சீரோடும் சிறப்போடும் நடந்தேறிய அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் முப்பதாவது ஆண்டு விழா

சீரோடும் சிறப்போடும் நடந்தேறிய அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் முப்பதாவது ஆண்டு விழா

கொட்டு முரசே, தமிழோங்கிச் சிறக்குதென்று கொட்டு முரசேயென பெருமுரசு முழங்கவும், தவில், நாகசுரமுள்ளிட்ட இன்னபிற இசைக்கருவிகள் ஒலிக்கவும் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் முப்பதாவது ஆண்டு விழா, குறித்த நேரத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தோடும் அமெரிக்க நாட்டுப்பண்ணோடும் மின்னசோட்டாவின் மினியாபொலிசு நகரில் எழுச்சியுடன் துவங்கியது. அதனையடுத்து, மங்கல இசையினை மின்னசோட்டா தமிழ்ச்சங்கத்தைச் சார்ந்த நுண்ணிசைக் கருவி மாணவர்கள், தத்தம் ஆசான்களான வாத்தியகலாமணி சிலம்பரசன் கஜேந்திரன், நாகசுரக்கலைஞர் இராமச்சந்திரன் வெங்கடசாமி ஆகியோருடன் இணைந்து அரங்கேற்றம் செய்தனர். நிமிர்வு பறையிசைக் கலைஞர் சக்தி பறையிசையை அதிரவிட, சிலம்பம், கரகாட்டம் போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டன.

நெஞ்சக்களிப்பினில் கூத்தைச் சேர்க்கும் கனற் பொருளே, ஆழ்நீரில் வெளிப்பட எழும் கதிரேயென்கிற தமிழ்ப் போற்றுதலுடனான திருக்குறள் மறையோதலைத் தொடர்ந்து, விழாவுக்கு வந்திருக்கும் விருந்தினர்களோடு பெருமுரசுப் பெருமுழக்கம் இசைக்கப்பட்டுச் சிறப்புத் தோற்றமளித்தார் கயானா நாட்டுத் தலைமையமைச்சரான மாண்புமிகு நாகமுத்து அவர்கள்.

பேரவைத்தலைவரின் வரவேற்புரையைத் தொடர்ந்து, பேரவை விழா மலரினை எழுத்தாளர் சுகுமாரன், கவிஞர் சுகிர்தராணி ஆகியோர் வெளியிட்டனர். தொடர்ந்து சிகாகோ தமிழ்ச்சங்கத்தினர், ஐம்பெரும்காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரம் நாட்டியநாடகம் நிகழ்ச்சியை அளித்தனர். கயானா நாட்டுத் தலைமை அமைச்சர் உரையாற்றும் போது, கயானா நாட்டுத் தமிழர்களின் பின்புலம், தமிழர்களின் மேம்பட்ட ஒருங்கிணைப்பின் தேவை, பெண்டிர் உரிமை குறித்தான விழிப்புணர்வு முதலானவற்றைக் குறிப்பிட்டுப் பேசினார். புதுச்சேரியைச் சேர்ந்த தமிழறிஞர் முனைவர் மு.இளங்கோவன் தயாரித்த விபுலாநந்தர் ஆவணப்படம் கயானா நாட்டுப் பிரதமரால் வெளியிடப்பட்டது.

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு திரைக்கலைஞரும் பலகுரல் பேச்சுக்க லைஞருமான சின்னிஜெயந்த் அவர்களின் சிறப்பு நகைச்சுவை நிகழ்ச்சி இடம் பெற்றது. ‘தமிழ்மரபுகள் மீட்கப்படுகின்றனவா? அழிக்கப்படுகின்றனவா??” எனும் தலைப்பில் திரைப்படக்கலைஞர் ரோகிணி அவர்களின் நெறியாள்கையில் இடம் பெற்ற கருத்துக்களம் நிகழ்ச்சி, பார்வையாளர்களுக்கிடையே விறுவிறுப்பைக் கூட்டியது. தொடர்ந்து கடல்வழி ஆய்வாளர் ஒரிசா பாலு அவர்களின் உடை இடம் பெற்றது.

கவிஞர் சுகிர்தராணி அவர்கள் தலைமை வகிக்க, “தமிழ் போற்றும் தலைமுறையும் தழைக்காதோ?” எனும் தலைப்பில் அமெரிக்கத் தமிழ்க்கவிஞர்கள் தம் கவிதையால் அரங்கத்தைச் சிந்தனைக்காட்படுத்தினர். கவிதைகள் மிகக்கூர்மையாகவும் பெருத்த வரவேற்பையும் பெற்றன.

விருத்தாச்சலம், கருவேப்பிலங்குறிச்சிக்கு கிழகே நான்கு மைல்தூரம் சென்றால், வெள்ளாற்றங்கரையின் இருக்கிறது கார்மாங்குடி. இப்பகுதியை மன்னன் நரேந்திரன் ஆண்டு வந்தான். அவனுடைய மகன் சாரங்கதாரன். இளவயதுச் சாரங்கதாரனை, மன்னனின் இளவயது மனைவியான சித்ராங்கி என்பவள் விரும்புகிறாள். சிற்றன்னையின் வீபரீதமான ஆசையைத் தெரிந்து கொண்ட சாரங்கதாரன் இசைவளிக்காது மறுக்கிறான். ஏமாற்றமுற்ற சித்ராங்கி, சாரங்கதாரனைப் பற்றிப் புறங்கூறி தண்டனைக்குள்ளாக்குகிறாள். அதன் விளைவாக, சாரங்கதாரனுக்கு கால் வெட்டப்படுகிறது. இத்தகு பின்னணியைக் கொண்ட ‘சாரங்கதாரன்’ நாடகமானது சிகாகோ தமிழ்ச்சங்கத்தினரால் நடத்தப்பட்டது.

தொடர்ந்து மின்னசோட்டா தமிழ்ச்சங்கத்தினரின் மரபுக்கலைகளை வெளிப்படுத்துமுகமாக பல கலை நிகழ்ச்சிகள் கோலாகலமாக இடம் பெற்று, அரங்கத்தில் பெரும் ஆரவாரத்தை உண்டாக்கியது. ஐந்திணை பரதம், சதிராட்டம் எனச் சுட்டப்பட்ட நிகழ்ச்சி அருமையாக வடிவமைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து படைப்பாளியும் இயக்குநருமான மிஷ்கின் உரைநிகழ்த்தினார்.

தொடர்ந்து, இவ்வாண்டுக்கான அமெரிக்கத் தமிழ் முன்னோடி விருது, பேரவை உறுப்பினர் இராஜா கிருஷ்ணமூர்த்தி, இசையமைப்பாளர் கிளாரன்சு ஜெய், தகவற்தொழில்நுட்ப வல்லுநர் பழநி குமணன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. மின்னசோட்டா தமிழ்ச்சங்கத்தினரால் நேர்த்தியாக தமிழில் எழுதப்பட்டு இசையமைக்கப்பட்ட அமெரிக்க நாட்டுப்பண் பாடப்பட்டபோது  அஃது எல்லோரது வரவேற்பையும் பெற்றது. பண்ணிசை ஆய்வாளர் முனைவர் கோ.ப.நல்லசிவம் அவர்களது தமிழிசையில் பல பாடல்கள் செவிக்கினிமையாக அமைந்தன.

இரவு உணவுக்குப் பின்னர் அரங்கம் ஆர்த்தெழுந்து அதிர்ந்தது. மக்களிசைப் பாடகர் ஜெயமூர்த்தி அவர்களின் இயக்கத்தில் பல கிராமிய, இனமான உணர்வுப் பாடல்களுக்கு பலதரப்பட்ட தமிழ்ச்சங்கத்தினர் ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், மயிலாட்டம் போன்ற கூத்துகளாட, கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் அந்நிகழ்ச்சி இடம் பெற்றது. அடுத்து வந்த அமெரிக்கக்  பேரவை உறுப்பினர் இராஜா கிருஷ்ணமூர்த்தி, தமக்களிக்கப்பட்ட விருதையேற்றுச் சிறப்புரையாற்றினார்.

அமெரிக்கத் தமிழ்த் திருவிழாவின் முதல் நாளின்   இறுதி நிகழ்ச்சியாக, பேராசிரியர் முனைவர் இராசு அவர்களின் நெறியாள்கையில் ‘மருதநாயகம்’ மரபுநாடகம் இடம் பெற்றது. நிகழ்த்துகலை வல்லுநர்கள்  பலர் பங்களிப்புச் செய்த இந்நிகழ்ச்சி வெகுநேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு, விழாவுக்குச் சிறப்புச் சேர்த்தது. இத்தோடு, தமிழ்த்தேனீ, குறள்தேனீ, அமெரிக்கத் தமிழ் முனைவோர் மாநாடு உள்ளிட்ட பல நிகழ்வுகள், இணையரங்குகளில் இடம் பெற்றன.

