மண்டையைப் பற்றிப் பேச சுரேஸ் பிறேமச்சந்திரனால் மட்டுமே முடியும்!

மண்டையைப் பற்றிப் பேச சுரேஸ்  பிறேமச்சந்திரனால் மட்டுமே முடியும்!

நக்கீரன்

2015 ஆம் ஆண்டு  நடந்த  பொதுத் தேர்தலில் சுரேஸ்  பிறேமச்சந்திரன் படு தோல்வி அடைந்தார். யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டணி சார்பாக போட்டியிட்ட பத்து வேட்பாளர்களில் அவர் ஏழாவது இடத்துக்குத் தள்ளப்பட்டார். இருந்தும் தான் ஒரு கட்சியின் தலைவர் என்ற முறையில் தன்னை நியமன உறுப்பினராக நியமிக்குமாறு கேட்டார்.  அதாவது 42,925 வாக்குகளைப் பெற்று ஆறாவது இடத்தில் வந்த அருந்தவபாலனை ஓரங்கட்டிவிட்டு தனக்கு நாடாளுமன்றப் உறுப்பினர்  பதவி வேண்டும் என்றார். இது எப்படிப்பட்ட  சனநாயகம்?

2013 இல் நடந்த வட மாகாணசபைத் தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில்  இபிஎல்ஆர்எவ்  கட்சியில் போட்டியிட்ட ஐங்கரநேசன் 22,268 வாக்குகள் பெற்று 8 ஆவது இடத்தில் வந்தார். ஆனால் பிறேமச்சந்திரன்   ஐங்கரநேசனைப் புறந்தள்ளி விட்டு 14,761 வாக்குகள் பெற்று 13 ஆவது இடத்தில் வந்த தனது தம்பி  சர்வேஸ்வரனுக்கு அமைச்சர் பதவி கேட்டு  மாகாண சபை முதலமைச்சருக்கு  கடிதம் எழுதினார்.  சர்வேஸ்வரனை விட ஐங்கரநேசனுக்கு  7,507 அதிக விருப்பு வாக்குகள் கிடைத்திருந்தும் அவரை  அமைச்சர் பதவிக்கு பரிந்துரைக்கவில்லை. இது எப்படிப் பட்ட  சனநாயகம்?

தேசியப்பட்டியல் மூலம்  நியமனம் தரவேண்டும் என்று கேட்டு அது மறுக்கப் பட்டபோது அந்த முடிவு வெட்கக் கேடானது என சுரேஸ் பிறேமச்சந்திரன்  புலம்பினார். எது   வெட்கக் கேடு? ஏழாவது   இடத்துக்கு தள்ளப்பட்ட பின்னரும் தனக்குத்தான் தேசியப்பட்டியல் நியமனம் வழங்கப் படவேண்டும் என்று அடம் பிடித்தது  வெட்கக்கேடு இல்லையா? இதில் மேலும் ஒரு வெட்கக் கேடு என்னவென்றால் சம்பந்தரையும் சுமந்திரனையும் ஓரம்கட்ட  பிறேமச்சந்திரன் மெத்த முயற்சி செய்தார். அதற்காக புலத்தில் இருக்கும் தனது நண்பர்கள், கட்சி ஆதரவாளர்களிடம நிதியுதவி கேட்டு மின்னஞ்சல்கள் அனுப்பினார்.  முடிவில் அவர் வெட்டிய குளியில் அவரே  வீழ்ந்தார்.

தேர்தலில் பிறேமச்சந்திரன் தோற்றதற்கு அவரது வாய்தான் காரணம். வாக்காளர்கள் அவரது தூற்றல்களை, வசைமாரிகளை  இரசிக்கவில்லை. சம்பந்தரை விளிக்கும் போது ஒருமையில் விளிப்பதையும்  மக்கள் இரசிக்கவில்லை.

2015 சனவரீயல் நடந்த சனாதிபதி தேர்தலில் ததேகூ  பொது வேட்பாளரான சிறிசேனாவை ஆதரிக்க முடிவு செய்தது. ஆனால் பிறேமச்சந்திரன் செய்தியாளர்களிடம்  என்ன சொன்னார்? நான் வேண்டா வெறுப்பாகத்தான் வாக்களித்து விட்டு வருகிறேன்என்னுடைய வாக்கை வேறொருவர் வாக்களித்துவிடக் கூடாது என்பதற்காக வாக்களித்துவிட்டு வருகிறேன் என்றார். ஒரு கட்சியின் தலைவர் பேசுகிற பேச்சா இது?

பிறேமச்சந்திரன்  எல்லாவற்றையும் எதிர்க்கிறார். மற்றவர்கள் மீது விழுந்து பிராண்டுகிறார். இபிஎல்ஆர்எவ் கட்சியில் போட்டியிட்டு வென்ற மருத்துவர் சிவமோகன் இப்போது எங்கே? பிறேமச்சந்திரனும் அவரது கட்சிக்காரரும்  கொடுத்த குடைச்சல்களைத் தாங்க முடியாமல்  அவர் தமிழ்நாட்டுக்குத் தப்பி ஓடினார். திரும்பி வந்து இபிஎல்ஆர்எவ் கட்சியில் இருந்து விலகி விட்டார். இது, இபிஎல்ஆர்எவ் கட்சியின் யோக்கியதைக்கும் நாணயத்துக்கும்  நல்ல எடுத்துக்காட்டு.

பிறேமச்சந்திரன், ததேகூ இல் இருந்து கொண்டே  வட மாகாண  முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் புதிய கட்சி தொடங்க வேண்டும் என்று பேசி வருகிறார். உண்மையில் இது நல்ல யோசனை. அதனை எவ்வளவு விரைவாகச் செய்ய முடியுமோ அவ்வளவு விரைவாக அவர் செய்ய வேண்டும். அப்போதுதான் இருவரும் அரசியல் தற்கொலை செய்து கொள்ள மெத்த வசதியாக  இருக்கும்!

தொடர்ந்தும்  பிறேமச்சந்திரன் வாய்க்கு வந்தபடி  கொஞ்சமும் அரசியல் நாகரிகம் இல்லாது அநாகரிகமாகப்  பேசிவருகிறார். இப்போது அவரது  தாக்குதல்   தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா  மீது திரும்பியுள்ளது.

கடந்த ஏப்ரில் 26  அன்று யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில்  நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் “மாவைக்கு மண்டை வறண்டு கறையான் பிடித்துவிட்டது” என்று பிறேமச்சந்திரன்  மாவை சேனாதிராசாவை கடுமையாகச் சாடியிருந்தார்.

மைத்திரி அரசிற்கும் மகிந்த அரசிற்கும் என்ன வேறுபாடு என்பதை நண்பரும் தமிழரசுக்கட்சி தலைவருமான மாவை சேனாதிராசா மக்களிற்கு தெளிவுபடுத்தவேண்டுமென பிறேமச்சந்திரன் கோரிக்கை விடுத்தார்.   அதோடு நில்லாமல்  மாவை சேனாதிராசாவிற்கு மண்டை எல்லாம் வறண்டுபோய் கறையான் பிடித்துவிட்டது. அதனால் அவர் தவறான முடிவுகளை மேற்கொள்கின்றார் என்றார்.  (http://eeladhesam.com/?p=55910)

மண்டையைப் பற்றிப் பேசுவதற்கு பிறேமச்சந்திரன் முற்றிலும் தகுதி படைத்தவர். அதனை யாரும் மறுக்க முடியாது. அவரது கனவில் கூட மண்டை ஓடுகள்தான் வரும். இந்தியப் படைகள் தமிழர் தாயகத்தில் நிலைகொண்டிருந்த போது யாழ்ப்பாணம்   அசோகா விடுதியில் இடம்பெற்ற படுகொலைகளுக்குத் தலைமை தாங்கியிருந்த சுரேஸ் பிறேமச்சந்திரன், அந்தக் காலத்தில் மேற்கொண்ட கொலைகள் காரணமாக மக்கள்  “மண்டையன்” என்ற பட்டத்தை  வழங்கியிருந்தார்கள்.  

மைத்திரி அரசிற்கும் மகிந்த அரசிற்கும் இடையே உள்ள வித்தியாசம் மக்களுக்குத் தெரியும். அது பிறேமச்சந்திரனுக்கு தெரியாவிட்டால் சம்பூர் மக்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.  

2006 ஆம் ஆண்டு சம்பூரை இராணுவம் கைப்பற்றிய போது  மக்கள் குடி பெயர்ந்து அகதி முகாம்களில் தஞ்சம் அடைந்தார்கள். சம்பூர் மக்களுக்குச் சொந்தமான  818 ஏக்கர் காணி முதலீட்டு வலயத்துக்கென வர்த்தமானி பிரசுரத்தின் மூலம் சுவீகரிக்கப்பட்டது. மேலும் ஒரு  வர்த்தமானி அறிவித்தல் மூலம் சிறிலங்கா கேற்வே இன்டஸ்றீஸ் என்ற பல்தேசிய நிறுவனத்துக்கு  பொருளாதார வர்த்தக வலய அபிவிருத்திக்கென 99 ஆண்டு கால   குத்தகைகைக்குக்  கொடுக்க முன்னாள் ஜனாதிபதி மகிந்த இரஜபக்சா  2012 ஆம் ஆண்டு வர்த்தமானி பிரகடனமொன்றை செய்திருந்தார். ஆட்சி மாற்றம் காரணமாக இராஜபக்சா விடுத்த  வர்த்தமானிப் பிரகடனங்களை புதிய சனாதிபதி மைத்திரிபால சிறிசேனா  இரத்து செய்தார். இதற்கு எதிராக கேற்வே இன்டஸ்றீஸ் உச்ச நீதிமன்ளம் சென்று தடை உத்தரவு  வாங்கியது.  இந்த தடை உத்தரவு செல்லுபடியற்றது என ஆடி மாதம் (2015) உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதைத் தொடர்ந்து சம்பூர் மக்களின் மீள் குடியேற்றம் உறுதி செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் காணிச் சொந்தக்காரர்கள் சார்பாக சம்பந்தர் மற்றும் சுமந்திரன் இருவரும் தோன்றி வாதாடினார்கள்.

சம்பூரில் கடற்கரை ஓரமாக 237 ஏக்கர் தனியார் காணியில் முகாம் அமைத்திருந்த இலங்கைக் கடற்படை அங்கிருந்து விலகிவிட்டது. அதில் முன்னர் குடியிருந்த மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளார்கள். 2006 இல் இடம் பெயரும்போது 840ஆக இருந்த குடும்பங்கள் 10  ஆண்டுகளுக்குப்  பின்பு  மீள்குடியேறிய போது 906 ஆக அதிகரித்திருந்தது.

சம்பூரில் இந்திய – இலங்கை இரண்டும் சேர்ந்து 500 ஏக்கர் நிலத்தில் 500 மில்லியன் டொலர் முதலீட்டில் நிறுவ இருந்த  அனல் மின்நிலையத் திட்டமும் மக்கள் காட்டிய எதிர்ப்புக் காரணமாக கைவிடப்பட்டது.

வலி வடக்கில் இராணுவம் கைப்பற்றிய 6,381.5 ஏக்கர் காணியில் 1993.3  ஏக்கர் காணி (30 விழுக்காடு)  விடுவிக்கப்பட்டுள்ளது. இராஜபக்ச ஆட்சியில் இந்தக் காணிகளை கையகப்படுத்த மரங்களிலும் வீடுகளிலும்  அறிவித்தல்கள் ஒட்டப்பட்டன. ஆட்சி மாறியிருக்காவிட்டால் வலி வடக்கில் மக்களுக்கு ஒரு ஏக்கர் நிலந்தானும் கிடைத்திருக்காது.

இராசபக்சா ஆட்சியில் 13ஏ சட்ட திருத்தத்தை ஒழித்துக் கட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பன்னாட்டு அரசுகளின் அழுத்தங்கள் காரணமாக அந்த முயற்சி கைவிடப்பட்டது. ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஒரு புதிய அரசியல் யாப்பு வரையப்பட்டு வருகிறது. இந்த மாதம் 20 – 23 நாள் வரை வழிகாட்டுக் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான  விவாதம் நடைபெற இருக்கிறது. அதன் பின்னர் இறுதி அறிக்கை அரசியல் நிருணயசபைக்கு சமர்ப்பிக்கப்படும்.

புதிய யாப்பு உருவாக்கத்துக்கு கடுமையான எதிர்ப்பை இராஜபக்சாவும் அவரது ஐக்கிய எதிர்க்கட்சியும் காட்டி வருகிறது. புதிய யாப்பு யோசனைகள் நாடு பிரிவதற்கு வழிகோலும் என சிங்கள மக்களிடையே தீவிர பரப்புரை செய்யப்பட்டு வருகிறது.

யார் எதைச் சொன்னாலும் இன்று சனநாயகத்துக்கான வெளி அதிகரித்துள்ளது.  அதனால்  மக்களால் மூச்சு விட முடிகிறது. தெருவில் இறங்கி போராட முடிகிறது. வெள்ளை வான் கடத்தல், கிறீஸ் பூதம், இராணுவத்தின் கெடுபிடி இப்போது இல்லை.

சிறிசேனா அரசு எல்லாவற்றையும் செய்து முடிக்கவில்லை என்பது சரியே. அவரது ஒன்றும் பொற்கால ஆட்சி  இல்லை என்பதும் சரியே. ஆனால் சிறிசேனா அரசோடு பேச முடிகிறது. குறைகளை சொல்ல முடிகிறது.  இனச் சிக்கல் இருக்கிறது அதனை ஒரு  நியாயமான அரசியல்  தீர்வு மூலம் தீர்த்து வைக்க வேண்டும் என சிறிசேனா விரும்புகிறார். 

இராஜபக்சா காலத்தில்   சிங்கள – பவுத்த  இனவாதம் உச்சத்தில் இருந்தது. போர்  முடிந்து விட்டது வி.புலிகள் தோற்கடிக்கப்பட்டு விட்டார்கள் எனவே நாட்டில் இனச் சிக்கல் இல்லை என்றார்.  சிங்கள மக்களும் தமிழ்மக்களும் ஒரு தாய் பிள்ளைகள் போல் வாழ வேண்டும் என்று மேடை தோறும் சொன்னார்.

இவையே இராஜபக்சா அரசுக்கும் சிறிசேனா அரசுக்கும் உள்ள வித்தியாசம்.

 

Be the first to comment

Leave a Reply