விக்னேஸ்வரனை சிங்கள - பவுத்த பேரினவாதிகள் "புலி" என்கிறார்கள்  ஆனால் சீமான்  "புலியின் இடத்தை பூனைகள் நிரப்ப முடியாது" என்கிறார்

நக்கீரன்

"புலியின் இடத்தை பூனைகள் நிரப்ப முடியாது: விக்னேஸ்வரனுக்கு நாம் தமிழர் கட்சி பதில்" என்ற தலைப்பிட்டு அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான்  சீற்றத்தோடு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கைக்கு சில ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து பிரசுரித்துள்ளன.

 

இந்த அறிக்கை வெளிவந்தபின் தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் சி.வி. விக்னேஸ்வரன் செய்தியாளர்கள் மாநாட்டில் இந்து நாளேட்டுக்குக் கொடுத்த நேர்காணல் தொடர்பாக செய்தியாளர் மாநாட்டில் விளக்கம் கொடுத்துள்ளார். தன்னிடம் இந்து ஏட்டின் நிருபர் பத்துக்கு மேற்பட்ட  கேள்விகள் கேட்டதாகவும் அதற்குத்தான் இறுத்த பதில்களைப்   பிரசுரிக்காமல் ஒரேயொரு  கேள்விக்கான பதிலை மட்டும் திரித்துப் பிரசுரித்துள்ளது அது தனக்கு கவலை  அளிப்பதாகக் கூறியிருக்கிறார். (http://www.lankanewsweb.com/news/5072-wigneswaren-explains-what-he-told-the-hindu)

எது எப்படி இருப்பினும் விக்னேஸ்வரன் எடுத்தாண்ட கணவன் -  மனைவி உவமை எமக்கும் பொருத்தமாகப் படவில்லை. அந்த ஒப்பீட்டை அவர் தவிர்த்திருக்கலாம். தவிர்த்திருக்க வேண்டும்.  மேலும் தமிழ்நாட்டில் உள்ள  கட்சிகள் ஈழச் சிக்கலை தங்களது அரசியல் நன்மைக்காகப் பயன்படுத்துகின்றன  என்பதில் பேரளவு  உண்மை இருந்தாலும்  அதனை வெளிப்படையாகச் சொல்லியிருக்க வேண்டியதில்லை.  அது  நல்ல இராசதந்திரமாக எமக்குப் படவில்லை.

இந்து ஏட்டில் வந்த செய்தியில் "அவர் விரைந்து மேலதிகமாக ஒன்றைச் சொன்னார். "தமிழ்நாட்டில் இருப்பவர்கள் ததேகூ  நல்கும் ஆதரவு மற்றும் அனுதாபம்  எம்மைக் கவர்ந்துள்ளது. ஆனால் "தீர்வு எமது கைகளிலேயே இருக்கிறது" (He was quick to add that the TNA was very impressed with the support and sympathy of those in Tamil Nadu, but added “the solution is really in our hands”) என்றார்.

சீமான் அவரது அறிக்கையில் விக்னேஸ்வரனது இந்தக் கருத்தை கணக்கில் எடுக்காதது கவலை அளிக்கிறது.

உண்மையைச் சொல்லப் போனால் சீமானின் நாம் தமிழர் கட்சியின் பிறப்புக்குக் காரணமே  தமிழ்நாட்டில் உள்ள இரண்டு பெரிய கட்சிகள் ஈழச் சிக்கலில் கண்ணாம்பூச்சி பிடித்து விளையாடியதுதான். "இங்குள்ள பெரிய கட்சிகளின் தலைவர்கள் ஈழச் சிக்கலில் உள்ளத் தூய்மையுடன்  போராடி இருந்தால் - முள்ளிவாய்க்கால் அழிவினைத் தடுத்து நிறுத்தியிருந்தால் - இந்தத் தம்பிக்கு  நாம் தமிழர் கட்சியை உருவாக்க வேண்டிய அவசியமே வந்திருக்காது"  என்று சீமான்  பல மேடைகளில் பேசியுள்ளார்.

சீமானின் அரசியல்  வருகைக்குப் பின்னரே தமிழகத்தில்  தமிழ்தேசியம் புத்துயிர் பெற்றுள்ளது. விடுதலைப் புலிகள் பற்றியும் தலைவர் பிரபாகரன் பற்றியும் பேசுவது பஞ்சமா பாதகம் - தேசத்துரோகம் (விதி விலக்கு வைகோ) என்ற நிலை மாறியுள்ளது. அவரின் அரசியல்  வருகைக்குப் பின்னரே புலிக்கொடியும் தலைவர் பிரபாகரனின் திருவுருவப் படமும் தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் பறக்கின்றன.  இதனை யாரும் மறுக்க முடியாது.

இப்படிப்பட்ட  ஒரு தலைகீழ் மாற்றம் தமிழீழத்திலும் விக்னேஸ்வரனது அரசியல் நுழைவுக்குப் பின் ஏற்பட்டுள்ளது. மே 18 க்குப் பின்னர் விக்னேஸ்வரன் ஒருவரே "பிரபாகரன் பயங்கரவாதி அல்ல அவர் ஒரு விடுதலைப் போராளி" என பகிரங்கமாகப் பேசி வருகிறார்.

 திரு விக்னேஸ்வரன் வல்வெட்டித்துறையில் நடந்த ததேகூ இன் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் தலைவர் பிரபாகரன் பயங்கரவாதி அல்ல அவர் ஒரு விடுதலைப் போராளி என்று பேசியிருந்தார். அவரது பேச்சு பின்வருமாறு:

'வல்வெட்டித்துறை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்த மண். அந்த மண்ணில் நின்றுகொண்டு நான் சொல்கிறேன், பிரபாகரன் பயங்கரவாதி அல்ல. அவர் ஒரு மாவீரன். இதனை நான் மட்டும் கூறவில்லை. சிறிலங்கா சனாதிபதி மகிந்த இராஜபக்ச கூட பிரபாகரன் ஒரு மாவீரன் என்பதனை ஏற்றுக்கொண்டுள்ளார். ஏனெனில் பிரபாகரன் இருந்த போது 13 பிளஸ் என்றும் அதற்கும் மேலாகவும் தமிழ் மக்களுக்கு சில அதிகாரங்களை வழங்க சிறிலங்கா சனாதிபதி முன்வந்திருந்தார்.

ஆனால் பிரபாகரன் இல்லாதபோது 13 மைனஸ் என்றும், பின்னர் 13 ஆவது திருத்தச் சட்டம் என ஒன்றுமே இல்லை என்றும் சிறிலங்கா சனாதிபதி மகிந்த இராஜபக்ச கூறத் தொடங்கிவிட்டார். பிரபாகரனை மாவீரனாக ஏற்றுக் கொண்டதால் தான் சிறிலங்கா சனாதிபதி மகிந்த இராஜபக்ச தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் சில விட்டுக் கொடுப்புக்களைச் செய்ய முன்வந்திருந்தார். ஆனால் இப்போது அதற்கு அவர் தயாரில்லை. பிரபாகரன் பயங்கரவாதி அல்ல. அவர் தமிழ் இனத்தின் விடுதலைக்காகப்  போராடிய ஒரு வீரன்.'

அண்மையில் சிங்கள ஊடகம் ஒன்று என்னைச் செவ்வி கண்டபோது, பிரபாகரன் ஒரு பயங்கரவாதி தானே என்று கேட்டார்கள். அதற்கு நான் இல்லை...இல்லை அவர் ஒரு மாவீரன். ஒவ்வொருவரையும் நாங்கள் பார்க்கும் கோணமே அவர்கள் பற்றிய மதிப்பீட்டை ஏற்படுத்துகிறது. எனது கோணத்தில் அவர் பயங்கரவாதி அல்ல.

கண்டியில் வெள்ளையரை எதிர்த்துப் போராடிய  கெப்பெட்டிபொல திசாவ (Keppetipola Dissawe) என்பவரை ஆங்கிலேயர்கள் பயங்கரவாதி என்று பிரகடனம் செய்து  மரண தண்டை வழங்கினார்கள்.  ஆனால் இப்போ
து அவரை தேசிய வீரன் என்று பிரகடனப்படுத்தி சிலை வைத்து சிங்கள மக்கள் கொண்டாடுகிறார்கள். (http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=0869b311-615a-4b57-b020-f5dd9879ccdf)

இந்த வார (2013-09-15)  சண்டே ரைம்ஸ் ஏட்டுக்கு கொடுத்த செவ்வியில் வல்வெட்டித்துறையில் பேசியதைச் சரியென்று விக்னேஸ்வரன் வாதித்தார். "இன்றைய குற்றவாளிகள் அல்லது தேடப்படும் குற்றவாளிகள் நாளை மாவீரர்களாக மாறலாம். நான் முழுதாக அகிம்சையைக் கடைப்பிடிப்பவன். தாவர உணவு உண்பவன். எனவே நான் மக்கள் சொல்வதை பிரதிபலிக்கிறேன். அவர்கள் (தமிழ்மக்கள்) பிரபாகரனைப் பயங்கரவாதியாகப் பார்க்கவில்லை.

வெள்ளையரின் பார்வையில் பயங்கரவாதியாகத் தெரிந்த  கெப்பெட்டிப்பொல  திசாவ இப்போது சிங்கள மக்களின் பார்வையில் இலங்கையின் விடுதலைக்காகப் போராடிய தேசிய வீரனாகத் தெரிகின்றான். அதேபோலத்தான் பிரபாகரனும் எனக்கு விடுதலை வீரனாகத் தெரிகின்றான் என்று பதில் கூறியிருந்தேன். இந்த செவ்வியில் நான் கூறிய விடயங்கள் பல சிங்கள ஊடகங்களில் முக்கியத்துவம் கொடுத்து பிரசுரமாகின." (http://www.sundaytimes.lk/130915/columns/showpiece-development-in-north-but-tna-victory-inevitable-62356.html)

விக்னேஸ்வரனின்  பேச்சும் செவ்வியும்  சிங்கள - பவுத்த பேரினவாதிகளின் கோபத்தைக் கிளறியுள்ளன.  அவர் கொழும்புக்குத் திரும்ப முடியாத   என இராவண பலய  என்ற  கடும்போக்கு பவுத்த பிக்குகளின் மைப்பின் பொதுச்செயலர் வண. இத்தேகண்டே சத்ததிஸ்ஸ தேரர் கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போது எச்சரித்துள்ளார். அவர் மேலும் பேசும் போது,

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை, சிறீலங்காவின் அரசியலமைப்பை மீறும் வகையில் உள்ளது. இதுநாட்டின் இறைமைக்கு அச்சுறுத்தலானது. விக்னேஸ்வரனும் அவரது குழுவினரும், வடக்கு மாகாணசபைத் தேர்தல் மூலம், தனியான நிருவாகத்தை உருவாக்க முனைகின்றனர்.

இணைப்பாட்சி  கட்டமைப்பின் கீழ் வடக்கு,கிழக்கு மாகாணங்களை இணைத்து, காணி, காவல்துறை, கல்வி, நிதி, நல்வாழ்வு போன்ற அதிகாரங்களைக் கோருகின்றனர். வெளிநாட்டில் இருந்து நேரடியான கடன்களைப் பெற முனைகின்றனர். இது அரசியலமைப்புக்கு முரணானது. வடக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு விட்டு, கொழும்புக்குத் திரும்பி வரமுடியும் என்று விக்னேஸ்வரன் கனவு கூடக் காணக் கூடாது” என்றும் அவர் எச்சரித்துள்ளார். (http://www.puthinappalakai.com/view.php?20130912109032)

அண்மையில் கிளிநொச்சியில் நடந்த தேர்தல் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய சி.வி. விக்னேஸ்வரன் முதலில் அகிம்சைப் போராட்டம் நடத்தப்பட்டு, பின்னர் ஆயுதப் போராட்டம் நடத்தப்பட்டு, அவையிரண்டும் தோல்வி கண்ட நிலையில், அடுத்துனநாயகப் போராட்டத்தில் இறங்க வேண்டிய நிலையில் உள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார்.

"போர்" என்ற சொல்லைக் கேட்டு அருண்டு போன அமைச்சர் மைத்திரிபால சிறிசேன  மெல்சிறீபுரவில் நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய போது  “விடுதலைப் புலிகளை சிறிலங்கா அரசாங்கம் தோற்கடித்துள்ள போதிலும்  வெளிநாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் பலரும் பிரிவினை மீது நம்பிக்கை வைத்து தீவிரமாகச் செயற்படுகின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபைக்கான முதன்மை வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன்,  மாகாணசபைத் தேர்தலுக்குப் பின்னர் தொடங்கப் போவதாக எச்சரித்துள்ள புதிய போர் குறித்து விளக்கமளிக்க வேண்டும்.  விக்னேஸ்வரன் குறிப்பிட்டது போன்று எந்தவொரு புதிய போர் குறித்தும் சிறிலங்கா அரசாங்கம் அறியவில்லை. அவர் எச்சரித்த புதிய போர் என்னவென்று விளக்கமளிக்க வேண்டும்” என்று அவர்  கேட்டுக் கொண்டுள்ளார்.  ( http://www.puthinappalakai.com/view.php?20130819108895)

இன்னொரு   சிறீலங்கா அமைச்சர் டிலான் பெரேரா 'பதுளையில் மேல் நீதிமன்ற நீதிபதியாக விக்னேஸ்வரன் இருந்த போது அங்கே சட்டத்தரணியாகப் பணியாற்றி இருக்கிறேன். அப்போது அவர் வழங்கிய தீர்ப்புகளை தலை சாய்த்து ஏற்றுக் கொண்டிருந்தேன். ஆனால் இப்போது அவர் பிரபாகரனை வீரன் என்று கூறுவதால், அவர் முன்னர் வழங்கிய தீர்ப்புகளையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கருதுகிறேன்' என்று கருத்து வெளியிட்டிருந்தார்.

அவருக்குப் பதிலளித்த விக்னேஸ்வரன் " நான் ஒன்றைக் கூறுகிறேன். என்னுடைய தீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டிய அவசியம் எதுவுமில்லை. பிரபாகரன் மாவீரன் என்று முதலில் ஏற்றுக்கொண்டவர் உங்களின் சனாதிபதி மகிந்த ராஜபக்சதான். எனவே நீங்கள் தான் (டிலான் பெரேரா போன்றோர்) உங்களின் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும்" எனக் கேட்டுள்ளார்.

இவ்வாறு விக்னேஸ்வரனை சிங்கள - பவுத்த பேரினவாதிகள் "புலி" என்று முத்திரை குத்துகிறார்கள்.  இராவண பலய பவுத்த பிக்குகள் விக்னேஸ்வரன் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு விட்டு, கொழும்புக்குத் திரும்பி வரமுடியும் என்று  கனவு கூடக் காணக் கூடாது என எச்சரிக்கிறார்கள்.   அமைச்சர் சிறிசேனா  மாகாணசபைத் தேர்தலுக்குப் பின்னர்  தொடங்ககப் போவதாக எச்சரித்துள்ள புதிய போர் குறித்து விளக்கமளிக்க வேண்டும்.  ஆனால் சீமான்  "புலியின் இடத்தை பூனைகள் நிரப்ப முடியாது" என்கிறார்.  இந்த முடிவு அவசரப்பட்டு, ஆத்திரப்பட்டு, உணர்ச்சிவசப்பட்டு எடுத்த முடிவு என்பது எனது கருத்தாகும்.

இப்போது சீமான் தனது அறிக்கையில் விக்னேஸ்வரனுக்கு எதிராக வீசியுள்ள குற்றச்சாட்டுக்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம். (மிகுதி பின்னர்)


புலிகளின் தலைவர் பிரபாகரனுக்குப் பதிலாக  தற்போது இன்னொரு பிரபாகரன் தோற்றம் பெற்றுள்ளார்

(2)

நக்கீரன்

ன்று தலைவர் பிரபாகரன் தென்னிலங்கை சிங்கள - பவுத்த பேரினவாதிகளால் பயங்கரவாதியாகப் பார்க்கப்பட்டார். பிரபாகரன் அவர்களுக்குச் சிம்ம சொற்பனமாக விளங்கினார்.

இன்று  திரு விக்னேஸ்வரனது பெயர் அவர்களுக்கு சிம்ம சொற்பனமாக இருக்கிறது. அவர் தென்னிலங்கை  சிங்கள - பவுத்த பேரினவாதிகளால் புலி எனப் பார்க்கப்படுகிறார். தென்னிலங்கை அரசியலில் அவரது பெயர் பேசுபொருளாக இருக்கிறது.

திரு விக்னேஸ்வரன் தனது கருத்துக்களை வெட்டொன்று துண்டிரண்டாகச் சொல்கிறார். திரு சம்பந்தர், திரு  மாவை சேனாதிராசா போன்றோர் சொல்லாததை, சொல்லத் தயங்கியதைப் பகிரங்கமாகச் சொல்கிறார். தமிழர் - சிங்களவர் உறவு  சின்னண்ணன் பெரியண்ணன்  உறவு அல்ல.  இரு இனத்தவரும்  ஓர்நிறை;  ஓர் விலை எல்லாரும் இலங்கைத் தீவின் மக்கள் என திரு விக்னேஸ்வரன்  முழங்குகிறார்.

தமிழர்கள் எண்ணிக்கையில் குறைந்தவர்கள். ஆனால் அவர்கள் ஒரு தேசிய இனம். அவர்களுக்கு என்று தனியான மொழி, கலை, பண்பாடு, வரலாறு, நிலம்,  பொதுவான வாழ்க்கை முறை  உண்டு.  இந்த யதார்த்தத்தை சிங்களம் மறுப்பதாலேயே இரு சாராருக்கும் இடையில் கடந்த  பல சகாப்பதங்களுக்கு மேலாக மோதல் ஏற்பட்டு வருகிறது.

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு ஏற்பட்ட கதியே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் விக்னேஸ்வரனுக்கும் ஏற்படும் என்று  சிறிலங்கா அதிபருக்கு நெருக்கமான ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் அஸ்வர் மிரட்டல் விட்டுள்ளார். 

அண்மையில், ஊடகத்துறை அமைச்சைக் கண்காணிக்கும் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட அஸ்வர், அனுராதபுரத்தில் ஆளும்கட்சியின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே இவ்வாறு எச்சரித்துள்ளார்.

“மறைந்த புலிகளின் தலைவர் பிரபாகரனுக்குப் பதிலாக, தற்போது இன்னொரு பிரபாகரன் தோற்றம் பெற்றுள்ளார். அந்தப் பிரபாகரன் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளரான விக்னேஸ்வரன். முப்பது ஆண்டுகளாக நடத்திய கொடிய போரின் மூலம் புலிகளால் அடைய முடியாத ஈழத்தை, வடக்கு, கிழக்கை இணைப்பதன் மூலம் அடைந்து கொள்ளும் கனவுடன் அவர் மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் பதவிக்காகக் களமிறங்கியுள்ளார்.  விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு ஏற்பட்ட துர்ப்பாக்கியமான முடிவை, விக்னேஸ்வரனும் அடைவது நிச்சயம்.

வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் விக்னேஸ்வரன் தமது பகுதிக்கு மட்டும் காவல்துறை, காணி அதிகாரங்களைக் கேட்கிறார். தமது கோரிக்கை நிறைவேறாது போனால் இந்தியாவினதும் அனைத்துலகத்தினதும் ஒத்துழைப்பை அதற்காகக் கோருவதாகவும் அவர் கூறியுள்ளார்.  இது சிறிலங்காவின் இறைமைக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்” என்றும் அவர்  கூறியுள்ளார்.

வடமாகாணத் தேர்தலில் தமிழ் வாக்காளர்கள் பெரும் எண்ணிக்கையில் அய்க்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வாக்களிக்க ஆவலாக உள்ளார்கள். இதனை மகிழ்வாகக் கூறிக் கொள்கிறேன் என்றும் அஸ்வர்   தெரிவித்ததார். (http://lankaroad.com/index.php?subaction=showfull&id=1379537532&archive=&start_from=&ucat=1&)

அஸ்வர் நீண்ட காலமாக  அய்க்கிய தேசியக் கட்சியின் நியமன உறுப்பினராக நாடாளுமன்றத்தில் கொலு வீற்றிருந்தவர். அற்ற குளத்தின்   அறுநீர்ப் பறவைபோல் அவர்  ஆளும்கட்சிக்குத்  தாவிய போது  அமைச்சராகவும் நியமிக்கப்பட்டவர். இப்போது செஞ்சோற்றுக் கடன் கழிக்க ஆளும் கட்சிக்கு மாரடித்துத் திரிகிறார்.

இந்த மாதம்   செப்தெம்பர் 10 ஆம் நாள்  கொழும்பில் சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் மாநாட்டில் பேசிய டலஸ் அழகப்பெரும தமிழ் தேசிய கூட்டமைப்பு   கடந்த 30 ஆண்டு காலப்போரில் இருந்து இன்னமும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்றார்.

“வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை, ஒரு தேர்தல் அறிக்கை அல்ல. அது பிரிவினையை இலக்காகக் கொண்ட ஒரு தந்திரோபாய ஆவணம். போர் முடிந்த பின்னர் இனங்களிடையே ஒற்றுமையை வளர்த்தெடுக்கும் முயற்சிகள் நடைபெற்று வரும் தருணத்தில், பிரிவினையை ஏற்படுத்துவதற்காக தந்திரமாக தயாரிக்கப்பட்ட ஆவணமாகவே இதனைக் கருதுகிறோம். 1977 இல் வெளியிடப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்தையும் மிஞ்சிய ஆவணமாகவே இதனை கருதுகிறோம். வட்டுக்கோட்டைத் தீர்மானமே வடக்கு இளைஞர்களை பிரிவினைவாதத்துக்குள் தள்ளியமை உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களுக்கு காரணமாக அமைந்தது. அதற்கு மேலும் வலு சேர்ப்பதாகவே இந்த ஆணவம் அமைந்துள்ளது. இது தமிழ் இளைஞர்களுக்கு நீட்டப்படும் மற்றொரு சயனைட் குப்பி” என்றும்  புலம்பியுள்ளார்.

ஒரு வாரம் கழித்து (2013-09-17) இன்னொரு  செய்தியாளர் மாநாட்டில்  டலஸ் அழகப்பெரு உரையாற்றினார். "இராணுவத்தை பயன்படுத்தி வட மாகாணத்தில் தேர்தல் பரப்புரை  மேற்கொள்வதாக சிலர் முன்வைக்கும் கருத்தால் வட மாகாண மக்கள் மத்தியில் அரசாங்கம் குறித்து சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தேர்தலில் அரச சொத்துக்கள் பயன்படுத்தப் பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறுகின்ற நிலையில், கபே அமைப்பும் அவ்வாறே கூறுகிறது. எனினும் அரசாங்கம் வடக்கில் மேற்கொண்டுள்ள அபிவிருத்தி திட்டங்களை வைத்து மக்கள் சரியான பதில் வழங்குவர்"  என்றும் அமைச்சர் கூறினார்.

அதே ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன, இதுவரையில் இடம்பெற்றுள்ள தேர்தல் வன்முறைகளில் அதிகமானவை அரசாங்க கூட்டணி கட்சிகளுக்கிடையேயானவை. தற்போதுள்ள தேர்தல் முறையின்படி ஒரு கட்சி மோதல் ஏற்படுவது எதிர்பார்க்கப்பட்டதே என கூறியுள்ள அவர், அரசாங்கம் குறித்து மக்கள் தெளிவான நிலைப்பாட்டில் இருப்பதாக குறிப்பிட்டார். (http://news.lankasri.com/show-RUmryJSbMXnpz.html)

1976 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பொருள் அடக்கத்துக்கும் இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்ப வெளியிட்டுள்ள தேர்தல் அறி்கையில்  கூறப்பட்டுள்ளதுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேற்றுமை இருக்கிறது. முன்னது இனச்சிக்கலுக்கு தமிழீழம் மட்டுமே தீர்வென்றது. பின்னது  ஒன்றுபட்ட இலங்கையில் இணைப்பாட்சி அரசியல் முறைமையின் கீழ் தீர்வு காணப்பட வேண்டும் எனக் கூறுகிறது.

    • தமிழ் மக்கள் ஒரு தனிச் சிறப்பு மிக்க தேசியமாகும் என்பதோடு சிங்கள மக்களோடும் ஏனையவர்களுடனும் சேர்ந்து இலங்கைத் தீவில் வாழ்ந்தும் வந்துள்ளனர்.

    • புவியியல் ரீதியாக பிணைக்கப்பட்டுள்ளதும் தமிழ் பேசும் மக்களைப் பெரும்பான்மையினராகக் கொண்டதுமான; வடக்கு கிழக்கு மாகாணங்களே; தமிழ் பேசும் மக்களின் வரலாற்று ரீதியான வாழ்விடமாகும்.

    • தமிழ் மக்கள் சுய நிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்களாவர்.

    • தமிழ் பேசும் முஸ்லிம் மக்களுக்கும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு முறையில், சமஷ்டி கட்டமைப்பொன்றை அடிப்படையாகக் கொண்டு இணைந்த வடக்கு கிழக்கு மாகாணங்கள் எனும் ஓர் அலகில் அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகள் நிறுவப்பட வேண்டும்.

    • அதிகார பரவலாக்கமானது காணி, சட்டம் ஒழுங்கு, சுகாதாரம், கல்வி ஆகியன உள்ளிட்ட சமூக பொருளாதார அபிவிருத்தி, வளங்கள் மற்றும் நிதி அதிகாரங்கள் ஆகியவற்றின் மீதானவையாக இருக்க வேண்டும்.

வட மாகாணத் தேர்தலில்  அய்க்கிய மக்கள் சுதந்திர முன்னணி மட்டும் போட்டி போடவில்லை. இராணுவமும் போட்டி போடுகிறது. இராணுவம்  நேரடியாக வேட்பாளர்களைத் தெரிவு செய்து  தேர்தல் களத்தில் இறக்கிவிட்டுள்ளது.

யாழ்ப்பாண  மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க அசல் அரசியல்வாதிமாதிரி பேசித் திரிகிறார்.

"தமிழீழ விடுதலைப் புலிகளின் சித்தாந்தம் இன்னமும் உயிர்ப்புடன் இருக்கிறது"  என கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் கூறியுள்ளார்.

அத்துடன், வடக்கில் இராணுவ முகாம்களை மூடுவதை விடுத்து இன்னும் அதிக இராணுவத்தினரைக் கடமையில் ஈடுபடுத்த வேண்டும் என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய இராஜபக்சேயிடம்  கேட்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"வடக்கில் இன்னும் அதிக படையினரை கடமையில் ஈடுபடுத்த வேண்டும் என்றே தோன்றுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் விக்னேஸ்வரன் தேர்தல் பரப்புரை மேடைகளில் பிரபாகரன் ஒரு பெரும் வீரன் அவரால் தான் தமிழினத்துக்கே பெருமை கிடைத்தது என்றும் அவர் எந்த இடத்தில் போராட்டத்தை விட்டாரோ அந்த இடத்தில் இருந்து தாங்கள் அதனை தொடரப் போவதாகவும் கூறியுள்ளார். புலிகளின் சித்தாந்தம் இன்னமும் உயிர்ப்புடன் இருக்கிறது. தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க ஆயுதப் போராட்டமே ஒரே வழி என்று அவர்கள் இன்னமும் நினைக்கிறார்கள் இந்த நிலைமையில் ராணுவத்தை குறைப்பதைவிடுத்து அதிக ராணுவத்தினரை அனுப்பும் படியும் புதிய முகாம்களை அமைக்கும் படியும் பாதுகாப்பு செயலாளரைக் கோருவது பற்றி ஆலோசித்து வருகின்றேன்" என ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். (http://www.pathivu.com/news/26930/57/d,article_full.aspx)

இது வீடு கொளுத்துகிற  இராசாவுக்கு கொள்ளி கொடுக்கிற மந்திரியின்  கதையை நினைவூட்டுகிறது.

இராணுவ தளபதி ஹத்துருசிங்க  விக்னேஸ்வரனையும்  கூட்டமைப்பையும் சிங்களவர்களின் எதிரிகள் எனக்  காட்ட முயற்சிக்கிறார். சிங்கள ஊடகங்களுக்கு எதையெதைச்  இவர் சொல்லித் தொலைக்கிறாரோ   தெரியவில்லை.

"பிரபாகரனால் சாதிக்க முடியாததை மேற்கொள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு முயல்கிறது. புலிகளை தோற்கடித்த அரசுக்கு கூட்டமைப்பை ஒடுக்குவது பெரியவிடயமல்ல.  தெரிவுக் குழுவுக்கு ஏன் வர வில்லையென்பதை தமிழ்கூட்டமைப்பின்  தேர்தல் அறிக்கை தெளிவுபடுத்துகிறது" என முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்திருக்கிறார். மேலும் அவர் பேசுகையில் "அரசியல் தீர்வொன்று எட்டப்படுவதை ததேகூ விரும்பவில்லை,  பிரிவினைவாதத்தை ஏற்படுத்த முயலும் ததேகூ  தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும். ஆயுதம் தூக்க வேண்டியும் வரலாமெனத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது. பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் என்ற வகையில் இது தொடர்பில் செயற்பட வேண்டி வரும் வடக்கு, கிழக்கு இணைப்பு, அதிஉயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றுதல் என புலிகளின் கருத்துக்களை ததேகூ  நிறைவேற்ற முயல்கிறது. வடமாகாண சபையின் அதிகாரத்தை எமக்கு வழங்கினால் வடக்கை மேலும் பலப்படுத்துவோம். ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காகவே வடக்கில் தேர்தல் நடத்தப்படுகிறது. யாருக்கும் இதில் வெற்றியீட்ட முடியும்."(http://www.thinakaran.lk/2013/09/18/?fn=n1309189)

பொது பசேன "முப்பது வருடங்களுக்கு முன்னர் இருந்த வட மாகாணமே எமக்கு வேண்டும். பிரிவினைவாதத்தினை நாம் தோற்றுவிக்கவும் இல்லை பிரிவினைக்கு இடமளிக்கப் போவதுமில்லை. மேலும் விக்னேஸ்வரனின் திட்டம் ஒரு போதும் பலிக்கப் போவதில்லை"எனச்  சன்னதம் ஆடுகிறது. 

