பௌத்த சின்னங்கள் வடக்கு கிழக்கில் காணப்படுவதற்கு காரணம்  பழைய காலத்தில் தமிழ் மக்கள் பௌத்தர்களாக இருந்தமையே!

நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன்
[Thursday, 2012-11-08]

டக்கு கிழக்கில் பவுத்த சின்னங்கள் காணப்படுவதின் காரணம் ஒரு கால கட்டத்தில் தமிழ் மக்கள் பவுத்தர்களாக இருந்தமையே என ஈழத்தமிழரின் வரலாறும் வாழ்வியலும் நூல் வெளியீட்டு விழாவில் தலைமையுரை ஆற்றிய நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் திரு தம்பு கந்தையா எழுதிய ஈழத்தமிழரின் வரலாறும் வாழ்வியலும் நூல் வெளியீட்டு விழா கடந்த ஒக்தோபர் 09, 2012 அன்று மாலை கொழும்புத் தமிழ்ச்சங்க மண்டபத்தில் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.


விழாவுக்கு முன்ணனி எழுத்தாளர்கள், அறிஞர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். கொழும்புத் தமிழ்ச் சஙகத்தின் செயலாளர் ஏ. இரகுபதி பாலசிறீதரன் விழாவுக்கு வருகைதந்த அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் தனது தலைமையுரையில் நூலாசிரியரின் பணியைப் பாராட்டிப் பேசினார். "இன்று சிங்கள மக்கள் மகாவம்சத்தை வைத்தே தமது சரித்திரத்தை முன்வைக்கிறார்கள். மகாவம்சம் பற்றி ஒரு வார்த்தை சொல்ல வேண்டும். கல்கி கிருஷ்ணமூர்த்தி "பொன்னியின் செல்வன்" என்ற நாவலை எழுதினார். அதில் காணும் வந்தியத் தேவனும் குந்தவையும் சரித்திரத்தில் இடம் பெற்றவர்களே. ஆனால், அவர்களை மையமாக வைத்து கல்கி எழுதிய நாவல் கல்கியின் கற்பனையே. அது போலத்தான் மகாவம்சம். மகாவம்ச ஆசிரியர் மகாநாம தேரர் கர்ண பரம்பரையாக கேள்விப்பட்டிருந்த அரசர்களின் பெயர்களை சரியாக எழுதியிருக்கிறார். ஆனால் அவர்கள் சம்பந்தமாக அவர் எழுதியுள்ளது பெருமளவு அவரது கற்பனையே" எனக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசுகையில் "வடக்கு கிழக்கில் பவுத்த சின்னங்கள் காணப்படுவதின் காரணம் ஒரு கால கட்டத்தில் தமிழ் மக்கள் பவுத்தர்களாக இருந்தமையே. அண்மையில் பேராசிரியர் சுனில் ஆரியரத்தின "தெமல பவுத்தவோ" (பவுத்தத் தமிழர்கள்) என்ற நூலை சிங்களத்தில் எழுதியிருந்தார். அதனை வெளியிட்ட போது அதற்கு சிங்கள மக்களில் ஒரு சாராரிடம் இருந்து எதிர்ப்புத் தோன்றியது. ஈழத்தமிழர் வரலாறும் வாழிவியலும் என்ற நூல் இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கு பற்றிய நூல் மட்டும் அல்ல. இலங்கையின் ஆதிகால மக்கள் பற்றியும் அவர்களது சமய வழிபாட்டு முறைகள் பற்றியும் அவர்களின் அரசுகள் பற்றியும் அவர்களிடையே வளர்ந்த சமூகப் பிரிவுகள் பற்றியும் சட்டங்கள் பற்றியும் தமிழர்களது பாரம்பரிய விளையாட்டுக்கள் பற்றியும் அவர்களது சடங்குகள் சம்பிரதாயங்கள் பற்றியும் நூலாரிரியர் எழுதியுள்ளார். இந்த நூல் தமிழ் - ஆங்கிலம் இரண்டிலும் வெளிவருவது தமிழ் அல்லாதவர்களுக்கும் பயன்படும்."

திரு. மு. கதிர்காமநாதன், சட்டத்தரணி வாழ்த்துரை வழங்கினார். நூலின் முதல் படியை திரு. கனகேஸ்வரன், சனாதிபதி வழக்கறிஞர் பெற்றுக் கொண்டார்.திரு மனோ கணேசன், நா.உ., தலைவர் சனநாயக முன்னணி சிறப்புரை ஆற்றினார்.


திருமதி சுகந்தி இராஜகுலேந்திரா நூல் பற்றிய மதிப்புரையை வழங்கினார். நயவுரையை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி முன்னாள் ஆசிரியர் வழங்கினார்.ஏற்புரையை நூலாசிரியர் தம்பு கந்தையா, வழக்கறிஞர் நிகழ்த்தினார்.ஈழத்தமிழர் வரலாறும் வாழ்வியலும் என்ற நூலுக்கு வரலாற்றுப் பேராசிரியர் எஸ். பத்மநாதன் (பெரதேனியா பல்கலைக் கழகம்) ஆங்கிலத்தில் முகவுரை எழுதியுள்ளார். திரு நக்கீரன் ஆய்வுரை எழுதியுள்ளார். திரு வெல்லாவூர்க் கோபால் மதிப்புரை வரைந்துள்ளார். திரு எஸ். ஆறுமுகம் அணிந்துரை வழங்கியுள்ளார். திரு மா.க. ஈழவேந்தன் வாழ்த்துரை வழங்கியுள்ளார்.

நூலின் அட்டையை யாழ்ப்பாணத்தை ஆண்ட கடைசி மன்னன் இரண்டாவது சங்கிலியனது அரண்மனை மற்றும் வெடியரசன் கோட்டை நிழற்படங்கள் அலங்கரிக்கிறது. இந்த நூல் ரொறன்ரோவிலும மிக விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.

                        http://www.yarl.com/forum3/index.php?showtopic=110929

http://www.jvpnews.com/srilanka/2026.html