திருவிழா வளாகம் முழுமைக்கும் மரபுக்கலைகளைப் பறைசாற்றுமுகமாக, வடிவான பதாகைகளும் இலச்சினைகளும் இடம் பெற்றிருந்தமை வந்திருந்தோரைக் கவர்ந்தது. முதல்நாள் நிகழ்ச்சியைக் கண்டு களித்த ஆர்வலர்கள், அரங்கை விட்டுப் பிரிய மனமில்லாது விடுதிகளுக்குச் சென்றமை நிகழ்ச்சிகளின் தரத்தை எடுத்துக்காட்டியது.

இரண்டாம் நாள் நிகழ்ச்சிகளும் குறித்த நேரத்தில், தமிழ்த்தாய் வாழ்த்து, அமெரிக்க நாட்டுப்பண், மின்னசோட்டா தமிழ் நுண்கலை மாணவர்களின் தவில், நாகசுரம், பறை உள்ளிட்ட மங்கல  இசை, திருக்குறள் மறை ஓதலுடன்  தொடங்கியது. அதனைத் தொடர்ந்து மருத்துவர் அருளமுதன் அவர்கள் தமிழ் மரபின் வழியில் சித்தமருத்துவம் குறித்து எளிமையாகப் பேசியமை தமிழ் ஆர்வலர்களின் வரவேற்பைப் பெற்றது.

வோசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கமும் மின்னசோட்டா தமிழ்ச்சங்கமும் நடத்திய இலக்கிய விநாடி வினா நிகழ்ச்சி, பல்லூடக நிகழ்ச்சியாக, ஒலி, ஒளி, இசை, காட்சி எனப் பல பரிமானத்துடன் நடந்தேறியது. பார்ப்போருக்கு இலக்கியத்தின் மீதான ஆவலையும் ஈர்ப்பையும் ஊட்டியது.

அறிஞர், குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் அவர்களின் உதவியாளராகவும் மக்கள்நலப் பணியாளருமான வெ.பொன்ராஜ் அவர்கள், தம் கடந்த கால அனுபவங்கள், தமிழரின் வளர்ச்சி குறித்துப் பேசினார். 2017ஆம் ஆண்டுக்கான குறும்படப் போட்டி முடிவுகளை குழுவினர் அறிவித்தனர். முதற்பரிசு ’திரள்’ பட இயக்குநர் குரு சுப்ரமணியத்துக்கும்  இரண்டாம் பரிசு ’பகல் நட்சத்திரம்’ படத்திற்காக பிரவீன் ராஜனுக்கும்  மூன்றாம் பரிசு ‘சத்தமாக ஒரு நிசப்தம்’, ‘பொழுது புலர்ந்தது’ ஆகிய படங்களுக்காக முறையே ஜெய் சீனிவாசன், கரிகரன் சுவாமிநாதன் ஆகியோருக்கு வழங்கப்பட்டன. சிறப்பு பரிசாக, ‘கறை கேட்டது’, ‘திமில்’, ‘சாத்திரம் ஏதுக்கடி’ ஆகியவற்றின் இயக்குநர்கள் சூர்ய நாராயணன், பிரவீன் குமார், சேஷங் கல்வலா ஆகியோர் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் பெற்றுக் கொண்டனர். குறும்படப் போட்டி நடுவர்களாக திரைப்பட இயக்குநர்கள் மிஸ்க்கின், சிம்பு தேவன், பேராசிரியர் சுவர்ணவேல் ஈசுவரன் ஆகியோர் பொறுப்பேற்றிருந்தனர்.

கவிஞர் சுகுமாரன், வி.ஐ.டி பல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றியதைத் தொடர்ந்து நண்பகல் உணவுக்கு இடைவேளை விடப்பட்டது. இடைவேளைக்குப் பின்னர், நகைச்சுவை மற்றும் பலகுரல் கலைஞர் சின்னி ஜெய்ந்த் உரையாற்றி அவையில் கலகலப்பை உண்டாக்கினார். தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கிடையேயான நாடளாவிய தமிழ்த்தேனீப் போட்டியின் இறுதிக்கட்ட போட்டிகள், முக்கிய அரங்கின் மேடையிலேயே இடம் பெற்றுப் பின்னர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர்களான கவிஞர் சுகுமாரன், முனைவர் மு.இளங்கோவன் முதலானோர் பரிசளித்தனர். “உணவும் உழவரும்” என்ற நாடகத்தை கான்சாசு நகரத் தமிழ்ச்சங்கத்தினர் வழங்கினர். இதற்கிடையே பேரவையும் மின்னசோட்டா தமிழ்ச்சங்கமும் உருவாக்கிய மாதங்காட்டி வெளியிடப்பட்டது. இதில் இடம்பெற்ற தமிழ்மரபு சார்க் கலைநயமிகு படங்கள் பெருத்த வரவேற்பைப் பெற்றன.

உயர்கல்விக்கூடத்தில் தமிழ்மொழிக்கான மதிப்பீடுகளைப் பெறுவது குறித்தான வழிமுறை உரையினை அமெரிக்கத் தமிழ்க்கல்வி கழகப் பொறுப்பாளர்கள் வழங்கினர். இதனைத் தொடர்ந்து ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழுக்கான இருக்கை அமர்வது குறித்த அறிவிப்பும் வேண்டுதலும் இடம் பெற்றது. தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் ஒரிசா பாலு, ரோகிணி, கார்த்திகேய சிவசேனாபதி, தொழில் முனைவரும் நடிப்புக்கலைஞருமான கிட்டி, பேராசிரியர் ஓபர்ஸ்ட் முதலானோர் தோன்றிப் பேசினர். நிமிர்வு நிறுவனர் பறையிசைக் கலைஞர் சக்தியின் வழிகாட்டுதலில் இடம் பெற்ற நூற்று முப்பத்து மூன்று அதிகாரப் பறைமுழக்கம் அரங்கத்தை அதிரச் செய்தது.

அதே ஊக்கமும் குதூகலத்துடன் பேரவையின் உறுப்புச் சங்கங்களின் ‘சங்கங்களின் சங்கமம்’ நிகழ்ச்சி, ஒவ்வொரு சங்கமும் பதாகைகள் ஆட்டப்பட்டாங்களுடன் அணிவகுத்து வர இனிதே நடைபெற்றது. அறுசுவை உணவுடன் கூடிய உணவு இடைவேளைக்குப் பின்னர், மக்களிசைக் கலைஞர் ஜெய்மூர்த்தி, நிகழ்த்துகலை வல்லுநர் முனைவர் குமணராஜா, சூப்பர் சிங்கர்கள் ஸ்ரதா, நிரஞ்சனா, ராஜகணபதி, நெருப்புடா புகழ் அருண்ராஜா முதலானோர் பங்குபெற்ற மெல்லிசை நிகழ்ச்சி கோலாகலமாக இடம் பெற்றது. இந்நிகழ்ச்சியின் போது, ஜெய்மூர்த்தி, குமணராஜா ஆகியோரின் பாடலை மீண்டும் பாடச்சொல்லிக் கேட்டு ஆர்ப்பரித்தனர் தமிழர்கள். மண்ணின் கலைக்கு மயங்காதவர் எவரோயெனும் விதமாக இருந்தது அக்காட்சிகள்.

மெல்லிசைக்கு நடுவே, திருவிழாவின் ஒருங்கிணைப்பாளர் மேடையில் தோன்றி, விழாவுக்கு உழைத்த அனைத்துத் தன்னார்வலர்களையும் குறிப்பிட்டு மனமார்ந்து நன்றி கூறினார். கலைநயமிகு விழா முடிந்துவிட்டதேயெனப் பிரிய மனமின்றி நகரத்து வீதிகளில் சென்ற தமிழரின் மனத்தில் தோய்ந்திருந்த மெல்லிய சோகம், விழாவின் வெற்றியையும் விழுமியத்தையும் போற்றுவதற்கு அடையாளமாய் இருந்தது.

-பழமைபேசி, மக்கள் தொடர்புக்குழு

படங்கள்.

1 …. http://images.biztha.com/…/Fe-TNA-3rd-July-0220…/i-mwgHSST/A
2….. http://images.biztha.com/…/Fe-TNA-2nd-July-0120…/i-vW6mdGM/A.
3……http://images.biztha.com/…/Fe-TNA-star-night-1s…/i-2Tx7qGg/A

Be the first to comment

Leave a Reply