சோதிடப் புரட்டு (29 -30)

சோதிடப் புரட்டு (29)

சோதிடப் புரட்டுப் போல் தெய்வீகமும் புரட்டுத்தான்!

அன்னை தெரேசாவுக்கு இரண்டாவது அருளப்பர் சின்னப்பர்  ‘அருளம்மை’ என்ற பட்டத்தை வழங்கி அவரை மேன்மைப் படுத்தியுள்ளார். இந்த நிகழ்ச்சி ஒக்தோபர் 18 இல் வத்திக்கனில் இடம்பெற்றது. அடுத்த கட்டமாக அன்னை தெரேசாவுக்குப் புனிதர் பட்டம் கொடுக்கப்பட இருக்கிறது.

தொண்டறத்துக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்கியதோடு ஏழைகள், எளியவர்கள், நலிவுற்றோர், மெலிவுற்றோர் மற்றும் சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட அடிமட்ட சேரிவாழ் மக்களின் புகலிடமாகத் திகழ்ந்தவர் அன்னை தெரேசா.

அல்பேனியப் பெற்றோர்களுக்கு மாஸிடோனியாவில் பிறந்த அன்னை தெரேசா,  இளம் வயதிலேயே இந்தியா சென்று கொல்கத்தாவில்  ஆச்சிரமம்ஒன்றை ஆரம்பித்துத் தொண்டூழியம் செய்தார். அவரது பணி இந்தியாவில் மட்டுமின்றி உலகின் பல நாடுகளிலும் பரவின. அவரது சமூகத் தொண்டை மெச்சி அவருக்கு நோபெல் பரிசும் வழங்கப்பட்டது. அவர் தனது 87வது அகவையில் (1997) இயற்கை எய்தினார்.

அன்னை தெரேசா அருளாளர், புனிதர் எனப் போற்றப்படுவதை யாரும் வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். அவை அவரது தொண்டறத்துக்கு கிடைத்த பரிசாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால், அன்னை தெரேசா அற்புதம் புரிந்தார், அருள் பாலித்தார் ஆதலால் அவருக்கு அருளாளர் பட்டம்  வழங்கப்பட்டது, அடுத்துப் புனிதர் பட்டமும் வழங்கப்பட இருக்கிறது என்று சொல்லப்படுவதைப் பகுத்தறிவின் அடிப்படையில் செரிக்க முடியாது.

அன்னை தெரேசா இறந்த பின்பு கொல்கத்தாவில் புற்றுநோயால் அவதிப்பட்ட 35 வயதுள்ள மோனிகா பஸ்ரா என்ற பழங்குடிப் பெண் ஒருவர் அவரது கல்லறையைத் தொழுது வந்தார். அதன் பயனாக  அவரது  வயிற்றில் காணப்பட்ட புற்றுநோய் தெரேசாவின் தெய்வீகத்தன்மையால் இல்லாமல் போய்விட்டது. இப்படி ஒரு பாட்டிக் கதை செய்தியாக நாளேடுகளில் வெளிவந்தது.

இந்தக் கதையைப் பகுத்தறிவாளர்கள் மறுத்துள்ளார்கள். அப் பெண்ணுக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்களும் மறுத்துள்ளார்கள்.

‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் கண்ட”  அன்னை தெரேசாவின் தொண்டின் சிறப்பை அற்புதமாகக் காட்ட முனைவது மூட நம்பிக்கையை வளர்ப்பதாகும்.

கடவுள் நம்பிக்கையில் அன்னை தெரேசா அவர்களுக்கு அய்யப்பாடு இருந்தது என அவரின் நாள்குறிப்பில்  இருந்து தெரியவந்துள்ளதாகக் கூடச் செய்திகள் வெளிவந்தன.

வானியலாளர் கலிலியோ புவி உருண்ஐ வடிவானது, புவிதான் ஞாயிறைச் சுற்றுகிறது என்றும் கோபெர்னிக்கஸ் கண்டுபிடித்துச் சொன்னது சரிதான் என்று உறுதி செய்த குற்றத்திற்காக அன்றைய போப்பாண்டவர் (Urban VIII) 1633 அவருக்கு சிறைத் தண்டனை வழங்கினார். இப்போது 376 ஆண்டுகள் கழித்து இந்நாள் போப்பாண்டவர் இரண்டாவது சின்னப்பர் அருளப்பர், 36 ஆண்டுகளுக்கு முன் பதவிக்கு வந்த போது அன்றைய போப்பாண்டவர் கலிலியோவிற்கு வழங்கிய சிறைத் தண்டனை தவறானது என வத்திக்கன் சார்பில் ஒப்புக் கொண்டு வருத்தம் தெரிவித்தார்.

இதன் மூலம் போப்பாண்டவர்கள் கடவுளின் நேரடிப் பிரதிநிதிகள் அவர்கள் தவறே இழைக்க மாட்டார்கள் என்ற கோட்பாடு அடிபட்டுப் போய் அவர்களும் ஏனையோரைப் போல் சாதாரண மனிதர்கள்தான் என்ற உண்மை எண்பிக்கப்பட்டது!

கலிலியோ சிறைத் தண்டனைக்கு மட்டும் உள்ளாக்கப்பட்டார்,  புறுனோ போன்ற அறிவியலாளர்கள் வத்திக்கனால் உயிரோடு கொளுத்தப்பட்டார்கள். கிறித்தவ மதத்தின் பெயரால் பொதுமக்கள் சிங்கங்களுக்கு உணவாக வீசப்பட்டார்கள்!

அன்னை தெரேசா தெய்வீகத்தன்மை வாய்ந்தவர், அற்புதம் செய்யக் கூடியவர் என்று வெளிச்சம் போட்டுக் காட்டுவதிலுள்ள இடர் என்னவென்றால் புற்று, எலும்புருக்கிநோய்,  எயிட்ஸ் போன்ற கொடிய வியாதிகளால் பீடிக்கப்படும் பாமர மக்கள் மருத்துவரிடம் சென்று வைத்தியம் செய்வதற்குப் பதில் அவர்கள் அருளம்மைகள், பூசாரிகள், மகான்கள், சுவாமிகள் போன்றவர்களைத் தேடி அலைய முற்படுவார்கள் என்பதே!

ஏற்கனவே தெய்வீக ஆற்றல்படைத்த அருளம்மைகள், பூசாரிகள், மகான்கள், சுவாமிகள் போன்றவர்களைத் தரிசித்தால் நோய் குணமாகும் என நம்பி ஏமாறுபவர்கள் இருக்கின்றார்கள். அன்னை தெரேசாவுக்கு அருளம்மை பட்டம் கொடுத்தால் அப்படியானவர்களது தொகை மேலும் அதிகரிக்கும். சோதிடப் புரட்டுப் போல் தெய்வீகமும் ஒரு புரட்டுத்தான்!

எல்லா மதங்களும் தங்கள் மதத்தைப் பரப்புவதற்குக் கடவுள்கள், அவதாரங்கள், மகான்கள் அற்புதங்கள் செய்தார்கள் அதிசயங்கள் புரிந்தார்கள் என எழுதி வைத்துள்ளன. இந்து மதத்தில் இந்த அற்புதங்களுக்கும் அதிசயங்களுக்கும் அளவு கணக்கே கிடையாது.

நரியைப் பரியாக்கியது, பரியை நரியாக்கியது, ஆண்பனையைப் பெண்பனை ஆக்கியது, இறந்தபின் எரிக்கப்பட்டு சாம்பலான பெண்ணை உயிர்ப்பித்தது, மூடிக்கிடந்த திருக்கோயில் கதவைத் திறக்கப் பாடியது, வைகை ஆற்றில் போட்ட ஏட்டுச் சுவடிகள் எதிர்நீச்சல் போட வைத்தது, சூலநோய் நீக்கியது இப்படி ஓராயிரம் அற்புதங்கள்.

கிறித்தவ மதத்தில் யேசுநாதர் தண்ணீரை வைன் ஆக மாற்றினார், கடல் மீது நடந்தார், இரண்டு அப்பத்தையும் அய்ந்து மீனையும் அய்யாயிரம் பேருக்குப் பங்கிட்டுக் கொடுத்தார், சிலுவையில் மரித்த பின்னர் மறுபடியும் உயிர்த்தெழுந்தார் போன்ற அற்புதங்கள் செய்தார் எனச் சொல்லப்படுகிறது.

மதத் தலைவர்களில் புத்தரும் முகமது நபி இருவருமே இந்த அற்புதங்களுக்குப் புறநடை ஆவர்.  இவர்கள் தங்களது வாழ்நாளில் அற்புதங்கள் செய்ததாகவோ தெய்வீகத்தன்மை தங்களுக்கு உண்டென்று கூறியதாகவோ வரலாறு இல்லை. ஆனால், முகமது நபி தான் இறைவனால் அனுப்பப்பட்ட கடைசி இறைதூதர் என்று சொல்லிக் கொண்டார்.

புட்டபர்த்தி சாயி பாபா மனிதக் கடவுளரில் மிகவும் புகழ் வாய்ந்தவர். இவர் ஆன்மீகத்தோடு குடி தண்ணீர்த் திட்டங்கள், மருத்துவ மனைகள், பள்ளிக்கூடங்கள் ஆகியன கட்டிப் பொதுத் தொண்டு செய்கின்றார். தமிழ்நாட்டுக்குக் கிருஷ்ணா நதி தண்ணீரை முதலில் ஸ்ரீசைலம் அணைக்கட்டில் தேக்கி வைத்து கண்டலேறு நீர்த்தேகத்துக்கு கொண்டு வந்து அங்கிருந்து மீண்டும் 150 கிமீ வாய்க்கால் வழியாக சென்னையில் உள்ள  பூண்டி நீர்த்தேகத்துக்கு கொண்டுவரும் துர்ர்ந்துபோன வாய்க்கால்களைச் செப்பம் செய்வதற்கு சாயி பாபா அறக்கட்டளை உரூ. 250 கோடி நிதியுதவி அளித்தது (2002) குறிப்பிடத்தக்கது. ஆனால், அவர் புகழ் அடைவதற்கு இந்தப் பொதுத் தொண்டு காரணம் என்று சொல்ல முடியாது. பாபா திருநீறு, மோதிரம், சங்கிலி, கடிகாரம் போன்றவற்றைத் தனது தெய்வீக ஆற்றலால் சூனியத்தில் இருந்து வரவழைத்து ‘அற்புதங்கள’; நிகழ்த்துகின்றார் என்று அவரது பக்தர்கள் நம்புவதே அந்தப் புகழுக்குக் காரணமாகும்.

பருப்பொருளை (அயவவநச) படைக்கவும் முடியாது. அழிக்கவும் முடியாது என்பது இயற்பியல் விதி. பருப் பொருளை ஆற்றலாகவும் ஆற்றலை பருப் பொருளாகவும் மாற்ற முடியும் ஆனால், அழிக்க முடியாது என்பதை அறிவியலாளர் அய்ன்ஸ்தீன் தனது நுஸ்ரீஅஉ² என்ற சமன்விதி மூலம் எண்பித்துக் காட்டினார்.

பருப்பொருள் போலவே இயற்கையில் நால் வகை அடிப்படை விசை மட்டுமே விண்வெளியில் இருந்து கிடைக்கின்றன. அவையாவன வன்விசை (strong force) மின்காந்த விசை (electrical  force) மென் விசை (weak force) ஈர்ப்பு விசை (gravitational force) என்பனவாகும். இவற்றுக்கு மேலாக தெய்வீக ஆற்றல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அலுமினியத்தில் அணுக்கள் அவ்வளவு நெருக்கமாக இல்லை. காரணம் மென் விசை என்கிறார்கள். அதே நேரம் இரும்புக் குண்டில் அணுக்குள்  மிகவும் நெருக்கமாக இணைந்திருப்பதால் அது கனமாகத் தோன்றுகிறது. அவ்வாறு அணுக்கள் நெருக்கமாக இணைந்திருப்பதை வன்விசை என்கிறோம்.

மனிதக் கடவுளர் பட்டியலில் இடம் பிடித்துக் கொண்ட இன்னொருவர் சுவாமி பிரேமானந்தா (57) ஆவார். ஏராளமான உள்நாட்டு வெளிநாட்டுப் பக்தர்கள் புடை சூழக் கொடி குடை, ஆலவட்டம் ஆகியவற்றோடு பவனி வந்து கொண்டிருந்த இந்தச் சுவாமியார் இப்போது இரண்டு ஆயுள் தண்டனையைக் கடலூர் சிறைக் கொட்டிலில் கழித்துக் கொண்டிருக்கின்றார்.

பிரேமானந்தா இலங்கை மாத்தளையில் இருந்து 1984 இல் தமிழ்நாட்டுக்குப் புலம் பெயர்ந்தார். தனது 18 ஆவது அகவையில் தனக்குத் தெய்வீக ஆற்றல் இருந்ததைத் தான் கண்டுகொண்டதாகக் கூறிக்கொண்டார். “ஒரு பெரிய ஆன்மீக அதிர்வு எனது பூசை அறைக்குள் நுழைந்தது, எனது வெள்ளை ஆடை படிப்படியாகக் காவியாக மாறிவிட்டது” என்று  கதை அளந்தார்.

உருவத்தில் ஏறக்குறைய சத்யசாயி பாபாவைப் போல் தோற்றம் கொண்டிருந்த பிரேமானந்தாவின் புகழ் திருச்சியில் பரவியது. அரசியல்வாதிகள், அமைச்சர்கள், தொழிலதிபர்கள் எனப் பலர் சுவாமி பிரேமானந்தாவைத் தரிசித்து‘அருளாசி’ பெற்றுச் சென்றனர்.

1989 இல் 150 ஏக்கர் பரப்புக் கொண்ட நிலத்தை வாங்கி அதில் ஒரு ஆசிரமத்தைத் தொடக்கினார். நாடெங்கும் 15 கிளைகளைக் கொண்டிருந்த இந்த ஆச்சிரமத்துக்கு அனைத்துலக இளைஞர் பிரிவு ஒன்றும் இருந்தது.

சாயி பாபாவைப் போலவே, பிரேமானந்தாவும் வெறும் கையில் விபூதி, சங்கிலி, மோதிரம் முதலியவற்றை வரவழைத்துத் தனது தெய்வீக ஆற்றலை எண்பித்துக் காட்டினார்.  ஆனால், அவரது தனிச்சிறப்பு வயிற்றில் இருந்து இலிங்கத்தை வாயால் வரவழைப்பதுதான்.

சுவாமி பிரேமானந்தா அணிந்திருந்த காவி உடைக்கு உள்ளே ஒரு காம வெறி பிடித்த மிருகம் ஒளிந்திருந்ததை யாரும் கண்டு கொள்ளவில்லை. பிரேமானந்தா பகலில் இளிச்சவாயர்களுக்கு ஆன்ம உபதேசம் செய்து விட்டு இரவில் ஆச்சிரமத்தை காமக் களியாட்டக் கூடமாக மாற்றினார். ஆச்சிரமத்தைச் சேர்ந்த ஆதரவற்ற இளம் பெண் சீடர்கள் பிரேமானந்தாவின் காமப் பசிக்கு இரையானார்கள். அதில் சுரேஷ்குமாரி மற்றும் லதா என்ற இரு சீடர்கள் தப்பிச் சென்று  தாங்கள் பிரேமானந்தாவால் கற்பழிக்கப்பட்டதாகவும் அதனை வெளிப்படுத்தி விடுவதாகக் கூறிய பொறியாளர் ரவி என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டு ஆச்சிரம வளவுக்குள்ளேயே புதைக்கப்பட்டதாகவும் காவல்துறையில் முறைப்பாடு செய்தனர். காவல்துறை பிரேமானந்தா அவருடைய செயலாளர் கமலானந்தா இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தது.

மருத்துவ ஆய்வில் 13 பெண் சீடர்கள்  மாறி மாறி பிரேமானந்தாவினால் கற்பழிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அவர்களில் ஒருவரான அருள்சோதி அப்போது கர்ப்பமாக இருந்தார். மரபணுச் சோதனையில் கர்ப்பத்திற்குப் பிரேமானந்தாவே காரணம் என்பதும் உறுதி செய்யப்பட்டது. ஆச்சிரமத்தில் புதைக்கப்பட்டிருந்த ரவியின் உடலும் கண்டுபிடிக்கப்பட்டது.

வழக்கு விசாரணை நீண்ட காலம் நடந்தது. பிரேமானந்தா சார்பில் பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி தோன்றி வாதாடினார். காவி உடையில் காமக் களியாட்டம் நடத்திய பிரேமானந்தா ரவியைக் கொலை செய்தது, ஆச்சிரமத்தில் வாழ்ந்த இளம் பெண்களைக் கற்பழித்தது  என்ற குற்றச்சாட்டுக்களில் குற்றவாளியாக நீதிமன்றத்தால் காணப்பட்டார்.  நீதிமன்றம் அவருக்கு இரண்டு ஆயுள் தண்டனையும் ரூபா 85 இலட்சம் தண்டமும் விதித்தது. கமலானந்தாவுக்கும் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.  பிரேமானந்தாவின் மேன் முறையீட்டைச் சென்னை உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் தள்ளிவிட்டுத் தண்டனையை உறுதி செய்தன.

விபூதி, சிவலிங்கம், மோதிரம், கடிகாரம்  போன்றவற்றை சூனியத்தில் இருந்து வரவழைத்த பிரேமானந்தாவால் சிறைக் கதவைத் திறந்து வெளியில் வர ஒரு சின்னத் திறப்பைக் கூட வரவழைக்க முடியாமல் இருக்கிறது.

பெரிய மகான் என்று போற்றப்பட்ட சிவகங்கை காமாட்சி முத்துவும் காணி வாங்கி விற்றதில் கோடிக் கணக்கான பணத்தை சுருட்டினார் என்ற குற்றசாட்டில் தண்டனை பெற்று சிறைச் சாலையில் ‘தவம்’ இருக்கின்றார்.

பிரேமானந்தாவின் திருவிளையாடல்கள், காமக் களியாட்டங்கள் இவற்றைப்  பார்த்த பின்னரும் எமது மக்கள் திருந்தினார்களா என்றால் அதுதான் இல்லை. பிரேமானந்தா போனால் சங்கராச்சாரிகள், அமிர்தானந்த மாயி,  நாராயணி அம்மா, கல்கி பகவான், பரமகம்ச நித்தியானந்த சுவாமி என்று எஞ்சி இருக்கும் கடவுள் அவதாரங்கள் பின்னால் சுற்றுகின்றார்கள்.

மனிதன் நிலாவில் கால்பதித்ததை அடுத்து செவ்வாயில் மனிதனை இறக்க முயற்சி நடக்கும் இந்தக் காலத்தில் வாழும் மக்களே அற்புதங்களையும் தெய்வீகத்தையும் நம்பும்போது  2,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பபிலோனியர்கள், கிரேக்கர்கள், உரோமானியர்கள், எகிப்தியர்கள், இந்தியர்கள் விண்ணை அண்ணாந்து பார்த்து அங்கு தெரிந்த நட்சத்திரங்களும், கோள்களும் தெய்வீக சக்தி படைத்தவை என்றும் தங்களது நன்மை தின்மை, உயர்வு தாழ்வு போன்றவற்றைத் தீர்மானிக்கின்றன என்று நம்பியதைப் பெரிய குற்றமாகக் கருத முடியாது.

கிரேக்க, உரோம இதிகாச காலத்தில் பல தெய்வ வழிபாடு இருந்தது. சூரியன், சந்திரன் மற்றும் கோள்கள் வழிபடப்பட்டன. வண்டி வண்டியாக நம்ப முடியாத புராணக் கதைகள் எழுதி வைக்கப்பட்டன. மூடநம்பிக்கைகள் மலிந்து கிடந்தன.

ஆனால், அதே காலத்தில் வாழ்ந்த சங்க காலத் தமிழர்களிடம் நிலத்தை அடிப்படையாகக் கொண்ட தெய்வங்;களே வழிபடப்பட்டன. வழிபாடும் பெரிதாக இருக்கவில்லை. புராணக் குப்பைக் கதைகள் அடியோடு இருக்கவில்லை. எட்டுத்தொகை பத்துப் பாட்டு நூல்களில் கடவுள் வாழ்த்துப் பாடப்படவில்லை. இது சங்க காலப் புலவர்களின் தன்னம்பிக்கையைக் காட்டுகிறது. பின்னால் வந்த பெருந்தேவனார் என்ற புலவரே கடவுள் வாழ்த்துப் பாடி அதைச் சேர்த்தார். ஆரியரின் பண்பாட்டுப் படையெடுப்பின் பின்னரே எண்ணிறந்த கடவுளரும் கோயில்களும் குளங்களும் உருவாகின.

சுமேரியர்கள், அசீரியர்கள், பபிலோனியர்கள், எகிப்தியர்கள், கிரேக்கர்கள், உரோமர்கள் வணங்கிய எண்ணிறந்த எல்லாம் வல்ல கடவுள்களில் ஒன்றாவது இன்று வழிபாட்டில் இல்லை. அவைகள் சிலை வடிவில் அருங்காட்சியகங்களில் நூதனப் பொருட்களாகப் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இது மனிதர்களே கடவுளரைப் படைத்தார்கள் என்பதற்கு நல்ல சான்றாகும்.  நேற்றிருந்த கடவுளர் இன்றைக்குக் காணாமல் போய்விட்டது போன்று இன்றிருக்கும் கடவுளரும் அறிவு வளர வளர நாளை காணாமல் போய்விடக் கூடும். இது முற்றிலும் நடக்கக் கூடிய நிகழ்வாகும்.

இந்தக் கட்டத்தில் வானியல் வரலாற்றின் சில மைல் கற்களை மீள் நினைவு கொள்வது பொருத்தமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

கிமு 600,000 – கோமோ சேப்பியன்ஸ் (Homo – sapiens) என்று அழைக்கப்படும் மனித பிரிவினரின் மேலைப் பழங்கற்காலம்.

கிமு 40,000  – நெந்தர்தால் (Nanderthal) என்ற மனித பிரிவினரின் காலம்.

கிமு 8,000  –  மாயன் வானியல் கட்டுமானங்களை நிறுவுதல்.

கிமு 2,300  –  சீன வானியலாளர்கள் வானை ஆராயத் தொடங்கினார்கள்.

கிமு 2,296  –  சீனர்கள் முதன் முதலாக ஒரு வால்வெள்ளியைப் (comet) பார்த்தார்கள்.

கிமு 2,680 – எகிப்தியர்கள் கிசாவில் பிரமிட் (The Great Pyramid)  ஒன்றை முதன் முதலாகக் கட்டி முடித்தார்கள்.

கிமு 1,800 – பபிலோனியர்கள் வானியல் தரவுகளை வகைப்படுத்த ஆரம்பித்தார்கள்.

கிமு 1,600 – சல்டியா (Chaldia) வானியலாளர்கள் இராசிகளை அடையாளம் செய்தார்கள்.

கிமு 763  – முதன் முதலாக சூரிய கிரகணத்தைப் பபிலோனியர்கள் பார்த்து அதனைப் பதிவு செய்தார்கள்.

கிமு 600 – யுயெஒiஅயனெநச  என்ற கிரேக்க தத்துவவாதி விண்மீன்கள் ஒரு கம்பத்தைச் சுற்றிச் சுழல்வதாக நினைத்தார். அவர் ஆகாயம் புவியைச் சுற்றி வட்டவடிவில் இருப்பதாகச் சொன்னார். புவி ஒரு நீள் உருளை வடிவில் இருப்பதாகவும் எண்ணினார்.

கிமு 500 – கிரேக்க தத்துவவாதி பைதாகொறாஸ் (Pythagoras) புவி தட்டை அல்ல,  அது உருண்டையாக இருக்கலாம் எனச் சொன்னார்.

கிமு 440 – கிரேக்க தத்துவவாதிகள் Leucippus  மற்றும் Democritus   எல்லா மூலகங்களும் (elements) அணுக்கலால் ஆனவை என்ற பொதுக்கருத்தை (concept) நிறுவினார்கள். (கிரேக்க மொழியில் அணு என்றால் பிரிக்க முடியாதது என்று பொருள்)

கிமு 440 – சீனர்கள் வியாழ கோளின் நிலாவை வெறுங் கண்ணால் பார்த்தார்கள்.

இதே காலப் பகுதியில் எகிப்தியர்கள் Canis Major   என்ற நட்சத்திர மண்டலத்தில் சைறியஸ் (Sirius) என்ற விண்மீன் ஞாயிறு எழு முன்னர் உதிப்பதைக் கவனித்தார்கள். இதுவே வானியலின் தொடக்கம் எனக் கருதப்படுகிறது. அது மட்டும் அல்லாது பலவிண்மீன்கள் ஒரே இடத்தில் அசையாது இருக்கும்போது ஞாயிறு நிலா நீங்கலாக அய்ந்து ‘விண்மீன்”கள் மட்டும் வானத்தில் அலைவதை அவதானித்தார்கள். கிரேக்கர்கள் இவற்றுக்கு  ‘planet’ (கோள்மீன்) என்று பெயரிட்டனர். கிரேக்க மொழியில் பிளனட் என்றால் அலைபவர் என்று பொருள்.

பபிலோனியர்கள் இந்த அலையும் விண்மீன்கள் ஏதோ ஒரு காரணத்துக்காகத் தோன்றுகின்றன என நினைத்தார்கள். அந்தக் காரணம் தனி மனிதனது விதியைத் தீர்மானிக்கவே என மேலும் முடிவு செய்தனர். வானத்தில் அலையும் கோள்கள் அதன் பின்புலத்தில் காணப்பட்ட நட்சத்திரங்களைக் (இராசிகள்) கொண்டு தனி மனிதனது ‘விதியை” தீர்மானித்தார்கள். இதுவே சோதிடத்தின் தோற்றுவாயாகும்.Image result for Aristotle meteorologica

கிமு 350 – அரிஸ்தோட்டல் முதன் முதலாக பருவங்கள் பற்றி  Meterorologica  என்ற நூலை எழுதினார்.

கிமு 300 – இக்குலிட் (Euclid) முதன் முதலாக கேத்திர கணிதத்தை உருவாக்கி மூலகங்கள் அல்லது தனிமங்கள் (elements) என்ற நூலை எழுதினார். கேத்திர கணிதம் காணிகளை அளக்கப் பயன்படுத்தப்பட்டது.

கிமு 212 – ஆர்கிமீடிஸ் (Archimedes) வட்டத்தின் பரப்பளவை கணித்தார்.  (இதே கால கட்டத்தில் வாழ்ந்த சங்ககாலப் புலவர் ஒருவர் வட்டத்தின் பரப்பளவை கணிக்கும் சூத்திரத்தை பாடலில் சொல்லியிருக்கின்றார். (தமிழர்களது வானியல் அறிவு பற்றிப் பின்னர் எழுதுவேன்)

கிமு 194 – எறத்தோஸ்னிஸ் (Eratoshenes) புவியின் பரப்பளவைக் கணித்தார்.

கிமு  20 – கிப்பர்ச்சுஸ் (கிமு 161-122) அண்டத்தை குறுக்குக்கோடு (latitude) மற்றும் நெடுக்கோடு (longitude) இரண்டின் மூலம் தீர்மானித்தார்.

கிபி 128 – குளோடியஸ் தொலமி  (Claudius Ptolemy) 1,022 நட்சத்திரங்களை வரிசைப்படுத்தினார். அவருக்கு முன்னர் 850 நட்சத்திரங்களே தெரிந்திருந்தது. 48 நட்சத்திர மண்டலங்களையும் வரிசைப்படுத்தினார்.Astrologycorpernucus

கிபி 1514 –  நிக்கலஸ் கோபெர்னிகக்ஸ்  (Nicolaus Copernicus) புவியை ஞாயிறு வலம் வருவதற்குப் பதில் ஞாயிறைப் புவி வலம் வருவதாகச் சொன்னார்.

கிபி 1543 – நிக்கொலோஸ் கோபெர்னிகஸ் னுந சுநஎழடரவழைniடிரள ழுசடிரைஅ ஊயழநடநளவரைஅ என்ற நூலை எழுதி வெளியிட்டார்.

கிபி 1552 – புவியியல் வானியல் நூல்களில் மந்திரம் இருப்பதாகக் கருதி இங்கிலாந்து மக்கள் அவற்றை எரித்தனர்.

கிபி 1583 – கலிலியோ கோள்களைப் பார்ப்பதற்கு தொலைநோக்கியைக் கண்டு பிடித்தார்.

கிபி 1546 – Tycho Brahe என்ற வானியலாளர் பிறந்தார்.

கிபி 1608 – Hans Lippershey  என்பவர் அதிகளவு ஆற்றல் வாய்ந்த தொலைநோக்கியைக் கண்டு பிடித்தார்.

கிபி 1596 – யோகான்ஸ் கெப்லர் (Johannes Kepler) Mysterium Cosmographicum என்ற நூலை எழுதி வெளியிட்டார்.

1610 – கலிலியோ வியாழ கோளின் 4 நிலாக்களைத் தொலைநோக்கி மூலம் கண்டு பிடித்தார்.

கிபி 1609-1619 – கெப்லர் கோள்களின் அசைவைப் பற்றிய தனது 3 விதிகளை இரண்டு நூல்கள் மூலம் வெளியிட்டார்.

கிபி 1633 – கத்தோலிக்க  மதவிசாரணை சபை கோபெர்னிக்கின் கருதுகோள்களைச் சரியென்று சொன்ன கலிலியோவைக் கட்டாயப்படுத்தி மறுக்க வைத்தது.

கிபி 1762 – யேம்ஸ் பிறட்லி (James Bradley)   என்பவர் 60,000 விண்மீன்கள் பற்றிய பட்டியலை வெளியிட்டார்.

கிபி 1796 – பீரே லப்பிளாசே (Pierre Laplace) என்பவர் அண்டத்தின் தோற்றம் பற்றிய கருதுகோளை உருவாக்கினார்.

கிபி 1820 – றோயல் வானியல் கழகம் (Royal Society for Science) தொடக்கப்பட்டது.

கிபி 1838 – பிரட்றிச் பெசல் (Friedrich  Bessel) என்பவர் முதன் முறையாக சேண்மையில் இருந்த ஒரு விண்மீனின் தொலைவை 6 ஒளியாண்டு எனக் கணக்கிட்டார். பின்னர் அதன் உண்மையான தொலைவு சுமார் 12 ஒளியாண்டு எனத் திருத்தப்பட்டது. 1865 – முதன் முறையாக வில்லியம் பொன்ட் என்பவர் ஒரு விண்மீனின் தோற்றத்தைப் புகைப்படம் எடுத்தார்.

கிபி 1865 – யூல்ஸ் வேர்னே (Jules Verne) என்பவர் புவியின் ஈர்ப்புச் சக்தியை மீறி ஒருபொருள் விண்வெளிக்குத் தப்ப வேண்டும் என்றால் அதன் வேகம் ஒரு நொடிக்கு 7 கல் ஆக இருந்தால் மட்டுமே ( 7 miles per second)  சாத்தியம் என்பதை இங்கிருந்து புவிக்கு என்ற நூலில் குறிப்பிட்டார்.

கிபி 1900 –  Max Karl Ernst Ludwig  Planck  என்பவர் ஜெர்மன் இயற்பியல் அவையில் விரிவுரையாற்றும் போது பருப்பொருள் வெப்ப ஆற்றலை உள்வாங்கி ஒளி ஆற்றலை வெளிப்படுத்துகிறது என்றார்.

கிபி 1903 – அமெரிக்கர்களான  ஒர்வில் றைட் ( Orville Wright) உடன்பிறப்புக்கள் Kitty Hawk  என்ற 12 மீட்டர் நீளமும் 340 கிலோ (விமானி உட்பட) நிறையுள்ள வானூர்தியை  12 விநாடிக்குப் பறக்க விட்டார்கள். அது பறந்த தொலை 37 மீட்டர் மட்டுமே.

கிபி 1905 – அல்பேட் அயின்ஸ்தீன் (Albert Einstein) பொது சார்புக் கருதுகோள் (Generl Theory of Relativity) பற்றிய கருதுகோளை வெளியிட்டார்.

கிபி 1915 – ஞாயிறு நீங்கலாக புவிக்கு அடுத்து அணித்தாக இருக்கும்   Proxima Centauri என்ற விண்மீன் கண்டுபிடிக்கப்பட்டது.

கிபி 1924 – எட்வின் கபிள்   (Edwin Hubble) என்பவர் அண்டம்,  பால்வழியில் இருந்து தனித்துவமானது என்பதை எண்பித்துக் காட்டினார்.

கிபி 1957 – சோவியத் நாடு முதன் முறையாக ஸ்புட்னிக்கை விண்வெளியில் ஏவியது.

கிபி 1959 – லூனா111 என்ற விண்கலன் சந்திரனின் இருண்ட பக்கத்தைப் படம் பிடித்துப் புவிக்கு அனுப்பியது.

கிபி 1961 – யூரிககாறின் (Yuri Gagarin) விண்ணில் பறந்த முதல் மனிதர் எனப் பாராட்டப்பட்டார்.

