முள்ளிவாய்க்காலில் சரண் அடைந்த விடுதலைப் புலித் தளபதிகள் போராளிகள் எங்கே?

முள்ளிவாய்க்காலில் சரண் அடைந்த விடுதலைப் புலித் தளபதிகள் போராளிகள் எங்கே?

அய்நா மனிதவுரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை அவர்களின் வருகையின் எதிரொலியாக வடக்கு, கிழக்கில் காணாமல் போயுள்ளதாகக் கூறப்படும் 2 ஆயிரத்து 550 பேர் தொடர்பான விசாரணைகளை உடனடியாகத் தொடங்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் என். பெர்ணான்டோ பயங்கரவாதப் புலனாய்வப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார். பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர், காணாமல் போனவர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய இரகசிய ஆவணத்தை நீதிமன்றத்தில் கையளித்தார். அதனை நீதிமன்றத்தில் பாதுகாப்பாக வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

srilanka killing fields new

காணாமல் போயுள்ள 2550 பேர் தொடர்பில் சிறப்பு விசாரணைகளை நடத்த பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் விடுத்த கோரிக்கையை கவனத்தில் எடுத்து கொண்ட நீதவான் அதற்கான அனுமதியை வழங்கினார்.

அத்துடன் விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார். இந்த நடவடிக்கை அய்யன்நா மனிதவுரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை அவர்களின் வருகையின் நிமித்தம் எடுக்கப்படும் ஒரு கண்துடைப்பு நடவடிக்கை என்றே எண்ண வேண்டியுள்ளது.

இதே சமயம் இறுதிப் போரின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போயிருப்பவர்கள் தொடர்பில் வவுனியா மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 5 ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பான விசாரணைகள் திங்களன்று (ஓகஸ்ட் 26, 2013) நடைபெற்றுள்ளது. போரின் முடிவில் சிறிலங்காப் படையினரிடம் சரணடைந்த தமது உறவுகள் எங்கே என்று கண்டுபிடிக்கக் கோரி அவர்களின் உறவினர்கள் இந்த ஆட்கொணர்வு மனுக்களை சமர்ப்பித்துள்ளனர்.

2009 மே 18 ஆம் நாள், முல்லைத்தீவு செல்வபுரத்தில், சிறிலங்கா படையினரிடம் சரணடைந்த 800 பேர் பேருந்து ஒன்றில் ஏற்றிச் செல்லப்பட்டதாகவும் அவர்கள் எங்கே என்பது இன்று வரை தெரியவில்லை என்றும் மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அதேவேளை, மேலும் புதிதாக 7 ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு அவை நீதிமன்றத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன. இந்த ஆட்கொணர்வு மனுக்களில் பல புதிய செய்திகள் நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட்ருப்பதாக இந்த வழக்குகள் சார்பில் நீதிமன்றத்தில் தோன்றிய மூத்த சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் தெரிவித்தார்.

விடுதலைப்புலிகளின் முன்னாள் திருகோணமலை அரசியல்துறை பொறுப்பாளர் எழிலன் உட்பட்டவர்கள் சார்பிலான முதல் 5 ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பில் எதிர் மனு தாக்கல் செய்வதற்கு எதிரணித் தரப்பினருக்கு கடைசி சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது. எனினும், இன்னும் இரண்டு நாட்களில் அந்த எதிர்மனு தாக்கல் செய்யப்படும் என்று அரச தரப்பு சட்டத்தரணி தெரிவித்ததையடுத்து, நீதிமன்றம் இந்த வழக்குகளை வரும் செப்டம்பர் மாதம் 12 ஆம் திகதிக்கு தள்ளிவைத்திருக்கின்றது.

இறுதிப் போரின் போது இந்தியக் கொடி தாங்கிய கப்பலில் இருந்து கரையில் பொதுமக்கள் பகுதி மீது குண்டுகள் வீசப்பட்டதாக வவுனியா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு ஒன்றில் கூறப்பட்டிருப்பதாக சட்டத்தரணி ஒருவர் தெரிவித்துள்ளார். “இந்த மனுக்களை இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் போயுள்ளவர்களின் குடும்ப உறவினர்கள் தாக்கல் செய்துள்ளார்கள்” என்றார் சட்டத்தரணி இரட்னவேல்.

‘அது மட்டுமன்றி, கொத்துக்குண்டுகளும் இரசாயன குண்டுகளும் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ள மனுதாரர்கள் தங்களின் கண் முன்னாலேயே இவற்றால் பாதிக்கப்பட்டவர்களுடைய முகங்கள், உடல்கள் விகாரமடைந்து, துன்பமடைந்து அவர்கள் மரணமடைந்ததைக் கண்டதாகவும் முதன் முறையாகத் தெரிவித்திருக்கின்றார்கள்’ என்றும் சட்டத்தரணி ரட்ணவேல் தெரிவித்தார்.

இந்த வழக்குகள் யாவும் வரும் செப்தெம்பர் மாதம் 12 ஆம் நாளுக்கு நீதிமன்றத்தினால் ஒத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.

போர்க் காலத்திலும் போர் முடிந்த பின்னரும் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் காணாமல் போயுள்ளார்கள். இதில் யாதொரு தடயமும் இல்லாமல் காணாமல் போனவர்கள் இருக்கிறார்கள். இராணுவம் கைது செய்தபின்னர் காணாமல் போனவர்களும் இருக்கிறார்கள்.

காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 2,550 என்பது பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்துக்குக் கொடுத்திருக்கும் தகவல். ஆனால் உண்மையான எண்ணிக்கை இதைவிட பல மடங்கு அதிகமாக இருக்கும். பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினர் கொடுத்திருக்கும் பட்டியல் கூட இரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது. அது பகிரங்கப்படுத்தினால் மட்டுமே யார் யார் காணாமல் போனவர்கள் பட்டியலில் இருக்கிறார்கள், யார் யார் அந்தப் பட்டியலில் இல்லை என்ற உண்மை வெளிவரும்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்திய காலத்தில் காணாமல் போனவர்களது பட்டியல் வவுனியாவில் வைத்து வெளியிடப்படும் என ஒருமுறைக்கு இருமுறை வாக்குறுதி அளிக்கப்பட்டது. ததேகூ மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் வவுனியாவில் குறித்த நாட்களில் காத்திருந்தார்கள். ஆனால் வாக்குறுதி அளித்தவாறு பட்டியல் வெளியிடப்படவில்லை. மக்கள் ஏமாந்தார்கள் அல்லது ஏமாற்றப்பட்டார்கள்.

முப்பது ஆண்டுகால ஆயுதப் போர் முடிவுக்கு வந்த போது இராணுவம் விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளையும் போராளிகளையும் பொது மக்களையும் சரண் அடையுமாறு அறிவித்தது. இந்த அறிவித்தலை அடுத்து மே 16, 17, மே 18 நாட்களில் ஆயுதங்களை மவுனித்துவிட்டு விடுதலைப் புலிகள் இராணுவத்திடம் சரண் அடைந்தார்கள்.ramesh

மே 18, 2009 அதிகாலை அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் தலைமையில் திருமதி நடேசன், தமிழீழவிடுதலைப் புலிகளின் முன்னாள் கிழக்கு மாகாண சிறப்புத் தளபதி கேணல் இரமேஷ், தமிழீழ காவல்துறையின் பொறுப்பாளார் இரமேஷ் (இளங்கோ), சமாதான செயலகத்தின் பொறுப்பாளர் சீவரட்னம் புலித்தேவன் மற்றும் 300 போராளிகள் வெள்ளைக் கொடியுடன் சரண் அடைந்தார்கள்.

இவர்களது சரண் அய்யன்னா அதிகாரி விஜய் நம்பியாரின் மேற்பார்வையில் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக விஜய் நம்பியார் சனாதிபதி மகிந்த இராசபக்சே மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய இராசபக்சே ஆகியோருடன் பேசினார். விடுதலைப் புலிகள் வெள்ளைக் கொடியுடன் சரண் அடையுமாறு அறிவுறுத்தப்பட்டது.

அரசியல்துறைப் பொறுப்பாளர் ப.நடேசன் உட்பட தமிழீழ காவல்துறைப் பொறுப்பாளர் இரமேஷ் அவர்களும் இலங்கை இராணுவத்திடம் மே 18 காலை சரணடைந்ததாக அன்றைய வெளியுறவுச் செயலாளர் பாலித கோஹன தெரிவித்திருந்தார். ஆனால் பின்னர் அதனை அவர் மறுத்துவிட்டார்.

மே 18 காலை மக்களுடன் மக்களாக சரணடைந்த பா. நடேசன், கேணல் இரமேஷ், புலித்தேவன் போன்றோர் உயிருடன் இருக்கின்றனரா இல்லையா என்ற சர்ச்சை நீடித்துவந்த பின்புலத்தில் பா.நடேசன் ஆகியோருடன் இலங்கைப் படையினரது கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் சென்றதாக நம்பப்படும் கேணல் இரமேஷ் அவர்களை படையினர் தடுத்து வைத்து கடும் தொனியில் விசாரணை செய்யும் காணொளிகள் வெளிவரத் தொடங்கின.k v balakumaran

கேணல் ரமேஷ் அவர்களை சிறீலங்கா இராணுவம் மே மாதம் 22 ஆம் நாள் விசாரணைக்கு உட்படுத்தியது. அப்போது எடுக்கப்பட்ட காணொளிகள் வெளியாகி இருந்தன. அதில் இரமேஷ் அவர்கள் சாதாரண உடையில் இருந்தார். ஆனால் விசாரணை நடைபெறும் வேளை அவரை சிறீலங்கா இராணுவம் இராணுவ உடையை போடச் சொல்கிறது. அதனை அடுத்து அவர் இராணுவத்தின் சீருடையை அணிகிறார். அக் காட்சிகள் தெள்ளத் தெளிவாக காணொளில் பதிவாகியுள்ளது. இராணுவத்தின் சீருடையை அவர் அணியும்போது அவரை “டேய்” என்று விளித்து இராணுவம் அவமானப்படுத்துகிற காட்சியும் பதிவாகியுள்ளது.

இராணுவம் தன்னை விசாரணை செய்யும் ஆனால் அடித்துக் கொலை செய்யும் என இரமேஷ் எதிர்பார்த்திருக்க மாட்டார். அதனால் தன்னைக் கொலை செய்ய இராணுவம் முடிவு செய்துவிட்டது என்பது இரமேஷ் அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. இராணுவம் ஏதோ அவரிடம் முழுப்பெயரைக் கேட்டுத் தெரிந்துகொண்டு, அதனை எழுதி விசாரணை நடத்துவது போல நாடகமாடியது. சரணடைந்த தன்னை இராணுவம் கொல்லாது என நினைத்த தளபதி இரமேஷ் அவர்களை சிறீலங்கா இராணுவம் கடுமையாக தாக்கி வதை செய்து கொலைசெய்தது. விசாரணையின் போது அவர் அணிந்த இராணுவ உடையில் தான் அவர் இறந்து கிடக்கும் புகைப்படம் வெளியானது. இந்தப் புகைப்படத்தை வெளியிட்ட தமிழ்நெட் இணையம் குறிப்பிட்ட படத்தை தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி ஒருவர் அடையாளம் காட்டி உறுதி செய்திருப்பதாகவும் தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து பா.நடேசன், சீவரட்னம் புலித்தேவன் தீக்காயங்களுடன் இறந்து கிடக்கும் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளிவந்தன. இவர்களும் இரமேஷ் போலவே சித்திரவதைக்குப் பின்னர் கொல்லப்பட்டிருக்க வேண்டும்.

பா.நடேசனோடு சிறீலங்கா இராணுவத்திடம் சரண் அடைந்த தமிழீழ காவல்துறையின் பொறுப்பாளார் இரமேஷ் (இளங்கோ) மற்றும் நடேசனின் துணைவியார் என்ன ஆனார்கள் என்பது குறித்து தகவல் எதுவும் இல்லை. அவர்களும் கொல்லப்பட்டிருக்க வேண்டும்.

போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை படையினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் எண்ணிக்கை தொடர்பாக நிலவும் குழப்பத்தை, கோத்தபாய இராசபக்சே நிகழ்த்திய உரை தெளிவு படுத்தியுள்ளது.

ஓகஸ்ட் 08, 2012 அன்று கொழும்பு கலதாரி விடுதியில் நடைபெற்ற பாதுகாப்புக் கருத்தரங்கில் உள்நாட்டு, வெளிநாட்டு அதிகாரிகள் மத்தியில் சிறிலங்கா பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபாய இராசபக்சே உரையாற்றும் போது போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த விடுதலைப் புலிகள் தொடர்பான புள்ளிவிபரங்களை வெளியிட்டார்.

புள்ளிவிபரங்களின் அடிப்படையில் போரின் முடிவில் 11,989 விடுதலைப் புலிகள் சரணடைந்ததாகவும் அவர்களுள் இதுவரை 10,965 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் 636 விடுதலைப் புலிகள் இன்னமும் மருதமடு, கண்டகாடு, வெலிக்கந்த, பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களை விட மேலும் 383 விடுதலைப் புலிகள் சட்ட நடவடிக்கைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ள, மற்றும் தற்போதும் தடுப்பிலுள்ள விடுதலைப் புலிகளின் மொத்த எண்ணிக்கை 11,984 பேர் மட்டுமேயாகும்.

இதனால், போரின் இறுதியில் சரணடைந்த 11,989 விடுதலைப் புலிகளில், 5 பேரின் நிலை என்ன என்ற கேள்வி எழுகிறது.

போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த விடுதலைப் புலிகள் பலரது நிலை இன்னமும் அறியப்படாதுள்ள நிலையில், அவர்களில் பலர் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபாய இராசபக்சே அளித்துள்ள புள்ளிவிபரங்களே அந்தக் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளன.

அடுத்து ஊடகவியலாளர் மேரி கொல்வின் பா.நடேசனும் புலித்தேவனும் தன்னோடு செய்மதி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வி. புலிகள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரண் அடைய விரும்புவதாகவும் அதற்கான ஒழுங்குகளை செய்யுமாறு தன்னைக் கேட்டதாகவும் அதன் பின்னர் அது தொடர்பாகத் தான் எடுத்த முயற்சிகளை Sunday Times (UK) ஏட்டுக்கு எழுதிய கட்டுரையில் விபரித்திருந்தார். அதன் தமிழாக்கத்தை அடுத்துப் பார்ப்போம்.war crimes srilanka

(தொடரும்)


 

முள்ளிவாய்க்காலில் சரண் அடைந்த விடுதலைப் புலித் தளபதிகள் போராளிகள் எங்கே? (2)

-நக்கீரன்-

சண்டே ரைம்ஸ் செய்தி ஏட்டின் புகழ்பெற்ற போர்க்கள செய்தியாளரான மேரி கொல்வின் கடந்த 2012 பெப்ரவரி மாம் 23 நாள் சிரியாவின் நகரங்களில் ஒன்றான Homs நகர முற்றுகையின் போது ஏவப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் பலியானார். அவருக்கு அப்போது அகவை 55 ஆகும். அவரோடு பிரான்ஸ் நாட்டு படப்பிடிப்பாளரான Remi Ochlik (28) என்பவரும் இறந்து பட்டார். அதற்கு முன்னர் வன்னியை விட்டு 2001 ஆம் ஆண்டு 30 மைல்கள் காடுகள் ஊடாகக் களவாக வெளியேறிய போது எதிர்பாராத விதமாக பதுங்கியிருந்த சிறீலங்காப் படையினரால் சுடப்பட்டு ஒரு கண்ணை இழந்திருந்தார். இப்போது ‘புலிகள் சரண் அடைவதற்குரிய ஏற்பாட்டைச் செய்யுமாறு என்னிடம் யாசித்தார்கள்’ (Tigers begged me to broker surrender – Marie Colvin , Times UK – May 24, 2009) என்ற தலைப்பில் மேரி கொல்வின் எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கத்தை இப்போது பார்ப்போம்.""

கேணல் சங்கர் என்னும் பெருவிருட்சம்
""

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைக்காய் நாம் கொடுத்த மிகப் பெரிய விலைகளில் இதுவும் ஒன்று.

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடன் உறுதுணையாக நின்று, இருபது ஆண்டுகளுக்குமேலாக தளரா உறுதியுடன், தமிழீழ விடிவே குறியாகக்கொண்டு செயற்பட்டு வந்த கேணல் சங்கர் என்னும் பெருவிருட்சம் சாய்ந்துவிட்டது. ஈழ விடுதலைக்காய் கொடுத்த மிகப் பெரிய விலைகளில் இதுவும் ஒன்று.

26-09-2001 காலை 10.45 மணிக்கு ஒட்டுசுட்டானுக்கு அண்மித்த பகுதியில், சிறீலங்காப் படைகளின் ஊடுருவல் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் கண்ணிவெடித் தாக்குதலில் கேணல் சங்கர் அவர்கள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

அன்றைய தினத்தில் தியாகி திலீபனின் நினைவெழுச்சி நிகழ்வுகளில் தமிழீழ மக்களும், போராளிகளும் உணர்வுபூர்வமாக சங்கமித்திருந்த வேளையில் சிறீலங்கா அரசு மேற்கொண்ட அநாகாகச் செயலானது சிறீலங்கா அரசின் போர்மீது உள்ள விருப்பைக் காட்டுவதுடன், தமிழீழ மக்களினதும், போராளிகளினதும் நெஞ்சங்களில் அனலை மூட்டிவிட்டிருக்கின்றது.
""
இருபத்தி நான்கு ஆண்டுகளுக்கு முன் இதே தினத்தில் தமிழீழம் முன்பொருமுறையும் நெஞ்சில் அனல் சுமந்து பொங்கிப் பிரவாகித்தது. சிறீலங்கா அரசின் அடக்குமுறைக்குள் சிக்கிச் சின்னாபின்னப்பட்ட தமிழீழ மக்களுக்கு வசந்தத்தின் வாசலைத் திறந்துவிடுவதாகக் கூறி அமைதிப்புறா வேடமணிந்து எம் மண்ணில் காலூன்றியது இந்தியப்படை.

ஆனால், காக்கவந்தவர்கள் தம்மைத் தாக்கத் தயாரானபோது ஐந்தம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தண்ணீருமின்றி உண்ணா நோன்பிருந்து உயிர்த்தியாகம் செய்து, பாரத அரசின் உண்மை முகத்தை உலகறியச் செய்து காவியமானான் தியாகி திலீபன். அவனது உயிர்பிரிந்தபோது வரலாற்றில் என்றுமில்லாதவாறு, நெஞ்சில் அனல் பற்றியெழ பொங்கி எழுந்தது ஈழத் தமிழினம். அங்கே பிரகாசிக்கத் தொடங்கியது மக்கள் புரட்சி என்னும் புதிய விடுதலை ஒளி.

தலைவனுக்கு உற்ற தோழன். போராளிகளுக்கு நல்ல ஆசான். பழகுவதற்கு பண்பானவன். மக்களுக்கு அரசியல், இராணுவ அணுகுமுறைகளில், எதிரிக்கு ஒரு சவால் என இருபது வருடம் நன்கு செழித்து வேர்விட்டு விழுதெறிந்த ஆலமரம் கேணல் சங்கர்.

வல்வெட்டித்துறை மண் தந்த வீரப்புதல்வர்கள் வரிசையில் வழிவந்தவர்தான் கேணல் சங்கர். 1981இன் ஆரம்பகாலங்களில் தனது சகோதரன் மூலமாக தமிழீழ விடுதலைப் போராட்டப்பாதையில் தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்ட சங்கர் அவர்கள் 1983இல் தன்னை முழுமையாக போராட்டத்துடன் இணைத்துக் கொண்டார்.

அன்றிலிருந்து தனது இறுதி மூச்சுவரை தமிழீழ விடுதலைப் போராட்டப் பாதையில் விடுதலைப் புலிகளின் சகல நடவடிக்கைகளிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துச் செயற்பட்டார். தேசியத் தலைவர் அவர்களது எண்ணப்படி விடுதலைப் புலிகள் அமைப்பின் புதிய புதிய பரிமாணங்களுக்கும், கட்டுமானங்களிற்கும் செயல்வடிவம் கொடுத்து விடுதலைப் போராட்ட போரியல் வரலாற்றில் புதிய திருப்புமுனைகளை ஏற்படுத்தியவர் கேணல் சங்கர்.

ஈழப்போரில் கடற்பரப்பின் முக்கியத்துவம் கருதி தலைவரின் சிந்தனைப்படி ‘கடற்புறா’ என்னும் பெயரில் கடற்புலிகள் அமைப்பை உருவாக்கியது மட்டுமன்றி, முதன்முதலில் சிறீலங்காக் கடற்படையின் பாரிய யுத்தக் கட்டளைக் கப்பல் ஒன்றின் மீதான கடற்கரும்புலித் தாக்குதல் ஒன்றுக்காக கடற்புலிகளான காந்தரூபன், கொலின்ஸ், வினோத் ஆகியோரைப் பயிற்றுவித்து, நெறிப்படுத்தி வெற்றிகரமான தாக்குதலொன்றை செய்துமுடித்தவர். இதேபோன்று விடுதலைப் புலிகளின் மகளிர் அமைப்பின் உருவாக்கத்திற்கும் உதவி புரிந்தவர்.

சகல போராளிகளுக்கும் போரியல் நுணுக்கங்களையும், ஆயுத, வெடிபொருட்பாவனையின் நுட்பங்களையும், காடுகளின ஒவ வொரு அங்குலங்களையும் அணுவணுவாகக் கற்பித்து, மரம், செடி, கொடி, விலங்குகள் என்பன பற்றிய தகவல்களை தெளிவுபடுத்தி பயிற்றுவித்த நல்லாசிரியர் கேணல் சங்கர். இறுதியாக தலைவரின் நேரடி வழிகாட்டலில் நடைபெற்ற ஓயாத அலைகள் நடவடிக்கையில் தலைவருடன் அருகில் நின்று இராணுவ அசைவுகளுக்கேற்ப போராளிகளின் செயற்பாடுகளை ஒழுங்குபடுத்தி சமர்களை, வெற்றிப் பாதையில் கொண்டு செல்ல உதவியவர்.

இராணுவ நடவடிக்கைகளில் மட்டுமன்றி, அரசியல் பேச்சுக்களிலும் பங்குபற்றி ஈழத் தமிழர்களது நியாயமான நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியவர். இறுதியாக நோர்வே சமாதானத் தூதுக்குழுவினருடனான பேச்சுக்களின் போதும் தலைவருடன் கூட இருந்து சமாதானப் பேச்சுக்களில் ஈடுபட்டவர் சங்கர் அவர்கள். அமைதியாக இருந்தவாறு தனது ஆளுமையால், தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு பல்வேறு வகையிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துச் செயற்பட்டவர் கேணல் சங்கர் அவர்கள்.

இவர் மட்டுமன்றி இவரது குடும்பமும் தன்னை முழுமையாக விடுதலைப் போராட்டத்திற்கு அர்ப்பணித்து நிற்கின்றது.

1986இல் நாவற்குழி இராணுவ முகாம் மீதான தாக்குதல் முயற்சியில் இவரது சகோதரன் சித்தாத்தன், லெப். கேணல் பொன்னம்மான் அவர்களுடன் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். இவரே சங்கர் அவர்களை தமிழீழத் தேசியத் தலைவருடன் தொடர்புபடுத்தியவர். இவரின் இன்னொரு சகோதரன் கப்டன் கரன் இந்திய-சிறீலங்கா கூட்டுச் சதியால் லெப். கேணல் குமரப்பா, புலேந்திரன் உட்பட பன்னிருவேங்கைகளில் ஒருவராக ‘சயனைட்’ அருந்தி வீரச்சாவை அணைத்துக்கொண்டார்.

2000ஆம் ஆண்டில் ஓயாத அலைகள் நடவடிக்கையின்போது சிறீலங்கா இராணுவத்தின் எறிகணைவீச்சில் மேலும் இரு சகோதரர்கள் யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட, மற்றொரு சகோதரன் கொழும்பில் தமிழ்த் துரோகக் கும்பல் ஒன்றினால் அழிக்கப்பட்டார். இவ வாறு கேணல் சங்கர் அவர்களது குடும்பம் தமிழீழ விடுதலைக்காய் இரத்தம் சிந்தி தன்னை முழுமையாக அர்ப்பணித்து நிற்கிறது.

தேச விடுதலைக்காய் தன்னால் மட்டுமன்றி, தன் குடும்பத்தாலான முழுவதையும் தந்து நிற்கும் இவ வீரமறவன் மீது சிங்கள ஊடுருவல் படை மறைந்திருந்து தாக்குதல் நடத்தி மண்ணில் சாய்த்ததானது, தமிழீழ மக்களினதும் போராளிகளினதும் நெஞ்சங்களில் என்றும் நீறுபூத்த நெருப்பாக கனன்று கொண்டிருக்கும். இதற்கான பதிலை சிறீலங்கா பெற்றுக்கொள்ளும் நாட்கள் வரும்.

இராணுவம் வி.புலிகளைத் தோற்கடிப்பதற்குத் தனது இறுதிப் படைநடவடிக்கையை மேற்கொண்டிந்த வேளையில் நான் விடுதலைப் புலிகளின் தலைமைக்கும் அய்க்கிய நாடுகள் சபைக்கும் இடையில் ஒரு இடைத்தரகராகப் பல நாட்களாகச் செயல்பட்டேன்.

நடேசன் என்னிடம் மூன்று அம்சங்களை அய்நா வுக்கு அறிவிக்குமாறு கேட்டிருந்தார்: நாங்கள் ஆயுதங்களைக் கீழே வைக்கத் தயார், அமெரிக்கா அல்லது பிரித்தானியா நாடுகளிடம் இருந்து தங்களது பாதுகாப்புக்கு உத்தரவாதம் தரவேண்டும், சிறீலங்கா அரசு சிறுபான்மைத் தமிழ்மக்களது உரிமைகளுக்கு உத்தரவாதம் வழங்கும் ஒரு அரசியல் செயல்முறைக்குச் சம்மதிக்க வேண்டும்.

உயர்மட்டத்தில் இருக்கும் அமெரிக்கா மற்றும் பிரித்தானிய அதிகாரிகள் மூலம் கொழும்பில் உள்ள அய்நா சிறப்புத் தூதுவர், அய்நா செயலாளர் நாயகம் பான் கி மூன் அவர்களது முக்கிய அதிகாரி விஜய் நம்பியார் ஆகியோரோடு தொடர்பு ஏற்படுத்தி இருந்தேன். சரண் அடைவதற்கு வி.புலிகள் முன்வைத்த நிபந்தனைகளை விஜய் நம்பியாரிடம் சொன்னேன். அவர் அதனை சிறீலங்கா அரசுக்குத் தெரிவிப்பதாக என்னிடம் சொன்னார்.

மோதல் ஒரு அமைதியான முடிவுக்கு வருவது போல் தென்பட்டது. பதுங்கு குழியில் இருந்து ஜாலியான, மூக்குக் கண்ணாடி அணிந்த புலித்தேவன் தனது படத்தை எனக்கு அனுப்புவதற்கு அவருக்கு அந்த நெருக்கடியிலும் நேரம் இருந்திருக்கிறது.

இருந்தும் ஞாயிறு இரவு இராணுவம் நெருக்கிக் கொண்டிருந்த போது புலிகளிடம் இருந்து அரசியல் கோரிக்கைகளோ அல்லது படங்களோ வருவது நின்றுவிட்டது. நடேசன் என்னை அழைத்தபோது “சரண்” என்ற சொல்லைப் பயன்படுத்த மறுத்துவிட்டார். ஆனால் அதைத்தான் அவர் செய்ய நினைத்தார். புலிகளது பாதுகாப்பை உறுதிப்படுத்த நம்பியார் இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

மேலும் ஒரு முறை நியூ யோர்க்கில் உள்ள அய்நாவின் 24 மணித்தியால கட்டுப்பாட்டு மையம் கொழும்பில் உள்ள நம்பியாரோடு என்னைத் தொடர்பு படுத்தியது. அப்போது நேரம் திங்கட்கிழமை (மே 18) காலை 5.30 மணி. நான் அவரை நித்திரையில் இருந்து எழுப்பினேன்.

நான் சொன்னேன் வி.புலிகள் தங்கள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டார்கள் என்று. அவர் (நம்பியார்) சொன்னார் சிறீலங்காவின் சனாதிபதி தனக்கு வாக்குறுதி அளித்துள்ளார். நடேசன் மற்றும் புலித்தேவன் இருவரும் பத்திரமாகச் சரண் அடையலாம். அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் ‘வெள்ளைக் கொடியை உயரப் பிடிக்க வேண்டியதுதான்’ எனச் சொன்னார்.

