கூட்டமைப்பின் தலைமைத்துவம் வலுவாக இல்லை: விக்னேஸ்வரன்

கூட்டமைப்பின் தலைமைத்துவம் வலுவாக இல்லை: விக்னேஸ்வரன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம் வலுவாக இல்லையென குறிப்பிட்டுள்ள வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் ஏனைய மொழி பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சரியாக தெரிவிக்கப்படுவதில்லையென குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றில் சிங்களத்தை பெரும்பான்மையாக பேசும் உறுப்பினர்கள் இருக்கும் போது, தமிழில் எமது பிரச்சினைகளை எடுத்துரைப்பதால் எவ்வித பிரயோசனமும் இல்லையென்றும், சமூகங்களுக்கிடையிலான பிரச்சினைகளை பரிமாற்றிக்கொள்ள கூட்டமைப்பின் தலைமைத்துவம் சரியான நடவடிக்கையொன்றை எடுக்க வேண்டுமெனவும் விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.

தேசிய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இதுவே வழியென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பிலிருந்து இன்று வெளியாகியுள்ள ஆங்கில நாளேடு ஒன்றிற்கு அவர் வழங்கியுள்ள செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கூட்டமைப்பிற்கு வேறு தலைமைத்துவம் அவசியம் என அண்மையில் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்திருந்தமை தொடர்பாக வினவியபோது, தமிழ் அரசியல் நிலைத்திருப்பதற்கு ஒற்றுமையே அவசியம் என்றும், பிரிந்து நிற்பதானது வீழ்ச்சிக்கே வழிவகுக்கும் என்றும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, தமிழர்களின் எதிர்கால அரசியல் பாதுகாப்பான நிலையில் உள்ளதென்றும், சில விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, சுவிட்ஸர்லாந்து, பெல்ஜியம் மற்றும் கனடா ஆகிய நாடுகளில் காணப்படுவதைப் போன்று சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வுக்காகவே தாம் வாதாடுவதாக, குறித்த செவ்வியில் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு, வடக்கு கிழக்கு மீண்டும் இணைக்கப்பட்டால், ஏனைய மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் வழங்கப்படும் உரிமைகள் யாவும் வடக்கு கிழக்கில் வாழும் சிங்களவர்களுக்கும் வழங்கப்படுமென வடக்கு முதல்வர் மேலும் தெரிவித்துள்ளார்.

ttp://www.canadamirror.com/srilanka/04/132412

About editor 2996 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

1 Comment

  1. முதலமைச்சரின் அரசதந்திரம் அற்ற பேச்சுக்களும், பிரதமர், சனாதிபதி ஆகியோருக்கு  எதிரான மோதல் போக்குகே பல சிக்கல்களுக்குக் காரணமாக இருக்கிறது. முதலமைச்சர் பேச்சைக் குறைத்து  வினையை கூட்ட வேண்டும். நாடாளுமன்றத்தில் சிங்களத்தில் பேசினால் அவர்கள் புரிந்து கொள்வார்கள், தமிழில் எமது பிரச்சினைகளை எடுத்துரைப்பதால் எவ்வித பிரயோசனமும் இல்லையென்றும், சமூகங்களுக்கிடையிலான பிரச்சினைகளை பரிமாற்றிக்கொள்ள கூட்டமைப்பின் தலைமைத்துவம் சரியான நடவடிக்கையொன்றை எடுக்க வேண்டுமெனவும் விக்னேஸ்வரன்  சொல்வது வேடிக்கையானது. கூட்டமைப்பை உடைத்து ஒற்றுமையை பாழாக்குவதில் விக்னேஸ்வரன் மும்மரமாக செயல்படுகிறார்.
    எமது சிக்கல்கள் சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தெரியும். கட்சிகளுக்கும் தெரியும்.  தெரியாமல் என்றில்லை. தமிழில் அல்லது ஆங்கிலத்தில் பேசும்போது மொழிபெயர்ப்பு சமகாலத்தில் கொடுக்கப்படுகிறது. தமிழ்த் தலைமை சிங்களத் தலைமையைத் தாண்டி சிங்கள மக்களை அணுக முடியாது. அதே போல் தமிழ்த் தலைமையைத் தாண்டி தமிழ்மக்களை சிங்களத் தலைவர்கள் அணுக முடியாது. காணி, பொலிஸ் அதிகாரங்கள் பற்றி முதலமைச்சர் ஏனைய 8 முதலமைச்சர்களையும் அழைத்துப் பேச வேண்டும். மற்றவர்களை குறைசொல்லிக் கொண்டிராமல் விக்னேஸ்வரன் தனது கடமைகளை சரிவரச் செய்ய வேண்டும்.
    நக்கீரன்

Leave a Reply to editor Cancel reply