இழிவாக வாழோம்! தமிழீழப்போரில் ஒருபோதும் ஓயோம் உறுதி!

நக்கீரன்

மிழ் மண்ணின் விடுதலைக்காகக் களம் ஆடி விழுப்புண்பட்டு வீழ்ந்து நடுகல்லாகிவிட்ட மாவீரர்களின் அளப்பரிய தற்கொடையை நினைவு கூறுமுகமாக மாவீரர் விழா உலகெங்கும் பரந்துபட்டு வாழும் தமிழ் மக்களால் சீரோடும் சிறப்போடும் வீறோடும் மறவுணர்வோடும் முன்னைய ஆண்டுகள் போலவே இந்த ஆண்டும் கொண்டாடப்படுகிறது.

மே 17 இல் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மவுனிக்கப்பட்டது முதல்  தமிழீழத்தில் எமது மாவீர தெய்வங்களுக்கு விழா எடுக்க முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது. தமிழ்மக்களின் பேச்சுச் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது.

தமிழீழத்தை வல்வளைப்புக்குள் வைத்திருக்கும் சிங்கள பேரினவாத அரசு காட்டுமிராண்டித்தனமான  முறையில் எமது  மாவீரர் துயிலும் இல்லங்களை உழுது அழித்துள்ளார்கள்.  போர்முறை விதிகளைக் காலில் போட்டு மிதித்துள்ளார்கள்.

எங்கள் மாவீர தெய்வங்களின் துயில் இல்லங்களை அழிப்பதன் மூலம் அவர்களது நினைவை எமது நெஞ்சங்களில் இருந்து நீக்கிவிடலாம் என்று சிங்கள இனவாத அரசு கனவு காண்கிறது. 

முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் கடந்த ஆண்டு புலம்பெயர் நாடுகளில்  மாவீரர்களுக்கு  எடுத்த எழுச்சி  விழாக்கள் அந்தக் கனவைப் பொய்ப்பித்தது.

எமது மாவீரர்கள் வீரத்தின் விளைநிலமாக விளங்கியவர்கள். செருமுகத்தில் எதிரிகளைப் பந்தாடி விழுப்புண் பட்டு வீழ்ந்தவர்கள். மண்ணில் மட்டுமல்ல விண்ணிலும் பெருங்கடலிலும் போராடிக் காவியம் ஆனவர்கள்.

கிறித்துவுக்குப் பின் 13 ஆம் நூற்றாண்டளவில் சோழ, பாண்டிய பேரரசுகள் மறைந்த பின்னர் எஞ்சியிருந்தது யாழ்ப்பாண இராச்சியமே. அதுவும் கிபி 1619 ஆம் ஆண்டு போர்த்துக்கீசரிடம் வீழ்ந்தது.  அதன் பின்னர் இருபதாம் நூற்றாண்டின் இறுதியிலேயே தமிழினம் கையில் ஆயுதம் ஏந்தியது. ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒரு மாவீரன் அதற்குத் தலைமை தாங்கி வரலாறு படைத்தான்.

தரைப்படை, கடற்படை, வான்படை எனப் போர்க்களங்கள் விரிந்தன. எதிரிகளின் படை முகாம்கள், போர்க்கப்பல்கள், வானூர்திகள் அழிக்கப்பட்டன.

1999 ஆம் ஆண்டு வன்னி மண்ணில் ஓங்கி வீசிய ஓயாத அலை எமது போராட்ட வரலாற்றில் பெரிய திருப்பு முனையாக இருந்தது. ஓயாத அலையில் ஒன்றல்ல பத்துக்கும் மேற்பட்ட இராணுவ முகாம்கள் சட சடவென, பொல பொல எனச் சரிந்தன! வன்னியில் 30 கும் மேற்பட்ட தமிழ் ஊர்கள் சிங்களப் படையின் பிடியில் இருந்து மீட்கப்பட்டன. மொத்தம் 1,400 சதுர கி.மீட்டர் நிலப்பரப்பு புலிகளின் கட்டுப்பாட்டில் மீண்டும் கொண்டுவரப்பட்டது. அதையடுத்து சிங்களப் படையின் அசைக்க முடியாத கோட்டைகள் என்று கொண்டாடப்பட்ட  இயக்கச்சி - ஆனையிறவு மற்றும் பளை இராணுவ தளங்கள் வி.புலிகளின் கைகளில் வீழ்ந்தன.

எமது மாவீரர்களின் இத்தகைய வீரம் செறிந்த போர்கள்தான் இன்றும் உலகம் முழுதும் தமிழினத்துக்கு ஒரு முகவரியை வாங்கித்தந்துள்ளன.

இந்த ஆண்டு நடைபெறும் மாவீரர் விழாவில் தேசியத் தலைவரின் உரை இல்லாது இருக்கலாம். மாவீரர் துயிலும் இல்லங்களில் விளக்கேற்றி வணங்கும் காட்சிகளைத்  தொலைக்காட்சியில் காணமுடியாமல் இருக்கலாம்.  ஆனால் உள்ளத்தில் ஊறும்  உணர்வுகள் எப்போதும் போலவே இப்போதும் பீறிட்டுப் பாய வேண்டும்.

எமது விடுதலைப் பயிரை கடந்த  30  ஆண்டுகளுக்கு மேலாக கண்ணீர்,  வியர்வை,  குருதி சிந்தி வளர்த்து   வந்திருக்கிறோம். அவை எல்லாம் வீண் போகக் கூடாது.

முள்ளி வாய்க்கால் இறுதிப் போர் வரை தமிழீழ விடுதலை வேள்வியில் முப்பதாயிரத்துக்கும் அதிகமான தளபதிகளும் வீரர்களும் வீராங்கனைகளும் கடற்புலிகளும் கரும்புலிகளும் களமாடி கடலில் கரைந்தும் காற்றில் கலந்தும் தீயில் எரிந்தும் மண்ணில் புதைந்தும் போயிருக்கிறார்கள். அந்த மறைந்தும் மறையாத மாவீர தெய்வங்களுக்கு வாழ்த்தும் வீர வணக்கமும், வழிபாடும் செய்யும் இந்நாள் தமிழ் மக்களுக்கு ஒருதிருநாள்.  தமிழினத்தின் தேசிய நாள்.

களத்தில் விழுப்புண் பட்டு மரணத்தைத் தழுவிக் கொண்ட முதல் விடுதலைப் .புலிப் போராளி சங்கர் என்ற சத்தியநாதன் களத்தில் வீழ்ந்து மரணத்தைத் தழுவிக் கொண்ட நொவம்பர் 27ஆம் நாளையே இன்று உலகெங்கும் மாவீரர் நாளாகக் கொண்டாடி வருகிறோம்.

விடுதலை என்பது சும்மா வராது. அதற்கு ஒரு விலை இருக்கிறது.  "அக்கா அக்கா என்று நீ அழைத்தாய் அக்கா வந்து கொடுக்க சுக்கா மிளகா சுதந்திரம் கிளியே?" என்று தச்சன் கூடே சதமென்று கிடந்த கிளியைப் பார்த்து வானவீதியில் பறந்து திரிந்து தென்னங் கீற்றுப் பொன்னூஞ்சல் ஆடிச் சோலை பயின்று சாலையில் மேய்ந்து வானும் மண்ணும்தன் வசத்திற்கொண்ட சோலைக் கிளி கேட்டதாம்.

உலக வரலாற்றில் விடுதலைக்குப் போராடிய மக்கள் எல்லோரும் குருதி், கண்ணீர், வியர்வை இவற்றை விலையாகக் கொடுத்தே விடுதலையை வென்றெடுத்திருக்கிறார்கள். அய்ரிஷ் தொடங்கி எரித்திரியா வரை, கொசோவோ தொடங்கி கிழக்கு தீமோர் வரை இடம்பெற்ற வீரம் செறிந்த விடுதலைப் போராட்டங்கள் நீண்ட காலத்தின் பின்னரே வெற்றியடைந்தன. அந்த மக்கள் அதன் பின்னரே சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடிந்தது. இந்த உண்மையை நாம் மறந்துவிடக் கூடாது.

கிழக்கு தீமோர் மக்கள் விடுதலைக்காக ஆண்டுக் கணக்கில் ஆயுதம் ஏந்தி, குருதி சிந்திப் போராடிக் கண்ணினும் இனிய தங்கள் பொன்னாட்டை அன்னிய நாட்டின் பிடியிலிருந்து மீட்டு எடுத்தார்கள். இன்று கிழக்கு திமோர் அய்க்கிய நாடுகள் அவையின் 191ஆவது  உறுப்பு நாடாக அனுமதிக்கப்பட்டு அந்த நாட்டின் கொடி அய்க்கிய நாடுகள் அவை  முன்றலில் பட்டொளி வீசிப் பறக்கிறது!

தமிழீழ மக்களது விடுதலைப் போராட்டம் இந்த இயற்கை நியதிக்கு விதி விலக்கானதல்ல. எங்கள் விடுதலைக்காக உச்சகட்ட   விலை கொடுத்துள்ளோம். அது வீண்போகக் கூடாது.

ஆயுதங்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டாலும் போருக்கான காரண காரியங்கள் முன்னரைவிட இன்று பூதாகாரமாக எழுந்து நிற்கின்றன. வடக்கும் கிழக்கும் சிங்களப் படைகளின் நேரடி ஆட்சியில் கொண்டுவரப்பட்டுள்ளன. ஓய்வு பெற்ற சிங்களத் தளபதிகளே ஆளுநர், அரச அதிபர், செயலர் ஆகிய பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளார்கள்.  வடகிழக்கில் உள்ள  ஏழு நிருவாக மாவட்டங்களில் மூன்று  மாவட்டங்களில் மட்டும் தமிழர்கள் அரச அதிபர்களாக  இருக்கிறார்கள். 

முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ஆற்று அணை உடைந்தால் எப்படியோ அப்படியான ஒரு நிலை வடக்கிலும் கிழக்கிலும் எழுந்துள்ளது.

திருகோணமலையில் தமிழ் மக்களின் பாரம்பரிய இடங்களைத் தொல்லியல் ஆய்வு எனும் போர்வையில் சிங்கள மயமாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது.  தமிழ் மக்களின் பாரம்பரிய இடங்களில் புத்தர் சிலைகள் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறி பவுத்த விகாரைகள் கட்டப்பட்டு வருகின்றன.  அண்மையில் கன்னியா வெந்நீரூற்று அமைந்துள்ள பகுதியை திருகோணமலை அரச அதிபர் ரி.ஆர்.ஆர்.சில்வா (முன்னாள் இராணுவ தளபதி) தொல்லியல் ஆய்வு இடம் எனப் பிரகடனத்படுத்தி  அதனைக் கையகப்படுத்தியுள்ளார். பிரதேச அவை அங்கு வைத்திருந்த அறிவித்தல் பலகையை அவர் பிடுங்கி எறிந்துள்ளார். குச்சவெளியிலும் பிள்ளையார் ஆலயத்துக்கு அருகில் கிணறு வெட்டும்போது புத்தர் சிலைகள் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறி அதே அதிபர்   அதனையும் தொல்லியல் ஆய்வு இடமாக அறிவித்துள்ளார். அது மட்டுமல்ல இந்த இரண்டு இடங்களிலும் பவுத்த விகாரைகள் கட்டப்பட்டுள்ளன.  திரியாய் என்னும் ஊரில் அமைந்துள்ள வெலகம் விகாரைக்கு 1,000 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

 பண்டைய யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகரமும் இன்றைய தமிழ் மக்களது கலை கலாசாரம், நாகரிகம் இவற்றின் தொட்டில் என அழைக்கப்படும் யாழ்ப்பாணத்திலும் சிங்களக் குடியேற்றங்கள் அரசு ஆதரவோடு நடைபெறுகின்றன. மணியம்தோட்டம், கைதடி போன்ற பகுதிகளில் இராணுவம் தென்னிலங்கையில் இருந்து சென்ற சிங்களவர்களைக் குடியமர்த்தி உள்ளது. அவர்கள் குடியிருப்பதற்கு சீனாவின் உதவியோடு வீடுகளையும் கட்டிக் கொடுக்கிறது.

ஊடகத்துறை அமைச்சர் கெகலிய இரம்புக்வெல்ல  "இந்த நாடு எல்லோருக்கும் சொந்தம். யாரும் எந்த இடத்திலும் வாழலாம்" என்கிறார். மேல் எழுந்தவாறு பார்த்தால் இது பெருந்தன்மை போல் தோன்றும். ஆனால் உண்மையில் சிங்கள இனவாத அரசின் மேலாதிக்க சிந்தனையையே இது காட்டுகிறது.  தென்னிலங்கையில் உருவாக்கப்பட்ட எந்தக் குடியேற்றத்திட்டத்தில் ஆவது தமிழர்கள் குடியேற்றப்பட்டுள்ளார்களா?

தமிழர்களது தாயக மண்ணை அபகரிப்பதன் மூலம் தமிழர்களின் தாயகக் கோட்பாட்டை உடைப்பதே இனவாத சிங்கள அரசின் தலையாய திட்டமாக இருக்கிறது. இதில் கிழக்கில் பேரளவு வெற்றிபெற்ற சிங்கள இனவாத அரசு தனது கவனத்தை வடக்குக்குத் திருப்பியுள்ளது. இராணுவ  மயப்படுத்தப்பட்டுள்ள வடக்கை சிங்கள - பவுத்த மயப்படுத்துவது எளிதாக இருக்கும் என அது நம்புகிறது.

ஒரு சுதந்திர தமிழீழ நாட்டிலேயே தமிழ் மக்கள் பாதுகாப்பாகவும் நிம்மதியாகவும் யாருக்கும் தலைவணங்காது வாழமுடியும் என்ற உண்மையை கடந்த கால வரலாறு எடுத்துக் காட்டுவதாக இருக்கிது. எனவே நாம் பிறந்த பொன்னாட்டை மாற்றலர் பிடியிலிருந்து விடுவிக்க இந்த மாவீர் நினைவு நாளில் நாம் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதுவே தாயக விடுதலைக் கனவுகளை நெஞ்சினில் சுமந்து சாவினைத் தழுவிக் கொண்ட எம் மாவீரர்களுக்கு நாம் செலுத்தக்கூடியமிகப் பெரிய நினைவு வணக்கமாகும்.

கார்த்திகை 27 இல் உங்கள் கல்லறைகளிலும் எங்கள் வீடுகளிலும் விளக்கேற்றி உறுதி எடுத்துக் கொள்கிறோம்! 

மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி!
வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி!
விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி!
இழிவாக வாழோம்! தமிழீழப்போரில் ஒருபோதும் ஓயோம் உறுதி!

உங்கள் ஈகை வீண்போகாது!
உங்களை அழித்தவர்களைப் பழிவாங்குவோம்!
உங்கள் தாயகக் கனவினை நினைவாக்குவோம்!