நான் நம்பியாரிடம் கேட்டேன் ‘வடக்கில் இடம்பெறும் சரணாகதியை நேரில் பார்க்க நீங்கள் போகவேண்டிய அவசியம் இல்லையா?’ அதற்கு அவர் இல்லை, அப்படிப் போக வேண்டிய அவசியம் இல்லை: சனாதிபதியின் வாக்குறுதிகள் போதுமானது என்றார்.

இலண்டனில் அப்போது ஞாயிறு (மே 17) நள்ளிரவு. நான் நடேசன் அவர்களோடு செய்மதி தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முயற்சித்தேன். ஆனால் நான் அதில் தோல்வி கண்டேன். எனவே தென் ஆபிரிக்காவில் உள்ள ஒரு புலிகளது தொடர்பாளரோடு பேசினேன். அவரிடம் நம்பியாரின் செய்தியைச் சொன்னேன்: வெள்ளைக் கொடியை உயரப் பிடித்து அசைக்கவும்.

தென்னாசியாவில் இருந்த வேறொரு புலித் தொடர்பாளரிடம் இருந்து வந்த தொலைபேசி என்னை நித்திரையில் இருந்து 5.30 மணிக்கு எழுப்பியது. அவரால் நடேசனோடு தொடர்பு கொள்ள முடியவில்லை. “நான் நினைக்கிறேன், எல்லாம் முடிந்துவிட்டது” என்று அவர் சொன்னார். “அவர்கள் எல்லோரும் இறந்து போய்விட்டார்கள்.”

அன்று மாலை சிறீலங்கா இராணுவம் அவர்களது உடல்களை காட்சிப் படுத்தியது. சரணடைவு ஏன் பிழைத்துப் போனது? அதனை நான் விரைவில் அறிந்து கொண்டேன்.

சிறீலங்கா நடாளுமன்ற தமிழ் உறுப்பினர் றோகன் சந்திர நேருவை நடேசன் ஞாயிறு இரவு அழைத்திருந்தார் என்பதைக் கண்டு பிடித்தேன். சந்திர நேரு ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர். அவர் இராசபக்சேயை உடனடியாகத் தொடர்பு கொண்டார்.

அடுத்த சில மணித்தியாலங்கள் நடந்த சம்பவங்களை அந்த நாடாளுமன்ற உறுப்பினர் விபரித்துச் சொன்னார்: “நடேசன் மற்றும் அவரது குடும்பத்துக்கு முழு அளவிலான பாதுகாப்புக் கொடுக்கப்படும் என என்னிடம் சனாதிபதியே சொன்னார். நடேசன் தன்னிடம் 300 பேர் இருக்கிறார்கள் எனச் சொன்னார். அதில் சிலர் காயம்பட்டவர்கள்.”

நான் சனாதிபதிக்குச் சொன்னேன் ‘நான் போய் அவர்களது சரணடைவை பார்வையிடுகிறேன்’என்றேன்.

“இராசபக்சே சொன்னார், “இல்லை, எங்களது இராணுவம் மிகவும் பெருந்தன்மை படைத்தது. அதோடு மிகவும் கட்டுப்பாட்டோடு நடப்பது. நீங்கள் போர் வலையத்துக்குப் போக வேண்டிய தேவையில்லை. அதுமட்டுமல்ல உங்களுடைய உயிரை ஆபத்துக்குள்ளாக்க வேண்டிய அவசியமும் தேவையற்றது.”

சந்திர நேரு சனாதிபதியின் சகோதரர் பசில் தன்னை அழைத்ததாகச் சொன்னார். “அவர் சொன்னார், ‘அவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள். அவர்கள் வெள்ளைக் கொடியை மேலே உயர்த்திப் பிடிக்க வேண்டும். அத்தோடு அவர்கள் போக வேண்டிய வழியை அவர் எனக்குத் தந்தார்.”

திங்கட்கிழமை (மே 18) காலை 6.20 மணிக்கு நடாளுமன்ற உறுப்பினர் நடேசன் அவர்களோடு தொடர்பு கொண்டார். அப்போது துப்பாக்கிச் சூட்டின் சத்தம் முன்னரைவிட அதிகமாகக் கேட்டது.

“நாங்கள் ஆயத்தம்” என நடேசன் சந்திர நேருவுக்குச் சொன்னார். “நான் வெள்ளைக் கொடியை உயர்த்திப் பிடித்துக் கொண்டு நடந்து செல்லப் போகிறேன்.”

“நான் சொன்னேன் ‘அண்ணை உயரப் பிடியுங்கள் – அவர்கள் அதைப் பார்க்க வேண்டும். நான் உங்களை மாலை சந்திக்கிறேன்” என்றார் சந்திர நேரு.

கொலைக் களத்திலிருந்து ஒருவாறு தப்பிய ஒரு தொகுதியில் இருந்த ஒரு தமிழர் அங்கு என்ன நடந்தது என்பதை விளக்கினார். இவர், பின்னர் ஒரு தொண்டு நிறுவனத் தொழிலாளியோடு பேசியவர், அவர் சொன்னார் ‘நடேசன் மற்றும் புலித்தேவன் சிறீலங்கா இராணுவம் நிலைகொண்டு நின்ற பக்கம் ஒரு வெள்ளைக் கொடியோடு ஒரு பத்துப் பன்னிரண்டு ஆண், பெண் குழு சகிதம் நடந்து போனார்கள். உடனே இராணுவம் இயந்திரத் துப்பாக்கிகளால் அவர்களை நோக்கிச் சுடத் தொடங்கியது.’

நடேசனது மனைவி, அவர் ஒரு சிங்களப் பெண், சிங்களத்தில் அந்த இராணுவத்தினரை நோக்கிச் சத்தம் போட்டார். “அவர் சரணடைய முயற்சிக்கிறார், நீங்கள் அவரைச் சுடுகிறீர்கள்” என்றார். அவரும் சுட்டு வீழ்த்தப்பட்டார்.

இந்த வட்டாரம் எல்லோரும் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் எனத் தெரிவித்தது. சொன்னவர் இப்போது தனது உயிருக்குப் பயந்து ஒளிந்திருக்கிறார். சந்திர நேரு தன்னை சனாதிபதியும் அவரது சகோதரரும் பயமுறுத்தியதை அடுத்துத் தான் நாட்டை விட்டு ஓடித் தப்பியதாகச் சொன்னார்.

கடந்த சில நாட்களாக அய்நா தூதுவர் நம்பியாரின் வகிபாகம் கேள்விக்குறியாகி இருக்கிறது. அவரது சகோதரர் சதீஷ் சம்பளத்துக்கு சிறீலங்கா இராணுவத்தின் ஆலோசகராக 2002 ஆம் ஆண்டு தொடக்கம் இருக்கிறார். சதீஷ் ஒருமுறை சிறீலங்கா இராணுவ தளபதி சரத் பொன்சேகா பற்றி எழுதியிருந்தார் “இராணுவ தளபதி சரத் பொன்சேகா ஒரு மாபெரும் படைத்தளபதிக்குரிய குணாம்சங்களை உடையவர்.”

தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னைய தற்கொலைத் தாக்குதல் உட்பட பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக அனைத்துலக மட்டத்தில் தடை செய்யப்பட்டிருந்தாலும் நடேசனும் புலித்தேவனும் மோதலுக்கு ஒரு அரசியல் தீர்வை எட்ட விரும்பினார்கள். அவர்கள் உயிரோடு இருந்திருந்தால், அவர்கள் தமிழ்ச் சிறுபான்மையினருக்கு நம்பகத்தன்மை வாய்ந்த தலைவர்களாக விளங்கியிருப்பார்கள்.

அவர்களின் தளபதி வேலுப்பிள்ளை பிரபாகரனே இயக்கத்தை ஒரு இராணுவ இயந்திரமாகக் கட்டி

எழுப்பினார். அவர் பிறர்மீது நம்பிக்கை இல்லாதவராகவும் இரக்கமற்றவராகவும் இருந்தார். சிறீலங்கா இராணுவத்தின் தாக்குதல்களினால் நிலம் பறிபோய்க் கொண்டிருந்த காலத்திலும் இராணுவ வெற்றியில் அவர் உறுதியாக இருந்தார்.

கடந்த வாரம், பிரபாகரன் தப்பிவிட்டார் என வதந்திகள் உலாவினாலும் இயக்கம் குழம்பிப் போயிருந்தது. தப்பிய தமிழ் தலைவர்கள் ஒரு அரசியல் தீர்வு பற்றிப் பேசினார்கள். அதே சமயம் தீவிர சார்பாளர்கள் பழிக்குப் பழித் தாக்குதல் மேற்கொள்ள வேண்டும் என அச்சுறுத்தினார்கள்.

நான் ஒரு செய்தியாளர் என்ற முறையில் இந்தச் செய்தியை எழுதுவது பற்றி ஒரு இக்கட்டான நிலையில் உள்ளேன். நான் 2001 இல் தான் அரை இலட்சம் மக்களுக்கு உணவு மற்றும் மருந்துகள் போவதை அரசு தடுக்குகிறது என்ற அறிக்கைகள் பற்றி விசாரணை செய்ய சிறீலங்காவுக்குப் போனேன். செய்தியாளர்கள் வடக்கிலுள்ள தமிழர்களது பகுதிகளுக்குப் போக 6 ஆண்டுகளுக்கு மேலாக தடை விதிக்கப்பட்டிருந்தது.

மக்கள் குப்பை கூழங்களுக்கு மத்தியில் வாழ்ந்ததைப் பார்த்தேன். மருத்துவர்கள் மருந்துக்கு மன்றாடிக் கொண்டிருந்தார்கள். நடேசன் மற்றும் புலித்தேவன் இருவரும் தாங்கள் தங்களது தனிநாட்டுக் கோரிக்கையைக் குறைத்து சிறீலங்காவுக்குள் தன்னாட்சி உரிமையைக் கேட்பதாக என்னிடம் சொன்னார்கள்

ஒரு நாள் இரவு விடுதலைப் புலிகளது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்து வெளியே நான் கடத்தப்பட்ட போது பதுங்கியிருந்த சிறீலங்கா இராணுவத்தினால் இடைமறிக்கப்பட்டேன். எனக்குக் காயம் எதுவுமில்லை ஆனால் ”செய்தியாளர், செய்தியாளர்” என சத்தம் போட்டேன். உடனே அவர்கள் என்னை நோக்கிச் சுட்டார்கள். நான் படு காயம் அடைந்தேன்.

அதன் பின்னர் அவ்வப்போது புலிகளோடு தொடர்பில் இருந்தேன். சிறீலங்கா இராணுவத்தின் புதிய தாக்குதல் காணமாக புலிகள் பின்வாங்க வேண்டியிருந்தது. அதன் பின்னர் அண்மையில் சில மாதங்களாக தலைவர்களிடம் இருந்து தொடர்ச்சியாக தொலைபேசி அழைப்புக்கள் வந்தன. அப்படி வந்த ஒரு அழைப்பின் போது ஒரு நேரடி வாக்கெடுப்பின் முடிவுக்கு அமைய நடப்பதாகவும் அதற்கு முன்னோடியாக ஒரு போர் நிறுத்தம் வேண்டுமென்றும் யாசித்தார்கள். அவர்களது வேண்டுகோள் கொழும்பு அரசினால் நிராகரிக்கப்பட்டது.

புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் தலைநகர் கொழும்பு வீதிகளில் ஆட்டம் பாட்டம் இடம்பெற்றது. ஆயினும் தமிழ்ப் பொதுமக்களுக்கு (இராணுவ) வெற்றி அதிர்ச்சியாக இருந்தது. அய்க்கிய நாடுகள் கடைசிக் கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் 7,000 பேர் இறந்தார்கள் எனச் சொல்கிறது. ஆயினும் இறந்தவர்கள் எண்ணிக்கை இதைவிட அதிகம் என நம்பப்படுகிறது. சண்டை காரணமாக அண்ணளவாக 280,000 மக்கள் முள்ளுக்கம்பிகளால் சுற்றி அடைக்கப்பட்ட “நலன்புரி” முகாம்களுக்குள் அகப்பட்டுக் கொண்டார்கள். இவர்களது நிலைமை மோசமாகிக் கொண்டுவருவதாகச் சொல்லப்படுகிறது.

நேற்று அனைத்துலக தொண்டர் முகமைகள் மூன்று குடும்பங்கள் மட்டில் ஒவ்வொரு கூடாரத்திற்குள்ளும் நெருக்கமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள் எனக் கூறியன. அவர்கள் தண்ணீருக்கும் உணவுக்கும் நீண்ட கியூவரிசையில் நிற்க நிர்ப்பந்திக்கப் பட்டார்கள். ஒரு தொண்டர் பேசும் போது 44,000 மக்களைக் கொண்ட ஒரு முகாமுக்கு ஒரேயொரு மருத்துவர் மட்டும் பணியில் இருக்கிறார் என்றார்.

த சண்டே ரைம்ஸ், தொண்டர் அமைப்புக்கள் ஊடாக ஏதிலிகளை தொடர்பு கொள்ளப்பட்ட போது அவர்கள் தங்கள் சீற்றத்தை வெளிகாட்டினார்கள். “பாருங்கள் நாங்கள் எப்படி வாழ்கிறோம் என்று” எனத் தனது இரண்டு குழந்தைகளோடு முகாமில் இருந்த ஒரு பெண் சொன்னார். “எங்களுக்கு இடவசதி இல்லை, சூரிய வெப்பத்தில் இருந்து தப்ப எமக்குப் பாதுகாப்பு இல்லை. முள்ளு வேலிக்கும் ஆயுதம் தாங்கிய காவலாளிகளுக்கும் இடையில் நாம்

சிறைக் கைதிகளாக இருக்கிறோம். அவர்கள் இரண்டு குழந்தைகளுக்குத் தாயான நான் என்ன செய்துவிடுவேன் என நினைக்கிறார்கள்? ஏன் நாங்கள் இங்கு இருக்கிறோம்?”

ஆயுதக் கும்பல்களைச் சேர்ந்த நபர்கள் முகாமில் வாழும் இளைஞர்களைப் புலிகள் எனக் குற்றம் சாட்டி அவர்களைக் கடத்திச் சென்று இரகசிய இடங்களில் தடுத்து வைக்கப்படுகிறார்கள் என்ற அறிக்கைகள் உலா வருகின்றன.

சனாதிபதி தமிழ் சமூகத்தோடு உறவாடவும் நாட்டை ஒருமைப்படுத்தவும் 80 விழுக்காடு ஏதிலிகளை ஆண்டு முடியுமுன்னர் மீள் குடியமைர்த்தவும் போவதாகச் சொல்கிறார்.

“நான் நினைக்கவில்லை இது சாத்தியம் என்று” என மனித உரிமைக் காப்பகத்தை சேர்ந்த Anna Neistat சொன்னார். “யாரையும் வெளியில் விடுவதற்குரிய நடைமுறை இல்லை” என்றார்.

அரசு தெரிவிக்கும் நோக்கங்கள் எதுவாக இருந்தாலும் சிறீலங்காவை ஒருமைப்படுத்தும் சிறிய சாத்தியம் கூட எதிர்காலத்தில் இல்லை. புலிகள் தளைப்பதற்கு இருந்த ரிய குறைபாடுகளையிட்டு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அது சாத்தியமாகும்.

(http://www.timesonline.co.uk/tol/news/world/asia/article6350563.ece ) (வளரும்)


srilanka execution_war crimes

முள்ளிவாய்க்காலில் சரண் அடைந்த விடுதலைப் புலித் தளபதிகள் போராளிகள் எங்கே? – (பகுதி-3)

நக்கீரன்

வி.புலித் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டதை பிரித்தானிய செய்தித்தாள்கள் அம்பலப்படுத்தின! வெள்ளைக் கொடியோடு சரண் அடைந்த விடுதலைப் புலித் தலைவர்களை சிறீலங்கா இராணுவம் இயந்திரத் துப்பாகிகளால் சுட்டுப் படுகொலை செய்த செய்தியை பிரித்தானிய செய்தித்தாள்கள் முக்கியத்துவம் கொடுத்து பிரசுரித்தன. British newspapers expose cold-blooded killing of LTTE leaders in Sri Lanka (வி.புலித் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டதை பிரித்தானிய செய்தித்தாள்கள் அம்பலப்படுத்தின) என்ற தலைப்பில் றொபேட் ஸ் ரீவன்ஸ் என்பவர் ஒரு விரிவான கட்டுரை எழுதியிருந்தார். அந்தக் கட்டுரை த உலக சோசலிஸ்ட் இணையத்தில் (The World Socialist Website) யூன் 03, 2009 அன்று வெளியானது. அதன் தமிழாக்கத்தை இப்போது பார்ப்போம்.

கடந்த வாரம் பிரித்தானிய செய்தித்தாள்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தலைவர்கள் மே 18 அன்று ஸ்ரீலங்கா இராணுவம் சுட்டுக் கொல்வதற்கு சற்று முன்பதாக பிரித்தானிய மற்றும் அமெரிக்க இராசதந்திரிகளோடு பேச்சு வார்த்தை நடத்தினார்கள் என்ற செய்தியை வெளிப்படுத்தின. இந்தப் பேச்சு வார்த்தையில் அய்நா செயலாளர் நாயகத்தின் முக்கிய அதிகாரி விஜய் நம்பியாரும் (United Nations secretary generals chief of staff ) ஈடுபட்டிருந்தார்.

The Guardian and the Sunday Times நாளேடுகள் வி.புலிகளது அரசியல் துறைப் பொறுப்பாளர் பாலசிங்கம் நடேசன் மற்றும் சமாதான செயலகப் பணிப்பாளர் சீவரத்தினம் புலித்தேவன் இருவரும் அய்நா செயலாளர் நாயகத்தின் முக்கிய அதிகாரி விஜய் நம்பியாரோடு ஒரு ஊடகவியாளர் மற்றும் பிரித்தானிய இராசதந்திரிகளது தூதுக்குழு ஆகிய இடையீட்டாளர்களோடு பேச்சு வார்த்தை நடத்தினார்கள் என செய்தி வெளியிட்டன.

The Guardian ஏடு இறப்பதற்கு முன்னர் வி.புலித் தலைவர்கள் நோர்வே நாட்டு சுற்றுச்சூழல் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் எரிக் சொல்கேய்ம் அவர்களோடும் தொடர்பில் இருந்ததாகக் கூறியது. ஸ்ரீலங்காவின் நீண்ட உள்நாட்டுப் போரில் 2002 இல் ஒரு அமைதி உடன்பாட்டை உருவாக்கும் முயற்சியில் ஒரு சிறப்புத் தூதுவராக கொல்கேய்ம் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

The Sunday Times ஏட்டில் ஊடகவியலாளர் மேரி கொல்வின் (Journalist Marie Colvin) “புலிகள் சரண் அடைவதற்குரிய ஏற்பாட்டை செய்யுமாறு என்னிடம் யாசித்தார்கள்” என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் அவர் வி.புலிகள், மற்றும் பிரித்தானியா, அமெரிக்க அதிகாரிகள் மற்றும் அய்நா அதிகாரிகள் இடையில் தொடக்க தொடர்பு தன் மூலமாக இடம் பெற்றது என எழுதியிருந்தார்.

மேரி கொல்வின் எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் 5 இலட்சம் தமிழ்மக்களுக்கு உணவு மற்றும் மருந்து வழங்கலை அரசு முடக்கு வைத்திருக்கிறது என்ற குற்றச்சாட்டை ஆராய வன்னிக்கு களவாகப் போயிருந்தார். உள்நாட்டுப் போர் பற்றி எழுதியவர்களில் மேரி கொல்வின் ஒருவராவர். அப்போது அவர் நடேசன் மற்றும் புலித்தேவன் இருவரையும் சந்தித்து இருந்தார்.

The Guardian ஏடு எப்படி நடேசன் மற்றும் புலித்தேவன் இருவரும் சிறீலங்கா அரசோடு கடைசிப் பொழுதில் – அவர்கள் சரண் அடைய இருந்த வேளையில் மே 18 காலை இராணுவத்தினால் சுட்டுக் கொல்லப்படுவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் – ஒரு போர் நிறுத்தத்தை கொண்டுவருவதற்கு முயற்சித்தார்கள் என விபரித்திருந்தது.

ஒரு பிரித்தானிய அதிகாரி பிரித்தானியாவின் ஈடுபாடு “பெரும்பாலும் நேரடியாக இல்லை” எனச் சொன்னார். ஆனால் குறித்த கட்டுரை நம்பியாரை மேற்கோள் காட்டி அவர் நியூ யோர்க்கில் இருந்த பிரித்தானிய இராசதந்திரிகளோடும் பெயர் குறிப்பிடப்படாத பிரித்தானிய அமைச்சரோடும் “நேரடித் தொடர்பில்” இருந்ததாகத் தெரிவித்தது. மேலும் நம்பியார் “நியூ யோர்க்கில் உள்ள அய்க்கிய இராச்சிய அலுவலத்தில் இருந்து செயலாளர் நாயகத்துக்கு முறையான முறையீடு இருந்தது” எனச் சொன்னார்.

நடேசன் மற்றும் புலித்தேவன் சிறீலங்கா இராணுவத்திடம் சரண் அடைய நினைக்கிறார்கள் என்ற முன்மொழிவை மேரி கொலினுக்கு நம்பியார் தெரிவித்தார். மேலும் சிறீலங்கா வெளியுறவு செயலாளர் பாலித கோகனாவோடும் அது பற்றிக் கதைத்தாகவும் சொன்னார்.

ஆனால் சிறீலங்கா அரசுக்கு போர்நிறுத்தம் செய்வதற்கான நோக்கம் இருக்கவில்லை. “சிறீலங்கா அரசு வி. புலிகள் சரண் அடைவதை ஏற்றுக் கொள்ளும் என்று சொல்லவில்லை. அதற்கான காலம் கடந்துவிட்டது” எனச் சொன்னதாக நம்பியார் The Guardian ஏடுக்குத் தெரிவித்தார்.

சரண் அடைவது பற்றி வி.புலிகள் எரிக் சொல்கேய்ம் அவர்களோடு தொடர்ப்பு கொண்டதை அடுத்து அவர் “செஞ்சிலுவைச் சங்கத்தோடும் சிறீலங்கா அரசோடும் தொடர்பு கொண்டார்.”

இதனைத் தொடர்ந்து பாலித கோகொன செஞ்சிலுவைச் சங்கத்துக்கு ஒரு செய்தி அனுப்பினார். அது பின்வருமாறு இருந்தது. “வெறுமனே படைகளுக்கு ஊடாக வெள்ளைக் கொடியோடு மெல்ல நடக்கவும்! தரப்படும் ஆணைகளுக்கு இணங்க கவனமாகச் செயல்படவும். இராணுவத்தினருக்கு தற்கொலைக் குண்டுதாரிகள் பற்றிப் பயம் இருக்கிறது.”

மேரி கொல்வின் எழுதிய கட்டுரையில் எப்படி வி.புலிப் போராளிகள் இராணுவத்தின் கடைசிப் படையெடுப்பின் போது ஒரு சிறிய காடு மற்றும் கடற்கரை ஓரமாக ஒரு இக்கட்டான நிலையில் சிக்க வைக்கப்பட்டுள்ளதையும் அவர்கள் பெரும் மனவேதனைக்குரிய நிலைமைக்கு முகம் கொடுக்கிறார்கள் என்பதையும் விபரிக்கிறார்: “அவர்களோடு பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பொறிக்குள் அகப்பட்டுள்ளார்கள். அவர்கள் கையினால் தோண்டிய பதுங்கு குழிகளுக்குள் ஓயாத குண்டு மாரிக்கு இடையில் ஒளிந்துள்ளார்கள்.”

“சிறீலங்கா இராணுவம் வி.புலிகளைத் தோற்கடிப்பதற்கு தனது இறுதிப் படைநடவடிக்கையை மேற்கொண்டிருக்கும் வேளையில் பல நாட்களாக நான் விடுதலைப் புலிகளின் தலைமைக்கும் அய்க்கிய நாடுகள் சபைக்கும் இடையில் ஒரு இடைத்தரகராக செயல்பட்டேன்” என மேரி கொல்வின் எழுதுகிறார். “நடேசன் என்னிடம் மூன்று அம்சங்களை அய்நா வுக்கு அறிவிக்குமாறு கேட்டிருந்தார். அவர்கள் ஆயுதங்களைக் கீழே வைக்கத் தயார், அமெரிக்கா அல்லது பிரித்தானியாவிடம் இருந்து தங்களது பாதுகாப்புக்கு உத்தரவாதம் தரவேண்டும், சிறீலங்கா அரசு தமிழ்மக்களுக்கு அவர்களது அரசியல் தீர்வை வழங்கும் ஒரு ஏற்பாட்டிற்கு வாக்குறுதி தரவேண்டும்.”

உயர்மட்டத்தில் இருக்கும் அமெரிக்கா மற்றும் பிரித்தானிய அதிகாரிகள் மற்றும் கொழும்பில் உள்ள அய்நா சிறப்பு தூதுவர், அய்நா செயலாளர் நாயகம் பான் கி மூன் அவர்களது முக்கிய அதிகாரி விஜய் நம்பியார் ஆகியரோடு தொடர்பு ஏற்படுத்தி இருந்தேன். சரண் அடைவதற்கு வி.புலிகள் முன்வைத்த நிபந்தனைகளை விஜய் நம்பியாரிடம் சொன்னேன். அவர் அதனை சிறீலங்கா அரசுக்குத் தெரிவிப்பதாகச் சொன்னார்.

Guardian எழுதியிருந்ததை கொல்வின் சான்றுபடுத்துகிறார். மே 18 காலை தான் நம்பியாரோடு உரையாடியபோது சிறீலங்கா சனாதிபதி மகிந்த இராசபக்சே குறிப்பிட்ட இரண்டு தலைவர்களும் “வெள்ளைக் கொடியை உயரப்” பிடித்துக் கொண்டு சரண் அடைய முடியும் எனத் தனக்கு நம்பியார் சொன்னதாக கொல்வின் சொல்கிறார்.

கொல்வின் சொல்கிறார் “மறுமுறையும் நியூ யோர்க்கில் உள்ள அய்நாவின் 24 மணித்தியால கட்டுப்பாட்டு மையம் கொழும்பில் உள்ள நம்பியாரோடு திங்கட்கிழமை காலை 5.30 மணிக்கு என்னைத் தொடர்பு படுத்தியது. நான் அவரை நித்திரையில் இருந்து எழுப்பினேன்.”

“நான் சொன்னேன் வி.புலிகள் தங்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டார்கள். சிறீலங்காவின் சனாதிபதி தனக்கு வாக்குறுதி அளித்துள்ளார். நடேசன் மற்றும் புலித்தேவன் இருவரும் பத்திரமாக சரண் அடையலாம். அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் ‘வெள்ளைக் கொடியை உயரப் பிடிக்க வேண்டியதுதான்’ எனச் சொன்னார்.”

அதன்பின் கொஞ்ச நேரத்தில் நடேசன் அவர்களோடான செய்மதி தொலைபேசித் தொடர்பை கொல்வின் இழந்துவிட்டார். கொல்வின் தென் ஆபிரிக்காவில் உள்ள ஒரு வி. புலிகளது தொடர்பாளரோடு தொடர்பு கொண்டு சரண் அடையப் போகும் போது வெள்ளைக் கொடியை உயரப் பிடிக்குமாறு சொல்லப்பட்ட கட்டளைகளைச் சொன்னார்.

கொல்வின் மேலும் சொல்கிறார் “கொலைக் களத்திலிருந்து ஒருவாறு தப்பிய ஒரு தொகுதியில் இருந்த ஒரு தமிழர் அங்கு என்ன நடந்தது என்பதை விளக்கினார். இந்த வட்டாரம், பின்னர் ஒரு தொண்டு நிறுவனத் தொழிலாளியிடம் பேசியவர், சொன்னார் நடேசன் மற்றும் புலித்தேவன் சிறீலங்கா இராணுவம் அணிவகுத்து நின்ற பக்கம் ஒரு வெள்ளைக் கொடியோடு ஒரு பத்துப் பன்னிரண்டு ஆண், பெண் குழு சகிதம் நடந்து போனார்கள். உடனே இராணுவம் யந்திரத் துப்பாக்கிகளால் அவர்களை நோக்கிச் சுட்டது. நடேசனது மனைவி, அவர் ஒரு சிங்களப் பெண், சிங்களத்தில் அந்த இராணுவத்தினரை நோக்கி சத்தம் போட்டார். “அவர் சரண் அடைய முயற்சிக்கிறார், நீங்கள் அவரைச் சுடுகிறீர்கள்” என்றார். அவரும் சுட்டு வீழ்த்தப்பட்டார்.

