வட மாகாண சபையில் நிலவும் குழப்பத்தை போக்க முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனது பதவியைத் துறக்க வேண்டும்!

வட மாகாண சபையில் நிலவும் குழப்பத்தை போக்க முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனது பதவியைத்  துறக்க வேண்டும்!

நக்கீரன்

ட மாகாண சபையில் நிலவும் குழப்பங்கள் மற்றவர்கள் பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கும் அளவுக்கு அதல பாதாளத்துக்குப் போய்விட்டது.  பலத்த  அழுத்தத்துக்குப் பின்னர் 2013 ஆம் ஆண்டு செப்தெம்பர் 21 இல் வட மாகாண சபைக்கு தேர்தல் நடந்தது.  மொத்தம் 23 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் மாகாண சபையின் ஆட்சி அதிகாரம் தமிழ்மக்கள் கையில் மீண்டும் வருவதையிட்டு எல்லோரும் மகிழ்ச்சி அடைந்தனர்.  சி.வி. விக்னேஸ்வரன் முதலமைச்சராகப் பதவி ஏற்றார்.

ஒன்றுபட்ட வட கிழக்கு மாகாண சபைக்கு நொவெம்பர் 19, 1988 இல் தேர்தல் இடம்பெற்றது.  அதன் முதலமைச்சராக  அண்ணாமலை வரதராசப்பெருமாள் டிசெம்பர் 10, 1988 அன்று  பதவி ஏற்றார்.  பின்னர் மார்ச் 01,1990  அன்று  முதலமைச்சர் அண்ணாமலை வரதராசப்பெருமாள் ஒருதலைப்பட்சமாக தமிழீழ சுதந்திரப் பிரகடனத்தை அறிவித்தார்.  இதனை அடுத்து சனாதிபதி இரணசிங்க பிரேமதாச வட – கிழக்கு மாகாண சபையைக் கலைத்தார். கிழக்கு மாகாணம் மே 2008 வரை கொழும்பின் நேரடிஆட்சியில் இருந்தது.  பின்னர் 37 உறுப்பினர்கள் கொண்ட பிரிக்கப்பட்ட கிழக்கு மாகாண சபைக்கு மே 10, 2008 இல் தேர்தல் நடைபெற்றது.  சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டார். கிழக்கு மாகாண சபைக்கு மீண்டும்  செப்தெம்பர் 08, 2012 இல் தேர்தல் நடைபெற்றது.

வட மாகாண சபையில் மொத்தம் 38 உறுப்பினர்களில் 30 உறுப்பினர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள். பலத்த எதிர்பார்ப்பின் மத்தியில் பதவிக்கு வந்த ததேகூ இன் ஆட்சியில்  அவ்வப்போது மோதல்கள் நெருக்கடிகள் தலைதூக்கத் தொடங்கின. தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு வென்ற விக்னேஸ்வரன் தனி ஆர்வத்தனம் வாசிக்கத் தொடங்கினார். “நான் தமிழரசுக் கட்சியின் செல்வாக்கால் தேர்தலில் வெல்லவில்லை. எனது சொந்த செல்வாக்கால் தேர்தலில் வென்றேன்” என்று பேசுமளவுக்கு விக்னேஸ்வரன் முன்னேறினார்.  ஓகஸ்ட் 8, 2015 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் விக்னேஸ்வரன்  மறைமுகமாக வீட்டுச் சின்னத்துக்கு எதிராக வாக்களிக்கும் படி ஒன்றுக்கு இரண்டு அறிக்கைகளை  வெளியிட்டார். இருந்தும் தேர்தலில் ததேகூ யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் உள்ள மொத்தம் 7 இடங்களில் 5 இடங்களில் வெற்றி பெற்றது. மொத்தம் 16 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள்.

தன் முயற்சியில் சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தன் மீண்டும் முருங்க மரத்தில் ஏறின கதையாய் விக்னேஸ்வரன் தோல்வியைக் கண்டு துவண்டுவிடாமல் தமிழ் மக்கள் பேரவை என்ற அமைப்பைத் தொடக்கி அதன் இணைத் தலைவரானார். இந்த அமைப்பு மாற்றுத் தலைமைக்காக ஏங்கித் தவிக்கும் புலம்பெயர் வன்னியின் மிச்சங்களது பினாமி அமைப்பு என்பது தெரிந்ததே.

