வடக்கு ஆளுநரின் கருத்துக்கு எதிராக கூட்டமைப்பு போர்க்கொடி!

வடக்கு ஆளுநரின் கருத்துக்கு எதிராக கூட்டமைப்பு போர்க்கொடி!

June 1st, 2017

வடக்கு ஆளுநரின் கருத்துக்கு எதிராக கூட்டமைப்பு போர்க்கொடி! – காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை நடத்த முடியாது எனக் கூற அவருக்கு உரிமை கிடையாது என்று தெரிவிப்பு
“காணாமல்போனோர் விவகாரத்துக்கு எந்த விசாரணையும் இடம்பெறாது என்று வடக்கு மாகாண ஆளுநர் கூறுவதற்கு அவருக்கு எந்தவிதமான உரிமையும் கிடையாது. சட்ட ஏற்பாடுகளை அறியாத ஆளுநர், தமிழ் மக்களின் மனங்களைப் புண்படுத்தும் வகையில் கருத்துக்கூறுவதை ஏற்க முடியாது.”
– இவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

“காணாமல்போனோர் விவகாரத்தை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. அதனால்தான் நாடாளுமன்றில் சட்டவரைபு கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அந்தச் சட்டம் தற்போது சில திருத்தங்களுக்காக உள்ளது. அதன்பின்னர் காணாமல்போனோர் அலுவலகம் அமைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெறும்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
“காணாமல்போனவர்கள் தொடர்பில் எந்த விதமான விசாரணையும் செய்ய முடியாது. அவர்கள் தொடர்பில் உறவினர்கள் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளட்டும்” என்று வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“காணாமல்போனோர் விவகாரத்துக்கு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. அதுதொடர்பில் காணாமல்போனோர் அலுவலகம் அமைப்பதற்கு சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டவரைபில் திருத்தம் செய்வதற்காக எதிர்வரும் 7ஆம் திகதி மீண்டும் நாடாளுமன்றுக்கு வருகின்றது.
இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அண்மையில் சம்பூரில் இடம்பெற்ற நிகழ்வில் ஜனாதிபதி வாக்குறுதியளித்தார்.
இந்தநிலையில், காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை நடத்த முடியாது என்று வடக்கு மாகாண ஆளுநர் கருத்து கூறமுடியாது. இந்தச் சட்டத்தை அரசு ஏற்றுக்கொண்டே உருவாக்கியது. ஜனாதிபதியின் வாக்குறியளித்ததன் பிரகாரம் காணாமல்போனோர் தொடர்பில் உரிய விசாரணைகளை நடத்தி உண்மை கண்டறியப்படும். அந்த நிலையில் சட்ட ஏற்பாட்டை அறியாத ஆளுநர், தமிழ் மக்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் கருத்து கூற முற்படக்கூடாது. எனவே, வடக்கு மாகாண ஆளுநரின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது”  என்றார்.

http://www.seithy.com/adslink.php?src=aHR0cDovL3d3dy50YW1pbGNubmxrLmNvbS9pbmRleC5waHA=

Be the first to comment

Leave a Reply