இந்த சம்பவம் மே 18 காலை இராணுவம் வி.புலித் தலைமையை இரக்கமற்ற முறையில் விலங்குகளைக் கொல்லுமால் போல் கொன்று குவித்ததைக் கோடிட்டுக் காட்டியது. அநேகமாக வி.புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் உட்பட எல்லா உயர்மட்ட விடுதலைப் புலித் தலைவர்களும் இவ்வாறுதான் போதுமான விளக்கம் கொடுக்க முடியாத சூழ்நிலையில் இறந்திருக்க வேண்டும். ஸ்ரீறீலங்கா அரசு பிரபாகரன் தப்பி ஓடும்போது ஒரு துப்பாக்கிச் சமரில் கொல்லப்பட்டார் எனச் சொல்லியது. ஆனால் அவருக்கும் நடேசன் மற்றும் புலித்தேவன் இருவருக்கும் ஏற்பட்ட இறுதி முடிவைப் போன்ற முடிவு ஏற்பட்டிருக்கலாம்.

இராணுவம் விடுதலைப் புலிகளின் கடைசி எதிர்ப்பு மையங்களையும் துடைத்தழித்தார்கள். போர் வலையத்தில் அகப்பட்டுக்கொண்ட இரண்டரை இலட்சம் மக்கள் பற்றி இராணுவம் அக்கறைப்படவே இல்லை. பெரும்பாலும் அவரும் நடேசன் மற்றும் புலித்தேவன் போல் மரணத்தை சந்தித்திருப்பார். இராசபக்சே பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கான பொறுப்பை மறுத்துரைக்கும் போது அய்நா வின் மதிப்பீட்டின் அடிப்படையில் வெளியே கசியவிடப்பட்ட அறிக்கைகள் சனவரி (2009) தொடக்கம் 20,000 க்கும் மேலான மக்கள் கொல்லப்பட்டார்கள் எனச் சொல்கிறது.

(http://www.wsws.org/en/articles/2009/06/ltte-j03.html)

Srilanka Evil Country on the planet

முள்ளிவாய்க்காலில் சரண் அடைந்த விடுதலைப் புலித் தளபதிகள் போராளிகள் எங்கே? – (பாகம் – 4)

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைத் தலைவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக சொல்லப்படும் சம்பவமானது அரசியல் வட்டாரங்களில் மீண்டும் மீண்டும் பேசுபொருளாக உலா வந்தது. மே 23 நாளிட்ட இலண்டன் பிரிஅய் (PTI) “பிரித்தானியாவும் நோர்வேயும் இரண்டு உயர்மட்ட வி.புலிகளைக் காப்பாற்ற முயற்சி: அறிக்கை” என்ற தலைப்புச் செய்தியில் பிரித்தானியாவும் நோர்வேயும் கடைசிப் பொழுதில் வி.புலித் தலைவர்களது உயிர்களைக் காப்பாற்ற முயற்சி செய்ததாகவும் அது வீணாகிவிட்டது என்றும் ஸ்ரீலங்கா படைகள் (வி.புலிகளை) நெருங்கிவிட்டதாகவும் செய்தி வெளியிட்டது.

மேலும் வி.புலிகளது அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் மற்றும் ‘சமாதான செயலகப் பொறுப்பாளர்’ சீ. புலித்தேவன் இருவரும் சரணடைய முயற்சித்ததாக நம்பியாரை மேற்கோள் காட்டி The Daily Telegraph செய்தி வெளியிட்டது.

இலண்டன் நாளிட்ட பிரிஅய் செய்தி அறிக்கையில் பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபான்ட் மற்றும் நோர்வே அமைச்சர் எரிக் சொல்கேய்ம் மற்றும் அய்நா அதிகாரிகள் பயங்கரவாதிகள் எனப் பிரகடனப்படுத்தப்பட்ட இரண்டு வி.புலிகளை – பா. நடேசன் மற்றும் புலித்தேவன் – காப்பாற்ற முயற்சித்தார்கள் எனச் சொல்லப்பட்டது.

இந்த இருவரும் பின்னர் இறந்து கிடக்கக் காணப்பட்டார்கள். அவர்கள் வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த போது சுடப்பட்டார்கள் என்றும் அதனால் ஸ்ரீலங்கா அரசு போர்க் குற்ற விசாரணைக்கு முகம் கொடுக்க நேரிடலாம் என்று மேற்குலக இராசதந்திரிகள் எச்சரித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

மே 24, 2009 அன்று இலண்டனில் இருந்து வெளியாகும் சண் (Sun) நாளேடு ‘இரண்டு வி.புலித் தலைவர்கள் சரணடையச் சென்றபோது சுட்டுக்கொல்லப்பட்டார்கள்’ என்று எழுதிய செய்தியை இந்தியன் எக்ஸ்பிரஸ் (The Indian Express) மறுபிரசுரம் செய்திருந்தது.

ஓர் ஊடக அறிக்கையின் படி வி.புலிகளது அரசியல்துறைத் தலைவர்கள் பா.நடேசன் மற்றும் சீ. புலித்தேவன் ஆகியோர் வெள்ளைக் கொடியோடு சரணடைய வந்தபோது ஸ்ரீலங்கா இராணுவத்தினால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பாலசிங்கம் நடேசன் வி.புலிகளது அரசியல்துறைப் பொறுப்பாளர் ஆவர். சீவரத்தினம் புலித்தேவன் புலிகளது சமாதான செயலகத்தின் பொறுப்பாளர் ஆவர்.

“இராணுவம் வி.புலிகளைத் தோற்கடிப்பதற்குத் தனது இறுதிப் படைநடவடிக்கையை மேற்கொண்டிருந்த வேளையில் நான் விடுதலைப் புலிகளின் தலைமைக்கும் அய்க்கிய நாடுகள் சபைக்கும் இடையில் பல நாட்களாக ஒரு இடைத்தரகராகச் செயல்பட்டேன்” என சண்டே ரைம்ஸ் (Sunday Times) நிருபர் (மேரி கொலின்) எழுதியிருந்தார்.

இந்த நிருபர் இந்த இரண்டு தலைவர்களும் கொல்லப்பட்ட மே 18 காலை என்ன நடந்தது என்பதை ஒரு குழுவில் இருந்து தப்பிய ஒரு தமிழர் விளக்கியதை மேற்கோள் காட்டி எழுதியிருந்தார்.

இந்தத் தமிழர், பின்னர் ஒரு தொண்டுத் தொழிலாளியிடம் பேசியவர், நடேசன் மற்றும் புலித்தேவன் சிறீலங்கா இராணுவம் அணிவகுத்து நின்ற பக்கம் ஒரு வெள்ளைக் கொடியோடு ஒரு பத்துப் பன்னிரண்டு ஆண், பெண் குழு சகிதம் நடந்து போனார்கள். உடனே இராணுவம் இயந்திரத் துப்பாக்கிகளால் அவர்களை நோக்கிச் சுடத் தொடங்கியது என்றார்.

நடேசனது மனைவி, அவர் ஒரு சிங்களப் பெண், சிங்களத்தில் அந்த இராணுவத்தினரை நோக்கி சத்தம் போட்டார். “அவர் சரணடைய முயற்சிக்கிறார், நீங்கள் அவரைச் சுடுகிறீர்கள்” என்றார். அவரும் சுட்டு வீழ்த்தப்பட்டார்.

இப்போது தனது உயிருக்குப் பயந்து ஒளிந்திருக்கும் இந்தத் தமிழர் எல்லோரும் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார்கள் என்கிறார்.

இது தொர்பாக, டிசெம்பர் 09, 2009 அன்று அவுஸ்திரேலியா ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (அஒகூ) (Australia Broadcasting Corporation (ABC) நிகழ்ச்சித் தொகுப்பாளரான சரா டிங்கிள் (Sarah Dingle) அய்நாவுக்கான ஸ்ரீலங்கா தூதுவர் பாலித கோகொன அவர்களை காற்றலையில் நேர்காணல் கண்டார். கோகொன ஸ்ரீலங்காவின் வெளியுறவு அமைச்சின் செயலாளராவார்.

இந்த நேர்காணலில் பாலித கோகொன நடேசன் மற்றும் புலித்தேவன் இருவரும் சரண் அடைந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக தனக்கு ஒன்றும் தெரியாது என சரா டிங்கிள் கேடட கேள்விகளுக்குப் பதில் இறுக்கிறார். ஆனால் மேரி கொலின் கோகொன செஞ்சிலுவைச் சங்கத்துக்கு “வெறுமனே படைகளுக்கு ஊடாக வெள்ளைக் கொடியோடு மெல்ல நடக்கவும்! தரப்படும் ஆணைகளுக்கு இணங்க கவனமாகச் செயல்படவும். இராணுவத்தினருக்கு தற்கொலைக் குண்டுதாரிகள் பற்றிப் பயம் இருக்கிறது” என்ற செய்தி அனுப்பினார் என எழுதியிருக்கிறார். மேரி கொலினுக்குப் பொய் சொல்வதற்கான தேவையில்லை. ஆனால் அந்தத் தேவை பாலித கோகொன அவர்களுக்கு இருக்கிறது. செஞ்சிலுவைச் சங்கத்துக்கு செய்தி அனுப்பியதை ஒத்துக் கொண்டால் அவர் போர்க் குற்ற விசாரணைக்கு முகம் கொடுக்க வேண்டிய அபாயம் இருக்கிறது.

இப்போது டிங்கிள், பாலித கோகொன அவர்களோடு நடத்திய நேர்காணலின் தமிழாக்கத்தைப் பார்ப்போம்.