வடக்கு மாகாண அமைச்சுக்களில், குறிப்பாக  விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அவர்களது அமைச்சில்  பல்வேறு மோசடிகள், முறையற்ற செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் அது தொடர்பில் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்  கோரி மாகாண சபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மாகாண அமைச்சர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கு  இரண்டு ஓய்வு பெற்ற நீதிபதிகள் மற்றும் ஓய்வுபெற்ற மாவட்ட அரச அதிபர் தலைமையிலான மூவர் அடங்கிய குழுவை  நியமித்தார்.  இந்த விசாரணைக் குழுவின் அறிக்கை கடந்த மே, 2017 இல் வெளிவந்தது. அதில்  வடமாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசனுக்கு எதிராக சுமத்தப்பட்ட நிதி மோசடி குற்றச்சாட்டுக்களில் அதிகமானவை எண்பிக்கப்பட்டுள்ளதாகவும் வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலாராசாவுக்கு எதிரான நிருவாக ரீதியான குற்றச்சாட்டுக்கள் பல எண்பிக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் சுகாதார அமைச்சர் மற்றும் மீன்பிடி அமைச்சருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள்  நிரூபிக்கப்படவில்லை என அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

நிதி மோசடிகள், நியமனங்கள், இடமாற்றங்கள் தொடர்பாக தேவையற்ற தலையீடுகள், வினைத்திறன் அற்ற செயற்பாடுகள் போன்ற குற்றச்சாட்டுக்களே நிரூபிக்கப்பட்டுள்ளன என்று அறிக்கை கூறியது. இதனால் வடமாகாண சபை வினைத் திறனாக இயங்க வேண்டும் எனில் அதிகளவில் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்ட அமைச்சர்கள் இருவர் பதவி விலக வேண்டும் எனவும் அவர்களுக்கு எதிராக மேலதிக சட்ட நட வடிக்கை எடுக்க வேண்டும் எனவும்  விசாரணைக் குழு  பரிந்துரை செய்தது.

குற்றச் சாட்டுக்கள் எண்பிக்கப்பட்ட இரண்டு அமைச்சர்களும் பதவி விலக வேண்டும் என முதலமைச்சர் கேட்டுக் கொண்டார். அதனை தமிழ் அரசுக் கட்சி வரவேற்றது.  குறித்த இரண்டு அமைச்சர்களும் பதவி விலக வேண்டும் எனக் கேட்டுக் கொண்டது.

முதலமைச்சர்  இந்த இரண்டு அமைச்சர்களுக்கு எதிரான நடவடிக்கையோடு நிறுத்திக் கொண்டிருந்தால் எந்தச்  சிக்கலும்  வந்திருக்காது. ஆனால் முதலமைச்சர் விசாரணைக் குழு குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பளித்த நல்வாழ்வு அமைச்சர் ப.சத்தியலிங்கம் மற்றும் மீன்பிடி, போக்குவரத்து அமைச்சர் பா. டெனீஸ்வரன்  இருவரும்  ஒரு மாதகாலம் கட்டாய விடுப்பில் போக வேண்டும் அவர்களை விசாரிக்க  இன்னொரு விசாரணைக் குழு  அமைக்கப்படும் என அறிவித்தார். இதன் பின்னர்தான் விக்னேஸ்வரன் தமிழ் அரசுக் கட்சிக்கு எதிரான அரசியல் பழிவாங்கலில் இறங்கியிருக்கிறார் என்ற உண்மை துலாம்பரமாகத் தெரியவந்தது.  

இந்த நகர்வு நீதியரசர் என்ற பெரிய பதவி வகித்த விக்னேஸ்வரன் உண்மையில் சின்னப் புத்தியுள்ளவர்,  சின்னத்தனமாக நடக்கக் கூடியவர் என்பதைத் துலாம்பரமாகக் காட்டியது. இதனை அடுத்துத்தான் அவர் மீது  21 உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானம்  ஒன்றை ஆளுநரிடம் கொடுத்தார்கள். 

ஏற்கனவே தமிழரசுக் கட்சியோடு மோதலில் ஈடுபட்டிருந்த சுரேஷ் பிறேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ரெலோ செல்வம் அடைக்கலநாதன், புளட் சித்தார்த்தன் விக்னேஸ்வரனுக்கு கொடி பிடிக்கத் தொடங்கினார்கள்.  அவரைத் தோளில் தூக்கி ஆடினார்கள். முதலமைச்சரும் அந்த மூன்று கட்சிகளோடு மட்டும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.

நூறு பேர் கூடி ஆர்ப்பாட்டம், கடையடைப்பு, ஊர்வலம் என ஒரே அமர்க்களம்.  இவற்றைப் பார்த்துப் பூரித்துப் போன விக்னேஸ்வரன் “மக்களாகிய உங்களது பலம் எனக்கு இருக்கும் போது நான் தொடர்ந்து மாகாண சபையை ஆட்சி செய்வேன்” என்று மேடைகளில் முழங்கினார். ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது அவருக்குத் தெரியவில்லை.

நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது அவரது ஆதரவாளர்கள் அல்ல மகாணசபை உறுப்பினர்களே வாக்களிப்பார்கள் என்ற யதார்த்தை அப்போது அவர் புரிந்திருக்கவில்லை. ஆனால் கடைசிக் கந்தாயத்தில் கத்தி தலைக்கு மேல் தொங்குவதைப் புரிந்து கொண்ட முதலமைச்சர் வெள்ளைக் கொடியோடு தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் சரண் அடைந்தார். இல்லை சரண் அடைவது போல நடித்தார். அவரது அபார நடிப்பில் மயங்கிப் போன தமிழரசுக் கட்சியின் தலைமை ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்தது. அது என்ன இணக்கப்பாடு?

முன்னாள் கல்வி அமைச்சர் த.குருகுலராசா அவர்களின் இடத்துக்கு  தமிழரசுக் கட்சி உறுப்பினர் இமானுவேல் ஆனால்ட் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட வேண்டும்.  முன்னாள் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அவர்களது இடத்துக்கு முதலமைச்சர் விரும்பியபடி நியமனம் செய்யலாம். அனந்தி சசரிகரனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கலாம் என்ற யோசனையை முதலமைச்சர் முன்வைத்தபோது   அனந்தி  தமிழரசுக் கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ள ஒருவர் என்ற செய்தி அவருக்குச் சொல்லப்பட்டது.

வேதாளம் மீண்டும் முருக்க மரத்தில் ஏறிய கதையாக கல்வி அமைச்சர் பதவியை விக்னேஸ்வரன் க. சர்வேஸ்வரனுக்கு வழங்கினார். இவர் இபிஎல்ஆர்எவ் கட்சித் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரனின் சகோதரர் ஆவார். அனந்தி சசிகரனுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. முதலில் 3 மாதங்களுக்கு தற்காலிக நியமனம் என்று சொல்லப்பட்டது. இப்போது  அந்த நியமனங்கள்  நிரந்தரமாக்கப் பட்டுள்ளன என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஒரு சர்வாதிகாரி போல் நடந்து கொள்வதைக் கவனித்த தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர்கள் கட்சி அலுவலகத்தில் கூடிக் கலந்துரையாடினார்கள். அதன்போது “மாற்றியமைக்கப்படும் வடக்கு அமைச்சரவையில் பங்கேற்பதில்லை” என்ற  தீர்மானம் எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் நேற்றுத் தனது பதவி விலகல் கடிதத்தை முதலமைச்சருக்கு அனுப்பி வைத்தார்.

ஓகஸ்ட்  06  தேதியிட்ட அந்தக் கடிதத்தில் “அமைச்சரவையிலிருந்து தன்னை வெளியேற்ற வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எடுத்துள்ளார் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிவதால் அவருக்குக் கீழ் ஓர் அமைச்சராக இருக்க  நான் விரும்பவில்லை. மீள் அமைக்கப்படும் விசாரணைக்குழு நீதியானதாகவும் சட்டரீதியானதாகவும் இருந்தால் நான் மீண்டும் விசாரணைக்குத் தயாராக இருந்தேன். கடந்த 5 ஆம் திகதி தங்கள் அலுவலகத்தில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களுடன் நடந்த சந்திப்பில், அமைச்சரவையிலிருந்து என்னை வெளியேற்ற வேண்டும் என்று கருத்துத் தெரிவித்துள்ளீர்கள். அதில் நீங்கள் பிடிவாதமாக இருந்துள்ளீர்கள்” என்று ப.சந்தியலிங்கம்  தெரிவித்தார்.

மருத்துவர் ப. சத்தியலிங்கத்தின் மீது முதலமைச்சருக்கு என்ன காய்ச்சல்?  அடுத்த முதலமைச்சர் பதவிக்கு  சத்தியலிங்கத்தின் பெயர் அடிபடுகிறது என்பதை முதலமைச்சர் தெரிந்து வைத்துள்ளார். சத்தியலிங்கம் நேரடியாக மத்திய அரசோடும் வெளிநாடுகளோடும் பேசி ரூபா 195 மில்லியன் பெறுமதியான  உதவியைப் பெற்றுள்ளார். வவுனியாவில் தேசிய வீட்டுத் திட்ட அமைச்சிடம் இருந்து 1,400 வீடுகள் வவுனியா மாவட்டத்தில் கட்ட ஏற்பாடு செய்திருந்தார்.  இதனைப் பொறுக்காத விக்னேஸ்வரன் தனது அமைச்சர் தனக்குத் தெரியாமல் மத்திய அரசிடம் இருந்து உதவி பெறுகிறார் எனப் புலம்பியிருக்கிறார். விசாரணைக் குழுவிடமும் “சத்தியலிங்கத்தை மாட்ட முடியாதா?” என முதலமைச்சர் கேட்டிருக்கிறார். 

அதாவது தமிழ் அரசுக் கட்சியை ஓரங்கட்ட முதலமைச்சர் தொடர்ந்து அரும் பாடுபட்டு வருகிறார். ஏறிய ஏணியை எட்டி உதைக்கிறார். உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்கிறார். ஒரு முலமைச்சருக்கு பொருள், கருவி, காலம், செயல், இடம்  இவைகளை ஆராய்ந்து  வினையாற்றத்  தெரிய வேண்டும். இவை அவரிடம்  மருந்துக்கும் இல்லை.

மேலும்  முதலமைச்சர் நேரத்துக்கு ஒரு கதை சொல்லிக் கொண்டிருக்கிறார். முதல்நாள் சொன்னதை அடுத்த நாள் மறுக்கிறார். “இராணுவத்தில் இருந்து ஓடிப்போனவர்கள் தெற்கிலே எவ்வாறு பாரிய குற்றங்களைப் புரிந்தார்களோ அதே போல் யுத்த பயிற்சி பெற்றவர்கள் வடக்கிலும் அவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபட வாய்ப்பிருக்கின்றது. குற்றச் செயல்கள் எங்கு நடைபெற்றாலும் எமது எல்லா வளங்களையும் உள்ளேற்று அவற்றைத் தடுக்கவோ உரிய விதத்தில் நடவடிக்கை எடுக்கவோ வேண்டும். எனவே இராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டிருக்கும் ஒருவர் எது நடந்தாலும் அவர்களுடைய ஒத்துழைப்பைக் கோரக்கூடாது என்று அதற்கு அர்த்தமில்லை. அப்படியானால் எது நடந்தாலும் நாங்கள் சும்மா இருக்க வேண்டும் என்று பொருள்படும். மேலும் இராணுவத்தை அவசரத்திற்கும் அழைக்கக் கூடாது அவர்கள் களமிறக்கப்படுவதை எதிர்க்கவேண்டும் என கேட்பவர்கள் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமானவர்களாகவே இருப்பர்” என்றார். ஆனால் அடுத்த நாள் தான் யுத்தப் பயிற்சி பெற்றவர்கள் என்று சொன்னது வி.புலிகளை அல்ல, இராணுவத்தோடு சேர்ந்து இயங்கும் குழுக்களை” என்றார்.

இதற்கிடையில் வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராசா  “வினைத்திறன் அற்ற மாகாண சபையில் மேலும் ஒரு  சர்ச்சையாக தமிழரசுக் கட்சியும் அமைச்சரவையில் இருந்து ஒதுங்குமாயின் சபையை கலைக்குமாறு முதலமைச்சர் பரிந்துரைக்க வேண்டும் என  வேண்டுகோள் விடுத்துள்ளார். அண்மைக் காலமாக தவராசா முதலமைச்சர் மீது சரமாரியான குற்றச் சாட்டுக்களை சுமத்தி வருகிறார். “இன்றைய சூழலில் மக்களிற்கு எதுவுமே செய்யாது வெறுமனே பெரும்தொகை நிதி உறுப்பினர்களதும் அமைச்சர்களதும் சம்பளம் நிருவாகச் செலவு, அலுவலக வாடகை, வாகனச் செலவு எனச் செலவு செய்து மேடை நிகழ்வுகளில் பங்கு கொள்வதற்காக மக்கள் தேர்வு செய்யவில்லை. இந்த வடமாகாண சபையின் சடடத்திற்கு உட்பட்டு பல நியதிச் சட்டங்களை உருவாக்கி ஆயிரக் கணக்கானோருக்கு வேலைவாய்பை வழங்கியிருக்கலாம். அத்துடன் புலம்பெயர் மக்களை முதலமைச்சர் அணுகி அழைத்துவந்து பாரிய முதலீடுகளைச் செய்வித்து இளைஞர் யுவதிகளில் பல ஆயிரம் பேருக்கான வேலை வாய்ப்பினையும் போரால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு நிரந்தர உதவிகளையும் முதலமைச்சரால் ஏற்படுத்தியிருக்க முடியும்”  எனக் காட்டமாகச் சொல்லியிருக்கிறார்.

இந்த ஆண்டுத் தொடக்கத்தில் கனடாவுக்கு வருகை தந்த முதலமைசர் விக்னேஸ்வரனிடம் பொது மக்களும் நிறுவனங்களும் பல இலட்சம் டொலர்களை வட மாகாண அபிவிருத்திக்கு நன்கொடையாக  வழங்கி இருந்தன. பிரம்ரன் தமிழ் ஒன்றியம் மட்டும் 45,000 டொலருக்கு ஒரு காசோலை முதலமைச்சரிடம் கையளித்தது. ஆனால் முதலமைச்சர் தனக்கு யாரும் பணமோ காசோலையோ தரவில்லை என மறுக்கிறார். இதில் யார் உண்மை பேசுகிறார்கள், பொய் பேசுகிறார்கள் என்பது தெரியவில்லை.

முதலமைச்சர் தாறுமாறாக நடப்பதை வைத்து மாகாண சபையைக் கலைப்பது விரும்பத்தக்கது அல்ல. அது மீண்டும் மத்திய அரசின் ஆட்சியை கொண்டுவருவதாக அமைந்துவிடும். தமிழர்களால் ஒரு மாகாண சபையைக் கூட வினைத் திறனோடு நிருவகிக்கத் தெரியாது என்று அவப் பெயரும் வந்து விடும்.  கலைப்பது புத்திசாலித்தனம் இல்லை. 

முதலமைச்சர் ஒன்று செய்யலாம்.  வட மாகாண சபையில் நிலவும் குழப்பத்தை போக்க முதலமைச்சர் தனது பதவியைத்  துறக்க வேண்டும்.  மொத்தம் 38 உறுப்பினர்கள் உள்ள மாகாணசபையில் சரி பாதிக்கு மேலான  (21)  உறுப்பினர்களின் நம்பிக்கையை விக்னேஸ்வரன் அடியோடு இழந்து விட்டார். இதனால் அவர் தொடர்ந்து முதலமைச்சராக இருப்பது மக்களாட்சி முறைமைக்கு எதிரானது.   பதவி  ஆசை காரணமாக முதலமைச்சர் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கிறார் என்ற பழிச் சொல்லை அவர் சுமக்க வேண்டிவரும்.   ஒரு முன்னாள் நீதியரசருக்கு  அது மகிமையும் அல்ல. பெருமையும் அல்ல.

About editor 2979 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply