சுனாமியும் சுவாமியும்
நக்கீரன்
(1)

ரத்தாலை விழுந்தவனை மாடேறி மிதித்தது போல இருபது ஆண்டு காலம் போரினால் அழிவுண்ட வாழ்க்கையை மீள் கட்டியெழுப்ப பகீரத முயற்சி செய்து கொண்டிருந்த தமிழீழ கடலோர தமிழ் மக்களின் வாழ்க்கையோடு விதி மீண்டும் விளையாடியுள்ளது.

மின்னாமல் முழுங்காமல், சொல்லாமல் கொள்ளாமல், கண்ணை மூடி முழிக்கு முன் வரலாறு காணாத அனர்த்தங்களையும் அவலங்களையும் உயிர் அழிவுகளையும் சுனாமி ஏற்படுத்தியுள்ளது.
ஊருக்குள் அழையா விருந்தாளியாக நுழைந்த சுனாமி சாதி மத பேதமின்றி எல்லோரையும் விழுங்கியுள்ளது. தேவாலயங்களில் திரிப்பலி பூசையில் ஈடுபட்டிருந்த கிறித்தவர்கள், மசூதியில் குரான் ஓதிக்கொண்டிருந்த இஸ்லாமியர், வழிபாடு செய்து கொண்டிருந்த இந்துக்கள், பவுத்தர்கள் எல்லோரும் பலியானார்கள்.

முன்னாளில் கடற்கோளினால் நிலம் விழுங்கப்பட்டதை சங்க இலக்கியங்கள் பதிவு செய்து வைத்துள்ளன. சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோ அடிகள் தன் காலத்துக்கு முன் ஏற்பட்ட கடற்கோளை குறிப்பிடுகிறார்.

'வடிவேல் எறிந்த வான்பகை பொறாது
பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள
வடதிசை கங்கையும் இமயமும் கொண்டு
தென்திசை ஆண்ட தென்னவன் வாழ்க!'

பஃறுளி ஆறும் அதனை அடுத்து இருந்த குமரி மலையும் கொடுங்கடல் கொண்டதாக அடிகள் குறிப்பிடுகிறார். இந்தக் கடற்கோள் 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்டிருக்க வேண்டும். சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது கி.பி. 1450 ம் ஆண்டில் ஏற்பட்ட பயங்கர கடல் கொந்தளிப்பால் தமிழகத்தின் தென்பகுதி கடலில் மூழ்கின. இப்படித் தமிழகத்தின் நிலப்பரப்பில் இருந்து துண்டிக்கப்பட்ட நிலப்பரப்பில் கச்சதீவு உட்பட 11 தீவுகள் உருவாகின. இப்படித் தோன்றிய தீவுகள் இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களுக்குச் சொந்தமாக இருந்தன.

சுனாமி கடல் கொந்தளிப்பு இதற்கு முன்பு ஏற்பட்டதில்லை. சுனாமி அலைகளின் தாக்குதல் பற்றி இப்போதுதான் முதல் முறையாக தெரியவந்துள்ளது. இதற்கு முன்பு சுனாமி அலைகள் யப்பான், அமெரிக்கா, இந்தோனேசியா ஆகிய 3 நாடுகளை மட்டும் தாக்கி இருக்கின்றன. எனவேதான் இந்த கொடூர அலைகளுக்கு "சுனாமி 'என யப்பானிய மொழியில் பெயரிடப்பட்டுள்ளது. சுனாமி என்றால் "துறைமுக அலை' என்று பொருளாம்.

சுனாமி அலைகள் கடலில் எப்படி தோன்றுகின்றன? ப+மியில் 71 விழுக்காடு நிலப்பரப்பு கடலுக்கு அடியில்தான் இருக்கிறது. அந்த 71 விழுக்காடு நிலப்பரப்பில்தான் நிறைய எரிமலைகள் உள்ளன. அவை அடிக்கடி வெடித்துச் சிதறுகின்றன. அது போல கடலுக்கு அடியில் உள்ள 71 விழுக்காடு நிலப்பரப்பில்தான் நிலநடுக்கம் அடிக்கடி இடம்பெறுகின்றன. எரிமலை மற்றும் சக்திவாய்ந்த நில நடுக்கங்கள் ஏற்படும்போது, அவற்றின் அதிர்வுகள் கடல் தண்ணீரில் எதிரொலிக்கும். சாதாரணமாக ஒரு குளத்தில் கல் வீசினாலே அந்த தண்ணீரில் அதிர்வு ஏற்பட்டு வளையம், வளையமாக அலைகள் கரைவரை போவதைப் பார்க்கலாம்.

நடுக்கடலில் நிலநடுக்கத்தால் ஏற்படும் அதிர்வு அலைகளும் இதே மாதிரித்தான் வளையமாக கிளம்பி கரையை நோக்கி பாய்ந்து வரும். இந்த சுனாமி அலைகள் வழக்கமாக கடலில் சந்திரனின் ஈர்ப்புச் சக்தியாலும் காற்று அமுக்கத்தாலும் எழும் அலைகள் போல அல்லாது அவை மிக மிக சக்தி வாய்ந்தவை.

கடந்த டிசெம்பர் நத்தார் நாளன்று சுமாத்ரா தீவின் தென்கிழக்கே 250 கி.மீ தொலைவில் ரிக்டர் அளவில் 9 புள்ளி நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் நில நடுக்கம் இரண்டு காரணங்காளால் ஏற்படுகின்றன. பூமிக்கு கீழேயுள்ள தீக் குழம்பின் மீது நாம் வாழும் தளம் அடுக்கு முறையில் ஒன்றன் மேல் ஒன்றாகவும் அருகருகாகவும் இருக்கிறது. இந்த அடுக்கில் விரிசல் ஏற்பட்டு ஒன்றில் இருந்து ஒன்று விலகும் போது நில நடுக்கம் ஏற்படுகிறது. அல்லது ஒன்றோடு ஒன்று உராயும் போதும் நில நடுக்கம் ஏற்படுகிறது. அப்போது ஏற்படும் அதிர்வுகள் கடலின் மேல்மட்டத்தில் எதிரொலிக்கும். மேலெழும் அலைகள் கரையை நோக்கிப் பாய்கின்றன.
இந்த அலைகள் கிளம்பி கரையை நோக்கிப் பாய்ந்து வரும்போது கடல்பகுதியில் அதன் தாக்கம் தெரியாது. ஆழ்கடலில் படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருப்பவர்களை கூட இந்த அலைகள் சாதாரணமாக ஒரு குலுக்கு குலுக்கி விட்டு கடந்து வந்து விடும்.

கரையை நெருங்க நெருங்க சுனாமி அலைகள் தங்கள் சுயரூபத்தை காட்டத் தொடங்குகின்றன. கரையை நெருங்க சில கிலோ மீட்டர் தூரம் இருக்கும்போது சுனாமி அலைகள் சூடுபிடித்து 50 மைல் வேகத்தில் ஓ.. ஓ.. ஓ... என்ற பேரிரைச்சலோடு காதை கிழித்துக் கொண்டு செல்லும்.

கரையை நெருங்கியதும் சுனாமி அலைகள் மதம்கொண்ட யானை போல எம்பி எழுந்து உயரத்தில் சுழலும். குறைந்த பட்சம் 30 அடி முதல் 60 அடி உயரத்துக்கு கடல் தண்ணீர் கொந்தளித்து எழும்பும்.

உயரே எழும்பி சுழலும் கடல் கொந்தளிப்பு 3 மைல் தூரம் வரை ஊருக்குள் புகுந்து விடும். அந்தச் சமயத்தில் எதிர் கொள்ளும் மனித உயிர்கள், பொருட்கள் எல்லாவற்றையும் சுனாமி அலை துவம்சம் செய்து விடும். கடற்கரையை சுனாமி அலைகள் வெறித்தனமாக துவம்சம் செய்யும்போது அதன் சக்தி அணுசக்தி வெடிப்புக்கு ஈடான விளைவுகளை கொடுக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

மேலும் சுனாமி அலைகளின் எடை பல தொன் கணக்கில் இருக்கும். எனவேதான் இந்த அலைகள் பெரிய கட்டிடங்களை, கப்பல்களை மிக இலேசாக கவிழ்த்து விடுகின்றன.

உலகில் சுனாமி அலைகள் பெரும்பாலும் பசிபிக் பெருங்கடல் பகுதியில்தான் தோன்றுகின்றன. இந்தியப் பெருங்;கடலில் சுனாமி அலைகள் இதுவரை ஏற்பட்;டதே இல்லை. சுனாமி அலைகளை கண்டு பிடிக்க பசிபில் பெருங்கடல் பகுதியில் நவீன கருவிகளை அமெரிக்கா நிறுவி உள்ளது. எனவே சுனாமி அலைகள் பசிபிக் பெருங்கடலில் தோன்றும் போதெல்லாம் அமெரிக்கா தன் செயற்கை கோள்கள் மூலம் அதை கண்டுபிடித்து விடுகிறது. சுனாமி அலைகள் கரைக்கு எப்போது வரும் என்று அமெரிக்கா துல்லியமாக ஆராய்ந்து தன் மக்களை விளிப்புப் படுத்தி வெளியேற்றி விடுகிறது.

சுனாமி அலைகளின் முதல் தாக்குதல் பற்றிய எச்சரிக்கை நமக்குத் தெரியாமலே போய் விட்டது. முதல் தாக்குதல் நடந்த பிறகே இந்திய பெருங்கடலில் தோன்றிய சுனாமி அலைகள் பற்றி உலக ஆய்வு நிறுவனங்கள் தங்கள் பார்வையை திருப்பின.

ஹாவாய் தீவின் தலைநகரான கொனலுலுவில் (Konolu)  இருக்கும் ஆய்வு மையதத்தில் டிசெம்பர் 12 - 26 நத்தார் நாளன்று காலை சுமாத்ரா தீவின் தென்கிழக்கே 250 கி.மீ தொலைவில் காலை ரிக்டர் அளவில் 9 புள்ளி நிலநடுக்கம் பதிவாகியது. அதன் விளைவாக கடல் அலைகள் 60 அடிக்கு கெம்பும் என்றும் பல ஆயிரம் மைல்கள் அது பயணிக்கும் என்பதும்; ஆய்வாளர்களுக்குத் தெரிந்து விட்டது. உடனே இலங்கை நேரத்தின்படி காலை 7.00 மணிக்கு தங்கள் இணையதளத்தில் சுனாமி பற்றிய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டது. அதாவது இலங்கையின் வட-கிழக்கு மற்றும் தென்பகுதியை சுனாமி அலைகள் தாக்குவதற்கு 2 மணித்தியாலங்கள் முன்னரே கொனலுலு ஆய்வு மையம் தனது இணைய தளத்தில் எச்சரிக்கை விடுத்தது.

ஆனால் அந்த மையம் வேறு வழிகளில் அதனை அறிவிக்கத் தவறிவிட்டது. தொலைபேசி, வானொலி, தொலைக்காட்சி மூலம் அந்த அனர்த்தத்தை வெளியிட்டிருக்கலாம். அல்லது இலங்கை, இந்தியா, பங்காளதேஷ் போன்ற நாடுகளில் உள்ள அமெரிக்க தூதுவராலயங்களுக்கு அந்தச் செய்தியை அறிவித்து கரையோரத்தில் வாழும் மக்களை அப்புறப்படுத்தச் சொல்லி இpருக்கலாம். ஆனால் இதில் எதையுமே அந்த மையம் செய்யத் தவறிவிட்டது. அதன் காரணமாக ஆயிரக்கணக்கான உயிர்கள் அநியாயமாக கடலுக்குப் பலியாகின.

அறிவியலும் தகவல் தொழில் நுட்பமும் கொடிகட்டிப் பறக்கும் இன்றைய நவீன உலகில் இப்படியொரு ஒரு தவறு ஏற்பட்டது மன்னிக்க முடியாத குற்றமாகும்.

தாய்லாந்து நாட்டுக்கு இந்தச் செய்தி கொடுக்கப்பட்டது. ஆனால் தாய்லாந்து அரசு தனது சுற்றுலாதுறைக்கு பின்னடைவு ஏற்படும் என்ற பயத்தில் அதனை மூடி மறைத்துவிட்டதாச் சொல்லப்படுகிறது.

கண்கெட்ட பின் ஞாயிறு வணக்கம் செய்வது போல இப்போதுதான் இந்தியா சுனாமியை முன்கூட்டி அறியும் கருவிகளை பல கோடி ரூபாயில் நிறுவ முயற்சி செய்கிறது.
சுனாமி கடலலைகள் உலக வரைபடத்தில் ஆசியப் பிராந்திய நாடுகளின் அமைவிலும் மாற்றத்தை ஏற்படுத்துமளவுக்கு பலம்வாய்ந்தவையாக அமைந்து விட்டன என அமெரிக்காவின் பிரபல இயற்பியல் நிலவியல் அறிவியலாளர் ஹென் ஹட் கட் தெரிவித்துள்ளார்.

இந்த பூமி நடுக்கம் சுமாத்திராவின் தென்கிழக்கு மூலையின் 25 கிலோ மீற்றர் அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதோடு அதனைச் சூழவுள்ள சிறுதீவுகள் அமைந்திருந்த நில அமைப்பை 20 மீற்றர் தூரத்திற்கு அப்பால் 66 அடி தள்ளிச் சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியாவின் வடமேல் முனையான சுமாத்திரா தீவும் 36 மீற்றர் தூரம் அதன் முன்னைய அமைவிலிருந்து தென்மேற்குத் திசைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

சுமாத்திராதீவு இவ்விதம் அமைப்பு அடிப்படையில் நகர்த்தப்பட்டிருப்பது மட்டுமன்றி அதன் முன்னைய கடல் மட்டத்தினின்றும் மேலுயர்ந்து உள்ளது.

இந்தியா மற்றும் பர்மா ஆகிய நாடுகள் முன்னரை விட அவற்றின் கடல் மட்டத்திலிருந்து தாழ்ந்திருக்கிறது.

சுமாத்ராவில் ஏற்பட்ட நிலநடுக்கம் அதை தொடர்;ந்து எழுந்த சுனாமி கடல் பேரலைகள் ப+மி தன்னைத்தானே சுற்றிச் சுழல்கிற அச்சுப்பாதை (கற்பனை கோடு) யையே குலுக்கி அசைத்து விட்டது என்கிறார்கள். பூமியின் சுற்று வட்ட பாதையில் மாற்றம் இருக்காது. ஆனால் பூமி தன்னைத்தானெ சுற்றுவதில் சிறிய மாற்றங்;கள் இருக்கக் கூடும். அதாவது பூமியின் சுழர்ற்;சி வேகம் சற்று அதிகரிக்கலாம். இதனால் ஒரு நாளின் நேரத்தில் 3 மைக்ரோ வினாடிகள் வரை குறையலாம்.

இயற்கையின் சீற்றத்தை தடுத்து நிறுத்த முடியாது. அந்தளவுக்கு அறிவியல் இன்னும் முன்னேறவில்லை. ஆனால் அதை முன்கூட்டியே அறிந்து தற்பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கும் ஆற்றல் மனிதனுக்கு இருக்கிறது.

வழக்கம் போல பழமைவாதிகளும் மதவாதிகளும் பழியை அப்பாவியான கடவுள் மீது போட்டுவிட்டார்கள்.

தமிழ்நாடு முதல்வர் செல்வி ஜெயலலிதா பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து சுனாமியால் ஏற்பட்ட அழிவுகள் 'கடவுள் சித்தம்' என்று சொல்லியிருக்கிறார். பதைக்கப் பதைக்க இரண்டு இலட்சம் மக்களை கொன்று குவித்த சுனாமி கடவுள் சித்தத்தால் ஏற்பட்டது என்பது அந்தக் கடவுளை கருணையற்ற ஒரு பாபியாக சித்தரிக்கும் முயற்சியாகும். ஜெயலலிதா சொல்வது உண்மை என்றால் அவர் குறிப்பிடும் கடவுள் கடவுளாகவே இருக்க முடியாது!

திரைப்பட நடிகர் ரஜனிகாந்த் 'உலகில் பாபிகள் அதிகரித்ததால் இந்த அனர்த்தம் ஏற்பட்டது' என்று தத்துவம் பேசியுள்ளார். அவரை மன்னிக்கலாம். அந்தப் பாபிகளில் அவரும் ஒருவரா இல்லையா என்பதை அவர் சொல்லவில்லை.

சங்கர மடத்தை சேர்ந்த காவி ஒன்று ' மடத்துக்கு களங்கம் கற்பித்தைப் பொறுக்காத ஆண்டவன் இந்த அனர்த்தத்தை' ஏற்படுத்தி மக்களைத் தண்டித்துள்ளான்' எனப் பேசியிருக்கிறது. சங்கராச்சாரியாரை தீபாவளி நாளன்று கைது செய்தது ஜெயலலிதா. அவரல்லவா கடவுளின் தண்டனைக்கு ஆளாகி இருக்க வேண்டும்? மாறாக ஒன்றும் அறியாத அப்பாவி மக்கள் ஏன் தண்டிக்கப்பட வேண்டும்?

இப்படி சுனாமி விளைவித்த அழிவுக்கு ஆளாள் மனம் போன போக்கில் காரணம் கற்பிக்கிறார்கள்.

சிறையில் வாடும் ஜெயேந்திரர் 'சின்ன பெரியவாள் சிறைக்கு வந்து விட்டால் சந்திரமௌலீஸ்வரர் பூசை நின்று போய்விடும். நியமப்படி அது நடக்காமல் போனால், இப்போ சந்தித்திருப்பதைவிட மிகப் பெரிய இயற்கை அழிவை நம் தேசம் சந்திக்க நேரிடும்' என்கிறார். சந்திரமௌலீஸ்வரர் பூசை நாளும் செய்த பலனாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஒருவர் இப்படி மற்றவர்களைப் பயமுறுத்துவது நல்ல நகைச்சுவையாக இருக்கிறது!

'திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் நடக்கிற மிகப்பெரிய திருவிழா, கார்த்திக தீபப் பெருவிழா. மலையில் தீபத்தை ஏத்துவது மீனவ இன மக்கள்தான். இவங்கள் 'பர்வத ராஜகுல மரபினர்' என்னு சொல்றாங்க. சில சமயம், கார்த்திக மாசத்தில் இரண்டு கிருத்திகை வருமாம். அதில் இரண்டாவது கிருத்திகையில்தான் நேரங்காலம் பார்த்து தீபம் ஏத்துவாங்களாம். இந்த ஆண்டு அப்படி ஒரே மாசத்தில் இரண்டு கிருத்திகை வந்ததை முன்கூட்டியே கவனிக்காமல் முதல் கிருத்திகையில் தீபத்தை ஏத்தினதால்தான் சுனாமி பயங்கரம் நடந்து மீனவர்கள் வாழ்க்கையை சூறையாடிடுச்சு' என்று திருவண்ணாமலை பக்தர்கள் புலம்பறாங்களாம்!

ஆக இவர்கள் கற்பனை பண்ணுகிற கடவுள் 'அப்பு' போல ஒரு பெரிய தாதாவாக இருப்பார் போல் தெரிகிறது!

முடிவாக நிலநடுக்கும், எரிமலை, சுனாமி போன்ற இயற்கை நிகழ்வுகளை மனிதனால் தடுக்க முடியாது. ஆனால் அறிவியலின் துணையோடு அவற்றை முன்கூட்டியே அறிந்து தற்பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் அதன் தாக்கத்தை குறைக்கலாம். உயிரழிவுகளைப் பெருமளவு தவிர்க்கலாம்.

மதவாதிகள் நம்புவது போல் சுனாமிக்கும் சுவாமிக்கும் துளிகூட தொடர்பில்லை. பூசை செய்வதாலோ, யாகம் வளர்ப்பதாலோ, ஜெபம் செய்வதாலோ, நேர்த்தி செய்வதாலோ எந்தப் பயனும் இல்லை. புத்தியைப் பயன்படுத்தினால் மட்டுமே பயன் உண்டு.

 சுனாமியும் சுவாமியும்
கடவுள் உண்டு? இல்லை!

(2)

அண்மையில் இந்திய சனாதிபதி அப்துல் கலாமைப் பார்த்து ஒரு பள்ளி மாணவன் கேட்டான் 'நீங்கள் கடவுளை நம்புகிறீர்களா?' 'ஆம்' என்று பதில் அளித்தார் கலாம். சனாதிபதி கலாம் ஒரு ஏவுகணை அறிவியலாளர். ஆனால் சமய அடிப்படையில் அவர் ஒரு முஸ்லிம். கடவுளை மறுக்கும் முஸ்லிமை பார்க்க முடியாது. காரணம் கடவுளை மறுப்பவர்கள் முஸ்லிமாக இருக்க முடியாது!

ஆனால் நத்தாரை அடுத்து வந்த சுனாமி கடற்கோள் அரும்புகள், மொட்டுக்கள், பூக்கள், பிஞ்சுகள், காய்கள், கனிகள் மற்றும் இன, மத பேதம் இன்றி எல்லோரையும் பலியெடுத்தது.
இலங்கையில் மட்டும் வீடுவாசல் இழந்து ஏதிலிகளாக நிற்பவர்கள் தொகை 4,41,410. இடம் பெயர்ந்தோரில் 1,86,000 உறவினர் நண்பர்கள் வீடுகளிலும் 2,50,000. நலன்புரி நிலையங்களிலும் தங்கியுள்ளனர். இதுவரை 38,195 பேர் இறந்துள்ளார்கள். காணாமல் போனோர் தொகை 6,034.
கடற்கோள் தாக்கிய நாடுகளில் 2,25,000 மக்கள் இறந்திருக்கிறார்கள். பல கோடி பெறுமதியான வீடு வாசல்கள், தோட்டம் துரவுகள், வள்ளங்கள் வலைகள் அழிந்துள்ளன.

இறந்தவர்களில் பெரும்பாலோர் கடலை நம்பி வாழ்ந்தவர்கள். ஏழைகளிலும் ஏழைகள். அன்றாடும் உழைத்துச் சாப்பிடும் அன்னக்காவடிகள். அன்றாடக் காய்ச்சிகள்.

இறந்தவர்களில் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள். கடல் கொந்தளித்து ஊருக்குள் பேரிரைச்சலோடு நுளைந்தபோது ஓடித் தப்ப முடியாமல் அகப்பட்டுக் கொண்டவர்கள். தாய் தந்தையரின் கைகளில் இருந்து பறிக்கப்பட்டவர்கள்.

சுனாமி கடற்கோள் உயிர்களையும் உடைமைகளையும் மட்டும் வாரிக் கொண்டு போகவில்லை. கடவுள் பற்றிய பல்வேறு நம்பிக்கைகளையும் கோட்பாடுகளையும் வாரிக் கொண்டு போயிருக்கிறது!

கடவுள் விரும்புகிறாரோ இல்லையோ இந்தக் கடற்கோள் அழிவுகள் எல்லாம் வல்ல, எல்லாம் தெரிந்த, எங்கும் நிறைந்த கருணையுள்ள ஒரு கடவுள் ஒருவர் இருக்கிறாரா? என்ற விவாதத்தை சூடு பிடிக்க வைத்துள்ளது.

சுனாமி கடற்கோள் பற்றி தொலைக்காட்சியில் மதத் தலைவர்கள் தங்கள் தங்கள் சமய சாத்திரங்களின் (Theology) அடிப்படையில் விளக்கம் அளித்து வருகிறார்கள். செய்தித்தாள்கள், சஞ்சிகைகள் வெளியிடும் கட்டுரைகள் 'சுனாமியும் சுவாமியும்' பற்றி தீவிர விவாதத்தை தொடக்கி வைத்துள்ளன.

வௌ;வேறு சமயத்தைச் சார்ந்தவர்கள் இந்தச் சுனாமிக்கு என்ன அர்த்தம் எனக் கேட்டு தங்கள் கடவுளிடம் முறையிடுகிறார்கள். அவர்களது கடவுள் நம்பிக்கை பலத்த சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. தீவிர கடவுள் பக்தர்கள் கூட சுனாமி அனர்த்தம் விடுத்துள்ள அறைகூவல் பற்றி கையைப் பிசைகிறார்கள்.

சுனாமி அனர்த்தத்தில் இருந்து தப்பியவர்கள் தாங்கள் எந்தக் கடவுளை பக்தியோடு வழிபாட்டார்களோ அதே கடவுள் தங்களை கைவிட்டு விட்டதாக குமுறுகிறார்கள். தங்கள் வாழ்வுக்கு ஆதாரமாக இருந்த கடல் தங்களது உறவுகளை விழுங்கிப் பசியாறிவிட்டது என அழுகிறார்கள்.

சுனாமி அனர்த்தத்தில் கடவுளின் கைகளைப் பாHக்கிறோமா? எட்டாத வானத்தில் கடவுள் இருக்கிறாரா? சுனாமி கடற்கோள் கோபம் கொண்ட கடவுளின் செயலா? இப்படியான கொடூரம் அப்பாவி மக்களுக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு ஏன் ஏற்பட வேண்டும்.? இந்த அழிவினால் ஏதாவது நன்மை ஏற்பட்டதா?

ஆத்திகர்களுக்கும் நாத்திகர்களுக்கும் எப்போதும் ஒரு பனிப் போர் இருந்து வருகிறது. எல்லாம் வல்ல கடவுள் என்ற கருதுகோளுக்கு அளவை அடிப்படையில் (தர்க்க ரீதியாக) ஆத்திகர்களால் விளக்கம் கொடுக்க முடியாது.

பொதுவாக கடவுள், விதி என்பன மனிதன் தன்னால் விளக்க முடியாததற்கு விளக்கம் கொடுக்கும் (explain the unexplainable)  எத்தனமே.

இந்த இடத்தில் ஆத்திகம் நாத்திகம் இடையில் நடக்கும் வாதம் பற்றி அதாவது கடவுள் உண்டா? இல்லையா? என்ற கேள்விக்கு புகழ்பெற்ற கிரேக்க தத்துவவாதியான எபிகியூரஸ் (Epicurus- 341-271 BCE) ஒரு புதிர் மூலம் விடை சொல்லி இருக்கிறார்.

எபிகியூரஸ் பொருள்முதல்வாத (போகப் பொருள்கள் மட்டுமே உலகம்) அடிப்படையில் இயற்கை எண்ணம் (metaphysics) அறிவியல் அடிப்படையில் அல்லாது அனுபவ வாயிலாக, அறிவின் தோற்றம் எல்லை (empiricist epistemology)  கிரேக்கத்தின் ஒழுக்கவியல் (elthics)  ஆகியவற்றை நன்கு ஆய்வு செய்தவர்.

எபிகியூரஸ் உலகம் அணுக்களால் ஆனது என்றும் எல்லா இயற்கை நிகழ்வுகளை அணுக்களின் அடிப்படையில் (சமணர்களது கோட்பாடும் இதுதான்) விளக்கினார். எபிகியூரஸ் ஆன்மீகத்தின் அடிப்படையான பொருளற்ற ஆன்மா இருப்பதை நிராகரித்தார். அது மட்டும் அல்லாமல் மனிதர்களது வாழ்க்கையில் கடவுள் செல்வாக்குச் செலுத்துவதில்லை எனச் சொன்னார். ஐம்புலனின் உதவியுடன் உலகம் பற்றிய அறிவை பெற்றுக் கொள்ளலாம் என்றார்.

மனித வாழ்க்கையின் குறிக்கோள் இன்பம் என்றும் அதனை ஆசைகளை மட்டுப்படுத்துவதன் மூலமும் கடவுள் பயம் மற்றும் மரண பயம் இரண்டையும் விரட்டுவதன் வழியாகவும் அடையலாம் என்றார். பயத்தில் இருந்து விடுதலை என்ற அவரது கோட்பாடு அவருக்குப் பின் பல நூற்றாண்டு காலம் புகழோடு விளங்கியது.

இப்போது எபிகியூரசின் புதிரைப் பார்ப்போம்.

'கடவுள் தீமையைத் தடுக்க விரும்புகிறார், ஆனால் இயலவில்லை? அப்படியென்றால் அவர் எல்லாம் வல்லவர் அல்ல.

அவரால் இயலும், ஆனால் விரும்பவில்லை? அப்படியென்றால் அவர் தீய உள்ளம் படைத்தவர்!
அவரால் இயலும் அதே நேரம் விரும்பமும் உள்ளவர். அப்படியென்றால் தீமை எங்கிருந்து வருகிறது?

அவரால் இயலவும் இல்லை விரும்பவும் இல்லை? அப்படியென்றால் ஏன் அவரை கடவுள் என்று அழைக்க வேண்டும்?

இயற்கையின் விதிகளை மனிதன் மாற்ற முடியாது. ஒரு கல்லை ஒருவன் தலைக்கு மேலே செங்குத்தாக எறிந்தால் அது திரும்பி கீழே வந்து அவனது தலையைப் பதம் பார்க்கும். காரணம் ஈர்ப்பு விதிதான்.

கடவுள் உண்டா இல்லையா? என்ற விவாதத்தில் பிரித்தானிய ஊடகங்களும் மக்களும் முன்னணியில் இருக்கிறார்கள்.

கடவுள் என்பது மனிதன் தனது மனதில் பொத்தி வைத்திருக்கும் ஒரு எண்ணம்தான். மேலே நட்சத்திரங்கள் நிறைந்த வானத்தையும் கீழே பஞ்ச பூதத்திலான பூமியையும் பார்த்த மனிதன் இவற்றை படைத்த காரணன் ஒருவன் இருக்க வேண்டும் என நினைத்தான். குடம் இருந்தால் குயவன் இருக்கத்தானே வேண்டும். அந்த குயவனுக்கு கடவுள் என்று பெயர் சூட்டினான்.
கடவுள் என்றொருவர் இருந்தால் அவர் இந்த கடற்கோளையும் அதனால் ஏற்பட்ட மனித அனர்த்தங்களை எப்படி அனுமதித்தார்?

அல்லது எல்லாம் வல்ல கருணையுள்ள ஒரு சக்தி இருப்பது என்பது வெறும் கற்பனையா? மக்கள் அச்சம் காரணமாக கண்டு பிடித்த ஒரு ஊன்று கோலா? அல்லது பாரத்தை இறக்கி வைக்கும் ஒரு சுமை தாங்கியா?

இந்தக் கேள்விகள் உலகம் தோன்றிய காலம் தொட்டு பல சிந்தனையாளர்களது மனதைக் குடைந்து வந்திருக்கிறது.

Pierre Simon de Laplace என்ற பிரஞ்சு நாட்டு கணிதவியலாளர் மற்றும் வானியலாளர் Mecanique Celeste  என்ற நூலை எழுதினார். அப்போது பிரஞ்சு நாட்டின் சக்கரவர்த்தியாக இருந்தவன் நெப்போலியன். Pierre Simon de Laplace அந்த நூலில் உலகத்தைப் படைத்துக் காக்கும் கடவுளின் பங்கு பற்றி ஒன்றும் சொல்லவில்லை. ஏன்; சொல்லவில்லை என்று அவரை நெப்போலியன் கடிந்து கொண்டான். அதற்கு Pierre Simon de Laplace  இறுத்த பதில் 'ஐயா, எனக்கு அந்த அனுமானம் தேவையற்றது' என்பதாகும்.

அவ்வளவு தூரம் போவானேன். மகாபாரதப் போரில் ஏற்பட்ட உயிரழிவுகளைப் பார்த்துவிட்டு சார்வாகர் என்ற சனாதனதர்ம தத்துவவாதி கடவுள் ஒருவர் இருப்பதை மறுத்தார்.

மனிதனின் அறிவீனம் அல்லது முட்டாள்தனமே அழிவுக்கு மூலகாரணம் என எடுத்துரைத்தார்.
இந்த சார்வகரே சார்வாகம் என்ற உலகாயுத மதத்தை தோற்றுவித்தவர். சார்வாகம் இனிமையாகப் பேச வல்லவர்கள் என்ற பொருள் தரும் சொல்லாகும்.

சார்வாகம் காட்சியே அளவையாவதென்றும், நிலம், நீர், தீ, வெளியெனப் பூதம் நான்கே என்றும், அவற்றது புணர்ச்சி சிறப்பால் தோன்றிப் பிரிவால் மாய்வதாய் உடம்பின் கண்ணே அறிவு மதுவின்கண் களிப்புப் போல வெளிப்பட்டு அழியுமென்றும், மறுமை இல்லை என்றும், உடம்பே ஆன்மாவென்றும், கடவுள் இல்லை என்றும் இன்பமும் பொருளுமே உறுதிப்பொருள்கள் (புருஷார்த்தங்கள்) என்று உரைக்கிறது.

சில நெருக்கடி காலங்களில் கடவுள் நம்பிக்கை உலகத்தில் வாழும் பல கோடி மக்களுக்கு மன ஆறுதல் தரவல்லதாக இருக்கலாம். ஆனால் சுனாமி போன்ற அனர்த்தம் இயற்கையின் சீற்றமாகும். இயற்கையையும் அதன் விதிகளையும் கற்பதன் மூலமே அதனைப் புரிந்து கொள்ளலாம்.

ஒருவிதத்தில் இயற்கையையும் கடவுளும் ஒன்றுதான். ஆதி மனிதன் ஞாயிறு, கோள்கள், தீ, கடல், காடு, மலை, ஆறு போன்ற இயற்கை பொருள்களையே வழிபட்டான்.

இன்றைய மனிதன் இயற்கையை அழித்து வருகிறான். காடுகளை அழிக்கிறான். நீர்நிலைகளை அழிக்கிறான். சுற்றுச் சூழலை மாசு படுத்துகிறான். அவற்றின் விளைவே சுனாமி போன்ற அனர்த்தங்கள் ஏற்படுகின்றன என்ற கருத்தும் நிலவுகிறது.

சுனாமி ஏற்படுத்திய வரலாறு காணாத அழிவு மனிதர்களுக்கும் மக்களுக்கும் இடையில் நிற்கும் தரகர்களான மதத் தலைவர்களுக்கு பெரிய சோதனையாகி விட்டது.

பூமியில் நடக்கும் எல்லாவற்றையும் வழிநடத்திக் கொண்டும் வழிகாட்டிக் கொண்டும் ஒரு தெய்வீக சக்தி இருப்பது உண்மையென்றால் டிசெம்பர் 26, 2004 அதிகாலை அவர் என்ன செய்து கொண்டிருந்தார்?

இந்தக் கேள்வியை கவிஞர் புதுவை இரத்தினதுரை அழுதழுது அழகான கவிதை வரிகளில் கேட்கிறார்.

முதுகிற் பாரச்சிலுவை சுமந்த
பாவப்பட்ட மக்களின் பயணப்பாடு முடிந்தது
இயேசுவே!
எம்மையேன் இரட்சிக்கமறந்தீர் சுவாமி!
ஆலமுண்ட நீல கண்டனே!
எம்மைச் சாவுதின்ற போது தாங்காதிருந்ததுக்கு
அன்று மட்டும் உமக்கென்ன அலுவலிருந்தது பிரபு!
அல்லாவே!
பிள்ளைகளைக் கைவிட்டதேனோ?
புத்த பெருமானே!
வெள்ளம் வருகிறதென்றாயினும் சொல்ல வேண்டாமா?
எல்லோரும் ஒதுங்கிக் கொணடீர்கள்
நாங்கள்தான் தனித்துப் போனோம்!
(வளரும்)
 

 

 


சுனாமியும் சுவாமியும்
கடவுளை நம்பினோர் கைவிடப்பட்டனர்!
நக்கீரன்
3

இயேசு, ஆலமுண்ட நீலகண்டன், அல்லா, புத்தபெருமான் இந்தப் பட்டியலில் இருந்து புத்தரை கவிஞர் இரத்தினதுரை நீக்கி விட்டிருக்கலாம்.

புத்தர் தன்னை கடவுள் என்றோ கடவுளின் அவதாரம் என்றோ சொல்லவில்லை. இன்னும் சொல்லப்போனால் கடவுள் என்ற முதல்காரணன் அல்லது ஒரு சக்தி இந்த உலகத்தை இயக்குவதை மறுத்த நாத்திகர். அவரை பவுத்தம் பகவான் ஆக்கி வழிபடுவது அவர் செய்த குற்றம் அல்ல. அவரது சீடர்கள் செய்த குற்றம்!

இயேசுவையும் விட்டிருக்கலாம். முதலில் அவரை இறைதூதர் என்றார்கள். பின்னர் கடவுளின் மகன் என்றார்கள். கடைசியாக அவரே கடவுள் என்றார்கள்.

ஆனால் இயேசு சிலுவையில் அறையப்பட்டு இறந்தபோது அவரது தந்தை அவரைக் காப்பாற்றவில்லை! ' இறைவா, இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்?  ("My God, My God, why hast thou forsaken me")  என ஆற்றாமையால் அவரே கதறி அழுது முறையிட்டார்!

ஆலமுண்ட நீல கண்டன். அழித்தல் கடவுள். அவர் தனது தொழிலை அன்று சக்சிதமாகச் செய்து முடித்தார். அழித்தல் கடவுளிடம் அழிவைப் பற்றி முறையிட்டு என்ன பயன்? காத்தல் கடவுள் விஷ்ணவுக்கு அல்லவா முறையிட வேண்டும்?

கடற்கோளினால் தேவாலயங்கள், கோயில்கள், விகாரைகள், மசூதிகள் தகர்த்து எறியப் பட்டன. கரைக்கடல் ஓரமாக அநேக சுருவங்கள், விக்கிரகங்கள் ஆகியவற்றைக் கண்டதாக றோயிட்டர் செய்தி முகவர் எழுதியிருந்தார்.

புத்த சாசன அமைச்சு காலி, மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் 39 விகாரைகள் தகர்ந்து போய்விட்டன என அறிவித்திருக்கிறது. அவற்றின் பெறுமதி ரூபா 39 மில்லியன்.

திருகோணமலையில் கடற்கரையை அண்டியிருந்த மாரியம்மன் கோயில் உட்பட பல கோயில்கள் சுனாமியால் துடைத்து துப்பரவு செய்யப்பட்டன.

பல மசூதிகள் அழிந்து போயின. புகழ்பெற்ற கட்டக்கரைப் பள்ளிவாசல் கடுமையாக பாதிக்கப்பட்டது. கல்முனையில் ஒரு மத்றாசாவும் அதில் இருந்த 40 பிள்ளைகளும் சுனாமியால் வாரிச் செல்லப்பட்டனர்.

வட மாகாணத்தில் 50க்கும் அதிகமான தேவாலயங்களும் கிழக்கு மாகாணத்தில் 20 தேவாலயங்களும் அழியுண்டன. முல்லைத்தீவில் ஞாயிறு காலை நடந்த திருப்பலிப் பூசையின் போது பாதிரியார் உட்பட பக்தர்கள் அனைவரும் சுனாமிக்குப் பலியானார்கள். தேவாலயமும் அழிந்து போயிற்று.

மாத்தறையில் உள்ள ஒரு தேவாலயத்தில் மேரி குழந்தை இயேசுவை கையில் ஏந்தி வைத்திருக்கும் சுருவத்தை சுனாமி வாரிக் கொண்டு போய் முக்கால் மைலுக்கு அப்பால் உள்ள ஒருவரது வாழைத் தோட்டத்தில் போட்டுள்ளது. அதை மீளக் கண்டெடுத்தது அற்புதமாகத் தெரிகிறது. அது முதலில் அள்ளுப்பட்டுப் போனது ஏனோ அபத்தமாகத் தெரியவில்லை!
வேளாங்கன்னியில் இருக்கும்; வேளாங்கன்னி மாதாவுக்குப் பெயர் ஆரோக்கிய மாதா? அங்குதான் சுனாமியால் அதிகப் பேர் பலி!

நாகபட்டினத்தை ஆட்சி செய்பவள் நீலாட்சி அம்மை! அங்குதான் ஆயிரக்கணக்கானோர் சாவு.

நாகூரில் ஆண்டவர் மதங்களுக்கு அப்பாற்பட்டு அங்கு மக்கள்கூடி பக்தி செலுத்துகிறார்கள். விளைவு என்ன? தர்க்காவுக்குள்ளேயே பிணங்களைப் புதைக்க வேண்டிய அவல நிலை!

சென்னை மேற்கு மாம்பல கோதாண்டராமர் கோயிலில் பெண் பக்தைகள் இலட்ச தீபங்கள் ஏற்றி வழிபட்டனர். எதற்காக என்பது தெரியுமா? மீண்டும் சுனாமி வராமல் தடுக்கவாம்!

        1) இதற்குமுன் எத்தனையோ தீபங்கள், யாகங்கள்,  பூசைகள், திருவிழாக்களை எல்லா நடத்தி இருக்கி"றார்களே? அவை காரணமாக சுனாமி ஏற்படாமல் தடுக்கப்படவில்லையே? ஏன்?

        2) அவனன்றி ஓரணுவும் அசையாது என்கிறார்கள். அப்படியென்றால் சுனாமி ஏற்பட்டது அவன் செயல்தானே? அந்த ஆண்டவனைக் கண்டிப்பது தானே நியாயம்!

       3) சர்வ வியாபி (எங்கும் நிறைந்தவன்) ஆண்டவன் என்கிறார்கள். அப்படியென்றால் கடலில், அலையில் (சுனாமியில்) கடவுள் இருக்கவில்லையா? சுனாமி என்ற பெயரில் கடவுள் ஒரு நாசகார அழிவு வேலையைச் செய்திருக்கிறார் என்றுதானே பொருள்? இதற்காகக் கடவுள்மீது பக்தர்களுக்குக் கோபம் வந்திருக்க வேண்டாமா?

        4) அன்பே உருவானவன், கருணையே வடிவானவன் கடவுள் என்று சொல்லுகிறார்கள். கல்லினுள் தேரைக்கும் கருப்பை உயிருக்கும் புல்லுணவே தந்து போற்றும் தயாளன் என்கிறார்கள் பக்தர்கள். அப்படியென்றால் சுனாமியால் இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் குரூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்களே, இலட்சக்கணக்கான மக்கள் உற்றார் உறவினர்களை, உடைமைகளை, குடியிருந்த வீடுகளை எல்லாம் இழந்து கண்மூடித் கண் திறப்பதற்குள் விதவைகளாக, ஏதுமற்றவர்களாக, ஏதிலிகளாக, நடுத்தெருத் தரித்தரக்காரர்களாக, அதிர்ச்சியின் கோரப் பிடியில் சிக்கியவர்களாக, கண்ணீரும் கம்பலையுமாகக் காணப்பட்டார்களே?
இதற்குப் பிறகும் கடவுள் அன்பே வடிவானவர், கருணைப் பெருங்கடல், காத்தருள் புரியும் அருட் பெரும் சோதி என்று எப்படி நம்ப முடியும்? நியாயமாகப் பார்த்தால் கடவுள் பற்றி அவர்களின் சிந்தனையில் நேர்மையான மாற்றம் வந்திருக்க வேண்டாமா? கும்பிடுவது கல்லும் களிமண்ணும் அவற்றுக்கு எந்தப் 'பவரும்' இல்லை என்ற 'ஞானோதயம்' வந்திருக்க வேண்டாமா?

        5) ஆழிப் பேரலை (சுனாமி) ஏன் ஏற்படுகிறது? நில நடுக்கம் எந்தச் சூழலில் நடக்கிறது என்பதற்கு அறிவியல் அடிப்படையில் முகாந்திரங்கள் உள்ளன. இந்த நிலையில் தீபங்கள் ஏற்றுவதாலோ கோயிலுக்குள் சிற்பிகளால் உருவாக்கப்பட்ட சிலைகளுக்கு(கடவுள்கள்) முன் காதலாகிக் கசிந்துருகவதாலோ அவற்றை மாற்றி அமைக்க முடியுமா?

தோத்திரங்கள், பிரார்த்தனைகள், வழிபாடு, தொழுகை இவையெல்லாம் வீண் நேரச் செலவா? கடவுள் நம்பிக்கை என்பது வெறும் மாயையா? கடவுள் என்பது (மனிதனால்) கண்டுபிடிக்கப்பட்ட கற்பனையா? அவனது மனதில் குடியிருக்கும் நம்பிக்கையா?

யாகங்களுக்கும், பிரார்த்தனைக்கும், பக்திக்கும், வழிபாட்டுக்கும், தொழுகைக்கும், அர்ச்சனைக்கும் அபிசேகத்துக்கும், தேருக்கும் தீர்த்தத்திற்கும் சக்தி இருப்பதாகச் சொன்னார்கள்.
பிரார்த்தனையால் மலைகளை அசைக்கலாம் பெருங்கடலை பிரிக்கலாம் என்றெல்லாம் சொன்னார்கள்.

அவை உண்மையானால் சுனாமிக்கு ஏன் மக்கள் பலியானார்கள்? தங்கள் கைகளில் கெட்டியாகப் பிடித்திருந்த பிள்ளைகளைப் பறிகொடுத்த தாய்மார்கள் என்ன பாபம் செய்தார்கள்? தாய் தந்தையரைப் பறி கொடுத்த பிள்ளைகள் என்ன பாபம் செய்தார்கள்?

எத்தனை மாதா கோயில்கள்? எத்தனை பிள்ளையார் கோயில்கள்? எத்தனை பள்ளிவாசல்கள்? எத்தனை புத்தவிகாரைகள்? எல்லாம் இருந்தும் சுனாமி அரங்கேறியுள்ளதே? தெய்வீக சக்தி எங்கே போயிற்று?

கடவுளை நம்பினோர் கைவிடப்படார்! ஆலயம் தொழுவது சாலவும் நன்று! சிவாய நமவென்று சிந்தித்திருப்போருக்கு அபாயம் ஒரு நாளும் இல்லை! இவை இன்று பொய்த்துவிட்டன!
கடவுளை நம்பினோர் கைவிடப் பட்டார்! ஆலயம் தொழுவதால் புண்ணியமில்லை! சிவாயநம என்று சுவாமி பெயர்களைச் சொல்பவர்களையும் சுனாமி விடவில்லை!

தங்களைத் தாங்களே காப்பாற்ற முடியாத கடவுள் மனிதர்களை எப்படிக் காப்பாற்றுவர்?
பக்தர்களே சிந்தியுங்கள்!கடவுள் காப்பாற்றுவாராக! கர்த்தர் பொறுப்பாராக! அல்லா அருள் புரிவாராக! இவையெல்லாம் அர்த்தமற்ற வெற்றுச் சொற்களேதான்!

அறிவைப் பயன்படுத்தாத அல்லது பயன்படுத்த முடியாத இடம் என்று எதுவும் உலகில் இல்லை. கடவுள் விடயத்தில் அறிவைப் பயன்படுத்தத் தவறுவதால்தான் இந்தத் தடுமாற்றங்கள், குழப்பங்கள், யாகங்கள், இலட்ச தீபங்கள்!

இப்படியான கேள்விகள் பகுத்தறிவாளர்களால் எழுப்பப்படுகின்றன. ஆன்மீகம் மூடநம்பிக்கை. அறிவியல் அந்த மூடநம்பிக்கையை தகர்த்தெறியும் சம்மட்டி என அவர்கள் வாதிக்கிறார்கள்.
சிந்திப்பவன் தானே மனிதன்! அதுதானே மனிதனுக்கும் விலங்குகளுக்கும் உள்ள வேறுபாடு! எனவே ஆத்திரப்படாது, பதறாது, திட்டாது, தூற்றாது ஆர அமரச் சிந்தியுங்கள்!

பகுத்தறிவாளர்கள் எழுப்பும் கேள்விகள் முன்வைக்கும் வாதங்கள் தீவிர மத நம்பிக்கையாளர்களை தற்பாதுகாப்பு நிலைக்கு தள்ளியுள்ளது. பிரித்தானியாவில் உள்ள பிரபல மதத் தலைவர்கள் அத்தகைய கேள்விகள் சங்கடமாக இருந்தாலும் அவை நியாயமானவை என விரும்பியோ விரும்பாமலோ ஒத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளர்கள். அப்பாவி மக்கள், பெரும்பாலும் ஏழைகள் கடவுளின் அருட்பார்வை அவர்கள் மீது உண்டென சொல்லப்பட்ட போதிலும் இமைப்பொழுதில் மிகவும் கொடூரமான முறையில் மடிந்திருக்கிறார்கள். இது கடவுள் பற்றிய நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளது.

இங்கிலாந்து தேவாலயத்தின் தலைவரும் கன்டபெரி ஆண்டகை றோவன் வில்லியம்ஸ் (Rowan Williams, the Archtbishop of Canterbury and Head of the Church of England)  'இப்படியான பேரழிவைக் கண்டு மக்கள் கடுமையாக கோபம் கொள்வதில் நியாயம் இருக்கிறது' எனக் கூறுகிறார்.

'இப்படியான பெருந்துன்பத்தை அனுமதிக்கும் ஒரு கடவுளை எப்படி நம்புவது" என்ற கேள்வி இன்று எழுந்துள்ளது. அப்படி எழாவிட்டால் வியப்பாக இருந்திருக்கும். உண்iயில் சொல்;லப்போனால் அப்படிக் கேள்வி கேட்காமல் விடுவதுதான் தவறு' இவ்வாறு றோவன் வில்லியம்ஸ் ஒரு செய்தித்தாளுக்கு எழுதிய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் செய்தி ஏடுகளில் கடவுள் நம்பிக்கை பற்றி கேள்வி எழுப்பி வெளிவந்த பல கட்டுரைகள் கடிதங்கள் இவற்றுக்கு பதில் அளிக்கு முகமாகவே அவர் இந்தக் கட்டுரையை எழுதியுள்ளார்.

சிலர் கடவுளை நம்புகிறார்கள். ஆனால் மிகப் பெரும்பான்மையினர் நம்பிக்கை அற்றவர்களாகக் காணப் பட்டார்கள்.

இருந்தும் மதத் தலைவர்கள் கடவுள் நம்பிக்கை பிரார்த்தனை இவற்றின் அவசியத்தை கைவிட வேண்டாம் எனக் கேட்கிறார்கள். ஒவ்வொரு செயல்களுக்கும் பின்னும் கடவுளின் கைகள் இருப்பதாக எண்ணக் கூடாது. கடவுள் மனிதனை பவுதீக உலகில் வாழ வைத்துள்ளார். எனவே அந்த பவுதீக உலகின் வரம்புக்கு அமையவே அவன் வாழ வேண்டும். இன்பம் துன்பம் இரண்டும் இயற்கையே. பவுதீக உலகில் நிலநடுக்கம், எரிமலை, கடல் கொந்தளிப்பு இயற்கை நிகழ்வுகள். அதில் மனிதர் சாவதும் இயற்கை. அப்படி இல்லை என்று மறுப்பது மனிதர் உயிருள்ள பிராணிகள் இல்லை என்பதாகும்.

கிறித்தவர்கள் போலல்லாது இந்துக்களுக்கு சிக்கல் இல்லை. 'அன்றெழுதியதை யாரும் அழித்து எழுத முடியாது. எல்லாம் விதிப்படி நடக்கும்' என்று எல்லாவற்றிற்கும் நியாயம் கற்பித்து விடுகிறார்கள்.

இந்து கற்கைநெறி ஒக்ஸ்போட் மையத்தை சார்ந்த சானுக்கா ரிஷிதாஸ் சொல்கிறார் 'சுனாமி அனர்த்தத்திற்கு கடவுளை நோவது சிறு பிள்ளைத்தனம். நாங்கள் துன்பம் இறப்பு இரண்டுக்கும் உட்பட்டவர்கள்.'

 


ஆழிப்பேரலை ஆடிய ஊழிக் கூத்தின் அவலங்கள் தொடர்கின்றன
நக்கீரன்

ஊழpதோறும் தமிழ் நிலத்தைக் கொடுங்கடல் கொண்டுள்ளது. அதனை இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தில் பதிவு செய்துள்ளார்.

வாழ்க! எம்கோ மன்னவர் பெருந்தகை
ஊழிதொறு ஊழிதொறு உலகம் காக்க!
அடியில் தன் அளவு அரசர்க்கு உணர்த்த்p
வடிவேல் எறிந்த வான் பகை பொறாது,
பஃறுளி யாற்றுடன் ;பன்மலை அடுக்கத்துக்
குமரிக்கோடும் கொடும் கடல் கொள்ள,
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென்திசை ஆண்ட தென்னவன் வாழி!           
 (சிலம்பு காடு காண் காதை)

டிசெம்பர் 26 ஆம் நாள் இடம்பெற்ற ஆழிப் பேரழிவுக்கு 11 நாடுகளைச் சேர்ந்த 226,000 மக்கள்; உடனடியாகவோ அல்லது அடுத்த சில கிழமைகளில் பலியானார்கள் என அய்க்கிய நாடுகள் சபையின் கணக்கெடுப்புக் கூறுகிறது.

இலங்கையில் மட்டும் 31,229 பேர் இறந்து பட்டார்கள். தமிழ்நாட்டில் இறந்தோர் தொகை 10,749 ஆகும். தாய்லாந்தில் 5,395 பேர் இறந்தார்கள்.

இலங்கையின் 1,000 கிமீ நீளமுள்ள கடலோரத்தில் வாழ்ந்த 500,000 மக்கள் 100,000 இலக்கம் வீடு வாசல்களை இழந்தார்கள்.

இலங்கையின் வடக்கு கிழக்கைப் பொறுத்தவரை கால் நூற்றாண்டு காலம் நீடித்த போரினாலும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆழிப் பேரழிவால் மேலும் பல்வேறு பாதிப்புக்கு உள்ளாகினார்கள்.

முல்லைத்தீவு மாவட்டமே மிகப் பெரிய அழிவைச் சந்தித்தது. இங்கே 3,000 மக்கள் இறந்து பட்டார்கள். மீனவர்களின் படகுகள், வலைகள் நாசமாகின. மாவட்டத்தின் கட்டுமானம் பெரிய அழிவுக்கு உள்ளானது. கோயில் குளங்கள் கூடத் தப்பவில்லை.

முல்லைத் தீவில் இயங்கிய இளந்தளிர் இல்லத்தை முற்றாகக் கடற்கோள் கொண்டது. அதில் வாழ்ந்த 175 குழந்தைகளில் 121 குழந்தைகளைப் பேரலைகள் இழுத்துச் சென்றது. அதில் 30 சடலங்களே மீட்கப்பட்டன. அந்த இல்லத்தைச் சுற்றிச் சிதறுண்டு கிடந்த குழந்தைகளின் பால்போத்தல்கள், விளையாட்டுப் பொருட்கள், புகைப்படங்கள் அழிவுக்குச் சான்றாகக் காட்சியளித்தன.

அண்மையில்தான் இந்த இல்லம் மீளக் கட்டப்பட்டுள்ளது. சுனாமியில் தாய் தந்தையர்களை இழந்த குழந்தைகள் உட்பட 75 குழந்தைகள் இப்போது இளந்தளிர் இல்லத்தில் வாழ்கிறார்கள்.
சுனாமியால் ஆண்களைவிட பெண்களும் குழந்தைகளுமே பேரளவு பாதிப்புள்ளாகினார்கள்.

ஆழிப் பேரழிவு அலைகள் நிகழ்த்திய ஊழிக் கூத்து அரங்கேறி ஓராண்டு நிறைவு எய்தியுள்ளது.

ஓராண்டு காலத்துக்குப் பின்னர் சுனாமி பேரழிவு பற்றிய அக்கறை உலக நாடுகள் மத்தியில் குறைந்து வருகிறது என அய்க்கிய நாட்டு அவையின் நிபுணர்கள் விடுத்துள்ள அறிக்கை தெரிவிக்கிறது. வறுமை, நாட்டுக்குள்ளேயே இடம் பெயர்ந்தோர், குடி தண்ணீர், துப்பரபு மற்றும் மருத்துவ பராமரிப்பு, நிவாரண உதவிகளில் பாரபட்சம் காட்டப்படுதல், நிவாரணத்தைப் பங்கிடுவதில் பாதிக்கப்பட்ட மக்களை ஈடுபடுத்தத் தவறியது போன்ற காரணிகளால் தொடர்ந்து சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களது வாழ்க்கை பாதிப்புள்ளாக்கி வருகின்றது என அய்யன்னா நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

ஆழிப் பேரழிவில் தப்பிய பல்லாயிரக் கணக்கானோர் தற்காலிக கொட்டில்களிலும் குடிசைகளிலும் நலன்புரி நிலையங்களிலும் அரசு மற்றும் அரசு சார்பற்ற நிறுவனங்கள் வழங்கும் உலர் உணவு உடை உதவிகளில் தங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என அய்க்கிய நாட்டு அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.

சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 95 விழக்காடு மக்கள் நிரந்தர குடியமைப்புக்கள் இல்லாது மழை வெய்யில் போன்ற இயற்கை அழிவுக்கு முகம் கொடுக்கும்
.0இக்கட்டான நிலையில் இருக்கிறார்கள்.

ஒரு புறம் அரசின் திட்டமிடப்பட்ட புறக்கணிப்புக்களால் ஏற்பட்ட பின்னடைவுகள் மறுபுறம் சுனாமியாலும் போரினாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறு வாழ்வு அளிப்பதில் த.பு. கழகமே முன்னின்று உழைத்து வருகிறது.

நலமான சமுதாயத்திலிருந்துதான் ஆழமான கண்டுபிடிப்புகள் உருவாகும். ஒவ்வொரு தனிமனிதனுடைய உடல் உள நலன்கள் பேணப்படுவதன் மூலமும், சுற்றுப்புற சூழல் மாசடையாது பாதுகாப்பதன் மூலமும் ஓரு சீரான திடகாத்திரமான சமுதாயத்தை உருவாக்கமுடியும் என்ற உண்மையை உணர்ந்து தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பணியாற்றி வருகிறது.

த.பு. கழகம் புனர்வாழ்வு, புனரமைப்புடன் இணைந்த மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் பாரிய அளவில் இடம்பெயர்ந்த மக்களிற்கான அடிப்படை வசதிகள், மீள்குடியமர்வு, கல்வி, மருத்துவம், போக்குவரத்து, தொழில், போசாக்கு, ஆதரவற்றவர்களை பராமரித்தல் என்று பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது.

கட்டுமானங்கள், பாடசாலைகள் புனரமைத்தல், சத்துணவுபற்றாக்குறைவுக் குழந்தைகள், தாய்மார், முதியோர் போன்றோருக்கு சத்துணவு, பாடசாலைக்கான குடிநீர் மலசலகூட வசதிகள் செய்துகொடுத்தல்  ஆசிரியருக்கான கொடுப்பனவுகள் வழங்கல் மாணவர்களுக்கான சத்துணவு வழங்கல், சீருடை கல்வி உபகரணங்கள் வழங்கல், மாணவர்களுக்கான விடுதிகள் அமைத்தல் போன்ற செற்பாடுகளுடன் பின்வரும் பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

கணினிப் பயிற்சி

முன்பள்ளிகள்

சிறுவர் கல்வி ஊட்டமேம்பாடு

வறிய மாணவர்க்கான கல்விக் கொடுப்பனவு

மாலை நேரக் கல்வி

இலவச மருத்துவ சேவை

யூஎன்எச்சியார் நிறுவனம் மட்டும் அம்பாரை மாவட்டத்தில் 2,882 இடைத்தங்கக் குடிசைகளையும் யாழ்ப்பாணத்தில் 1,558 ஆக மொத்தம் 4,440 இடைத்தங்கல் குடிசைகள் கட்டிக் கொடுத்தது. இரண்டு அறை கொண்ட இந்தக் குடிசை ஒவ்வொன்றும் 12
x 16 அடி (3.7 x 4.9 மீட்டர்) பரப்பளவு கொண்டது. செங்கல் அத்திவாரம் இரும்புச் சட்டம் (iron frame) ஒட்டுமரச் சுவர் (plywood wall)  அலுமினியக் கூரை ஆகியவற்றால் எழுப்பப்பட்டது.

இந்த நிறுவனத்தைப் போல சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மொத்தம் 50,000 இடைத்தங்கல் குடிசைகளை அரச சார்பற்ற நிறுவனங்கள் கட்டிக் கொடுத்துள்ளன. இதில் த.பு.கழகம் 3,240 இடைத்தங்கல் குடிசைகளைக் கட்டிக் கொடுத்தற்காக முன்னாள் ஆட்சித் தலைவர் சந்திரிகா குமாரதுங்கா அவர்கள் த.பு.கழகத்துக்கு விருது கொடுத்து மேன்மைப்படுத்தினார். இதுவரை த.பு.கழகம் 8,500 இடைத்தங்கல் குடிசைகளை வட - கிழக்கில் கட்டி முடித்துள்ளது. இந்தக் குடிசைகளில் வாழ்பவர்களுக்கு குடிதண்ணீர் கழிவறை வசதிகளுடன் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த இடைத்தங்கல் குடிசைகள் சிமெந்து தரை, செங்கல் சுவர், கிடுகுக் கூரையால் வேயப்பட்டவை ஆகும். உள்ளுர் மக்களும் பொறியாளர்களும் வீடுகட்டும் பணியில் அமர்த்தப்பட்டார்கள்.

த.பு.கழகம் மேற்கொண்டுள்ள மீள்குடியமர்வு கட்டுமானப் பணிகளில் த.புகழகத்தின் 3,500 ஊழியர்களும் 10,000 தன்னார்வத் தொண்டர்களும் ஈடுபடுத்தப்பட்டனர். இதற்கான நிதியுதவி உலகளாவிய 16 த.பு.கழகக் கிளைகளிhல் கொடுக்கப்பட்டது. த.பு.கழகம் (கனடா) 12 இலக்கம் கனடிய டொலர்களை சுனாமி நிதியாக திரட்டிக் கொடுத்திருந்தது.;

அரச புனர்வாழ்வு மீள்கட்டமைப்பு செயலணியின் (Task Force for Relief and Reconstruction) அறிக்கையின் படி இதுவரை செலவழிக்கப்பட்ட 919 மில்லியன் டொலர்களில் வட-கிழக்குக்கு 58 மில்லியன் டொலர்கள் மட்டுமே செலவழிக்கப்பட்டுள்ளது. த.G. கழகம் புனர் வாழ்வு, ம:Pள் கட்டமைப்பு. கல்வி. மருத்துவம் போன்றவற்றுக்கு சனவரி 2005 இல் இருந்து யூன் மாதம் வரை உரூபா 1,307,000,000 (130.7 கோடி) செலவழித்துள்ளது.

வெளி நாடுகளது தாராள நிதியுதவி இன்றி சுனாமியாலும் போரினாலும் பாதிக்கப்பட்ட மக்களது புனர்வாழ்வு மீள்குடியேற்றம், மீள்கட்டுமானம் ஆகிய பணிகளை நிறைவேற்றுவது அசாத்தியமானதாகும். இந்தப் பணிகளுக்கு உலக நாடுகள் வழங்கிய 350 கோடி டொலர்கள் முடக்கப்பட்டுள்ளது.

காரணம் சுனாமி மீள்கட்டமைப்புப் பணியை மேற்கொள்ள ஸ்ரீலங்கா அரசுக்கும் முன்னாள் ஆட்சித்தலைவர் சந்திரிகா குமாரதுங்காவுக்கும் வி.புலிகளுக்கும் இடையில் கைச்சாத்தான பொதுக் கட்டமைப்பு ஏற்பாடு
(P-TOMS)  உச்ச நீதிமன்றம் கடந்த யூலை 15 இல் அளித்த தீர்ப்பை அடுத்து உயிரை விட்டு விட்டது. இதனால் வெளிநாடுகள் மீள்கட்டமைப்புப் பணிக்குக் கொடுத்த 350 கோடி டொலர் நிதியுதவி பயன்படுத்தப்படாமல் கிடக்கிறது. மனிதாபிமான அடிப்படையில் வெளிநாடுகள் வழங்கும் உதவி நிதி கூட தமிழ்மக்களுக்கு பயன்படாதவாறு தென்னிலங்கை இனவாத அரசியல் கட்சிகளும் உச்ச நீதிமன்றமும் தடுத்துவிட்டது பெரிய ஏமாற்றம் என்பதில் அய்யமில்லை. தென்னிலங்கை ஜாதிக விமுக்தி பெரமுன என்ற இனவாதக் கட்சியே இடைக்கால ஏற்பாட்டிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தது.

இது தொடர்பாக கருத்து வெளியிட்டிருந்த த.பு.கழக திட்ட மேம்பாட்டு முகாமையாளர்
Julia Hume கருத்துத் தெரிவிக்கையில்-

``There would have been a lot more funds coming through and benefiting the whole country if there was a joint mechanism on aid,'' said Julia Hume, a project development manager with the Tamil rehabilitation group. ``There are a few examples of work together, but essentially there is no such coordination.''

சுனாமி நிதியைப் பங்கீடு செய்வதற்கான பொதுக் கட்டமைப்பு நடைமுறைப் படுத்தப் பட்டிருந்தால் உலக நாடுகளிடம் இருந்து மேலும் நிதி கிடைத்திருக்கும். அதனால் முழு நாடுமே பலன் பெற்றிருக்கும் என்றார்.

சுனாமி நிதி சிங்கள இனவாத சக்திகளால் பொதுக் கட்டமைப்பு முடக்கப்பட்டது தொடர்பாக தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்திய தேசியத் தலைவர் தனது மாவீரர் உரையில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.

சுனாமிக் கட்டமைப்புக்குச் சாவுமணி அடிக்கப்பட்டதுடன் தமிழ் மக்களுக்கு எஞ்சியிருந்த இறுதி நம்பிக்கையையும் சிங்களப் பௌத்தப் பேரினவாதம் சாகடித்துவிட்டது. சர்வ அதிகாரம் படைத்த ஜனாதிபதி சந்திரிகாவினாற்கூட சிங்கள இனவாதச் சக்திகளை மீறித் தமிழ் மக்களுக்கு ஒரு நிவாரணத் திட்டத்தைத்தானும் நிறைவுசெய்ய முடியவில்லை. நிலைமை இப்படி இருக்கும்பொழுது பேரினவாதச் சகதியில் மூழ்கிக் கிடக்கும் சிங்கள அதிகார வர்க்கத்திடமிருந்து நீதியை எதிர்பார்ப்பது முட்டாள்தனம். சுனாமி நிர்வாகக் கட்டமைப்பானது எந்தவிதமான அரசியல் அதிகாரத்தையும் கொண்டிருக்கவில்லை. அத்துடன் அதற்கு உருப்படியான நிர்வாக வலுவும் இருக்கவில்லை. மிகவும் வரையறுக்கப்பட்ட செயற்பாடுகளைக் கொண்ட ஒரு தற்காலிக ஒழுங்கமைப்புக்கே தென்னிலங்கையில் இத்தகைய எதிர்ப்பு என்றால் தமிழர் தாயகத்தில் தன்னாட்சி அதிகாரமுடைய ஆட்சியமைப்பைச் சிங்கள அரசியல் தலைமைகளுடன் பேசிப் பெற்றுக்கொள்ளலாம் என்று எதிர்பார்ப்பது வெறும் பகற் கனவு.