டிங்கிள்: உள்நாட்டுப் போரின் இறுதி நாட்களில் வி.புலிகளின் அரசியல் தலைவர்கள் இரண்டு பேர் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சரண் அடைய முயற்சித்தார்கள். இந்தச் சம்பவம் 2009 இல் அமெரிக்க இராசாங்க திணைக்களம் காங்கிரசுக்கு அனுப்பி வைத்த ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்த அறிக்கை சனவரி 2009 இல் இருந்து மே 2009 முடியும் வரை ஸ்ரீலங்கா பன்னாட்டு மானிடத்துக்கான சட்டத்தை மீறுகிற சாத்தியம் இருப்பதாகச் சொல்லுகிறது.

இந்த அறிக்கை நடேசன் மற்றும் புலித்தேவன் இருவரும் இடையீட்டாளராக இருந்த பன்னாட்டு மற்றும் உள்ளுர் பிரமுகர்களுடன் பேசினார்கள் எனக் குறிப்பிடுகிறது. இடையீட்டாளர்கள் அப்போது வெளியுறவு அமைச்சின் செயலாளராக இருந்த கலாநிதி பாலித கோகொன அவர்களோடு சரணடைவதுபற்றி பேச்சுவார்த்தை நடத்தினார்கள். நடேசன் அய்நா ஒரு சாட்சியாக இருக்க வேண்டும் எனக் கேட்டார். ஆனால் அவர்களது பாதுகாப்புக்கு ஸ்ரீலங்கா சனாதிபதியின் உத்தரவாதம் இருப்பதாகச் சொல்லப்பட்டது.

மே 18 ஆம் நாள் நடேசன் மற்றம் புலித்தேவன் இருவரும் வெள்ளைக் கொடியின் கீழ் ஒரு டசின் ஆண், பெண் ஆகியோரைக் காத்திருந்த ஸ்ரீலங்கா இராணுவத்திடம் கூட்டிச் சென்றார்கள். அப்போது அவர்களைப் பார்த்து இராணுவத்தினர் இயந்திரத் துப்பாக்கிகளால் சுட்டதாக ஒரு தமிழர் சாட்சி சொன்னார். அந்தக் குழுவில் இருந்த அனைவரும் கொல்லப்பட்டார்கள்.

இப்போது கலாநிதி பாலித கோகொன ஸ்ரீ லாங்காவின் அய்நா தூதுவராக இருக்கிறார். அவர் ஒரு அவுஸ்திரேலியா குடிமகன். நாடாளுமன்றக் குறிப்பேட்டின் படி அவர் வெளியுறவு மற்றும் வாணிக திணைக்களத்தின் மூத்த அதிகாரியும் ஆவார். அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் கோகொன அவர்களிடம் இந்த சரண் தொடர்பாக அவர் வகித்த பாத்திரம் எவ்வாறனது எனக் கேட்டது.

கோகென: கட்டோடு எந்தப் பாத்திரத்தையும் நான் வகிக்கவில்லை. காரணம் அப்போது நான் வெளியுறவு அமைச்சில் பணியாற்றினேன். பாதுகாப்பு அமைச்சு அல்லது பாதுகாப்புப் படையினர் ஆகியரோடு எனக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை. நான் எந்த ஒரு ஒழுங்கை செய்வதிலும் சம்பந்தப்படவில்லை. அதுமட்டுமல்ல எதுவும் ஒழுங்கு செய்யப்பட்டதாகவம் நான் நினைக்கவில்லை.

டிங்கிள் – அப்படியென்றால் சரணடைவது பற்றி எந்த உடன்பாடும் இல்லை?

கோகொன: என்னைப் பொறுத்தளவில் நிச்சயமாக இல்லை. வேறு யாராவது அப்படியான சரணடைவில் ஈடுபட்டார்கள் எனவும் நான் நினைக்கவில்லை.

டிங்கிள் – அப்படியென்றால் இந்த இரண்டு பேரும் சரண் அடைவதுபற்றி வேறு யாராவது உங்களோடு தொடர்பு கொண்டார்களா?

கோகொன: பாதுகாப்பு நிறுவன ஆட்களோடு? இல்லை.

டிங்கிள்: இந்த இரண்டு பேரும் சரண் அடைவதுபற்றி வேறு எவரேனும் உங்களோடு தொடர்பு கொண்டார்களா?

கோகொன: என்னை நள்ளிரவில் நித்திரையில் இருந்து எழுப்ப முயற்சி செய்யப்பட்டது. ஆனால் நான் நீங்கள் பிழையான ஆளோடு தொடர்பு கொண்டுள்ளீர்கள், எனக்கும் சரண் அடைவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, இந்த விடயம் என்ன வழியில் கையாளப்பட வேண்டுமோ அந்த வழியில் கையாளுமாறு நான் அவர்களிடம் சொன்னேன்.

டிங்கிள்: அதென்ன வழி?

கோகொன: மன்னிக்கவும், இப்படியான முட்டாள்த்தனமான கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியாது.

டிங்கிள்: சுடப்பட்டு 3 வாரங்கள் கழித்து ஸ்ரீலங்கா இராணுவத்தின் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவம் மரபுவழி விதிகளைக் கண்டும் காணாதுவிட்டு விட்டு வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்த கிளர்ச்சிக்காரர்களை கொல்ல வேண்டியிருந்தது என்று சொன்னதாக செய்தி வெளிவந்தது.

டொன் றொத்வெல் (Don Rothwell) அவுஸ்திரேலியா தேசிய பல்கலைக் கழகத்தில் பன்னாட்டு சட்டப் பேராசிரியராக இருக்கிறார். கலாநிதி கோகொன ஒரு இராசதந்திரி என்ற முறையில் அவர் மீது வழக்குத் தொடுப்பதில் விலக்களிப்பு இருக்கிறது. ஆனால் அண்மைக் காலத்தில் போர் குற்றம் தொடர்பாக பன்னாட்டு சட்ட நீதிமன்றங்கள் இந்தக் கோட்பாட்டினை கேள்விக்கு உள்ளாக்கி இருக்கின்றன.

றொத்வெல்: இப்படி இளைக்கப்பட்டதாகச் சொல்லப்படும் போர்க்குற்றங்களுக்கு கலாநிதி கோகொன நேரடியாகப் பொறுப்பு எனக் குறிப்பாகச் சொல்லமுடியாது. ஆனால் பன்னாட்டு சட்டம் கட்டளைப் பொறுப்பு என்ற கோட்பாட்டின் கீழ் யாராவது நேரடியாக – இது போன்ற குற்றங்களுக்கு சட்டத்துக்கு உட்பட்டதாகவோ அல்லது அரசியல் காரணங்களுக்காகவோ செய்திருந்தால் அதனை அங்கீகரிக்கிறது.

டிங்கிள்: இந்த விடயத்தில் ஒரு தொடக்க விசாரணையை மேற்கொள்ளுவதற்கு போதுமான சான்றுகள் இருக்கின்றன என பேராசிரியர் றொத்வெல் சொல்கிறார்.

றொத்வெல்: கலாநிதி கோகொன அவுஸ்திரேலியா மற்றும் ஸ்ரீலங்கா இரண்டினதும் குடியாளர் ஆவார். அவுஸ்திரேலிய குடியாளர் என்ற காரணத்தால் சட்ட மட்டத்தில் இந்த விடயத்தை விசாரிக்க சுயமாகவே அவுஸ்திரேலியாவுக்கு உரிமை உண்டு. ஆனால் அவர் அவுஸ்திரேலியா அரசின் முன்னாள் உயர் அதிகாரி என்றமுறையில் – அவுஸ்திரேலியாவை பன்னாட்டு பேச்சுவார்த்தையில் சார்புபடுத்தியவர் என்ற முறையில் – குறைந்தபட்சம் தொடக்க விசாரணையை ஆவது தொடக்குவதற்கான பொறுப்பு அவுஸ்திரேலியாவுக்கு இருக்கிறது.

டிங்கிள்: கலாநிதி பாலித கோகொன.

கோகொன: முதலும் முக்கியமாகவும் இந்த குற்றச்சாட்டுக்கள் மெய்ப்பிக்கப்பட வேண்டும். எந்தவொரு நாடும் மெய்ப்பிக்கப்படாத உண்மைகள் மற்றும் மறைமுக அவதூறுகளின் அடிப்படையில் சொல்லப்படும் அற்பத்தனமான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க வேண்டிய அவசியமில்லை.

டிங்கிள்: தோற்கிற நாடுகள் மட்டுமே, போரில் தோற்கிற நாடுகள்தான் போர்க்குற்றங்களுக்காக விசாரிக்கப்படுகின்றன என ஒருமுறை நீங்கள் சொன்னதாக அறிகிறோம். அது உண்மையா?

கோகொன: வரலாற்று அடிப்படையில் அதுதான் உண்மை.

டிங்கிள்: அமெரிக்க இராசாங்க திணைக்களத்தின் அறிக்கை பற்றி மத்திய அரசும் அவுஸ்திரேலிய மத்திய காவல்துறையும் தங்களுக்குத் தெரியும் எனச் சொல்கிறார்கள். ஏஎவ்பி (AFP) கலாநிதி கோகொன அவர்கள் மீது சாட்டப்படும் போர்க் குற்றங்கள் பற்றி விசாரிக்குமாறு கோரும் எந்த விதப்புரையும் தங்களுக்கு வரவில்லை என்று சொல்லுகிறது. சட்டமா அதிபரின் பேச்சாளர் ஒருவர் போர்க் குற்றம் இடம்பெற்றதாகச் சொல்லப்படும் நாடுதான் அதனை விசாரணை செய்து வழக்குத் தொடரவேண்டும். அதுதான் போர்க் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை நீதியின் முன் நிறுத்த எடுக்க வேண்டிய பொருத்தமான வழியாகும்.

நேர்காணல் இத்துடன் நிறைவெய்துகிறது.

-நக்கீரன்-

About editor 1188 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist

Be the first to comment

Leave a Reply