இது தொடர்பாக பொது  ப சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரதேரர் கருத்துத் தெரிவிக்கையில் பிரபாகரன் வடக்கின் தீவிரவாத முன்னணியாகவும் ருத்ரகுமாரன், அன்டன் பாலசிங்கம் ஆகியோர் புலம் பெயர் தமிழர் முன்னணியாகவும் செயற்படுகின்றனர். அதே வழியில் இன்று நவநீதம் பிள்ளை  அனைத்துலக  சார்பாகவும் விக்னேஸ்வரன் பிரிவினைவாத முன்னணியாகவுமே செயற்படுகின்றனர். அன்று விடுதலைப் புலிகள் செய்ய முடியாததை இன்று நவிப்பிள்ளை, விக்னேஸ்வரன் செய்ய முயன்றாலும் அதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப்  போவதில்ல"  என ஒப்பாரி வைக்கிறார்.  (http://news.lankasri.com/show-RUmryJScMXnrz.html)

இப்படிப் சிங்கள பேரினவாதிகள் விக்னேஸ்வரனை பிரிவினைவாதி, சிங்களவரின் எதிரி, தேர்தல் பரப்புரை மேடைகளில் பிரபாகரன் ஒரு பெரும் வீரன் அவரால் தான் தமிழினத்துக்கே பெருமை கிடைத்தது, அவர் எந்த இடத்தில் போராட்டத்தை விட்டாரோ அந்த இடத்தில் இருந்து தாங்கள் அதனை தொடருகிறார் எனக் குற்றம் சாட்டுகிறார்கள்.

அது எமக்கு விளங்குகிறது. விளங்காதது இந்தச் சிங்கள-பவுத்த  பேரினவாதிகளை விட மோசமாக  தமிழர்களில் ஒரு சாராரும் விக்னேஸ்வரனை வில்லனாகச் சித்திரிக்கப் பார்க்கிறார்கள்.    காவலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் புலி உறுப்பினர்களோ அவர்களின் உறவினர்களோ தமது வழக்குகளை விக்னேஸ்வரன் விசாரிப்பதை விரும்பியதில்லையாம். என்ன காரணம்?  அவர் இரக்கமே இல்லாமல் கடும் தண்டனை விதிப்பவர் என்று  கருதப்பட்டாராம்.

ஒரு நீதிபதி,  தான் சமநிலையில் இருந்து, பின்பு தன்னிடம் வைத்த பொருள்களின் எடையை உள்ளவாறு காட்டும் துலாக்கோல் போல் அமைந்து, ஒரு பக்கமும் சாயாமல்  நீதி வழங்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தமிழ் இளைஞர்கள் என்பதால் அவர் துலாக்கோலை வளைக்க முடியாது.  அதே சமயம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஒப்புதல் வாக்கு மூலம் செல்லாது என விக்னேஸ்வரன் தீர்ப்பு வழங்கியிருந்தார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் ததேகூ இன்  முதலமைச்சர் வேட்பாளர் விக்னேஸ்வரனை ‘பூனை’ என்று  வருணித்து அறிக்கை வெளியிட்டது  எந்த விதத்திலும் பொருத்தமில்லை  என்பது பற்றி நாம்  ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம்.    (வளரும்)

 


திரு விக்னேஸ்வரனது தெரிவு தமிழீழ மக்களது தெரிவு

(3)

நக்கீரன்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்  இந்து ஏட்டில் வந்த திரு விக்னேஸ்வரன் அவர்களது திரிக்கப்பட்ட நேர்காணலை அடிப்படையாக விடுத்த அறிக்கை  அவசரப்பட்டு, ஆத்திரப்பட்டு, உணர்ச்சிவசப்பட்டு எடுத்த முடிவு என்பது எமது கருத்தாகும். இதனை ஏலவே குறிப்பிட்டுள்ளேன். அறிக்கைக்கான பதிலை, விளக்கத்தை முன்னர் கொடுத்துள்ளேன். இப்போது சீமான் தனது அறிக்கையில் திரு விக்னேஸ்வரனுக்கு எதிராக வீசியுள்ள குற்றச்சாட்டுக்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

(1) இலங்கைத் தமிழர் பிரச்சனையை தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் தங்களுடைய அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றும், அதனால் பாதிக்கப்படுவது இலங்கைத் தமிழர்களே என்றும் இலங்கை வட மாகாணத் தேர்தலில் தமிழ்த் தேச கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் சி.வி. விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

ஈழத் தமிழினத்தி...ன் அரசியல் விடுதலைப் போராட்டத்தை தொடக்க காலம் தொட்டு கொச்சைபடுத்தியும், தமிழீழ விடுதலைப் போராளிகளை பயங்கரவாதிகளாக சித்தரித்தும் வந்த ஒரு ஆங்கில நாளேட்டிற்கு அளித்துள்ள பேட்டியில் மேற்கண்டவாறு விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டிற்கும், தமிழீழ மக்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்திற்கும் உள்ள தொடர்பை தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றை அறிந்தவர்கள் எவரும் விக்னேஸ்வரன் கூறுவதை ஏற்க மாட்டார்கள். ஈழத் தமிழரின் வாழ்விற்கும், அரசியல் சம உரிமைக்கு ஒரே தீர்வு தனித் தமிழ் ஈழமே என்று தமிழ்நாடு முடிவு செய்யவில்லை. அதனைத் தீர்மானத்தவர், ஈழத் தமிழினத்தின் அரசியல் சம உரிமைக்காக சாத்வீக வழியில் போராடிய ஈழத் தந்தை செல்வா அவர்கள்தான் என்பதை விக்னேஸ்வரன் தெரி்யாதோ? ஈழத் தமிழர்களின் அரசியல் சம உரிமைப் போராட்டத்தை ஒடுக்க முதலில் சிங்கள காவல் துறையையும், பிறகு இராணுவத்தையும் ஏவிவிட்டு தமிழர்களை திட்டமிட்ட இன அழித்தலுக்கு ஆளாக்கிய இலங்கையை ஆண்டு வந்த சிங்கள பெளத்த இனவாத அரசுகளின் இனவெறிபிடித்த நடவடிக்கைகளே அங்கு ஆயுதம் தாங்கிய போராட்டத்திற்கு வித்திட்டது என்கிற வரலாறும் விக்னேஸ்வரன் அறியாதவரோ?

பதில்:  விக்னேஸ்வரனுக்கு நன்றாகத் தெரியும். அவர் சட்டம் படித்தவர். முப்பது ஆண்டுகள் நீதிபதியாக இருந்தவர். இறுதியில் உச்ச நீதிமன்ற நீதியரசராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

(2) அதனால்தான், ஏதோ தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் தமிழீழ விடுதலையை பேசுவதனால்தான் இலங்கைத் தமிழர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று கதை விடுகிறார்.

பதில்: நிச்சயமாகப் பாதிக்கப்படுகிறார்கள்.  தமிழீழம் என்ன?  இணைப்பாட்சி கேட்டாலும் அது பிரிவினை வாதம், முடிவில் அது தனித் தமிழீழத்துக்கு இட்டுச் செல்லும் என தென்னிலங்கை சிங்கள - பவுத்த பேரினவாதிகள் கூக்குரல் இடுகிறார்கள். மாகாண சபைகளுக்கு  13 ஆவது சட்ட திருத்தத்தின் கீழ் கொடுக்கப்பட்ட  காணி, காவல்துறை அதிகாரங்களை நடைமுறைப் படுத்த மகிந்த இராசபக்சே மறுக்கிறார். அந்த அதிகாரங்களை மாகாண சபையிடம் இருந்து புடுங்கப் போவதாகச் சபதம் செய்கிறார்.

தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் தமிழீழ விடுதலை பற்றிப் பேசினாலும் இந்தியாவில் உள்ள இரண்டு முக்கிய கட்சிகளான இந்தியா காங்கிரஸ் அதுபற்றிப் பேசுவதில்லை. இன்னும் சொல்லப் போனால் தனித் தமிழீழம் கிடைத்தால் தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழகத்தோடு சேர்ந்து அகண்ட தமிழகத்தை உருவாக்கி விடுவார்கள், அது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு ஆபத்து என இந்தியா கருதுகிறது.  இந்தியாவில் வி.புலிகள்  பயங்கரவாத அமைப்பு என்று கூறித் தடைசெய்யப்பட்டதற்கு இந்த அகண்ட தமிழகமும் ஒரு காரணமாகும். அய்யமிருந்தால் அந்த தடைச் சட்டத்தை படித்துப் பார்க்கவும். இதில் இன்னொரு வேடிக்கை.  வி.புலிகளைத் தடை செய்ய வேண்டும் என்பதில் கீரியும் பாம்புமாக அரசியலில் செயல்படும் திமுக வும் அதிமுகவும்  இந்தப் பொழுதுவரை வி.புலிகளை தடைசெய்வதில் ஒத்த கருத்துடையவர்களாக இருக்கிறார்கள்.  வைகோ மட்டுமே வி.புலிகளின் தடையை எதிர்த்து - அதனை நீக்குமாறு வற்புறுத்தி - நீதிமன்றத்தின் படிக்கட்டுகள் ஏறியிறங்கி வருகிறார்.

சரி போகட்டும். நாம் தமிழர் கட்சியின் தோற்றத்தக்கு ஈழ விடுதலைபற்றி  திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் பாராமுகம், இரட்டை வேடம்தானே காரணம்? அதனை சீமானே ஒரு முறைக்குப் பலமுறை மேடைகளில் சொல்லியிருக்கிறார்.  எங்களுக்கும் அந்த ஆதங்கம் இருக்கிறது. ஆனால் இராசதந்திரம் காரணமாக வெளியில் சொல்வதில்லை. எழுதுவதில்லை. விக்னேஸ்வரன் அதனை போட்டுடைத்துப் போட்டார்.  அதுதான் அவர் விட்ட பிழை. அதனை ஒத்துக்கொள்கிறோம். அதனை அவர் விரைவில் திருத்திக் கொள்வார் என எதிர்பார்க்கிறோம்.

(3) இலங்கைத் தமிழினத்தின் அரசியல் விடுதலை வரலாறு விக்னேஸ்வரனுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஏனென்றால் அவர் கொழும்புவில் சட்டப் பணியாற்றிக்கொண்டு, பிறகு நீதிபதியாகி வசதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தவர். சிங்கள அதிகார, அரசியல் குடு்ம்பங்களோடு திருமண சம்பந்தம் செய்துகொண்டு பாதுகாப்பாக வாழ்ந்து வந்தவர். எனவே, ஈழத் தமிழினத்தின் 60 ஆண்டுக்கால துயரம் விக்னேஸ்வரன் அறியாதது. அந்த துயரத்திற்குக் காரணமான சிங்கள பவுத்த இனவாத அரசியல் அவருக்கு புரிந்திருக்கவில்லை. அதனை விக்னேஸ்வரன் முழுமையாக புரிந்துகொள்ள வேண்டுமெனில், ஈழத் தந்தை செல்வா ஆற்றிய உரைகளின் தொகுப்பாக வந்துள்ள புத்தகங்களை படித்துத் தெளிய வேண்டும்.

பதில்: விக்னேஸ்வரனுக்கு அரசியல் தெரியாது, வரலாறு தெரியாதென்பது குழந்தைப் பிள்ளைத்தனமான வாதம். அவர் அரசியலில் நேரடியாக ஈடுபடவில்லையே ஒழிய அவர் அரசியல் பற்றி, தமிழினத்தின் சிக்கல் பற்றி நீதியரசராக இருந்த  காலத்தில் இருந்தே எழுதியும் பேசியும் வருகிறார். ததேகூ இன் ஆலோசகராகவும் இருந்து வந்தவர். இவற்றைப் பற்றி  சீமான்  அறிந்திருக்க நியாயமில்லை. அவர் அறிந்து வைத்திருக்கிற விக்னேஸ்வரன் இந்து ஏட்டில் படித்த விக்னேஸ்வரன் மட்டுமே!

(4) இலங்கையில் தமிழர்களுக்கும் சிங்களர்களுக்கும் இடையிலான பிரச்சனை, ஒரு குடும்பத்தின் கணவருக்கும் மனைவிக்குமான பிரச்சனை போன்றது, அதில் பக்கத்து வீட்டார் தலையிடக்கூடாது, நாங்கள் அடித்துக்கொள்வோம், பிறகு கூடிக்கொள்வோம் என்று விக்னேஸ்வரன் அந்த பேட்டியில் கூறியுள்ளார். விக்னேஸ்வரன் கூறியுள்ள இந்த எடுத்துக்காட்டை தமிழீழ மக்களிடம் கூறினால் வாயால் சிரிக்க மாட்டார்கள்!

பதில்: சிரிப்பார்கள்தான். ஆனால் அவர் இந்து செய்தியாளருக்கு சொன்னது ஒன்று வெளிவந்த செய்தி வேறொன்று. அதற்கான விளக்கத்தை செய்தியாளர் மாநாட்டில் கொடுத்திருக்கிறார். அது சரி இந்து நாளேடு ஒரு தமிழின விரோத செய்தி ஏடு. விடுதலைப் புலிகளை ஆண்டாண்டு காலமாக கொச்சைப்படுத்தி எழுதி வருகிற ஏடு.  தலைவர் பிரபாகரன் ஒரு  உளநோயாளி (psychopath) ஒரு பொல் பொத் (Pol Pot)  தமிழீழம் என்பது  ஒரு பகற்கனவு (pipe dream)  என அப்போது அதன் ஆசிரியராக இருந்த  என்.இராம் நாக்கூசாது எழுதியிருந்தார். அவர் ஆசிரியர் பதவியை விட்டு விலகிய பிறகும் இந்து  நாளேடு தொடர்ந்த தமிழீழ உணர்வாளர்களை கொச்சைப்படுத்தி வருகிறது. அப்படியான ஏட்டில்  விக்னேஸ்வரன் சொன்னதாக வெளிவந்த  செய்தியை எப்படி வேதவாக்காக சீமான் எடுத்துக் கொண்டார்?

(5) சிங்கள  பவுத்த இனவாத அரசியலின் அடிப்படையை புரியாத அல்லது இல்லாததுபோல் காட்டிக்கொள்ள விக்னேஸ்வரன் முயற்சிக்கிறார். தமிழருக்கும் சிங்களருக்கும் உள்ள பிரச்சனைதான், இதில் பக்கத்து வீட்டுக்காரன் தலையிடக்கூடாது என்று கூறியுள்ள விக்னேஸ்வரன், பிறகு இந்திய அரசின் தலையீட்டை பாராட்டுகிறார்! ஆக, ஈழத் தமிழினத்திற்காக குரல் கொடுக்கும் தமிழ்நாடு உங்களுக்கு பக்கத்து வீட்டுக்காரன் என்றால், டெல்லி உங்களுக்கு யார்? அதனை விளக்க வேண்டும்.

பதில்: இது ஒரு குழந்தைத்தனமான கேள்வி. இந்தியா இப்போதும் எப்போதும் தனித் தமிழீழம்தான் இனச் சிக்கலுக்கு நிரந்தரமான தீர்வு என்ற கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளவில்லை.  13 ஆவது சட்டதிருத்தத்தை முற்றாக - காணி, காவல்துறை அதிகாரங்களை  - நடைமுறைப் படுத்தி அதற்கு மேலாகவும் மாகாணங்களுக்கு அதிகாரப் பரவலாக்கல் செய்து இலங்கையில்  தமிழ்மக்கள் ஏனைய இனத்தவர்கள் போல்  தன்மானத்தோடும் கண்ணியத்தோடும் சமத்துவத்தோடும் வாழும் உரிமை வழங்கப்பட  வேண்டும் என்பதே இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்  அவர்களின் நிலைப்பாடாகும்.  இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இதுதான் வித்தியாசம்.

(6) தமிழருக்காக பேசும் சிங்களவர்களும் உள்ளார்கள் என்று கூறுகிறார். தமிழர்களுக்காக நியாயமாக பேசும் சிங்கள புத்திசீவிகள் அனைவரும் தமிழீழ விடுதலையே தமிழருக்கான ஒரே தீர்வு என்று கூறுகிறார்கள் என்பதை விக்னேஸ்வரனை விட நாங்கள் அதிகம் அறிந்தவர்கள்.

பதில்: அந்த சிங்கள  அறிவுப்பிழைப்பார்கள் யார் யார் என்று சொல்ல முடியுமா? ஒரு விரல் விட்டு எண்ணக் கூடிய சிங்கள அறிவுப் பிழைப்பாளர்கள் - விக்கிரம கருணரத்தின போன்றவர் -  தமிழர்களது   சுயநிருணய  உரிமையை ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் அந்தக் கோட்பாட்டின் கீழ் தமிழர்கள் பிரிந்து தனி ஈழத்தை அமைக்க  ஆதரவு இல்லை. இதுதான் யதார்த்தம்.

(7) இன்றிலிருந்து இரண்டு மாதங்களுக்கு முன் வரை யாருக்கும் தெரியாத நபர் விக்னேஸ்வரன். ஆனால், அவரை தமிழ்த் தேச கூட்டமைப்பு வட மாகாண முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கிறது என்றால், அதன் பின்னணி சதியில் சிங்கள பெளத்த இனவாத அரசும், டெல்லியும் உள்ளது என்பது வெள்ளிடை மலை. தமிழனின் அரசியலைக் கொண்டே தமிழினத்தின் விடுதலையை முடக்குவது என்கிற சீறிய சதித் திட்டத்தின் வெளிப்பாடுதானே விக்னேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளது? இந்த உண்மையெல்லாம், சிங்கள இனவாத இராணுவத்தின் கொடூரங்களால் தங்களின் கணவரையும், பிள்ளைகளையும் இழந்து தனிமரமாய் நிற்கும் ஈழத் தாய்மார்களுக்குத் தெரியும், விக்னேஸ்வரன்களுக்குத் தெரியாது.

பதில்: இந்த ஊகம் சீமானின் அதீத  கற்பனை. ததேகூ இன் தலைவர்கள் என்ன எடுப்பார் கைப்பிள்ளைகளா? போடு தடிகளா? நேற்று அரசியலுக்கு வந்தவர்களா?  சம்பந்தர் தந்தை செல்வநாயகம், அமிர்தலிங்கம் காலம் தொட்டு அரசியலில் இருக்கிறார். திம்பு பேச்சுவார்த்தை, பிரதமர் இந்திரா காந்தியோடான பேச்சு வார்ததைகளில் கலந்து கொண்டவர்களில் அவரும் ஒருவர். ஒரு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருக்கும் சீமான் இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற பாணியில் அறிக்கை விடக் கூடாது. அவரது உணர்வை மெச்சுகிறோம். ஆனால் அந்த உணர்வு அறிவு பூர்வமாகவும் இருக்க வேண்டும். சதித் திட்டம் அது இது என்று நாலாந்தர அரசியல்வாதி போல பேசக் கூடாது. சீமான் மீது நாங்கள் பெரு மதிப்பு வைத்திருக்கிறோம்.  சீமான்  கூறும் 'சதித் திட்டம்' உண்மையானால்  விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் இந்த சதித் திட்டத்தை தீட்டி நிறைவேற்றிய  சதிகாரர்கள் யார் என்பதை தெரிவிக்க முடியுமா?  நாளை நடைபெறும் தேர்தல் முடிவு வந்த பின்னர் தமிழீழ மக்கள்  முதல் அமைச்சர் பதவிக்குப் போட்டியிடும் விக்னேஸ்வரன் மீது வைத்துள்ள நம்பிக்கை, அவருக்கு மக்களிடம் உள்ள செல்வாக்கு துலாம்பரமாகத் தெரியும். அதுவரை பொறுத்திருக்கும்.

(8) பதவிக்காக தமிழினத்தின் விடுதலைப் போராடத்தை விலை பேசும் இப்படிப்பட்ட கொழும்புக் காக்காய்களுக்கு காயம் பட்டு முணங்கிக் கொண்டிருக்கும் தமிழினத்தின் வலி தெரியுமா? இனவெறி அரசியலால் சற்றும் பாதிக்கப்படாத உங்களைப் போன்றவர்களுக்கு தமிழினத்தின் விடுதலை உணர்வு சற்றும் தீண்டாதது எங்களுக்கு எந்த விதத்திலும் வியப்பளிக்கவில்லை. ஈழத் தமிழினத்தின் விடுதலைப் போராட்ட வரலாறு எண்ணிலடங்கா துரோகிகளை கண்ணுற்றுள்ளது. அந்த பட்டியலில் நீங்களும் உள்ளீர்கள் என்பது எங்களுக்கா புரியாது?

பதில்: இப்படி எழுதுவது,பேசுவது அரசியல் மேடைக்குச் சரியாக இருக்கலாம்.  திரு விக்னேஸ்வரனை துரோகிகள் பட்டியலில் போடும் உரிமை சீமானுக்கு இல்லை. அதனை தமிழீழ மக்களிடம் விட வேண்டும். நாளை நடைபெறும் வட மாகாண சபைத் தேர்தல் முடிவு சீமானை  மீளச் சி ந்திக்க வைக்கும் என்று நம்புகிறோம்.

(9) தமிழீழ மக்களின் உண்மைப் பிரதிநிதிகள் அவர்களின் விடுதலைக்காகவும், மானம் காக்கவும் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளே. தம் இனம் காக்க களம் புகுந்து உயிர் தியாகம் செய்த மாவீரர்களே ஈழத் தமிழினத்தின் வழிகாட்டிகள். ஈழத் தமிழினத்தின் துயரத்தை துடைக்க முத்துக்குமார் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் தங்கள் இன்னுயிரை தீக்கீரையாக்கியுள்ளனர். அவர்களின் தியாகமே, ஈழத் தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தோடு எம் தமிழ்நாட்டையும், அதன் அரசியலையும் இணைத்துவிட்டது. அதன் மீது கேள்வி எழுப்பும் எந்த யோக்கிதையும் விக்னேஸ்வரனுக்குக் கிடையாது. எம் இனத்தின் விடுதலைக்காக உயிர் நீத்த ஒரு மாவீரராவது இந்த விக்னேஸ்வரன் குடும்பத்தில் உள்ளரா? தமிழீழ விடுதலையின் தியாக ரூபங்களான விடுதலைப் புலிகளே எம்மக்களின் அதிகாரப்பூர்வ பிரதிநிதிகள். அவர்களின் இடத்தில் ஒருபோதும் தமிழ்த் தேச கூட்டமைப்பு வந்துவிட முடியாது. புலிகளின் இடத்தை பூனைகள் நிரப்ப முடியாது. அது நடக்கவும் நடக்காது, உலகத் தமிழினம் அதனை ஒருபோதும் அனுமதிக்காது.

பதில்: இதைப் படிக்க நன்றாகத்தான் இருக்கிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொடை கருத்தாடலுக்கு அப்பாற்பட்டது. முள்ளிவாய்க்காலில் பொதுமக்கள் செய்த தற்கொடையும் கருத்தாடலுக்கு அப்பாற்பட்டது. அது போலவே முத்துக்குமார் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்டோர் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொண்ட ஈகையும் கருத்தாடலுக்கு அப்பாற்பட்டது. இவர்கள்தான் தமிழீழ சிக்கலை இன்று அனைத்துலக மட்டத்தில் பேசு பொருளாக மாற்றியிருக்கிறார்கள். ஆனால் அமைதி வழிப் போராட்டமும் ஆயுத வழிப் போராட்டமும் தோற்ற பின் இப்போது நாம் உலகளாவிய ஒரு இராசதந்திரப் போரை நடத்திக் கொண்டிருக்கிறோம்.  அதில் நாம் வெற்றி பெற்று வருகிறோம். 2009 இல் சிறிலங்கா பயங்கரவாதத்தை ஒழித்த நாடென்று சொல்லி அய்.நா. மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானம் நிறைவேற இந்தியா பெரு முயற்சி எடுத்துக் கொண்டது. ஆனால் அதன் பின் பன்னாட்டு சமூக மட்டத்தில் தலைகீழ் மாற்றம் எற்பட்டுள்ளது.  சிறிலங்கா இன்று உலக அரங்கில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளது.  போரின் இறுதிக் கட்டத்தில் சிறிலங்கா இராணுவம் புரிந்த மனித உரிமை மீறல்கள், மானிடத்துக்கு எதிரான மீறல்கள் பற்றி ஒரு சுதந்திரமான அனைத்துலக விசாரணை  நடத்தப்பட வேண்டும் என்ற தீர்மானம் அய்.நா. மனித உரிமைப் பேரவையில் நிறைவேறியுள்ளது. அப்படியான விசாரணை வேண்டும் என்று ததேகூ  கோரிவருகிறது.

திரு விக்னேஸ்வரனது தெரிவு பற்றிய முடிவை தமிழீழ மக்களிடம் விட வேண்டும். அந்தப் பொருள்பட பிபிசி தமிழோசை கேட்ட கேள்விக்கு "நீங்கள் ஒரு முடிவுக்கு வந்த பின்னர் என்னிடம் கேள்வி கேட்கிறீர்கள். அதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. எனக்கு நிறைய வேலை இருக்கிறது" என்று சொல்லி தொலைபேசி உரையாடலை துண்டித்து விட்டீர்கள்.

தமிழீழம் என்ற குழந்தையை தமிழீழ மக்கள்தான் வயிறு சுமந்து பெறவேண்டும். தமிழகம் உட்பட பன்னாட்டு சமூகம் அதற்கு மருத்துவிச்சியாக இருந்து மருத்துவம் பார்க்க வேண்டும். 

(10) வட மாகாணத் தேர்தலில் தமிழ்த் தேச கூட்டமைப்பு வெற்றி பெறலாம், விக்னேஸ்வரன் முதலமைச்சர் ஆகலாம். ஆனால் அதுவே ஈழத் தமிழினத்தின் விடுதலை கோரிக்கையை விட்டுத் தந்துவிடுவதாக ஆகாது. நாங்கள் ஒருபோதும் சிங்களத் தலைமையையோ அல்லது சிங்கள அரசியல் கட்சிகளையோ ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்பதை வெளிப்படுத்தவே, தமிழீழ மக்கள் தமிழ்த் தேச கூட்டமைப்பிற்கு வாக்களிக்கின்றனரே தவிர, த.தே.கூ.தான் எங்களின் அரசியல் பிரதிநிதிகள் என்று சான்றளிக்க அல்ல என்பதை விக்னேஸ்வரனும், அந்த கூட்டமைப்பின் பதவிப் பித்தர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

பதில்:  அது எங்களுக்கும் தெரியும். மாகாணசபை முறைமை இனச் சிக்கலுக்குத் தீர்வாகாது என்பது  எங்களுக்குத் தெரியும். ஆனால் ஒரு சனநாயக முறைமையின் ஓரளவாவது அதிகாரப் பரவலாக்கல்  செய்யப்பட்டுள்ள மாகாண  சபையின் அதிகாரத்தை தமிழர்கள் தங்கள் வசம் வைத்திருக்க வேண்டும். அதனை எதிரியிடம் கொடுக்க முடியாது. அப்படிக் கொடுத்தால் அது அரசியல் தற்கொலைக்குச் சமமாகும். இலங்கையில் தனித் தமிழீழம் கேட்க முடியாத ஒரு சட்டச் சிக்கல் இருக்கிறது. ஆனபடியால்தான் ஒன்றுபட்ட இலங்கைக்குள்  உள்ளக சுயநிருணய அடிப்படையில் தமிழர்களது பூர்வீக  வாழ்விடத்தில்  சுயாட்சி  கேட்கிறோம்.

(11) நாங்கள் ஒருபோதும் சிங்களத் தலைமையையோ அல்லது சிங்கள அரசியல் கட்சிகளையோ ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்பதை வெளிப்படுத்தவே, தமிழீழ மக்கள் தமிழ்த் தேச கூட்டமைப்பிற்கு வாக்களிக்கின்றனரே தவிர, த.தே.கூ.தான் எங்களின் அரசியல் பிரதிநிதிகள் என்று சான்றளிக்க அல்ல என்பதை விக்னேஸ்வரனும், அந்த கூட்டமைப்பின் பதவிப் பித்தர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும.

தில்:  இப்படிச் சொல்வது அரசியல் மேடைக்கு உதவுமேயொழிய நடைமுறை அரசியலுக்கு உதவாது. சீமான் ஈழத்தமிழர்களின் அரசியல் முதிர்ச்சியை, சாணக்கியத்தை கொச்சைப்படுத்துகிறார். அவர்களது தலைவர்களை எள்ளி நகையாடுகிறார்.  அவரது உணர்வுகளை மதிக்கிற அதே வேளையில் இந்தப் பெரியண்ணன் அணுகுமுறையை மா்றிக் கொள்ள வேண்டும்.

இதை எழுதிக் கொண்டிருக்கும் போது வடமாகாண சபை தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருக்கின்றன. ததேகூ அய்ந்து  மாவட்டங்களிலும்  பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றிருக்கிறது. இதன் அடிப்படையில் ததேகூ  28 - 30 இருக்கைகள் கிடைக்கும். அதாவது மூன்றில் இரண்டு  பங்கு இருக்கைகளை ததேகூ கைப்பற்றும்.

திரு விக்னேஸ்வரனின்  தேர்வை புலம்பெயர் தமிழர்களும் தமிழீழத் தமிழர்களும் ஒரு கொடையாகவே கருதுகிறார்கள்.  அவரது  தேர்வு  பற்றி  மன்னார் மறைமாவட்ட ஆயர் வண. இராயப்பு யோசேப்பு தக்க விடை அளித்துள்ளார்.

"இந்தத் தெரிவு தமிழினத் தலைவர்கள், புத்திஜீவிகள், ஊடகவியலாளர்களின் சிந்தனை வல்லமையை காண்பிப்பதுடன் காலத்தை நுணுக்கமாக நோக்கி முடிவெடுக்கும் திறனையும் அவர்கள் கொண்டிருப்பதையும் வெளிப்படுத்தியுள்ளது.தமிழ்மக்கள் மிகப்பெரிய இன்னல்களை அனுபவித்து வரும் நிலையில் அவர்களின் விடிவிற்காக பாடுபடக்கூடிய ஒருவர் வடமாகாண முதல்வர் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளது ஆண்டவனின் தெரிவு. இந்தத் தெரிவு தமிழினத் தலைவர்கள், அறிவுப் பிழைப்பாளர்கள், ஊடகவியலாளர்களின் சிந்தனை வல்லமையைக் காண்பிப்பதுடன் காலத்தை நுணுக்கமாக நோக்கி முடிவெடுக்கும் திறனையும் அவர்கள் கொண்டிருப்பதையும் வெளிப்படுத்தியுள்ளது." (http://www.puthinappalakai.com/view.php?20130717108688)

எமது அரசியல் உரிமைகளை வென்றெடுக்கிற பயணத்தில் ததேகூ  ஒவ்வொரு அடியாக  (one step at a time) யையும் கவனமாக எடுத்து வைக்கிறது.  சில சமயம்  முன்னுக்கு  இரண்டு அடி  வைப்பதற்கு பின்னுக்கு  ஒரு அடி ("Two steps forward one step back..." - Lenin) வைக்கிறோம்.   முப்பது ஆண்டு அகிம்சைப் போராட்டம்  வெற்றி அடையவில்லை.   முப்பது ஆண்டு ஆயுதப் போராட்டமும்  வெற்றி பெறவில்லை.  இப்போது இராசதந்திரப் போராட்டம் நடக்கிறது. இதில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.  இரவு வந்தால் பகலும் வரும்.  எங்களுக்கும் காலம் வரும். அதற்கு தமிழ்நாட்டு மக்களின் ஆதரவு தேவை.  (முற்றும்)