சோதிடப் புரட்டு (16-21)

சோதிடப் புரட்டு (16)

சோதிடருக்குப் பதில் மருத்துவரை நாடுங்கள்! 

கருத்தரிக்க இயலாமைக்குரிய காரண காரியங்களை மருத்துவர் செ.ஆனைமுகன் தாம் எழுதிய மகப்பேறும் மகளிர் மருத்துவமும் என்ற நூலில் விரிவாக (கருத்தரிக்க இயலாமை அதிகாரம் 44) எளிய தமிழில் எழுதியுள்ளார். அதனை வாங்கிப் படித்துப் பார்க்கவும். இது மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவம் பற்றித் தமிழில் வெளிவந்த மூன்றாவது நூல். இதிலிருந்து நாங்கள் அறிவியல் தமிழில் எவ்வளவு தூரம் பின்தங்கி இருக்கிறோம் என்பது தெரியும்!

பெரியார் மருத்துவமனை சார்பில் பெரியார் திடலில்  பெப்ரவரி 28, 2003 அன்று இந்தியச் சிறுநீரகத்துறை நிபுணர் பேராசிரியர் டாக்டர் எ. இராஜசேகரன் அவர்கள் ஆண்மை இன்மையும் ஆண் மலட்டுத் தன்மையும் என்ற தலைப்பில் உரை ஆற்றினார். அதில் இருந்து முக்கிய பகுதிகள்.

‘மலட்டுத்தன்மை என்பது  ஒரு தனி மனிதனுடைய சிக்கல் மட்டுமல்ல அது ஒரு குடும்பத்தின் சிக்கல். ஒரு சமூகத்தின் சிக்கல்.  சிறுநீரகத்துறையில் ஆண் பெண் இரு பாலாருக்கும் உள்ள சிக்கல்களை அறிந்தவர்கள் நாங்கள்.  அகில இந்திய சிறுநீரகத்துறை தலைவராக நான் இருந்திருக்கின்றேன். 1,500 டாக்டர்கள் இருக்கக் கூடிய ஒரு பெரிய சங்கத்தின் தலைவராக நான் இருந்திருக்கிறேன்.

குழந்தை பிறக்கவில்லை என்றால், அதற்குரிய காரண காரியத்தை மக்கள் மருத்துவரிடம் வந்து கேட்டறிவதை விட்டு விட்டுக் கோயில், குளம், சோசியம் போன்றவற்றில் நம்பிக்கை வைத்து பொருளையும் நேரத்தையும் பாழாக்குகின்றார்கள்.

குழந்தை பிறக்கவில்லை என்றால் பெண்கள்தான் ஏது என்று சமுதாயத்தில் அவர்களைக் கொடுமைப்படுத்திய விதம் கொஞ்சம் நஞ்சமல்ல. பெண்கள் எந்த அளவுக்குக் காரணமோ, ஆண்களும் அந்த அளவுக்குக் காரணம் என்று மருத்துவத்துறை கண்டுபிடித்திருக்கின்றது.

ஒருவர் மாவீரனாக இருக்கின்றார். இன்னொருவர்  மல்யுத்தத்தில் சிறந்த வீரராக இருக்கின்றார்.   இவர்களுக்குக் குழந்தை இல்லாமல் இருக்கும்.  இன்னொருவர்நோஞ்சானாக இருப்பார் ஆனால், பார்த்தீர்களேயானால் அவருக்குப் 4 குழந்தைகள் இருக்கும். அதனால் உடலினுடைய உருவத்தைப் பொறுத்தது அல்ல இந்தச் சிக்கல். அதேமாதிரிப் பெரிய ஆளாக இருப்பார்கள். பெரிய செல்வந்தர்களாக இருப்பார்கள். அவர்களுக்குக் குழந்தைகள் இருக்காது.

‘எதையும் நம்பிக்கையின் அடிப்படையில் எடுத்துக்கொள்ளாதே! எதிலும் உன்னுடைய அறிவைச் செலுத்து’’ என்று   சொன்னவர் தந்தை பெரியார்.  அறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்து அறிவியல் அடிப்படையில் எதையும்  சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று சொன்னவர் அவர். அந்த விதத்திலும் இந்தச் சொற்பொழிவு தந்தை பெரியார் அவர்களுக்குக் காணிக்கை.

தந்தை பெரியார் அவர்கள் இறந்தது 1973 இல் ஆகும்.  இந்த அறிவியல் உலகிலே சோதனைக் குழாய்க் குழந்தை கண்டுபிடிக்கப்பட்டது 1978 இல் ஆகும்.

பெண்களுக்குக் குழந்தை பிறப்பதில் குறைகள் இருந்தால்கூட, குழந்தை பெறலாம் என்ற அறிவியல் வளர்ச்சி ஏற்பட்டது 1978 இல்.தான்.

1978 ஆம் ஆண்டு பெண்ணுடைய கருப்பையிலிருந்து கருமுட்டையை எடுத்து, ஆணினுடைய விந்தணுக்களையும் சேர்த்து ஒரு குழாயில் வைத்துச் சோதனைக் குழாய்க் குழந்தை பிறந்திருக்கின்றது. ஏராளமான பேர் இப்படிக் குழந்தை பெற்றுவிட்டார்கள்.

1993 இல் பெல்ஜியத்தில் ஒரு பெரிய அறிவியல் வளர்ச்சி ஏற்பட்டது. அவர்கள்தான் குழந்தை பெறுவதற்கு நிறைய அணுக்கள் வெளியே வர வேண்டியதில்லை என்பதைக் கண்டுபிடித்தார்கள். விதையில் ஓர் அணு இருந்தாலே போதுமானது என்பதைக் கண்டுபிடித்தார்கள்.

நமது உடலில் ஓடுகின்ற இரத்தம் எல்லா இடங்களுக்கும் பரவுகிறது.  சிறுநீரகத்தில் நரம்புகள் சரியாக இருக்கின்றதா? என்று பார்ப்பதற்குச் சோதனை இருக்கிறது.

அதாவது ஒரு தண்ணீர்த் தொட்டியில் ஒரு பக்கம் தண்ணீர் நிரப்புமாறு செய்துகொண்டு அதே  தொட்டியில் இன்னொரு குழாய் வழியாகத் தண்ணீரைத் திறந்துவிட்டால் தொட்டியில் எப்படித் தண்ணீர் நிறையும்?

அதேமாதிரிதான் இது.  உள்ளே போகிற இரத்தம் உடனே வெளியே கசிந்தால் அது எப்படிச் சரியாக  இருக்கும்?

அறிவியல் வளர்ச்சியில் அணுக்கள் இல்லை என்றால்கூட  குழந்தை பெற முடியும். பெண்களுக்குக்  கருக்குழாய் அடைபட்டால் கூட அவர்கள் குழந்தை பெற முடியும். நமது விடுதலை ஆசிரியர் அவர்கள் கூடச் சொன்னார்கள்.  நாம் சந்திக்கிறவர்களிடம் முதல் கேள்வி குழந்தை இருக்கிறதா? எத்தனை குழந்தைகள்? என்று கேட்பார்கள்.”

இதோ டாக்டர் வி. ஜமுனா, குடும்ப மருத்துவர் குழந்தையின்மையின்  காரண காரியங்களைக் குமுதம் கிழமை ஏட்டிற்குக் கொடுத்த நேர்காணலில் பட்டியல் போட்டுக் காட்டுகின்றார்.

‘கல்யாணமாகி நாலு ஆண்டுகளாச்சு! உனக்குத்தான் ஒரு குழந்தையைப் பெத்துத்தர வாய்ப்பில்லையே? என் மகனுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணலாம்னு இருக்கோம்!’ என்று இன்னமும் கூடப் பல குடும்பங்களில் பெண்ணப் பார்த்துத்தான் முதல் ஈட்டி பாய்ச்சப்படுகிறது!

குழந்தை இல்லை என்றால் உடனே பெண்கள்தான் அதற்குக் காரணம் என்ற போக்கு படிக்காத பாமரர்கள் மத்தியில்தான் என்றில்லை, படித்தவர்கள் மத்தியில் கூட இந்த எண்ணம் சட்டென்று நீக்க முடியாத அளவில் ஆழப்பதிந்து போயிருக்கிறது.

இருவரில் யார் வேண்டுமானாலும் இந்தக் குறைக்குக் காரணமாக இருக்க முடியும் என்ற விடயமே இரண்டாவது சிந்தனையாகத்தான் ஏற்படுகிறது. அதுவும் கூட ஓரளவு படித்த, விடயங்கள் புரிந்த சிலருக்குத்தான் குழந்தைப்பேறு வாய்க்கப் பெறாததற்குக் காரணமான சிக்கல்கள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பாதிக்குப் பாதி என்று ஏற்கெனவே மருத்துவ உலகம் சொல்லிக் கொண்டிருந்தது.

அண்மைக் காலங்களில் இந்த விழுக்காடு ஆண்களுக்குப் பெண்களைவிடக் கிட்டத்தட்ட பத்து விழுக்காடு அதிகமாகி இருப்பதாகத் தனது மருத்துவ அனுபவங்களின் மூலம் தெரிவிக்கின்றார் டாக்டர் வி. ஜமுனா.

‘உண்மைதான், இந்தச் சிக்கல் இப்போதல்ல கடந்த பத்துப் பதினைந்து  ஆண்டுகளாகவே மிக அதிகரித்து வருகிறது, காரணம்  மாறிவரும் நமது வாழ்க்கை முறைதான்!” என்கின்றார் அவர்.

‘ஒரு விடயம் தெரியுமா? உண்மையில் ஒரு கணவனின் சிக்கலால்  அவன் மனைவி பாதிக்கப்பட்ட  சம்பவத்தால்தான் நான் குழந்தையின்மைக் குறைபாட்டுக்கு மட்டும் மருத்துவம் செய்யும் மருத்துவராக மாறினேன்.

அப்போது நான் இந்திய மருத்துவம் படித்துவிட்டு என் தந்தை டாக்டர் ஆஞ்சநேயலுவுக்குத் துணையாக அனகாபுத்தூரில் பொதுமருத்துவம் செய்து  கொண்டிருந்தேன். அப்போது கிணற்றில் விழுந்த ஒரு பெண்ணைப் பதற்றத்துடன் தூக்கிக்கொண்டு வந்தார்கள். அந்தப் பெண்ணுக்கு சிகிச்சை அளித்து அவளைச் சரிப்படுத்திய பின்னர் ‘ஏன் இப்படியொரு விபரீத முடிவை எடுத்தாய்?” என்று உரிமையோடு திட்டினேன்.

அவ்வளவுதான், மளுக்கென்று அவர் அழ ஆரம்பித்துவிட்டார். அந்தப் பெண்  ‘நான் ஏன் உசிரோட  இருக்கணும்? என் கணவனுக்கு இரண்டாவது கல்யாணம் நடக்கப்போகுது. எனக்குக் குழந்தையில்லேன்னு  என்னைத் தள்ளி வச்சிட்டாங்க!” என்று அழுதார். கோபமாகிவிட்டது எனக்கு. மனைவியைப் பார்ப்பதற்காக மறுநாள் கணவன் வந்தார்.  கணவரிடம் பேசி சமாதானப்படுத்தி இருவரையும் சோதனைகள்  எடுக்கச் சொன்னேன்.  கடைசியில் பார்த்தால் கணவருக்குத்தான் குறை இருந்தது.  மனைவி ஆரோக்கியமாக இருந்தார். ‘நீங்கள் இரண்டாவது திருமணம் மட்டுமல்ல இன்னும் இருபது திருமணம் செய்தாலும் குழந்தை பிறக்காது.  உங்கள் குறையைச் சரிப்படுத்திக் கொண்டால்தான் பிறக்கும்’ என்று  நான் தெரிவித்தவுடன் அந்தப் பெண் என் காலில் விழுந்துவிட்டார்!

‘நீங்கள்தான் எங்களுக்குக் குழந்தைப் பேறுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்,  இல்லையெனில் பெரியவர்கள் மறுபடி திருமண ஏற்பாட்டைச் செய்து விடுவார்கள்” என்று கண்ணீர்விட, எப்படியாவது நான் அந்தத் தம்பதியர்க்குக் குழந்தைப் பாக்கியத்தைத் தரவேண்டும் என்ற வைராக்கியத்தில்தான் குழந்தையின்மைக்கான சிகிச்சையை ஆரம்பித்தேன்.  அந்தத் தம்பதிக்கு அடுத்த  வருடத்திலேயே  குழந்தை பிறந்தது.  அப்புறம்தான் ஆண், பெண் குறைகளைப் போக்கும் இந்த சிகிச்சையில்  முழுக் கவனமும் செலுத்த ஆரம்பித்தேன்” என்கின்றார் டாக்டர் ஜமுனா.

‘இதெல்லாம் ஆண்கள் சிக்கல் என்று வெளியே தெரியாததற்குக் காரணமே சில பெண்கள்தான்.  குறை தங்கள் கணவரிடம் இருக்கிறது என்பதை வெளிப்படுத்த அவர்கள் தயங்குகின்றார்கள்’ என்பது இவரது கருத்து.

‘கணவருக்குக் குறையிருந்தால்கூட எங்க குடும்பத்தில் வேறே யாருக்கும் இது தெரிய வேண்டாம்’ என்று பெண்களே நினைக்கின்றார்கள்.  கணவர்கள் இந்த விடயத்தில் கஷ்டப்படக் கூடாதென்று மனைவிகள் இரட்டைக் கஷ்டப்படுவதைப் பார்க்கும் போது ஆச்சர்யமாகவும் வேதனையாகவும் இருக்கிறது’ என்று சொல்கிறார் இவர்.

ஊசிகள், இரத்தமோ இல்லாத இவருடைய சித்தமருத்துவ சிகிச்சையினால் இதுவரைப்  பிறந்த குழந்தைகள் கிட்டத்தட்ட மூவாயிரத்து எண்ணூறு பேர். தமிழகத்தில் மட்டுமல்ல. பாகிஸ்தான், ஈராக், மலேசியா, சிங்கப்பூர்  என்று உலகம் முழுக்க இந்தக் குழந்தைகள் இருக்கின்றார்களாம்.”

அது சரி. குழந்தையின்மைக்கான ஆண்களின் குறை ஏன் அதிகமாகிக் கொண்டு போகிறது?

‘முதலில் ஆண்களுக்கு என்னென்ன குறைகளால் குழந்தைப்பேறு கிடைப்பதில்லை என்ற அடிப்படை விடயத்தைத் தெரிந்து கொள்ளுங்கள். அப்போதுதான் நம் வாழ்க்கை முறையில் (டகைந ளவலடந)  நாம் புதிதாகக் கடைப்பிடிக்கும் விடயங்கள் ஆண்களுக்கு எந்தக் குறையை அதிகமாக்குகின்றன என்று புரிந்து கொள்ள முடியும்” என்று இரப்பர், பேனாவோடு விளக்க ஆரம்பித்தார் அவர்.

‘பொதுவாக  ஆண்களுக்கு இருக்கக்கூடிய குறை என்பது உயிரணுக்களின் எண்ணிக்கைக் குறைவுதான். ஒரு ஆணுக்கு உயிரணுக்களின் எண்ணிக்கை மொத்தமாக ஐம்பது மில்லியன் இருக்க வேண்டும். இதில் துடிப்போடு இருக்கும் உயிரணுக்களின்  எண்ணிக்கை எழுபது விழுக்காடு இருக்க வேண்டும். அப்போதுதான் ஒரு ஆணால் ஒரு பெண்ணுக்குக் குழந்தை தர முடியும்!

ஓருவேளை உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பதாகச் சோதனைகள் சொன்னாலும் கூட அதன் வீரியம் அதாவது நீந்தும் தன்மையைப் பொறுத்துத்தான் குழந்தை உருவாகிறது. உயிரணுக்களின் வீரியத்தை வைத்து, அசையாத தன்மையுள்ள உயிரணுக்கள், வால் மட்டும் அசைக்கும் உயிரணுக்கள், வேகமற்ற உயிரணுக்கள், வேகமான உயிரணுக்கள் என்று நான்கு வகையாக அவற்றைப் பிரிக்கலாம். இந்த நான்கிலும் முதல் இரண்டு வகை கொண்டவர்களால் தன் மனைவிக்குக் குழந்தை தர முடியாது. (சிகிச்சைக்குப் பின்பே முடியும்) மூன்றாவது வகை சிறிது வில்லகம். நான்காவது வகைதான் தொட்டதும் பற்றிக் கொள்ளும்!’ என்று தெளிவுப்படுத்கின்றார் டாக்டர் ஜமுனா.

இதைத் தொடர்ந்து குழந்தையின்மைக்கு ஆண்களிடம் காணப்படும் குறைகளுக்கான காரணங்களை விளக்குகின்றார். ‘இப்போதெல்லாம் பான், ஜர்தா போடும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. புகைத்தல், மதுபானம், செயற்கைக் குளிர்பானம் அருந்துதல், பான் போடுதல் ஆகியன புற்று நோய் போன்ற உடல்நலக் கேட்டுக்கு மட்டுமல்ல ஆண் குறைகளுக்கும் காரணமாக இருக்கிறது.  இதனால் உயிரணுக்கள் உற்பத்தி  இருபத்தி மூன்று விழுக்காடு குறைகிறது. உயிரணுவின் வீரியம் (நீந்துகிற தன்மை) பதின்மூன்று விழுக்காடு குறைகிறது. ஏன், சில சமயம் உயிரணுக்களின் வடிவம்கூடச் சிதைந்து போவதாக ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன.’

இடமின்மை காரணமாக டாக்டர் ஜமுனா தந்த முழுத் தரவுகளையும் கொடுக்க முடியாததற்கு வருந்துகிறேன்.

இப்போது இன்னொரு செய்தி வந்திருக்கிறது. மாற்று அறுவைச் சிகிச்சை மூலம் கருப்பை இல்லாத பெண்களுக்குப் புதிய கருப்பை பொருத்தலாம்!

பிள்ளை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு இல்லாதபடி, கர்ப்பப்பை இல்லாத பெண்களுக்கு மாற்று அறுவைச் சிகிச்சை மூலம் வேறு பெண்களிடம் இருந்து கர்ப்பப்பையை எடுத்துப் பொருத்த முடியும் என்று அறிவியலாளர்கள் அண்மையில் கண்டுபிடித்து உள்ளனர். பிறவியிலேயே வயிற்றில் கருப்பை இல்லாமல் பிறந்த பெண்களுக்கும் கருப்பையில் கட்டி போன்ற கோளாறு காரணமாக அந்தக் கருப்பை  அகற்றப்பட்ட பெண்களுக்கும் குழந்தை பிறப்பது இல்லை.

எவ்வளவுதான் கோயில், குளம் என்று சுற்றி வந்து எந்தக் கடவுளைக் கும்பிட்டாலும் இத்தகைய பெண்களுக்கு இயற்கையான முறையில் குழந்தையே பிறக்காது! அதனால் கவலையில் மூழ்கும் இவர்களுக்கு அறிவியல் அறிஞர்களால் மட்டுமே விடியல் ஏற்பட முடியும் என்கிற செய்தி வெளியாகி உள்ளது.

சுவீடன் நாட்டு அறிவியல் அறிஞர்கள் மாற்று அறுவைச் சிகிச்சை மூலம் புதிய கருப்பையைப் பொருத்த முடியும் என்று கண்டுபிடித்து இருக்கின்றனர்.

கோடன்பர்க் நகரில் உள்ள ஷாகில் கிரென்ஸ்கா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் மேட்ஸ் பிரான்ஸ்டார்ம் இது பற்றித் தெரிவித்ததாவது:

“யாருக்குக் கர்ப்பப்பை தேவையோ அந்தப் பெண்ணின் அக்காள் அல்லது தங்கை அல்லது தாயாரோ தன் கர்ப்பப்பையைக் கொடையாக வழங்கலாம். கருப்பை மாற்று அறுவைச் சிகிச்சைக்கு வயதுத் தடை கிடையாது. ஒரு பெண் எந்தக் கருப்பையில் பிறந்தாளோ அதே கருப்பையின் மூலம் அவளுக்கும் குழந்தை பிறக்கும்படி செய்யலாம்.

கொடையாகப் பெறப்படும் கருப்பையை யாருடைய உடலில் பொருத்த இருக்கிறோமோ அவரது  உடலுக்குப் பொருந்தி வரவேண்டும். எனவே குருதித் தொடர்பு உள்ள உறவினர்களின் கருப்பைதான் இந்த மாற்று அறுவைச் சிகிச்சைக்குச் சிறந்தது.”

நான் இந்த மருத்துவத் தரவுகளை மேற்கோள் காட்டி எழுதுவதற்குக் காரணம் சாதகப் பொருத்தத்திற்கும் குழந்தை பிறப்பதற்கும் அல்லது பிறக்காமல் இருப்பதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை எந்த அய்யத்துக்கும் இடம் இல்லாமல் எண்பிக்கவே ஆகும்!

மகேந்திரப் பொருத்தம் உண்டு என்று சோதிடர் சொல்லித் திருமணம் செய்தவர்கள் குழந்தை இல்லாமல் இருக்கின்றார்கள். இதனால் கோள்கள்,  இராசிகள், விண்மீன்கள் இவற்றுக்கும் குழந்தைப் பேறு அல்லது குழந்தையின்மை இரண்டுக்கும் எந்த வகையிலும் தொடர்பு இல்லை. அப்படி நினைப்பதும் நம்புவதும்  மூடத்தனம்.

சோதிடரிடம் சாதகத்தைக் காட்டுவதற்குப் பதில் ஒரு மகப்பேறு மருத்துவரிடம் மணம்செய்து கொள்ள இருக்கும் ஆணையும் பெண்ணையும் காட்டி இருபாலாரிடமும் மருத்துவ அடிப்படையில் குறைகள் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்து அதன் பின்னர் அவர்களைத் திருமணத்தில் இணைப்பதுதான் அறிவார்ந்த செயல்.

சோதிடப் புரட்டு (17)

குழந்தை ஆணா? பெண்ணா? என்பது கோள்களில் இல்லை!

இதோ குமுதம் சோதிடப் பகுதியில் கேட்கப்பட்ட  கேள்வியும் அதற்குக் கொடுக்கப்பட்ட சோதிடரின் பதிலும்.

சி.என் சுகுமார், விழுப்புரம்.

கேள்வி:  எங்களுக்குத் திருமணமாகி .5 ஆண்டுகளாகின்றன. இதுவரை குழந்தைப் பாக்கியம் ஏற்படவில்லை. எப்போது எங்கள் வீட்டில் கேட்கும் இனிய மழலை ஒலி?

பதில்: தங்கள் சாதகத்தில் சிறிய தோசம் உள்ளது.  ஒருமுறை ஸ்ரீரங்கம் உங்கள் மனைவியுடன் சென்று அரங்கநாதப் பெருமானைத் தரிசித்துவிட்டு வரவும். அதன் பின் உங்கள் தோசம் நீங்கும்.

பிறகென்ன? குழந்தை இல்லை என்றால் ஒரு முறை ஸ்ரீரங்கம் அரங்கநாதர் அல்லது திருப்பதி வேங்கடேசுவரர், சபரிமலை ஐயப்பன், மதுரை மீனாட்சி, காஞ்சி காமாட்சி, காசி விசாலாட்சி, செல்லச்சன்னதி முருகன், கதிர்காமக் கந்தன் இவர்களிடம் போய்  வழிபட்டு வந்தால் தோசம்  நீங்கி வீட்டில் அடுத்த ஆண்டே ‘குவா குவா” சத்தம் கேட்கும்!

உடற்கூறு பற்றிய ஒரு உளமார்ந்த கேள்விக்கு சோதிடர் எவ்வளவு அலட்சியமாக, பொறுப்பில்லாமல், புத்தியில்லாமல் பதில் சொல்கிறார்! அவரை நொந்து பயன ;இல்லை. அவர் படித்திருந்தால் அல்லவா அறிவியல் அடிப்படையில் பதில் கூற முடியும்!

குடும்பத்தில் இன்னொரு சிக்கல். குழந்தையே இல்லை என்பதல்ல ஆண் வாரிசு இல்லை என்ற குறை!

தமிழ் நாட்டில் பெண் குழந்தைகளை பாவப் பிறப்புக்களாக பார்க்கும் கொடிய வழக்கம் இருந்து வருகிறது. இதற்குப் பொருளாதாரம், சீதனக் கொடுமை, கொள்ளி வைக்க ஆண்பிள்ளை வேண்டும் என்ற சமய நம்பிக்கை காரணமாகும். பெரும்பாலும் இது படியாத வறுமையில் வாடும் பாமர மக்களிடையே அதிகம் காணப்படுகிறது.

பிறந்தது பெண் குழந்தை என்றால் அதற்குச் சீதனம் சீர்வரிசை கொடுக்க வேண்டும் என அஞ்சி அதன் கழுத்தைத் திருகிக் கொன்றுவிடும் பெற்றோர்கள் இருக்கிறார்கள்.

இந்தக் கொடுமையைப் போக்க தமிழ்நாட்டில் தொட்டில் குழந்தைத் திட்டம் நடைமுறையில் இருக்கிறது. அரசே இதனை முன்னின்று நடத்துகிறது. பத்துமாதம் சுமந்து பெற்ற பெண் குழந்தை வேண்டாம் என்றால் ஊரில் பொது இடத்தில் கட்டி வைத்திருக்கும் தொட்டிலில் போட்டு விடலாம். குழந்தையை அரசு பாரம் எடுத்து வளர்க்கிறது.

குழந்தையின்மை போலவே பிறக்கும் குழந்தை ஆணாகவோ பெண்ணாகாவே இருப்பதற்கு பெண் காரணம் அல்ல. ஆணே அதற்குக் காரணமாகும். அறிவியல அடிப்படையில் அதனை  விளங்கிக் கொள்ளலாம்.

மனித மரபணுத்தொகுதியில் (பநழெஅந) 23 சோடி அல்லது 46 நிறப்புரிகள் (chromosomes) அமைந்திருக்கின்றன. இதில் 44 தன்புரிகளும் (autosomes) 2 பால்புரிகளும் (sexchrosomes) இருக்கின்றன. பின்னது   X மற்றும் Y  என அழைக்கப்படுகின்றன.  ஒரு பெண்ணிடம் XX(2X)  இருக்கின்றன.

AA008994
AA008994

ஒரு ஆணிடம் XY  இருக்கின்றன.  பெண்ணின் முட்டையில் X நிறப்புரிகள் மட்டுமே உண்டு. ஆனால், ஆணின் விந்தில் ஒன்றில் X அல்லது Y  இருக்கலாம். இதில் எந்த (ஆணின்) விந்தணு  பெண்ணின்  முட்டையில்  உள்ள சினை அணுவோடு சேர்கிறதோ அதுவே குழந்தையின் பாலைத் தீர்மானிக்கிறது.

அதாவது X ம் X ம் சேரும்போது பெண் குழந்தையும் X ம் Y ம் சேரும்போது ஆண் குழந்தையும் பிறக்கிறது.

குழந்தையின்மைக்கும் கோள்களுக்கும் தொடர்பே இல்லை. அதுபோலவே குழந்தை ஆணா? பெண்ணா? என்பதும் கோள்களில் இல்லை.

இன்றைய மருத்துவ அறிவியல் குறிப்பிட்ட தாய் தந்தையர் முன்கூட்டியே ஆண் குழந்தையா பெண் குழந்தையா வேண்டும் என்பதை தெரிவு செய்யும் வழிமுறைகளைக் கண்டு பிடித்திருக்கிறது.

இந்த சங்கதிகள் எல்லாம் சோதிட நூல்கள் எழுதினவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. எங்களுடைய கோயில் அர்ச்சகர்கள், பூசாரிகள், பரியாரிகள் போன்றோருக்கும் தெரிந்திருக்கவில்லை.

இன்றுபோல் பழங்காலத்து மனிதனுக்கு உலகத்தைப்பற்றிய அறிவு, அண்டங்கள்பற்றிய ஞானம் இருக்கவில்லை. குறிப்பாக பாரதநாட்டவர்களுக்கு (இந்தியர்களுக்கு) இருக்கவில்லை.

புவியின் உருவமும் அண்டத்தில் அதன் இருப்பும் மனிதனைத் தலைமுறை தலைமுறையாகக் ஈர்த்து வந்துள்ளது. அவனுடைய கற்பனைகளும் மதக் கருத்துக்களும் பூமிக்கு விதம்விதமான உருவினை அளித்தன. பண்டைய பாபிலோனியர்கள் பூமியினை சம மட்டமான தகட்டிற்கு ஒப்பிட்டனர். வேறு சில நாட்டவர் அது சற்றே வளைந்த தட்டு என்றனர். ஆனால், பண்டைய கிரேக்கர் மட்டும் அது ஓர் உருண்டையைப் போலவுள்ளது என்று உணர்ந்திருந்தார்கள் என்று எண்ண முடிகிறது.

கடவுள்களையும் வேதங்களையும் சிருஷ்டித்த சமயவாதிகள், மொத்தம் பதினான்கு உலகங்கள் இருப்பதாகவும் அதில் பூலோகம், புவிலோகம் சுவர்க்கலோகம், மகாலோகம், ஜனோலோகம், தபோலோகம், சத்திய லோகம் ஆகிய மேலேழு உலகங்கள் எனவும், அதல, விதல, சுதல, தராதல, மகாதல, ரசாதல, பாதாளம்  கீழேழு உலகங்கள் எனவும் எழுதி வைத்துள்ளார்கள். உலகம் தட்டையானது. அதனை ஆயிரம் தலையுடைய ஆதிசேடன் தாங்கிக் கொண்டிருக்கிறது அல்லது அதனை நான்கு பெரிய யானைகள் தலைகளால் ஒரு ஆமையின் முதுகில் நின்றுகொண்டு தாங்குகின்றன என நினைத்தார்கள்.

மேலும் அண்டம் ஒரு முட்டையில் இருந்து தோன்றியது. அதன் அகவை 26,425,456,204,132 ஆண்டுகள்.  இருபத்தேழு நட்சத்திரங்களும் சந்திரனின் பிள்ளைகள். சூரிய பகவான் காலையில் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் புறப்படுகிறார். சூரியனையும் சந்திரனையும் கிரகண காலத்தில் இராகு கேது என்ற இரண்டு பாம்புகள் விழுங்குகின்றன என நம்பினார்கள்.

இவற்றை அவர்கள் கற்பித்தெழுதிய வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள் மூலமாய் தெரிந்து கொள்ளலாம். வேதங்களில் சொல்லப்பட்டிருக்கிறபடி இந்திய தேசத்திலுள்ள மேருமலை (இமயமலை) தான் கைலாசம். அங்கேதான் சிவபெருமான் உமாதேவியோடு வீற்றிருக்கிறார். திருபாற் கடலில் திருமால் பள்ளி கொள்கிறார். தேவலோகத்தில் முப்பத்து முக்கோடி தேவர்கள், பதினெட்டுக் கணங்கள் (அமரர், சித்தர், அசுரர், தைத்தியர், கருடர், கின்னரர், நிருதர், கிம்புருடர், கந்தர்வர், யக்கர், விஞ்ஞாயர், பூதர், பிசாசர், அந்தரர், முனிவர், உரகர், ஆகாயவாசிகள், போக பூமியர்) வாழ்கிறார்கள்.

இந்தியாவிலுள்ள நதிகளாகிய, கங்கை, காவேரி முதலியவைகளும் குற்றாலம், பாபநாசம் முதலிய அருவிகளே புண்ணிய தீர்த்தங்கள், இந்தியாவிலுள்ள காசி, காஞ்சி, அயோத்தி, மதுரை, சிதம்பரம் ஸ்ரீரங்கம் முதலிய ஆயிரக்கணக்கான தலங்கள் தான் திருப்பதிகள் (புண்ணிய ஷேத்திரங்கள்). இந்தியாவுக்கு வெளியே புண்ணிய தலங்களும் நதிகளும் இருப்பதாகக் கூறப்படாததால் வேதகாலத்து இந்தியர்களுக்கு வெளியே (இலங்கை தவிர) வேறு கண்டங்கள் இருப்பது தெரியாதிருந்தது.

இந்தியாவின் கிழக்கு, மேற்கு, தெற்குப் பார்த்த வேதகாலத்தவருக்கு கடலே கண்ணுக்குத் தோன்றியதனால் ஆழிசூழ் உலகு, கடல் சூழ்ந்த வையம் என்று நூல்களில் எழுதி வைத்துள்ளார்கள்.

இது யானை பார்த்த குருடர்கள் கதை போன்றது.

இந்தக் கடலுக்கு சாகரம் என்பது புராணிகர்கள் வைத்த பெயர் ஆகும். ஏனெனின் பிரமன் உலகத்தைப் படைக்கும் போது கடலைப் படைக்கவில்லையாம். சாகர முனிவருடைய புத்திரர்கள் அறுபதினாயிரம் பேரும் கபில முனிவருடைய குதிரையைத் தேடிப் பாதாளத்துக்குப் போவதற்கு தோண்டியெடுத்த பெருங்குழியே கடலாக (சாகரமாக) அமைந்தது.

இந்தியாவென்னும் உலகத்தைப் படைத்த கருத்தா ஆதியிலேயே கங்கை, காவேரி நதிகளைச் சிருஷ்டிக்கவில்லை. மாபலிச் சக்கரவர்த்தியைக் கொல்லப் பேருரு (விஸ்வருபம்) எடுத்த விஷ்ணுவின் பாதத்தைப் பிரமன் தன் கமண்டல ஜலத்தால் கழுவினான். அந்தத் தண்ணீரே கங்கையாகப் பெருகிவர, பகீரதன் வேண்டுகோளின்படி சிவன் தன் தலையில் அதை ஏற்றுச் சிறிது சிறிதாய் ஒழுக விட்டான். அவ்வொழுக்க நீர்தான் கங்கை நதியாக வழிந்தோடிக் கடலாகப் பெருகியது.

காவேரி நதியும் அகஸ்தியர் சிவனார் திருமண காலத்தில் தென்றிசைக்கு வந்தபோது சூரபன்மனுக்குப் பயந்து ஒளிந்திருந்த இந்திரனுடைய நந்தவனத்துக்கு மழையில்லாமற்போக விநாயகர் காக்கை யுருக்கொண்டு பறந்து வந்து அகஸ்தியருடைய கமண்டல ஜலத்தைக் கவிழ்த்ததனால் உண்டாகிய நீரோட்டமே காவிரியாகும்.

இக் காவேரியின் வரலாற்றைக் குறித்த வேறு வரலாறுகளும் உள்ளன. வேதசாஸ்திரப்படி கங்கை சிவன் தலையில் உற்பத்தியாகிறது.

மேருமலை பூமியின் மையத்தில் அமைந்துள்ளதாகக் கருதப்பட்டது. அது புனிதம் நிறைந்ததால் மகாமேரு என அழைக்கப்பட்டது. அதன் உயரம் 84 ஆயிரம் யோசனை அல்லது 10,92 ஆயிரம் மைல்களாகும். அதில்  16 ஆயிரம் யோசனை பூமிக்கு அடியில் இருக்கிறதாக எழுதி வைத்துள்ளார்கள். ஒரு யோசனை என்பது 13 மைல்கள் தூரம்.

இந்தியாவிலுள்ள மலைகளில் மிக உயர்ந்தது எவரெஸ்ட் சிகரம் ஆகும். அதன் உயரம் 29,002 அடி மட்டுமே என இன்றைய நிலநூலோர்கள் கூறுகிறார்கள்!

மேலேழு உலகமும் கீழேழு உலகமும் இருப்பதாகவும் உப்புக்கடல், கரும்புச் சாற்றுக்கடல், மதுக்கடல், மோர்க்கடல், பாற்கடல் முதலிய ஏழு கடல்கள் இருப்பதாகப் பண்டைக் காலத்தவர் நம்பினார்கள்.

பூமியைப்பற்றி வேத சாஸ்திரங்கள் இப்படித் தாறுமாறாகவும் அறிவீனமாகவும் கூறுமானால், அண்டம் பற்றியும் கடவுள் பற்றியும் ‘முக்காலமும்’ உணர்ந்த வேதகால ரிஷிகளினால் புனைந்த வேத சாத்திரங்கள் இன்னும் தாறுமாறாகவும் அறிவீனமாகவும் கூறியிருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை!

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த திருமூலர் பெரிய சித்தராகப் போற்றப்படுகிறார். அவர் எழுதிய திருமந்திரம் தமிழில் எழுதப்பட்ட முதல் தத்துவ நூலாகும். தமிழ் மந்திரம் மூவாயிரம், தமிழ் ஆகமம் எனச் சிறப்பிக்கப்பட்டு பன்னிரு திருமுறைகளில் 10வது திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது.

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமன் இல்லை நாளுமே!

அன்பும் சிவமும் இரண்டு என்பார் அறிவிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள்!

பேர்கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தால்
போர்கொண்ட வேந்தர்க்கும் பொல்லா வியாதியாம்!

உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்!
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே!

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் போபுரவாசல்!

நடமாடக் கோயில் நம்பர்க்குஒன்று ஈயின்
படமாடக் கோயில் பகவற்குஅது ஆமே!

என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே!

எனப் புரட்சிகரமான சமய, சமூக, மெய்யியல் சிந்தனைகளைத் திருமூலர் முன் வைத்தவர். இருந்தும் அவரால் கூறப்பட்டவை சில இன்றைய அறிவியலுக்கு ஒத்ததாக இல்லை.

ஆண் குழந்தை எப்போது பிறக்கிறது? பெண் குழந்தை எப்போது பிறக்கிறது? என்பதற்குத் திருமூலர் தரும் விளக்கம் நகைப்பை வரவழைக்கிறது. இதனால் அவரைக் குறை கூறுவதாக யாரும் எடுத்துக் கொள்ளக் கூடாது.

இன்றைய கால அறிவியல் வளர்ச்சியோடு அவரது காலத்து அறிவியலை ஒப்பிட முடியாது. அப்படி ஓப்பிடுவது தவறு. இன்று அறிவியல் இமயம் போல் உயர்ந்து மின்னல் வேகத்தில் வளர்ந்து வருகிறது.

திருமூலர் ஒரு குழந்தை ஆணா பெண்ணா என்பதை உடலுறவு காலத்தில் ஆண்மகனிடம் ஏற்படும் பிராண இயக்கத்திற்கேற்பக் குழந்தை ஆணாகவும் பெண்ணாகவும் பிறக்கும் எனக் கூறுகின்றார்.

குழவியும் ஆணாம் வலத்தது வாகில்
குழவியும்  பெண்ணாம் இடத்தது வாகில்  (திருமந்திரம் 482)

உடலுறவு காலத்தில் ஆணிடம் பிராணன் சூரிய கலையில் அதாவது வலது நாசியில் இயங்குமாயின் ஆண் குழந்தை என்றும் சந்திரகலையில் அதாவது இடது நாசியில் இயங்குமாயின் பெண் குழந்தை என்றும் கொள்ளப்படும்.

இதுபோலவே ‘விந்தாகிய சுக்கிலத்தை செலுத்தும் பிராணவாயுவை, அபானன் என்னும் மலக்காற்று எதிர்த்தால் விந்து சிதைந்து இரட்டைக் குழந்தைகள் பிறக்கும்” என்கின்றார். மேலும் உடலுறவின் போது இருவருக்கும் பிராணவாயு தடுமாறினால் பெண்ணிற்குக் கரு உண்டாவதற்கு வாய்ப்பு இல்லை என்கின்றார்.

இரட்டைக் குழந்தைகள் பிறப்பதற்கான அறிவியல் காரணிகள் எவை என்பது எல்லோருக்கும் தெரியும். இரண்டு வகையில்தான் இரட்டையர் பிறக்க முடியும்.

ஒன்று சினை ஏற்பட்ட சில நாள்களில் முட்டை இரண்டாகப் பிரிவது. இப்படிப் பிறக்கும் இரட்டையர் ஒத்த அல்லது உடன்பிறப்பு (Identical or fraternal) ஆக இருப்பர். மற்றது இரண்டு முட்டைகள் சமகாலத்தில் வெளியேற்றப்பட்டு வெவ்வேறு விந்தணுக்களால் சினைப்படுத்தப் படுவது. இப்படிப் பிறக்கும் இரட்டையர் ஒத்திலாத உடன்பிறப்புக்கள் (Non-identical) ஆக இருப்பர்.

குழந்தை ஆணா – பெண்ணா என்பதற்கு ஆணே பொறுப்பாகும். ஆனால், ஆண் குழந்தை பிறக்காவிட்டால் பழி பெண்ணின் தலைமீதே சுமத்தப்படுகிறது. அது மட்டுமல்ல, அந்தப் பெண் குழந்தையும் பலி எடுக்கப்படுகிறது. அண்மையில் ஒரு கிழமை ஏட்டில் ஜோதிடத்தின் விபரீதம் குழந்தையைக் கொன்ற தந்தை என்ற தலைப்பில் (யூலை 21,2003) வந்த இந்தச் செய்தியைப் படியுங்கள்.

தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் அருகே கருங்குளத்தை சேர்ந்தவர் துளசிமணி.  இவரது மனைவி கண்ணம்மாள். துளசிமணி (32) கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இலட்சுமி என்பவரை இரண்டாந்தாரமாகத் திருமணம் செய்து கொண்டார். இலட்சுமிக்கு இரண்டு குழந்தைகள் இருந்தன.  இந்நிலையில் கைக் குழந்தையான பெண் குழந்தையைத் தொட்டிலில் தூங்க வைத்துவிட்டு இலட்சுமி கடைக்குச் சென்றிருந்தார். அவர் திரும்பி வந்து பார்த்தபோது தொட்டிலிலேயே குழந்தை இறந்து கிடந்தது.

இது குறித்துத் துளசிமணி திருவைகுண்டம் காவல்துறையில் முறைப்பாடு செய்தார். காவல்துறை அதிகாரி மேரி யோர்ஜ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில்  முறைப்பாடு செய்த தந்தை துளசிமணிதான் குழந்தையைக் கொலை செய்தார் என்பது தெரியவந்தது. இதுகுறித்துக் காவல்துறை தரப்பில் கூறியதாவது,

‘கடந்த 7 ஆம் நாள் இலட்சுமி தனது குழந்தையைத் தொட்டிலில் தூங்க  வைத்துவிட்டுக் கடைக்குச் சென்றிருந்தாராம்.  அப்போது துளசிமணி தனக்கு இரண்டாவதாகப் பிறக்கும் குழந்தை பெண்குழந்தையாக இருக்கக் கூடாது என்று சோதிடர் ஒருவர் சொன்னதைக் கேட்டு, தொட்டிலில் கிடந்த குழந்தையைக் கயிற்றினால் கழுத்தை நெரித்துக் கொலை செய்தார். பின்பு வழக்கம் போல் வீட்டின் வெளியே எதுவும் அறியாதது போல் இருந்து விட்டார். பின்பு காவல்துறையில் இவரே முறைப்பாடு கொடுத்து விட்டாராம். காவல்துறை விசாரணையில் தந்தையே தனது குழந்தையைச் சோதிடத்தின் மீது வைத்த நம்பிக்கையினால் கொலை செய்தது தெரிய வந்தது. துளசிமணியிடம் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.’

இது போன்ற கண்ணீர்க் கதைகள் நாள் தோறும் தமிழ்நாட்டுச் செய்தி ஏடுகளில் வெளிவருகின்றன. பெண் குழந்தைகள் பாவப் பிறவிகளாகப்  பார்க்கப்படுகின்றார்கள். படிப்பறிவில்லாத பாமரமக்கள் சோதிடர்களின் வாக்கைத் தெய்வ வாக்காக் கருதிப் பத்து மாதம் வயிறு சுமந்து பெற்ற குழந்தைகளைக் கொலை கூடச் செய்கின்றார்கள்.

இதோ ஆண் குழந்தை  பிறக்காததால் கணவனால் கொடுமைப்படுத்தப்பட்டு அய்யத்துக்கு ஆளான இளம்பெண்ணின் ஜாதகக்  குழந்தை என்ற உண்மைக் கதை. இதிலும் சோதிடரே வில்லனாக வருகின்றார்.

“எல்லாப் பெண்களுக்கும் போலத்தான் எனக்கும் திருமணம் நடந்தது. அப்போதுதான் கல்லூரிப் படிப்பு முடிந்து வேலைக்குப் போய்க் கொண்டிருந்தேன். அப்பா எனக்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருந்தார்.

மதுரையிலிருந்து ஒரு சம்பந்தம் வந்தது. என் ஜாதகத்தை வாங்கிப் பார்த்தார்கள். பத்தில் ஏழு பொருத்தம் பொருந்தியது என்றார்கள்.  பெண் பார்க்க வந்தவர்கள் பிற விடயங்களைப் பேசினார்கள். நாங்கள் நடுத்தரக் குடும்பம். அய்ந்து பவுண் நகை, ரூபா 5 ஆயிரம் ரொக்கம் என்று பேசி முடித்து முகூர்த்த நாள் குறித்தார்கள். திருமணமும் சிறப்பாக நடந்தது.

அவன் பெயர்… ஆமாம், ‘அவன்தான் ….” அவன் என்று சொல்லுவதே அதிகம். ஏனென்றால், அவன் மனிதனல்ல மிருகம்.  அது அப்போது சென்னை கோட்டையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தது. எனக்கு அண்ணாசாலையில் ஒரு நிறுவனத்தில் வேலை.  எனவே சென்னையில் தனிக் குடித்தனம் வைத்தார்கள்.

ஆசைக் கனவுகளுடன் அதுக்குக் கழுத்தை நீட்டினேன். அது கட்டியது தாலி அல்ல, ‘தூக்குக் கயிறு’ என்பது பிறகுதான் தெரிந்தது.

சோதிடப் புரட்டு (18)

இது உனக்குப் பிறந்த குழந்தை அல்ல!

நக்கீரன்

என்னைச் சீண்டிச் சீண்டி விளையாடினான். நேரம் காலம் கிடையாது.  வீட்டிலிருக்கும் நாள்களில் ‘மாட்னி காட்சி’ கூட உண்டு.  புதுப் படம் வெளியாகும் போது நாலு காட்சி நடக்கும் அல்லவா?  அது போல நாலு காட்சியும் நடப்பது உண்டு. அதுக்கு என்மீது அவ்வளவு ஆசை என்று நினைத்து நான் பூரித்தேன்.

நாளாக நாளாகத்தான் அதன் சுயரூபம் தெரிந்தது.  ‘அங்கே என்ன பார்வை? யாரைப் பார்க்கிறாய்? அவன் உன்கூடப் படித்தவனா? அவன்கூட உனக்கு ஏற்கனவே பழக்கம் உண்டா? உன் கூடவேலை பார்க்கிறவனா?’ என்றெல்லாம் கேட்டான். கேள்வியல்ல குத்தல்.  வினா அல்ல விஷம்.  சூட்டுக் கோலால் என்னைச் சுட்டான்.

என் இதயம் கனத்தது. இமைகளைத் தாண்டிக் கண்ணீர் வடிந்தது. ஆனாலும், எனக்கு நானே ஆறுதல் கூறிக்கொண்டேன். நான் நல்ல நிறம். கல்லூரித் தோழிகள் என்னை ‘கிளியோபாட்ரா’ என்பார்கள்.  எனவே, அது சந்தேகப்படுகிறது என்று நினைத்தேன். ‘சில ஆண்களுக்கே இந்தக் குணம் உண்டு’ என்று எனக்குள் எண்ணிக்கொண்டேன்.

நாம்தான் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று முடிவு எடுத்தேன். கூடியவரை வெளியில் போவது இல்லை. அலுவலகத்திலிருந்து கூட விளக்கு வைக்குமுன் வீட்டுக்கு வந்துவிடுவேன். பனை மரத்தடியிலிருந்து பால் குடிப்பானேன்? பழிச் சொல்லுக்கு ஆளாவானேன்?

என்னதான் என்மீது சந்தேகம் இருந்தாலும் என் உடம்பு அதுக்குத் தேவைப்பட்டது. நானும் முந்தானை விரித்தேன். இல்லையென்றால், ‘எவன் கூடடி போய்விட்டு வந்தாய்?’ என்று கேட்கக் கூடாதே!

அந்தச் சந்தேகப் பேயுடன் எப்படியோ அய்ந்தாண்டு வாழ்ந்துவிட்டேன். இரண்டு குழந்தையும் பெற்றுவிட்டேன்.  இரண்டும் பெண் குழந்தைகள்.

எனக்கு என்னவோ வேறுபாடு தெரியவில்லை. இந்தக் காலத்தில் ஆண் என்ன? பெண் என்ன? இரண்டும் வீதியில் அலையத்தான் செய்கிறது.  சொன்னால்தான் பெண் பிள்ளை என்று தெரிகிறது.  கொள்ளி வைக்க ஆண் பிள்ளை வேண்டுமாம். பெண் பிள்ளை வைத்தால் கொள்ளிக்குடம் உடையாதா? ஆண் பிள்ளைதான் வாரிசாம்!

Astrologuzodiacthinnai

என் குடும்பம் பாண்டியப் பேரரசு இல்லையே! ஆண் பிள்ளைதான் கடைசிக் காலத்தில் கஞ்சி ஊற்றுவானாம்! அந்தக் காலந்தான் மலையேறிவிட்டதே! இறக்கை முளைத்ததும் அவனவன் பறந்துவிடுகிறான்!

எனக்கு மகிழ்ச்சிதான். என்றாலும் அதுக்கு மனதுக்குள் கவலை இருந்தது. ‘ஒரு ஆண் பிள்ளை வேண்டும்’ என்று அடிக்கடி சொல்லும்.

‘எந்தக் கோட்டையை ஆள?’ என்று நான் சிரிப்பேன்!

‘இரண்டு பெண் குழந்தைகளையும் சிறப்பாக வளர்த்து, நன்றாகப் படிக்க வைத்து, நல்ல இடத்தில் கட்டிக் கொடுத்தாலே போதும்’ என்பேன்.

அடுத்த குழந்தை வேண்டும் என்றும் நான் ஆசைப்படவில்லை. ‘வேண்டாம்’ என்றும் நினைக்கவில்லை.  ஆனால் அடுத்ததும் பெண்ணாகப் போய்விடக் கூடாதே என்ற அச்சம் இருந்தது. என்னைவிட அதுக்கு இந்த அச்சம் அதிகம்.   எனவே, என்னை அதிகமாக நெருங்குவது கூட இல்லை.

இரண்டு குழந்தை பெற்றும் என் அழகு குறையவில்லை. இதைப் பார்த்து அது பொறாமைப்பட்டது. ‘உன்னைப் பார்த்தால், இரண்டு பிள்ளை பெற்றவள் என்று சொல்லவே முடியாது!’ என்று கூறும்.

இது புகழ்ச்சி என்று நான் நினைத்தேன். ஆனால், பொறாமை என்று பிறகுதான் தெரிந்தது. ஒரு நாள் அலுவலகத்திலிருந்து கிளம்ப நேரமாகிவிட, ஆட்டோ பிடித்துக் கொண்டு வீட்டுக்கு ஓடி வந்தேன்.

‘எங்கடி போய் விட்டு வருகிறாய்?’ என்று அது கேட்க, நான் ஒருமுறை முறைத்துவிட்டு உள்ளே போய்விட்டேன்.

அதோட நண்பருக்குக் குழந்தை பிறந்திருந்தது. ஆண் குழந்தை. தொட்டில் போடும் விழாவுக்கு இருவரும் போய் வந்தோம். வந்தது முதல் ஆண் குழந்தை ஆசை ஆலமரமாகப் படர்ந்துவிட்டது.

அது ஜாதகத்தை எடுத்துக்கொண்டு ஒரு சோதிடரிடம் போயிற்று. சோதிடர் ஜாதகத்தைப் பார்த்து விட்டு “அடுத்த குழந்தை உனக்கு ஆண் குழந்தைதான்” என்று அடித்துச் சொன்னார்.

வாயெல்லாம் பல்லாக லொள்ளுவிட்டுக் கொண்டு அது வீட்டுக்குத் திரும்பியது. அல்வாவும், மல்லிகைப் பூவும் வாங்கி வந்திருந்தது. அன்றிரவு மீண்டும் ஒரு முதலிரவு போலிருந்தது.

முதல் இரு குழந்தைகளைத் திட்டமிட்டுப் பெற்றுக் கொள்ளவில்லை. சூப்பிப்போட்ட மாங்கொட்டை முளைப்பது போலப் பிறந்தவைதான். ஆனால், அடுத்த குழந்தைக்குத் திட்டமிட்டோம். மூன்றாம் மாதமே நான் குழந்தை உண்டானேன்.

அதுக்குக் கொள்ளை மகிழ்ச்சி. என்னைத் தாங்கு தாங்கு என்று தாங்கிற்று. ‘நம்ம வீட்டுக்கு ஒரு தம்பிப் பாப்பா வரப்போகிறது’ என்று பெண் குழந்தைகளிடம் பெருமை அடித்துக் கொண்டது.

‘நிச்சயம் இது ஆண் குழந்தைதான் – சோதிடர் அடித்துச் சொல்லிவிட்டார்’ என்று தம்பட்டம் அடித்தது.

என் மாமியார், மாமனார் வந்து பார்த்து விட்டுப் போனார்கள். ‘நாங்கள் மதுரையில் ஒரு சோதிடரிடம் கேட்டோம். அவரும் பேரன்தான்  பிறப்பான் என்று சொன்னார்’  என்று கூறிவிட்டுப் போனார்கள்.

எனக்கேகூட நெஞ்சுக்குள் இன்பம் சுரந்தது. அது என்னவோ ஆண் குழந்தை என்றால் ஆசையாகத்தான் இருக்கிறது!  நமது குருதியில் அப்படியே அது ஊறிப் போய்விட்டது.

மாதங்கள் ஓடின…மகிழ்ச்சியுடன்.

பத்தாவது மாதம்.

இடுப்பு வலி.

அது ஒரு மருத்துவ மனைக்கு என்னை அழைத்துக்கொண்டு போயிற்று.

போய்ச் சேர்ந்த அன்று இரவே குழந்தை பிறந்தது.

ஒரு இலக்கினம் தவறிப் போய்விட்டது – பெண் குழந்தை!

பெரிதாக ஊதிய பலூன் ‘படார்” என்று வெடித்தது போலிருந்தது!

எனக்கே முகம் செத்து விட்டது என்றால் அதுக்கு எப்படி இருந்திருக்கும்? நிறைய சாக்லெட்டு, வகை வகையான சாக்லெட்டு வாங்கி வைத்திருந்தது. அவற்றை அப்படியே கொண்டுபோய்க் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டுக் குலுங்கிக் குலுங்கி அழுதது!                                                                                                                                                                                       தென்னிந்திய சாதகம்

Astrologysouthindian17

என்னையும் குழந்தையையும் பார்க்க அறைக்குள் அது வரவில்லை. அதோட அம்மா, அப்பாவும் வரவில்லை. இழவு வீடு போல இருந்தது. மூன்றாம் நாள் தோழி ஒருத்தியின் உதவியுடன் நான் வீட்டுக்கு வந்தேன்.

என் குழந்தைமீது எல்லோரும் பாராமுகமாக இருந்தார்கள். நாளாக நாளாகக் குழந்தையின் மீது வெறுப்புப் பெருகியது. அவர்களின் வெறுப்பு எனது விருப்பாக மாறியது.

முதல் குழந்தை பெற்றதுபோல மகிழ்ச்சியாக இருந்தேன். குழந்தையை வாரியெடுத்துக் கொஞ்சினேன். மற்றக் குழந்தைகளைப் போல இந்தக் குழந்தையையும் என் மார்போடு அணைத்துப் பால் கொடுத்தேன்.

வீட்டுக்கு வந்த பின்னும் அது என் முகத்தில் விழிக்கவில்லை. குழந்தையையும் பார்க்கவில்லை.

‘நான் என்ன தப்பு செய்தேன்?’ நான்தான் கேட்டேன். பதில் இல்லை.

‘அடுத்த குழந்தை நிச்சயம் ஆண் குழந்தைதான் என்று சோதிடன் சொன்னான் என்று நீங்கள்தான்  சொன்னீர்கள். அதை நம்பித்தான் நானும் மூன்றாவது குழந்தை பெற்றுக் கொள்ள ஒப்புக்கொண்டேன்” என்று நயமாகச் சொன்னேன்.

அது எனக்குப் பதில் சொல்லாமல் அலட்சியப் படுத்திவிட்டுப் போயிற்று. என்னை ஒரு குற்றவாளியைப் போலப் பார்த்தது, நடத்தியது, நண்பர்கள் கேலி செய்தது வேறு அதன் மனதைப் புண்படுத்தியது.

அந்தக் கோபத்தில் ஜாதகத்தை பார்த்துச் சொன்ன ஜோதிடரிடம் ஆவேசமாகப் போயிற்று.

‘நீயெல்லாம் ஒரு சோதிடனா?’ என்று சண்டை போட்டிருந்தது.

‘கொடு ஜாதகத்தை’ என்று சோதிடர் வாங்கியிருக்கின்றார். வாங்கிப் பார்த்துவிட்டு ‘நான் சொன்னது சரிதான்’ என்று ஒரு நமட்டுச் சிரிப்புச் சிரித்திருக்கின்றார்.

‘என்ன சரி? ஆண் குழந்தை பிறக்கும் என்று சொன்னீர். பெண் குழந்தை அல்லவா பிறந்திருக்கிறது’ என்று இது கோபமாகக் கத்தியிருக்கிறது.

‘பொறு தம்பி’ என்றார் சோதிடர்.  உனக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்றுதானே சொன்னேன்? இந்தக் குழந்தை உனக்குப் பிறந்திருந்தால் ஆண் குழந்தையாக இருந்திருக்கும்!’

இது திகைத்துப் போய் விட்டது.

‘அப்படியென்றால்…?’

‘இது உனக்குப் பிறந்த குழந்தை அல்ல!  ஊருக்குப் பிறந்த குழந்தை!’ கொஞ்சம் கூடப் பயமில்லாமல் சோதிடன் சொன்னான்.

இது சும்மாவே சந்தேகப் பேய்! சும்மாவே ஆடும் பேய் உடுக்கு அடித்தால் என்ன ஆட்டம் ஆடும்! எரிகிற தீயில் எண்ணெய் வார்த்ததுபோல ஆயிற்று!

இதன் நினைவு பத்து மாதத்துக்கு முன் ஓடியிருக்கிறது. அப்போது வீட்டுக்கு யாராவது வந்திருந்தார்களா? அதோட மாமா ஒரு வேலையாக வந்திருந்தார். எங்கள் வீட்டில் நாலைந்து நாள் தங்கினார். அவரா இருக்குமோ?

அலுவலகத்தில் யார்கூடவாவது உறவு ஏற்பட்டு இருக்குமோ?Astrologysign

நான் வீட்டில் இல்லாத போது ஒரு நண்பன் தேடி வந்தானே.. அவனாக இருக்குமோ?

இப்படி ஆயிரம் சந்தேகங்களுடன் அந்தப் பேய் வீட்டுக்குத் திரும்பியது.

அதன் முகம் பேயடித்தது போல இருந்தது.

‘என்ன விஷயம்?’ என்று கேட்டேன்.

‘ஒன்றுமில்லை’   என்று மழுப்பியது.

பின்னால்தான் இதெல்லாம் எனக்குத் தெரியவந்தது.

நாலைந்து நாள் கழித்து என் ஜாதகத்தை எடுத்துக் கொண்டு சோதிடரிடம் ஓடியது.

‘என் நடத்தை எப்படி?’ என்று பார்த்துச் சொல்லும்படி கேட்டிருக்கிறது. அவன் கில்லாடி சோதிடன்!

‘இவள் நடத்தை கெட்டவளாக இருப்பாள்’ என்று சொல்லி விட்டான்!

வீட்டுக்கு வந்தது. எதற்கு எடுத்தாலும் சட்டியில் போட்ட கடுகுபோல படபடவென்று வெடித்தது.  என்னைத் திட்டியது, ‘என் முகத்தில் விழிக்காதே, போ” என்று விரட்டியது. பெண் குழந்தை பிறந்த ஏமாற்றம் போலிருக்கிறது என்று நானும் சும்மா இருந்துவிட்டேன்.

பேறுகால விடுப்பு முடிந்து அலுவலகத்துக்குக் கிளம்பினேன்.

‘வேலைக்குப் போக வேண்டாம் வேலையை ராஜினாமா செய்துவிடு’ என்று அது சொல்லிற்று.

எனக்கு ஒரே அதிர்ச்சி.

‘ஏன்?’

‘மூன்று குழந்தை ஆகிவிட்டதே! வீட்டிலிருந்து குழந்தைகளைப் பார்த்துக் கொள்’ என்று அது சொல்லிற்று.

‘ஆமாங்க மூன்று குழந்தை ஆகிவிட்டது. இனித்தான் நான் கட்டாயம் வேலைக்குப் போய் சம்பாதிக்கவேண்டும்’ என்று சொன்னேன்.

‘வேலைக்குப் போக வேண்டாம்’ என்று அது சொல்ல…

‘தயவு செய்து என்னைத் தடுக்காதீர்கள்’ என்று நான் கெஞ்ச..

‘ஏன், கள்ளப் புருசனைப் பார்க்கக் கட்டாயம் போகவேண்டுமா?’ என்று அது கேட்க…

‘என்ன.. என்ன சொன்னீங்க..’ என்று நான் பதற…

‘எனக்கு எல்லாம் தெரியும்டி’ என்று அது எகத்தாளமாகப் பேச…

‘என்ன தெரியும்?’ என்று நான் கத்த…

‘ஜோசியக்காரன் எல்லாம் சொல்லிவிட்டான். இந்தக் குழந்தையே எனக்குப் பிறந்திருந்தால் ஆண் குழந்தையாக இருந்திருக்குமே! கள்ளப் புருசனுக்குப் பிறந்திருக்கிறது, அதுதான் பெண் குழந்தையாகப் பிறந்துவிட்டது!’ என்று அது சொல்ல…

நெருப்பை அள்ளி என் தலையில் கொட்டியது போலிருந்தது!

‘எவன்டி அந்தக் கள்ளப் புருசன்?’ என்று அது கேட்க,

‘நீ ஆண் பிள்ளையாக நடந்துகொண்டால், நான் ஏன் அடுத்தவனிடம் போகிறேன்!’ என்று நான் ஆத்திரத்தில் கூற…

‘அவ்வளவு ஆகிவிட்டதா? உனக்கு இனி இந்த வீட்டில் இடமில்லை. இனி நீ என் மனைவியுமில்லை’ என்று கை நீட்டி என் கழுத்தில் கிடந்த தாலியை வெடுக்கென்று அறுத்துக் கொண்டான்.

ஒரு சந்தேகப் பேயுடன் வாழ்வதைவிடத் தனித்து வாழுவது சந்தோசம் என்று நான் நினைத்தேன்.

பச்சை மண்ணைக் கையில் எடுத்துக்கொண்டு, மற்ற இரு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு, கட்டிய சேலையுடன் நான் கிளம்பினேன்.

‘என் குழந்தைகளை என்னிடம் கொடு!’  பெரிய குழந்தைகள் இருவரையும் அவன் பிடித்து இழுத்தான். நான் விடவில்லை. குழந்தைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன்.

‘எதுடா உன் குழந்தை? இப்போது சொல்லுகிறேன்,  இந்தக் குழந்தைகளும் உனக்குப் பிறந்தவை அல்ல ஊருக்குப் பிறந்தவை!’

அது திகைத்து நின்றது.

‘தொட்டுத் தாலி கட்டிய பெண்டாட்டியை நம்பாத உனக்குப் பிள்ளைகள் வேண்டுமா? தூ!’ என்று அதன் முகத்தில் காறித் துப்பினேன்.

என் பிள்ளைகளைக் கோழிக் குஞ்சுகள்போல அரவணைத்துக் கொண்டு வெளியேறினேன்.

இப்போது நான் தனி வீட்டில் வசிக்கிறேன், சம்பாதிக்கிறேன், என் பிள்ளைகளை ராஜாத்திகள் போல வளர்க்கிறேன்.

அவர்கள் பெண்பிள்ளைகள், நாளை அவர்களுக்குத் திருமணம், திருவிழா என்று நடக்கும். அப்போது ‘அப்பா யார்’ என்று கேட்பார்களே?

கேட்கத்தான் செய்வார்கள்! அப்படிப்பட்ட கேடு கெட்ட சமுதாயத்தில்தானே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்! (ராணி வார இதழ் – 29. 04. 2001)

இந்தக் கதை கற்பனைக் கதையல்ல. உண்மைக் கதை. பத்துப் பொருத்தங்களில் 7 பொருந்தங்கள் பொருத்தம் எனச் சோதிடர் சாதகங்களைப் பார்த்துப் பச்சைக் கொடி காட்டிய பின்னர் நடந்த திருமணம். இவ்வாறு மனப் பொருத்தம் பாராது கோள், நட்சத்திரப் பொருத்தங்கள் பார்த்துத் திருமணம் செய்து வைப்பதால் முறிந்து போன குடும்பங்கள் ஏராளம்.

சோதிடப் புரட்டு (19)

சோதிடம் இருட்டு அறையில் கறுப்புப் பூனையைத் தேடும் குருடன் கதை!

சோதிடர்கள் ஒற்றை இரட்டை பார்த்துப் பலன் சொல்லிவிட்டு அது பிழைக்கும்போது கொஞ்சம்கூட மனச்சாட்சிக்குப் பயப்படாமல் சாதுரியமாக மேலும் ஒரு பொய்யைச் சொல்லி அதனை உண்மைப்படுத்த எத்தனிக்கும் கொடுமையை ஜாதகக் குழந்தை என்ற உண்மைக் கதை படம்பிடித்துக் காட்டுகிறது.

பிறக்கப் போகும் குழந்தை ஆணா பெண்ணா என்று எந்தச் சோதிடனாலும் சொல்ல முடியாது. ஒற்றை இரட்டை பிடிக்கலாம், ஆனால் முன்கூட்டிப் பலன் சொல்ல முடியாது!

படியாதவர்கள் மட்டுமல்ல மெத்தப் படித்தவர்களும் திருமணம் என்று வரும்போது சோதிடர்களைத் தேடி அலைந்து அவர்கள் சொல்வதைத் தேவ வாக்காகக் கொள்வதால் பல திருமணங்கள் இடையில் குழம்பி விடுகின்றன.

எனது நண்பர் ஒருவர் மருத்துவராகப் பணிபுரியும்  தனது ஒரே மகளுக்குப் படித்த மாப்பிள்ளையைத் திருமணம் பேசினார். இரு வீட்டாருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்துப் போய்விட்டது. எனது நண்பருக்கு சாதகத்தில் நம்பிக்கை இல்லை. ஆனால், மாப்பிள்ளை வீட்டார் சாதகம்  பார்க்க வேண்டும் என்று விரும்பினார்கள்.

சாதகம் பார்த்தபோது,  சோதிடர் சாதகத்தில் ‘தாலிப் பொருத்தம் இல்லை’ என்று சொல்லி அதனைத் தள்ளிவிட்டார்.

எனது நண்பர் தனக்குத் தெரிந்த இன்னொரு சோதிடரிடம் அந்தச் சாதகங்களைக் காட்டினார். அவர் பார்த்துவிட்டுப் ‘பொருத்தம் இருக்கிறது. திருமணம் செய்யலாம்!” எனப் பச்சைக் கொடி காட்டினார்.

இன்னொரு சொந்தக்காரர் சொன்னார். செவ்வாய்க் குற்றமுள்ள மாப்பிள்ளைக்குச் செவ்வாய்க் குற்றமுள்ள பெண்ணை மிகவும் வில்லங்கப்பட்டுச் சொந்தந்துக்குள்ளேயே தேடிக் கண்டு பிடித்தார்களாம். வீட்டில் கெட்டி மேளம் கொட்டப் போகிறது என்று எல்லோர் மனதிலும் மகிழ்ச்சி கூத்தாடியது.  இரு வீட்டாருக்கும் பெரிய நிம்மதி. ஆனால், அந்த நிம்மதி நீண்ட நாள்கள் நீடிக்கவில்லை.

பெண்  வீட்டார் சாதகங்களைச் சோதிடரிடம்  காட்டியபோது ‘சாதககாரர்களுக்கு மகேந்திரப் பொருத்தம் இல்லை’ என்று தள்ளி விட்டார்.

இடிந்துபோன மாப்பிள்ளை வீட்டார் மறுபடியும் விட்ட இடத்தில் இருந்து செவ்வாய்க் குற்றம் உள்ள பெண்ணைத் தேடும் வேட்டையில் இறங்கியுள்ளார்கள்!

எப்படி நோய் பற்றி ஒரு மருத்துவர் சொல்வது சரியா பிழையா என்பதை இன்னொரு மருத்துவரிடம் கேட்டு உறுதி செய்து கொள்வது புத்திசாலித்தனமோ அது போல ஒரு சோதிடர் சொல்வதை மட்டும் அப்படியே நம்பிவிடாமல் இன்னொரு சோதிடரிடமும் சாதகங்களைக் காட்டுவது நல்லது.  பெரும்பாலும் இரண்டாவது சோதிடர் ‘பொருத்தம்’ இருக்கிறது என்று சொல்லக் கூடும்! அல்லது பொருத்தம் மத்திமம், எதற்கும் கோள்களுக்கு தோசம் நீங்க அருச்சனை அபிசேகம் செய்து விட்டுத் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று அவர் சொல்லக் கூடும்!

இப்படிச் சொல்வதை வைத்துக்கொண்டு திருமணம் செய்து வைப்பதற்கு முன் சாதகப் பொருத்தம் பார்ப்பதை நான் ஆதரிப்பதாகப் பொருள் கொள்ளக்கூடாது. சாதகப் பொருத்தம் பார்ப்பது மூடநம்பிக்கை. அதில் இரண்டு கருத்துக் கிடையாது. சாதகம் பார்த்துப் பொருத்தம் இருந்தால் மட்டும் திருமணம் என்று அழுங்குப் பிடி பிடிக்கும் பெற்றோர்களுக்கே சாதகத்தை இரண்டாவது சோதிடரிடம் காட்டுமாறு யோசனை சொன்னேன்.

ஒரே சாதகங்களைப் பார்த்துவிட்டு சோதிடர்கள் மணப் பொருத்தம்பற்றி நேர் எதிர்மாறான பலன்கள் சொல்வது ஒன்றும் புதினம் இல்லை. இது நாள் தோறும் ஊர் தோறும் நடக்கிறது.

ஒரே சாதகங்கள்,  வெவ்வேறு சோதிடர்கள், நேர் எதிர்மாறான பலன்கள்! ஏன் இப்படி?  எல்லாம் கண் பார்வை தெரியாதவன் மனைவியை அடித்த கதைதான்! அல்லது இருட்டறையில் கறுப்புப் பூனையைத் தேடிய கதைதான்!

ஒரு சாதகத்தை எழுதக் கூட்டத் தெரிந்த எல்லோரும் கணிக்கலாம்.

புவி தன்னைத்தானே சுற்றுவதால் இரவு பகல் உண்டாகிறது. புவி தன்னைத்தானே மேற்கு – கிழக்காக ஒரு முறை சுற்றிவர 24 மணி நேரமாகிறது. இந்த 24 மணி நேரத்தில் (60 நாளிகை)  இப் புவியைச் சுற்றிலும் கிழக்கு மேற்காக மேலும் கீழுமாகப் படர்ந்துள்ள 12 இராசி வீடுகளும் ஏறத்தாழ 2 மணித்தியாலத்துக்கு ஒருமுறை ஒன்றன் பின் ஒன்றாக கிழக்கில் காலித்து மேற்கில் மறைகின்றன.

இராசிவட்டத்தை (Zodiac) 12 சம பங்காகப் பிரித்து மேட இராசி தொடக்கம் மீன இராசி இறுதியாக ஒவ்வொரு இராசி வீட்டிற்கும், ஒவ்வொரு பெயர் சூட்டி, அப் பெயருக்கான சின்னத்தையும் அத்தகைய இராசி வீட்டிற்கு அளித்துள்ளனர். பன்னிரண்டு இராசி வீடுகளில் ஏதாவது ஒரு இராசி வீடு மட்டும் உயிர் இலக்கினம் என்று சொல்லப்படுகின்ற ஜெனன இலக்கினம் ஆகும்.

அன்றாடம் ஞாயிறு காலிக்கும் (சூரிய உதயம்) போது அந்த ஞாயிறுடன் காலிக்கும் முதல் உதயராசியே அந்த ஞாயிறு அன்றைய நாள் இடம்பெற்றுள்ள இராசியாகும். இவ்விதம் அமையும் உதய இராசிக்கு அடுத்துக் காலிக்கும் (உதயமாகும்) 2 வது இராசி அன்றைய நாள் ஞாயிறு நின்ற இராசிக்கு அடுத்துள்ள இரண்டாவது இராசி இல்லமேயாகும்.  அதற்கு அடுத்துக் காலிக்கும் இராசி எது என்றால் ஞாயிறு நின்ற இராசிக்கு 3 வது இல்லமாகும். இவ்வாறு 12 இராசிகள் 24 மணி நேரத்தில் காலித்து மறைகின்றன.

ஞாயிறு தனது அச்சில் மேற்குக் கிழக்காகச் சுற்றுவதால் இராசிகள் கிழக்கு மேற்காகக் காலித்து மறைவதுபோல் எங்கள் கண்களுக்குத் தெரிகிறது. அதாவது மேடம், இடபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் என்ற வரிசையில் இராசிகள் தோன்றி மறைகின்றன.

ஓர் குழந்தை பிறக்கும் வேளையில் கிழக்குத் திசையில் அடிவானத்தில் காலித்துக் கொண்டிருக்கிற இராசி வீடே ஜெனன இலக்கினம் ஆகும். இராசிச் சக்கரத்தில் இதுவே முதல் வீடு ஆகும்.

பிறப்புக் காலத்தில், சந்திரன் நின்ற இராசி வீடே உடல் இலக்கினம் என்று சொல்லப்படுகின்ற ஜெனன இராசி ஆகும். சோதிடர்கள் இந்த இராசியைக் கொண்டே வாழ்நாள் முழுவதும் ஒருவரது இராசி பலன்ககளைக் கோசார முறையில் கண்டறியலாம் எனச் சொல்கின்றார்கள். கோச்சார முறை என்பது சாதகத்தில் உள்ள கோள் நிலையையும் சாதகம் பார்த்துப் பலன் சொல்லும் பொழுதுள்ள கோள் நிலையையும் சேர்த்துச் சொல்லப்படும் பலனாகும்.

சித்திரை மாதம் 10 ஆம் நாள் ஞாயிறு காலிக்கும் போது அந்த ஞாயிறு இடம் பெற்றுள்ள மேட இராசியே அன்றைய உதயராசியாக இடம் பெற்றிருக்கும். மறுநாள் மேட இராசியில் ஒரு பாகை தள்ளி சூரியன் உதயமாகிறது. இவ்வாறு 30 பாகை கொண்ட மேட இராசியைக் கடக்க 30 நாள்கள் எடுக்கின்றன. இதனால் சித்திரை மாதத்தில் பிறந்தவர்களது சாதகத்தில் ஞாயிறு மேட இராசியில் காணப்படும். பாகை, மணித்துளி, விநாடி அல்லது நொடி மட்டும் வேறுபடும். வைகாசியில் பிறந்தவர்களது சாதகத்தில் மேடத்துக்கு அடுத்த இடப இராசியில் ஞாயிறு காணப்படும்.

கார்த்திகை 27 ஆம் நாள் ஞாயிறு காலிக்கும் போது அந்த ஞாயிறு இடம் பெற்றுள்ள விருச்சிக இராசியே அன்றைய நாள் உதயராசியாக இடம் பெற்றிருக்கும்.

மேலே கூறியவாறு புவிதான் ஞாயிறைச் சுற்றி வருகிறது. ஆனால், எமது கண்களுக்குப் புவி அல்ல ஞாயிறு இராசி வட்டத்தைச் (இராசிச் சக்கரத்தை) சுற்றிவருவது போல் தோற்றமளிக்கிறது. ஒவ்வொரு இராசியிலும் ஞாயிறு செலவிடும் காலம் இலக்கினம் என்று அழைக்கப்படுகிறது. ஓவ்வொரு 2 மணித்தியாலமும் இலக்கினம் மாறுகிறது, ஆனால், அப்படி மாறும் காலம் மாதங்களைப் பொறுத்து கூடியும் குறைந்தும் காணப்படும்.

இதே போன்று இராசி வட்டம் 27 நட்சத்திரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த 27 நட்சத்திரங்களில் நாள்  ஒரு நட்சத்திரமாக நகர்ந்து கொண்டே சந்திரன் 27¼  நாள்களில், 27 நட்சத்திரங்களையும்   ஒருமுறை சுற்றி வந்து விடுகிறது. ஒவ்வொரு நட்சத்திர மண்டலமும் கால், அடி, வயிறு, மேல்வயிறு, தலை என்று நான்கு பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாகங்கள் ஒவ்வொன்றும் ஒரு பாதம் என்றும், முதலாம் கால், இரண்டாம் கால், மூன்றாம் கால், நான்காம் கால் என்றும் சொல்லப்படுகின்றன. எனவே 13 பாகை 20 மணித்துளி கொண்ட ஒரு இராசி வீட்டைச் சந்திரன் 2¼ நாள்களில் கடந்து விடுகிறது.

புவியில் இருந்து பார்க்கும் போது ஞாயிறு மற்றும் நட்சத்திர மண்டலங்கள் கிழக்கில் உதித்து மேற்கில் மறைவது போலக் காட்சி அளிக்கின்றன. இது புவி தனது அச்சில் தன்னைத்தானே வலம் இருந்து இடமாகச் சுழல்வதால் ( rotates  counter – clockwise) ஏற்படுகிறது. புவி இதே வலம் இடமாகவே ஞாயிறையும் சுற்றி வருகிறது. புவி இவ்வாறு தன்னைத்தானே சுற்றுவதாலேயே பகல் – இரவு ஏற்படுகிறது.

உண்மையில் ஞாயிறு மற்றும் நட்சத்திர மண்டலங்கள் இருந்த இடத்திலேயே ஒளி உமிழ்ந்து கொண்டு இடம் விட்டு இடம் பெயராமல் ஒளிர்கின்றன. புவி நடுவில் இருக்கும் ஞாயிறையும் பின்புலத்தில் உள்ள நட்சத்தரங்களையும் சுற்றி வருகிறது. ஆனால், எங்கள் கண்களுக்கு ஞாயிறும் நட்சத்திரங்களும் புவியைச் சுற்றுவது போல் தோற்றமளிக்கிறது. இது ஒரு மாயத் (illusion) தோற்றமாகும்.

ஒரு விண்வெளிக் கப்பல் புவியைச் சுற்றிவர 90 மணித்துளி எடுத்தால் அதில் செலவு (பயணம்) செய்யும் விண்வெளி வீரன் எட்டு ஞாயிறு  காலிப்புகளையும் அதே எண்ணிக்கையளவு  ஞாயிறு மறைவுகளையும் பார்க்க முடியும்!

சாதகம் கணிப்பதில் சிக்கல் இல்லை. ஏற்கனவே சொல்லியவாறு குழந்தை பிறக்கும் சமயத்தில், அடிவானத்தில் காலித்துக் கொண்டிருக்கின்ற இராசி வீடே ‘உயிர் இலக்கினம்” என்று சொல்லப்படும் ஜென்ம இலக்கினமாகும். ஜெனன காலத்தில் சந்திரன் நின்ற இராசி வீடு ‘உடல் இலக்கினம்” என்று சொல்லப்படுகின்ற ஜெனன இராசியாகும்.

பஞ்சாங்கத்தைப் பார்த்து ஜென்ம இலக்கினம், ஜென்ம இராசி, ஜென்ம நட்சத்திரம் போன்றவற்றைத் தெரிந்து கொள்ளலாம்.

முன்னர் மனதாலும் கையாலும் பல மணித்தியாலம் அல்லது சில நாள்கள் செலவழித்துக் கணிக்கும் சாதகத்தை இன்று சில மணித்துளிகளில் சோதிட மென்பொருளின் உதவியுடன் கணித்து முடித்து விடலாம். பிறந்த நாள், நேரம், ஊர், நாடு, நெடுக்கோடு (longitude) மற்றும் குறுக்குக் கோடு (latitude) ஆகிய தரவுகளைக் கொடுத்துவிட்டால் சாதகம் இமைப் பொழுதில் இராசிசக்கரம் நவாம்ச, குண்டலி இரண்டையும் பாகை பிசகாது ‘துல்லிய’ மாகக் கணித்துக் கொடுத்து விடுகிறது!

ஆனால், சாதகத்தை அறிவியலாளர்கள் கண்டுபிடித்த கணினி மூலம் கணித்துவிடுவதால் மட்டும் அது சரியென்று பொருள் கொள்ளக்கூடாது. கணினிக்கு எதனைக் கொடுக்கிறோமோ அதுதான் வெளியே வரும். குப்பையைக் கொடுத்தால் குப்பைதான் வெளிவரும் (garbage in garbage out)  என்பதை மறந்து விடக்கூடாது.

சிக்கல் எங்கே இருக்கிறதென்றால் சாதகத்தைப் பார்த்துப் பலன் சொல்லுவதில் இருக்கிறது. அதற்குச் சோதிடப் படிப்பு, அறிவு, பட்டறிவு ஆகியவை நிறையத் தேவைப்படும்.

சோதிடத்தை முறையாகப் படித்து அதனை முழுநேரத் தொழிலாகச் செய்துவருபவர்கள் மிகச் சிலரே. பெரும்பாலோர் சோதிடத்தை அரைகுறையாகவும் பொழுது போக்குக்காகவும் படித்த அரைச்  சோதிடர்களிடம் சாதகங்களை கொடுத்துப் பலன் கேட்கின்றார்கள்.

சிலர் சோதிட சாத்திரம் உண்மையானது, அதைப் பார்த்துப் பலன் சொல்லும் அரை, முக்கால் சோதிடர்கள்தான் பிழைவிடுகின்றார்கள் என எண்ணுகின்றார்கள். அந்த எண்ணம் தவறானது. சோதிட சாத்திரமே பிழையான அடித்தளத்தில் எழுப்பப்பட்டிருக்கும் போலி அறிவியலாகும். எனவே அதன் அடிப்படையில் சோதிடர்கள் சரியாகக் கணித்துச் சொல்லும் பலன்களும் கட்டாயம் பிழையாகவே இருக்கும்!

இப்போது இந்திய நாளேடுகளில்  ‘இந்த ஆண்டு திருமணமா? யோசித்துச் செய்யுங்கள்’ என்ற தலைப்பில் பல செய்திகள் வெளிவந்துள்ளன. அதில் ஒன்று பின்வருமாறு,

புதுடெல்லி, யூலை 30, 2003 – இந்த ஆண்டு திருமணம் செய்துகொள்பவர்கள் நன்றாக யோசித்துச் செயல்பட வேண்டும் எனச் ஜோதிடர்கள் எச்சரித்து உள்ளனர்.

இது குறித்து தலைநகர் தில்லியில் உள்ள இலட்சுமி நாராயணர் கோவில் தலைமை அர்ச்சகர் இலட்சுமி நாராயண சாஸ்திரி கூறியுள்ளதாவது,

‘இந்த ஆண்டு, வியாழ கிரகம் திருமண வாழ்க்கையை வளம் குன்றச் செய்வதாக உள்ளது. எனவே இந்த ஆண்டு திருமணம் செய்துகொள்ளத் திட்டமிட்டு உள்ளவர்கள் அது குறித்து நன்கு யோசித்துச் செயற்பட வேண்டும். குறிப்பாக இராஜஸ்தான், பஞ்சாப், டெல்லி, அரியானா, குஜராத், உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் உள்ளவர்கள் இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்ளக்கூடாது. பொதுவாகச் சிம்மம் மற்றும் கன்னி இராசிக்காரருக்குத் திருமணம் செய்து கொள்ள இது உகந்த காலம் அல்ல. அவர்கள் ஒக்டோபர் 25 ஆம் தேதிக்குப் பிறகே திருமணம் செய்து கொள்ள வேண்டும். மற்ற இராசிக்காரர்கள்கூட வியாழ கிரகத்திற்குப் பரிகாரம் செய்த பிறகே திருமணம் செய்துகொள்ள வேண்டும்.

இத்தகைய நிலை இப்போது புதிதாக ஏற்படவில்லை. வழக்கமாக 18 ஆண்டுகளுக்கு (?) ஒருமுறை இவ்வாறு ஏற்படும். இந்தச் செய்தி, திருமணம் செய்துகொள்பவர்களுக்கு மட்டுமின்றி நகை வியாபாரிகள், சமையல்காரர்கள் ஆகியோருக்கும் அதிர்ச்சி தரக்கூடியது ஆகும்.” (தினகரன்)

இதே மாதிரி இங்கு வெளிவரும் Toronto Star (ஆகஸ்ட் 06, 2003) நாளேட்டிலும் No time to get wed-Indian astrologers delay marriages- Rifts in families as fallout hits GTA?  என்ற நீண்ட தலைப்பில் பரபரப்போடு செய்தி வெளியிட்டுள்ளது.

‘அடுத்த சில மாதங்களுக்கு கோள்கள் சரியில்லை. யாரும் இந்தக் காலத்தில் திருமணம் செய்யக்கூடாது. பஞ்சாங்கத்தின்படி குருபகவான் சிம்ம இராசியில் பிரவேசிக்கின்றார். சுக்கிரன் (வெள்ளி)  சூரியனுக்கு அண்மையில் இருப்பதோடு ஏனைய கோள்களின் சிக்கலால் இந்தக் காலம் திருமணம் செய்து கொள்வதற்குக் கெட்ட காலமாகும்.  அடுத்த ஆண்டு தை மாத நடுப் பகுதியில்தான் கோள்கள் நல்ல  இடங்களுக்கு மாறுகின்றன’ என்கின்றார் மோகன் மிஷ்ரா (Mohan Mishra) என்ற இந்திய சோதிடர்.

இவர் 10 ஆண்டுகளுக்கு முன் கனடாவில் குடியேறியவர். இவரது வாடிக்கையாளரில் அரைவாசிப் பேர் இவரது யோசனைக்கு இணங்கத் திருமணங்களை ஒத்திப் போட்டுள்ளனர்.

இதனால் குடும்பங்களில் பிளவுகள்  ஏற்பட்டுள்ளதாகவும் இந்த நாளேட்டின் செய்தி மேலும் தெரிவிக்கிறது.

ஆக அர்ச்சகர் இலட்சுமி நாராயண சாஸ்திரி மற்றும் சோதிடர் மோகன் மிஷ்ரா இருவரும் அடுத்த  சில மாதங்கள் திருமணம் செய்வதற்குக் கெட்ட காலம் என்று சொல்லப் புதுவண்ணாரப்பேட்டை, சென்னை – 81 யைச் சேர்ந்த சோதிடர் கீழ்ரால் பண்டிட் பச்சைராஜன் குரு பெயர்ச்சியால் நன்மையேயொழிய தின்மை இல்லை என்று திடமாகச் சொல்கின்றார். அவரது குருபெயர்ச்சிப் பலனைச் சுருக்கமாகக் கீழே தருகிறேன்.

‘தேவகுரு என்றழைக்கப்படுகின்ற குருபகவான் தனது உச்ச வீடான கடக இராசியிலிருந்து 23-7-2003 அன்று புதன்கிழமை இரவு 6 மணி 27 நிமிடத்துக்கு சிம்ம இராசியில் பிரவேசிக்கின்றார். சிம்ம இராசியில் மகம், பூரம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்களின் அதிபதிகளான கேது, சுக்கிரன், சூரியன் ஆகியோரின் சஞ்சாரங்களின் மீது சிம்ம இராசியில் ஆட்சி பரிபாலனம் செய்கிறார்.

இந்தக் குரு பெயர்ச்சிக்கு ஒரு மாபெரும் சிறப்பு உண்டு. அதாவது குருபகவான் சஞ்சரிக்கும் இந்த ஆண்டைத்தான் மகாமகம் ஆண்டு என்று கூறுகின்றோம். இது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவதால்தான் இதற்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு.

பொதுவாகக் குருவை நல்லவர் என்று கூறுவார்கள். நல்லவர்தான், ஞானிதான், செல்வத்தை அள்ளி வழங்குபவர்தான், புத்திரகாரன்தான், நாட்டை ஆளவைப்பவரும் அவர்தான். குருவால் ஏற்படும் கெடு பலனும் நமக்கு நன்மையானதாகவே இருக்கும். கிரகங்களில் குரு மட்டுமே வக்ர கதி அடையும் போது இருமடங்கு நன்மையைச் செய்யும் கிரகம் ஆகும். நல்லோருடன் நட்பாகப் பழக வைப்பதும் அவர்தான், புதுப் புது உத்திகளை அறிய வைப்பவரும் அவர்தான், பல கலைகளில் வல்லவராக்குவதும் வாழ்க்கையில் கௌரவத்தையும் மரியாதையையும் நமக்கு நீடிக்க வைப்பதும் இவருடைய பலமாகும். இதையெல்லாம் அவர் எப்படிச் செய்கின்றார் என்றால் தனது 5, 7, 9 ஆம் பார்வையால் செய்கின்றார்.

ஆனால், குருபகவான்  இருக்கும் இடத்திற்குச் செய்வது இல்லை என்ற உண்மையைப் பலபேர் அறிவதில்லை. தற்போது சிம்ம இராசிக்கு வந்து விட்டார்தான். ஆனால், குருவால் சிம்ம இராசிக்காரருக்கு ஒரு பயனும் கிடையாது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

இதனால்தான் பெரியோர்கள் குருபார்க்கக் கோடி நன்மை என்றார்கள். ஆமாம் குரு பார்த்தால்தான் நன்மை கிடைக்கும்.

குரு பகவான் ஒருவருடைய ஜென்ம இராசிக்கு 2, 5, 7, 9, 11 ஆம் இடங்களில் சஞ்சரிக்கும் காலங்களில் நன்மை தருவார் என்றும் 5, 7, 9 ஆம் பார்வை கிடைக்கும் இராசிக்கு நன்மை கிடைக்கும் என்றும் சொல்வார்கள்.

இந்த வருடக் குரு பெயர்ச்சியால் கடகம், மேடம், கும்பம், தனுசு, துலாம் ஆகிய 5 இராசிக்காரருக்கு மிக நல்ல பலன்கள் நடக்கும். மற்ற இராசிக்காரருக்குச் சுமாரான பலனையே எதிர்பார்க்கலாம் என்றாலும் மீன இராசிக்கு 6 ஆம் இராசியான சிம்மத்துக்கு குரு வருவதால், தனது பார்வை இல்லாமல் போனாலும் குருவின் சொந்த வீடாக மீனம் இருப்பதால் குரு தனது சொந்த வீட்டுக்கு நல்லது செய்யும் நிலைமையில் இல்லாவிட்டாலும் கெடுதல்ப் பலன்களைக் கொடுக்கமாட்டார் என்று நம்பலாம்.

பொதுவாக ஒரு கிரகம் சாதகமற்ற நிலையில் இருந்தால் கெடு பலன்கள் நடக்கும். ஆனால், குரு பகவான் சாதகமற்ற நிலையில் இருந்தாலும், கெடு பலன்கள் மென்மையாகவே இருக்கும்.

கிரகங்களில் குரு மட்டுமே வக்ர கதி அடையும் போது இருமடங்கு நன்மையைச் செய்யும் கிரகம் ஆகும்.  குரு கேந்திராதிபத்திய தோசம் பெறும் கிரகம் ஆகும். குரு 1, 4, 7, 11 ஆகிய கேந்திரங்களில் சஞ்சரிக்கும்போது மனதில் சஞ்சலத்தையும், மனக் கஷ்டங்களும் ஏற்படும். அதாவது சிம்மம், ரிஷபம், விருச்சிக இராசிக்காரருக்கு மனக் குழப்பமும் முடிவுக்கு வர முடியாத பிரச்சினைகள் வந்து நிற்கும். அந்தக் காலங்களில் குருபகவானின் கோவில்களுக்குச் சென்று வந்தால் தீய பலன்கள் குறைந்து நல்ல பலன்களை அடையலாம்.

குருபகவான் மிதுன இராசிக்கு 3 லும், மீன இராசிக்கு 6 லும், மகர இராசிக்கு 8 லும், சிம்ம இலக்கினத்திலும், கன்னி இராசிக்குப் 12 லும் சஞ்சரிக்கின்றார். இதனால் இந்த இராசிக்காரர்களுக்கு பெரிய நன்மைகளை எதிர்பார்க்க வேண்டாம். ஆனால், கெடுதல் அதிகம் இருக்காது.

குரு பகவான் கோச்சாரப்படி 1, 3, 4, 6, 8, 10, 12 ஆம் இடங்களில் வரும்போது தீமையான பலன்களும், குருபகவான் பகை, நீச்சம் பெறும்போது பணவரவு, திருமணம், புத்திர பாக்கியம், வீடு வாங்குதல், கொடுத்த பணம் வருதல் போன்றவைகள் தடைபடும்.

குருவிற்குச் சூரியன், சந்திரன், செவ்வாய் நண்பர்கள், புதனும் சுக்கிரனும் விரோதிகள். சனி, ராகு, கேது மூவரும் நட்பும் இல்லை பகையும் இல்லை என்ற முறையில் சமநிலையாளர்கள் ஆவார்கள்.

நட்சத்திர சஞ்சாரம் இந்த வகையில் இந்த ஆண்டு குரு நட்புக் கிரகமான சூரியனின் ஆட்சி வீடான சிம்மத்தில் சஞ்சரிக்கின்றார். இதனால் நல்லதைச் செய்வார். ஆனால், இடையில் நான்கு மாதங்கள் பகைக் கிரகமான சுக்கிரனின் நட்சத்திரமான பூரத்தில் சஞ்சரிக்கின்றார்.  23-07-2003 அன்று சிம்ம இராசிக்குள் கேது நட்சத்திரமான மகம் நட்சத்திரத்தில் 1 ஆம் பாதத்தில் பிரவேசிக்கும் குரு மகம் நட்சத்திரங்களின் 2, 3, 4 ஆம் பாதங்களில் 9-9-2003 வரை சஞ்சரிக்கின்றார்.

மகம் நட்சத்திராதிபதி கேது ஆகும்.  கேது குருவுக்குச் சமமானவர் என்பதால் குரு இந்த இரண்டு மாதங்களில் மன நிறைவுடன் இருந்து பார்வையில் பல நன்மைகளைச் செய்வார். ஆனால், 20-9-2003 அன்று பூரம் நட்சத்திரத்தின் சாரத்தில் பிரவேசிக்கும் குருபகவான் 18-12-2003 வரை பூரம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கின்றார்.

பூரம் நட்சத்திரபதி சுக்கிரன் ஆவார். குருவுக்கு சுக்கிரன் பகை ஆவார்.  பகைபட்ட கிரகமான சுக்கிரன் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலங்களில் குரு பகவானின் பார்வை நன்மைகளைச் சிறப்பாகச் சொல்வதற்கு இல்லை. பல பிரச்சினைகள் முடிவு பெறாமல் அப்படியே தேங்கி நிற்கும்.

அதன்பின் 5-01-2004 அன்று முதல் வக்ரகதிக்கு ஆளாகி 24-07-2004 அன்று வக்ர நிவர்த்தி ஆகின்றார். வக்ரகதிக்கு ஆளாகும் இந்த ஆறு மாதங்களில் குருபகவான் நன்மைகளை இரட்டிப்பாக அள்ளித்தர இருக்கின்றார். ஆனால், குருபகவானின் சிம்ம இராசி பெயர்ச்சி தோராயமாக ஒருவருடம் ஒரே நிலையாய் பலன் இருக்கும் என்று சொல்ல முடியாது.  அவர் சஞ்சரிக்கும் நட்சத்திர சாரத்தைப் பொறுத்துத்தான் பலன் அமையும்.                                                                                              புவியும் செவ்வாயும்

Astrologyearthmars

குரு பெயர்ச்சியை மட்டுமே கணித்துப் பலன் கூறினால் சரியான கணிப்பு ஆகாது.  இராகு, கேது, சனி, சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் போன்ற ஏனைய கிரகங்களின் கோச்சாரங்களைக் கணக்கிட்டுப் பலன் கூறினால்தான் அது சரியான, சுத்த தெளிவான பலனாக அமையும்.  அதன் அடிப்படையில் இதைக் கணித்து கொடுத்துள்ளேன்.’

இதனைப் படித்த பின்னர் உங்களுக்கு தலை சுற்றினால் அதற்கு நான் பொறுப்பில்லை. இராசி வீடுகள், நட்சத்திரங்கள், கோள்கள், அவற்றின்,

1) சரம், ஸ்தரம், உபயம்                                                                                                                                                                                                                                                                                                                                              2) பகல் இரவு பலன்கள்

3) பஞ்சவித ஸ்தானங்கள்

4) உச்ச – நீச்சம்

5) சூரிய-சந்திர ஓரைகள் (இராசிகள்)

6) திதி சூன்யம்

7) துவாதச பாவ பலன்கள்

8) மூன்றுவித பாரியாயங்கள்

9) ஜென்ம நட்சத்திரம்

10) தாரா பலன் – சந்திர பலன்

11) தோசங்கள்

12) காரகப் பலன்கள்

13) நட்பாட்சி உச்ச நீச்ச வீடுகள்

14) ஆரோகணம் அவரோகணம்

15) கிரகங்களின் பார்வைகள்

முதலியவற்றைக் கணித்தல் (computation) வரிசை ஒழுங்கு மாற்றல்  (permutation) மற்றும் ஒன்று சேர்த்தல் (combination) அடிப்படையில் பலன் சொல்லும் போது அவை ஆளுக்கு ஆள் வேறுபட்டே தீரும்.

சென்னை சோதிடர் ‘சுத்த தெளிவாக”  கணித்துக் கொடுத்திருக்கும் பலன்படி திருமணத்துக்கு எந்தத் தடைக் கற்களும் இல்லை, மேலும் ‘குரு பெயர்ச்சியை மட்டுமே கணித்துப் பலன் கூறினால் சரியான கணிப்பு ஆகாது” என்கின்றார்.

ஆனால், தில்லி கனடா சோதிடர்கள் குரு பெயர்ச்சியை மட்டுமே வைத்து  ‘இந்த ஆண்டு திருமணம் செய்துகொள்ளக்கூடாது. பொதுவாக சிம்மம் மற்றும் கன்னி இராசிக்காரருக்குத் திருமணம்  செய்து கொள்ள இது உகந்த காலம் அல்ல, அவர்கள் ஒக்டோபர் 25

ஆம் தேதிக்குப் பிறகே திருமணம் செய்து கொள்ளலாம்’  என்று பலன் சொல்கின்றார்கள்.

இதில் யார் சொல்லும் பலன் சரி? அல்லது பிழை? இரண்டும் சரியாக இருக்க முடியாது! ஆனால், இரண்டும் பிழையாக இருக்க முடியும். உண்மையும் அதுதான்.

எப்படி கோகுலாஷ்டமிக்கும் குலாம் காதருக்கும் தொடர்பு இல்லையோ அதே போல் கோள்களுக்கும் நட்சத்திரங்களுக்கும் திருமணத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை!

நல்ல காலமாக தமிழர்கள் வீட்டுத் திருமணங்கள் இந்தக் குருப் பெயர்ச்சியால் தடைபடவில்லை. தள்ளிப்போடப் படவும் இல்லை. ஓரே நாளில் (ஆகஸ்ட் 30) மூன்று திருமணங்களுக்கு எனக்கு அழைப்பு வந்திருக்கிறது. ஒரு வேளை பிழைப்புக் கெட்டுவிடும் என்ற பயத்தில் குருவையும் சுக்கிரனையும் உள்ளுர்ச் சோதிடர்கள், அருச்சகர்கள் கண்டு கொள்ளாது விட்டு விட்டார்களா? அல்லது இரத்தக் கண்ணீர் திரைப்படத்தில் நடிகவேள் இராதா சொல்வதுபோல இரண்டு கிரகங்களும் கோடை விடுமுறையில் போய்விட்டனவா? அப்படித்தான் நினைக்க வேண்டியுள்ளது!

சோதிடப் புரட்டு (21)

அய்ந்தில் ஒரு பங்கு சாதகங்கள் பிழையாகக் கணிக்கப்பட்டுள்ளன!

மீண்டும் அகத்திணையைக் களவியல் கற்பியல் எனப் பாகுபடுத்தினர். பருவம் எய்திய ஒருவனும் ஒருத்தியும் சந்தித்துத் தமக்குள் காதல கொண்டு மறைவாக ஒழுகும் வாழ்க்கை களவியல் எனப்பட்டது. இது அன்பின் மிகுதியால் அவன் அவள் என்ற வேற்றுமையின்றி இருவரும் ஒருவராய் ஒழுகும் உள்ளப் புணர்ச்சியாகும். கற்பில் நின்று வழுவாமல் அன்பினாற் இணையும் உள்ளப் புணர்ச்சியே களவொழுக்கத்தின் சிறப்பியலாகும்.

காதலனும் காதலியும் களவொழுக்கத்தின் முடிந்த பயனாக ஒருவரை ஒருவர் ஊரறியத் திருமணம் செய்து கொண்டு வாழும் வாழ்க்கையைக் கற்பியல் எனப் பெயர் இட்டனர். பொதுவாகத் திருமணங்கள் களவியலில் தொடங்கி கற்பியலில் முடிந்தன.

ஒருதலைக் காதலைக் கைக்கிளை என்றும் பொருந்தாக் காதலைப் பெருந்திணை என்றும் பெயரிட்டு ஏனைய குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலைத் திணைகளை மட்டும் அன்பின் அய்ந்திணை என்று அழைத்தனர்.

தலைவன் தன்னோடு அன்பு காட்டும் தலைவியைப் பெற்றோர் கொடுப்பப் பலர் அறிய மணந்து வாழும் மனை வாழ்க்கையே கற்பெனச் சிறப்பித்து உரைக்கப்படும். இதனைக் கரணம் என்ற சொல்லால் தொல்காப்பியர் வழங்குவார்.

கற்பு எனப்படுவது கரணமொடு புணரக்
கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியைக்
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுமே. (தொல். பொருள் – கற்பியல் 1088)
கற்பு என்று கூறப்பெறுவது, வதுவைச் சடங்குடன் பொருந்திக் கொள்வதற்குரிய மரபினுடைய தலைவன், தலைவியைக் கொடுப்பதற்குரிய மரபினையுடையோர் கொடுப்பது கொள்ளுவது ஆகும்.

கரணம்              –  சடங்கு

கிழவன் கிழத்தி –  தலைவன், தலைவி

கொடுப்போரின்றியும் மணம் உண்டு. பெற்றோரது உடன்பாடின்றி களவொழுக்கத்தில் இணைந்து தலைவனும் தலைவியும் ஊர்விட்டு ஊர் போதல் உண்டு. இது உடன்போக்கு எனப்படும். அவர்களைத் தேடிப் பிடித்து வந்து பெற்றோர்கள் ஊரறியத் திருமணம் செய்து வைத்தனர்.

கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே
புணர்ந்து உடன் போகிய காலையான.  (தொல்.பொருள் – கற்பியல் 1089)

தலைமகளது மனத்தின்கண் அமைந்த கலங்கா நிலையாகிய திண்மையே கற்பெனப்பட்டது. தொல்காப்பியர் காலத்திலும் அதற்கு முன்னரும் இத் திருமணச் சடங்கு எல்லா மக்களுக்கும் விதிக்கப் படவில்லை. சேர, சோழ, பாண்டிய அரச குடும்பத்திற்கே முதன் முதல் விதிக்கப்பட்டது. பின்னர் ஏனையோர்க்கும் அது விதிக்கப்பட்டது.

அகநானூறு எட்டுத்தொகை நூல்களில் ஒன்று, அதில் உள்ள 400 பாடல்கள் வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு புலவர்களால் பாடப்பட்டவை.

இதில் காணப்படும் இரண்டு பாடல்கள் (86, 136)  பழந்தமிழரின் திருமண முறையைச் சித்தரிக்கின்றன.

போர், கல்வி, தூது, பொருள் காரணமாக நெடுநாள்ப் பிரிந்து சென்ற தலைவன் தலைவியைக் காண ஆசையோடு விரைந்து வருகிறான். தோழி தடுக்கிறாள், தலைவி தவைன் மேல் கடுங் கோபத்தோடு இருப்பதாகக் கூறுகிறாள்.

அப்போது தலைவன் தனது திருமணச் சடங்கின் போது நடந்தேறிய காட்சிகளைத் தோழிக்கு எடுத்துக் கூறுவதுபோல்  நல்லாவூர் கிழார் என்ற  செந்தமிழ்ப் புலவர் நாடக பாணியில் அந்தப் பாடலை (86) அமைத்துள்ளார்.

“எங்கள் திருமண நாளன்று உழுந்தம் பருப்புடன் கூட்டிச் சமைத்த, பக்குவமாகக் குழைந்த பொங்கலோடு, மலைபோல் குவிந்த  பெருஞ் சோற்றினை உண்பவர்கள் கூட்டம் நிறைந்திருந்தது. வரிசையாகக் கால்களை நட்டுக் குளிர்ந்த மணப் பந்தல் முழுதும் வெளியிலிருந்து கொண்டுவந்த வெண்மணல் பரப்பப் பட்டிருந்தது.

மனையில் விளக்கு ஏற்றி மலர் மாலைகளை பந்தல் முழுதும் நெருக்கமாகத் தொங்க விட்டு மிக அழகாக அலங்கரித்துள்ளனர்.

திருமண வீட்டில் மனைவிளக்குகளை ஏற்றி  வைத்து ஒளிபெறச் செய்துள்ளனர்.

புகழினையுடைய திங்களுடன் கூடிய உரோகிணி நன்னாள் குற்றமற்றதும் வாழ்விற்கு நல்லது பயக்கும் அடர்ந்த இருள் நீங்கி, விடியல் தொடங்கும்  வனப்பு மிகு நேரத்தில் திருமண விழா தொடங்குகிறது.

தலையில் நன்நீர்க் குடத்தினைத் தாங்கியும், கையில் அகன்ற பாத்திரத்தை ஏந்திக் கொண்டும், திருமணத்தைச் செய்து வைக்கும், கலகலப்புடன் கூடிய முதிய மங்கல வாழ்வரசியர் நீர்க் குடங்களை முன்னேயும் பின்னேயும் முறைமுறையாகத் தந்திட மணமகளை நன் நீராட்டினர்.

நல்ல மக்களைப் பெற்று அடி வயிற்றில் வரி வரியாகத் தழும்புகள் கொண்ட மணிவயிறு வாய்ந்த மங்கல மகளிர் நால்வர் தூய ஆடைகளையும் அணிகளையும் அணிந்து கூடிநின்ற மணமகளிடம்  ‘உன்னை அடைந்த கணவன் விரும்பிக் கூடிக் கற்பு நெறியின்றும் தவறாமல் நல்லறங்களைச் செய்து, கணவன் விரும்பத்தக்க மனைவியாக அவனை வாழ்நாள் முழுதும் நன்கு பேணிக் காத்து வாழும் எண்ணத்தைக் கைக் கொண்டு வாழ்வாயாக!’ என்று நீருடன் குளிர்ந்த இதழ்கள் உள்ள பூக்களையும் புதிய நெல்லையும் தூவி வாழ்த்தியதால் மணமகளின் அடர்த்தியான கரிய கூந்தலில் அவை தோற்றமளிக்க, திருமணம் இனிதே நிகழ்கிறது.

அதன்பின் ஆர்வத்துடனும், ஆரவாரத்துடனும் சூழ்ந்த உறவினர் ‘இன்று முதல் நீயும் பெரிய மனைக் கிழத்தி ஆகிவிட்டாய்’ என்று கேலி பேசி மணமகளுக்கு கோடியுடுத்தி மெல்லிய அலங்காரங்களைச் செய்து, வனப்புடன் கூடிய முதலிரவு அறைக்குள் உடன் கூடிய புணர்ச்சிக்குரிய அன்றிரவே அவளை அனுப்பி வைத்தனர்.

அவ்வறைக்குள் நுழையும் மணமகள் உடுத்திய புதிய புடவைக்குள் தன்னை ஒடுக்கிக் கொண்டு, தன் இனிய கணவன் இருக்கும் இடம் நோக்கிச் செல்கின்றாள்.

அப்போது அவள் புத்தாடையில் ஒடுங்கி முகம் புதைத்துக் கிடந்தாள். அவளைத் தழுவும் விருப்பத்தோடு முகத்தை மூடிய துணியைச் சற்றே விலக்க அவள் அதற்கு அஞ்சிப் பெருமூச்சு விட்டாள். நடுங்கி ஒடுங்கினாள். “ஏன் பயந்தனை, உன் மனதில் உள்ளதை உள்ளவாறு என்னிடம் கூறு” என வினாவினேன்.

அப்போது மானைப்போல் மடமை கொண்டவளும், செருக்கினையுடைய நோக்கினையுடையவளும், குளிர்ந்த கூந்தலையுடையவளும், மாநிறத்தினை உடையவளுமாகிய மணமகள், அகம் மலர்ந்த மகிழ்ச்சியளாய் முகம் தாழ்த்தி என் காதலி மெலிந்த மடல் கொண்ட காதில் அணிந்திருந்த சிவந்த மணிகள் பதித்த அழகிய குழைகள் அசைய விரைந்து வந்து தனக்குரியவனை வணங்கினாள். ஆதலால் அவள் எக்காலத்தும் என்பால் அன்புடையவள். அதனை நீ அறியாய்” என்று தோழியிடம் தலைவன் கூறினான்.

சங்ககாலத்தில் புகைப்படக் கருவி இருந்ததில்லை. ஓளிப்படம் இருந்ததில்லை. ஆனால், ஒரு திருமணக் காட்சியைப் பாடலில் படம்பிடித்து வைத்த புலவர் நல்லாவூர் கிழாருக்கு நாம் நன்றி பல   சொல்லக் கடமைப் பட்டுள்ளோம். அவரது சொல்லோவியத்தைப் படிக்கும்போது எமது முன்னோரது நாகரிகச் சிறப்பையும் பகுத்தறிவையும் எண்ணி மனம் பூரிப்படைகிறது, உள்ளம் உவகை  கொள்கிறது, தலை நிமிர்கிறது.

புலவர் நல்லாவூர் கிழார் காதலால் பிணைக்கப்பட்ட தலைவன் – தலைவியது முதல் இரவை எவ்வளவு நாகரிகமாக, எவ்வளவு நளினமாகத் தலைவன் கூற்றாக எடுத்துச் சொல்லி இருக்கின்றார் என்பது எண்ணி எண்ணி மகிழத்தக்கது ஆகும்.

சங்ககாலத் திருமணத்தில் பொருள் புரியாத செத்த வட மொழி மந்திரங்கள் இல்லை, புரோகிதர் இல்லை, தட்சணை இல்லை, எரி ஓம்பல் இல்லை, தீவலம் இல்லை, அம்மி மிதித்தல் இல்லை, அருந்ததி காட்டல் இல்லை.

சாதகம் பார்த்துத் திருமணம் நடைபெறவில்லை என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. சாதகம் என்ற சொல்லை மொத்தம் உள்ள 5,877 சங்கப் பாடல்கள் ஒன்றிலேனும் காணமுடியவில்லை. சாதகம் பார்க்கும் மூடநம்பிக்கை ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்புக்குப் பின்னரே ஊடுருவியது.

திருமணத்தின் முன்னர் சங்க காலத் தமிழர்கள் பொருத்தம் பார்க்கவில்லையா? பார்த்தார்கள்! பத்துப் பொருத்தங்கள் பார்த்தார்கள்! அவை பகுத்தறிவுக்குப் பொருத்தமான பொருத்தங்கள்!

தொல்காப்பியர் மெய்ப்பாட்டியலில் மணமகன் மணமகள் இருவருக்கும் இடையில் இருக்க வேண்டிய அந்தப் பத்துப் பொருத்தங்கள் பற்றிக் கூறியிருக்கின்றார்.

பிறப்பே, குடிமை, ஆண்மை, ஆண்டோடு,
உருவு, நிறுத்த காம  வாயில்,
நிறையே, அருளே, உணர்வொடு, திருஎன
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே.             (தொல். பொருள்- மெய்ப்பாட்டியல் 273)

குடிப் பிறப்பு, ஒழுக்கம், ஆள்வினை, அகவை, வடிவு, காம ஒழுக்கத்துக்குரிய உள்ளக் கிளர்ச்சி, குணம், அருளுடமை, உள்ளக் குறிப்பை அறிந்தொழுகும் நுண்ணறிவு, செல்வம் ஒத்ததாக இருத்தல் நல்லது.

பிறப்பே குடிமை       –      குடிப் பிறத்தல், அதற்குத் தக்க ஒழுக்கம் குடிமை எனப்படும்

ஆண்மை                      –      ஆள்வினை, அது இருபாலார்க்கும் பொருந்தும்

உருவு                             –        வடிவழகு

நிறுத்த காமவாயில்   –       நிலை நிறுத்தப்பட்ட இன்பத்திற்கு வாயிலாகிய அன்பு

நிறை                                –       நிறைவு

யாண்டு                           –       அகவை

அருள்                              –      எவ்வுயிர்க்கும் இடுக்கண் செய்யாமை.

உணர்வு                         –       உள்ளக் குறிப்பை அறிந்தொழுகும் அறிவுடமை அல்லது

திரு                                  –       செல்வம்.  (பேராசிரியர் உரை)

அடுத்துத் தலைமகன் தலைமகள் இருவரும் விலக்க வேண்டிய பத்தும் எவையெவை என்பதனைத் தொல்காப்பியர் தொகுத்துச் சொல்கின்றார்.

நிம்பிரி கொடுமை வியப்பொடு புறமொழி
வன்சொற் பொச்சாப்பு மடிமையொடு குடிமை
இன்புறல் ஏழைமை மறப்போடு ஒப்புமை
என்றிவை இன்மை என்மனார் புலவர்.   (தொல். மரபியல்)

நிம்பிரி          –    பொறாமை

கொடுமை     –    கேடுசூழ நினைக்கும் தீவினையுள்ளம்

வியப்பு          –    தலைமகள்பால் தெய்வத்தன்மை கண்டால்போல வியந்தொழுகுதல்

புறமொழி     –    தூற்றல் அல்லது புறங் கூறுதல்

வன்சொல்    –    இரக்கமின்றி சொல்லும் சுடு சொற்கள்

பொச்சாப்பு  –    மறதி

மடிமை        –    சோம்பல்

குடிமை       –     குடிமைச் சிறப்பை உயர்வாக எண்ணி இன்புறும் உளப்போக்கு

ஏழைமை    –    அறிவின்மை

மறப்பு        –    மறதி

ஒப்புமை    –    ஒப்பிட்டு நோக்கல் (பேராசிரியர் உரை)

தொல்காப்பியர் கூறியுள்ளவாறு மணப் பொருத்தம் பார்ப்பதுவே அறிவுடமையாகும். சோதிடர் சாதகத்தைப் பார்த்துக் கூறும் பொருத்தங்கள் முழு மடமையாகும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவள் கணவனின் மூத்த சகோதரனையும், ஆயிலியத்தில் பிறந்தவள் கணவனுடைய தாயையும் மூல நட்சத்திரத்தில் பிறந்தவள் கணவனின் தகப்பனையும் விசாக நட்சத்திரத்தில் பிறந்தவள் கணவனுடைய இளைய சகோதரனையும் நாசம் செய்யும் என சோதிட சாத்திரம் சொல்கிறது.  (ஜாதக பால பீடிகை – பக்கம் 156)

கேட்டை மூத்த மைத்துனருக்கு ஆகாது, ஆயிலியம் மாமியாருக்கு ஆகாது, மூலம் மானாருக்கு ஆகாது, விசாகம் இளைய மைத்துனருக்கு ஆகாது என்பதை எப்படிக் கண்டு பிடித்தார்கள்? ஒருவரது சாதகத்தில் உள்ள நட்சத்திரங்கள் இன்னொருவரை எப்படிப் பாதிக்கின்றன? அந்த இன்னொருவரது சாதகத்தில் உள்ள கோள்கள் மற்றும் நட்சத்திரங்கள் அவற்றின் கதி என்ன?

ஆண், பெண் என்ற இரு பிறப்புக்களிலும் பெண்ணுக்கு மட்டுமே ஆகாத தோசங்களைச் சோதிடர்கள் எழுதி வைத்திருக்கின்றார்கள். இதனால் பெண்களே தோசங்களினால் அதிகம் பாதிக்கப்படுகின்றார்கள். சோதிட சாத்திரத்தை ஆண்கள் எழுதியது அதற்கொரு முக்கிய காரணியாக இருக்கலாம்.

சோதிட சாத்திரத்தில் பெண்ணுக்கு மட்டும் தோசம் தரக் கூடிய நட்சத்திரங்கள் பின்வருமாறு,

முதல்த்தர தோசம்

(1)     அசுவினி

2)      மிருகசீரிடம்

3)      ஆயில்யம்

4)      மகம்

5)      சித்திரை

6)      சுவாதி

7)      கேட்டை

8)      மூலம்

9)      அவிட்டம்

10)   சதையம்

இரண்டாம் தர தோசம்

1)      விசாகம்

2)      கிருத்திகை

3)      பூசம்

சோதிட சாத்திரம் செவ்வாய் தோசப் பெண்ணுக்குச் செவ்வாய் தோச மாப்பிள்ளையைக் கட்டி வைக்க வேண்டும் என்று சொல்கிறது.

இவ்வாறு சோதிட சாத்திரத்தைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதால் ஏனைய பொருத்தங்கள் இருந்தும் சாதகப் பொருத்தம் இல்லாததால் பல திருமணங்கள்  இடையில் நின்று போய் விடுகின்றன. இதனால் அகவை வந்தும் மணம் முடிக்க முடியாமல் ஆண், பெண் இருபாலாரும் அல்லல் படுகின்றனர்.

சோதிடப் பொருத்தம் பார்த்து, நல்லநேரம் பார்த்து, வேத மந்திரங்கள் முழங்க, அக்கினி வளர்த்து,

‘முதலில் இந்த மணப் பெண் சோமன் வசப்படுத்திக் கொண்டான், அடுத்து கந்தர்வன் உன்னை அடைந்தான், மூன்றாவது இந்திரனுக்கு மனைவியானாள், நான்காவது அக்கினி உன்னை அனுபவவித்தான். பெருமையும் புகழும் கொண்ட இந்த தேவ புருஷர்களால் அனுபவிக்கப்பட்ட உன்னை மனிதனான நான் இப்போது வரிக்கிறேன்” (‘சோம ப்பிரதமோ, விவிதே கந்தர்வோ, விவித உத்தர, த்ருத்தீயோ அக்கினிஷ்டேபதி, துரீயஸ்தே மனுஷ்யஜா’)  என்று சொல்லி, பார்வதி பரமேசுவரன் சாட்சியாக, இலக்குமி ஸ்ரீநாராயணன் சாட்சியாக, முப்பத்து முக்கோடி தேவர்கள் சாட்சியாக தாலி கட்டி, கைத்தலம் பற்றி,  ஏழடி எடுத்து வைத்து, அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, அக்கினி வலம் வந்து செய்துகொண்ட திருமணங்கள் சில தோல்வியில், மணமுறிவில் முடிந்துள்ளன.

சோதிடப் பொருத்தம் பார்க்காமல் செய்து கொண்ட பல காதல் திருமணங்கள் வெற்றி பெற்றுள்ளன.

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது திருமணங்கள் தோல்வியில் அல்லது வெற்றியில் முடிவது கோள்களில் இல்லை,  அது திருமணம் செய்து கொள்ளும் மணமக்களின் அன்பும் அறனும் உடைத்த இல்லற வாழ்க்கையில் தங்கி இருக்கிறது.

அடுத்த பட்சமாகத்தான் மணமக்களது தாய் தந்தையர், உற்றார், நண்பர்கள், பெரியோர்கள் கைகளில் தங்கி இருக்கிறது.

இதில் உள்ள வேடிக்கை என்னவென்றால் பெரும்பாலான சோதிடர்கள் அயனாம்ச வேறுபாட்டைக் கணக்கில் எடுக்காது சாதகத்தைக் கணிப்பதால் அய்ந்தில் நாலு பங்கு சாதகங்கள் பிழையான நட்சத்திரம், இராசி, கோள்களைக் காட்டுகின்றன! ஒருவரது இராசி கும்பம் என்று சாதகம் சொன்னால் பெரும்பாலும் அவர் அதற்கு முந்திய மகர இராசியில் பிறந்தவராக இருப்பார்.

இன்று (2003) இந்த அயனாம்ச வேறுபாடு 23.57 பாகை (23.57 நாள்கள்) ஆகும். இது 30 பாகை கொண்ட ஒரு இராசி  வீட்டில் நாலில் அய்ந்து பங்காகும்!

இதனால்  பிழையான பொருத்தங்கள் உள்ள சாதககாரர்கள் திருமணம் செய்துள்ளார்கள்! சரியான பொருத்தங்கள் உள்ள சாதககாரர்கள் பொருத்தம் சரியில்லை என்று சொல்லித் திருமணம் செய்து கொள்ளவிடாமல் தடுக்கப்பட்டுள்ளார்கள்! சோதிடத்தையும் சோதிடரையும் நம்புவதால் வந்த வினை இது!

About editor 1034 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist

Be the first to comment

Leave a Reply