கிபி 1965 – AlexeiLeonov  விண்வெளியில் நடந்த முதல் சோவியத் விண்வெளிவீரர் என்ற பெயரை எடுத்தார். இந்தப்  பட்டியல் முழுமையானதல்ல. இடநெருக்கடி காரணமாக நூற்றுக்கணக்கான வானியலாளர்களது கண்டுபிடிப்புக்கள் இந்தப்பட்டியலில் இடம் பெறவில்லை. வானியல்க் கண்டு பிடிப்புக்களில் முக்கியம் வாய்தவை மட்டும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

இந்தப்  பட்டியல் முழுமையானதல்ல. இட நெருக்கடி காரணமாக நூற்றுக் கணக்கான வானியலாளர்களது கண்டு பிடிப்புக்கள் இந்தப் பட்டியலில் இடம் பெறவில்லை. வானியல்க் கண்டு பிடிப்புக்களில் முக்கியம் வாய்தவை மட்டும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

———————————————————————————————————————————————————

சோதிடப் புரட்டு (30)

அறிவியல் வளர்ச்சிக்கு கிரேக்கத்தின் பங்களிப்பு

வானியல் என்பது வானில் வலம் வரும் கோள்கள், விண்மீன்கள், பால்மண்டலங்கள் போன்றவற்றின் இருப்பு (position) அசைவு (motion) கட்டமைப்பு (structure) பற்றிய அறிவியல் கற்கையாகும். மாறாக சோதிடம் என்பது நம்பிக்கையின் அடிப்படையில்  கட்டியெழுப்பப்பட்ட போலி அறிவியலாகும். பதினேழாம் நூற்றாண்டின் பின்னர்தான் சோதிடத்தில் இருந்து வானியல் பிரிந்து ஒரு தனி இயலாக மலர்ச்சி பெற்றது என்பதை முன்னரே பார்த்தோம்.

வானியல் என்பது அறிவியல் அடிப்படையில் விண்வெளியில் உள்ள அனைத்தையும் ஆராய்வது ஆகும். வானியலாளர்கள் நாம் காணும் விண்மீன்கள்  பல ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் இருப்பதால் புவியில் உள்ள எவருக்கும் அதனால் பாதிப்பு இல்லை என்கின்றார்கள். கோள் மீன்களின் தாக்கமும் மிக மிகச் சொற்பம் என்கின்றார்கள்.

ஒரு மனிதனது பிறந்த நேரம், நாள், இடம் ஆகியவற்றை வைத்து அவனது வாழ்வு தாழ்வு பற்றி எதிர்கூறல் சொல்லலாம் என்பதைச் சோதிடம் இதுவரை காலமும் அறிவியல் அடைப்படையில் எண்பித்துக் காட்டவில்லை.

கிரேக்கர்கள் தங்கள் காலத்துக்கு முந்திய பபிலோனியர், எகிப்தியர் போன்றவர்களது வானியல் அவதானங்களைக்  (Astronomical Observations) கடன் வாங்கினாலும் பருப்பொருளின் தோற்றம், தன்மை, மாற்றம் பற்றி மேலும் ஆராய்ந்தார்கள். அத்தோடு அண்டத்தைப்பற்றியும் அதனைக் கட்டுப்படுத்தும் அல்லது ஆட்சி செய்யும் இயற்கை விதிகள் பற்றியும் அறிய முயற்சித்தார்கள்.

இன்று அண்டத்தின் கட்டமைப்புப் பற்றிய கற்கை தனி இயலாக மலர்ந்துள்ளது. அதற்கு அண்டப் படைப்புக் கோட்பாடு (cosmology) என்று பெயர்.

பாரசீகம் கிமு 538 இல் பபிலோனியா மீது படையெடுத்தது. அதனைத் தொடர்ந்து கிமு 432 அளவில் நட்சத்திர மண்டலங்களுக்குப் பதில் இராசிகளைப் பயன்படுத்திச் சாதகம் கணிக்கும் முறை தொடங்கியது. தனி மனிதனுக்கான முதல் சாதகம் கிமு 409 இல் எழுதப்பட்டது.

கிபி 331 இல் மகா அலெக்சாந்தர் பபிலோனியாவைத் தாக்கிக் கைப்பற்றினார். இதனைத் தொடர்ந்து கிரேக்கம் மெசோப்பொட்டமியன் பண்பாடுகள் ஒன்றோடு ஒன்று கலந்து கொண்டன.

இதன் விளைவாக வானியலில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் தனித்தனி கிரேக்கர்கள் அல்லது மெசோப்பொட்டமியர்கள் அல்லது இரு சாராரதும் கலப்பினால் ஏற்பட்டதா என்பதைச் சொல்ல முடியாமல் இருக்கிறது.

எது எப்படி இருப்பினும் இந்தக் பண்பாட்டுக் கலப்பால் 12 மணித்தியாலம் கொண்டது  ஒரு நாள் என்ற முறைமை நடைமுறைக்கு வந்தது. பின்னர் இது எகிப்தியரது 24 மணித்தியாலம் கொண்ட நாளாக மாற்றம் பெற்றாலும் ஒரு மணியில் 60 மணித்துளி, ஒரு மணித்துளியில் 60 விநாடி என்ற அளவு இன்றுவரை நீடிக்கிறது.

மிகப் பழைய பஞ்சாங்கக் கணிப்பு கிமு 308 இல் இருந்து நடைமுறைக்கு வந்தது. இராசிகளைப் பாகையாக வகுத்தல் கிமு 263 முதல் நடைமுறைக்கு வந்தது.

ஆய்வு முறையான (cuneiform)  எழுத்து முறையில் எழுதப்பட்ட கடைசி சாதகம் கிமு 68 இல் எழுதப்பட்டது. கிரேக்க மொழியில் கிமு 61 இல் எழுதப்பட்டது. இது ஒருவரது பிறப்புப் பற்றிய சாதகம் அல்ல. Antiochus of Commagene  என்ற கிரேக்க மன்னன் கட்டளைப்படி அவன் ஆட்சிக்கு வந்த நிகழ்வு பற்றிய சாதகமாகும்.

முதன் முதலில் ஜெனன இலக்கினத்தைக் (Ascendant)  குறிப்பிட்டு எழுதப்பட்ட பிறப்புச் சாதகம் கிமு 4 இல் எழுதப்பட்டது.Image result for early horoscope

முதலில் அரசர்களுக்குச் சாதகம் கணிக்கப் பூசாரிகளால் பயன்படுத்தப்பட்ட சோதிடம் பின்னர் பண்டிதர்கள், தத்துவவாதிகள் போன்றவர்களால் சாதாரண குடிமக்களுக்கும் பயன்படுத்தப்பட்டது.

எகிப்தில் சாதகம் கணிக்கும் பழக்கம் கிமு முதல் நூற்றாண்டிலேயே தொடங்கியது. ஆனால், கிமு 3000 ஆண்டு மட்டில் வானுலகக் கோள்களோடு தங்களைத் தொடர்புபடுத்தி ஒரு தெய்வத்தன்மையைத் தேடிக் கொண்டார்கள். இந்தத் தெய்வத்தன்மை காரணமாகவே  இறந்த அரசர்களைப் பதனிட்டு (mummify) அவர்களுக்குப் பிரமிட் கட்டி அடுத்த உலகச் செலவுக்கு வேண்டிய பொருட்களை வைத்தார்கள்.

எகிப்தில் கட்டப்பட்ட பெரிய பிறமிட் (கிமு 2,600) ஞாயிறோடு ஒன்றிணைத்துக் (alignment) கட்டப்பட்டது.

துத்தகாமனது தந்தை அக்னாதொன் பாரோதான் (Pharoah Akhnaton – கிமு 1375-1358) முதன் முதலாகச் சூரிய வழிபாட்டைத் தொடக்கி வைத்ததாகச் சொல்லப்படுகிறது.

வரலாறு சரியாகப் பதியப்படாததால் இந்தக் காலக் கணக்கை வரலாற்று ஆசிரியர்கள் அனைவரும் சரியென்று ஏற்றுக் கொள்வதில்லை.

எகிப்தியரின் பழைய நாள்காட்டியின்படி அவர்களது ஆண்டு நைல் நதியின் பெருக்கோடு ஆரம்பித்தது. அவர்களது ஆண்டு 120 நாள்களைக் கொண்ட 3 பருவங்கள் கொண்டது. எகிப்தியர்கள் வான்வெளியை அவதானித்து நாய் நட்சத்திரம் என அழைக்கப்படும் சைறியஸ் (Dogstar – Sirius)  காலிக்கும் காலத்திலேயே நைல் நதி பெருக்கெடுக்கிறது என்பதைக் கண்டறிந்தார்கள்.Image result for pyramid

மெசோப்பொட்டமியரோடு ஒப்பிடும்போது எகிப்தியரது வானியல் மற்றும் கணிதம் எளிதாக  இருந்தன. எகிப்தியர்கள் சொந்தமாக வானியலை வளர்த்து எடுக்காததற்கு இது ஒரு காரணமாகும்.

கிரேக்க தத்துவவாதிகளில் ஒருவரான கெறதோட்டஸ் (கிமு 460) எழுதும் போது எகிப்தியர்கள் மற்றைய நாட்டவர்களோடு ஒப்பிடும்போது தெய்வீக ஆற்றல்பற்றியே அதிக கவனம் எடுப்பதாகவும் ஒருவர் பிறந்த நாள் நட்சத்திரத்தை வைத்து அவரது எதிர்காலத்தைக் கணிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எகிப்து, அசீரியர்களால் கிமு 671 இல் தாக்கிப் பிடிக்கப்பட்டது. பின்னர் பாரசீகர்களால் கிமு 525 இல் வெற்றி கொள்ளப்பட்டது. ஈற்றில் மகா அலெக்சாந்தரால் கிமு 332 இல் பிடிக்கப்பட்டது. அலெக்சாந்தரின் படையெடுப்புக்குப் பின்னரே எகிப்தியர்கள் கிரேக்க சோதிடத்தைத் தங்கள் பண்பாட்டில்  உள்வாங்கிக் கொண்டார்கள்.

எகிப்துக்குக் கிரேக்கம் அளித்த பெரிய அறிவியல் கொடை அலெக்சாந்திரியாவில் கிரேக்க மன்னர்கள் தோற்றுவித்த உலகப் புகழ் பெற்ற நூல் நிலையமாகும். கிமு 30 இல் எகிப்து உரோமப் பேரரசோடு சேர்த்துக் கொள்ளப்பட்டபோது அலெக்சாந்திரியா மத்தியதரைக் கடல் நாகரிகத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கை வகித்தது.Image result for alexander the great

கிமு 600 அளவில் கிரேக்கர்கள் வானியல் பற்றி அறிவதில் ஆர்வம் காட்டினார்கள். கிமு 569  – 510 க்கு இடையில் கிரேக்க தத்துவவாதிகளில் ஒருவரான பைதாகொறாஸ் (Pythagoras -கிமு 586-572) பபிலோனியா சென்று படித்தார். அவரது முன்மாதிரியைப் பின்பற்றி மேலும் பல கிரேக்க மாணவர்கள் அங்கு சென்று கல்வி கற்றார்கள். கிரேக்க நாகரிகத்தின் பொற்காலம் கோமரது இலியட் மற்றும் ஒடிசி இதிகாச காலத்துக்குப் (கிமு 1800-1100) பின்நோக்கி நீளுகிறது. கிமு 1000 ஆம் ஆண்டளவில் வடக்கில் இருந்து வந்த அந்நியப் படையெடுப்பால் நலிந்து போன கிரேக்கம் மீண்டும் கிமு 600 இல் புத்துயிர் பெற்றது.

பைதாகொறாஸ் தேற்றத்தைக் (Pythagoras Theorem) கண்டுபிடித்த பைதாகொறாஸ்தான் மதம் அறிவியல் இரண்டுக்கும் இடையில் இணைப்பை ஏற்படுத்திய முதல் தத்துவவாதி ஆவார்.  இந்த இணைப்பே 17ஆம் நூற்றாண்டுவரை அய்ரோப்பிய சிந்தனைக்கு முன்னோடியாக இருந்து வந்தது எனலாம்.

பைதாகொறாசே உலகின் மிகவும் செல்வாக்குள்ள, நுண்மாண் நுழைபுலம் படைத்த தத்துவவாதியாகப் போற்றப்படுகின்றார். இவரே மேற்க ஐரோப்பிய-மத்தியதரை தத்துவத்தின் தந்தையாகவும் கருதப்படுகின்றார்.Image result for pythagoras

இவருக்குத் தேல்ஸ் மற்றும் அனக்ஸ்மாந்தரைத் தெரிந்திருந்தது. இவர் எகிப்திலும் படித்தார். எகிப்தைப் பாரசீகர் படையெடுத்துக் கைப்பற்றியபோது பைதாகொறாஸ் கைதியாகப் பிடிபட்டுப் பாரசீகம் கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்தபோது கீழை நாட்டுச் சிந்தனைகளை உள்வாங்கிக் கொண்டார்.

கிபி 518 இல் பைதாகொறாஸ் விடுதலையாகித் தனது சொந்த ஊரான சாமோசுக்குத் திரும்பினார். அங்கு சமய வழிபாட்டுத் தலங்களைத் தரிசிப்பதிலும் கேத்திர கணிதம் (geometry)  படிப்பதிலும் நேரத்தைச் செலவிட்டார். சமயத்தை அறிவியல் கண்ணோட்டத்தோடு பார்த்தார்.

கிபி 520 அளவில் இத்தாலியில் உள்ள கிரேக்க குடியேற்ற நகரான குறோட்டனுக்குச் (Croton) சென்று குடியேறினார். இங்கு ஒரு குழுவைத் தோற்றுவித்தார். அதன் உறுப்பினர்கள் மாமிசம் சாப்பிடக் கூடாது,  தலைமயிர் வெட்டக் கூடாது, நகம் வெட்டக் கூடாது, பொருட்களைப் பொதுவாக வைத்திருக்க வேண்டும் போன்ற பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அது மட்டும் அல்லாமல் பைதாகொறாசின் படிப்பினைகளை அவர்களது குழுவுக்கு வெளியே படிப்பிக்கக் கூடாது என்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டது.

சோதிடத்துக்கு பைதாகொறாஸ் ஆற்றிய கொடுப்பனவு என்னவென்றால் அண்டத்துக்கும் எண்ணுக்கும் உள்ள தொடர்புபற்றிய அவரது கோட்பாடே ஆகும். எண்கள் அளவை மட்டும் குறிப்பதில்லை,  மேலாக ஒவ்வொரு எண்ணும் ஒவ்வொரு குணாம்சத்தைக் குறிக்கிறது, அதனைக் கொண்டு அண்டத்தை விளக்கலாம் என அவர் சொன்னார்.

ஒன்று என்ற எண் ஒருமையைக் (oneness) குறிக்கிறது. இரண்டு என்ற எண் இருமையைக் (duality) குறிக்கிறது. இன்றைய சோதிட சாதகத்தில் 4 வது வீட்டைக் குறிப்பதற்கு பைதாகொறாசின் கோட்பாடே அடிப்படைக் காரணி ஆகும். புராணங்களின் குறியீடுகளும் எண்களின் குறியீடுகளும் பிரிக்க முடியாத ஒரே உண்மையின் வெவ்வேறு கூறுகள் என்பது அவரது கோட்பாடு.

உலகம் வட்ட வடிவானது என்ற கோட்பாட்டின் தந்தை பைதாகொறாஸ் என்று சிலர் கூறுகின்றார்கள். வேறு சிலர் இந்தப் பெருமைக்குரியவர் பார்மெனைட்ஸ் (Parmenides) என்று கூறுகின்றார்கள்.

வேடிக்கை என்னவென்றால் பைதாகொறாசின் கேத்திர கணிதக் கருதுகோள்களே 17ஆம் நூற்றாண்டில் சோதிடம் பற்றிய நம்பிக்கையைத் தகர்க்க உதவியது. கெப்லர் (Kepler)  என்பவர் பைதாகொறாசின் கருது கோள்களைப் பயன்படுத்தியே ஞாயிறு,  ஞாயிறு குடும்பத்தின் நடுவில் இருக்கிறது என்றும் அதனைச் சுற்றியே ஏனைய கோள்கள் நீள்வட்டத்தில் சுற்றிவருகின்றன என்பதையும் எண்பித்தார்.

கொஸ்மொஸ் (Cosmos) என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர் பைதாகொறாஸ் அல்லது பார்மெனைட்ஸ் ஆக இருக்கலாம். கொஸ்மஸ் என்றால் அண்டத்தின் ஒழுங்கு (Order of Universe) என்று பொருள் ஆகும்.

பைதாகொறாசின் மாணவர்களில் ஒருவரான பிலோலோஸ் (Philolaus- கிமு 5 ஆம் நூற்றாண்டு) என்பவரே வானியலுக்கு அதிகளவு பங்களிப்புச் செய்தவர். அவரது முறைமைகள் (systems) 17 ஆம் நூற்றாண்டுவரை அய்ரோப்பியரது வானியலில் செல்வாக்குச் செலுத்தியது. சீயஸ் (Zeus) தெய்வத்தின் காவல்க்; கோபுரமான ஒரு மையத் தீயைச் சுற்றி உலகம், ஞாயிறு மற்றும் கோள்கள் சுற்றிவருவதாக பிலோலோஸ் சொன்னார். ஆனால், கோள்களின் பாதை புவியில் இருந்து பார்க்கும் போது சரி வட்டமாக இல்லாமல் நீள்வட்டமாக இருந்தது ‘கோள்கள், சரி வட்டங்களில், சரி அசைவில் சுற்றிவருகிறது” என்ற பைதாகொறாசினியரின் நம்பிக்கைக்கு நேர் எதிர்மாறாக இருந்தது.

பின் நாளில் கெப்லர்,  நியூட்டன் இருவருமே வானியலாளர்களுக்குப் பெரிய தலையிடியா இருந்த இந்த முரண்பாட்டைத் தீர்த்து வைத்தார்கள்.

அனக்ஸாகொறாஸ் (Angxagoras – கிமு 500-428) என்பவர் தொலைநோக்கியின் உதவியின்றி நிலாவின் தரை பள்ளம் பிட்டியாக இருக்கிறது என்றும் ஞாயிறு ஒரு எரியும் பருப்பொருள் என்றும் சொன்னார். ஞாயிறைப் பற்றி அன்று அவர் சொன்னது இன்று சாதாரணமாக இருந்தாலும் அன்று அது பெரிய புரட்சிகர கருத்தாகக் கணிக்கப்பட்டது. ஆனால், ஒரு கேள்விக்கு விடை தெரியாமல் இருந்தது. ‘ஞாயிறு எரியும் பருப்பொருள் என்றால் அது ஏன் எரிந்து தீர்ந்துபட வில்லை?” என்பதுதான் அந்தக் கேள்வி. அதற்கு அனக்ஸாகொறாஸ் கண்டுபிடித்த விடை- இந்த அண்டம் ஒரு பரம்பொருளால் படைக்கப்பட்டது என்பதுதான்!

அடுத்து Empedoches  (கிமு 495-430 ) என்பவர் இந்த அண்டம்  நிலம், நீர், தீ, காற்று, ஆகிய நான்கு மூலகங்களால் (தனிமங்களால்) ஆனவை என்ற கோட்பாட்டை முன்வைத்தார்.

ஏறக்குறைய இதே காலத்தில் வாழ்ந்த தொல்காப்பியர் இந்த அண்டம் ‘நிலம், தீ, நீர், வளி, விசும்பு என்ற ஐம்பூதங்களின் கலவை’ எனத் தாம் எழுதிய தொல்காப்பியத்தில் (சூத்திரம் 1589)  குறிப்பிட்டிருந்தார். அண்டம் பற்றிய சமண மதக் கோட்பாட்டைத் தழுவியே தொல்காப்பியர் இவ்வாறு சொல்லியிருக்கின்றார்.

 

About editor 2991 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply