பேரறிஞர் அண்ணாவின் இலக்கியப் படைப்புகள் தமிழ் இலக்கிய
உலகிற்குக் கிடைத்த புதையல்கள்.
சேடி இல்லாத இராசகுமாரி
சோடி இல்லாத மாடப்புறா
மோடி செய்யாத வேதாந்தி
உலகிலே இருக்க முடியாது
இந்த உரையாடல் பேரறிஞர் அண்ணா எழுதிய வேலைக்காரி நாடகத்தில் இடம் பெற்றவை. பின்னர் அந்த நாடகம் அதே பெயரில் 1948 இல் திரைப்படமாக வெளிவந்தது. திரைப்படத்துக்கும் கதை, உரையாடல் இரண்டையும் அண்ணாவே எழுதியிருந்தார்.
சம்பூர்ண இராமாயணம், அரிச்சந்திரா, சிவகவி போன்ற புராணப்படங்கள் வந்து கொண்டிருந்த காலத்தில் சாதி வேற்றுமை, மூடநம்பிக்கை போன்றவற்றைச் சாடி வரையப்பட்ட கதை வேலைக்காரி. பெரிய மனிதர், பக்திமான் என்ற போர்வையில் சமுதாயத்தில் இரட்டை வேடம் போட்டுத் திரிபவர்களின் முகமூடியை அண்ணா இந்தத் திரைப்படம் மூலம் கிழித்துக் காட்டினார். வேலைக்காரித் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிச் சாதனை படைத்தது.
வேலைக்காரி நாடகத்தைப் பார்த்த கல்கி கிருஷ்ணமூர்த்தி அறிஞர் அண்ணாவை தமிழ்நாட்டின் பேர்நாட் ஷோ என வருணித்து எழுதியிருந்தார். வேலைக்காரித் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு திறனாய்வு எழுதிய கல்கி அந்தப் படத்துக்கு அண்ணா எழுதிய உரையாடல்கள் “உறையில் இருந்து உருவிய வாள் போல் மின்னியது” என மனம் திறந்து பாராட்டியிருந்தார். எதுகை மோனையோடு எழுதப்பட்ட உரையாடல் தமிழ் உரைநடைக்கு முன்னர் இல்லாத அழகையும் இனிமையையும் சேர்த்தன.
வேலைக்காரி மட்டுமல்ல அண்ணாவின் படைப்புகளான பார்வதி பி.ஏ.
குமாஸ்தாவின் பெண், இரங்கோன் ராதா, ஓர் இரவு இன்னபிற அவர் எழுதிய தலைசிறந்த
படைப்பு இலக்கியங்கள் ஆகும்.
மராட்டியத்தை ஆண்ட மாவீரன் சிவாஜி சனாதனதர்மக் கொடுமையால் மகுடம் சூட்ட
முடியாதபடி சூழ்ச்சி வலை பின்னப்பட்டதை எடுத்துக்காட்டி ‘விதையாது விளையும்
கழனிகளிடம் கவனம் தேவை’ என எச்சரித்து அண்ணாவே காகப்பட்டராக நடித்தார். சிவாஜி
கண்ட இந்துராஜ்யம் என்ற நாடகம்; காலத்தால் என்றும் அழியாத ஒன்றாகும்.
அண்ணாவின் அடுக்குமொழி மேடைப் பேச்சும் எழுத்தும் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு
புதிய அத்தியாயத்தைத் தொடக்கி வைத்தது.
தந்தை பெரியாரின் சீடராகப் பொது வாழ்வைத் தொடங்கிய அண்ணா அவர்கள்,
பெரியாரது சமுதாய சீர்திருத்தக் கருத்துகளை தமக்கே உரிய தனிப் பாணியில் பேசியும்
எழுதியும் கற்றோரையும் மற்றோரையும் - குறிப்பாக இளையோரைக் கவர்ந்தார்.
இலக்கியத்தில் அண்ணா எந்தத்துறையையும் விட்டு வைக்கவில்லை. கட்டுரை, கடிதம், கதை,
புதினம், நாடகம், திரைப்படம் என அவர் தொடாத துறை இல்லை எனலாம். அவர் விட்டுவைத்த
துறை கவிதை மட்டுமே!
அண்ணா எழுதிய ஆரியமாயை, அவர் பேசிய ஏ தாழ்ந்த தமிழகமே இரண்டும் கால வெள்ளத்தால் அழிக்க முடியாத வரலாற்றுப் பெட்டகங்கள் ஆகும். 1942 ஆம் ஆண்டு அண்ணா எழுதிய நீதி தேவன் மயக்கம் என்ற நாடகம் தமிழ் இலக்கிய உலகம் இதுவரை கண்டிராத புதிய படைப்பு! ஒரு புதிய புரட்சி!
‘இரக்கமெனும் ஒரு பொருள் இல்லா அரக்கன்’ என இராவணனைக் கம்பன்
வருணித்த சொற்றொடரை மட்டும் கருப்பொருளாக்கிக் கம்பனைக் குற்றவாளிக் கூண்டில்
நிற்க வைத்து, “நான் இரக்கமில்லா அரக்கன் என்றால் - கௌதமரின் மனைவி அகலிகையை,
பொய் வேடம் பூண்டு கற்பழித்த இந்திரனை - நீங்கள் ஏன் இரக்கமில்லா அரக்கன் எனச்
சொல்லவில்லை’’ என அடுக்கடுக்காகக் கேள்விக் கணைகளை இராவணன் மூலம் தொடுத்து நீதி
தேவன் பதில் அளிக்க முடியாமல் மயங்கிய காட்சியை நாடகத்தில் அண்ணா
தீட்டியிருந்தார். மக்கள் மனதில் இன்றும் நிறைந்திருக்கும் ஒப்பரிய படைப்பு
இதுவாகும்.
விடுதலை யின் ஆசிரியராக, குடிஅரசின் எழுத்தாளராக, திராவிட நாடு மற்றும் காஞ்சி
இதழ்களின் ஆசிரியராக இருந்து அவர் வடித்த கட்டுரைகள் பெருமிதமானவை!
அண்ணா திராவிடநாடு கிழமை ஏட்டிலும் பின்னர் காஞ்சி ஏட்டிலும் தம்பிக்கு எழுதிய
கடிதங்கள் இலக்கியத் தரம் வாய்ந்தவை. அந்தக் கடிதங்களின் மொத்த எண்ணிக்கை 290
ஆகும்.
Homeland
மற்றும்
Homerule
ஆங்கில இதழ்களின் மூலம் அண்ணா தம்பிக்கு வரைந்த கடிதங்கள்
மொத்தம் 26 ஆகும். அண்ணா தம்பிக்கு எழுதிய கடிதங்களின் மொத்தப் பக்கங்கள் 3000
க்கும் அதிகமாகும்.
டால்ஸ்டாய், பெர்னாட்ஷா, நேரு, காந்தி ஆகியோரின் கடிதங்கள் வரலாற்றுப் புகழ்
வாய்ந்தவை. தமிழ் உலகில் கடித இலக்கியத்தைத் தோற்றுவித்த பெருமைக்கு உரியவர்
அண்ணா ஆவர். ஆங்கில இலக்கிய உலகிற்கு மட்டுமே அறிமுகமான திறனாய்வுத் துறையினை ஒரு
புதிய கோணத்தில் தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தியவரும் அண்ணவேதான்.
வாழ்க்கையைத் திறனாய்வுதான் இலக்கியம். மக்களுக்காக எழுதப்படுவதுதான் இலக்கியம்.
இந்த இலக்கணத்துக்கு இலக்கியமாகத் திகழ்ந்தவர் பேரறிஞர் அண்ணா!
மகாகவி பாரதியார் எவ்வாறு தமிழ்க் கவிதைக்கு அழகும் இனிமையும் புதுமையும்
சேர்த்தாரோ அதே போல் அண்ணா உரை நடைக்கும் மேடைப் பேச்சுக்கும் அழகும் இனிமையும்
புதுமையும் சேர்த்தார். அவரது மேடைப் பேச்சைக் கேட்க கற்றோரும் மற்றோரும் அலை
அலையாகக் கூடினார்கள்.
அண்ணாவின் அழகான அடுக்குமொழிப் பொன்மொழிகள் புகழ் வாய்ந்தவை
ஆகும்.
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு;
தம்பீ! கத்தியைத் தீட்டாதே புத்தியைத் தீட்டு;
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு;
எதையும் தாங்கும் இதயம் வேண்டும்;
சட்டம் ஒரு இருட்டறை; வக்கீலின் வாதம் அந்த இருட்டைப் போக்கும் விளக்கு
திரௌபதிக்கு துச்சாதனனா சேலை தரமுடியும்?
புள்ளிமான் குட்டிக்கு புலியா பால் தரமுடியும்?
பச்சைக் கிளிக்கு வர்ணம் பூசுவதா?
சேர, சோழ, பாண்டியர் தமிழை வளர்த்தார்கள். புலவர்களும் பண்டிதர்களும் தமிழை
வளர்த்தார்கள்;. சமயங்களும் ஆன்மீக மடங்களும் தமிழை வளர்த்தன. அவர்கள் தமிழை
மக்களிடம் கொண்டு சென்றார்கள்! ஆனால் அண்ணாவோ மக்களைத் தமிழிடம் கொண்டு வந்தார்!
ஆங்கிலமும் வடமொழியும் ஆட்சி செய்த தமிழ் மண்ணில் தமிழ்த் தாய்க்கு மகுடம்
சூட்டியவர் அண்ணா! பண்டிதர்களிடம் சிறைபட்டுக் கிடந்த தமிழை விடுதலை செய்து
பாமரர்களுக்கும் சொந்தமாக்கியவர் அண்ணா!
நமஸ்காரம், அக்ராசனர், சபாநாயகர் என்ற வார்த்தைகளை மாற்றி வணக்கம், தலைவர்,
பேரவைத் தலைவர் என்ற தூயதமிழ்ச் சொற்களைச் சலங்கை கட்டி நடமாடவிட்டவர் அண்ணா!
அகநானூறு அறிந்தவர்கள், புறநானூறு படித்தவரகள், கற்றார் போற்றும் கலித்தொகை
கற்றவர்கள், சங்கத் தமிழில் கரைகண்டவர்கள், புலவர்கள், பண்டிதப் பெருமக்கள் இந்தி
தமிழ்நாட்டுக்குள் நுழைந்த போது – அன்னை தமிழுக்கு இடர் வந்த போது - அது குறித்து
கிஞ்சித்தும் கவலைப்படாமல் சுயநலச் சூறாவளியில் சிக்குண்டு மொழியுணர்வை இழந்து
சும்மா இருந்த காலத்தில் அண்ணாவும் அவரது தம்பிமாருமே “எப்பக்கம் வந்திடும்
இந்தி? எத்தனை பட்டாளம் அது கூட்டிவரும்” என ஆர்ப்பரித்து இந்தியை விரட்டி
அடித்தார்கள். அண்ணா மறைந்து 40 ஆண்டுகளுக்குப் பின்னரும் இந்தியை அரசமொழியாக
ஏற்றுக்கொள்ளாத ஒரே மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.
அண்ணாவின் எழுத்தும் மேடைப் பேச்சும் 1967 ஆம் ஆண்டு அவர் தொடக்கிய திமுக
தமிழ்நாட்டின் ஆட்சியைப் பிடிப்பதில் பெரும்பங்கு வகித்தது.
சுயமரியாதைத் திருமணம் செல்லும்படி சட்டம், சென்னை மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டல், தமிழ்நாட்டில் இந்திக்கு இடமில்லை தமிழும் ஆங்கிலமும்தான்; அரச அலுவலக மொழிகள், மதச் சார்பற்ற அரசில் எந்த மதக் கடவுளர் படங்களுக்கும் இடமில்லை என்பவை முதல்வர் அண்ணாவின் நடவடிக்கைகள் ஆகும். குறுகிய காலம் ஆட்சிப் பொறுப்பில் அவர் இருந்தாலும் என்றென்றைக்கும் வரலாறாக வானோங்கி நிற்கக் கூடியவை ஆகும்.
இவற்றைவிடப் பெருமை என்னவென்றால்
அண்ணாவின் மறைவுக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த திமுகவும் அதிமுகவும் அண்ணா
பெயரைச் சொல்லியே ஆட்சியை மாறி மாறிப் பிடித்து வருகின்றன!
‘தேமதுரத் தமிழோசை தெருவெல்லாம் முழங்கவேண்டும்’ என்று இனிய கனவு கண்டவர் கவியரசு
பாரதியார். முப்பத்து ஒன்பது வயதுக்குள் தன் பாட்டுத் திறத்தால் தமிழை வையத்தில்
பாலிக்க வைத்தவர்.
பேரறிஞர் அண்ணா என்றுமுள செந்தமிழால் தமிழ் இலக்கிய உலகில் புதுமை செய்தவர்.
புரட்சி செய்தவர். கால வெள்ளத்தால் அழியாத அவரது அற்புதப் படைப்புகள் தமிழ்
இலக்கிய உலகிற்குக் கிடைத்த புதையல்கள். (பேரறிஞர்
அண்ணாவின் 100 ஆவது ஆண்டு நினைவாக இக்கட்டுடரை வெளிவருகிறது)
அண்ணா நூற்றாண்டு: கண்களைத் திறக்கட்டும்!
இன்று அறிஞர் அண்ணா அவர்கள் நூற்றாண்டு - திராவிடர் இயக்கத்தவர் மட்டுமல்ல - உலகம் முழுவதும் உள்ள பகுத்தறி வாளர்கள், உலகத் தமிழர்கள் அனைவரும் எண்ணங்களிலும் அறிஞர் அண்ணா அவர்கள் இன்று கோலோச்சுவார் என்பதில் அய்யமில்லை.
அறிஞர் அண்ணாவின் பொது வாழ்வு என்பது தந்தை பெரியார் அவர்களிடத்திலிருந்து தொடங்குகிறது. ஒரு பதினைந்து ஆண்டுகள் தந்தை பெரியார் அவர்களின் நேரிடைக் கண்காணிப்பின் கீழும், கட்டளைக்குக் கீழும் பணியாற்றிய அனுபவம் அவருக்கிருந்தது.
தந்தை பெரியார் அவர்களின் தத்துவங்களை அண்ணா. அவர்கள் தனக்கே உரித்தான தனி வசீகரத்துடனும், ஆற்றலுடனும் மேடைப் பேச்சு வாயிலாகவும், ஏடுகளின் வாயிலாகவும் கொண்டு செலுத்தி யிருக்கிறார். இளைஞர்கள், மாணவர்கள், தமிழாபிமானிகள், ஆசிரியர்கள் இயக்கத்தின்பால் ஈர்க்கப்பட்டனர்.
நீண்ட காலமாக மக்கள் நம்பி வந்த, மதிப்பு வைத்திருந்த மேல்ஜாதி ஆதிக்கம், ஜாதிய உணர்வு, ஜாதி பழக்கவழக்கம், வழிபாடுகள், சடங்குகள் ஒவ்வொன்றின்மீதும் தந்தை பெரியாரின் பகுத்தறிவு ஆயுதம் கொண்டு போர் தொடுத்தார்.
காரண காரியங்களோடு அவை நடந்தன. சிந்தனையைத் தூண்டும் வகையில் அந்த மறுப்புகள் கம்பீரமாக நடை போட்டன. அத்தகைய காலகட்டத்தில் ஒரு இயக்கத்திற்கு சிறப்பான பிரச்சாரர்கள் தேவை. அதில் அண்ணா முன்னிலை வகித்தார்.
கம்ப ராமாயணத்தைக் கொளுத்தலாமா? கூடாதா? பெரிய புராணத்தை எரிக்கலாமா? கூடாதா? என்கிற பட்டிமன்றங்கள், சட்டக் கல்லூரிகளில் நடக்கும் அளவுக்கு அந்தக் காலகட்டத்தில் மாணவர்கள் மத்தியில் புதிய சிந்தனை கிளர்ந்து எழச் செய்தார்.
அண்ணாவுடன், சொல்லின் செல்வர் என்று போற்றப்பட்ட ரா.பி. சேதுப்பிள்ளை வாதாடிப் பார்த்தார். நாவலர் சோமசுந்தர பாரதியார் சொற்போர் நடத்தினார்.
அண்ணாவின் வாயிலாக அய்யாவின் கொள்கைகள்தான் அங் கெல்லாம் ஏற்றம் பெற்றன. இளைஞர்கள் மத்தியில் பசுமரத்தாணி போலப் பதிந்தன.
சொல்லேருழவர் பேரறிஞர் அண்ணா!
- முனைவர் சே.கல்பனா (அண்ணாமலைப் பல்கலைக்கழகம்)
-
நாமொழியால் நானில மக்களின் உள்ளத்துள் எழுச்சியை ஏற்படுத்தி,எண்ணத்துள்
பகுத்தறிவு சிந்தனையைச் செதுக்கிய சிந்தனைச் சிற்பிகள் பலர். அவர்களுள்
குறிப்பிடத்தக்கவர் பேரறிஞர் அண்ணா என அனைவராலும் அன்புடன் அழைக்கப்பெறும்
சி.என்.அண்ணாதுரையாவர். இவர் தம் நாமொழியால் தமிழ்நிலத்தை அசைத்துப் பார்த்தவர்.
பொதுமக்களிடம் மட்டுமின்றி வருங்கால இளைய சமுதாயத்தினரிடமும் பகுத்தறிவுச்
சிந்தனையை வித்திட்ட பண்பாளர்.இவருடைய மேடைப் பொழிவினைக் கேட்பது திருவாடுதுறை
இராஜரத்தினம் அவர்களின் நாதசுரத்தில் தோடியைக் கேட்பதை ஒக்கும் என்பர்.
நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் அண்ணாவின் பொழிவினைக் குறிப்பிடும் பொழுது ‘சிறந்த
பேச்சாளர் பட்டியலின் முன்னணியில் டொமஸ் தெனியைக் கொண்டு வந்து நிறுத்துகிறது
கிரேக்க நாடு; எட்மண்ட் பர்க்கைக் கொண்டு வந்து நிறுத்துகிறது இங்கிலாந்து;ராபட்
கீரின்,இங்கர்சாலைக் கொண்டு வந்து நிறுத்துகிறது அமெரிக்கா;சிறந்த பேச்சாளர்
வரிசையில் முதலிடத்தில் திராவிடம் நிலை நிறுத்துவதற்குரிய ஒரே ஒருவர் அறிஞர்
அண்ணாதான்.இவரது சொற்பொழிவு சலசலவென்று ஓடும் சிற்றருவியின் பாங்கு போலவும்
சொற்கள் நாணயச் சாலையில் அடிப்பட்டு ஒன்றன் பின் ஒன்றாக விழும் நாணயங்கள் போலவும்
ஒன்றோடு ஒன்று மோதுதல் இன்றி வெளிவரும்’என்பர். அண்ணாவினுடைய நாநேர்த்தியாலும்
கருத்து தெளிவாலும் ஈர்க்கப்பட்டு,
‘ஓ!அந்த குரலில் என் ஆன்மாவின்
ஆழத்தைத் தொடும்
ஏதோ ஒன்று இருக்கிறது’(லாங்பெல்லோ)
எனத் தமிழ்ச் சமுதாயம் கட்டுண்டு கிடந்த,பொழிவுகளைக் கால வரிசைப்படி தொகுத்துப்
பூம்புகார் பதிப்பகம் இரண்டு தொகுதிகளாக வெளியிட்டுள்ளது. இத்தொகுப்பில் 139
பொழிவுகள் இடம் பெற்றுள்ளன.
அண்ணாவின் தனித்தன்மை
அண்ணாவின் சொல்லும்,சொல்லை வெளிப்படுத்தும் உத்திகளும் ,சொற்பொழிவாற்றும்
முறையும் தனித்தன்மையுடையதாக இருக்கும் என்பதை அவருடைய பொழிவுகளை அவதானிக்கும்
பொழுது உணரலாம்.சிறு வயதிலிருந்தே எழுத்திலும் பேச்சிலும் பிறரைப் பின்பற்றாமல்
தனக்கென ஒரு பாதையை வகுத்துக்கொண்டார் என்பதை நாராண துரைக்கண்ணன்
குறிப்பிடுகின்றார்.
‘1934-ஆம் ஆண்டு சென்னை ஜார்ஜ் டவுன் ஏழு கிணறு வட்டத்தில் உள்ள ஒரு வீட்டு மேல்
மாடியில் பாம்வேட் லிட்டரி பார்லிமெண்ட் சார்பில் ஒரு பொதுக்கூட்டம், அதில்
கோபாலரத்தினம் பேசினார், செங்கல்வராயன் சொற்பொழிவாற்றினார், பாலசுப்பிரமணியம்
இன்னும் யார்யார்ரெல்லாமோ பேசினார்கள். கடைசியாக வந்தவர் ஐயா ஆசாமி
ஒருத்தர்.ஐந்தடி ஒரு அங்குலம் உயரம் இருக்கும்.சம்புஷ்டியான சரீரம்,அறிவுத்
தீட்சணத்தை வெளிப்படுத்தும் அகன்ற நெற்றி,ஆழ்ந்த சிந்தனையில் மிதக்கும் பெரிய
கண்கள்,ஆட்களைக் கவரும் எடுப்பான மூக்கு,மீசை சரியாக கூட அரும்பவில்லை தோழர்களே
என்றார் கூட்டத்தைப் பார்த்து. அவ்வளவுதான் அவர் உள்ளத்திலிருந்து எழும்
சந்தர்ப்ப உணர்ச்சிக்கேற்பச் சொற்கள் சரளமாக வெளிவந்து கொண்டிருந்தன. பொருள்
பொதிந்த அவர் பேச்சில் தெளிவு இருந்த்து.அவர் எடுத்துக் கொண்ட கட்சியை
நிலைநாட்டத் தர்க்க ரீதியாக பேசினார்.அவர் பேச்சில் இன்னொரு விசேஷம்
இருநத்து,அதாவது பிறரை இமிடேட் பண்ணாமல் சொந்த பாணியிலே பேசியதுதான் அக்காலத்தில்
மேடையில் பேச விரும்பும் இளைஞர்கள் அதிலும் கல்லுரி மாணவர்கள் மகாகனம் ஸ்ரீ நிவாஸ
சாஸ்திரியார்,ஆற்காடு இராமசாமி முதலியார்,சத்திய மூர்த்தி முதலிய பிரபல
பேச்சாளர்கள் பேசும் பொழுது செய்யும் அங்க சேஷ்டைகள்,நடையுடை பாவனைகள் இமிட்டேட்
செய்பவர்கள் கூட இருந்தனர்.ஆனால் அந்த ஆள் அவ்வாறு செய்தவரல்ல.அவர் தான் நம்
அண்ணா’.
மேடைப்பேச்சு
அண்ணா 1948-ஆம் ஆண்டு மேடைப்பேச்சு எவ்வாறு அமைய வேண்டும் என
விளக்கி,மேடைப்பேச்சுக்கு இலக்கணம் வகுத்துள்ளார். மேடைப் பேச்சு மக்களுடைய
சிக்கல்களை அறிந்து, அச்சிக்கலுக்குத் தீர்வு காணுவதாகவும், வாழ்க்கையை
நெறிப்படுத்துவதாகவும் அமையவேண்டும் எனவும் எதிர்காலத்தில் மேடைப்பேச்சு ஒரு
சிறந்த ஆயுதமாகவும் விளங்கும் எனக் கூறி இவ்வாய்தத்தை நல்ல வழியில்
பயன்படுத்தினால் மக்களுக்கு நன்மை விளையுமெனச் சாற்றுகின்றார். மேலும் மேடைப்
பேச்சுக்குத் தங்களைத் தயாரித்துக் கொள்வோர் மிக ஜாக்கிரதையாக ஊன்றி நடக்க
வேண்டிய இடம் மேடை எனவும் எச்சரிக்கின்றார்.
‘மேடைப்பேச்சு காலச்சேபம் அல்ல, விவாதத்துக்குரிய உயிர்ப் பிரச்சனைகளைப் பற்றிய
கருத்துக்களை வெளியிடுவது. இனிமை எல்லோருக்கும் கிடைக்கும்படிச் செய்யும்
நாவணிபம் அல்ல.மேடைப்பேச்சு, வாய்பொத்தி,கைக்கட்டிக் கேட்கும் மக்கள் எதிரே
நடத்தும் உபதேசமல்ல,அருள் வாக்கல்ல, பேசுபவர் கேட்பவர்களை விட மேதை என்று
ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையுமல்ல. கேட்பவர்கள் இன்னப்பொருள் பற்றிப் பேசிடுக எனப்
பணித்திட,பேசுபவன் அது போலவே நடத்தும் வசன சங்கீதமுமல்ல. வாழ்க்கையுடன்
தொடர்புகொண்ட பிரச்சனைகளைப் பற்றி,மக்கள் குழப்பமான கருத்துக்களைக்
கொண்டிருந்தால் தெளிவு அளிப்பது,மக்கள் மருண்டிருந்தால் மருச்சியை
நீக்குவது.மக்கள் கவலையற்று இருந்தால் பிரச்சனையின் பொறுப்பை உணரச்செய்வது போன்ற
காரியம். நீதியை நிலைநாட்ட,நேர்மையை வலியுறுத்த,நாட்டிற்கேற்ற திட்டங்களை
எடுத்துரைக்க, மடமையை மாய்க்க, கொடுமைகளை மாய்க்க, கொடுமைகளைச்
சாய்க்க,சிறுமைகளைச்-சீரழிவுகளைப் போக்க ஆர்வம் தோன்ற வேண்டும். அந்த ஆர்வம்
ஏற்படுத்தும் சிந்தனையிலே பூத்திடும் நல்ல கருத்துக்களை, அழகுற தொடுத்து அளிப்பதே
மேடைப் பேச்சு’என எடுத்துரைக்கின்றார்.
சொல்லேருழவர்
அண்ணா பண்பட்ட சிறந்த சொற்களைக் கொண்டு மக்கள் மனங்களை உழுது பண்படுத்த முயன்ற
சொல்லேருழவர்.இவருடைய மொழியாளுமையால் கவரப்பட்ட சொல்லின் செல்வர்
ரா.பி.சேதுப்பிள்ளையவர்கள் ‘ஆயிரம் மேடை ஏறிய அறிஞர்.பல்லாயிரம் மக்களின்
உள்ளத்தை ஒருங்கே கவரும் சீரிய கூரிய சொல்லாளர்.கண்ணின்று கண்ணறச் சொல்லும்
திண்ணியர்’எனப் பாராட்டுவர். திரு.வி.க அவர்களும் ,
‘அண்ணா துரையென்னும்
அண்ணல் தமிழ்நாட்டு
வண்ணான் அழுக்கெடுப்பில்
வாய்மொழியின் பண்ணாவான்
சிற்பன் எழுத்தோவியத்தில்
செல்வராசு நாவாயின்
அற்புதம் சூழ்மாலுமி
என்றாடு’
எனப் போற்றுவர்.தமிழ்நாட்டின் அன்றைய நிலையை எண்ணி வருந்தி 1945 –இல் அண்ணாமலைப்
பல்கலைக்கப் பட்டமளிப்பு விழா அரங்கில் துணைவேந்தர் எம்.இரத்தினசாமி அவர்களின்
தலைமையில் புரச்சிக்கவி பாரதிதாசன் அவர்களின் உருவப்படத்தினைத் திறந்து வைத்து
ஆற்றிய சொற்பொழிவு வரலாற்றுச் சிறப்பு மிக்கது.
‘ஏ தமிழ் நாடே!ஏ தாழ்ந்த தமிழ் நாடே! தேய்ந்த தமிழ் நாடே!தன்னை மறந்த தமிழ்
நாடே!தன்மானமற்ற தமிழ்நாடே!கலையை உணராத தமிழ் நாடே!கடவுளின் லட்சணத்தை அறியாத
தமிழ் நாடே!மருளை மார்க்கத்துறை என்றெண்ணிடும் தமிழ் நாடே!வீறு கொண்டெழு!உண்மைக்
கவிகளைப் போற்று!உணர்ச்சுக் கவிகளைப் போற்று!புரச்சிக் கவிகளைப்
போற்று!!புத்துலகச் சிற்பிகளைப் போற்று!!! எனத் தமிழக நிலையை எண்ணி
வெகுண்டெழுகிறார். இப்பொழிவால் அன்று மாணவச் சமுதாயம் விழிப்படைந்து என்றால்
மிகையில்லை.
இந்தி எதிர்ப்பு
1960 களில் இந்தி எதிர்ப்பு உச்சத்தில் இருந்த காலக்கட்டம்.அறிஞர் அண்ணா அவர்கள்
நம்முடைய தமிழ்மொழி பிழைத்தால்தான் நம்முடைய இனம் பிழைக்கும்,நம் நாடு நமக்கு
கிடைத்தால் தான் நாம் தலை நிமிர்ந்து வாழமுடியுமென
26,27,29-6-1960,10,19-7-1960,1,7-8-1960 ஆகிய நாள்களில் தமிழ்ச் சமுதாயத்தை
நோக்கி அறைகூவல் விடுத்தார். இதன் விளைவாக தமிழ் மாணவச் சமுதாயமே வீறு
கொண்டெழுந்து மொழிப்போர் தொடங்கினர்.இன்னுயிரை ஈந்தாவது தமிழைக் காப்பாற்ற
வேண்டுமென்ற அவருடை சொல்லினையேற்று உயிர் தியாகம் ஈந்துள்ளனர்.அப்படி பாடுபட்டுப்
பெற்ற தமிழ்நாட்டில் தமிழ்மொழியின் இன்றைய நிலை?மும்மொழி கொள்கை வேண்டும் எனக்
கூறும் நிலை வருந்தத்தக்கது.
