யூலை 06, 2011
ஊடக அறிக்கை
பேராசிரியர் சிவத்தம்பியின் மறைவால் தமிழினம் ஒரு சிறந்த அறிவாளியை இழந்துவிட்டது!
பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் இயற்கை எய்திய செய்தி அறிந்து கவலை அடைந்தோம். அவரது தொடக்க காலம் எப்படி இருந்தாலும் பிந்திய காலத்தில் ஒடுக்கு முறைக்கு ஆளான தமிழ்மக்களது தேசிய வேட்கைக்கு ஆதரவாக எழுதியும் பேசியும் வந்தார். 2010 ஆம் ஆண்டு கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்வதா இல்லையா என்ற வாதம் எழுந்த போது "இலங்கைத் தமிழர்களின் அரசியல் போராட்டம் தமிழக முதல்வர் கருணாநிதியை நம்பி ஆரம்பிக்கப்பட்டதல்ல. இது எங்களுடைய போராட்டம். இந்தப் போராட்டத்தை நாங்களே நாடி, நாங்களே வெல்ல வேண்டும்" என அவர் கூறியது பலருக்கு நினைவிருக்கும்.
அய்ம்பதுகளில் தனிச் சிங்களச் சட்டத்தை இலங்கை பொதுவுடமைக் கட்சி
(Communist Party) எதிர்த்தது. பின்னர் அறுபதிகளில் அந்தக் கட்சி சிங்கள - பவுத்த பேரினவாதக் கட்சிகளோடு சேர்ந்த போது பேராசிரியர் சிவத்தம்பி அந்த நிலைப்பாடோடு ஒத்துப் போனார். சிங்கள - பவுத்த பேரினவாதம் என்பது இலங்கைத் தீவு முழுதும் சிங்கள பவுத்தர்களுக்கு உரியது என்ற சிந்தனைப் போக்காகும்.
தமிழர் சிங்களவர்களைப் போலவே ஒரு தேசிய இனம், இலங்கைத் தீவில் அவர்களுக்கு ஒத்துரிமை இருக்கிறது, தன்னாட்சி அடிப்படையில் அவர்கள் தங்களது அரிசியல் தலைவிதியைத் தீர்மானிக்க உரித்துடையவர்கள் என தமிழரசுக் கட்சி வாதிட்ட போது அதனை "வகுப்புவாதம்" என்று இடதுசாரிக் கட்சிகள் தூற்றின. அதனை தமிழ் முற்போக்குவாதிகளும் ஏற்றுக் கொண்டனர்.
1974 இல் யாழ்ப்பாணத்தில் நடந்த 4 ஆவது தமிழாராய்சி மாநாடு நடைபெறுவதற்கு அன்றைய சிறிமாவோ பண்டாரநாயக்க அரசு பல முட்டுக்கட்டைகள் போட்டது. தமிழாராய்ச்சி மாநாட்டைத் தமிழர்களது பண்பாட்டுத் தலைநகரமான யாழ்ப்பாணத்தில் வைக்காது கொழும்பில்தான் வைக்க வேண்டும் என்று சிங்கள அரசு பிடிவாதம் பிடித்தது. அந்த நிலைப்பாட்டை பேராசிரியர் சிவத்தம்பி முக்கிய பங்குவகித்த முற்போக்கு தமிழ் எழுத்தாளர் சங்கம் ஆதரித்தது.
மார்க்சீச முகமூடி அணிந்து பச்சை இனவாதம் பேசிய கட்சிகளையும் அதன் தலைவர்களையும் அடையாளம் காணத் தமிழ்ப் பொதுவுடமைத் தோழர்களுக்கு நீண்ட காலம் எடுத்தது. அந்த மாயையில் இருந்து முதலில் மீண்டவர் தோழர் வி. பொன்னம்பலம் ஆவர். 1971 இல் நடந்த இலங்கை பொதுவுடமைக் கட்சியின் தேசிய மாநாட்டில் இனச் சிக்கலுக்குரிய தீர்வாக தமிழரின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்குமாறு தோழர் பொன்னம்பலம் வற்புறுத்தினார். 1976 இல் பொதுவுடமைக் கட்சியோடு முரண்பட்டு அதில் இருந்து விலகித் தமிழர் மத்தியில் உள்ள இடதுசாரிச் சிந்தனை கொண்டவர்களை ஒருமுகப்படுத்தி தமிழ் பேசும் மக்கள் இயக்கமாக “செந்தமிழர் இயக்கம்” என்ற அமைப்பினை உருவாக்கி அதனைத் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைத்துச் செயல்பட்டார்.
பின்னாளில் தோழர்
பொன்னம்பலம் போலவே பேராசிரியர்
சிவத்தம்பியும் மார்க்சீச கட்சிகள் சிங்களத் தேசியத்தை இலங்கைத் தேசியமாக எண்ணி
மயங்கின எனக்
கூறுகிறார்.
"முற்போக்கு
இலக்கிய ஆக்கவீச்சு (1970)
தொடக்கத்துடன் ஒடுங்குகின்றதெனக் கொள்ளலாம். அதனைத் தொடர்ந்து இரு காரணிகள்
முக்கிமாகின்றன. ஓன்று,
1970 கள்
முதல் தொடங்குகின்ற சிங்கள் மேலாண்மைவாதப் போக்கு.
1930 கள்
முதலே சிங்கள மேலாண்மைவாதம் முக்கிய ஒரு சக்தியாக மேற்கிளம்பிக் கொண்டு
வந்ததெனினும்
1956
உடனேயே அது
திட்டவட்டமான ஒரு அரசியல் செல்நெறியாயிற்று. தேசிய
மறுமலர்ச்சி
பற்றிய தெளிவின்மை காரணமாக மார்க்சீச கட்சிகளிலும் சிங்களத் தேசியத்தை
இலங்கைத்
தேசியமாக மயங்கிக் கொண்டன.
சிங்கள
மேலாண்மை வாதம் வெகுவிரைவில் அரச அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு கொடுக்கத்
தொடங்கியது
(பொலிஸ்,
இராணுவ
அட்டூழியங்கள்). ஆதனை எதிர்த்துத் தமிழ் இளைஞர்
தீவரவாதம்
மேற்கிளம்பத் தொடங்கிற்று. இத்தீவிரவாதம் தமிழ்த் தேசியத்தையம்
மார்க்சீயத்தையும் இணைத்துக் கொண்டது. ஆத்துடன் இது தன்னைத்தான் நீக்கக்
கோட்பாட்டுடன்
(Liberation)
இணைத்துக்
கொண்டது. தளைநீக்கம் என்பது
அரசியல்,
சமூக,
பொருளாதார
விடுதலையை உள்ளடக்கிய ஒரு கோட்பாடாகும்."
பேராசிரியர் சிவத்தம்பி அரசியலை விட தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், தமிழ்ச் சமூகம், தமிழ்ப் பண்பாடு பற்றிய ஆய்வில் அவர் ஆற்றிய பங்களிப்பு காத்திரமானது. குறிப்பாக சமூக உறவு மற்றும் பண்பாட்டுத் தளத்தில பேசாப் பொருளாக இருந்த பலவற்றை மார்க்சிச மற்றும் அறிவியல் கண்ணோட்டத்தில் ஆய்வுசெய்து நூல்கள் எழுதினார். நாடகத் துறையில் ஒரு மறுமலர்ச்சியை உண்டாக்கினார். ஆராய்ச்சி மாநாடுகளில் பல ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தார். அவரது ஆய்வுக்கு அவரது ஆங்கில மொழிப்புலமை பெரிதும் கை கொடுத்தது.
பேராசிரியர் சிவத்தம்பியின் மறைவினால் ஒரு சிறந்த அறிவாளியைத் தமிழினம் இழந்துவிட்டது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
-30-
கனடா
மே 15, 2011
மாண்புமிகு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கட்கு!
வணக்கம். நீங்கள் மூன்றாவது முறையாகத் தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவி ஏற்றுள்ளீர்கள். உங்களுக்கு எமது இனிய வாழ்த்துக்கள்.
இந்த வெற்றி "என்னுடைய வெற்றி" என்று கூறாமல் "இந்த வெற்றி எங்களுடைய வெற்றி, மக்களுடைய வெற்றி, மக்களுடைய உறுதிக்குக் கிடைத்த வெற்றி. ஆகவே தமிழக மக்களுக்கு நான் சொல்லக் கூடிய செய்தி உங்களது கண்ணீரைத் துடைத்துவிடுங்கள். துன்பத்தை மறந்து விடுங்கள் சிரித்துக்கொண்டே இருங்கள். உங்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் அமையும். அதற்கு நான் உறுதியளிக்கிறேன்" என்று கூறியிருப்பது எமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
பணபலம், ஊடகபலம், அதிகாரபலம் ஆகியவற்றை மிஞ்சி அதிமுக அணி வெற்றி பெற்றிருப்பது பெரிய சாதனையாகும். இந்தத் தேர்தலின் பின்னர் அதிமுக காணாமல் போய்விடும் என்று வீர வசனம் பேசியர்கள் காணாமல் போயுள்ளார்கள்!
வெற்றிபெற்ற கையோடு இனப்படுகொலைக்காக, போர்க்குற்றத்துக்காக இலங்கை அதிபர் மகிந்த இராசபக்சேயை அனைத்துலக நீதிமன்றத்தின் முன் நிறுத்த இந்திய அரசு முயற்சி எடுக்க வேண்டும். இந்திய அரசு தமிழர்களுக்கு ஒரு கவுரவமான வாழ்க்கையை, கண்ணியமான வாழ்க்கையை அளிக்க இலங்கை அரசை வற்புறுத்த வேண்டும். இலங்கை பணிய மறுத்தால் இந்தியா மற்ற நாடுகளுடன் சேர்ந்து சிறிலங்கா மீது பொருளாதாரத் தடையை விதிக்க வேண்டும். இதைச் செய்தால் இலங்கை அரசு பணிந்துதான் ஆக வேண்டும்" என்று நீங்கள் ஜெயா தொலைக்காட்சிக்குக் கொடுத்த நேர்காணலில் கூறியிருப்பது தமிழீழ மக்களையும் புலம்பெயர் தமிழர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முன்னைய காலம் போல் அல்லாது இம்முறை நீங்கள் அளித்துள்ள வாக்குறுதியைக் காப்பாற்றுவீர்கள் என நம்புகிறோம்.
உங்கள் வெற்றிக்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் அதில் முக்கியமானது திமுக - காங்கிரஸ் அணிக்கு எதிரான மக்களது எதிர்மறை நிலைப்பாடே ஆகும். அனைத்துத் தரப்பு மக்களும் ஆட்சி மாற்றத்தை விரும்பினார்கள். வெற்றிக்கு இன்னொரு காரணம் தேர்தல் காலத்தில் திருமங்கல இடைத் தேர்தல் சூத்திரம் தேர்தல் ஆணையத்தால் பெருமளவு தடுக்கப்பட்டது ஆகும்.
அரசியலில், திரைப்படத் துறையில் கருணாநிதி குடும்பத்தின் ஆதிக்கம், அங்கிங்கு இன்னாதபடி எதிலும் ஊழல், கையூட்டுக் கொடுக்காமல் அரச அலுவலகங்களில் எதையுமே செய்ய முடியாது என்ற அவலம், நாட்டில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் நடந்த கொலைகள், கொள்ளைகள், மணற்கொள்ளைகள், மின்வெட்டு, முள்ளிவாய்க்காலில் மனிதப் படுகொலை அரங்கேறிக் கொண்டிருந்த சமயம் உண்ணா நோன்பு என்ற பெயரில் கருணாநிதி அரங்கேற்றிய நாடகம், தனது மகன், மகள், பேரன் ஆகியோருக்கு அமைச்சர் பதவி கேட்டுத் தில்லியில் தவம் கிடந்த கேவலம் போன்ற காரணங்களுக்காகவே மக்கள் திமுக - காங்கிரஸ் அணிக்கு எதிராகவும் அதிமுக அணிக்கு ஆதரவாகவும் வாக்களித்தார்கள்.
திமுக வின் ஒரு உரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, 50 ரூபாய் மளிகைப் பொருட்கள், பொங்கல் பை, இரண்டு ஏக்கர் நிலம், மகளிர் சுய உதவிக் குழுக்கள், இலவச சிமெந்து வீடு, அவசர வைத்தியத்துக்கு 108 நோய்காவு வண்டிகள், தொலைக்காட்சி, கிரைன்டர், மிக்சி, கிழமைக்கு 5 முட்டைகள் போன்ற இலவசங்கள் எதுவுமே அந்தக் கட்சியைக் கரை சேர்க்க உதவவில்லை.
எனவே அதிமுக அணிக்கு விழுந்த வாக்குகள் திமுக அணிக்கு எதிரான வாக்குகள் என்று சொல்வதே சரியாக இருக்கும்.
கேரள நாட்டு வாக்காளர் போல் தமிழக வாக்காளர்களும் தங்கள் தலையிடிக்குத் தலையணையை மாற்றி வருகிறார்கள் போலத் தெரிகிறது. மறைந்த புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஒருவராலேயே அடுத்தடுத்து மூன்று முறை ஆட்சியைப் பிடிக்க முடிந்தது. கருணாநிதியாலும் சரி உங்களாலும் சரி அப்படியான சாதனையைச் செய்ய முடியவில்லை.
2001 -2006 இல் ஆட்சிக் கட்டிலில் இருந்த உங்களை மக்கள் நிராகரித்தார்கள். அதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை என்று தேர்தல் முடிவுகள் வந்த பின்னர் ஜெயா தொலைக்காட்சிக்குக் கொடுத்த நேர்காணலில் சொன்னீர்கள். ஆனால் நீங்கள் 2006 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தோற்றதற்குத் தக்க காரணங்கள் இருந்தன.
ஊடகங்களின் மீதான நெருக்குவாரம், ஒரே நாளில் 200,000 அரச ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியது, காவல்துறை மூலம் அரசியல் எதிரிகளையும் மற்றவர்களையும் கைது செய்து சிறையில் தள்ளியது, தமிழ்த் தேசிய உணர்வாளர்களைப் பொடா சட்டத்தில் கைது செய்து 18 மாதங்கள் சிறையில் அடைத்து அழகு பார்த்தது, மதமாற்றச் சட்டம், அமைச்சர்களை மாதம் ஒருமுறையாவது பந்தாடியது, சொத்துக்களை வாங்கிக் குவித்தது போன்ற குற்றச்சாட்டுக்களைக் குறிப்பிடலாம்.
உங்களிடம் இருப்பது அசாத்தியத் துணிவு. எடுத்த காரியத்தை முடிக்கும் ஆள்வினை. இல்லாதது பணிவு. " பணியுமாம் என்றும் பெருமை சிறுமை அணியுமாம் தன்னை வியந்து" என்பது வள்ளுவர் வாக்கு. அதாவது பெருமை உடையவர் செருக்கு இல்லாமல் பணிவுடன் இருப்பர். சிறுமை உடையவரோ செருக்குடன் தம்மைத் தாமே வியந்து பாராட்டுவர்.உங்களது ஆட்சி நல்லாட்சியாக அமைய உங்களுக்கு இன்னொரு குறளையும் இந்த இடத்தில் நினைவு படுத்த விரும்புகிறோம்.
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.
கடிந்து அறிவுரை கூறும் பெரியாரின் துணை இல்லாத காவலற்ற அரசன் தன்னைக் கெடுக்கும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான்.
முன்னாள் முதல்வருக்கு இதுதான் நடந்தது. இடித்துச் சொல்வதற்கு யாரும் இருக்கவில்லை. அவரைச் சுற்றி காலை, மாலை போற்றிபாடும் - அவர் எதைக் கேட்க விரும்புகிறாரோ அதைச் சொல்லும் - ஒரு காக்காய் கூட்டந்தான் இருந்தது.
எனவே மாற்றுக் கருத்துக்கு இடங்கொடுங்கள். ஊடக சுதந்திரத்துக்கு இடம் கொடுங்கள். சட்டத்தின் ஆட்சி என்ற கோட்பாட்டைக் கண்டிப்பாகக் கடைப்பிடியுங்கள். எழைகளுக்கு ஒரு நீதி பணக்காரர்களுக்கு ஒரு நீதி என்ற அநீதியை ஒழியுங்கள்.
பட்டப் பகலில் ஒன்றுக்கு மூன்று கொலைகளைச் செய்து விட்டு சட்டத்தின் ஓட்டைகள் வழியாக வெளியே வந்தவர்களை மீண்டும் நீதியின் முன் நிறுத்தித் தண்டனை வாங்கிக் கொடுங்கள்.
தமிழ்மொழி செழித்து வாழ தமிழில் அரச நிருவாகம், தமிழில் நீதிமன்ற விசாரணை, தமிழில் கோயில் வழிபாடு, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் உரிமை ஆகியவற்றை நடைமுறைப் படுத்துங்கள். குழந்தைகளுக்குப் பெற்றோர்கள் தூய தமிழ்ப் பெயர்களை வைக்க வேண்டும் என்று சட்டம் இயற்றுங்கள். இரட்டைத் தம்ளர் முறையை ஒழித்துக் கட்டுங்கள். ஊரைப் பிரிக்கும் சாதிச் சுவர்களை இடித்துத் தள்ளுங்கள்.
இவற்றை நீங்கள் செய்தால் உங்கள் ஆட்சி நல்லாட்சியாக மட்டுமல்ல பொற்கால ஆட்சியாகவும் அமையும் என்பதில் அய்யமில்லை. மீண்டும் வாழ்த்துக்கள்.
அன்புடன்
நக்கீரன்
தலைவர்
தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்
ஏப்ரில் 05, 2011
ஊடக அறிக்கை
தமிழ் மக்களைக் கொன்று குவிக்கக் காரணமாக இருந்த காங்கிரஸ் கட்சியைத் தோற்கடியுங்கள்!
எம் உயிரினும் மேலான சொந்தங்களே!
தமிழகத்தின் அடுத்த அய்ந்தாண்டு கால தலைவிதியை தீர்மானிக்கும் தேர்தலுக்கு இன்னும் ஏழு நாட்களே எஞ்சியிருக்கின்றன.
இந்தத் தேர்தலில் எந்த அணிக்கு வாக்குப் போடுவது என்பதைவிட எந்த அணிக்கு வாக்குப் போடக்கூடாது என்பதே முக்கியமாகும்.
2009 மே மாதத்தில் முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய தமிழினப் படுகொலைக்குப் பொறுப்பாக இருந்த இநதிய காங்கிரஸ் கட்சியையும் அதற்குத் துணைபோன திமுக இரண்டுக்கும் எதிராக நீங்கள் வாக்களிக்க வேண்டும். குறிப்பாக 63 தொகதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் நாயன்மார்களுக்கு எதிராக நீங்கள் வாக்களித்து அந்தக் கட்சியைத் தோற்கடிக்க வேண்டும்.
காங்கிரஸ் கட்சி தமிழ்த் தேசியத்தின் முதல் எதிரி. இந்தக் கட்சியே தமிழீழ மக்களைக் கொன்றொழித்த சிங்கள - பவுத்த இனவெறியன் மகிந்தா இராசபக்சேக்கு ஆயுதம், இராடர், போர்க் கப்பல்கள், புலனாய்வு, பயிற்சி, நிதி எனச் சகல உதவிகளையும் வழங்கியது. இதனை மகிந்த இராபச்சேயே ஒப்புக் கொண்டு இருக்கிறார்.
" வி.புலிகளுக்கு எதிரான இந்தியாவின் போரையே நாம் நடத்தி முடித்தோம்" என மகிந்தா இராபக்சே பகிரங்கமாக இந்திய காங்கிரஸ் அரசுக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இது ஒன்றே காங்கிரஸ் கட்சியை குற்றவாளிக் கூண்டில் ஏற்றப் போதுமானதாகும்.
சிறிலங்கா அரசுக்கு ஆயுதம் கொடுத்து உதவியதை தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் மதிமுக கட்சிப் பொதுச் செயலாளர் வைகோவுக்கு எழுதிய மடலில் ஒப்புக் கொண்டுள்ளார்.
எனவே காங்கிரஸ் கட்சிதான் ஈழத்தமிழர்களுக்கு வாய்க்கு அரிசி போட்டது. சோனியா காந்தியின் கைகளில் தமிழர்கள் சிந்திய பச்சைக் குருதி படிந்துள்ளது. இன்றுவரை முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய இனப்படுகொலையைக் கண்டிக்காத ஒரே தலைவர் சோனியா காந்தி. ஒரே கட்சி காங்கிரஸ் மட்டுமே!
வட இந்திய இந்தி அரசுகள் தமிழர்களைக் கிள்ளுக் கீரையாகவே நடத்துகிறது. மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடந்து கொள்கிறது. 536 தமிழக மீனவர்கள் சிறிலங்கா சிங்களக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்ட போது காங்கிரஸ் அரசு வாய்மூடி மவுனியாகக் கிடந்தது.
காங்கிரஸ் ஊழலின் ஊற்றுக்கண்ணாகத் திகழ்கிறது. இந்திரா காந்தியின் நகர்வாலா ஊழல், இராஜீவ் காந்தியின் போபர்ஸ் ஊழல், நரசிம்மராவின் ஹர்ஷத் மேத்தா - பங்குப் பத்திர ஊழல், மன்மோகன் சிங் ஆட்சியின் ஸ்பெக்ட்ரம் ஊழல், பொதுநல நாடுகளின் விளையாட்டுப் போட்டி ஊழல், ஆதர்சு வீடு வழங்குவதில் நடைப்பெற்ற ஊழல் எலலாம் காங்கிரஸ் கட்சி ஆட்சிக் காலத்திலேயே அரங்கேறியுள்ளன.
ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து இன்று வரை உதடு திறந்து அன்னை சோனியா காந்தியோ இராகுல் காந்தியோ ஒரு சொல் சொல்லவில்லை. காங்கிரஸ் கைகளில் படிந்து இருக்கும் ஊழல் கறைகளை உலகின் எந்தப் புண்ணிய நதியிலும் கழுவிக் கரைக்க முடியாது.
தன்னைத் தமிழினத் தலைவர் என்று சொல்லிக் கொள்ளும் முதல்வர் கருணாநிதி காங்கிரஸ் கட்சி செய்த துரோகத்துக்குத் துணை போயுள்ளார். அவரது நான்கு மணித்தியால உண்ணா நோன்பு ஊரையும் உலகத்தையும் ஒரு சேர ஏமாற்ற அரங்கேற்றப்பட்ட நாடகமாகும். உண்மை என்னவென்றால் முதல்வர் நாற்காலியா இனமானமா என வந்தபோது அவர் நாற்காலியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.
மறைந்த பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் மட்டும் இன்று உயிரோடு இருந்திருந்தால் ஈழத்தமிழர்களுக்கு இந்த இழப்பு, சாவு தமிழினத்துக்கு வந்திருக்காது.
"பதவி தோளில் போடும் துண்டு கொள்கை இடையில் கட்டும் வேட்டி" என்று அறிஞர் அண்ணா சொன்னதை வாயளவில் சொல்லிக் கொண்டிருந்தாரே ஒழிய முதல்வர் கருணாநிதி அதனை நம்பவில்லை.
முள்ளிவாய்க்காலில் மக்கள் ஆயிரக்கணக்கில் செல்லடிக்கும் கொத்துக் குண்டுகளுக்கும் பலியாகிக் கொண்டிருந்த போது தள்ளுவண்டியில் தில்லி சென்ற முதல்வர் கருணாநிதி தனது மகன், மகள், பேரன் ஆகியோருக்கு பால் கறக்கும் அமைச்சர் பதவிகளை பெற்றுக் கொடுப்பதற்கு காங்கிரஸ் கட்சியோடு பேரம் பேசிக் கொண்டிருந்தார். கேட்ட அமைச்சுக்கள் கிடைக்கவில்லை என்றவுடன் "இனி காங்கிரசுக்கு வெளியில் இருந்துதான் ஆதரவு" என்று புலுடா விட்டார்.
வாரிசுகளைக் கொண்டு வர திமுக ஒன்றும் சங்கர மடம் அல்ல எனச் சொல்லி விட்டு தனது இரண்டாவது மகனுக்கு துணை முதல்வர் ஆக பட்டம் சூட்டிவிட்டார். வாரிசு அரசியலுக்கு தடையாக இருந்த வைகோ மீது கொலைப் பழி சுமத்தி அவரைத் திமுகவில் இருந்து திட்டமிட்டு வெளியேற்றினார். "நான் மிக மிகப் பிற்பட்ட வகுப்பில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த சாமானியன்" என்று சொல்லிக் கொண்டு இன்று பல கோடிகளுக்குச் சொந்தக்காரனாகி கோபுரத்தில் குடியிருக்கிறார்.
அதே சமயம் அய்ந்து முறை முதல்வராக இருந்தும் இரட்டைத் தம்ளர் முறையை ஒழிக்க முடியவில்லை. சாதிச் சுவர்களைத் தகர்க்க முடியவில்லை. தமிழ்மொழியை நீதிமன்ற மொழியாக்க முடியவில்லை. நிருவாக மொழியாக நடைமுறைப் படுத்த முடியவில்லை. கற்கை மொழியாக அறிவிக்கவில்லை. தமிங்கிலத்தை ஒழிக்க முடியவில்லை. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பது நிறைவேறவில்லை.
அறிஞர் அண்ணா காலத்தில் காங்கிரஸ் கட்சியை விழுத்துவதே அவரது இலட்சியமாக இருந்தது. முதல்வர் கருணாநிதியோ தன்னைக் காப்பாற்றிக் கொள்ள இந்திரா காந்தி காலிலும் இன்று சோனியாவின் காலிலும் விழுந்து கிடக்கிறார்.
அறிஞர் அண்ணா தனது கைகள் கறைபடியாத கைகள் என்று அடிக்கடி சொல்வார். ஆனால் முதல்வர் கருணாநிதியே தமிழ்நாட்டில் ஊழலுக்குக் கொடியேற்றம் செய்து வைத்தவர். அதனை இன்றுவரை ஒரு நுண்கலையாக வளர்த்து வருபவர். ஸ்பெக்ட்ரம் 2 ஆவது தலைமுறை அலைக்கற்றை மூலம் தமிழன் புகழ் உலகம் முழுதும் பரப்பப்பட்டுள்ளது. முதல்வர் கருணாநிதி செய்துவிட்டார். ஸ்பெக்ட்ரம் ஊழலில் 1.76 இலட்சம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இந்த பணத்தில் நாட்டின் பாதி கடனை அடைத்து விடலாம். முன்னாள் அமைச்சர் இராசாவின் தயவால் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்களில் ஒன்றான, ஸ்வான் நிறுவனத்தின் தலைவர் ஷாகித் பல்வாவால் பல்வாவால் உருவாக்கப்பட்ட, "டிபி' ரியால்டி குழும நிறுவனங்களில் ஒன்றான சினியுக் நிறுவனத்திடம் இருந்து கலைஞர் தொலைக்காட்சிக்கு உத்தரவாதமில்லாத கடனாக 214 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறது. இப்போது அந்த பல்வால் மத்திய புலனாய்வு நிறுவனத்தால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
எனவே தமிழீழ மண்ணில் சிங்களக் கொடுங்கோலர்களால் அரங்கேற்றி முடிக்கப்பட்ட தமிழினப் படுகொலையில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ள காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களையும் அதற்குத் துணை போன திமுக வேட்பாளர்களையும் ஏப்ரில் 13 அன்று நடைபெறும் தேர்தலில் தோற்கடியுங்கள். இந்த இரண்டு கட்சிகளைத் தோற்கடித்தால் மட்டுமே தமிழினத்தின் மானத்தை மீட்டெடுக்கலாம்.
காங்கிரஸ் கட்சியை புதைப்போம் என்ற முழக்கத்தோடு செந்தமிழன் சீமான் தலைமை தாங்கும் நாம் தமிழர் கட்சி தேர்தல் களத்தில் குதித்துள்ளது. அதனை நாம் மனதார வழிமொழிகிறோம்.
உங்கள் பொன்னான வாக்குகளை காங்கிரஸ் - திமுக கூட்டணிக்கு எதிராகப் போட்டு தமிழினம் மயிர் நீப்பின் வாழாக் கவரிமான் என்பதை இந்தத் தேர்தலில் ஊர் உலகுக்கு எண்பித்துக் காட்டுங்கள். நன்றி.
தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்