தமிழீழத்தில் வி.புலிகளுக்கு எதிராக இந்திய - சிறிலங்கா அரசுகள் கூட்டாக மேற்கொண்ட போர் காரணமாக 1,46,000 மக்கள் கொல்லப்பட்டார்கள். கடைசிக் கட்ட போரில் 80,000 மக்கள் செல்லடிக்கும் குண்டுத் தாக்குதலுக்கும் பலியானார்கள்.

முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய மனிதப் படுகொலையைக் கண்டித்து மே 17 இயக்கம் காங்கிரஸ் கட்சிகு எதிராக தீவிர பரப்புரையை கடந்த  இரண்டு ஆண்டுகளாக நடாத்தி வருகிறது.

மே 17 இயக்கத்தின் பரப்புரை காரணமாக சென்ற ஆண்டு நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் தங்கபாலு,  மணிசங்க அய்யர்,  இளங்கோவன் ஆகியோர் தோற்கடிக்கப்பட்டார்கள்.  பா.சிதம்பரம் மயிரிழையில் தப்பினார்.  சிவகங்கைத் தொகுதியில்  சிதம்பரம் தோற்றுப் போனதாக மதியம் அறிவிக்கப்பட்டார். ஆனால் மாலை அவர் 3,354 வாக்குகளால் வென்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி போன்றே மே 17 இயக்கத் தோழர்களும் காங்கிரஸ் போட்டியிட்ட 63 தொகுதிகளிலும் எதிர்த்துப் பரப்புரை மேற்கொண்டார்கள்.

"முத்துக்குமாரை விதைப்போம் காங்கிரசை புதைப்போம்" என்ற முழக்கத்துடன் மே 17 இயக்கம் பட்டிதொட்டி எல்லாம் தீவிர பரப்புரை செய்தது. இந்தப் பரப்புரையை சமாளிக்க முடியாத காங்கிரஸ் குண்டர்கள் மே 17 இயக்கத் தோழர்கள் மீது ஆங்காங்கே தாக்குதல் நடத்தியுள்ளார்கள். 

கடந்த ஏப்ரில் 11 இல் கடையநல்லூரில் மக்களிடையே காங்கிரசின் துரோகங்களை பரப்புரை செய்துவந்த பேராசிரியரும், தமிழ் உணர்வாளருமான அய்யா அறிவரசன் அவர்கள் காங்கிரஸ் குண்டர்களால் தாக்கப்பட்டார். மற்றொரு தோழர் புருசோத்தமன் என்பவரை தாக்கி அவரிடம் இருந்த ஒலிபெருக்கி நடுரோட்டில் உடைக்கப்பட்டது. பின்னர் பொதுமக்கள் அவர்களை மீட்டெடுத்து பாதுகாப்பாக அனுப்பிவைத்தனர்.  இந்தத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக பீட்டர் அல்போன்ஸ் வேட்பாளராக நிற்கிறார்.

அதே ஏப்ரில் 11 இல் மே 17 இயக்கத்தினர்  செய்த எதிர்ப் பரப்புரையைச் சமாளிக்க முடியாத கோபத்​தில் கொந்தளித்த  தமிழக காங்கிரஸ் குண்டர்கள் 'காங்கிரசுக்கு ஏன் வாக்களிக்கக் கூடாது?’ என்று தலைப்பிட்ட புத்தகங்களை, வட சென்னைப் பகுதிகளில் வழங்கிய தோழர்கள்  மீது   கொலை வெறித் தாக்குதல் நடாத்தியுள்ளார்கள்.

 ''இறுதிக் கட்ட ஈழப் போரின்போது ஆயிரமாயிரம் ஆண்,  பெண், குழந்தைகள் என இரக்க​மற்ற சிங்களப் படை கொன்று குவித்தது. இந்தப் படுகொலை காங்கிரஸ் அரசின் உதவியுடனும் ஆசியுடனும் அரங்கேறியது. கடந்த தேர்தல்களில், அந்தக் கட்சி கூட்டணிக்கு நாம் அளித்த வாக்குகள் எல்லாமே ஈழத் தமிழனுக்கு வாய்க்கரிசி போடத்​தானே உதவியது! அப்படி ஓர் இழிநிலை இனியும் வரக் கூடாது. தமிழ்நாட்டில் ஒரு தொகுதியில்கூட காங்கிரஸ் வெல்லக் கூடாது" என்பதுதான் மே 17 இயக்கத்தின் பரப்புரை ஆக இருந்தது.  இதைப் பொறுக்க முடியாத  காங்கிரஸ் கரை வேட்டி கட்டிய கும்பல் ஒன்று திடீரென்று மே 17  இயக்கத் தோழர்களை சூழ்ந்து சரமாரியாகத் தாக்கியது.

வட இந்திய காங்கிரஸ் காலால் இட்ட வேலையை தலையால்  சேவகம் செய்வதே தமிழக காங்கிரசின் முழு நேர வேலையாக இருக்கிறது.   நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் ஆழக் குழிதோண்டி நீளப் புதைக்கப்படும் என்பது உறுதியாகி விட்டது.  அந்தப் பணியை  தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் தங்கபாலுவே கச்சிதமாகச் செய்து கொண்டிருக்கிறார்.

தமிழ் நாட்டில் காங்கிரஸ் கட்சியை வேரோடும் வேரொடு மண்ணோடும் வீழ்த்தக் கங்கணம் கட்டிக் கொண்டு களத்தில் நிற்கும் மே 17 இயக்கத் தோழர்கள் மீது காங்கிரஸ் கட்சி மேற்கொண்ட கோழைத்தனமான தாக்குதல்களைக் கடுமையாகக் கண்டிக்கிறோம். அதே நேரம் இத்தாக்குல்களைக் கண்டு கிஞ்சித்தும் அஞ்சாமல் தொடர்ந்து களப்பணி ஆற்ற வேண்டும் என மே 17 இயக்கத் தோழர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

-30-