புத்தகச்சாலை
உலக சரித்திரத்தையே மாற்றிய நூல்களும் உண்டு.மாத்மா காந்தியடிகள் அடிகள் தம்முடைய
வாழ்க்கை வரலாற்று நூலில் ஜான் ரஸ்கினின் கடையருக்கும் கடைத்தேற்றம்,ஹென்றி
தோராவின் சிவில் ஒத்துழையாமை,டால்ஸ்டாயின் கடவுளின் ராஜ்யம் உங்களுக்கு
இருக்கிறது என்ற நூல்கள் தம் வாழ்க்கைக்கு வழிகாட்டின எனவும், அகிம்சை வழியில்
செல்ல தூண்டுகோலாக அமைந்தன எனவும் குறிப்பிட்டுள்ளார். அண்ணாவும் நுண்ணறிவு
திறனுடையவராகவும் பண்பட்ட அறிவுடையவராகவும் திகழக்காரணமாக அமைந்தவை பண்பட்ட
நூல்களே எனலாம். நூல்களின் மீது மிகுந்த இவருக்கிருந்தது காதல் என்பதை விட பித்து
எனக் கூறலாம்.கன்னிமரா நூலகத்தில் அவர் கைபடாத நூல்களே இல்லை என்பர்.நூல்களைப்
படித்தார் என்பதை விட நூல்களை உயிர் மூச்சாக சுவாசித்தார் வாழ்ந்தார்.உடல்நிலை
சரியில்லாமல் அறுவை சிகிச்சை செய்துகொள்ளப் போகும் நேரத்தில் கூட
படித்துக்கொண்டிருந்த புத்தகத்தை முடிக்க நேரம் கேட்டாராம்.இவ்வாறு நூல்களின்
பயனையும் வல்லமையையும் உணர்ந்த பேரறிஞர் அண்ணா வீட்டிற்கோற் புத்தகச்சாலை
இன்றியமையாதது என்பதை வலியுறுத்தி 1948-ஆம் ஆண்டு சொற்பொழிவாற்றுகிறார்.
‘வீட்டிற்கோர் புத்தகச்சாலை என்ற இலச்சியம்,நாட்டுக்கோர் நல்லநிலை ஏற்படச் செய்ய
வேண்டும் என்ற திட்டத்திற்கு அடிப்படை.மலை கண்டு,நதி கண்டு,மாநிதி கண்டு அல்ல,ஒரு
நாட்டை உலகம் மதிப்பது.அந்த நாட்டு மக்களின் மன வளத்தைக் கண்டே மாநிலம்
மதிக்கும்.மனநலம் வளர வீட்டுற்கோற் புத்தகச்சாலை நிச்சயமாக வேண்டும்.வாழ்க்கையில்
அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம்,அலங்காரப் பொருள்களுக்கும்,போகப்
பொருள்களுக்கும் தரப்படும் நிலைமாறி,புத்தகச்சாலைக்கு அந்த இடம் தரப்படவேண்டும்.
உணவு,உடை,அடிப்படைத் தேவை.அந்த தேவையைப் பூர்த்தி செய்தானதும்,முதல் இடம்
புத்தகச்சாலைக்குத் தரப்பட வேண்டும்.வீட்டுக்கோர் புத்தகச் சாலை அமைத்துக்
கொண்டால், நாட்டுக்கு நல்ல நிலை ஏற்படும்.வீட்டிற்கோர் புத்தகச்சாலை தேவை. ஆனால்
கேட்டினை நீக்கிடத் தக்க முறைகளைத் தரும் ஏடுகளைக் கொண்டதாக இருக்க வேண்டும்.’என
அவர் கொண்ட விருப்பம் நிறைவேறியதா?
ஒரு நாட்டின் வளம் என்பது, அந்நாட்டில் இருக்கும் பண்புள்ள மக்களின்
எண்ணிக்கையைப் பொறுத்துத்தான் இருக்கும்.அறிவாற்றல் பெற்று,தன்னலம் கருதாது
மக்களுக்கு உழைக்கும் பண்பாளர் தான் அந்நாட்டின் செல்வம் என்ற மார்டின் லூதரின்
கூற்றுக்கேற்ப,பேரறிஞர் அண்ணா அவர்கள் சிறந்த கல்விநலம் பெற்ற பண்பாளராகத்
திகழ்ந்ததோடு மட்டுமல்லாமல்,தம்முடைய அறிவாற்றலைக் கொண்டு,தம் இன மக்களின் அக
இருளை விரட்டி, பகுத்தறிவு சிந்தனைப் பெற்று வாழ்க்கையில் மேன்மையடைய அயராது
உழைத்தார். அறிஞர் அண்ணாவின் நாவில் பட்ட தமிழ்,தமிழ் மக்கள் அனைவர் நாவிலும்
புதுத் தமிழாக,உலக மக்கள் அனைவர் உள்ளங்களிலும் புதுத் தமிழ் புகழ் மணமாகத்
தெரித்தெழத் தொடங்கிற்று என்று வருங்காலத் தமிழ் வரலாறு கட்டாயம் கூறும் என்ற
பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையாரின் கருத்திற்கிணங்க அண்ணாவின் நாவில் பட்ட
தமிழ்,தமிழ் மக்கள் உள்ளத்துள்ளும்,நாவிலும் நீங்கா நிற்கிறது.அவ்வாறு நிற்கும்
அண்ணாரின் சொற்களும் எழுத்துக்களும் பதிவுப் பெட்டகமாக மட்டுமில்லாமல் இல்லாமல்
வாழ்க்கைப் பயன்பாட்டுப் பெட்டகமாக மாறவேண்டும்.அப்பொழுதுதான்,
நீ மண்ணுக்குள் சென்றாலும்
வேராகத்தான் சென்றாய்
அதனால்தான்
எங்கள் கிளைகளில்
இன்னும் பூக்கள்
மலர்கின்றன.
என்ற கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் அடிகள் மெய்மையடைந்து, எழுத்தாய்,
சொல்லாய், மட்டுமல்லாமல் பொருளாகவும் என்றும் நம்முடன் வாழ்ந்துகொண்டிருப்பார்.
kalpanasekkizhar@gmail.com
ஈரோட்டில் அய்யாவின் குடிஅரசு இதழின் பொறுப்பாளர் ஆனார். அதன்பின் காஞ்சியிலிருந்து திராவிட நாடு என்ற வார இதழைத் தொடங்கி நடத்தினார்.
தனக்கே உரித்த ஆற்றலால் நாடகங்களை உருவாக்கி, அந்த நாடகங்களில் அவரே பாத்திரங்களை ஏற்று நடித்தார். பகுத்தறிவு எண்ணங்கள் பொதுமக்கள் மத்தியிலே வேர்ப் பிடிக்கும் பணியிலே வெற்றிகள் குவிந்தன.
அவர் அரசியலில் நுழைந்தார். அங்கு சென்றாலும், தாய்க் கழகத்தின் கொள்கைதான் தம் கொள்கை என்று அறிவித்தார். தி.க.வும், தி.மு.க.வும் இரட்டைக்குழல் துப்பாக்கி என்று வருணித்தார்.
அரசியலில் பார்ப்பனர்களை சாணக்கியர்கள் என்பார்கள். அந்த சாணக்கியர்களை மண் கவ்வச் செய்த சாதனை அண்ணாவைச் சார்ந்ததாகும்.
ஆட்சியைப் பிடித்தார் என்றாலும், அங்கும் - அவர் அய்யாவிடம் கற்ற, தெளிந்த, உள்ளத்தில் ஊறிப்போயிருந்த அந்தச் சமுதாய சுய மரியாதை, பகுத்தறிவுக் கொள்கைகள்தான் அப்பொழுதும் அவரிடத்தில் ஏற்றம் பெற்றிருந்தன.
அரசு அலுவலகங்களில் எந்தவித மதச் சின்னங்களுக்கும் இட மில்லை என்று ஆணை பிறப்பித்தார். சுயமரியாதைத் திருமணம் செல்லுபடியாகும் என்று சட்டமியற்றி தந்தை பெரியார் அவர்களுக்கு நன்றியைக் காணிக்கையாக்கினார். இந்த ஆட்சியே தந்தை பெரியா ருக்குக் காணிக்கை என்று சட்டப்பேரவையிலேயே பிரகடனப்படுத் தினார்.
சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார். இந்திக்குத் தமிழ்நாட்டில் இடமில்லை. இங்கு இருமொழிதான் ஆட்சிமொழி என்பதை சட்ட ரீதியாக ஆக்கினார்!
குறைந்த காலம் அவர் ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும், அடிப்படையில் சுயமரியாதை இயக்கத்தின் வழிவந்தவர், திராவிடர் கழகத்தின் முன்னாள் பொதுச்செயலாளர் என்ற எண்ணம்தான் அவரை ஆட்கொண்டது.
ஆட்சி ஆசனத்தில் அமர்ந்த நிலையிலும், நாகரசப்பட்டி பெரியார் இராமசாமி உயர்நிலைப்பள்ளி விழாவில் தந்தை பெரியாரோடு முதலமைச்சராக அவர் கலந்துகொண்ட நேரத்தில், ஆட்சிப் பொறுப்பில் தொடரவா - இல்லை மீண்டும் அய்யாவுடன் வந்து சமுதாயப் பணியை ஆற்றலா? அய்யா ஆணையிடட்டும்! என்று சொன்னார் என்றால், அந்த அண்ணாவை அந்தச் சமுதாய ஊற்றுக்கண்ணை எந்த வகையில் தான் புகழுவது - பாராட்டுவது!
பதவிதான் பொதுவாழ்வு, அதிகாரம் பெறுவதுதான் அரசியல் என்ற எண்ணத்தைத் தூக்கி எறிந்து, பொதுத் தொண்டு ஆற்றிட இளைஞர்கள் முன்வரவேண்டும் என்பதுதான் அண்ணாவின் நூற்றாண்டு நாளில் உறுதி எடுக்கவேண்டும்.
திராவிட இயக்கம் என்பது இன்றைய தினம் திராவிடர் கழகமும் - தி.மு.க.வும்தான். இளைஞர்கள் இந்த இரு இயக்கங்களையும் சார்ந்து, திராவிட இயக்கத் தத்துவங்களை உள்வாங்கி, சமூகத்தைப் பின்னிப் பிணைத்துக் கொண்டிருக்கும் ஏற்றத் தாழ்வு என்னும் முள்செடிகளை அகற்றி, தந்தை பெரியார் காண விரும்பிய, அறிஞர் அண்ணா பிரச்சாரம் செய்த அந்த பேதமற்ற சுயமரியாதை - சமதர்ம சமத்துவ ஒப்புரவுச் சமுதாயத்தைப் படைக்க உறுதி கொள்வோமாக!
வாழ்க பெரியார்! வாழ்க அறிஞர் அண்ணா!!
அறிஞர் அண்ணா:மகத்தான மனிதநேயம்!
கி. வீரமணி
மனிதகுல வரலாற்றில் வீரத்தாலும், விவேகத்தாலும் இடம்பெறுபவர்களைக் காட்டிலும், இதயத்தால் சிந்தித்து, மூளையால் செயல்பட்ட மனிதநேயர்களே மக்களால் என்றென்றும் மதிக்கப்படக் கூடியவர்களாக நிலை பெற்றுள்ளார்கள்!
பிறர் நிலையில் தன்னை வைத்து பிறரது துன்பத்தை தனதாக்கி, அந்தப் பிறராகவே தன்னை ஆக்கிக் கொள்ளும் ஒத்தது அறியும் தன்மைதான் ஆங்கிலச் சொல்லான Empathy என்பதாகும்.
ஒருவருக்காக இரங்குவது, வருத்தப்படுவது வேறு; அவராகவே மாறி அவர்படும் துன்பத்தை உணர்வது என்பது வேறு. அந்நிலைதான் மனிதர்களை உயர்த்தி, தரம் பிரித்துக் காட்டுவது.
அறிஞர் அண்ணா அவர்கள் ஒரு சிறந்த பகுத்தறிவுவாதி; எல்லா பகுத்தறிவாளர்களும், சுயமரியாதைக்காரர்களும் தலைசிறந்த மனிதநேயர்களாவார்கள்.
மனிதர்களை மதிக்கக் கற்றுக்கொண்டு அவர்களை சமமாகக் கருதி, அவர்களின் அறிவை, ஆற்றலை, உழைப்பை மனந்திறந்து பாராட்டுவது, உதவவேண்டிய நேரத்தில் அவர்களுக்கு ஓடோடி உதவுவதுதான் மனிதநேயம்!
இன்று நூற்றாண்டு விழா நாயகராகக் காட்சியளிக்கும் அறிஞர் அண்ணாவை அவரது பகுத்தறிவு, அரசியல் மற்றும் பல்வேறு அரிய சாதனைகளால் அளப்பதைவிட, அவருடைய மனிதநேயப் பண்பால் அளந்து பார்ப்பதே அவருக்கு அடுத்த தலைமுறை செய்யும் சரியான நீதியாக அமையும்.
1953 ஆம் ஆண்டு கைத்தறி நெசவாளர்களுக்கு ரொம்பத் துன்பம் ஏற்பட்டது.
நெய்த துணிகள் விற்பனையாகாமல் தேங்கிக் கிடந்ததினால் நெசவாளர்கள் கஞ்சித் தொட்டியை நாடும் அவல நிலை; சிலர் பிச்சைக்காரர்களாகி விட்ட கொடுமை!
இதை எண்ணி கைத்தறி நெசவுத் துணிகளை, தானே தோளில் சுமந்து - காங்கிரசிலிருந்தபோது அவரது தலைவர் பெரியார் கதர்மூட்டையை தலையில் சுமந்து ஊர் ஊராகச் சென்றது போல, இவரும், இவரது கட்சியின் தம்பிமார்களும் நாடு பூராவும் விற்பனை செய்து, தி.மு.க.வினர் அனைவரும் குடும்பத்தினரும் கைத்தறித் துணிகளையே அணியவேண்டும் என்று ஒரு அன்பு ஆணை பிறப்பித்தார்! இன்னமும் கைத்தறி நெசவாளர்கள் நன்றியோடு அண்ணாவை அவரது ஏழைக் கிரங்கும் மனிதநேயத்தை நினைத்துப் பாராட்டுகின்றனர் - வாழ்த்துகின்றனர்!
1961 இல் மதுரை திருப்பரங்குன்றத்தில் ஒரு மாநாடு. அதற்குத் தலைமை தாங்கிய அண்ணா, தஞ்சை மாவட்டத்திலே பெரிய வெள்ளம் ஏற்பட்டு ஆறுகள் உடைந்து ஊரெல்லாம் பாழாகி மக்கள் தவிக்கின்றனர் என்ற செய்தி கேட்டுத் துடித்து, நேரே தஞ்சை மாவட்டத்திற்கு வந்து, சாலைப் போக்குவரத்துத் துண்டிக்கப்பட்ட நிலையிலும் படகுகளில் ஏறி, நாகப்பட்டினம் வரை சென்று அந்தந்த ஊர் மக்களைப் பார்த்து ஆறுதல் கூறியது மறக்க முடியாத மற்றொரு மனிதநேய நிகழ்ச்சி!
சென்னையில் ஏழைகளுடைய குடிசைகளுக்குத் திட்டமிட்டு தீ வைத்த நிகழ்ச்சி ஒவ்வொரு நாளும் கேட்டு துடித்து, சாப்பிடவே மனமின்றி இருப்பார் முதலமைச்சர் அண்ணா!
கீழ்வெண்மணிச் சம்பவத்தின்போது அவர் உள்ளம் பட்டபாடு ஊர் அறியும், உலகறியும்; தோழர் பி. இராமமூர்த்தி போன்ற கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் அறிவார்கள். பல் துலக்காமல் கூட பரிதாபத்தினால் கண்ணீர் விட்டவர், முதல்வர் ஆன பிறகும்கூட!
அண்ணா ரோமாபுரி வாட்டிகனுக்குச் சென்று போப் ஆண்டவரை சந்தித்தார்; கோவா நாட்டு விடுதலை வீரர் திரு. ரானடே என்பவர் நீண்ட காலமாகவே சிறை பிடிக்கப்பட்டு சிறையிலே வாடிக் கொண்டிருந்தவர். அவர் தமிழ்நாட்டுக்காரரோ, அண்ணாவுக்கு அறிமுகம் ஆனவரோ அல்ல. போர்ச்சுகீசிய அரசிடம், அந்த மதத்தைப் பின்பற்றுவோர் அரசாக அவ்வரசு இருந்ததால், போப் அவர்களிடம் மனிதாபிமான அடிப்படையில் ரானடேவை விடுதலை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார்; அது பலித்தது! விடுதலை பெற்று நன்றி கூறினார் ரானடே -அண்ணாவுக்கு - அவர் மறைந்த நிலையில்!
குடந்தையிலே ஒரு நோயாளி. ஒரு அவசியமான உயிர் காக்கும் மருந்து அமெரிக்காவிலேதான் கிடைக்கும் என்பதால், அமெரிக்காவிற்குச் சிகிச்சைக்காகப் போன அண்ணாவுக்குக் கடிதம் எழுதினார். அதைப் படித்த அண்ணா, அந்த மருந்தை அங்கிருந்து வாங்கி அனுப்பி, நோய் தீர்த்தார்.
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை
என்ற குறளுக்கு ஒரு அருமையான சான்று அல்லவா அறிஞர் அண்ணாவின் மனிதநேயம்!
அண்ணா அமெரிக்காவில் சிகிச்சைக்காகத் தங்கியிருந்தபோது, இங்கே தமிழ்நாட்டில் இருக்கிற ஒரு சிறைக் கைதி, அப்புக்குட்டன் என்ற மரண தண்டனைக் கைதி - ஆயுள் தண்டனையாக மாற்றிடக் கேட்டு விண்ணப்பத்தை அனுப்பியதை ஏற்று, அதை ஆயுள் தண்டனையாக்கிய மனிதநேயர் அண்ணா அவர்கள்!
இப்படி அண்ணாவின் வாழ்வில் எத்தனை எத்தனையோ நிகழ்வுகள் உண்டு.
தஞ்சையில் அண்ணாவின் 53 ஆவது பிறந்த நாளில், 53 பொருள்களை அளித்தார்கள் - நகர தி.மு.க. சார்பில்.
அப்பரிசுகளைப் பெற்றுக்கொண்டு அண்ணா அவர்கள், இந்தப் பரிசுகளை எனக்கு அளித்தது பெரிதல்ல. இவைகளைவிடப் பெரும் பரிசு ஒன்றை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். உங்களது கண்ணீரை என் கல்லறையின்மீது சிந்துவீர்களாயின், அதுவே எனக்கு மகத்தான பரிசு என்று கூறியது கேட்டு உள்ளமுருகிவிட்டனர் மக்கள்!
இயற்கையின் கோணல் புத்தியால் 60 ஆம் ஆண்டின் நிறைவினைக் கூடக் கொண்டாட இயலாது அண்ணா அவர்கள் மறைந்து புகழ் உடம்பு அடைந்து வரலாறாகி விட்டார்!
பல லட்ச மக்களின் கண்ணீரோடு, அவரை ஆளாக்கிய தலைவர் தந்தை பெரியார்தம் கண்ணீர்த் துளிகளும், அவரது சடலத்தின்மீது விழுந்தனவே - அவை வள்ளுவர் குறளை அல்லவா நினைவூட்டியது!
புரந்தார்கண் நீர்மல்ச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து (குறள் 780)
படைத்தலைவனின் கண்ணீர் படைத்தளபதியின் உடல்மீது விழுவதைவிட பெரும் பேறு வேறு என்னதான் இருக்க முடியும்!
தன்னால் வளர்க்கப்பட்டு ஆளாக்கப்பட்ட அருமைத் தளபதிக்கு வீர வணக்கம் செலுத்தினார் - அவர் கண்ட - கொண்ட ஒரே தலைவர் பெரியார். அண்ணா மறைந்தார்; அண்ணா வாழ்க என்று தந்தை பெரியார் குறிப்பிட்டதே - இருவரின் மனிதநேயத்திற்கு மகத்தான சான்றுகள் அல்லவா!
The man who still rules
Tamil Nadu [TNC]
NEARLY four decades after he passed into history, C N Annadurai continues to
rule Tamil Nadu with his thoughts defining the broader agenda of policy making
and most parties, even those which came in after his time, making a mad scramble
to appropriate his legacy.
Born on this day exactly 100 years ago, Anna — it is not just the shortened form
of his name but it also means elder brother — gave shape to the aspirations of
the Tamil people in his public life spanning over four decades.
Whatever the modern youth know of him, no one who has set foot in the state
could have missed the name ‘Anna’. For there is nothing that has not been
christened after him. The international airport, the state’s first flyover, the
arterial road and the engineering university in Chennai are not just those that
have the name ‘Anna’. There is not a single town that does not have his statue,
and bus stands, stadiums and residential localities across the state bear his
name.
But it is not the naming ritual, which has not stopped yet, that perpetuated his
memory. It is his words, written and spoken, during the socially turbulent era
that still ring across political platforms.
In the state where political discourse thrives on rhetoric with parables and
alliterations adding glitter to the harangue, Anna, an eloquent orator himself,
remains the most quoted leader.
Starting his political career as a rabble- rouser in his student days — he took
an MA from Pachayappa’s College in Chennai — Anna attained an iconic status in
the 1930s, drawing an entire generation of Tamil youth to the Dravidian movement
of his mentor Periyar E V Ramasamy initially and subsequently to the Dravida
Munetra Kazhagam, launched by him in 1949.
Though his gift of the gab endeared him to larger masses, he exploited every
mass medium of the era — newspapers, magazines, cinema and theatre — to reach
out to the people. It was through his incisive writing that he gave an
intellectual direction to the generation that found itself at the crossroads in
the midst of a socio-political ferment with Periyar stirring the collective
thought process of Tamil society.
At that time when the independence struggle was on the overdrive and nationalism
was the buzzword across the country, Tamil cultural nationalism, offering an
alternative political identity, was slowly capturing the imagination of the
people in Tamil Nadu. But with cultural nationalism seen as atavistic and a
possible threat to nationhood, it needed an Anna to put the ideology in
perspective.
He not only gave legitimacy to Tamil cultural nationalism by highlighting its
relevance in the historical and social context and made it intellectually
convincing, but also added a romantic aura to it. To put it otherwise, he used
Tamil nationalism as a positive force for political mobilisation. After
capturing power, too, he took decisions that articulated the demands of the
people of Tamil Nadu, proving him to be a visionary — similar demands were
raised in subsequent years in various states and some of them are still being
aired. To give an example, Madras state was the first to be christened Tamil
Nadu.
Politically, Anna was a pioneer in cobbling up alliances. The DMK captured power
in 1967 by contesting the elections through an alliance formed with the
Swatantara Party, the Muslim League and others. It was a hard fought election,
with Periyar opposing the alliance and campaigning in favour of the Congress
party. But the day before assuming power, Anna, along with his close associates,
drove to the house of Periyar, thus tugging at the heartstrings of his mentor
and setting an example for political decency.
In fact, even after he started the DMK, the post of president was kept vacant
for Periyar to go and take it any time. In 1944, at the Salem conference of the
Justice Party — the South Indian Liberal Federation started in 1916 by non-
Brahmin elites was known by that name after its official publication ‘Justice’ —
it was Anna who moved the historic resolution that changed the name of the
organisation to Dravidar Kazhagam and also made it a party of the hoi polloi.
The resolution made it mandatory for all those holding titles like Sir, Rao
Bahadur, Diwan Bahadur, Rao Sahib, etc.
to return the titles. It urged all those holding posts in local bodies and as
honorary magistrates to resign their jobs and asked members to refrain from
using caste appellation after their names.
Thus Anna was Periyar’s alter ego.But he also wanted to capture power through
the democratic process and it was one reason that impelled him to walk out of
the DK. Also through polemics, he took Periyar’s philosophy to a higher plane —
‘No God’ became ‘One community, one God’, without deviating from the basic
tenets of rationalism, social justice and socialism. Till his death on February
3, 1969 — his funeral, attended by 15 million mourners, was then a world record
— he remained Periyar’s follower. As a leader, too, Anna was exemplary. He not
only encouraged anyone with talent to bloom, he also groomed a second line of
leadership in the party. Of course, the manner in which he gave up the DMK’s
demand for separate state and deciding to function within the Indian
Constitution, was a valiant display of statesmanship.
That he continues to be a source of inspiration for politicians was evident in
1994 when the biography of former chief election commissioner T N Seshan by
Govindankutty evoked all-round protests in the state for the remark that Anna
was a CIA hand maiden. Seshan, despite holding a Constitutional post, was not
able to step out of the airport one full day when protestors laid a siege. Was
Anna aware of his enduring popularity? Perhaps yes. At a meeting on the Marina
sands, he said that as long as the name of the state remains Tamil Nadu, the
two-language formula in education continues and self-respect marriages are given
legal sanctity — three revolutionary things he did as Chief Minister — he would
continue to govern the state. How right, he had been.
'எழுந்து வா எம் அண்ணா!'
ஈராயிரம் ஆண்டுகள் அன்னைத் தமிழகம் தவமிருந்து பெற்றெடுத்த தலைமகன் -
சிங்க நடையும் சிங்காரத் தென்றல் நடையும் - பொங்கு கடல் நடையும் புரட்சிக் கவி
நடையும் ஒரு சேரத் தன் உரை நடையாடல் கண்ட பூமான்இ தம்பிமார் படை மீது விழியோட்டி
வெற்றி கொள்ளும் கோமான் -
பூமிப்பந்தில் தமிழர்கள் எங்கெங்கு இருக்கிறார்களோ அங்கெல்லாம் அவர்களது இதயத்தில்
தங்கச் சிம்மாசனம் போட்டு வீற்றிருக்கும் மன்னன் - சிந்தை அணு ஒவ்வொன்றையும்
சிலிர்க்கச் செய்யும் வகையில் நம்மையெல்லாம் 'தம்பீ' என்று அழைத்திட்ட அண்ணன் -
பேரறிஞர் அண்ணா அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்து வங்கக் கடலருகில் நீங்காத்
துயிலில் ஆழ்ந்திருக்கிறார்.
உருவ அளவில் நம்மை விட்டுப் பிரிந்தார் என்றாலும் நம் உணர்ச்சி யோடும்
எழுச்சியோடும்இ ஊனோடும்இ உதிரத்தோடும்இ உயிர் மூச்சோடும்இ நாடித் துடிப்போடும்
அண்ணா அவர்கள் இரண்டறக் கலந்துவிட்டார்கள்.
தமிழில் மூன்றெழுத்துக்கு ஒரு சிறப்பு உண்டு.
மூவேந்தர் - முக்கொடி - முக்கனி என மும்முரசார்த்தவர் தமிழர்.
அவர் வாழ்ந்த தமிழ் 'வாழ்வு'க்கு மூன்றெழுத்து; அந்த வாழ்வுக்கு அடிப்படையான அன்பு
- மூன்றெழுத்து; அன்புக்குத் துணை நிற்கும் அறிவு - மூன்றெழுத்து; அறிவார்ந்தோர்
இடையிலெழும் காதலுக்கு மூன்றெழுத்து; காதலர்கள் போற்றி நின்ற கடும் வீரம் -
மூன்றெழுத்து; வீரம் விளைவிக்கின்ற களம் - மூன்றெழுத்து; களம் சென்று காணுகின்ற
வெற்றி - மூன்றெழுத்து; அந்த வெற்றிக்கு நமையெல்லாம் ஊக்குவிக்கும் அண்ணா -
மூன்றெழுத்து.
இன்று அவர் நம்மிடையே இல்லை. இந்தச் சொல்லைக் கூறும்போது எழுகின்ற துக்கத்திற்கும்
எல்லை இல்லை.
அந்த எல்லையில்லாத் துக்கம் - துயரம் பற்றி அண்ணன் கொடுத்த தமிழ் எடுத்துப்
பாடுகிறேன் - ஒரு கவிதை...
அண்ணா என்ற சொல்லால்
அழைக்கட்டும் என்றே - அவர் அன்னை
பெயரும் தந்தார்.
அந்த அன்னைக் குலம் போற்றுதற்கு
ஒளவைக்கோர் சிலை
அறம் வளர்த்த கண்ணகிக்கோர் சிலை
வளையாத நெஞ்சப் பாரதிக்கும்
வணங்காமுடிப் பாரதிதாசருக்கும் சிலை
வீரமா முனிவருக்கும் சிலை
கால்டுவெல்இ போப்புக்கும் சிலை
கம்பருக்கும் சிலை
தீரமாய்க் கப்பலோட்டிய தமிழர்க்கும் சிலை
திக்கெட்டும் குறள் பரப்ப
திருவள்ளுவர்க்கும் சிலை
பத்துச் சிலை வைத்ததனால் - அண்ணன்
தமிழின்பால் வைத்துள்ள பற்றுதலை உலகறிய
அந்த அண்ணனுக்கோர் சிலை
சென்னையிலே வைத்தபோது...
ஆட்காட்டி விரல் மட்டும் காட்டி நின்றார்.
ஆணையிடுகின்றார் எம்
'அண்ணா' என்றிருந்தோம்.
அய்யகோ! 'இன்னும்
ஓராண்டே வாழப் போகிறேன்' என்று அவர்
ஓர் விரல் காட்டியது இன்றன்றோ புரிகிறது!
எம் அண்ணா... இதய மன்னா...
'படைக்கஞ்சாத் தம்பியுண்'டென்று
பகர்ந்தாயே;
எமைவிடுத்துப் பெரும் பயணத்தை
ஏன் தொடர்ந்தாய்?
உன் கண்ணொளியின் கதகதப்பில்
வளர்ந்தோமே;
எம் கண்ணெல்லாம் குளமாக
ஏன் மாற்றி விட்டாய்?
நிழல் நீதான் என்றிருந்தோம்;
நீ கடல் நிலத்துக்குள்
நிழல் தேடப் போய்விட்டாய்
நியாயம்தானா?
கடலடியில் இருக்கின்ற
முத்தெல்லாம் முத்தல்ல;
நான்தானடா நன்முத்து எனச் சொல்லி
கடற்கரையில் உறங்குதியோ?
நாத இசை கொட்டுகின்ற
நாவை ஏன் சுருட்டிக் கொண்டாய்?
விரல் அசைத்து எழுத்துலகில்
விந்தைகளைச் செய்தாயே; அந்த
விரலை ஏன் மடக்கிக் கொண்டாய்?
கண் மூடிக்கொண்டு நீ சிந்திக்கும்
பேரழகைப் பார்த்துள்ளேன்...
இன்று -
மண்மூடிக் கொண்டுன்னைப் பார்க்காமல்
தடுப்பதென்ன கொடுமை!
கொடுமைக்கு முடிவு கண்டாய்;
எமைக் கொடுமைக்கு ஆளாக்கி
ஏன் சென்றாய்?
'எதையும் தாங்கும் இதயம் வேண்டு'மென்றாய்
இதையும் தாங்க ஏதண்ணா எமக்கிதயம்?
கடற்கரையில் காற்று வாங்கியது போதுமண்ணா;
எழுந்து வாஇ எம் அண்ணா!
வர மாட்டாய்இ வர மாட்டாய்;
இயற்கையின் சதி எமக்குத் தெரியுமண்ணா...
நீ இருக்கு மிடந்தேடி யான் வரும் வரையில்
இரவலாக உன் இதயத்தைத் தந்திடண்ணா...
நான் வரும்போது கையோடு கொணர்ந்து
அஃதை உன் கால் மலரில் வைப்பேன் அண்ணா!
- முதலமைச்சர் மு.கருணாநிதி