இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி 65

 பிராம‌ணர்களின் பாவமன்னிப்பு வேண்டுதல். தெரியுமா?

என் ஆண் உறுப்பு, கை, கால், வாய், மனசு… வரை ராத்திரி செய்த பாவங்களையெல்லாம் பனித்துளியை எப்படி போக்குவாயோ அதேபோல போக்கிவிடு…’ என்று வேண்டினான்.

புத்தி கெட்டு நான் பாவம் பண்ணி விட்டேன். சூதாட்டம் போன்ற பாவங்களைக் கூட பண்ணிவிட்டேன். என் பாவங்களையெல்லாம் நிவர்த்தித்து என்னை ரட்சிப்பாய் வர்ணா…”

எச்சில் பொருள்கள், புனிதம் கெட்டவர்களிடமிருந்து வாங்கி வந்த தானங்கள் ஆகியவற்றால் எனக்கு வரும் பாவங்களை நிவர்த்தி செய்யவேண்டும்…” என வேண்டுகிறான் பிராமணன்.

பாவ மன்னிப்பு பற்றி பார்த்து வருகிறோம்  பகுதி – 65

சந்தியா வந்தனத்தில் காலையில் எழுந்திருந்து சூரியதேவனிடம் என்ன வேண்டினான்…?

‘கை, கால், வாய், மனசு… ஆண் உறுப்பு வரை ராத்திரி செய்த பாவங்களையெல்லாம் பனித்துளியை எப்படி போக்குவாயோ அதேபோல போக்கிவிடு…’ என்று வேண்டினான். இது காலை நேரத்து வழக்கம். சரி… ராத்திரி செய்த பாவங்களை காலையில் போக்கிக் கொள்ள இந்த மந்த்ரம். சந்தியா வந்தனத்தில் அடுத்து மதியானம் ஒரு ‘அஸனம்’ பண்ண வேண்டும்.

இதை இப்போது தீவிர வைதீகத்தில் இருக்கும் ஒரு சிலர்தான் உச்சி வேளையிலேயே பண்ணுகிறார்கள். மற்ற பெரும்பாலான பிராமணர்கள், இதை காலையிலேயே சேர்த்து ‘two in one’ பாணியில் பண்ணிவிட்டுப் போய்விடுகிறார்கள்.சரி… மதிய மந்த்ரம் என்ன சொல்கிறது…

“ஆப புநந்து ப்ருதிவீம் ப்ருத்வீ
பூதா புநாதுமாம் புநந்து ப்ரஹ்மணஸ்
பதி ப்ரஹ்மபூதா புநாது மாம்
யதீச்சிஷ்டம் அபோஜ்யம் யத்வா
துஸ்சரிதம் மம ஸர்வம் புனந்துமாம்
ஆப அஸதாம்ச ப்ரதிக்ரஹம் ஸ்வாஹா”

இதற்கென்ன அர்த்தம்…?
“அய்யா தேவதைகளே… நான் (பிராமணன்) காலை கிளம்பி பல இடங்களுக்கும், கிரகங்களுக்கும் (வீடு) ஹோமம் பண்ணி வைக்கப் போகிறேன். யாகம் பண்ணி வைக்கப் போய் வருகிறேன்.

அப்போது… எனக்கு முன்பின் தெரியாதவர்கள் கொடுக்கிற சாமான்களையெல்லாம் தானமாக வாங்கிக் கொள்கிறேன். அவர்களில் சிலர் எனக்குக் கொடுத்த தானங்கள் எச்சில் படுத்தப்பட்டதாக இருக்கலாம்.

ஒருவேளை அவர்கள் புனிதம் கெட்ட கீழ் வர்ணத்தவர்களாக இருக்கலாம். அவர்களிடமிருந்து தானம் வாங்கினால் எனக்கு பாவம் ஆயிற்றே… நானும் தெரியாமல் வாங்கி வந்து வீட்டில் போட்டிருப்பேன். அதனால்… அந்த எச்சில் பொருள்கள், புனிதம் கெட்டவர்களிடமிருந்து வாங்கி வந்த தானங்கள் ஆகியவற்றால் எனக்கு வரும் பாவங்களை நிவர்த்தி செய்யவேண்டும்…” என வேண்டுகிறான் பிராமணன்.

அதாவது ஒரே நாளில் இரண்டாவது முறையாக பாவ மன்னிப்பு கோருகிறான். அடுத்து… மாலை….

மறுபடியும் காலையில் சொன்ன பாவ மன்னிப்பு மந்த்ரத்தையே…. கொஞ்சம் மாற்றி திரும்பச் சொல்கிறான்.

அதாவது….‘அக்னி தேவா… காலையில் கேட்டதைத்தான்’ இப்போதும் கேட்கிறோம். காலையிலிருந்து மாலைவரை நான் கையால், காலால், வயிறால், வாக்கால், என் ஆணுறுப்பால் ஏதேனும் அறிந்தும், அறியாமலும் பாவம் செய்திருந்தால் என்னை அப்பாவங்களில் இருந்து நிவர்த்தி செய்வாயாக…’ என்கிறான்.

இப்படியாக ஒரு நாளைக்கு மூன்று முறை அஸனம் செய்து மன்னிப்பு கேட்கிறான். அதாவது… அஸனம் என்றால் நீரை சிறிது சிறிதாக எடுத்துக்கொண்டு… அதில் வேத மந்த்ரங்களை சொல்லி புனிதப்படுத்தி அந்தத் தண்ணீரை உட்கொண்டு வேண்டுவது.

இதுபோல காலை, மதியம், மாலை மூன்று வேளைகளிலும் மன்னிப்பு கேட்பதோடு… உபஸ்தானம் என்ற வேண்டுதலும் உண்டு. சந்தியாவந்தனத்தில் வருண உபஸ்தானம் முக்கியமானது.

அதாவது… மழைக்கு பொறுப்பு வகிக்கும் தேவதையான வருணனிடம் வேண்டுவது. அதென்ன…?கொஞ்சம் பெரிய மந்த்ரம்

“இமம்மே வருண ச்ருதீஹவம்
அத்யாச ம்ருடய த்வாமவஸ்யு:
ஆசகே தத்வாயாமி
ப்ரஹ்மணா
வந்தமானது ததாசாஸ்தே
யஜமான ஹவிர்பி:
அஹேட
மான: வருணேஹபோதி
உருசம்ஸமான: ஆயு:
ப்ரமோஷீ:
யச்சித்திதே விசோயதா
ப்ரதேவ வருண
வ்ரதம் மினீமஸி
த்யவித்யவி யத்கிஞ்
சேதம் வருணதைவ்யே ஜனபித்ரோஹம்
மனுஷ்யா: சரமாஸி அசித்தீயத்வ
தர்மா யுயோபிம மானஸ்தஸ்மாத்
ஏனஸோ தேவரீரிஷ: கிதவாஸ:
யத்ரிரிபு நதீவி யத்வாஹா ஸத்யம்
உதயந் நவித்ம ஸர்வாதா விஷ்ய
சிதிரேவ தேவ அதாதேஸ் யாம
வருணப் ரியாஸ.”

ஹே… வர்ணா நான் ரொம்ப கஷ்டப்படறேன். like ordinary people I am also committed sins. சாதாரண மக்களைப் போல நானும் தவறு செய்துட்டேன். நீ லோக வாழ்க்கைக்குனு ஒரு கோட்பாடு வைத்திருக்கிறாய். நான் அதை மீறிவிட்டேன். புத்தி கெட்டு நான் பாவம் பண்ணி விட்டேன்.

சூதாட்டம் போன்ற பாவங்களைக் கூட பண்ணிவிட்டேன். என் பாவங்களையெல்லாம் நிவர்த்தித்து என்னை ரட்சிப்பாய்வர்ணா…”

இந்த சந்தியா வந்தன மந்த்ரங்கள் எல்லாம் வேத மந்த்ரங்கள். வேதங்களில் யாகத்தின் போது சொல்லப்படும் மந்த்ரங்கள். பிராமணர்கள் வேத கர்மாக்களை பெருமளவு குறைத்துக் கொண்டு விட்டதால் தான், அந்த மந்த்ரங்களை சந்தியா வந்தனத்தில் வைத்தார்கள். அதனால் இவ்வேத மந்த்ரங்களை சொல்லும்போது பாவங்கள் அகலும் என்பது நம்பிக்கை. இது வேதம் சொன்னது.

பாவ மன்னிப்பு நமது வேதத்திலேயே பல்லாயிரம் வருஷங்கள் முன்பு சொல்லப்பட்டிருக்கும் போது… கிறிஸ்தவர்களின் பாவ மன்னிப்பு பழக்கத்தை ஜெயேந்ததிரர் போன்றவர்கள் தூற்றுகிறார்கள் என்றால்… அவர்கள் வேதம் தெரியாதவர்கள்.– அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் . (தொடரும்)

About editor 2990 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply