவர் என இவரது பெயரினால் அறியப்படும். இவரது காலம் தெரியவில்லை. ஆயினும், பதினொன்றாம், அல்லது பன்னிரண்டாம் நூற்றாண்டிலிருந்தவராகக் கருதலாம். இவர் இயற்றிய நூலின் பெயர் தெரியவில்லை. ‘வன்பசிக் கடும்புலிக்குடம்பளித் துடம்பின்மேல் வாளெறிந்த வாயினூடு பால்சுரந்து’ என்னும் செய்யுளடியை மேற்கோள் காட்டி, ‘இது கவி ராசராசன் வாக்கு’ என்று தக்கயாகப் பரணி உரையாசிரியர் கூறியிருப்பதிலிருந்து, இப்பெயரையுடைய புலவர் ஒருவர் இருந்தாரென்பது தெரிகின்றது. (377 -ஆம் தாழிசை உரை காண்க.)

22. காசப்பதேரர்

இவர் ‘மோகவிச்சேதனீ’, ‘விமதிவினோதனீ’, ‘விமதிவிச் சேதனீ’, ‘அநாகத வம்சம்’ என்னும் நூல்களைப் பாளி மொழியில் இயற்றியிருக்கிறார். இந்நூல்களை இயற்றிய காசப்பர் சோழநாட்டவர் என்றும், டமிள (தமிழ) தேசத்தவர் என்றும் ‘கந்த வம்சம்’, ‘சாசன வம்சதீபம்’ என்னும் நூல்கள் கூறுகின்றன. ஆகவே, இவர் சோழநாட்டைச் சேர்ந்த தமிழர் என்பது தெரிகின்றது. இவர் இயற்றிய ‘அநாகத வம்சம்’ என்பது இனி வரப்போகிற மைத்ரேய புத்தரின் வரலாற்றினைக் கூறுவது. இவரைப்பற்றிய வரலாறு வேறொன்றும் தெரியவில்லை. காலமும் தெரியவில்லை.

23. சாரிபுத்தர்

இவர் சோழநாட்டினைச் சேர்ந்தவர் என்பதும், ‘பாடா வதாரம்’ என்னும் பாளிமொழி நூலை இயற்றியவர் என்பதும் ‘கந்த வம்சம்’ (கிரந்த வம்சம்), ‘சாசன வம்சம்’ என்னும் நூல்களினால் தெரிகின்றன. இவரது காலம், வரலாறு முதலியவை ஒன்றும் தெரியவில்லை.

திருஞானசம்பந்த சுவாமிகள் காலத்தில் சோழநாட்டில் சாரிபுத்தர் என்னும் ஒரு தேரர் போதிமங்கை என்னும் ஊரில் இருந்தார் என்றும், அவருடன் ஞானசம்பந்தர் சமயவாதம் செய்தார் என்றும் பெரிய புராணம் கூறுகின்றது. பெரிய புராணம் கூறுகின்ற சாரிபுத்தரும், கந்தவம்சம் கூறுகின்ற சாரிபுத்தரும் ஒருவர்தாமோ, அன்றி வெவ்வேறு காலத்திலிருந்த வெவ்வேறு சாரிபுத்தர்களோ தெரியவில்லை.

24. புத்தாதித்தியர்.

இவர் காஞ்சீபுரத்தைச் சேர்ந்த பௌத்த பிக்கு. இவர் சாவகத்தீவின் (ஜாவா) அரசன் ஒருவனைப் புகழ்ந்து சில பாடல்கள் இயற்றியிருக்கின்றார். இவரது காலம், வரலாறு ஒன்றும் தெரியவில்லை.

தமிழ் நாட்டிலே இன்னும் எத்தனையோ தேரர்கள் பல நூல்களை இயற்றியிருக்கிறார்கள். புத்தசிகா, ஜோதி பாலர், இராகுல தேரர், பூர்வாசாரியர் இருவர், (இவர்கள் பெயர் தெரியவில்லை) மகா வஜ்ஜிரபுத்தி, சுல்ல வஜ்ஜிரபுத்தி, சுல்ல தம்ம பாலர், முதலியவர்களைப்பற்றிய வரலாறுகள் ஒன்றும் தெரியவில்லை. இவர்களன்றி, வேறு இருபது பௌத்த ஆசிரியர்களும் காஞ்சீபுரத்தில் நூல்கள் இயற்றியதாகக் ‘கந்த வம்சம்’ (கிரந்த வம்சம்) என்னும் நூல் கூறுகின்றது. இவர்களது வரலாறும் தெரியவில்லை.
_____________________________________________________________________

* இப்பொழுது சோழநாட்டில் ஒரு தஞ்சை இருப்பது போலவே, பாண்டிய நாட்டிலும் ஒரு தஞ்சை இருந்ததாகத் தெரிகின்றது. இந்தப் பாண்டிய நாட்டுத் தஞ்சையை ஒரு காலத்தில் அரசாண்ட வாணன் என்னும் சிற்றரசன்மேல் பாடப்பட்டதே தஞ்சைவாணன் கோவை என்னும் சிறந்த தமிழ் நூல்.

துயர் மிகு தருணத்தில் நம்பிக்கையோடு இருப்பது என்பது பைத்தியக்காரத்தனமான ஒரு எதிர்பார்ப்பு அல்ல,மாறாக மனித வரலாறு என்பது கொடுமைகளால் மட்டுமே நிறைந்த ஒன்று அல்ல,அது தியாகம்,வீரம்,கருணை, நேயம் என்பனவற்றாலும் நிறைந்த ஒன்று என்னும் உண்மையில் இருந்து வருவது.
Howard Zinn (1922- 2010)
எட்டாம் அதிகாரம்.

பௌத்தர் இயற்றிய தமிழ் நூல்கள்

முன்னொரு காலத்தில் தமிழ்நாட்டிலே பௌத்தமதம் செல்வாக்குற்றுச் சிறந்திருந்ததென்பதை அறிந்தோம். அந்த மதக்கொள்கைகளை நன்கறிந்த பௌத்த ஆசிரியர் பற்பலர் ஆங்காங்கே தமிழ் நாட்டில் இருந்ததையும் கண்டோம். அந்தப் பௌத்த ஆசிரியர் பாளிமொழியில் பல நூல்களை இயற்றிவைத்தனர் என்பதையும் அறிந்தோம். ஈண்டு, பௌத்த ஆசிரியர் தமிழ்மொழியில் என்னென்ன நூல் இயற்றியுள்ளார் என்பதை ஆராய்வோம்.

இப்போது தமிழில் உள்ள பௌத்த நூல்கள் மிகச்சில. இலக்கியத்தில் ஒன்றும் இலக்கணத்தில் ஒன்றும் ஆக இரண்டு நூல்களே இப்போது முழுநூலாக எஞ்சி நிற்கின்றன. ஏனைய நாலைந்து நூல்களின் பெயர்மட்டும் வழங்கப்படுகின்றனவேயன்றி நூல் முழுவதும் கிடைக்கப் பெற்றிலம்.

ஜைனரும், பௌத்தரும் தத்தம் மதக்கொள்கைகளை அந்தந்த நாட்டுத் தாய்மொழி வாயிலாகப் பரவச் செய்தனர் என்று ‘பௌத்தரும் தமிழும்’ என்னும் அதிகாரத்தில் கூறினோம். அங்ஙனமாயின், தமிழ் மொழியிலும் அவர்கள் பல நூல்களை இயற்றியிருக்கவேண்டுமன்றோ? ஆம். பல நூல்களை இயற்றிவைத்தனர் என்பதில் யாதொரு ஐயமுமில்லை. கி. பி. நான்காம் நூற்றாண்டில் உரகபுரம் (உறையூர்), பூம்புகார், பூதமங்கலம் முதலான இடங்களில் தங்கிப் பௌத்தமத ஊழியம் புரிந்துவந்த பேர்பெற்ற புத்ததத்தர் என்னும் தமிழப் பௌத்தர், பாளிமொழியில் பாளிமொழி நூல்களுக்குப் பல உரைகள் எழுதியிருப்பதில், தென்னாட்டில் வழங்கிய பல பௌத்தக் கொள்கைகளை எடுத்துக் கூறியிருக்கிறார் என்றும், அவற்றை அக்காலத்திருந்த தமிழ்ப் பௌத்த நூல்களினின்றும் எடுத்திருக்கக்கூடும் என்றும் ரைஸ் டேவிட் என்னும் மேல்நாட்டு ஆராய்ச்சியாளர் கூறுகின்றார். நீலகேசி உரையிலும், வீரசோழிய உரையிலும் பௌத்தமதச் செய்யுள்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன, அவற்றில் சில பாடல்கள் எந்த நூலினின்று எடுக்கப்பட்டன என்பது அறியக்கூடாமல் இருக்கின்றது. எனவே, பண்டைக் காலத்தில், பௌத்தமதம் தமிழ் நாட்டில் வழங்கிவந்தபோது, பௌத்தரால் இயற்றப்பட்ட பல தமிழ் நூல்கள் இருந்தன என்பதில் ஐயமில்லை.

அங்ஙனமாயின், அந்த நூல்கள் இப்போது எங்கே? இவ்வினாவிற்கு விடைபெறுவது கடினமன்று. பௌத்த மதத்துக்குப் பெரும் பகைஞராக இருந்தவர் ஜைனரும் வைதீகரும் என்பதனை மூன்றாம் அதிகாரத்தில் அறிந்தோம். பௌத்த மதத்தின் பிறவிப் பகைஞராகிய இவர்களால் பௌத்த நூல்கள் அழியுண்டனபோலும். பௌத்த மத வீழ்ச்சிக்குப் பிறகு நடைபெற்ற சமயப்போரில், வைதீக மதம் ஜைன மதத்தை அழித்துவிட்டபோதிலும், சில ஜைனர் ஆங்காங்கே தமிழ்நாட்டில் அருகிக் காணப்படுகின்றனர். இவ்வாறு எஞ்சி நின்ற ஜைனரால் ஜைனமத நூல்கள் சில இறந்துபடாமல் பாதுகாக்கப்பட்டுள்ளன. ஆனால், பௌத்த மதம் ஜைன மதத்தைவிடக் கடுமையான வீழ்ச்சியை அடைந்துவிட்டது. பௌத்தத் தமிழ் நூல்களைப் போற்றிப் பாதுக்காக்கத் தமிழப் பௌத்தர் இருந்ததாகத் தெரியவில்லை. இந்த நிலையில் தமிழ்ப் பௌத்த நூல்கள் எவ்வாறு உயிர்பெற்றிருக்கும்? அவையாவும் ‘கொலை’ செய்யப்பட்டன. இப்போது எஞ்சி நிற்கும் இரண்டொரு பௌத்த நூல்கள் எவ்வாறு தப்பிப் பிழைத்திருக்கின்றன என்பதே எமக்குப் பெருவியப்பாக இருக்கின்றது. தமிழ் நாட்டுப் பௌத்த ஆசிரியர் இயற்றிய பாளிமொழி நூல்கள் மட்டும் எவ்வாறு இன்றும் நின்று நிலவுகின்றன என்றால், அவை இலங்கை, பர்மா முதலான தேசத்துப் பௌத்தர்களால் போற்றிப் பாதுகாக்கப்படுகின்றன. தமிழ்ப் பௌத்த நூல்களைப் போற்றுவதற்குத் தமிழப் பௌத்தர் இல்லாத படியால், அவை இறந்துபட்டன.

பௌத்த நூல்களை இழந்துவிட்டோம். அஃதாவது, தமிழ் இலக்கியச் செல்வத்தின் ஒரு பகுதியைத் தமிழ்நாடு இழந்துவிட்டது. ஒரு நாடு தனது பொருட் செல்வத்தை இழந்து வறுமைப்படுவதைவிட இலக்கியச் செல்வத்தை இழந்துவிடுவது பெரிதும் வருந்தத்தக்கது. என்செய்வது? சென்றது சென்றுவிட்டது. இனி, தமிழில் இப்போது எஞ்சியுள்ள பௌத்த நூல்களைப்பற்றி ஆராய்வோம்.

மணிமேகலை

தமிழில் உள்ள ஐம்பெருங்காப்பியங்கள் பௌத்தர் ஜைனர் என்னும் இரு சமயத்தாரால் இயற்றப்பட்டவை. சிந்தாமணி, சிலப்பதிகாரம் இரண்டும் ஜைனரால் இயற்றப் பட்டன. மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி என்பன பௌத்தர்களால் இயற்றப்பட்டவை. இந்த மூன்றில் மணிமேகலையைத் தவிர மற்ற இரண்டும் இறந்துவிட்டன. மணிமேகலை ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றென்று கூறப்படுகின்றபோதிலும், இது சிலப்பதிகாரத்துடன் தொடர்புடையது. இதனை,

‘மணிமே கலைமே லுரைப்பொருண் முற்றிய
சிலப்பதிகார முற்றும் ’

என்னும் சிலப்பதிகார வஞ்சிக்காண்டக் கட்டுரைச் செய்யுட் பகுதியினால் அறியலாம். எனவே, சிலப்பதிகாரத்தையும் மணிமேகலையையும் ஒரே காப்பியம் என்று கூறினும் பொருந்தும். ஆயினும், ஆன்றோர் இவையிரண்டனையும் வெவ்வேறு காப்பியங்களாகவே கொண்டனர்.

மணிமேகலையை இயற்றியவர் மதுரைக் கூலவாணிகர் சீத்தலைச் சாத்தனார். (இவரது வரலாற்றினை ஏழாம் அதிகாரத்தில் காண்க.) இந்நூல் முழுவதும் ஆசிரியப்பாவினால் அமைந்தது. ‘கதை பொதி பாட்டு’ என்னும் பதிகத்தைத் தவிர்த்து, ‘விழாவறை காதை’ முதலாகப் ‘பவத்திற மறுகெனப் பாவை நோற்ற காதை’ இறுதியாக முப்பது காதைகளையுடையது. இதற்கு மணிமேகலை துறவு என்றும் பெயர் உண்டு. இதனை இயற்றிய சாத்தனார், இளங்கோவேந்தர் என்னும் இளங்கோ அடிகள் முன்னிலையில் இதனை அரங்கேற்றினார். இவற்றை,

‘இளங்கோ வேந்த னருளிக் கேட்ப
வளங்கெழு கூல வாணிகன் சாத்தன்
மாவண் டமிழ்த்திற மணிமே கலைதுற
வாறைம் பாட்டினு ளறியவைத் தன்னென் ’

எனவரும் பதிக ஈற்றடிகளால் அறியலாம்.

மணிமேகலை பல திறத்தானும் சிறப்புடைய நூல், சொல் வளமும் பொருள் ஆழமும் செறிந்து திகழும் இந்நூல் வெறும் இலக்கியமட்டும் அன்று. பண்டைத்தமிழ் நாட்டின் வரலாற்றினையும், கலைகளையும், நாகரிகத்தினையும், அக்காலத்திலிருந்த சமயங்கள் அவற்றின் கொள்கைகள் முதலியவற்றையும், அக்கால வழக்க ஒழுக்கங்களையும் ஆராய்வதற்கு இது பெரிதும் பயன்படுகின்றது. இந்த மணிமேகலை நூல் தமிழ்த்தாய்க்கு அணி செய்யும் மணிமேகலையாகவே இலங்குகின்றது. இந்த நூல் இயற்றப்பட்ட காலம் கி. பி. இரண்டாம் நூற்றாண்டு. (தொடர்புரை 6 காண்க.)

சுவை மலிந்த இச்செந்தமிழ் நூலை முதன் முதல் அச்சிற் பதிப்பித்தவர் மகாவித்துவான் திருமயிலை சண்முகம் பிள்ளையவர்களாவர். 1894 – ஆம் ஆண்டுக்கு நேரான ‘விஜய தனுர் ரவி’யில் இப்புத்தகம் மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலையில் பதிக்கப்பட்டு, 12 -அணாவுக்கு விற்கப்பட்டது. மகாவித்துவான் சண்முகம் பிள்ளையவர்கள் தம்மிடமிருந்த ஏட்டுச்சுவடியைமட்டும் ஆராய்ந்து வெளியிட்ட நூலாதலின், இதில் சிற்சில பிழைகள் ஆங்காங்கே காணப்படுகின்றன. பிள்ளையவர்கள் பதிப்பு வெளிவந்த நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர், டாக்டர் சாமிநாத ஐயரவர்கள் பல பிரதிகளை ஆராய்ந்து 1898 -ஆம் ஆண்டில் அரும்பத உரையுடன் இந்நூலை அச்சிற் பதிப்பித்தார்கள். ஐயரவர்களுக்கு உதவியாயிருந்த பல ஏட்டுப் பிரதிகளுள் மகா வித்துவான் சண்முகம் பிள்ளையவர்கள் உதவிய பிரதியும் ஒன்றாகும். பிள்ளையவர்கள் பதிப்பித்த மணிமேகலைப் புத்தகத்தையும் ஐயரவர்கள் பார்த்திருக்கக் கூடும். ஆனால், எக்காரணத்தினாலோ, ஐயரவர்கள் பிள்ளையவர்கள் பதிப்பித்த மணிமேகலையைப்பற்றிக் குறிப்பிடாமலேயேயிருந்துவிட்டார்கள். பிள்ளையவர்களின் பதிப்பில் காணப்பட்ட பிழைகள் பலவும் ஐயரவர்களின் பதிப்பில் திருத்தப்பெற்றன. எஞ்சி நின்ற ஒரு சில பிழைகளும் இரண்டாவது, மூன்றாவது பதிப்புகளில் திருத்தப்பெற்றன. இந்த அருமையான சிறந்த செந்தமிழ் நூல் இறந்துபடாமல் உய்வித்தருளிய இரண்டு பெரியாருக்கும் தமிழ் நாட்டின் நன்றி என்றும் உரியதாகுக.

இந்நூல் நடையினை அறியக் கீழே சில பகுதிகளை எடுத்துக்காட்டுவோம். புகார்ப்பட்டினத்தின் உவவனம் என்னும் பூஞ்சோலையைக் கூறும் பகுதி இது –

‘ குரவமு மரவமுங் குருந்துங் கொன்றையுந்
திலகமும் வகுளமுஞ் செங்கால் வெட்சியும்
நரந்தமு நாகமும் பரந்தலர் புன்னையும்
பிடவமுந் தளவமு முடமுட் டாழையுங்
குடசமும் வெதிரமுங் கொழுங்கா லசோகமுஞ்
செருந்தியும் வேங்கையும் பெருஞ்சண் பகமும்
எரிமல ரிலவமும் விரிமலர் பரப்பி
வித்தக ரியற்றிய விளங்கிய கைவினைச்
சித்திரச் செய்கைப் படாம்போர்த் ததுவே
ஒப்பத் தோன்றிய வுவவனந் தன்னைத்
தொழுதனள் காட்டிய சுதமதி தன்னொடு
மலர்கொய்யப் புகுந்தனள் மணிமே கலையென். ’

(மலர்வனம் புக்க காதை, 160 – 171.)

மேற்சொன்ன உவவனத்திற் சென்றது மணிமேகலைக்கு அதுவே முதல் தடவையாதலின், அவளுடன் சென்ற சுதமதி என்பவள், அப்பூஞ்சோலையின் இயற்கை எழிலினை மணிமேகலைக்குக் காட்டி விளக்குகின்றாள். அப்பகுதி இது :-

‘பரிதியஞ் செல்வன் விரிகதிர்த் தானைக்
கிருள்வளைப் புண்ட மருள்படு பூம்பொழில்
குழலிசை தும்பி கொளுத்திக் காட்ட
மழலை வண்டினம் நல்லியாழ் செய்ய
வெயினுழை பறியாக் குயினுழை பொதும்பர்
மயிலா டரங்கின் மந்திகாண் பனகாண் !
மாசறத் தௌ¤ந்த மணிநீ ரிலஞ்சிப்
பாசடைப் பரப்பிற் பன்மல ரிடைநின்
றொருதனி யோங்கிய விரைமலர்த் தாமரை
அரச வன்ன மாங்கினி திருப்பக்
கரைநின் றாலும் ஒருமயில் தனக்குக்
கம்புட் சேவற் கனைகுரன் முழவாக்
கொம்ப ரிருங்குயில் விளிப்பது காணாய் !
இயங்குதேர் வீதி யெழுதுகள் சேர்ந்து
வயங்கொளி மழுங்கிய மாதர்நின் முகம்போல்
விரைமலர்த் தாமரை கரைநின் றோங்கிய
கோடுடைத் தாழைக் கொழுமட லவிழ்ந்த
வால்வெண் சுண்ண மாடிய திதுகாண் !
மாதர் நின்கண் போதெனச் சேர்ந்து
தாதுண் வண்டின மீதுகடி செங்கையின்
அஞ்சிறை விரிய வலர்ந்த தாமரைச்
செங்கயல் பாய்ந்து பிறழ்வன கண்டாங்
கெறிந்தது பெறா’அ திரையிழந்து வருந்தி
மறிந்து நீங்கு மணித்திரல் காண் ! எனப்

பொழிலும் பொய்கையஞ் சுதமதி காட்ட
மணிமே கலையம் மலர்வனம் காண்புழி. ’

(பளிக்கறை புக்க காதை, 1 – 26.)

கீழ்க்காணும் பகுதி மாலைப்பொழுதின் இயற்கையை இனிது விளக்குகின்றது :-

‘அன்னச் சேவல் அயர்ந்துவிளை யாடிய
தன்னுறு பெடையைத் தாமரை யடக்கப்
பூம்பொதி சிதையக் கிழித்துப் பெடைகொண்
டோங்கிருந் தெங்கின் உயர்மட லேற
அன்றிற் பேடை யரிக்குர லழைஇச்
சென்றுவீழ் பொழுது சேவற் கிசைப்பப்
பவளச் செங்காற் பறவைக் கானத்துக்
குவளை மேய்ந்த குடக்கட் சேதா
முலைபொழி தீம்பால் எழுதுக ளவிப்பக்
கன்றுநினை குரல மன்றுவழிப் படர
அந்தி யந்தணர் செந்தீப் பேணப்
பைந்தொடி மகளிர் பலர்விளக் கெடுப்ப
யாழோர் மருதத் தின்னரம் புளரக்
கோவலர் முல்லைக் குழன்மேற் கொள்ள
அமரக மருங்கிற் கணவனை யிழந்து
தமரகம் புகூஉ மொருமகள் போலக்
கதிராற்றுப் படுத்த முதிராத் துன்பமோ
டந்தி யென்னும் பசலைமெய் யாட்டி
வந்திறுத் தனளால் மாநகர் மருங்கென். ’

(மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை, 123 – 141.)

காலை வேளையின் இயற்கையைச் சாத்தனார் கீழ்க்கண்டவாறு விளக்குகின்றார் :-

‘காவ லாளர் கண்டுயில் கொள்ளத்
தூமென் சேக்கைத் துயில்கண் விழிப்ப
வலம்புரிச் சங்கம் வறிதெழுந் தார்ப்பப்
புலம்புரிச் சங்கம் பொருளொடு முழங்கப்
புகர்முக வாரணம் நெடுங்கூ விளிப்பப்
பொறிமயிர் வாரணங் குறுங்கூ விளிப்பப்
பணைநிலைப் புரவி பலவெழுந் தாலப்
பணைநிலைப் புள்ளும் பலவெழுந் தால
பூம்பொழி லார்கைப் புள்ளொலி சிறப்பப்
பூங்கொடி யார்கைப் புள்ளொலி சிறப்பக்
கடவுட் பீடிகைப் பூப்பலி கடைகொளக்
குயிலுவர் கடைதொறும் பண்ணியம் பரந்தெழக்
கொடுப்போர் கடைதொறும் பண்ணியம் பரந்தெழக்
ஊர்துயி லெடுப்ப வுரவுநீ ரழுவத்துக்
காரிருள் சீத்துக் கதிரவன் முளைத்தலும்’

(துயிலெழுப்பிய காதை, 111 – 126.)

வீரசோழியம்

இஃதோர் இலக்கண நூல். வடமொழி இலக்கணத்தைச் சிறுபான்மை தழுவித் தமிழ் ஐந்திலக்கணங்களையும் சுருக்கமாகக் கூறுவது. இதனை இயற்றியவர் புத்தமித்திரனார். இந்நூற்கு உரை எழுதியவர் இவரது மாணவராகிய பெருந்தேவனார். (நூலாசிரியர், உரையாசிரியர் வரலாறுகளை ஏழாம் அதிகாரத்தில் காண்க.) புத்தமித்திரனாரை ஆதரித்த வீரராசேந்திரன் என்னும் வீரசோழன் பெயரால் இந்நூல் இயற்றப்பட்டதாகலின், இதற்கு இப்பெயர் வாய்ந்தது. இதனை ‘எதிர் நூல்’ என்பர்.

இதற்கு ‘வீரசோழியக் காரிகை’ என்னும் பெயரும் உண்டு. எழுத்ததிகாரம், சந்திப்படலம் என்னும் ஒரே படலத்தையுடையதாய் 28-செய்யுள்களையுடையது. சொல்லதிகாரம், வேற்றுமைப்படலம் (9-செய்யுள்), உபகாரப்படலம் (6-செய்யுள்), தொகைப்படலம் (8-செய்யுள்), தத்திதப்படலம் (8-செய்யுள்), தாதுப்படலம் (11-செய்யுள்), கிரியாபதப்படலம் (13 + 2 – செய்யுள்) என்னும் ஆறு படலங்களையுடையது. ஏனைய பொருள், யாப்பு, அணி என்னும் மூன்று அதிகாரங்களும் முறையே பொருட்படலம் (36-செய்யுள்), யாப்புப்படலம் (36-செய்யுள்), அலங்காரப்படலம் (41-செய்யுள்) என்னும் ஒவ்வொரு படலமுடையன. இவற்றையன்றி மூன்று பாயிரச் செய்யுள்களையுமுடையது.

இது வழக்கொழிந்த இலக்கண நூல்களுள் ஒன்று. கச்சியப்ப சுவாமிகள் கந்தபுராணத்தை இயற்றிக் கச்சிக்குமரகோட்டத்தே அரங்கேற்றுங் காலத்தில், அப்புராணத்தின் முதற் செய்யுளில் வருகிற ‘திகடசக்கரம்’ என்னும் சொற் புணர்ச்சிக்கு இலக்கணங் காட்டும்படி அவையிலுள்ளோர் தடை நிகழ்த்தியபோது, அவர்களுக்கு இந்த வீர சோழியத்திலிருந்து இலக்கணம் காட்டப்பட்டதென்றும், பின்னர் அவையிலுள்ளோர் அப்புணர்ச்சியை ஒப்புக்கொண்டனரென்றும் ஒரு வரலாறு கூறப்படுகின்றது. இவ்வரலாற்றினின்றும், அக்காலத்திலேயே இந்நூல் வழக்கொழிந்துவிட்டதென்பதை நன்குணரலாம். (தொடர்புரை 7 காண்க.) இது இயற்றப்பட்ட காலம் பதினொன்றாம் நூற்றாண்டு.

இந்த நூலும் இதன் உரையும் தமிழ்நாட்டின் சரித்திரம் முதலியவற்றை ஆராய்வதற்குச் சிறிது உதவி புரிகின்றன. சோழர்கள் கூடல் சங்கம் முதலிய இடங்களில் அயல் நாட்டு வேந்தரை வென்ற செய்திகள் இவ்வுரையில் காட்டப்படும் மேற்கோட் செய்யுள்களினால் விளங்குகின்றன. இச்செய்திகளைக் கல்வெட்டுச் சாசனங்கள் உறுதிப்படுத்துகின்றன. குண்டலகேசி விருத்தம், கலிவிருத்தம், எலிவிருத்தம், நரிவிருத்தம், உதயணன் காதை, நியாய சூடாமணி, புதியாநுட்பம், யாப்பருங்கலம், தண்டியலங்காரம், வச்சத்தொள்ளாயிரம் முதலிய நூல்களின் பெயர் இவ்வுரையில் கூறப்படுகின்றன. புத்தரைப்பற்றிய அழகான பாடல்கள் யாப்புப்படல உரையில் மேற்கோள்களாகக் காட்டப் பட்டுள்ளன. தொடர்புரை 1-இல் சேர்க்கப்பட்ட செய்யுள்களில் பல இவ்வுரையினின்றும் எடுக்கப்பட்டவையே.

போற்றுவோரின்றி இறந்துபட்ட சில நூல்களைப் போன்றே இந்நூலும் இறந்துபட்டிருக்கும். நற்காலமாக,. இறக்குந் தறுவாயிலிருந்த இந்த நூலினைக் காலஞ்சென்ற ராவ்பகதூர் சி. வை. தாமோதரம் பிள்ளையவர்கள் இன்றைக்கு ஐம்பத்தெட்டு ஆண்டுகட்கு முன்னர் அச்சிற்பதிப்பித்துப் புத்துயிர் கொடுத்தார்கள். 1881-ஆம் ஆண்டு (விசு வருடம் சித்திரை மாதம்) அச்சிற் பதிப்பிக்கப்பட்ட இப்புத்தகம் இப்போது கிடைப்பது அரிது. திருந்திய நல்ல பதிப்பாக அச்சிட்டு மீண்டும் இந்நூலினை உயிர்ப்பிக்கவேண்டுவது தமிழறிஞர் கடமையாகும்.

மாதிரிக்காக, இந்நூலினின்றும் சில செய்யுள்களைக் காட்டுவோம்,

‘மிக்கவன் போதியின் மேதக் கிருந்தவன் மெய்த்தவத்தால்
தொக்கவன் யார்க்குந் தொடரவொண் ணாதவன் தூயனெனத்
தக்கவன் பாதந் தலைமேற் புனைந்து தமிழுரைக்கப்
புக்கவன் பைம்பொழிற் பொன்பற்றி மன்புத்த மித்திரனே ’

‘ ஆயுங் குணத்தவ லோகிதன் பக்க லகத்தியன்கேட்
டேயும் புவனிக் கியம்பிய தண்டமி ழீங்குரைக்க
நீயு முளையோ வெனிற்கரு டன்சென்ற நீள்விசும்பில்
ஈயும் பறக்கு மிதற்கென் கொலோசொல்லு மேந்திழையே ! ’

‘ நாமே வெழுத்துச்சொ னற்பொருள் யாப்பலங் காரமெனும்
பாமேவு பஞ்ச வதிகார மாம்பரப் பைச்சுருக்கித்
தேமே வியதொங்கற் றேர்வீர சோழன் றிருப்பெயராற்
பூமே லுரைப்பன் வடநூன் மரபும் புகன்றுகொண்டே ’
(பாயிரம்.)

‘அறிந்த வெழுத்தம் முன் பன்னிரண்டாவிகளான, கம்முன்
பிறந்த பதினெட்டுமெய், நடுவாய்தம், பெயர்த்திடையா
முறிந்தன யம்முதலாறும், ஙஞண நமவென்று
செறிந்தன மெல்லினம், செப்பாதனவல்லினந்தே மொழியே ’
(சந்தி-1.)

இந்நூல் உரைப் பகுதியினின்று மாதிரிக்காகக் கீழ்க்கண்ட பகுதியைத் தருகின்றோம். இது, பொருட் படலத்தில், ‘நாற்குலப் பக்கம்’ என்னும் தொடக்கத்தினையுடைய 19-ஆவது செய்யுள் உரை :

“களவழி களத்திலழிவு. குரவையாவது, இன்றேர்க் குரவையிட்டாடுதல். ஆற்றலாவது, ஆரியரணாத் தன்பகை மிகையை மதியாது பொருமாற்றல், வல்லாண் பக்கமாவது, பகை வென்று விளங்கி மதிப்பெரு வாகை வண்டாரத்துப் பெறுவான் செங்களத்துப் புலர்ந்து மாய்தல். வேட்கையார் பக்கமாவது, விருந்தோம்பலு மழலோம்பலு முட்பட வெண்வகைத்தாம் பக்கம். மேன்மையாவது, பெரும்பகை தாங்கு மேன்மை. அது அருளொடு புணர்ந்தகவற்சியாம்.

‘ புனிற்றுப் பசியுழந்த புலிப்பிணவு தனாஅது
முலைமறாஅக் குழவி வாங்கி வாய்ப்படுத்
திரையெனக் கவர்ந்தது நோக்கி யாங்க
வேரிளங் குழவிமுன் சென்று தானக்
கூருகிர் வயமான் புலவுவேட்டுத் தொடங்கிய
வாளெயிற்றுக் கொள்ளையிற் றங்கினன் கதுவப்
பாசிலைப் போதி மேவிய பெருந்தகை
ஆருயிர் காவல் பூண்ட
பேரருட் புணர்ச்சிப் பெருமை தானே. ’

பொருளாவது, அறம் பொருளின்ப மூன்று பொருளினும் விடாமற் புணர்ப்பது. காவலாவது, பிழைத்தோரைத் தாங்குதல். துறவாவது, தவத்தினை வென்ற பக்கம். அஃதாவது,

‘வாடாப் போதி மரகதப் பாசடை
மரநிழ லமர்ந்தோ னெஞ்சம் யார்க்கும்
அருளின் றீந்தே னுறைப்பநனி நெகிழ்ந்து
மலரினு மெல்லி தென்ப வதனைக்
காமர் செவ்வி மாரன் மகளிர்
நெடுமா மழைக்கண் விலங்கி நிமிரிந்தெடுத்த
வாளும் போழ்ந்தில வாயின்
யாதோ மற்றது மெல்லிய வாறே. ’

கொடை யென்பது,

‘பாசடைப் போதி பேரருள் வாமன்
வரையா ஈகை போல யாவிருங்
கொடைப்படு வீரக் கொடைவலம் படுமின்
முன்ன ரொருமுறைத் தன்னுழை யிரந்த
அன்பி லரக்கர் வேண் டளவும் பருக
என்புதொறுங் கழிப்பித்தன் மெய்திறந்து வாக்கிக்
குருதிக் கொழும்பதங் கொடுத்தது மன்றிக்
கருசிமிட் பட்ட கள்ளப் புறவின்
மாய யாக்கை சொல்லிய தாற்றன்
உடம்பு நிறுத்துக் கொடுத்தது மன்றி ’ எனவரும்.

படையாளர் பக்கமாவது, கருதியறியும் படையாளர் பக்கம். ஒற்றுமையாவது, சிறியோர் நாணப் பெரியோர் கூறிய கூறுபாட்டிற் கழிமனத்தையொற்றுமை கொள்ளல். ‘மற்று’மென்றமையால், எட்டியல் சான்றோர் பக்கமுட்படக் கண்டுகொள்க. எட்டியலாவன :

‘அழுக்கா றிலாமை யவாவின்மை தூய்மை
யொழுக்கங் குடிப்பிறப்பு வாய்மை-யிழுக்காத
நற்புலமை யோடு நடுவு நிலைமையே
கற்புடைய வெட்டுறுப்புக் காண் ’

என்றமையாலறிக. சான்றோர் பக்கமாவது, பகைவர்கண்ணுந் தன்பாலார்கண்ணு மொப்புமையாகப் பாசறையுள்ளாச் சால்புடைமை கூறுதல். அஞ்சாச் சிறப்பென்பதுமது பிறவு மன்ன.”

குண்டலகேசி

ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றாகிய இந்த நூல் இப்போது இறந்துபட்டது. ‘தருக்கமாவன : ஏகாந்த வாதமும் அனேகாந்த வாதமும் என்பன. அவை குண்டலம், நீலம், பிங்கலம், அஞ்சனம், தத்துவதரிசனம், காலகேசி முதலிய செய்யுட்களுள்ளும் சாங்கிய முதலிய ஆறு தரிசனங்களுள்ளும் காண்க’ என்று யாப்பருங்கல விருத்தியுரையாசிரியர் ‘மாலை மாற்றே சக்கரம் சுழிகுளம்’ என்னும் சூத்திர உரையில் கூறியிருப்பதனால், குண்டலகேசி தருக்கநூல் என்பது அறியப்படும். எனவே, பௌத்த சமயச் சார்பான இந்நூல் தருக்க வாயிலாக ஜைனம், வைதீகம் முதலான சமயங்களைக் கண்டிப்பதாகும். இது பெரும்பான்மையும் விருத்தப் பாவினால் இயற்றப்பட்டதாதலின், இதனைக் ‘குண்டலகேசி விருத்தம்’ என்றும் கூறுவர். ‘குண்டலகேசி முதலான காப்பிய மெல்லாம் விருத்தமாம்’ என்பது வீர சோழிய (யாப்பு. 23-ஆம் பாட்டு) உரை. எனினும், இடையிடையே கலித்துறைச் செய்யுள்களும் விரவியிருந்தன என்பது ‘குண்டலகேசி விருத்தம் . . . . . . . . . . . . . . . முதலாயினவற்றுட் கலித்துறைகளு முளவாம்’ எனவரும் வீர சோழிய (யாப்பு. 21-ஆம் செய்யுள்) உரையினால் விளங்குகின்றது. ‘குண்டலகேசி . . . . . . . . . முதலாகவுடையவற்றிற் றெறியாத சொல்லும் பொருளும் வந்தனவெனின், அகலக் கவி செய்வானுக்கு அப்படி யல்லதாகாதென்பது. அன்றியும், அவை செய்தகாலத்து அச்சொற்களும் பொருள்களும் விளங்கியிருக்கும் என்றாலும் அமையுமெனக் கொள்க’ என்ற வீரசோழிய (அலங். 4-ஆம் செய்யுள்) உரைக் குறிப்பினால், இக்காவியத்தில் பொருள் தெரியாத சொற்கள் சில இருந்தன என்பது விளங்குகின்றது.

இந்நூலாசிரியர் நாதகுத்தனார் என்பவர். இதனை நீலகேசி 344 -ஆம் பாட்டுரையில் ‘புழுக்குலந் தம்மால் நுகரவும் வாழவும் பட்ட வினைய வுடம்பு’ என்னும் குண்டல கேசிச் செய்யுள் அடியை எடுத்துக் காட்டி, நாதகுத்தனார் வாக்கெனக் குறிப்பிடுவதனால் அறியலாம். (கீழ்க்காணும் மாதிரிச் செய்யுள் 3 -ஆவது காண்க.)

மணிமேகலைக் காப்பியத்தின் தலைவி மணிமேகலை என்பவளின் பெயரையே அக்காப்பியப் பெயராக சூட்டினமை போல, இக்காவியத் தலைவியின் பெயர் குண்டலகேசி என்பதாதலின், இக்காப்பியத்திற்குக் குண்டலகேசி என்னும் பெயர் சூட்டப்பட்டது. குண்டலகேசி என்பவள் புத்தர் உயிர் வாழ்ந்திருந்த காலத்தில் வடநாட்டிலிருந்த ஒரு பெண் துறவி. இப்பெண்மணியின் வரலாறு பாளி மொழியில் எழுதப்பட்ட பௌத்த நூலாகிய ‘தேரிகாதையிலும்’, ‘தம்ம பாதா’, ‘அங்குத்தரநிகாயா’ என்னும் நூலிலும் நீலகேசி என்னும் ஜைனத் தமிழ் நூல் (286 -ஆம் செய்யுள்) உரையிலும் கூறப்பட்டிருக்கின்றது. குண்டலகேசியின் வரலாற்றுச் சுருக்கம் வருமாறு :-

இராச கிருகம் என்னும் நகரத்தை அரசாண்ட அரசனது மந்திரிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்குப் பத்திரை எனப் பெயரிட்டுப் பெற்றோர் சீராட்டிப் பாராட்டி வளர்த்தார். இவ்வாறு வளர்ந்த அப்பெண் மகவு பெரியதாகி மணம் செய்யத்தக்க வயதினையடைந்தது. ஒருநாள், இப்பெண் தன் மாளிகையின் மேற்புறத்தில் உலாவியபோது, தெருவழியே கட்டழகு மிக்க காளையொருவனை அரசனது சேவகர் கொலைக்களத்துக்கு அழைத்துக்கொண்டு போவதைக் கண்டாள். கண்டதும் அக்காளையின்மேல் காதல் கொண்டாள். அவன் அரசனது புரோகிதன் மகன். வழிப்பறி செய்த குற்றத்திற்காகக் கொலைத்தண்டனை அடையப்பெற்றுக் கொலைகளத்திற்கு அழைத்தேகப்பட்டான். இக்குற்றவாளியின்மேல் காதல் கொண்ட பத்திரை, ‘அவனையே மணம் புரிவேன்; அன்றேல் உயிர் விடுவேன்’ என்று பிடிவாதம் செய்தாள். இதனையறிந்த இவள் தந்தை கொலையாளருக்குக் கைக்கூலி கொடுத்து அவனை மீட்டுக்கொண்டு வந்து நீராட்டி ஆடையணிகளை அணிவித்துப் பத்திரையை அவனுக்கு மணஞ் செய்வித்தான்.

மணமக்கள் இருவரும் இன்பமாக வாழும் காலத்தில் ஒருநாள், ஊடல் நிகழ்ச்சியின்போது பத்திரை தன் கணவனைப் பார்த்து, ‘முன்பு கள்வன் அல்லனோ?’ எனக் கூறினாள். அவன், அவள் தன்னை இகழ்ந்ததாகக் கருதி மிக்க சினங்கொண்டான். ஆயினும், அதனை அப்போது வெளியிற்காட்டாமல் அடக்கிக்கொண்டான்.

பின்னர், ஒரு நாள் அவன் பத்திரையை அழைத்து, அவளிடம், தன் உயிரைக் காப்பாற்றிய தெய்வத்தை வழிபடும் பொருட்டு அருகிலிருக்கும் மலையுச்சிக்குப் போக விரும்புவதாகவும், அவளையும் உடன் வரும்படியாகவும் கூறினான். அவளும் இசைய, இருவரும் மலையுச்சிக்குச் சென்றனர். மலையுச்சியினை அடைந்தவுடன், அக்கொடியோன் அவளைச் சினந்து நோக்கி, ‘அன்று நீ என்னைக் கள்வன் என்று கூறினாயன்றோ? இன்று உன்னைக் கொல்லப்போகின்றேன். நீ இறக்குமுன் உனது வழிபடு கடவுளை வணங்கிக்கொள்’ என்றான். இதனைக் கேட்டுத் திடுகிட்ட அவள், ‘தற்கொல்லியை முற்கொல்லவேண்டும்’ என்னும் முதுமொழியைச் சிந்தித்து, அவன் கட்டளைக்குக் கீழ்ப்படிபவள்போல நடித்து, ‘என் கணவனாகிய உன்னையன்றி எனக்கு வேறு தெய்வம் ஏது? ஆதலின், உன்னையே நான் வலம்வந்து வணங்குவேன்’ என்று சொல்லி, அவனை வலம்வருவதுபோல் பின்புறம் சென்று, அவனை ஊக்கித் தள்ளினாள். இவ்வாறு அக்கொடியவன் மலையுச்சியினின்றும் வீழ்ந்து இறந்தான்.

இதன் பிறகு, பத்திரை உலகத்தை வெறுத்தவளாய், ஜைன மதத்தின் பிரிவாகிய நிகண்ட மதத்தில் சேர்ந்து துறவு பூண்டாள். அந்த மதக்கொள்கைப்படி, பத்திரையின் தலைமயிரைக் களைந்துவிட்டார்கள். ஆயினும், மீண்டும் தலையில் மயிர் வளர்ந்து சுருண்டு காணப்பட்டது. ஆகவே, ‘சுருண்ட மயிரினையுடையவள்’ என்னும் பொருள்படும் ‘குண்டலகேசி’ என்று அவளைக் கூறினர். இப்பெயரே பிற்காலத்தில் இவளுக்குப் பெரும்பாலும் வழங்கப்பட்டது. சில வேளைகளில் இவளது இயற்கைப் பெயரையும் காரணப் பெயரையும் ஒருங்கு சேர்த்துப் ‘பத்திரா குண்டலகேசி’ என்றும் சொல்வதுண்டு.

ஜைன மதத்திற் சேர்ந்த குண்டலகேசி ஜைனர்களிடம் சமய சாத்திரங்களையும் தர்க்க நூல்களையும் கற்றுத்தேர்ந்து, சமயவாதம் செய்யப் புறப்பட்டு, சென்றவிடமெங்கும் நாவல் நட்டு, வாதப்போர் செய்து வெற்றிகொண்டு வாழ்ந்தாள். (வாதப்போர் செய்வோர் நாவல் மரக்கிளையை ஊர்நடுவில் நட்டு வாதுக்கழைப்பது அக்கால வழக்கம்.) இவ்வாறு நிகழுங்கால், ஒருநாள் ஓர் ஊரையடைந்து, அவ்வூர் நடுவில் மணலைக் குவித்து நாவற்கிளையை நட்டு, உணவுபெறுவதற்காக வீடுதோறும் சென்றாள். அவ்வமயம் புத்தர் தமது சீடர்களுடன் அவ்வூருக்கருகிலிருந்த ஒரு தோட்டத்தில் வந்து தங்கினார். அவரது சீடர்களில் சாரிபுத்தர் என்பவர் உணவுக்காக அவ்வூர்க்குட் சென்றார். சென்றவர் அங்கு நாவல் நட்டிருப்பதைக் கண்ணுற்று, அதன் காரணத்தை அங்கிருந்தவர்களால் அறிந்து, அங்கிருந்த சிறுவர்களை அழைத்து, அக்கிளையினைப் பிடுங்கி எறியும்படி கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தனர்.

பின்னர், உணவு கொள்ளச் சென்ற குண்டலகேசி மீண்டும் திரும்பி வந்தபோது, தான் நட்ட நாவல் வீழ்த்தப்பட்டிருப்பதைக் கண்டு, அதனை வீழ்த்தியவர் அருகிலிருந்த சாரிபுத்தர் என்பதனையறிந்து, அவ்வூர்ப் பெரியோரை அழைத்து, அவை கூட்டச்செய்து, சாரி புத்தருடன் வாதம் செய்யத் தொடங்கினாள். நெடுநேரம் நடைபெற்ற வாதத்தில் குண்டலகேசி வினாவிய வினாக்களுக்கெல்லாம் சாரி புத்தர் விடையளித்தார். பின்னர், சாரிபுத்தர் வினாவிய வினாவுக்குக் குண்டலகேசி விடையிறுக்கத் தெரியாமல் தான் தோற்றதாகச் சொல்லி, அவர் காலில் விழுந்து வணங்கி, அவரை அடைக்கலம் புகுந்தாள். சாரிபுத்தர் குண்டலகேசியைப் பார்த்து, ‘என்னிடம் அடைக்கலம் புகாதே, எனது குரு புத்த பகவானிடம் அடைக்கலம் புகுவாயாக’ என்று சொல்லி அவளை அழைத்துச் சென்று புத்தரை வணங்கச் செய்தார். புத்தர் அவளுக்கு உபதேசம் செய்து, அவளைப் பௌத்த மதத்தில் சேர்த்தார். இதுவே குண்டலகேசி என்னும் தேரியின் வரலாறு.

இந்தக் குண்டலகேசி என்பவள் சமயவாதம் செய்யப் புறப்பட்டு, ஜைனம், வைதீகம் முதலான சமயங்களைத் தருக்க முறையாகக் கண்டிப்பதாக இயற்றப்பட்டதுதான் குண்டலகேசி காப்பியம் என்பது. இந்தக் குண்டலகேசிக்கு விடையிறுத்து, ஜைனமதக் கொள்கையை நாட்ட இயற்றப்பட்டது, நீலகேசி என்னும் நூல். குண்டலகேசி இயற்றப் படாமலிருந்திருந்தால், நீலகேசியும் இயற்றப்பட்டிருந்திராது. இப்போது நீலகேசி உயிருடன் இருக்க, குண்டலகேசியோ இறந்து பட்டது. இது சமயப் பொறாமையின் விளைவு, சமயப்பகை தமிழ் நாட்டில் பெருந்தீங்கு விளைத்திருக்கின்றது. நினைத்தால் மனம் பதறுகின்றது. குண்டலகேசியை இழந்துவிட்டது தமிழ் நாட்டிற்குப் பெருங்குறையே, ஏனென்றால், தமிழ் நாட்டின் பழக்க வழக்கங்கள், சரித்திரக் குறிப்புகள், அக்காலத்திலிருந்த சமயங்கள்,. அவற்றின் கொள்கைகள் இவற்றையும், அக்காலத்தில் தமிழ் நாட்டுப்பௌத்த மதக்கொள்கைகளையும், அம்மதத்தின் நிலைமையையும் தெரிவிக்கக்கூடிய ஒரு நூலை நாம் இழந்துவிட்டோம். இந்த நூல் இயற்றப்பட்ட காலம் தெரியவில்லை.

குண்டலகேசி இறந்துவிட்டது. ஆயினும், பல நூல்களினின்றும் தொகுக்கப்பட்ட ‘புறத்திரட்டு’ என்னும் நூலில் குண்டலகேசிச் செய்யுள்கள் காணப்படுகின்றன. அன்றியும், தொல்காப்பிய உரை, யாப்பருங்கல விருத்தியுரை, வீரசோழிய உரை என்னும் இவற்றில் குண்டலகேசிச் செய்யுள்கள் சில மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. செய்யுள் நடை மாதிரிக்காக அவற்றுட் சிலவற்றைக் கீழே தருகின்றோம்,

கடவுள் வாழ்த்து

‘ முன்றான் பெருமைக்க ணின்றான் முடிவெய்து காறும்
நன்றே நினைந்தான் குணமே பொழிந்தான் தனக்கென்
றொன்றானு முள்ளான் பிறர்க்கே யுறுதிக் குழந்தா
னன்றே யிறைவ னவன்றாள் சரணங்க ளன்றே. ’

‘ நோய்க்குற்ற மாந்தர் மருந்தின்சுவை நோக்ககில்லார்
தீக்குற்ற காதலுடையார் புகைத்தீமை யோரார்
போய்க்குற்ற மூன்று மறுத்தான்புகழ் கூறுவேற்கென்
வாய்க்குற்ற சொல்லின் வழுவும் வழு வல்லவன்றே. ’

‘ எனதெனச் சிந்தித்த லான்மற் றிவ்வுடன் பின்பத்துக்காமேல்
தினைப் பெய்த புன்கத்தைப் போலச் சிறியவு மூத்தவுமாகி
நுழைய புழுக்குலந் தம்மா னுகரவும் வாழவும் பட்ட
இனைய உடம்பினைப் பாவி யானென தென்னலு மாமோ. ’

‘ வகையெழிற் றோள்களென்று மணிநிறக் குஞ்சி யென்றும்
புகழெழ விகற்பிக்கின்ற பொருளில்கா மத்தை மற்றோர்
தொகையெழுங் காதல் தன்னால் துய்த்துயாந் துடைத்துமென்பார்
அகையழ லழுவந்தன்னை நெய்யினால விக்கலாமோ ’

‘ அனலென நினைப்பிற் பொத்தி யகந்தலைக் கொண்ட காமக்
கனலினை யுவர்ப்பு நீராற் கடையற வலித்து மென்னார்
நினைவிலாப் புணர்ச்சி தன்னால் நீக்குது மெனறு நிற்பார்
புனலினைப் புனலினாலே யாவர்போ காமை வைப்பார். ’

‘ பாளையாந் தன்மை செத்தும் பாலனாந் தன்மை செத்துங்
காளையாந் தன்மை செத்தும் காமுறு மிளமை செத்தும்
மீளுமிவ் வியல்பு மின்னே மேல்வரு மூப்பு மாகி
நாளுநாட் சாகின்றோமால் நமக்குநா மழாத தென்னோ. ’

சித்தாந்தத் தொகை

இது இறந்துபட்ட நூல்களுள் ஒன்று. இது பௌத்த மதக் கொள்கைகளைத் தொகுத்துக் கூறும் நூல் எனத் தெரிகின்றது. இதனை இயற்றியவர் இன்னார் என்பதும், ஒருவரா பலரா என்பதும் தெரியவில்லை. இயற்றப்பட்ட காலமும் தெரியவில்லை. சிவஞான சித்தியார் என்னும் சைவசமய நூலுக்கு ஞானப்பிரகாசர் என்பவர் தாம் எழுதிய உரையில் (பரபக்கம் சௌத்திராந்திகன் மதம், 2, 31 பாட்டுக்களின் உரை) கீழ்க்கண்ட செய்யுளை இந்நூலிலிருந்து மேற்கோள் காட்டியிருக்கின்றார் :

‘அருணெறியாற் பாரமிதை யாறைந்து முடனடக்கிப்
பொருண்முழுதும் போதியின்கீழ் முழுதுணர்ந்த முனிவரன்றன்
அருண்மொழியா னல்வாய்மை யறிந்தவரே பிறப்பறுப்பார்
மருணெறியாம் பிறநூலும் மயக்கறுக்கு மாறுளதோ. ’

“மருடரு மனம்வாய் மெய்யிற் கொலைமுதல் வினைபத்தாமே’ என்பது சித்தாந்தத் தொகை” என்று நீலகேசி, புத்தவாதச் சருக்கம் 64-ஆம் பாட்டுரையில் கூறப்பட்டிருக்கின்றது. இவற்றைத் தவிர இந்நூற் செய்யுள்கள் வேறொன்றும் கிடைக்கவில்லை.

திருப்பதிகம்

இதுவும் இறந்துபட்ட நூலுள் ஒன்று. இந்நூல் ஆசிரியர் யாவர், இந்நூல் எத்தனைப் பாக்களைக் கொண்டது என்னும் செய்திகள் ஒன்றும் தெரியவில்லை. காலமும் தெரியவில்லை. இந்நூலின் பெயரைக்கொண்டு இது புத்தர் மீது இயற்றப்பட்ட தோத்திர நூல் என்று கருத இடமுண்டாகின்றது. சிவஞான சித்தியார் (பரபக்கம் : சௌத்திராந்திகன் மதம், 2-ஆம் செய்யுள், மேற்படி மறுதலை, 8-ஆம் செய்யுள்) உரையில், ஞானப்பிரகாசர் கீழ்க்கண்ட செய்யுளை மேற்கோள் காட்டி, ‘இது திருப்பதிகம் எனக் கொள்க’ என்று குறிப்பிட்டிருக்கின்றார்:

‘எண்ணிகந்த காலங்க ளெம்பொருட்டான் மிகவுழன்று
எண்ணிகந்த காலங்க ளிருடீர வொருங்குணர்ந்தும்
எண்ணிகந்த தானமுஞ் சீலமு மிவையாக்கி
எண்ணிகந்த குணத்தினா னெம்பெருமா னல்லனோ ’.

நீலகேசி உரையாசிரியர் கடவுள் வாழ்த்து உரையில், மேலே காட்டிய செய்யுளையும், கீழ்க்கண்ட செய்யுளையும் மேற்கோள் காட்டியுள்ளார். ஆனால், அவர் இச்செய்யுள்கள் இந்நூலிலிருந்து எடுக்கப்பட்டன எனக் குறிப்பிடவில்லை. ஆயினும், அவர் காட்டிய கீழ்க்கண்ட செய்யுளும் இந்த நூலைச் சேர்ந்ததுதான் என்பதில் ஐயமில்லை :

‘என்றுதா னுலகுய்யக் கோளெண்ணினா னதுமுதலாச்
சென்றிரந்தார்க் கீந்தனன் பொருளுடம் புறுப்புக்க
டுன்றினன் பிறக்குந னுளனாயின் மாமேருக்
குன்றியின் றுணையாகக் கொடுத்திட்டா னல்லனோ ’.

விம்பசார கதை

இந்தப் பெயர்கொண்ட பௌத்தநூல் ஒன்றிருந்ததென்பது நீலகேசி உரையினால் (190-ஆவது பாட்டுரை) அறியப்படும். நீலகேசி உரையாசிரியர் விம்பசார கதையிலிருந்து நான்கு அடிகளை மேற்கோள் காட்டி, ‘இது விம்பசார கதை என்னும் காவியம்; பௌத்தருடைய நூல்; அதன்கட் கண்டு கொள்க’ என்று எழுதியிருக்கின்றார். சிவஞான சித்தியார் என்னும் நூலுக்கு உரையெழுதிய ஞானப்பிரகாசர் (பர : சௌத்தி : மறுதலை. 5-ஆம் செய்யுளுரை) நீலகேசி உரையாசிரியர் மேற்கோள் காட்டிய அதே நான்கடிகளை மேற்கோள் காட்டி, விம்பசார கதையைப்பற்றி அவர் எழுதியவற்றை அவ்வாறே எழுதியிருக்கிறார்.

விம்பசார கதை என்னும் இந்தக் காப்பியம் எத்தனைச் செய்யுள்களையுடையது, எத்தனை அதிகாரங்களையுடையது, இதனை இயற்றியவர் யாவர் என்பதைப்பற்றி ஒன்றும் தெரியவில்லை. ஆயினும், இக்காப்பியத்தின் பெயரைக் கொண்டு, புத்தர் காலத்தில் இருந்தவனும், அவருக்குப் பல விதத்திலும் தொண்டுசெய்து அவரை ஆதரித்துவந்தவனுமான விம்பசாரன் என்னும் அரசனது வரலாற்றினைக் கூறுவது இக்காப்பியம் என்று கருதக் கிடக்கின்றது. விம்பசாரனது வரலாற்றுச் சுருக்கம் இதுவாகும்.

விம்பசாரன் அல்லது பிம்பசாரன் என்னும் அரசன் இராசகிருகம் என்னும் நகரைத் தலைநகராகக் கொண்ட மகத நாட்டை (கி. மு. 540 முதல் 490 வரையில்) அரசாண்டு வந்தான். அக்கால்தில் ஒருநாள், இல்லற வாழ்க்கையைத் துறந்து, துன்பத்தை நீக்கும் வழியைக் காண்பதற்காகச் செல்லும் சித்தார்த்தரை அரன்மனையில் இருந்தபடியே வீதியில் கண்ட விம்பசாரன், அவரை அழைத்துத் தன்னிடம் தங்கியிருக்கும்படி வேண்டினான். சித்தார்த்தர், தாம் செல்லும் நோக்கத்தைத் தெரிவிக்க, அவன் உமது நோக்கம் நிறைவேறிய பிறகு என்னிடம் வரவேண்டும் என்று இரந்து வேண்டினான். சித்தார்த்தர் அதற்கு உடன்பட்டு, அவனிடம் விடைபெற்றுச் சென்றார். பின்னர், சித்தார்த்தர் புத்தரான பிறகு, விம்பசாரனுக்குத் தாம் வாக்களித்ததை நினைத்து, தமது சீடர்களுடன் இராசகிருகத்தின் அருகில் உள்ள சுபதித்த சேதியத்தில் வந்து தங்கினார். இதனையறிந்த அரசன் தனது சுற்றத்தாருடன் சென்று புத்தரை வணங்க, அவர் அவர்களுக்கு உபதேசம் செய்தார். அன்று முதல் அரசன் பௌத்த மதத்தை மேற்கொண்டான். அடுத்த நாள் அரசன் புத்தரையும் அவரது சீடர்களையும் அரண்மனைக்கழைத்து அவர்களுக்கு விருந்தளித்த பின்னர், அவர்கள் தங்குவதற்கு ‘வெளுவனம்’ என்னும் தோட்டத்தைப் புத்தருக்குத் தானமாகக் கொடுத்தான். அன்றியும், அவன் இறக்கும்வரையில் புத்தருக்கும் அவரது சங்கத்தாருக்கும் பற்பல உதவிகளையும் தொண்டுகளையும் செய்துவந்தான்.

இந்த அரசனுக்கு அஜாத சத்துரு என்னும் மகன் ஒருவன் உண்டு. இப்பிள்ளை பிறக்கும்போதே, இவனால் அரசனுக்கு மரணம் நேரிடும் என்று நிமித்திகர் கூறினர்.

புத்தருக்கு மைத்துனன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் தேவதத்தன் என்பது. அவன் புத்தரது தாய் வழி மாமனது மகன். இந்தத் தேவதத்தன், புத்தர் உலகத்தாரால் போற்றிப் புகழப்படுவதைக் கண்டு பொறாமை கொண்டான். பௌத்த சங்கத்தின் தலைவராக வீற்றிருக்கும் புத்தரை நீக்கிவிட்டு, அவர் இடத்தில் தான் அமர்ந்து பெருமையடைய அவாக்கொண்டான். ஆனால், புத்தரும், விம்பசார அரசனும் உயிரோடுள்ளவரையில் தனது விருப்பம் நிறைவேறாதெனக் கண்டு, அவர்களைக் கொல்லச் சூழ்ச்சி செய்தான்.

தேவதத்தன் சில சித்திகள் கைவரப்பெற்றவனாகலின், அவன் அரசன் மகன் அஜாத சத்துருவிடம் சென்று, அவன் அஞ்சும்படி சில சித்திகளைச் செய்து, அவனைத் தன்வசப்படுத்தி, அரசனைக் கொன்று அரசைக் கைப்பற்றிக்கொள்ளுமாறும், புத்தரைக் கொன்று பௌத்த சங்கத் தலைமைப் பதவியைத் தனக்களிக்குமாறும் அவனுக்குக் கூறினான். இவனது சித்திகளைக் கண்டு இவனிடம் அச்சமும் மதிப்புங் கொண்ட அரசகுமாரன் இவன் கற்பித்த தீச்செயல்களைச் செய்ய உடன்பட்டான்.

தேவதத்தன், அரசகுமாரன் உதவியால் சில வில்வீரர்களை ஆங்காங்கேயிருக்கச் செய்து, புத்தர் பாதைவழியே செல்லும்போது அவரை அம்பெய்து கொல்லுமாறு ஏவினான். புத்தர் வீதிவழியே சென்றபோது, வில்வீரர்கள் அவர்மேல் அம்பெய்ய முடியாதவர்களாகி விறைத்து நின்றனர். பின்னர், அவர்கள் புத்தரிடம் வந்து அவரிடம் உபதேசம் பெற்றுச் சென்றனர். தனது நோக்கம் நிறைவேறாமற் போனதைக் கண்ட தேவதத்தன், தானே புத்தரைக் கொல்ல முடிவுசெய்து, அவர் பாதைவழியே செல்லும்போது பெரும் பாறைகளை மலைமீதிருந்து உருட்டினான். அவை அவருக்குப் பெரிய ஊறு செய்யவில்லையாயினும், காலில் சிறிது காயத்தையுண்டாக்கின. இதனையறிந்த அவரது சீடர்கள் அவரை வெளியே செல்லக்கூடாது என்று தடுத்தார்கள். புத்தர், ‘ததாகதருடைய உயிரைப் போக்க ஒருவராலும் ஆகாது’ என்று சொல்லி, தம் வழக்கம்போல் வெளியே சென்றுவந்தார். பின்னர், தேவதத்தன் அரச குமாரன் உதவியால், ‘நளாகிரி’ என்றும், ‘தனபாலன்’ என்றும் பெயருள்ள மதம்பிடித்த யானையைக் கள்ளூட்டி வெறிகொள்ளச் செய்து, புத்தர் வீதிவழியே செல்லும் போது அவரைக் கொல்ல அதை ஏவினான். அவ்யானை புத்தரைக் கண்டபோது மதமும் வெறியும் தணியப்பெற்று அவரை வணங்கியது.

இவ்வாறு, தேவதத்தன் புத்தரைக் கொல்லச் சூழ்ச்சி செய்திருக்க, அஜாத சத்துரு அரசனைக் கொல்லச் சூழ்ச்சி செய்தான். இதனையறிந்த அரசன் தன் மகனுக்கு அரசாட்சியைக் கொடுத்துவிட்டுத் தான் அப்பதவியினின்றும் விலகிக்கொண்டான். ஆயினும், தேவதத்தன் அரசகுமாரனிடம் சென்று, அரசனைக் கொல்லும்படி வற்புறுத்தினான். அதனைக் கேட்டு, அஜாத சத்துரு அரசனைச் சிறைப்படுத்தி, காற்றோட்டமில்லாத ‘பொதியறை’யில் அடைத்து, அரசியைத் தவிர ஒருவரும் அங்குச் செல்லக்கூடாதென்றும், ஒருவரும் அவனுக்கு உணவு கொடுக்கக்கூடாதென்றும் கட்டளையிட்டான். இவ்வாறு சிறைப்பட்ட விம்பசார அரசனுக்கு அவனது மனைவி அவனைக் காணச் செல்லும்போதெல்லாம் தனது உடையில் உணவை மறைத்துக்கொண்டுபோய்க் கொடுத்துவந்தாள். இது கண்டறியப்பட்டபின், தனது தலையணியில் சிறிது உணவை மறைத்துக் கொண்டுபோனாள். இதுவுங் கண்டறியப்பட்டபோது, இந்த அரசி நீராடித் தன் உடம்பில் ‘சாதுர் மதுரம்’ என்னும் நால்வகை இனிப்பு வகைகளைப் பூசிக்கொண்டு அரசனிடம் சென்றாள். அரசன் அவள் உடம்பில் பூசப்பட்ட இனிப்பை நக்கி உண்டு உயிர் வாழ்ந்தான். இதுவும் கண்டுபிடிக்கப்பட்டு, அரசி விம்பசாரனைப் பார்க்கக்கூடாதென்று தடுக்கப்பட்டது. விம்பசாரன் மனம் கவலாமல் பொதியரையாகிய அச்சிறையில் உலாவிக்கொண்டிருந்தான். இதனையறிந்த அஜாத சத்துரு சில மயிர்வினைஞரை அனுப்பி, விம்பசாரனுடைய பாதத்தைக் கத்தியால் கீறியறுத்து, உப்பையும் புளித்த காடியையும் இட்டுக் கட்டுமாறு கூறினான். இக்கொடுஞ் செயலைச் செய்ய மனமற்றவராக இருந்தும், அவ்வூழியர் அவ்வாறே செய்தனர். இக்கொடுமைகளால் ஏற்பட்ட துன்பத்தைத் தாங்கப் பெறாமல், விம்பசாரன் சிறைச்சாலையில் உயிர்நீத்தான்.

விம்பசாரன் உயிர் துறந்த அதே நாளில், அஜாத சத்துருவுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அப்போது, குழந்தையிடத்தில் தந்தைக்கு உண்டாகும் அன்புணர்ச்சி அவனுக்கு ஏற்பட்டது. தன்னையும் தன் தந்தை இப்படித்தானே நேசித்திருப்பான் என்று கருதி, அவன் தன் தாயிடம் சென்று இதைப்பற்றி வினாவினான். அஜாத சத்துரு பிறந்தது முதல் விம்பசார அரசன் எவ்வாறு அவனை அன்பாக நேசித்தான் என்பதனையும், எவ்வாறு கண்ணுக்குக் கண்ணாயும் உயிருக்குயிராயும் போற்றிக் காப்பாற்றினான் என்பதனையும் அவள் அவனுக்கு விளக்கிச் சொன்னாள். இவற்றையெல்லாங் கேட்ட அஜாத சத்துரு தான் தன் தந்தையாகிய விம்பசார அரசனைக் கொடுமையாய்ச் சித்திரவதை செய்து கொன்றதை நினைத்து வருந்தினான்.

இவ்வரலாற்றினைப் பொருளாகக் கொண்டு இயற்றப்பட்டது இந்த விம்பசார கதை என்னும் காப்பியம் எனத் தோன்றுகின்றது. இது இயற்றப்பட்ட காலம் தெரியவில்லை. இந்தக் காப்பியத்தினின்று நமக்குக் கிடைத்திருப்பன நான்கு அடிகள்மட்டுமே. அவை பின் வருவன:

‘உலும்பினி வனத்துள் ஒண்குழைத் தேவி
வலம்படு மருங்குல் வடுநோ யுறாமல்
ஆன்றோன் அவ்வழித் தோன்றினன் ஆதலின்
ஈன்றோள் ஏழ்நாள் இன்னுயிர் வைத்தாள்.’

இச்செய்யுள் நடையை நோக்கும்போது, இந்தக் காப்பியம், மணிமேகலையைப் போன்றே ஆசிரியப்பாவினால் இயற்றப்பட்டிருக்கவேண்டும் எனத் தோன்றுகின்றது.

வளையாபதி

ஐம்பெரும் காப்பியங்களுள் இதுவும் ஒன்று. இந்நூல் இப்போது இறந்துபட்டதாகலின், இது பௌத்தச் சார்பினதா, அன்றி ஜைனச் சார்பினதா என்று துணிந்துகூற இயலவில்லை. ஆயினும், இது பௌத்த நூல் என்று பலரால் கருதப்படுகின்றபடியால், இது இப்பகுதியில் சேர்க்கப்பட்டது. இக்காவியத்தினின்று எடுக்கப்பட்ட சில பாடல்கள் ‘புறத்திரட்டு’ என்னும் நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. அன்றியும், சிலப்பதிகார உரையில் இரண்டு செய்யுள்களும், யாப்பருங்கல விருத்தியில் இரண்டு செய்யுள்களும் இக்காவியத்தினின்றும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. இக்காவியத்தின் தலைவன் யாவன், அவன் வரலாறு யாது, இதன் ஆசிரியர் யாவர், எத்தனை அதிகாரங்களைக் கொண்டது என்பன தெரியவில்லை. இந்நூற் செய்யுள்களில் திருக்குறளிற் காணப்படும் சொற்களும் சொற்றொடர்களும் எடுத்தாளப்பட்டுள்ளன. இக்காவியத்தின் செய்யுள்நடை மாதிரிக்காகக் கீழ்க்காட்டப்பட்ட செய்யுள்களில், இரண்டாவது செய்யுளில், திருக்குறள் ஒன்றனை இவ்வாசிரியர் எடுத்தாண்டிருப்பது நோக்கத்தக்கது.


கடவுள் வாழ்த்து.

‘ உலக மூன்று மொருங்குட னேத்து மாண்
டிலக மாய திறலறி வன்னடி
வழுவி னெஞ்சொடு வாலிதி னாற்றவுந்
தொழுவல் தொல்வினை நீங்குக வென்றியான்.’ 1.

‘ மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்க
லுற்றார்க் குடம்பு மிகையிவை யுள்வழிப்
பற்றா வினையாய்ப் பலபல யோனிக
ளற்றா யுழலு மறுத்தற் கரிதே.’ 2.

‘ உயர்குடி நனியுட் டோன்றல், ஊனமில் யாக்கையாதல்,
மயர்வறு கல்விகேள்வித் தன்மையால் வல்லராதல்,
பெரிதுணர் வறிவே யாதல், பேரறங் கோடல் என்றாங்
கரிதிவை பெறுத லேடா பெற்றவர் மக்க ளென்பார்.’ 3.

‘ குலந்தரும் ; கல்வி கொணர்ந்து முடிக்கும் ;
அலந்த கிளைக ளழிபசி தீர்க்கும் ;
நிலம்பக வெம்பிய நீள்சுரம் போகிப்
புலம்பில் பொருள்தரப் புன்கண்மை யுண்டோ ?’ 4.

‘ பொறையிலா வறிவு, போகப் புணர்விலா விளமை, மேவத்
துறையிலா வனசவாவி, துகிலிலாக் கோலத் தூய்மை,

நறையிலா மாலை, கல்விநலமிலாப் புலமை, நன்னர்ச்
சிறையிலா நகரம் போலும் சேயிலாச் செல்வமன்றே.’ 5.

‘ பொய்யன் மின்புறங் கூறன்மின், யாரையும்
வையன் மின்வடி வல்லன சொல்லிநீர்
உய்யன் மின்னுயிர் கொன்றுண்டு வாழுநாட்
செய்யன் மின்சிறி யாரோடு தீயன.’ 6.

‘ தொழுமக னாயினுந் துற்றுடை யானைப்
பழுமரஞ் சூழ்ந்த பறவையிற் சூழ்ப ;
விழுமிய ரேனும் வெறுக்கை யுலந்தால்

பழுமரம் வீழ்ந்த பறவையிற் போப.’ 7.

‘ வித்தகர் செய்த விளங்குமுடி கவித்தார்
மத்தக மாண்பழிதல் காண்வழி நெஞ்சே.
மத்தக மாண்பழிதல் கண்டால் மயங்காதே
உத்தம நன்னெறிக்க ணில்வாழி நெஞ்சே.
உத்தம நன்னெறிக்க ணின்றூக்கஞ் செய்தியேல்
சித்தி படர்தல் தௌ¤வாழி நெஞ்சே.’ 8.


ஒன்பதாம் அதிகாரம்.

தமிழில் பாளிமொழிச் சொற்கள்

வாணிகம், மதம், அரசாட்சி முதலிய தொடர்புகளினாலே ஒரு தேசத்தாரோடு இன்னொரு தேசத்தார் கலந்து உறவாடும்போது அந்தந்தத் தேசத்து மொழிகளில் அயல்நாட்டுச் சொற்கள் கலந்துவிடுவது இயற்கை. வழக்காற்றிலுள்ள எல்லா மொழிகளிலும் வெவ்வேறு பாஷைச் சொற்கள் கலந்திருப்பதைக் காணலாம். இந்த இயற்கைப்படியே தமிழிலும் வெவ்வேறு மொழிச் சொற்கள் சில கலந்து வழங்குகின்றன. இவ்வாறு கலந்து வழங்கும் வேறுமொழிச் சொற்களைத் திசைச்சொற்கள் என்பர் இலக்கண ஆசிரியர்.

தமிழில் போர்ச்சுகீசு, ஆங்கிலம், உருது, அரபி முதலிய அயல்மொழிச் சொற்கள் சில கலந்துவிட்டது போலவே, பாகத (பிராகிருத) மொழிகளில் ஒன்றான பாளி மொழியிலிருந்தும் சில சொற்கள் கலந்து காணப்படுகின்றன. பாளி மொழி இப்போது வழக்காறின்றி இறந்து விட்டது. என்றாலும், பண்டைக் காலத்தில், வட இந்தியாவில் மகதம் முதலான தேசங்களில் அது வழக்காற்றில் இருந்துவந்தது. ‘தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன்’ எனப் போற்றப்படும் கௌதம புத்தர், இந்தப் பாளி மொழியிலேதான் தமது உபதேசங்களை ஜனங்களுக்குப் போதித்து வந்தார் என்பர். பாளி மொழிக்கு மாகதி என்றும் வேறு பெயர் உண்டு. மகத நாட்டில் வழங்கப்பட்டதாகலின், இப்பெயர் பெற்றது போலும். வைதீக மதத்தாருக்குச் சம்ஸ்கிருதம் ‘தெய்வ பாஷை’யாகவும் ஆருகதருக்குச் சூரசேனி என்னும் அர்த்த மாகதி ‘தெய்வ பாஷை’யாகவும் இருப்பதுபோல, பௌத்தர்களுக்கு மாகதி என்னும் பாளிமொழி ‘தெய்வபாஷை’யாக இருந்துவருகின்றது.

ஆகவே, பண்டைக் காலத்தில் எழுதப்பட்ட பௌத்த நூல்கள் எல்லாம் பாளிமொழியிலே எழுதப்பட்டுவந்தன. பிற்காலத்தில், மகாயான பௌத்தர்கள், பாளி மொழியைத் தள்ளி, சம்ஸ்கிருத மொழியில் தமது சமய நூல்களை இயற்றத் தொடங்கினார்கள். ஆனாலும், தென் இந்தியா, இலங்கை, பர்மா ஆகிய இடங்களில் உள்ள பௌத்தர்கள் தொன்று தொட்டு இன்று வரையில் பாளிமொழியையே தங்கள் ‘தெய்வ மொழி’யாகப் போற்றிவருகின்றார்கள். பௌத்த மதம், தமிழ் நாட்டில் பரவி நிலைபெற்றிருந்த காலத்தில், அந்த மதத்தின் தெய்வ பாஷையான பாளி மொழியும் தமிழ் நாட்டில் இடம் பெற்றது.

பாளிமொழி தமிழ் நாட்டில் இடம் பெற்றிருந்தது என்றால், தமிழ் நாட்டுப் பௌத்தர்கள் அந்த மொழியைப் பேசிவந்தார்கள் என்று கருதக்கூடாது. பாளிமொழி ஒரு போதும் தமிழ்நாட்டுப் பௌத்தப் பொது மக்களால் பேசப்படவில்லை. ஆனால், பௌத்தக் குருமாரான தேரர்கள் பாளிமொழியில் இயற்றப்பட்ட தமது மதநூல்களைப் படித்துவந்தார்கள். பிராமணர்கள், தமது மதவிஷயங்களை அறியத் தமது ‘தெய்வமொழி’யான சம்ஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட நூல்களைப் படிப்பதும், உலக நடவடிக்கையில் தமிழ், தெலுங்கு முதலான தாய்மொழிகளைக் கையாளுவதும் போல, பௌத்தப் பிக்ஷ¨க்களும் தமது மதநூல்களை மட்டும் பாளிமொழியில் கற்றும், உலக வழக்கில், தமிழ் நாட்டினைப் பொறுத்தமட்டில், தமிழ் மொழியைக் கையாண்டும்வந்தார்கள். இந்தப் பிக்ஷ்க்கள் பொது மக்களுக்குப் பாளிமொழி நூலிலிருந்து மத உண்மைகளைப் போதித்த போது, சில பாளிமொழிச் சொற்கள் தமிழில் கலந்து விட்டன.

இவ்வாறே, அர்த்த மாகதி என்னும் வேறு பாகத மொழிச் சொற்களும், சம்ஸ்கிருதமொழிச் சொற்களும் ஆருகத மதத்தவராகிய ஜைனர்களாலே தமிழில் கலந்துவிட்டன. ஆருகதரும் பௌத்தரும் தமிழை நன்கு கற்றவர். அதனோடு பாகத, சம்ஸ்கிருத மொழிகளையும் பயின்றவர். இதனை

‘ ஆகமத்தொடு மந்திரங்கள் அமைந்த சங்கத பங்கதமாப்

பாகதத்தோ டிரைத்துரைத்த சனங்கள் . . . . . . . . . . . . ‘

என்று சமணரைப்பற்றித் திருஞான சம்பந்தர் திருவாலவாய்ப் பதிகத்தில் கூறியிருப்பதனாலும் அறியலாம்.

மாகதி என்னும் பாளிமொழிச் சொற்கள் சில தமிழில் கலந்துள்ளன என்பதைத் தக்கயாகப் பரணி உரையாசிரியர் கூறியதிலிருந்தும் உணரலாம். 410-ஆம் தாழிசை உரையில், ‘ஐயை – ஆரி¢யை. இதன் பொருள் உயர்ந்தோளென்பது. ஆரியையாவது சங்கிருதம்; அஃது ஐயையென்று பிராகிருதமாய்த் திரிந்தவாறு; மாகதமென்னலுமாம்’ என்று எழுதியிருப்பதைக் காண்க. அன்றியும், 485-ஆம் தாழிசையுரையில் ‘தளம்=எழு; இது பஞ்சமா ரூடபத்திர தளம்; இது மாகதம்’ என எழுதியிருப்பதையுங் காண்க.

தமிழ்நாட்டிலே, காஞ்சீபுரம், காவிரிப்பூம்பட்டினம் (புகார்), நாகைப்பட்டினம், உறையூர், பூதமங்கலம், மதுரை, பாண்டி நாட்டுத் தஞ்சை, மானாவூர், துடிதபுரம், பாடலீபுரம், சாத்தமங்கை, போதிமங்கை, சங்கமங்கை, அரிட்டாபட்டி, பௌத்தபுரம் முதலான ஊர்களில் பாளிமொழியை நன்கறிந்திருந்த பௌத்த ஆசிரியர் பண்டைக்காலத்திருந்தனர் என்பது பௌத்த நூல்களாலும் பிற நூல்களாலும் தெரிய வருகின்றது. பாளிமொழியை நன்கு கற்றுத் தேர்ந்து, அந்த மொழியில் நூல்களை இயற்றிய தமிழ்நாட்டுப் பௌத்த ஆசிரியர்களின் வரலாற்றினைத் ‘தமிழ் நாட்டுப் பௌத்தப் பெரியார்’ என்னும் தலைப்பெயரையுடைய அதிகாரத்தில் காண்க. இது நிற்க.

தமிழில் கலந்து வழங்கும் பாளிமொழிச் சொற்கள் அனைத்தினையும் எடுத்துக்காட்ட இயலவில்லை. அவ்வாறு செய்வது தமிழ், பாளி என்னும் இருமொழிகளையும் நன்கு கற்றுத் தேர்ந்த அறிஞர்களால்மட்டுமே இயலும். ஆயினும், பாளிமொழிச் சொற்கள் தமிழில் அதிகம் இருப்பதாகத் தெரியவில்லை. யாம் அறிந்தமட்டில், தமிழில் வழங்கும் பாளிச்சொற்கள் சிலவற்றைக் கீழே தருகின்றோம் :

ஆராமம்

பூந்தோட்டம் என்பது பொருள். பௌத்தரின் பள்ளி, விகாரை, தூபி முதலியவை இருக்கும் இடத்தைச் சேர்ந்த பூஞ்சோலைகளுக்கு இப்பெயர் வழங்கப்பட்டதாகத் தெரிகின்றது. இச்சொல் மணிமேகலையில் வந்துள்ளது.

சமணர்

இப்பெயர் ஜைன, பௌத்தத் துறவிகளுக்குப் பொதுப்பெயர். ஆயினும், இப்போது தமிழ்நாட்டில் ஜைன மதத்தினரைமட்டும் குறிக்கத் தவறாக வழங்கப்படுகின்றது. வடமொழியில் இது ‘ஸ்ரமணர்’ என்று வழங்கப்படுகிறது. இச்சொல் தேவாரம், மணிமேகலை முதலிய நூல்களில் காணப்படுகின்றது.

சைத்தியம்; சேதியம்; தூபம்; தூபி

இச்சொற்கள் பௌத்தர் வணங்குதற்குரிய கட்டிடங்கள், ஆலயங்கள், முதலியவற்றைக் குறிக்கின்றன. ‘தூபம்’, ‘தூபி’ என்பனவற்றை ‘ஸ்தூபம்’, ‘ஸ்தூபி’ என்னும் வடமொழிச் சொற்களின் தமிழ்த் திரிபாகவும் கொள்ளலாம். ஆயினும், பாளிமொழியிலிருந்து தமிழில் வந்ததாகக் கொள்வதுதான் பொருத்த முடையது. இச்சொற்களை மணிமேகலை, நீலகேசி முதலிய நூல்களில் காணலாம்.

தேரன், தேரி

இவை பௌத்தத் துறவிகளில் மூத்தவர்களுக்கு வழங்கும் ஆண்பாற் பெண்பாற் பெயர்கள். இச்சொற்கள் மணிமேகலை, நீலகேசி, தேவாரம் முதலிய நூல்களில் வந்துள்ளன.

பிக்ஷ், பிக்ஷ்ணி

(பிக்கு, பிக்குணி) முறையே பௌத்த ஆண், பெண் துறவிகளைக் குறிக்கின்றன. மணிமேகலை, நீலகேசி முதலிய நூல்களில் இச்சொற்கள் காணப்படுகின்றன.

விகாரை, விகாரம்

பௌத்தக் கோயிலுக்கும், பிக்ஷ்க்கள் வாழும் இடத்துக்கும் பெயர்.

வேதி, வேதிகை

திண்ணை என்பது பொருள். அரசு முதலான மரங்களின்கீழ் மக்கள் தங்குவதற்காகக் கட்டப்படும் மேடைக்குப் பெயர்.

துயர் மிகு தருணத்தில் நம்பிக்கையோடு இருப்பது என்பது பைத்தியக்காரத்தனமான ஒரு எதிர்பார்ப்பு அல்ல,மாறாக மனித வரலாறு என்பது கொடுமைகளால் மட்டுமே நிறைந்த ஒன்று அல்ல,அது தியாகம்,வீரம்,கருணை, நேயம் என்பனவற்றாலும் நிறைந்த ஒன்று என்னும் உண்மையில் இருந்து வருவது.
Howard Zinn (1922- 2010)

ஆசீவக மதம்

அழிந்தொழிந்துபோன இந்த மதம் இப்போது முழுவதும் மறக்கப்பட்டிருப்பதால், இதைப்பற்றிக் கூறுவது அமைவுடைத்து.

பௌத்த, ஜைன, வைதீக மதங்களைப் போலவே, இந்த ஆசீவக மதமும் வட இந்தியாவில் தோன்றியது. இந்த மதத்தை உண்டாக்கினவர் மஸ்கரிபுத்திரர் என்பவர். பாளிமொழியில் இப்பெயர் மக்கலிபுத்த என்று வழங்கப்படுகின்றது. மாட்டுத் தொழுவம் என்று பொருள்படும் ‘கோசால’ என்னும் அடைமொழி கொடுத்துக் கோசால மக்கலிபுத்த என்றும் இவர் வழங்கப்படுவர். ஏனென்றால், இவர் மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார் என்று சொல்லப்படுகின்றது. தமிழ் நூல்கள் இவரை மற்கலி என்று கூறும்.

‘மக்கலி’ என்பது வடநாட்டில் பண்டைக் காலத்திலிருந்த இரந்துண்டு வாழும் ஒருவகைக் கூட்டத்தாருக்குப் பெயரென்றும், அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர், ஆகையால் இவருக்கு ‘மக்கலிபுத்திரர்’ என்னும் பெயர் வந்ததென்றும் சிலர் கூறுவர். ‘மக்கலி’ என்பது இவருடைய தந்தையின் பெயர், ஆகையால் இவருக்கு ‘மக்கலிபுத்திரர்’ என்னும் பெயர் வழங்கியதென்று வேறுசிலர் உரைப்பர்.

மக்கலி, அல்லது மற்கலி என்பவர், ஆருகத மதத்தை யுண்டாக்கிய மகா வீரரும், பௌத்த மதத்தையுண்டாக்கிய கௌதம புத்தரும் உயிர் வாழ்ந்திருந்த அதே காலத்தில் இருந்தவர். மகாவீரர் ஆருகத மதக்கொள்கையை உலகத்தாருக்குப் போதித்துவந்த காலத்தில், அவரது புகழையும் செல்வாக்கையும் கேள்வியுற்ற மற்கலி அவரிடம் சென்று அவரைச் சார்ந்திருக்க விரும்பினார். ஆனால், மற்கலியின் மாறுபட்ட ஒழுக்கங்களையும் குணங்களையும் அறிந்த மகாவீரர், அவர் தம்மைச் சார்ந்திருக்க உடன்படவில்லை. ஆயினும், மற்கலி எவ்வாறோ மகாவீரரது உடன்பாடு பெற்று, அவருடன் சில ஆண்டு தங்கியிருந்தார். பின்னர், அவருடன் மாறுபட்டுத் தனியே பிரிந்துபோய், ஒரு புதிய மதத்தை உண்டாக்கினார். அதுதான் ‘ஆசீவகமதம்’, அல்லது ‘ஆஜீவகமதம்’ என்பது. ஆருகதமதக் கொள்கைகள் சிலவற்றையும், தாம் உண்மை என்று கண்ட கொள்கைகளையும் திரட்டி மற்கலி இந்த மதத்தை உண்டாக்கினாரென்று சொல்லப்படுகின்றது.

சற்றேறத்தாழ கி. மு. 500-இல் மற்கலி காலமானார் என்று கருதப்படுகின்றது. இவர் காலஞ்சென்ற பதினாறு ஆண்டுகளுக்குப் பின்னர், மகாவீரர் வீடு பெற்றார் என்பர். மகாவீரர் வீடு பெற்ற சில ஆண்டுக்குப் பின்னர், கௌதம புத்தர் நிர்வாணம் அடைந்தார்.

ஆசீவகர், பௌத்தர், ஜைனர், வைதீகர் ஆகிய இந்த மதத்தவர்களுக்குள் எப்போதும் சமயப்பகை இருந்து கொண்டிருந்தது.

ஆசீவக மதக் கொள்கைகளைக் கூறும் நூலுக்கு ‘நவ கதிர்’ என்பது பெயர். இந்த நூலில் நில அணு, நீர் அணு, தீ அணு, வளி அணு, உயிர் அணு என்னும் ஐம்பொருளைப்பற்றிக் கூறியுள்ளதென்பர். கருமை, நீலம், செம்மை, பொன்மை, வெண்மை, தூய வெண்மை என்னும் ஆறுவகைப் பிறப்பு உண்டென்பதும் தூய வெண்மைப் பிறப்புத்தான் மிக உயர் நிலைப்பிறப்பென்பதும், இப்பிறப்பினை அடைந்தவர்தாம் வீட்டுலகம் சேர்வர் என்பதும் இந்த மதக்கொள்கை. எண்பத்து நான்கு லட்சம் மகா கல்பகாலம் வரையில் உயிர்கள் மீண்டும் மீண்டும் பிறந்திறந்து உழலுமென்றும், அந்தக் காலம் கடந்ததும் அவை வீடுபேறடையுமென்றும் இந்த நியதி மாறி உயிர்கள் வீடுபேறடையாவென்றும் கொண்டது இந்த மதம் என்பர். இந்த நியதிக்கு நூலுருண்டை உதாரணமாகக் கூறப்படும். ஒரு நூலுருண்டையைப் பிரித்தால், நூல் எவ்வளவு இருக்கிறதோ அவ்வளவு வரையில்தான் அது நீளுமே தவிர, அதற்குக் குறைவாகவோ அதிகமாகவோ நீளாதது போல, உயிர்கள் யாவும் மேற்சொன்ன நியதிக்குக் கட்டுப்பட்டே நடக்கும். நல்லறிவு பெற்று நல்ல செயல்களைச் செய்பவன் விரைவில் வீடுபெறான்; அவனுக்கு நியமிக்கப்பட்ட காலம் வரையில் அவன் பிறந்து இறந்து உழன்றே ஆகவேண்டும். மோட்சமடையும் நிலையிலிருக்கும் ஒருவன் கால நியதியைக் கடந்து, தீய கருமங்கள் செய்து மீண்டும் பிறந்திறந்து உழல விரும்பினாலும், அவன் அவ்வாறு செய்ய இயலாது என்பதும், அவனுக்கு ஏற்பட்ட நியதிப்படி அவன் வீடுபேறடைந்தாகவேண்டும் என்பதும் இம்மதக் கொள்கைகளில் சிலவாம்.

நவகதிரையன்றி, ‘ஆதித்தியம்’ என்னும் நூலும் இந்த மதத்தாருக்குண்டென்று தெரிகின்றது. இது, ‘ஆசீவக சங்க சமயத்தவருக்கு ஆதித்தியமென்பதொரு நூலுண்டு. மற்றது ஆதித்தனைப்பற்றியிருக்கும்; அது சோதி சாத்திரமெனவுணர்க. அன்றியேயும், ஆதித்தனைப் போல மீண்டும் அவர் வான மண்டல வரவுடையாரெனப் படுவர்’ என்று கூறும் தக்கயாகப் பரணி (183-ஆம் தாழிசை) உரைப் பகுதியினால் அறியப்படும்.

மற்கலிக்குப் ‘பூரணர்’ என்னும் பெயரும் உண்டு. களங்கமற்ற ஞானமுடையவராகலின், அவருக்கு இப்பெயர் உண்டாயிற்றென்பர். இந்தப் பூரணருடைய இயல்பு கீழ்க் கண்டவாறு ‘நீல கேசி’ என்னும் நூலில் கூறப்பட்டிருக்கின்றது.

‘உரையா னிறைவ னுணலு மிலனாய்த்
திரையா னரையான் றெரிவில் லுருவம்
வரையா வகை வானிடுவில் லனையன்
புரையா வறிவிற் புகழ் பூரணனே ’

(ஆஜீவக வாதச் சருக்கம் 15-ஆம் செய்யுள்.)

‘வாக்கியப் பிரவிருத்தியும், புத்தியும், நரை திரை முதலாயினவு முடையனல்லானாகி ஆகாச தலத்து இந்திர தனுசுப்போலத் தோன்றும் தோற்றத்தையுடையனாகிக் குற்றம்படாத வறிவையுடையவன் பூரணனென்னும் எம்முடைய ஆப்தன் என்றவாறு’ (மேற்படி உரை.)

ஆசீவக மதத் துறவிகள் முதுமக்கட் சாடியில் அமர்ந்து தவம் செய்தனர் என்பது தக்கயாகப் பரணியுரையினால் அறியப்படுகின்றது. இதனை,

‘தாழியிற் பிணங்களுந் தலைப்படா வெறுந்தவப்
பாழியிற் பிணங்குளுந் துளப்பெழப் படுத்தியே ’

என்னும் 376-ஆம் தாழிசைக்கு உரையாசிரியர், ‘தாழி – முதுமக்கட் சாடி * * * தாழியிற் பிணமென்றது, ஆருகதரிலே ஆசீவகர் பெருமிடாக்களிற் புக்குத் தவம் செய்வராதலின், அவரைச் சுட்டி நின்றது’ என்று எழுதியிருப்பதினின்றும் துணியலாம்.

மேலே காட்டிய உரைப் பகுதியில், ஆருகதரிலே ஆசீவகர் என்று காணப்படுகின்றது. அதாவது, ஆசீவகமதம் ஆருகத மதமாகிய ஜைன மதத்தின் ஒரு பிரிவு என்று கூறப்பட்டிருக்கின்றது. ஆனால், ‘மணிமேகலை’, ‘நீலகேசி’ என்னும் நூல்களில், ஆருகதமதம் (ஜைனம்) வேறு, ஆசீவகமதம் வேறு என்று தௌ¤வாகக் கூறப்பட்டிருக்கின்றது. ஆனால், பிற்காலத்தில் இந்த மதம் ஜைன மதத்தின் ஒரு பிரிவு எனத் தவறாகக் கருதப்பட்டது. இந்தத் தவறுதலைத்தான் மேலே காட்டியபடி தக்கயாகப் பரணியுரையாசிரியர் எழுதியிருக்கிறார். நிகண்டுகளும் ஆசீவக மதம் ஆருகத மதத்தின் பிரிவு என்றே கூறுகின்றன.

‘சாவகர் அருகர் சமணர் ஆகும் ;
ஆசீ வகரும் அத்தவத் தோரே ’ – சேந்தன் திவாகரம்.

‘சாவகர் அருகர் சமணர் அமணர் ;
ஆசீவகர் தாபதர் அத்தவத் தோரே ’ – பிங்கல நிகண்டு.

‘சிவஞான சித்தியார்’ என்னும் சைவ சமய நூலிலே, இந்த மதம் ஜைன மதத்தின் பிரிவுகளில் ஒன்றான திகம்பர ஜைன மதம் என்று தவறாகக் கூறியிருக்கின்றது. இந்தத் தவற்றினை ஞானப்பிரகாசர் என்னும் உரையாசிரியர் எடுத்துக் காட்டியிருக்கின்றார். ‘திகம்பரமொப்பினும் அநேகாந்த வாதிகளாகிய நிர்க்கந்த ஆசீவகனென்க’ என்று எழுதியிருக்கிறார். அதாவது, ஆசீவகர் ஜைனரில் திகம்பரரை (நிர்க்கந்தரை)ப்போன்ற கொள்கையுடையவரெனினும், அவரின் வேறானவர் என்று விளக்கியுள்ளார். ‘மணிமேகலை’, ‘நீல கேசி’ என்னும் இரண்டு நூல்களைத் தவிர, பிற்காலத்து நூல்களாகிய ‘சிவஞான சித்தியார்’, ‘தக்கயாகப் பரணி’, ‘திவாகரம்’, ‘பிங்கல நிகண்டு’ முதலானவை ஆசீவகமதத்தை (திகம்பர) ஜைன மதம் என்றே கூறுகின்றன. இவ்வாறு கருதப்பட்டதற்குக் காரணம் ஆசீவக மதத்தவரும் திகம்பர ஜைன மதத்தவரும் மேற்கொண்டுவந்த பொதுவான சில கொள்கைகளாகும். உடையின்றி இருத்தலும், குளியாமல் அழுக்குடம்போடு இருத்தலும், இவை போன்ற சில வெளிப்பார்வைக்குப் பொதுவாகத் தோன்றிய கொள்கைகளைக் கண்டு, இவ்விரு சமயத்தவரும் ஒரே சமயத்தவரென்று தவறாகக் கருதப்பட்டிருக்கலாம். வெளியொழுக்கத்தில் ஒன்றாகத் தோன்றினாலும், இவ்விருவருடைய தத்துவக் கொள்கைகள் வெவ்வேறானவை. இவ்வாறு ஆசீவக மதத்தினர் திகம்பர ஜைன மதத்தினராகப் பிற்காலத்தில் தவறாகக் கருதப்பட்டது தமிழ்நாட்டில் மட்டுமல்ல; வடநாட்டிலும் அவர் இவ்வாறே கருதப்பட்டுவந்தனர்.

இந்த மதத்தைப்பற்றிய உண்மை வரலாறுகளும் கொள்கைகளும் இப்போது முழுதும் கிடைக்கவில்லை. இப்போது கிடைப்பன எல்லாம் இந்த மதத்தின் பகைவர்களால் எழுதப்பட்டவை. ஆகவே, நடுநின்று கூறாமல் சார்பு பற்றிக் கூறியுள்ளன என்று கருதப்படுகின்றது. ‘மணிமேகலை’ என்னும் பௌத்த நூலிலும் (சமயக் கணக்கர் தந்திறங் கேட்ட காதை), ‘நீலகேசி’ என்னும் ஜைன நூலிலும் (ஆசீவக வாதச் சருக்கம்), ‘சிவஞானசித்தியார்’ என்னும் சைவ நூலிலும் (பரபக்கம் ஆசீவகமதம்) இந்த மதக்கொள்ளைகளை எடுத்துக்கூறி மறுக்கப்பட்டுள்ளன. இந்த மதத்தைப்பற்றி அறிய விரும்புவோர்க்கு மேற்சொன்ன தமிழ் நூல்களும், Encylopaedia of Religion and Ethics by James Hastings என்னும் ஆங்கில நூலும் உதவிபுரியும்.

இந்த மதம் தமிழ்நாட்டிலும் ஒரு காலத்தில் பரவியிருந்தது, தமிழ்நாட்டிலே சமதண்டம் என்னும் ஊரிலே இந்த மதத் தலைவர்கள் இருந்ததாக ‘நீலகேசி’ என்னும் நூல் கூறுகின்றது. கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த கோவலனுடைய மாமனும், கண்ணகியின் தந்தையுமாகிய மாநாய்கன் என்னும் செல்வத்தில் மேம்பட்ட வணிகன், கோவலனும் கண்ணகியும் உயிர்நீத்த செய்தி கேட்டு, உலகத்தை வெறுத்துத் தனது பெருஞ் செல்வமெல்லாவற்றையும் தானம் செய்துவிட்டு, ஆசீவக மதத்திற் சேர்ந்து துறவுபூண்டதாகச் சிலப்பதிகாரம் கூறுகின்றது.

‘கண்ணகி தாதை கடவுளர் கோலத்
தண்ணலம் பெருந்தவத் தாசீவகர் முன்
புண்ணிய தானம் புரிந்தறங் கொள்ளவும் ’ – (நீர்ப்படைகாதை.)

எனவரும் அடிகளால் இதனை அறியலாம்.

இராச இராச சோழன் காலத்தில் பொறிக்கப்பட்ட சிலா சாசனங்களில் ‘ஆசுவ கடமை’ என்னும் ஆயம் (வரி) குறிக்கப்பட்டிருப்பதைக் கொண்டு, ஆசீவகமதத்தாருக்கு அக்காலத்தில் ஆயம் விதிக்கப்பட்டிருந்ததாகக் கூறுவர் சிலர். இதை மறுத்து, சாசனங்களில் கூறப்பட்டுள்ள ‘ஆசுவ கடமை’ என்பது செம்பு அல்லது பித்தளைப் பாத்திரங்களைச் செய்யும் கன்னாருக்கு விதிக்கப்பட்ட வரியைக் குறிக்குமே தவிர, ஆசீவக மதத்தாருக்கு விதிக்கப்பட்ட ஒருவரியைக் குறியாது என்றும், அவ்வாறு கூறுவது தவறு என்றும் பேராசிரியர் திரு. சக்கரவர்த்தி நயினார் அவர்கள் தாம் பதிப்பித்துள்ள ‘நீலகேசி’யின் ஆங்கில முன்னுரையில் விளக்கமாக எழுதியிருக்கின்றார்கள். ஆகவே, ஆசீவக மதத்தாருக்கு இறை விதிக்கப்பட்டிருந்ததாகக் கருதுவது தவறாகும்.

தொடர்புரை 3.

சாத்தனார் – ஐயனார்.

‘சாத்தன்’, அல்லது ‘சாத்தனார்’ என்னும் பெயர் ‘சாஸ்தா’ என்னும் வடமொழிப் பெயரின் திரிபு. ‘சாஸ்தா’ என்பது புத்தருக்குரியபெயர்களுள் ஒன்று என்பது ‘அமரகோசம்’, ‘நாமலிங்கானுசாசனம்’ முதலிய வடமொழி நிகண்டுகளால் அறியப்படும். எனவே, ‘சாஸ்தா’ என்னும் சொல்லின் திரிபாகிய ‘சாத்தன்’ என்னும் பெயர் புத்தரைக் குறிக்கும் பெயராகப் பண்டைக் காலத்தில் வழங்கப்பட்டுவந்தது. இந்தப் பெயரைப் பௌத்த மதத்தினர் பெரும்பான்மையும் தத்தம் சிறுவருக்குச் சூட்டினர். பண்டைக் காலத்தில், அதாவது கடைச்சங்க காலத்தில், தமிழ் நாட்டிலிருந்த பௌத்தர்கள் ‘சாத்தன்’ என்னும் பெயரைப் பெரும்பாலும் மேற்கொண்டிருந்தனர் என்பது சங்க நூல்களினின்றும் தெரியவருகின்றது. பௌத்த நூலாகிய ‘மணிமேகலை’யை இயற்றியவர் பௌத்த மதத்தினர் என்பதும், அவரது பெயர் ‘சாத்தனார்’ என்பதும் ஈண்டுக் கருதத்தக்கது.

கோவலன் என்னும் ‘சிலப்பதிகார’க் கதைத் தலைவனுடைய தந்தை ‘மாசாத்துவன்’ என்னும் பௌத்தன் என்பதும், கோவலன் கொலையுண்டபின், மாசாத்துவன் பௌத்த பிக்ஷ்வாகித் துறவுபூண்டான் என்பதும் ஈண்டு நோக்கற்பாலன. மற்றும், ‘பெருந்தலைச் சாத்தனார்’, ‘மோசி சாத்தனார்’, ‘வடமவண்ணக்கன் பெருஞ்சாத்தனார்’, ‘ஒக்கூர்மா சாத்தனார்’, ‘கருவூர்க் கந்தப்பிள்ளை சாத்தனார்’ முதலான சங்ககாலத்துப் புலவர்களும் பௌத்தர்களாக இருந்திருக்கக்கூடும் என்று, அவர்கள் கொண்டிருந்த ‘சாத்தன்’ என்னும் பெயரைக்கொண்டு கருதலாகும்.

கொங்கண நாடாகிய துளுவதேசத்தில் உள்ள சில கோவில்களுக்குச் ‘சாஸ்தாவு குடி’ என்றும், ‘சாஸ்தா வேஸ்வரம்’ என்றும், ‘சாஸ்தாவு கள’ என்றும் பெயர்கள் வழங்கப்படுகின்றன என்றும், இவை யாவும் பண்டைக் காலத்தில் பௌத்தக் கோயில்களாக இருந்தன என்றும், பௌத்த மதம் அழிவுண்ட பின்னர் இந்தக் கோயில்கள் இந்துமதக் கோயில்களாக மாற்றப்பட்டன என்றும் கூறப்படுகின்றது இதனை உறுதிப்படுத்துகின்றது. இப்பொழுதும் மலையாள நாட்டில் சாஸ்தா கோயில்கள் உண்டு. இவற்றிற்குச் ‘சாத்தன் காவுகள்’ என்று பெயர். (காவு = கா = தோட்டம், அல்லது பூஞ்சோலை என்பது பொருள்) பண்டைக் காலத்தில் தமிழ்நாட்டிலிருந்த பௌத்தக் கோயில்கள் பூஞ்சோலைகளின் நடுவில் அமைக்கப்பட்டிருந்ததாகப் பண்டை நூல்களினால் தெரிகின்றது. இவற்றிற்கு ‘ஆராமம்’ (பூங்தோட்டம்) என்று பெயர் வழங்கிவந்தன. மலையாள நாட்டிலுள்ள சாத்தன் காவுகளும் பண்டைக் காலத்தில் பௌத்தக்கோயில்களாக இருந்து, இப்போது இந்துமதக் கோயில்களாக மாற்றப்பட்டவை என்பது ஆராய்ச்சிவல்லோர் கருத்து.

சாத்தனாருக்கு ‘ஐயப்பன்’ என்னும் பெயரும் மலையாள தேசத்தில் வழங்கிவருகின்றது. காவிரிப்பூம்பட்டினத்திலும் சாத்தன் கோயில் இருந்ததாகச் சிலப்பதிகாரத்தினால் தெரிகின்றது. ‘சாஸ்தா’, அல்லது ‘சாத்தன்’ என்னும் வட சொல்லிற்கு நேரான தமிழ்ச்சொல் ‘ஐயன்’, அல்லது ‘ஐயனார்’ என்பது. ‘ஐயன்’ என்பதற்கு உயர்ந்தோன், குரு, ஆசான் என்பன பொருள். பௌத்தமதம் அழிந்த பின்னர், அம்மதக்கொள்கைகளையும் தெய்வங்களையும் இந்து மதம் ஏற்றுக்கொண்டபோது, வெவ்வேறு கதைகள் கற்பிக்கப்பட்டன. வைணவர் புத்தரைத் திருமாலின் ஓர் அவதாரமாகவே வெளிப்படையாக ஒப்புக்கொண்டனர். சைவ சமயத்தோர், புத்தராகிய சாத்தனாரைத் திருமாலுக்கும் சிவபெருமானுக்கும் பிறந்த பிள்ளையாகக் கற்பித்து, சாத்தனாரைத் தமது தெய்வக்குழாங்களில் ஒருவராகச் சேர்த்துக்கொண்டனர். அப்பர் சுவாமிகளும் தமது தேவாரத்தில் சாத்தனாரைச் சிவபெருமானின் பிள்ளை என்றே கூறியிருக்கின்றார்.

‘ பார்த்தனுக் கருளும்வைத்தார் பாம்பரை யாடவைத்தார்
சாத்தனை மகனா வைத்தார் சாமுண்டி சாமவேதங்
கூத்தொடும் பாடவைத்தார் கோளராமதிய நல்ல
தீர்த்தமுஞ் சடைமேல் வைத்தார் திருப்பயற்றூரனாரே ’

என வரும் தேவாரத்தினாலே இதனை அறியலாம்.

பிற்காலத்தில், ‘சாத்தனார்,’ ‘ஐயனார்’, ‘அரிஹரபுத்திர்’ என்னும் இத்தெய்வத்தைக் கிராம தெய்வமாகச் செய்து, பண்டைப் பெருமையைக் குலைத்துவிட்டனர்.

‘சாத்தன்,’ அல்லது ‘சாஸ்தா’ என்று புத்தருக்குப் பெயர் கொடுக்கப்பட்டதன் காரணம் என்னவென்றால், அவர் எல்லாச் சாஸ்திரங்களையும் கற்றவர் என்னும் கருத்துப் பற்றி என்க. சிலப்பதிகாரம், கனாத்திற முரைத்த காதையில், ‘பாசண்டச் சாத்தற்குப் பாடுகிடந்தாளுக்கு’ எனவரும் அடியில், ‘பாசண்டச் சாத்தன்’ என்னும் சொல்லுக்கு அடியார்க்கு நல்லார் எழுதும் உரை வருமாறு : “பாசண்டம் தொண்ணூற்றாறு வகைச் சமய சாத்திரத் தருக்கக் கோவை. இவற்றிற்கு முதலாயுள்ள சாத்திரங்களைப் பயின்றவனாதலின், மகாசாத்திர’னென்பது அவனுக்குப் பெயராயிற்று.” இவர் கூறும் உரைக்கேற்பவே பௌத்தர்களும், புத்தர் பல நூல்களைக் கற்றவர் என்று கூறுவர். இதனை வற்புறுத்தியே, ‘சூடாமணி நிகண்டும்,’

‘அண்ணலே மாயாதேவிசுதன் அகளங்க மூர்த்தி
நண்ணியகலைகட் கெல்லாம்நாதன் முக்குற்ற மில்லோன் ’

என்று கூறுகின்றது. ‘அருங்கலை நாயகன்’ என்று திவாகரம் கூறுகின்றது. நாகைப்பட்டினத்தில் கண்டெடுக்கப்பட்ட புத்தர் உருவச்சிலையொன்றன் பீடத்தில், ‘ஸ்வஸ்தி ஸ்ரீ ஆகம பண்டிதர் உய்யக்கொண்ட நாயகர்’ என்று எழுதியிருப்பது (படம் 3) காண்க. புத்தர் சகல சாஸ்திரங்களையும் கற்று வல்லவர் என்பதும், அதுபற்றியே அவருக்குச் ‘சாஸ்தா’, அல்லது ‘மகா சாஸ்தா’ என்னும் பெயருண்டென்பதும் அறியப்படும். ‘லலிதாவிஸ்தார’ என்னும் பௌத்த நூலிலும் புத்தர் பலகலைகளைக் கற்றவர் என்று கூறப்பட்டுள்ளதென்று கூறுவர். இன்னுமொரு கண் கூடான சான்று யாதெனில், காஞ்சீபுரத்திலுள்ள காமாட்சியம்மன் கோயிலின் உட்பிராகாரத்தில் இருந்த புத்தர் உருவச் சிலைக்குச் ‘சாஸ்தா’ என்னும் பெயர் உள்ளதுதான். (படம் 6 காண்க.) இச்சாஸ்தாவைப்பற்றிக் ‘காமாட்சிலீலாப் பிரபாவம்’ என்னும் காமாக்ஷ¤ விலாசத்தில், ‘காமக்கோட்டப் பிரபாவத்தில்’, ‘தேவியின் (காமாட்சி தேவியின்) தன்யபானஞ் செய்து (முலைப்பால் அருந்தி) சுப்பிரமணியரைப் போலான சாஸ்தா ஆலயம்’ காமாட்சியம்மன் கோயிலில் இருக்கிறதாகக் கூறப்பட்டுள்ளது. * ‘சாஸ்தா’ என்பவரும் ‘புத்தர்’ என்பவரும் ஒருவரே என்பதற்கு இதுவே போதுமான ஆதாரம். இன்னும் சில ஆதாரங்கள் உண்டு. அவை விரிவஞ்சி விடப்பட்டன.

‘சாஸ்தா’ என்னும் புத்தருடைய கோயில்களை ‘ஐயனார் கோயில்கள்’ என்றும், ‘சாதவாகனன் கோயில்கள்’ என்றும் சொல்லி, பிற்காலத்து இந்துக்கள் நாளடைவில் அவற்றைக் கிராமதேவதையின் கோயில்களாக்கிப் பெருமை குன்றச் செய்துவிட்டது போலவே, ஏனைய சில புத்தப் பெயர்களுக்கும் வேறு பொருளும் கதையும் கற்பித்து அவற்றையும் மதிப்பிழக்கச் செய்துவிட்டதாகத் தெரிகின்றது. சில இடங்களில் புத்தரை முனீஸ்வரன் ஆக்கிவிட்டனர். தென்னாட்டில், ‘தலைவெட்டி முனீஸ்வரன்’ கோயில் என ஒன்று உண்டென்றும், அக்கோயிலில் உள்ள உருவம் புத்தரின் உருவம்போன்றுள்ளதென்றும் சொல்லப்படுகின்றது. இப்பொழுது காணப்படும் ‘தருமராஜா கோயில்கள்’ என்பனவும் பண்டொருகாலத்தில் பௌத்தக் கோயில்களாயிருந்திருக்கவேண்��
ும் என்று தோன்றுகின்றது. ‘தருமன்,’ அல்லது ‘தருமராசன்’ என்பதும் புத்தருக்குரிய பெயர்களில் ஒன்று, பிங்கல நிகண்டில் ‘தருமன்’ என்றும், திவாகரத்திலும் நாமலிங்கானுசாசனத்திலும் ‘தர்மராஜன்’ என்றும் புத்தருக்கு வேறு பெயர் கூறப்பட்டுள்ளது. இது தமிழ் நிகண்டுகளினாலும் அறியப்படும்.

இந்தத் தருமராஜா கோயில்களான பௌத்தக் கோயில்கள், இந்துமதம் செல்வாக்குப் பெற்ற காலத்தில், பஞ்சபாண்டவரில் ஒருவரான தருமாராஜா கோயிலாகக் கற்பிக்கப்பட்டுப் பலராலும் நம்பப்பட்டன. தருமராஜா கோயில்களில், பௌத்தர் போற்றும் ‘போதி’ என்னும் அரச மரங்கள் இன்றைக்கும் காணப்படுவதே, தருமராஜா கோயில்கள் பண்டைக் காலத்தில் பௌத்தக் கோயில்கள் என்பதை விளக்கும். சமீபகாலம் வரையில் பௌத்தமதம் நிலைபெற்றிருந்த வங்காளத்திலே, இப்பொழுதும் சில பௌத்தக் கோயில்களுண்டென்றும், அக்கோயில்களில் உள்ள புத்தவிக்கிரகங்களுக்குத் ‘தருமராஜா’, அல்லது ‘தருமதாகூர்’ என்று பெயர் வழங்கப்படுகின்றதென்றும் அறிகின்றோம். எனவே, தமிழ் நாட்டிலுள்ள இப்போதைய தருமராஜா கோயில்கள் பண்டைக்காலத்தில் பௌத்தக் கோயில்களாயிருந்திருக்கவேண்டும்.
ஆம் என்று கருதப்படும்.

இவ்வாறே, தாராதேவி, மங்கலாதேவி, சிந்தாதேவி முதலான பௌத்த தெய்வங்களின் கோயில்களும், பிற்காலத்தில் இந்துக்களால் பகவதி கோயில்களாகவும் கிராமதேவதை கோயில்களான அம்மன் கோயில்களாகவும் மாற்றப் பட்டனவாகத் தெரிகின்றன. தாராதேவி கோயில் திரௌபதையம்மன் கோயிலென இப்பொழுது வழங்கப்படுகின்றது. ‘தருமராஜா’ என்னும் பெயருள்ள புத்தர் கோயில், பிற்காலத்தில், பாண்டவரைச் சேர்ந்த தருமராஜா கோயிலாக்கப்பட்டது போல, ‘தாராதேவி’ என்னும் பௌத்த அம்மன் கோயில், தருமராஜாவின் மனைவியாகிய திரௌபதையின் கோயிலாக்கப்பட்டதுபோலும்.

சுருக்கமாகச் சொல்லுவதென்றால், இப்போது திருமால் கோயில்கள் அவ்வவ்விடங்களில் ‘வரதராசர் கோயில்’, ‘திருவரங்கர் கோயில்’, ‘வேங்கடேசர் கோயில்’ முதலிய வெவ்வேறு பெயர்களுடனும், சிவபெருமான் கோயில்கள் ‘கபாலீஸ்வரர் கோயில்’, ‘தியாகராசர் கோயில்’, ‘சொக்கலிங்கர் கோயில்’ முதலான வெவ்வேறு பெயர்களுடனும் வழங்கப்படுவது போலவே, பண்டைக்காலத்தில், பௌத்தக் கோயில்களும் புத்தருடைய பல பெயர்களில் ஒவ்வொன்றன் பெயரால் ‘தருமராசா கோயில்’, ‘சாத்தனார் கோயில்’, ‘முனீஸ்வரர் கோயில்’ என்பன போன்ற பெயர்களுடன் வழங்கப்பட்டுவந்தன என்றும், பிற்காலத்தில், இந்துமதம் செல்வாக்குப் பெற்றபோது, அவை இந்துமதக் கோயிலாகச் செய்யப்பட்டு, இந்துமத தொடர்பான கதைகளுடன் இணைக்கப்பட்டு, பின்னும் நாளடைவில் அவை கிராம தேவதை கோயில்கள் என்னும் நிலையில் தாழ்ந்த நிலைக்குக் கொண்டுவரப்பட்டனவென்றும் தோன்றுகின்றது.
______________________________________________________________
* காஞ்சிக் காமாட்சி அம்மன் கோயில் உட் பிராகாரத்தில் இருந்த இந்த ‘சாஸ்தா’ என்னும் புத்தர் உருவச்சிலை இப்போது சென்னைப் பொருட்காட்சிச் சாலையில் இருக்கின்றது.

About editor 2991 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply